COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, July 4, 2016

மாலெ தீப்பொறி தொகுதி 14 இதழ் 23 2016 ஜுலை 01 – 15

தலையங்கம்
குற்றமயமாகிவிட்ட அரசு எந்திரத்திற்கு பலியாகிப் போன ஸ்வாதி, வினுப்பிரியா
மற்றும் பலர்....
படிய சீவிய கூந்தல் கலையவில்லை. முகத்தில் போடப்பட்ட ஒப்பனை சற்றும் மங்கவில்லை. சலனமோ கலக்கமோ அந்த முகத்தில் சற்றும் இல்லை. அந்த மென்புன்னகை கூட பளிச்செனவே இருந்தது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட, தான் அல்லும் பகலும் அயராது உழைப்பதாக ஜெயலலிதா சொன்னார்.
இப்படி அவர் சொன்னது ஜுன் 28 அன்று. ஜுன் 24 அன்று ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டு மக்கள் அதிர்ந்து போய் இருந்த நேரத்தில், அடுத்து உடனடியாக வினுப்பிரியா தற்கொலையும் உலுக்கியிருந்த நேரத்தில், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மட்டும் சீவிய தலையில் ஓரிழை கூட கலையாமல் புன்னகைக்க முடிகிறது என்பது இன்னும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உள்ளிட்ட 12,000 பேர் வேறு வேறு கட்சிகளில் இருந்து அஇஅதிமுகவில் சேர்ந்த நிகழ்ச்சி அது. தமிழக மக்கள் கலங்கிப் போயிருக்கும் ஒரு சூழலில், இப்படி ஒரு கூட்டத்தில், இப்படி ஒரு பாவனையுடன் ஒரு முதலமைச்சர் கலந்துகொள்கிறார் என்றால் அவருக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கும் சற்றும் தொடர்பில்லை என்றுதான் பொருள்.
ஸ்வாதி கொலையும் வினுப்பிரியா தற்கொலையும் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டுள்ளபோது, ஜெயலலிதா இப்படி ஒரு கூட்டத்தில் எப்படி கலந்துகொள்ள முடிகிறது? முன்னரே திட்டமிடப்பட்ட கூட்டம் என்றாலும் மக்கள் பிரச்சனைகளில் அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளவாவது முயற்சி செய்யும் ஓர் அரசியல்வாதி கூட நிச்சயம் இப்படி ஒரு கூட்டத்தில் இப்படி ஒரு தோற்றத்தில் இருந்திருக்க முடியவே முடியாது. ஜெயலலிதாவை எந்த வகையில் நாம் சேர்ப்பது? மக்கள் பிரச்சனைகள் பற்றி சற்றும் அக்கறையில்லாதவர் என்பதை நாம் அய்ந்தாண்டுகள் ஏற்கனவே பார்த்தோம். பார்வையற்றவர்கள் பட்ட பாடு வேறெங்கும் நடந்திராத கொடுமை. கடைசி வரை அவர்களைச் சந்தித்துப் பேசாத அவரைப் போன்ற ஒரு முதலமைச்சரிடம் இந்த மரணங்களில் பதட்டம் இருக்கும் என்று நாம் எதிர்ப்பார்க்கவில்லை. ஸ்வாதியைப் போல் இன்னும் பலர் கொடூரமாகக் கொலையுண்ட ஆட்சிக்கு தலைமை தாங்கி நடத்தியவர்தான் ஜெயலலிதா. ஆனால், ஒப்புக்காவது ஒரு வார்த்தை? அல்லது, படாடோபத்தையாவது கட்டுப்படுத்துவது? எதுவும் இல்லை. நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்று இனி சொல்ல வேண்டியதில்லை. ஜெயலலிதா ‘தவ வாழ்வு’ வாழ்ந்தார் எனச் சொல்லலாம். காட்டாட்சிக்கும் இனி லல்லுவின் பீகாரை உதாரணம் காட்ட வேண்டியதில்லை. ஜெயலலிதாவின் தமிழ்நாட்டை உதாரணம் சொல்லலாம்.
துப்பாக்கிச் சூடு, தடியடி, ஒடுக்குமுறை, காவல்நிலையப் படுகொலைகள், பெண்கள், குறிப்பாக, தலித் பெண்கள் பாலியல் வன்முறை, சாதியாதிக்கக் கொலைகள், சாராய சாவுகள், மாணவர்கள் கொலைகள், தற்கொலைகள் வேலை இழப்பு, வாழ்வாதாரம் இழப்பு என அனைத்து விதங்களிலும் கடுமையான மக்கள் விரோத ஆட்சி, அனைத்து விதங்களிலும் மக்களுக்குத் துன்பம் மட்டுமே தந்த ஆட்சி தந்த போதும், மக்கள் மீண்டும் ஆட்சி செய்ய வாய்ப்பு தந்துவிட்டார்கள் என்பதால் மீண்டும் அந்த குற்றமய அலட்சிய ஆட்சி முறையையே தொடரலாம் என்று ஜெயலலிதா கருதுகிறாரா?
ஸ்வாதி கொல்லப்பட்ட பிறகு நான்கு நாட்களில் 647 ரவுடிகளை சென்னையில் கைது செய்திருக்கிறார்கள் சென்னை காவல்துறையினர். அதற்கு அடுத்த நாட்களிலும் கைதுகள் தொடர்கின்றன. குதிரை லாயத்தை விட்டு ஓடிய பிறகு லாயத்தை பூட்டியிருக்கிறார்கள். ஸ்வாதியை கொலை செய்தவன் அந்த 647லும் அதற்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்களிலும் இல்லை. கொலையாளியைப் பற்றி காவல்துறை இன்னும் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. துப்பு கிடைத்துவிட்டது, இதோ பிடித்துவிடுவோம் என்று போக்கு காட்டுகிறார்கள். குற்றங்கள் நடப்பதைத் தடுப்பதில் நாட்டமில்லாத இந்த மானங்கெட்டக் காவல்துறைக்கு நான்தான் பொறுப்பு, நான் பதவி விலகுகிறேன் என்று சொல்வதற்குப் பதிலாக, சற்றும் கூச்சமின்றி, உங்களுக்காக அல்லும் பகலும் பாடுபடுகிறேன் என்கிறார் ஜெயலலிதா. அல்லும் பகலும் அவர் பாடுபட்டதில் தமிழக சாமான்ய மக்களுக்கு மிஞ்சியது என்ன? இந்தக் கொலைகளும் தற்கொலைகளுமா?
பெண்களின் பாதுகாப்பான கலவி பற்றி பேசத் துவங்கி இன்று தீவிர அரசியலுக்குள் நுழைந்து விட்ட குஷ்பு இன்னும் அதிர்ச்சி தருகிறார். ஸ்வாதியின் குடும்பத்தினரை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் அறச்சீற்றத்துடன் பேசுவதாக கருதிக் கொண்டு, இந்தக் கொலையில் அரசியல் செய்யாதீர்கள், இதற்காக அரசாங்கத்தை விமர்சனம் செய்யாதீர்கள், அரசாங்கம் மட்டுமே இது போன்ற கொலைகளைத் தடுக்க முடியாது, பொது மக்கள்தான் இதில் துணிச்சலுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனார். மகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதைத் தாங்க முடியாத தந்தை அவரிடம் இப்படி பேசியிருக்கலாம். அந்தத் தந்தையும் தாயும் என்னமும் பேசட்டும். அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது பேரிழப்பு. ஆனால், குஷ்புவும், வானதி சீனிவாசனும் இந்தக் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதில் இணைந்து கொள்வது மிகவும் ஆபத்தானது.
குஷ்புவுக்கோ, வானதி சீனிவாசனுக்கோ நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருக்கும் நிலை ஒருபோதும் ஏற்படப் போவதில்லை. அவர்கள் மிகவும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்பவர்கள். அந்தக் கொலையைப் பார்த்தவர்கள் இன்னும் தூக்கம் பிடிக்காமல்தான் தவித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்திருக்க மாட்டார்கள். குஷ்புவும் வானதியும் இன்ன பிறரும் இப்படிப் பேசுவதையும் கேட்டு குற்ற உணர்வுக்குக் கூட அவர்கள் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரும் அந்த நேரம் ஸ்வாதியாகவே உணர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. ஸ்வாதிக்கு ஏற்பட்ட அதே பீதி அவர்களுக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்துப் போய் நின்றிருக்கக் கூடும். உண்மையில் அவர்கள் இந்தப் படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள். எல்லா விதமான பாதுகாப்புகளுடன் தொலைக்காட்சி கேமராக்கள் முன் நின்று பேசுவது மிகவும் எளிது திருமதி குஷ்பு அவர்களே.
மும்பையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட தங்கள் நண்பரைக் காப்பாற்ற போன இரண்டு பேர் அந்தக் கயவர்களால் கொல்லப்பட்டது இன்னும் நமக்கு நினைவில் இருக்கிறது. மிகச் சமீபத்தில், மிக அருகில், தலைமைக் காவலர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட செய்தியைக் கேட்டோம். எந்தத் துணிச்சலைப் பற்றி பேசுகிறார் குஷ்பு?
அரசாங்கத்தை விமர்சனம் செய்யக் கூடாது என்றால், இந்தப் படுகொலைக்கு யார்தான் பொறுப்பு? ஜெயலலிதா அரசாங்கம் ஏற்கனவே குற்றமய அலட்சியத்தில் திளைத்துப்போய் இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு நடக்கும் கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்று கடந்த ஆட்சி காலத்தில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். மக்களின் பாதுகாப்புக்கு மக்கள்தான் பொறுப்பு எனும் கருத்துக்கள் இந்த குற்றமய அலட்சிய அரசாங்கத்துக்குத்தான் சாதகமாக இருக்கும். மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள். இன்று உயிருடன் இருக்கும் சாமானிய மக்கள் இன்னும் கொலை செய்யப்படவில்லை. ஆனால், எந்த நேரமும் தங்களுக்கும் அது நேரலாம் என்ற அச்சத்தில் இருப்பவர்கள். இது போன்ற கொலைகளை அரசு தடுக்க முடியாது என்றால் யார் தடுப்பது? அரசுதான் காவல்துறை வைத்திருக்கிறது. அரசுதான் நுண்ணறிவுப் பிரிவு வைத்திருக்கிறது. மக்கள் பிரச்சனைகளில் போராட்டம் நடத்துபவர்களை வளைத்து வளைத்து கேமராக்களில் பிடிப்பவர்கள், குற்றவாளிகள் தொடர்பாக ஏன் அக்கறை மிக்க நடவடிக்கைகள் எடுப்பதில்லை?
பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி சுமத்துவது இன்றைய அரசியலின் முக்கியமான குணாம்சமாக மாறி வருகிறது. ஆளும் வர்க்கக் கட்சியினர் மத்தியில் இதில் கருத்தொற்றுமை கூட காணப்படுகிறது. கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை கடமைகளில் இருந்து விலகிவிடுகிற அரசு, மக்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் கடமையில் இருந்தும் நழுவி விடும் என்றால், அப்படி அரசு நழுவுவதை நியாயப்படுத்தவும் முயற்சிகள் நடக்கும் என்றால், நாம் மிகவும் ஆபத்தான ஒரு சமூகத்தை அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் செல்கிறோம் என்று பொருள்.
பெண்களின் பாதுகாப்புக்கு சிறப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் கடந்த ஆட்சியில் ஜெயலலிதா அறிவித்த 13 அம்ச நடவடிக்கைகள் என்ன ஆயின என்று கேள்வி எழுப்பியே ஆக வேண்டும். இன்று உயர்நீதிமன்றம் சில கேள்விகள் எழுப்புகிறது. கண்காணிப்பு கேமராக்கள் ஏன் பொருத்தப்படவில்லை என்பது மிகப் பெரிய கேள்வியாக முன்னிறுத்தப்படுகிறது. கண்காணிப்பு காமிராக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவரை கண்டுபிடிக்க உதவும். சங்கர் படுகொலையில் கூட கண்காணிப்பு கேமரா பெரும் உதவியாக இருந்தது உண்மைதான். ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று சமூகம் பின்தொடர்ந்து பார்ப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அது போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்துவது அரசின் கடமை. அதற்குத்தான் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். வரிகட்டி வாழ வைக்கிறார்கள். அரசு அப்படிச் செய்வது அடுத்த குற்றத்தைத் தடுக்க உதவும். ஆனால், ஜெயலலிதா அரசில் அப்படி நடக்கிறதா? மருத்துவக் கல்லூரி மாணவிகள் கொலை வழக்கில் கல்லூரி தாளாளர் பிணையில் வந்துவிட்டார். அங்கு அடுத்த குற்றம் நிகழ்வதைத் தடுப்பது மீண்டும் சிரமம்தான்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடந்த கடந்த அய்ந்தாண்டுகளிலும் இப்போது மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைந்துள்ள கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகவும் மாநிலத்திலும் சென்னையிலும் நடந்துள்ள கொலைகள் பற்றி புள்ளிவிவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த அய்ந்தாண்டுகள் சொன்னதுபோல் இனி சென்ற ஆட்சி என்று ஒப்பிட்டு விவரங்கள் சொல்ல முடியாது. காவல்துறை கடந்த அய்ந்தாண்டுகளிலும், இப்போதும் ஜெயலலிதாவின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்பது தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் பல்வேறு மக்கள் பிரிவினரை ஒடுக்கி நசுக்குவது அல்ல. சட்டம் ஒழுங்கு என்பது, மக்கள் சாதாரண வாழ்க்கையை பாதுகாப்பாக நடத்திச் செல்ல உகந்த சூழலை உருவாக்குவது. கடந்த அய்ந்தாண்டுகளில் ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கம் இதை உறுதி செய்யவில்லை. மாறாக, அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, அதிகாரத்தையும் செல்வாக்கையும் பாதுகாத்துக் கொள்ள எந்தக் குற்றத்திலும் ஈடுபடலாம் என்பதைத்தான் கடந்த அய்ந்தாண்டுகால ஆட்சி ஊக்குவித்தது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பலரும் இவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் அவர்கள் நிழலில் எதுவும் செய்யலாம் என்ற சூழல் மேலும் மேலும் வலுப்பெற்றது. அன்புநாதன் நமக்கு உடனடி நினைவில் இருப்பவர். அவர் மீது காவல்துறையின் சுண்டு விரல் கூட இதுவரை படவில்லை.
அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் நெருக்கம் இல்லையென்றாலும் காவல்துறையினரை ‘கவனித்துக்’ கொண்டால் எந்தக் குற்றத்தில் இருந்தும் தப்பிவிட முடிகிறது. நீதிமன்றத் தீர்ப்புகளை விலைக்கு வாங்கிவிட முடியும் என்ற நிலை இருக்கும்போது குற்றங்கள் தண்டனை பற்றிய அச்சமின்றி பெருகுகின்றன. இந்த நிலைமைகளுக்கு ஜெயலலிதா ஆட்சியில் பஞ்சமே இல்லை. ஊழல், கொள்ளை, ஆன வரை சுருட்டிக் கொள்வது என சட்டவிரோத சொத்துக் குவிப்பு, அவற்றைப் பாதுகாக்க, உறுதி செய்து கொள்ள அவற்றுடன் பிரிக்க முடியாமல் பின்னிக்கொண்டு விட்ட குற்றச் செயல்கள் என ஒட்டுமொத்த அரசு எந்திரமும் குற்றமயமாகியுள்ளபோது, இந்தச் சக்கரத்தில் மக்களின் உயிர்ப் பாதுகாப்பு, வாழ்க்கைப் பாதுகாப்பு, இரண்டாவது, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. மக்களின் சாதாரண வாழ்க்கையை உறுதி செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஒரே அக்கறை சுயமுன்னேற்றம், அதற்கான நடவடிக்கைகள் மட்டுமே என்றாகிவிட்ட பிறகு, வேறு என்ன நடந்தாலும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டாக இருப்பதில்லை. ஜுன் 28 அன்று ஜெயலலிதா முகத்தில் காணப்பட்ட புன்னகை இதற்கு சாட்சி!
வினுப்பிரியாவின் தற்கொலைக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகள் இப்படித்தான் நடந்தேறின. அவருடைய புகாருக்கு உரிய காத்திரத்துடன் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால், வினுப்பிரியா தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார். ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் அவர் பொறுப்பிலான காவல்துறை எந்த அளவுக்கு குற்றமயமாகி இருக்கிறது என்பதை வினுப்பிரியாவின் மரணம் தெளிவாகக் காட்டிவிட்டது. அலைபேசி, ரூ.2,000 பணம் எல்லாம் கொடுத்த பிறகும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில் அடுத்த ஆபாசப் படமும் வலைதளத்தில் ஏற வினுப்பிரியா விரக்திக்குத் தள்ளப்பட்டார். காவலர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தனது மகளுக்கு நேர்ந்ததுபோல், வேறொரு பெண்ணுக்கு நேரக் கூடாது என்று சொல்லி வினுப்பிரியாவின் தாயார் சத்தம்போட்டு அழுதார். அப்படி நடக்காமல் இருக்க, காவலர் ஒருவரின் பணிநீக்கம் மட்டும் போதாது. காவல்துறை கண்காணிப்பாளர் தொடங்கி அடுத்தடுத்த படிகளில் இருப்பவர்களும் இங்கு குற்றவாளிகள். அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்தால்தான், அவர்கள் அனைவரும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால்தான் இது போன்ற அடுத்த குற்றம் நிகழ்வதைத் தடுக்க முடியும்.
எறும்புக்கும் தீங்கு நினைக்காத ஸ்வாதி, தினமும் கோவிலுக்குப் போகும், பூசைகள் செய்யும், பாசுரங்கள் பாடும் ஸ்வாதி.... இப்படியான ஸ்வாதி என்ற நல்ல பெண்மணி... ஏன் இப்படி அந்தப் பெண்ணுக்கு ‘நல்ல பெண்’ விலங்கை அவர் கொல்லப்பட்ட பிறகு பூட்டப் பார்க்கிறோம்? எறும்புக்கு மருந்து அடித்து சாகடிக்கும் சாமான்ய பெண்கள்தான் இங்கு நியதி. தினமும் கோவிலுக்குச் செல்வது பெரும்பாலான பெண்களுக்கு சாத்தியமே இல்லாதது. இன்னும் பல பெண்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். இப்படியெல்லாம் இருக்கும் பெண்களுக்கு வன்முறை நிகழ்ந்தால் சரியென்று ஆகிவிடுமா? அவர்கள் ‘கெட்ட பெண்கள்’, அதனால் நடந்தது என்று விட்டுவிடத்தான் முடியுமா?
நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய ஜெயலலிதா, மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், மாறி வரும் சமுதாய சூழ்நிலை, மற்றும் நகரமயம் ஆதல் ஆகியவற்றால் குற்ற நிகழ்வுகள் ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கும் என்பதுதான் உலகெங்கும் பொதுவான நடைமுறை.... என்று சொல்லி வைத்தார். அதாவது தமிழ்நாட்டில் மக்களின் சாதாராண பாதுகாப்பான வாழ்க்கைக்கு அரசு உத்தரவாதம் அளிக்க முடியாது என்கிறார். ‘பெரிய இடத்து’ பெரிய குற்றங்கள் தடுக்கப்படாத போது சிறிய சிறிய குற்றங்களை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாதது. ‘பெரிய இடத்து’ பெரிய குற்றங்கள் தடுக்கப்படாததால்தான் சிறிய குற்றங்கள் பெருகுகின்றன.
மிகவும் மோசமான, குற்றமய அலட்சிய மக்கள் விரோத ஆட்சியை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வரும் காலங்கள் நிச்சயம் தமிழக மக்களுக்கு சவால்மிக்க காலங்களாக இருக்கப் போகிறது. மக்களின் சாதாரண வாழ்க்கைப் போக்கில், அவர்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை ஜெயலலிதா அரசுக்கு வலுவான மக்கள் போராட்டங்கள் மூலம்தான் எடுத்துச் சொல்ல முடியும். வேறு வழி ஏதும் இல்லை.
அரைகுறைத் திருத்தங்களை அனுமதியோம்! 
அச்சமற்ற சுதந்திரமான வழக்காடும் உரிமைக்காக போராடுவோம்!
போராட்டக் களத்தில் தமிழக வழக்கறிஞர்கள்
வழக்கறிஞர்களுக்கு எதிரான ஜனநாயக விரோத எதேச்சதிகார சட்டத் திருத்தங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள முற்போக்கு, ஜனநாயக வழக்கறிஞர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாய்ப்பூட்டு கருப்புச் சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறக்கோரி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு இகக (மாலெ) ஆதரவு
தமிழக அரசு தலையிட கோரிக்கை
வழக்கறிஞர் சட்டம் 34(1)ல் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக அரசு, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் தலையிட்டு ஜனநாயக விரோத சட்டத் திருத்தங்கள் திரும்பப் பெறப்பட வலியுறுத்த வேண்டும் எனக் கோரியும், 15.06.2016 அன்று நெல்லை, புதுக்கோட்டை, திருவள்ளூர், குமரி, கோவை மாவட்டங்களில் இகக (மாலெ) ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
நெல்லையில் இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கணேசன், சுந்தர்ராஜ், கருப்பசாமி ஆகியோருடன் நெல்லை வழக்கறிஞர்களும் கலந்துகொண்டனர். வழக்கறிஞர் தங்கசாமி உரையாற்றினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஏஅய்சிசிடியு மாவட்டப் பொருளாளர் தோழர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் எ.எஸ்.குமார், எஸ்.ஜானகிராமன் ஆகியோரும், மாவட்ட ஏஅய்சிசிடியு தோழர்கள் திருநாவுக்கரசு, அன்புராஜ் மற்றும் வழக்கறிஞர் பாலாஜி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாகர்கோவிலில் இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் அந்தோணிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட இகக மாலெ தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்தபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கோவையில் இகக மாலெ ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு 
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்கள் கைது
வழக்கறிஞர்களுக்கு ஆதரவான போராட்டத்துக்கு கோவை காவல்துறை அனுமதி மறுத்தது. தோழர் தாமோதரன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி, மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது.
புதுக்கோட்டையில் 16.06.2016 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் ரெங்கசாமி, மதியழகன், மற்றும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தேசிகன், மாவட்டக்குழு உறுப்பினர் சாமி.கோவிந்தராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
பிரிக்கால், சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டம்
ஜ÷ன் 16 அன்று பிரிக்கால் பிளாண்ட் 1 மற்றும் பிளாண்ட் 3 ஆலை வாயில்களில் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பிரிக்கால் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கோவை சாந்தி கியர்ஸ் தொழிலாளர்களும் ஆலை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டக் களத்தில் தமிழக வழக்கறிஞர்கள்
21.06.2016 அன்று மாநிலம் முழுவதும் நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும்போது சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க அமைப்பாளர் தோழர் பாரதி மற்றும் வழக்கறிஞர் ரஜினிகாந்த் தலைமையில் சுமார் 150 வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரைகுறைத் திருத்தங்களை அனுமதியோம், அச்சமற்ற, சுதந்திரமான வழக்காடும் உரிமைக்காக போராடுவோம் என முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தலை மீறி 22.06.2016 அன்று நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் திரு.அறிவழகனும் கலந்துகொண்டார். ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் பாரதி உட்பட பல்வேறு முற்போக்கு ஜனநாயக இயக்கங்களின் வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக பாரதி மற்றும் பலர் எனக் குறிப்பிடப்பட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் பட்டினிப் போராட்டம்
வழக்கறிஞர் போராட்டத்துக்கு ஆதரவாக 23.06.2016 அன்று இகக (மாலெ) மற்றும் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. இதில் இகக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் அழகிரிசாமி, இகக(மா) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் பாக்கியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி உண்ணாவிரதத்தை முடித்து வைத்து உரையாற்றினார். அகில இந்திய வழக்கறிஞர் சங்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் கே.இளங்கோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் பார்வேந்தன், தமிழ்த் தேச நடுவம் பொறுப்பாளர் வழக்கறிஞர் பாரிவேந்தன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் வழக்கறிஞர் சுரேஷ், போராட்டத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர் மில்டன் (மக்கள் உரிமை பாதுகாப்பு மய்யம்), தமிழில் வழக்காடும் உரிமை கேட்டு போராடியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் கேசவன், பார்த்தசாரதி, எழும்பூர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தலித் ராஜகோபால், சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர் சார்லஸ் ஆகியோருடன் அகில இந்திய மக்கள் மேடையின் மாநில பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் வித்யாசாகர் மற்றும் இகக மாலெ, ஏஅய்சிசிடியு, அகில இந்திய மாணவர் கழக தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அதே நாளில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. நெல்லையில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் ரமேஷ், திருச்சியில் தோழர் தேசிகன் ஆகியோர் உரையாற்றினர்.
24.06.2016 அன்று தேனியில் வழக்கறிஞர்களின் மாநில அளவிலான கூட்டம் அடுத்த கட்டப் போராட்டம் பற்றி பரிசீலித்து முடிவெடுத்தது. கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாரதி உரையாற்றினார். நெல்லையிலிருந்து தோழர் ரமேஷ் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் ஜ÷ன் 27, 28 தேதிகளில் தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பது எனவும், 29.06.2016 அன்று ரயில்மறியல் போராட்டம் நடத்துவது எனவும், 01.07.2016 அன்று வழக்கறிஞர் சட்ட விதி திருத்த அரசாணையை எரிக்கும் போராட்டம் நடத்துவது எனவும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு 03.07.2016 அன்று திருப்பூரில் நடத்துவது எனவும் அதைத் தொடர்ந்து 04.07.2016 அன்று முதல் நீதிமன்ற வளாகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தவது எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையிலும் மதுரை கிளையிலும் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் நீதிமன்றப் புறக்கணிப்பைத் துவங்கியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம், கைது
வழக்கறிஞர்களின் இப்போராட்டம் மக்களுக்கானது என்பதை வலியுறுத்தும் வகையிலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் 29.06.2016 அன்று தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் இரயில் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். அதன் ஒரு பகுதியாக சென்னையில் கடற்கரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். 100 பேர் கைதாகினர். ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் அமைப்பாளர் தோழர் பாரதியோடு சங்க வழக்கறிஞர்களும் கலந்துக் கொண்டு கைதாகினர். திருச்சியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 500 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இகக (மாலெ) மாநிலக்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான தோழர் தேசிகன் உட்பட 200 கைதாகினர். நெல்லையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 300 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இகக (மாலெ) மாநிலக்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான தோழர் ஜி.ரமேஷ் உட்பட 188 பேர் கைதாகினர்.
இந்துத்துவ பாசிச தாக்குதலை எதிர்கொள்வது: 
ஒரு செயல்வீரரின் குறிப்புகள்
‘இந்தியா என்ற கருத்து: சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் நீதியை மீட்டெடுப்பதற்கான ஒரு புதிய நிகழ்ச்சிநிரல்’ என்ற தலைப்பில், ஜ÷ன் 13 - 14 தேதிகளில், திருச்சூரில் நடைபெற்ற இஎம்எஸ் நம்பூதிரிபாட் நினைவுக் கூட்டத்துக்கு இகக (மாலெ) (விடுதலை) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் அழைக்கப்பட்டிருந்தார். அவரால் நிகழ்ச்சிக்குச் செல்ல முடியவில்லை. நிகழ்ச்சிக்காக அவர் அனுப்பிய தாள் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக மாறியுள்ளது. மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின், அதன் பல்வேறு உறுப்பு அமைப்புகள் கொண்ட மறைமுகமான, வேகமாகப் பரவி வருகிற வலைப்பின்னலின் பின்புலம் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில் நாடு முழுவதும் தீவிரமான, ஒருமுகப்படுத்தப்பட்ட மதவெறி, பாசிச தாக்குதலை நாம் காண்கிறோம். பெரும்பான்மை சமூக மதவெறிவாதத்தின் பாசிச உள்ளாற்றல், அதன் விளைவுகள், மிகவும் குறிப்பாக, இந்து ராஜ்ஜியம் என்ற திட்டத்தின் பாசிச இயல்பு ஆகியவற்றை நவீன இந்தியாவின் முக்கியமான சிந்தனையாளர்களும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் நேரு, அம்பேத்கர் போன்ற தலைவர்களும் தெளிவாக எதிர்பார்த்தார்கள். உண்மையில், சாவர்க்கர் முதல் கோல்வால்கர் வரை, இந்துத்துவாவை, கலாச்சார தேசியவாதம் என்று சொல்லப்படுவதை முன்னிறுத்துபவர்கள், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பாசிச மாதிரியை வெளிப்படையாகவே புகழ்ந்து பேசினார்கள்.
ஆனால், இந்துத்துவாவின் தரகு மற்றும் காலனிய ஆதரவு தன்மையால், இந்துமகாசபை அல்லது ஆர்எஸ்எஸ் வகை மதவெறி தேசியவாதம், காலனிய எதிர்ப்பு எழுச்சி மற்றும் அறுதியிடலின் நீடித்த கட்டத்தில் பரந்த ஆதரவு பெற முடியாமல் போனது. ‘மதவெறி’ என்பதை ‘தேசியம்’ என்று சொல்லி மறைக்க முடியாமல் போனது; மதவெறி அணிதிரட்டலும் வன்முறையும், மக்களின் காலனிய எதிர்ப்பு ஒற்றுமைக்கு, உணர்வுக்கு எதிரான சதியும், காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் முதல் பெரிய தீவிரவாத நடவடிக்கையான காந்தி படுகொலையும் இந்துத்துவாவின் உருவாக்க கால கட்டத்தின் குறியீடுகளாக மாறி நின்றன.
ஓர் அரசியல்சாசன குடியரசு என்ற விதத்தில் இந்தியாவின் துவக்கக் கட்டத்தின் பெரும்பகுதியில் இந்துத்துவா அரசியல் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் ஆகியவற்றுக்குப் பின்னால் நான்காவது அரசியல் போக்காக அது இருந்தது. 1960கள் முதல் இந்துத்துவ நீரோட்டத்தின் மேல்நோக்கிய வளர்ச்சிப் பயணம் துவங்கியது; தேர்தல்ரீதியாக அவ்வப்போது பின்னடைவுகள் இருந்தபோதும், அது மிகவும் கடுமையானதாக இருந்தபோதும், அதன் வளர்ச்சி தடையின்றி தொடர்ந்தது. விந்தை முரணாக, இந்த சீரான மேல்நோக்கிய வளர்ச்சிக்கு, சமீப காலம் வரை இந்தியாவில் ஓர் அகில இந்திய அளவில் முக்கியமான அரசியல் சக்தியாக இருந்த, இந்திய ஆளும் வர்க்கங்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக இருந்த காங்கிரஸ்தான் உதவியது.
1960ல் நேரு அரசாங்கம் பலவீனமாக இருந்தபோது, 1962 இந்தோ - சீனப் போரின் பின்னணியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் கலந்துகொள்ள அனுமதித்து அதை அங்கீகரித்தபோது, ஆர்எஸ்எஸ்ஸ÷க்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. 1967 தேர்தல்களில் காங்கிரஸ் அதன் முதல் பெரிய தேர்தல் சரிவை சந்தித்தபோது, பிற எதிர்க்கட்சிகளுடன் ஜனசங்கமும் அதன் பங்கு அரசியல், தேர்தல் ஆதாயங்களை அறுவடை செய்தது. அப்போது தான், அனைவரையும் உள்ளடக்கிய எதிர்க்கட்சி ஒற்றுமை என்ற கூக்குரல் அரசியல் வெளி யில் எழுந்தது. அன்று அது காங்கிரஸ் எதிர்ப்பு என்று இருந்தது; இன்று அது பாஜக எதிர்ப்பாக இருக்கிறது. இந்த கூட்டணி அரசியலின் முதல் கட்டத்தில் சங்பரிவார்தான் பெரிதும் ஆதாயம் அடைந்தது; பல மாநிலங்களில் ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பு அதற்குக் கிடைத்தது.
வரவிருக்கிற பாசிச அச்சுறுத்தலை தவிர்ப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை, அதற்கு இரண்டாவது, தீர்மா னகரமான வாய்ப்பாக இருந்தது; துரதிர்ஷ்டவசமாக பல இந்திய கம்யூனிஸ்டுகளும் இந்த பொய்யான எச்சரிக்கைக்கு இடம் தந்தனர். இது இரண்டு விதங்களில் பேரழிவுமிக்கதாக மாறியது; ஒன்று அது அரசு ஒடுக்குமுறையை நேர்த்தியானதாக்கியது; சட்டபூர்வமானதாக்கியது; இதுவரை இல்லாத அளவுக்கு ஜனநாயகத்தைத் துண்டாடியது; இரண்டு, நெருக்கடி நிலைக்குப் பிறகு, சங் பரிவார் மத்தியில் முதல்முறையாக ஆட்சிக்கு வருவதற்கு இட்டுச் சென்றது; இவை இரண்டுமே, இந்தியாவில் பாசிசத் திட்டம் வளர்ச்சி பெறுவதற்கு மிகப்பெரிய ஆசியாக அமைந்தன.
1980களிலும் 1990களில், இந்திய அரசியல் இறுதியாக சங் பரிவாரை விரட்டிவிட்டது என்று கணப்பொழுதில் தென்பட்டபோது, முழுவதுமாக கண்ணுக்குப் புலப்படாத விதத்தில், சங்பரிவாருக்கு இன்னும் பெரிய ஆசிகள் கிடைத்தன. 1984 நவம்பரில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மிகப் பெரிய பெரும்பான்மை பெற்றது; பாஜக வெறும் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. கணினியால் உந்திச் செலுத்தப்படும் 21ஆம் நூற்றாண்டு பற்றிய பார்வையை ராஜீவ் காந்தி உருவாக்க முயற்சி செய்தார். ஆனால், மிக விரைவாகவே, பாஜக அதன் விஷத்தன்மை கொண்ட பாப்ரி மசூதி இயக்கத்துடன், பழிவாங்கும் விதத்தில் மீண்டும் எழுந்தது.
ராஜீவ் பெற்ற அதீத வெற்றியின் பின் சந்தேகத்துக்கு இடமற்ற இந்துத்துவ வெறி அடிப்படை இருந்தது. டில்லியில் இருந்த சக்தி வாய்ந்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னின்று நடத்திய, பல இடங்களில் ஆர்எஸ்எஸ் சக்திகளும் பங்கேற்ற, 1984 நவம்பர் சீக்கியர் படுகொலைக்குப் பிறகு உந்தித் தள்ளப்பட்ட தேசிய ஒருமைப்பாடு அலையின் மீது அது ஏறி வந்தது. சீக்கிய தீவிரவாதம் என்று சொல்லப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட இயக்கம் முதல், தற்போதைய இசுலாமியர் வெறுப்பு வரை, இந்த வழித்தடம் நேரடியானதாகவே உள்ளது.
புதிய பொருளாதாரக் கொள்கை என்று சொல்லப்பட்டதை பின்பற்றியதும், அயலுறுவு கொள்கையில் இந்தோ - அய்க்கிய அமெரிக்க நல்லுறவு வளர்ந்ததும், இரண்டாவது தருணம். சந்தையால் செலுத்தப்படும் நவீனத்துவம் ஆர்எஸ்எஸ்ஸின் இருண்மைவாதத்தையும் அடிப்படை வாதத்தையும் அகற்றிவிடும் என்று வாதிடப்பட்டது. இந்தப் புதிய கொள்கை வழித்தடத்தின் மிகப்பெரிய சிற்பியாக மன்மோகன் சிங் இருந்தார். நிதியமைச்சராக இருந்தபோது நவதாராளவாத பொருளாதார, வர்த்தகக் கொள்கைகளை புகுத்தினார்; பிரதமராக, அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட குறிப்பான ஒப்பந் தங்களுக்கும் அப்பால், எப்போதும் விரிவடைந்து வருகிற இந்தோ - அய்க்கிய அமெரிக்க போர்த் தந்திர உறவில் இந்தியாவை பிணைத்தார்.
பாஜகவுக்கோ, ஆர்எஸ்எஸ்ஸுக்கோ எதிராக எந்தத் தடையையும் உருவாக்குவதற்குப் பதிலாக, மன்மோகன் சிங்கின் மவுனமான நிபுணத்துவத்தின் கீழ், காங்கிரஸ் உருவாக்கிய கொள்கை கட்டமைப்பு, இன்று நரேந்திர மோடி தனது தனி முத்திரையான பேச்சாற்றல் கொண்ட விற்பனை திறத்துடன் தனது ஆட்சியை நடத்த மிகச்சிறந்த மேடையாக இருக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை முன்வைக்கிற மோடி கார்ப்பரேட்டுகளுக்கு மகிழ்ச்சியூட்டுவதை ஒரு புதிய உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்; இசுலாமியர் வெறுப்பு என்ற பொதுவான இழையுடன் இந்தியாவின் அய்க்கிய அமெரிக்க ஆதரவு கொள்கையை அதிகரித்த அளவிலான கருத்தியல் தளத்துக்கும் உயர்த்தியுள்ளார்.
ஆக, இந்துத்துவாவின் உள்ளார்ந்த பாசிச உள்ளாற்றல் நேருவும் அம்பேத்கரும் அதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்தபோது அல்லாமல், சில பத்தாண்டுகளுக்குப் பிறகு முக்கியத்துவம் வாய்ந்த விதத்தில் மாறிய சூழல்களில் முன்னுக்கு வந்துள்ளது. மூன்று அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை. சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு, ஒரு சர்வதேச சக்தியாக, முகாமாக சோசலிசம் சரிந்த பிறகு, தேசியவாதத்தின் சோசலிச காலனிய எதிர்ப்பு உணர்வு சர்வதேச அளவில் கலைந்து மறைந்துவிட்டது. இந்தியாவில் அதிகாரபூர்வ அல்லது பிரதான நீரோட்ட தேசியவாதம், இந்துத்துவா போன்ற ஒன்றாக மாறிவிடவில்லை என்றாலும், இந்துத்துவா முன் பலவீனமானதாகிப் போனது. தேசியவாதம் அதிகரித்த அளவில் மதவாத இயல்பு பெற்றதுடன், இன்றைய இந்தியாவின் பூகோள அடிப்படையிலான ஒற்றுமையும் ஓர்மையும், பல பிராந்தியங்களிலும் வெகுமக்கள் ஜனநாயக விருப்பத்தின் அடிப்படையில் அல்லாமல், அரவணைக்கும் உணர்வும் வேற்றுமைத்தன்மைக்கு மதிப்பும் இல்லாத நிலையில், ஓர் ஒடுக்குமுறை அரசின் ராணுவ வல்லமையின் அடிப்படையில் உள்ளன.
பொருளாதாரக் கொள்கை முனையில், நவதாராளவாதம் சவாலுக்கு உட்படுத்த முடியாத அதிகாரபூர்வ கொள்கையாகிவிட்டது. ஜனரஞ்சகவாத சாயல்கள், நெருக்கடியை சமாளிக்கும் விதம் ஆகியவற்றில் மட்டும்தான் வேறுபாடுகள் உள்ளன. சந்தையால் செலுத்தப்படும் பொருளாதாரத்தில் மக்கள் நல்வாழ்வுக்கு எதிரான கார்ப்பரேட் போர் எந்திரம்தான் உந்திச் செலுத்தும் சக்தியாக இருக்கிறது. இதனுடன், அய்க்கிய அமெரிக்க - இஸ்ரேல் அரசியல் ராணுவ அச்சுடனான நெருக்கமான உறவுடன் இந்திய ஆளும் வர்க்கங்கள் பிராந்திய அளவில் அதிகாரம் பெற முனையும் அயலுறவுக் கொள்கை சேர்ந்து கொள்கிறது.
சங் பரிவாரின் பாசிசத் திட்டம் அல்லது தாக்குதல் பற்றி நாம் பேசும்போது, பாசிசத்தை, இன்றைய உலகமய உலகில் வரலாற் றுரீதியாக வழக்கொழிந்துவிட்ட இருபதாம் நூற்றாண்டு அய்ரோப்பிய விலகலாகக் கருதும் சம்பிரதாய, திருப்தியான பதில்வினை வருகிறது. இன்றைய இந்திய நிலைமைகளின் குறிப்பான தன்மை, இருபதாம் நூற்றாண்டு பாசிசத்தின் மூலச்சிறப்புமிக்க வகையுடன் ஒத்துப்போகிறதோ, இல்லையோ, சாரமான ஒற்றுமைகளைப் பார்க்கத் தவறிவிடக் கூடாது.
கார்ப்பரேட் மேலாதிக்கத்தின் மாதிரியும் ஆட்கொல்லி கார்ப்பரேட் சூறையாடல் இயக்கப்போக்கும், மூலதனத்தின் ஒரு வெளிப்படையான சர்வாதிகாரம் என்ற விதத்தில், பாசிசத்தின் சாரமான வர்க்க இயல்புடன் ஒத்துப்போகிறது. இசுலாமியர் வெறுப்பை பாஜக வெளிப்படையாக பயன்படுத்துவது, - பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ‘இசுலாமியர்கள் இல்லாத இந்தியா’ பற்றி கூட இப்போது பேசியிருக்கிறார் - பாசிச இலக்கை எட்ட ஒழித்துக்கட்டப்பட வேண்டிய மற்ற சக்தி, ‘உள்நாட்டு எதிரி’ என்ற பாசிச கருத்து ருவாக்கத்தை உறுதி செய்கிறது; ஜெர்மனியில் அது இனவாத பெருமையாக இருந்தது; இந்தியாவில் அது இந்து பெருமையாக இருக்கிறது. இந்த இரண்டு அம்சங்களும் அவற்றுக்கு குறிப்பான இந்திய வேர்களும் மாதிரிகளும் இருந்தாலும், சர்வதேச மூலதனத்தின் நவதாராளவாத ஒழுங்காலும் அய்க்கிய அமெரிக்க அயலுறவுக் கொள்கையின் இசுலாமியர் வெறுப்பாலும் மறுஉறுதி செய்யப்படுகின்றன.
இதில் இருந்து நாம் ஒரு விசயத்தை தெரிந்துகொள்கிறோம். ஆர்எஸ்எஸ் வகை பாசிசத்தை மதவெறி பாசிசம் அல்லது இந்துத்துவா பாசிசம் என்று நாம் பொதுவாக வகைப்படுத்துகிறோம். இந்தியா என்ற கருத்துக்கும் யதார்த்தத்துக்கும் அதிகாரத்தில் உள்ள பாஜகவால் ஏற்படுகிற அச்சுறுத்தலான மதவெறி ஓர் அம்சம் மட்டும்தான். இன்றைய இந்துத்துவா கார்ப்பரேட், தரகு இந்துத்துவா. எனவே, இந்துத்துவாவுக்கு எதிரான போராட்டம், அல்லது குடியரசை மீண்டும் உரிமை கொள்வதற்கான போராட்டம் மதவாதத்துக்கு எதிரான மதச்சார்பின்மை என்று மட்டும் சுருங்கி விட முடியாது; அது அவசியமாக கார்ப்பரேட் எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு பரிமாணத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
கடந்த மக்களவை தேர்தல்களுக்குப் பிறகு, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற மூர்க்கத்தனமான பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டது. இந்த முழக்கம் எழுப்பப்படுகிற நேரம் முக்கியத்துவமானது. 2014ல் காங்கிரஸ் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது; முழுவதுமாக நம்பகத்தன்மை இழந்திருந்தது; அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் இருந்தது. பீகாரிலும் மேற்கு வங்கத்திலும் சில சாதகமான கூட்டணிகளும் கணக்கீடுகளும் இருந்ததால் அந்த மாநிலங்களில் சில வெற்றிகள் பெற்ற போதும், காங்கிரஸ் சரிந்து கொண்டிருப்பதை அப்போதிருந்து தேர்தல் முடிவுகள் காட்டி வருகின்றன. கட்சியின் நேரு மரபை மோடியின் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் குறிப்பான இலக்காகக் கொள்கிறது. இங்கும் இது எழுப்பப்படும் காலம் முக்கியத்துவமானது. நேருவின் பொருளாதார, அயலுறவுக் கொள்கைகளின் அழுத்தத்தை கைவிட்ட பிறகு, நேருவின் மரபை பாதுகாப்பதற்கு காங்கிரசுக்குள் ஏதுமில்லை; நேருவுக்கு அடுத்து வந்த வாரிசுகள் மக்கள் செல்வாக்கையும் அமைப்பு ஆளுமையையும் இழந்துவிட்டார்கள்.
மோடி தலைமையில், பாஜக, காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, காங்கிரசுக்கு உள்ளும் காங்கிரசுக்கு வெளியில் இருந்தும், நேருவுடன் வேறுபட்ட அல்லது அவருக்கு எதிராக நிறுத்தப்படக் கூடிய, நாட்டு விடுதலைப் போராட்டத்தின் கம்யூனிஸ்ட் அல்லாத, ஒவ்வொரு தலைவரையும் அபகரித்து விட கடுமையான முயற்சிகள் மேற்கொள்கிறது. வரலாற்றுரீதியாக மதவாத உரிமைகள் தொடர்பாக மென்மையான கருத்துக்கள் கொண்டிருந்த சர்தார் படேலை அது ஏற்கனவே அபகரித்துவிட்டது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் காந்தியை தூய்மையாக்கி, தூய்மை, இறைதன்மை ஆகியவற்றின் திரு உருவாக அவரை சுருக்கி, இந்துத்துவா தீவிரவாதி நதுராம் கோட்சேயால் எந்த மதநல்லிணக்கத்துக்காக படுகொலை செய்யப்பட் டாரோ அந்த மதநல்லிணக்கத்துக்கான அவரது வாழ்நாள் கால கடப்பாட்டில் இருந்து அவரை விலக்கி நிறுத்தப் பார்க்கிறது.
நிறப்பிரிகையின் மறுமுனையில், ஓர் இடதுசாரி கருத்தியல் தளத்தில் இருந்து காங்கிரசில் இருந்து பிரிந்து, நாட்டு விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்த தனது சொந்த கட்சியையும் ராணுவத்தையும் உருவாக்கிய சுபாஷ் போசை கையகப்படுத்தவும் பாஜக எடுக்கும் சமீபத்திய முயற்சிகளை நாம் காண முடிகிறது. இப்போது டாக்டர் அம்பேத்கரை சிதைக்கவும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவரை வெறும் மற்றுமொரு தேசியவாத ஒற்றுமையாளராக முன்னிறுத்தி, சாதி தொடர்பான அவரது அழித்தொழிக்கும் விமர்சனத்தையும் அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற அவரது அறைகூவலையும், இந்து சமூகத்துடன் உணர்ச்சிபூர்வமாக ஒன்றுபட, சாதியை ‘கடந்து’ என்ற ஒரு சீர்திருத்த தளத்துக்குச் சுருக்கி நிறுத்தப் பார்க்கிறது. அம்பேத்கர் மரபை திட்டமிட்ட விதத்தில் சீர்குலைக்கும் போக்கில், மனுதர்மம் அடிமைத்தனத்தின் சாசனம் என்று சொல்லி அதை எரித்து தனது இயக்கத்தைத் துவக்கிய ஒரு மனிதரை, பாஜக இந்தியாவின் நவீன மனு என்று விவரிக்கிறது; இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தைத் தழுவிய ஒருவரை இந்து ஒற்றுமையாளர் என்று முன்னிறுத்த முனைகிறது!
இந்துத்துவா பாசிசத் திட்டம், நிலவுகிற அரசு அதிகாரத்தை ஆன வரை பயன்படுத்தும் அதே நேரம், தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் இலக்குகளுக்கும் பொருந்துகிற விதத்தில், நிலவுகிற முறையின் மீது உள்ள வெகுமக்கள் அதிருப்தியை பயன்படுத்திக் கொண்டு, ஆழமடைந்து வருகிற சமூகப் பொருளாதார நெருக்கடியால் தீவிரமடைந்து வருகிற நெருக்கடியையும் முரண்பாடுகளையும் ஒருமுகப்படுத்தி, நிலவுகிற அமைப்புக்கு எதிரான இயக்கமாக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. எனவே பாசிசத்துக்கு எதிரான எதிர்ப்பு, இருக்கிற நிலைமைகளைப் பாதுகாப்பது என்பதுடன் சுருங்கிவிட முடியாது; பிற்போக்கு மாற்றத்துக்கான பாசிச நிகழ்ச்சி நிரலை முற்போக்கு மாற்றத்துக்கான தீவிரமான லட்சியத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.
இதற்கு ஒரு தீவிரமான போராட்டப் போக்கு அவசியம் என்பதை சொல்லத் தேவையில்லை. பழைய கம்யூனிஸ்ட் சொற்களில் சொல்ல வேண்டுமானால், பிரதானமாக நாடாளுமன்றம் தவிர்த்த போராட்டம் அவசியமாகிறது; ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்கள் நலன் ஆகியவற்றில் திட்ட அடிப்படையிலான கடப்பாடு இல்லாத அரசியல் கட்சிகளுடனான, பரந்த, தயாராக உள்ள தேர்தல் கூட்டணிகள் மூலம் இதை அடைய முடியாது. காங்கிரஸ், பாஜகவிடம் தொடர்ந்து தனது இடங்களை இழந்து கொண்டிருப்பதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. ஓர் அரசியல் வெற்றிடம் வளர்ந்து வருகிறது; புதிய அரசியல் உருவாக்கங்களுக்கான வெகுமக்கள் தேவை இருக்கிறது; இதுதான் டில்லியில் புதிதாக உருவான ஆம் ஆத்மி கட்சி பாஜகவை தோற்கடிப்பதற்கு இட்டுச் சென்றது.
மேலும் மேலும் கூடுதல் எண்ணிக்கையிலான மக்கள் ஆர்வத்துடனும் துணிச்சலுடனும் எழுந்து நிற்கிற, போராடுகிற, தற்போதைய இந்திய நிலைமைகள் நம்பிக்கை அளிப்பதாக, உற்சாகமூட்டுவதாக உள்ளன. மோடி அரசாங்கத்தின் நாடாளுமன்ற பெரும்பான்மையும் பேச்சாற்றல் கொண்ட வாய்வீச்சும், மீண்டும் மீண்டும் கொண்டு வரப்பட்ட நிலப்பறி அவசரச் சட்டத்தை இந்திய விவசாய சமூகம் நிராகரிப் பதை தடுத்து நிறுத்திவிட முடியவில்லை. தொழிலாளர்கள், மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில், கர்நாடகாவின் ஆயத்த ஆடை தொழிலாளர்கள், தொழிலாளர்களின் வைப்பு நிதி தொடர்பான தொழிலாளர் விரோத ஆணை திரும்பப் பெறப்படும் விதம் போராட்டத்தில் எழுந்தார்கள்; தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களுக்கு எதிராக திருத்தப்படுவதற்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர் வர்க்க எதிர்ப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.
கொடூரமான கருப்புச் சட்டங்கள், அரசு ஒடுக்குமுறை, அனைத்து விதமான சமூக ஒடுக்குமுறை, அரசியல் அச்சுறுத்தல் ஆகியவற்றையும் மீறி, நாடு முழுவதும் உள்ள, மிகவும் ஒடுக்கப்பட்ட ஓரஞ்சாரத்துக்குத் தள்ளப்பட்ட மக்கள் தங்கள் பிழைப்புக்காக, கவுரவத்துக்காக, உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். தூரத்து கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை, ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராடுகின்றனர். 1940கள், 1950களின் புகழ்மிக்க இந்திய மக்கள் நாடக அமைப்பு (இப்டா) நாட்களின் நினைவுகளை தூண்டும்விதமாக, எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், திரைப்படம் உருவாக்குபவர்கள், பிற அறிவாளிப் பிரிவினர் அனைவரும், தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பிக் கொடுத்து, மதவெறி வன்முறைக்கு எதிராகவும் எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்படுவதற்கு எதிராகவும் ஒரு சக்திவாய்ந்த கூட்டு குரலை எழுப்புகிறார்கள். சென்னை அய்அய்டி, புனே எப்டிஅய்அய், அய்தராபாத் மத்திய பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் முதல் அலகாபாத், பனாரஸ், பாட்னா, ஜாதவ்பூர் வரை, உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், காவிமயமாக்கல் சக்திகளுக்கு, நவதாராளமயமாக்கல் சக்திகளுக்கு எதிராக, தடைகள் எழுப்பி வருகின்றனர்; சுதந்திரத்துக்கான அந்நியப்படுத்தப்பட முடியாத தங்கள் உரிமையை அறுதியிடுகின்றனர்.
இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தால், ஜனநாயகம், நீதி - சமூகம் முழுவதும் ஊடுருவும் ஜனநாயகம், சந்தையின், அரசின் வல்லமைக்கு எதிராக நிற்கிற ஜனநாயகம், தனி நபரின், அனைத்து விதமான சிறுபான்மையினரின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நீதி - ஆகியவற்றுக்கான ஒரு போர் வளர்ந்து வருவதை நாம் காண முடியும். இங்குதான் பாசிசத்துக்கான வரையறுக்கிற பதில் உள்ளது. அதை வெறுமனே போற்றி மதிக்க வேண்டிய ஓர் உன்னதமான லட்சியமாக அல்லாமல், இந்தியாவின் வரையறுக்கிற, மேலோங்கிய யதார்த்த மாக மாற்ற வேண்டியதுதான் சவால்.
பாஜகவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தேவையான அமைப்பு பலம், கருத்தியல் ஆதாரம், அரசியல் விருப்பம் கூட, இன்று காங்கிரசுக்கு இல்லை. சிவ சேனா, அகாலி தளம் வகை மட்டுமின்றி, அய்க்கிய ஜனதா தளம், பிஜ÷ ஜனதா தளம் போன்ற ஜனதா தளத்தில் இருந்து பிரிந்துபோன கட்சிகள் காங்கிரசில் இருந்து பிரிந்துபோன திரிணாமூல் போன்ற கட்சிகள், அசாம் கன பரிசத், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அஇஅதிமுக போன்ற கட்சிகள் என, பெரும்பாலான பிராந்திய கட்சிகள் பாஜகவுடன் சேர்ந்து செல்லும் தங்கள் தயார் நிலையை வெளிப்படுத்தியிருக்கின்றன. லோக் ஜன சக்தி கட்சியின் ராம்விலாஸ் பாஸ்வான், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, அல்லது ராம்தாஸ் அதாவலே, உதித் ராஜ் போன்ற, அம்பேத்கர் பற்றி அடிக்கடி பேசும் தலித் கட்சிகள், தலைவர்களுக்குக் கூட, பாஜகவுடன் கரம் கோர்ப்பதில் சிரமம் இருந்ததில்லை.
ஒரு ரோஹித் வேமுலாவின் துணிச்சலும் தியாகமும், அம்பேத்கரின் அடிப்படை மாற்றத்துக்கான லட்சியப் பார்வையை கற்பனையை மீண்டும் பற்ற வைக்க, சாதிக்கு எதிராக, பாஜகவின் சாதிய சதிகளுக்கு எதிராக, சமூக, அரசியல் போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்தைத் தூண்டிவிடத் தேவையாக இருந்தது. எனவே, கருத்தியல் தளத்தில், பாஜகவுக்கு எதிரான போர், பிரதானமாக இடதுசாரிகளாலும், அடிப்படை மாற்றத்துக்காக அம்பேத்கரை பின்பற்றுபவர்களாலும் பிற முற்போக்கு, ஜனநாயக போக்குகளாலும், சக்திகளாலும் நடத்தப்பட வேண்டும். இந்தத் தனித்தனியான போராட்டங்கள் ஒன்றிணைந்து, ஜனநாயகத்துக்கான ஒரு துடிப்பான இயக்கமாக ஒன்றுபடுவதற்கான நேரம் வந்துவிட்டது.
தனது சமீபத்திய அய்க்கிய அமெரிக்க விஜயத்தில் அய்க்கிய அமெரிக்க காங்கிரசில் பேசிய நரேந்திர மோடி, இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டான 2022க்குள் செய்து முடிக்க வேண்டிய தனது பேரார்வ பட்டியல் பற்றி குறிப்பிட்டார். அதிகாரத்தின் உயர்பீடத்தில் இருந்துகொண்டு, 2019க்குப் பிறகான தனது பார்வை பற்றி சொன்னார். அனைவருக்கும் வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை, மின்சாரம் என்ற விதிவிலக்கற்ற லட்சியங்களை, தனது இலக்குகளை விவரிக்க அவர் பயன்படுத்தியபோது, ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் என்ன விவாதம் நடக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆர்எஸ்எஸ், 2025ல் தனது நூற்றாண்டை, அது நீண்டகாலமாக போற்றும் இந்து ராஜ்ஜியத்தில் கொண்டாட விரும்புகிறது.
ஆர்எஸ்எஸ் தனது நூற்றாண்டுக்கு தயாராகும்போது, கம்யூனிஸ்டுகளும் தயாராகிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துவக்க காலத்தில் பகத்சிங் சொன்னதுபோல், வெள்ளையர்களிடம் இருந்தும், பழுப்பு நிற எசமானர்களி டம் இருந்தும் நாடு விடுதலை பெறுவது சவாலாக இருந்தது என்றால், பாசிசப் படைகளிடம் இருந்து குடியரசை மீட்பது இன்றைய சவாலாக உள்ளது. இந்த இலக்கை நோக்கிய புத்துணர்வு பெற்ற ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் அறுதியிடல், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தனது புகழ்மிக்க வரலாற்றில் உருவாக்கிய தலைசிறந்த சிந்தனையாளர்களில், முன்னோடி தலைவர்களில் ஒருவரான இஎம்எஸ்ஸ÷க்கு செலுத்தப்படும் மிகச் சிறந்த மரியாதையாக இருக்கும்.
கைரானாவிலிருந்து இந்துக்கள் கட்டாய வெளியேற்றமா?
குல்பர்க் சொசைட்டி வழக்கு தீர்ப்பு சரிதானா?
காம்ரேட்
கைரானா, ஷாம்லி. இவை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள். கைரானா, இசுலாமியர் பெரும்பான்மையாக உள்ள மாவட்டம். 2017ல் உத்தரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க உள்ளன. பாரதிய ஜனதா கட்சி, மதவாத அணிதிரட்டல் என்ற துருப்புச் சீட்டை, இந்தத் தேர்தலுக்கும் கையில் எடுத்துள்ளது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக உத்தரபிரதேசத்தில் வெற்றி பெற, சிறிதும் பெரிதுமாகப் பல மதவாத அணிதிரட்டல்களில் ஈடுபட்டது. முசாபர்நகர் மதவெறி வன்முறை யில் 80 இசுலாமியர்கள் மடிந்ததும், ஆயிரமாயிரம் பேர் வீடிழந்து அகதிகளாய் வெளியேறி யதும், பாஜகவின் பிரம்மாண்ட வெற்றிக்கு உதவியது. மாட்டுக்கறி வைத்திருந்தார் என 2015ல் தாத்ரியில் ஒரு கும்பலால் அக்லக் கொல் லப்பட்டது, மதவாத சூட்டைக் கிளப்பியது. ஆனால் இந்த முயற்சி பீகார் தேர்தலில் தோல்வியைத்தான் தந்தது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரபிரதேசத்துக்குப் பொறுப்பேற்ற அமித் ஷா, 2017 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலுக்குத் தம் சங் பரிவார் கூட்டாளிகளுடன் சேர்ந்து தம் கைவரிசையை காட்டத் துவங்கிவிட்டார். ஹிட்லரின் பிரச்சார பீரங்கியான கோயபல்சுக்கு, கோணிப் புளுகன் என்ற பட்டம் உண்டு. ஒரு பொய்யை நூறு முறை திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மையாகி விடும் என கோயபல்ஸ் நம்பினார். அதுவே நாஜி பாசிஸ்ட்களின் கோட்பாடாக மாறியது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட, இந்தியாவின் இந்துத்துவா அமைப்புகள், தங்களது வழிகாட்டி ஹிட்லர் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தன.
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, முசாபர்நகரில் பாஜக என்ன செய்தது? பாகிஸ்தானில் நடந்த சம்பவம் ஒன்று தொடர்பான காண்ஒளி காட்சி ஒன்றை, முசாபர்நகரில் நடந்த சம்பவம் எனக் காட்டி, சங் பரிவார், இந்துக்கள் மத்தியில் மதவெறி நஞ்சைப் பரப்பியது. தங்களது மகள்களையும் மருமகள்களையும், இசுலாமியர்கள் தொடுத்துள்ள காதல் போரிலிருந்து பாதுகாக்க வேண்டும் என, ஜாட் சாதி மகா பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டன. போலி கேசட், காதல் போர் என்ற பொய்ப் பிரச்சாரம் கொண்டு இசுலாமியர் பலர் படுகொலை செய்யப்படும், பல்லாயிரம் பேர் வீடு வாசல் இழந்து வெளியேறும் நிலையை உருவாக்கி, கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து பாஜக, உத்தரபிரதேசத்தில் உள்ள 80 இடங்களில் 71 இடங்களை அள்ளிக் குவித்தது.
மோடி ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் சாதனையைக் கொண்டாடும்போது, ஹ÷கும் சிங் என்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், இசுலாமிய பயங்கரவாதத்தால் கைரானாவில் இருந்து, இந்துக்கள் கும்பல் கும்பலாக வெளியேறுவதாகச் சொன்னார். கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக 346 இந்துக்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். அலகாபாத் செயற்குழுவுக்கு வந்திருந்த அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள், காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது போல், கைரானாவிலிருந்து இந்துக்கள் வெளி யேற்றப்படுவதாகச் சொன்னார்கள். வழக்கம் போல் மோடி வளர்ச்சி பற்றிப் பேச, அமித் ஷா மதவாத விசயங்களை முன்நிறுத்தினார்.
இந்த முறை சங் பரிவார் வசமாகச் சிக்கிக் கொண்டது. கைரானா பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஹ÷கும் சிங் தந்த 346 பேர் பட்டியலின் சரித்தன்மையை தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைகள், புலன் விசாரணை செய்து முடிவுகளை வெளியிட்டன. அந்த முடிவுகள், பாஜக முகத்தில் கரி பூசின. கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இந்துக்கள் என பாஜக குறிப்பிட்ட 346 பேரில், ஏற்கனவே இறந்தவர்கள், 10 வருடங்கள் 5 வருடங்கள் முன்பு கைரானாவை விட்டு வெளியேறியவர்கள், பிள்ளைகளின் மேலான கல்விக்காக, வேலை வாய்ப்புக்காக வெளியேறியவர்கள் இருந்தனர். கைரானாவில் வேலை வாய்ப்பு இல்லை. 25 கிலோ மீட்டர் தள்ளி உள்ள அரியானாவின் பானிபட் போய் நாளுக்கு ரூ.200 சம்பாதிக்க, போக்குவரத்து செலவு நாளொன்றுக்கு ரூ.50 ஆவதாகவும், இதனால் வேலை கிடைக்கும் இடம் தேடி ஒரேயடியாகப் போய்விடுவதாகவும் அங்குள்ள இந்துக்கள் சொல்கிறார்கள்.
தன் முயற்சியில் சற்றும் தளராமல், பாஜக இப்போது வேறு இரண்டு விசயங்கள் செய்துள்ளது. அக்லக் வீட்டு குளிர்பதனப் பெட்டியில் இருந்தது மாட்டுக்கறி அல்ல ஆட்டுக்கறி என முதல் ஆய்வக அறிக்கை சொன்னது. இப்போது எட்டு மாதங்களுக்கு பிறகு, திரும்பவும் ஓர் ஆய்வக அறிக்கை, மதவெறி கும்பலால் கொல்லப்பட்ட அக்லக் வீட்டில் இருந்த கறி, மாட்டுக்கறிதான் என்கிறது. சங்பரிவார் திரும்பவும் மகா பஞ்சாயத்துக்களைக் கூட்டி, அக்லக் குடும்பம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது. இந்திய மக்கள் என்ன உணவு உண்ண வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் கருத்தை, பிளவுவாத நிகழச்சி நிரலைத் திரும்பவும் எடுக்கிறது.
பொதுவான இசுலாமிய தீவிரவாதத்தால் இந்துக்கள் வெளியேறியதாக நாங்கள் சொல்லவில்லை, இசுலாமிய குற்றக் கும்பல்கள் உருவாக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்தான் இந்துக்கள் வெளியேற்றம் நடந்துள்ளது என சங் கூட்டம் சொல்கிறது. குற்றக்கும்பலுக்கு முக்கிம் காலா என்ற இசுலாமியரே தலைமை தாங்குவதாகச் சொன்னது. ஷாம்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய் பூஷன், சென்ற ஆண்டு முக்கிம் காலா கைதாகும்போது, முக்திம் காலா மீது 14 கொலை வழக்குகள் இருந்ததாக வும், முக்திம் காலா 11 இசுலாமியர்களையும் 3 இந்துக்களையும் கொன்றதாக வழக்கு உள்ளது என்றும் சொன்னார். முக்திம் காலாவின் குற்றக் கும்பலில் உள்ள 12 பேரில் 4 பேர் இந்துக்கள் என்றும் 8 பேர் இசுலாமியர்கள் என்றும், இவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்றும் சொல்கிறார். குற்றக் கும்பலின் நடவடிக்கைகளுக்கோ சேர்க்கைக்கோ மதச் சாயம் பூச எந்த ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது.
இவ்வளவு மோசமாக பொய்யான தகவல்களைப் பரப்பியவர்கள் மேல், மதவாத வெறுப்பை, வன்முறையைத் தூண்டியவர்கள் மேல், உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி முதல்வர் அகிலேஷ் யாதவ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சங் பரிவாரோடு நட்பு ஆட்டம் ஆடி, மதவெறி வன்முறை பரவ அவர் துணை போகிறார்.
பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பிறகு நடந்த மும்பை கலவரங்களில் சிவசேனை வெளிப்படையாகத் தலைமை தாங்கியது. 2002ல், மோடியின் வழிகாட்டுதலுடன், ஆசியுடன், குஜராத்தில் இசுலாமியப் படுகொலை அரங்கேறியது. மும்பையில், மும்ப்ரா, பெண்டி பஜார், ஜோகேஷ்வரி, அகமதாபாத்தில் ஜுஹாபுரா என்ற இசுலாமிய சேரிகள் உருவாயின. மும்பையில், இசுலாமியர்கள் வீடு வாங்குவது, குடி போவது மிக மிகக் கடினம். கலவரங்கள் விரட்டியதால் அவர்கள் குடியேறிய இசுலாமியர் நிறைந்த சேரிகளுக்கு, குடிமை வசதிகளும் சேவைகளும் கிடைப்பது கடினம். கிடைத்தாலும் அற்ப சொற்பமாக இருக்கும். இவை இந்துத்துவா கும்பல்களால், ‘மினி பாகிஸ்தான்’ என அழைக்கப்பட்டன.
346 பேர் பெயர்ப் பட்டியல் வெளியிட்ட ஹுகும் சிங் போன்ற இந்துத்துவா தளபதிகள், முசாபர்நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட 50,000 இசுலாமியர்கள் பெயர்ப் பட்டியலை வெளியிடுவார்களா? நாட்டின் பல பகுதிகளிலும், ‘இசுலாமியர் மீது வெறுப்பு’ என்ற, ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற குற்றச் செயல்களுக்கு ஆளாகும் லட்சக்கணக்கானவர்கள் பெயர்ப் பட்டியலை வெளியிடுவார்களா?
திருவாளர் மோடி 2016 ஜுன் மாதம் அய்க்கிய அமெரிக்க காங்கிரசில் கூசாமல் சொன்ன பொய், அவர் கோயபல்சின் தகுதி மிக்க சிஷ்யர் என மெய்ப்பிக்கும். ‘இன்று இந்தியாவின் எல்லா மனிதர்கள் மற்றும் நிறுவனங்களிடம், கிராமங்களில் நகரங்களில், வீதிகளில் மாநிலங்களில் எல்லா மத நம்பிக்கைகளுக்கும் சம மரியாதை வேரூன்றியுள்ளது. அதன் நூற்றுக்கணக்கான மொழிகள் மற்றும் வட்டார மொழிகளின் இனிய இசையில், இந்தியா ஒன்றாக வாழ்கிறது; இந்தியா ஒன்றாக வளர்கிறது; இந்தியா ஒன்றாக கொண்டாடுகிறது. இந்தியாவின் 125 கோடி குடிமக்களும் அச்சத்தில் இருந்து சுதந்திரம் பெற்றுள்ளனர். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அச்சமற்ற சுதந்திரத்தை செயல்படுத்துகின்றனர்’.
சங் பரிவார் திருந்தாது. பாஜக காங்கிரஸ் இல்லாத இந்தியா பற்றிப் பேசும்போது, ஒரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், ‘இசுலாமியர் இல்லாத இந்தியா’ பற்றிப் பேசி உள்ளார். மத, சாதி, இன, மொழிரீதியான வெறுப்பு அரசியலை மக்கள் போராட்ட ஒற்றுமை அரசியல் கொண்டு சந்திக்க வேண்டும்.
குல்பர்க் சொசைட்டி வழக்கு தீர்ப்பு
2002, பிப்ரவரி 28. அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோத்ராவில் ரயில் பெட்டி ஒன்றில் கர சேவகர்கள் எரிந்துபோன பிறகு, மோடி - ஷா - சங்பரிவார் கும்பல், குஜராத்தின் இசுலாமியர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க, ஒரு பெரிய தண்டனை வழங்க முடிவு செய்தனர். குஜராத்தின் போலீஸ் துறையும் அரசாங்கமும் பதுங்கிக் கொண்டன. குஜராத்தின், நகரங்கள், கிராமங்கள், குறிப்பாக இசுலாமியர் வாழும் பகுதிகள், சங் பரிவார் குற்றக் கும்பல்கள் கைப்பிடிக்குள் சென்றன. இசுலாமியர் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எவை என, அரசு நிர்வாகம், சங்பரிவார் கும்பல்களுக்கு அடையாளம் காட்டியது.
குல்பர்க் சொசைட்டி. அது ஓர் இசுலாமியக் குடியிருப்பு. அங்கு முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாப்ரி வசித்து வந்தார். 28.02.2002 காலை 9 மணிக்கு இந்துத்துவா கலவரக் கும்பல் குல்பர்க் சொசைட் டியைச் சூழ்ந்து கொள்கிறது. குடியிருப்பவர்கள் ஈஷான் ஜாப்ரியை அணுகி, தங்களைக் காப்பாற்ற ஏதாவது செய்யுமாறு கேட்கின்றனர். ஈஷான் ஜாப்ரி காவல்துறையை, மாநில முதல்வரை, நாட்டின் உள்துறை அமைச்சர் அத்வானியைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு கேட்கிறார். பிரபல பத்திரிகையாளர் குல்திப் நய்யர் சில தினங்கள் முன்பு, அந்த 28.02.2002 அன்று ஈஷான் ஜாப்ரி தம்மிடம் டெல்லி மூலம் ஏதாவது செய்யுமாறு சில முறை தொலைபேசியில் பேசியதையும், தாம் உள்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டதையும், காப்பாற்ற எவரும் இல்லாமல், ஈஷான் ஜாப்ரியும் குல்பர்க் சொசைட்டியினரும் படுகொலை செய்யப்பட்டதையும், நினைவு கூர்ந்துள்ளார். அன்று குல்பர்க் சொசைட்டி முன்பு, கொலைகார கும்பல் கொலை வெறியோடு கூடியிருந் ததை, காவல் அதிகாரிகள் கண்ணால் கண்டனர். ஆனால் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். அன்று, ஈஷான் ஜாப்ரி, அவரது குடும்பத்தினர் முன்பு துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிறகு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட 69 பேரில் சிலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். சிலர் எரித்துக் கொல்லப்பட்டனர். 66 பேர் மீது வழக்கு போடப்பட்டது. வழக்கு நடக்கும் போதே 6 பேர் இறந்துவிட்டனர். 11 பேருக்கு ஆயுள் தண்டனை, 12 பேருக்கு 7 ஆண்டுகள் தண்டனை, ஒருவருக்கு 10 ஆண்டுகள் தண்டனை என வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக குஜராத் மாநில அரசு இருந்தது. 2004 முதல் 2014 வரை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பயனுள்ள நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அகமதாபாத்துக்குச் சென்ற சோனியா காந்தி, துன்பத்தில் வாடினாலும் நீதிக்குத் தொடர்ந்து போராடி வந்த ஈஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரியைச் சந்திக்கக் கூட முயற்சிக்கவில்லை. குஜராத் இசுலாமிய படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு, சிடிசன்ஸ் ஃபார் பீஸ் அண்ட் ஜஸ்டிஸ் அமைப்பின் டீஸ்டா செதல்வாத் மற்றும் ஆனந்த்தான் வழக்காடினர்.
சமூக ஊடகங்களில் சங் பரிவார் ஆதரவாளர்கள், இப்போதும், அடக்கி வாசிக்கக் கற்றுக் கொள்ளாவிட்டால், இனியும் இசுலாமியர்களுக்கு அதே கதிதான் என எச்சரிக்கின்றனர். தீர்ப்பு வழங்கிய நீதிபதியும், ‘பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி சொல்லும்’ விக்டிம் பிளேமிங், ஆதிக்க மனோநிலை நோயால் பீடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. தீர்ப்பில், ஈஷான் ஜாப்ரி துப்பாக்கியால் சுட்டதை சாட்சிகள் ஞாபகமாகத் தேர்ந்தெடுத்து மறந்துவிட்டதாகவும், வெறுமனே வாகனங்களை எரித்துவிட்டு போயிருக்கக் கூடிய கும்பலை, ஈஷான் ஜாப்ரி துப்பாக்கியால் சுட்டதுதான் அதனை கொலை வெறியின் உச்சத்திற்கு இட்டுச் சென்றது என்றும், கொடூரமாகக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மீது பழியை சுமத்துகிறது.
நெருங்கிய உறவினர்களைக் கொலை வெறியோடு தாக்குபவர்களை, ஒருவர் திரும்பத் தாக்கினால், அவ்வாறு செய்யும்போது அச்செயலால் எவராவது இறக்க நேர்ந்தாலும், அந்தச் செயலை தற்காப்பு நடவடிக்கை என்று மட்டுமே கருத முடியும் என, மிகச் சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கூட, குல்பர்க் சொசைட்டி வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணக்கில் கொள்ளவில்லை. 28.02.2002 அன்று காலை 9 மணி முதல், மதியம் 1 மணிக்குக் கும்பல் தாக்குதலில் ஈடுபடும் வரை, கலவரக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டு வந்ததை, கும்பல் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போனதை, குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் ஒரு போலீஸ்காரர் கூட வராததை நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை.
16.12.2012 அன்று டெல்லியின் ஓடும் பேருந்தில் நிர்பயா பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட் டார். இந்த நிகழ்ச்சி நாட்டின் மனச்சாட்சியை உலுக்கியது. பெண்களின் அச்சமற்ற சுதந்திரம் என்ற முழக்கத்தை, முன்கொண்டு வந்து நிறுத்தியது. ஆனால் நிர்பயா, அவர் மீது வன்முறையை ஏவியவர்களை எதிர்த்துப் போராடா மல் கையெடுத்து, கும்பிட்டு அண்ணா என்று கெஞ்சியிருந்தால், அவருக்கு அந்த நிலை வந்திருக்காது என்று சங்பரிவார் போலி சாமியார் அசாராம் பாபு சொன்னார். இந்தியாவின் நீதிபதிகள் அசாராம் பாபுபோல், பலியானவர்கள் மீது பழி போடத் துவங்கி உள்ளதை, குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு உணர்த்தியது. இந்த அணுகுமுறை கடுமையான கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். பலியாபவர்கள் மீது, பாதிக்கப்படுபவர்கள் மீது பழி போடுவதை எதிர்த்து, அவர்களுக்கு நியாயம் கிடைக்க நடக்கும் போராட்டம் பலப்பட வேண்டும்.
வெரிசான் தொழிலாளர் போராட்டம்
காம்ரேட்
அய்க்கிய அமெரிக்காவில் ஒரு மிகப் பெரிய தொழிலாளர் போராட்டம், வேலை நிறுத்தம், சமீபத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றவர்கள் வெரிசான் நிறுவனத் தொழிலாளர்கள். அய்க்கிய அமெரிக்காவில், தொலை தொடர்புத் துறையில் ஏடி அண்ட் டி மற்றும் வெரிசான் என்ற இரண்டு நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
வெரிசான் 5ஜி, 6ஜி, 7ஜி என்றெல்லாம் (ஜி - ஜெனரேஷன் -தலைமுறை) தொழில் நுட்பம் விரைவில் தருவேன் என வாய்வீச்சில் ஈடுபட்ட நேரம், தாமிரக் கம்பி தொழில் நுட்பத்தில் இருந்து, கம்பியில்லா ஃபியாஸ் தொழில்நுட்பம் நோக்கி வெரிசான் மாறிக் கொண்டிருந்தபோது, ஏப்ரல் 13 துவங்கி இந்த வேலை நிறுத்தம் நடந்தது. வெரிசான் நாடெங்கும் கம்பியில்லா (ஒயர்லெஸ்) தொழில் நுட்பம் கொண்ட சில்லறை விற்பனை நிலையங்கள் நிறுவியிருந்த நிலையில், அங்கெல்லாம் சங்க உறுப்பினர் எவரும் இல்லை என்ற பின்னணியில், இந்த வேலை நிறுத்தம் நடந்தது.
35,000க்கும் மேற்பட்ட வெரிசான் தொழிலாளர்கள், கம்யூனிகேஷன் ஒர்க்கர்ஸ் ஆஃப் அமெரிக்கா, தி இண்டர்நேஷனல் பிரதர்ஹுட் ஆஃப் எலக்ட்ரிக்கல் ஒர்க்கர்ஸ் என்ற இரண்டு சங்கங்களில் உறுப்பினர்களாக இருந்தனர். 2011ல் 43 ஆயிரம் வெரிசான் தொழிலாளர்கள், சங்கம் சேர்ந்து போராடினர். 2016ல் இந்த எண்ணிக்கையில் 7,000 குறைந்துள்ளது. சங்கத்தில் இப்போது 36,000 பேர் உள்ளனர். 5 வருடங்களில் 16% வேலைகள், ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டன.
வெரிசான் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டனர். நிர்வாகம் மருத்துவப் பாதுகாப்பு, ஓய்வூதியம் என்ற அடிப்படை சலுகைகளை பறிக்க வேண்டும் என்றது. பல ஆயிரம் வேலைகள் குறைய வேண்டும் என்றது. இருக்கும் அழைப்பு மய்யங்களை மூடி, வெரிசான் இல்லாத மாநிலங்களில் மெகா சென்டர்கள் நிறுவப் போவதாகச் சொன்னது. அங்கே சங்கம் இல்லாத ஆட்களை வேலைக்கு வைக்கப் போவதாகச் சொன்னது. இப்போது வேலையில் இருப்பவர்கள் சிலர், ஒரு நாளில் 10, 12 மணி நேர வேலை செய்யும் சூழலும் உள்ளது. வேலைக்கான பயணத்தில் 4 மணி நேரம் கழிக்க வேண்டிய இடங்களுக்கு, தொழிலாளர்களைப் பணியிட மாற்றம் செய்யப் போவதாகவும், அவர்களை அவ்வாறு மாற்றும் இடத்தில், இரண்டு மாதங்கள் வரையிலும் கூட சேர்ந்தாற்போல் இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் நிர்வாகம் சொன்னது.
சங்கங்களும் தொழிலாளர்களும், பணத்தில் கணக்கிடக் கூடிய இழப்புகளுக்கு, சில சமரசங்களுக்கு தயாராய் இருந்தனர்; ஆனால் நிர்வாகம் சொல்லும் விஷயங்களை ஒப்புக் கொண்டால், சங்கம் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என உணர்ந்தனர். 9 மாதங்கள் இழுத்தடித்த பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகுதான், ஏப்ரல் 13 முதல், வேலை நிறுத்தம் துவங்கியது.
ஒரு மாத லாபம் 1.8 பில்லியன் டாலர், ஒரு வருட வருவாய் 130 பில்லியன் டாலர் சம்பாதிக்கும் வெரிசான், ஏடி அண்ட் டி நிறுவனத்தோடு சேர்ந்து, ஒயர்போன் செர்வீசஸ், ஒயர்லெஸ், பிராட்பேண்ட், இண்டர்நெட், ஸ்ட்ரீமிங் கேபிள் டெலிவிசன் சர்வீசைக் கட்டுப்படுத்தும் போது, தன்னோடு தொழிலாளர்கள் மோதினால் தூளாவார்கள் என நம்பியது. கம்பியிலிருந்து கம்பியில்லா சேவைகள் நோக்கிச் செல்லும் போது, கம்பி இல்லா சேவைகளே உடனடி எதிர்காலம் எனும்போது, கருங்காலிகளை வேலைக்கமர்த்தி, வேலை நிறுத்தத்தை உடைத்துவிட முடியும் என, வெரிசான் நம்பியது. தற்காலிக, முழுநேர தொழில்நுட்பப் பணியாளர்கள் வேலைக்கு வேண்டும் என மிகப் பெரிய அளவில் விளம்பரங்கள் வெளியிட்டது. 3% அளவுக்கு கருங்காலிகளை நியமித்தது. மே மாதம் துவங்கியபோது, தொழிலாளர்களின் மருத்துவக் காப்பீட்டை நிறுத்தியது.
வெரிசான் ஒயர்லெஸ் நோக்கிச் செல்லும்போது, அதன் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்காது, அவர்கள் வசதிப்படாத இடங்களுக்கு சேவை வழங்க மறுப்பார்கள், அவர்கள் மனம் போன போக்கில் கட்டணம் உயர்த்துவார்கள் எனச் சமூகத்தில் இருந்த கருத்துக்களை, தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர். 1935ல், தொழிலாளர் போராட்டத்தால் உருவான தேசிய தொழிலாளர் உறவுகள் சட்டம், சங்க உரிமையை கூட்டு பேர உரிமையை அங்கீகரித்தது. ஆனால் தொழில் நடத்துபவர்கள், தொழில் தடையில்லாமல் இயங்க, வேலை நிறுத்தக் காலங்களில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுத்துக் கொள்ளலாம் என்று 1939லேயே அய்க்கிய அமெரிக்க உச்சநீதிமன்றம், சொல்லியிருந்தது. இந்தத் தீர்ப்பு, தொழிலாளர் இயக்கத்திற்கு, தாண்ட முடியாத நெடுஞ்சுவராக மாறியது.
ஆனால் புதிய ஆயிரமாவது ஆண்டிற்குப் பிறகு, அய்க்கிய அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம், அய்க்கிய அமெரிக்கா 1% பேருக்கா 99% பேருக்கா என்ற கேள்வியை எழுப்பியது. ஒரு மணி நேரத்துக்குக் குறைந்தபட்ச சம்பளம் 15 டாலர் என்ற முழக்கம், நாடெங்கும் இயக்கமாய்ப் பரவியது. வெற்றிகளும் பெற்றது. வெரிசான் போராட்டம் நடந்த நேரத்தில் அய்க்கிய அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியில் போட்டியிடும் வாய்ப்பு பெர்னி சேண்டர்சுக்கா ஹிலாரி கிளிண்டனுக்கா என்ற போட்டி, தீவிரம் அடைந்திருந்தது. சேண்டர்ஸ் தரப்பு தன் பிரச்சாரத்தில், 2008லிருந்து 2013 வரை வெரிசான் 42.4 பில்லியன் டாலர் லாபம் சம்பாதித்த போது, அரசாங்கம் வெரிசானுக்கு 732 மில்லியன் டாலர் வரிப்பணத்தை திருப்பித் தந்ததைச் சுட்டிக் காட்டியது. 2013ல் மட்டும் வெரிசான் 1.8 பில்லியன் டாலரை வெளிநாட்டில் பதுக்கியதை சுட்டிக்காட்டி 2008 முதல் 2011 வரை வரி கட்டாதவர்கள், தொழிலாளர்களுக்கு எதுவும் தர மறுப்பது ஏன், தொழிலாளி தலையில் கை வைக்கப் பார்ப்பது ஏன், எனக் கேள்வி எழுப்பியது.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியை ‘தொழிலாளர் கட்சியாக’ மாற்றுவதாக மிரட்டி இருந்தார். 18 வருடங்களாக எந்த உண்மைச் சம்பள உயர்வும் பெறாத சீற்றமுற்ற தொழிலாளர்களின் கட்சியாக மாற்றுவேன் என்றார். வேலை இன்மை மற்றும் சம்பள திருட்டுக்கு எதிரான, நிறுவனங்கள் எதிர்ப்பு வேட்பாளராகத் தம்மைக் காட்டிக் கொண்டார்.
வெரிசான் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்பவர்களை மறிக்கும் போது அவர்களோடு ஒரு நாள் பெர்னி சாண்டர்ஸ் நின்றார். ஹிலாரி கிளிண்டனும் கூட புதிய கண்கவர் காலணிகளுடன் ஒரு நாள் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து நின்றார். ஆக சமூக அரசியல் சூழல், அதிபர் தேர்தல் பிரச்சாரக் களம் வரையிலும், வெரிசான் தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருந்தது.
அய்க்கிய அமெரிக்காவில், அரசு உதவியுடன், 19ஆம் நூற்றாண்டு, ரயில் தண்டவாளங்களுடனான ரயில் நிறுவனங்களுக்கு உதவியது என்றால், 20ஆம் நூற்றாண்டு நெடுஞ்சாலையுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு உதவியது என்றால், 21ஆம் நூற்றாண்டு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உதவுகிறது. ஒவ்வொரு நூற்றாண்டும் வேறுவேறு முதலாளிகளுக்கென்றால், தொழிலாளர்களின், மக்களின் நிலைமை என்ன என்ற கேள்வி வலுவாக எழுந்தது.
இந்தப் பின்னணியில், திறமையும் அனுபவமும் கொண்டிருந்த வெரிசான் தொழிலாளர்கள் வேலைகளை, கருங்காலிகளால் செய்ய முடியவில்லை. நுகர்வோரும் மக்களும் அவர்கள் வேலைகள் சரியில்லை எனப் புகார் செய்தனர். கருங்காலிகளை விரட்டி விரட்டி மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள், அதிகாலை 4 மணிக்கு எழுந்தார்கள்; இரவு 11, 12 மணிக்கு கருங்காலிகள் அவர்கள் தங்கும் விடுதிகளுக்குச் செல்லும் வரை, அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
சமூக ஊடகங்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எழுதின. வெரிசான் நிர்வாகம், தொழிலாளர்களுக்கு, மே மாதத் துவக்கத்தில் மருத்துவக் காப்பீட்டை நிறுத்தியவுடன், சங்கம் அவர்களுக்கு அவசர மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்து தந்தது.
வெரிசான் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடெங்கும் ஒருமைப்பாடு வளர்ந்தது. பல நகராட்சிகள் வேலை நிறுத்த சமயத்தில் வெரிசானோடு வியாபார உறவு இல்லை எனத் தீர்மானம் போட்டார்கள். மே 5 அன்று வெரிசான் நிறுவன ஒயர்லெஸ் சில்லறை விற்பனை நிலையங்கள் முன்பு நாடெங்கும் மறியல் நடந்தது. மே 25 அன்று நியுயார்க் நகரம் வெரிசானுக்கு 300 மில்லியன் டாலர் வியாபாரம் தரக் கூடாது என ஒரு பேரணி நடந்தது. தொழிலாளர்கள், போராட்டம் ஒரு நாள் நீடித்தால், தாங்கள் மேலும் ஒரு நாள் வலுவாவதாக (ஒன் டே லாங்கர் ஒன் டே ஸ்ட்ராங்கர்) முழக்கமிட்டனர்.
வேலை நிறுத்தப் போராட்டக்காரர்கள் சளைக்கவில்லை, சோர்ந்து போகவில்லை, அவர்களுக்கு ஆதரவு வலுக்கிறது, தனக்கு எதிர்ப்பு வலுக்கிறது, இனியும் வேலை நிறுத்தம் நீடித்தால்தான் வேலை இன்மைப்படி தர வேண்டி வரும் என்பதால், வெரிசான் நிர்வாகம் வேறு வழியில்லாமல் சமரசத்துக்கு வந்தது. 4 வருடங்களில் 10.5% சம்பள உயர்வு, மருத்துவக் காப்பீட்டிற்கு தொழிலாளி சிறிது கூடுதலாகக் கட்ட வேண்டும், 1500 பேர் புதிதாக வேலைக்கு எடுக்கப்படுவார்கள், வாரக் கணக்கில் இடமாற்றம் கிடையாது என நிர்வாகம் ஒப்புக்கொண்டது. முதன் முறையாக ஒயர்லெஸ் ரீடெயில் ஸ்டோர் ஒன்றின் 65 பேருக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஜ÷ன் 2016ல், அய்க்கிய அமெரிக்காவின் தொழிலாளர் அமைச்சர் தாமஸ் பெரஸ் முன்பு வெரிசான் நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
கடந்த சில பத்தாண்டுகளில் அய்க்கிய அமெரிக்க தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தயங்குவார்கள் என்ற நிலை இருந்தது. வேலை நிறுத்தம் செய்தாலும் குழம்பிப் போய் சோர்வுடன் வேலைக்குத் திரும்புவார்கள். இப்போது வெரிசான் தொழிலாளர்கள் தலை நிமிர்ந்து, தமது வலிமை, போர்க்குணம், அமைப்பாகும் திறன் உணர்ந்து வேலைக்குத் திரும்பி உள்ளனர்.
மாணவர் பிரதிநிதிகளிடமிருந்து 
முற்போக்கு அரசியலைக் கற்றுக் கொள்ள 
பாஜககாரர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்!
மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று கூறி அரசியல், அடையாள அடிப்படையிலான மாணவர் சங்கங்களுக்கு தடை விதிக்க டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் கமிட்டி முன்வைத்துள்ள பரிந்துரைக்கு எதிராக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க துணைத் தலைவரும் அகில இந்திய மாணவர் கழக செயல்வீரருமான தோழர் ஷெஹ்லா ரஷீத் எழுதிய கட்டுரையில் இருந்து:
‘மோடி அரசாங்கம் எதிர்க்கட்சியினரை தாக்குவதை நிறுத்திவிட்டு இப்போது அது வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். இரண்டாண்டு காலம் மோடி அரசாங்கத்தின் தோல்விக் காலமாக ஆகிவிட்டிருக்கிறது. அவர்களால் அரசாங்கத்தின் தோல்விகளுக்கு எதிராக போராடும் மக்களின் வாயை அடைக்க முடியாது. நாங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான். நாங்கள் அரசு ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறோம்; அதே சமயம் மாணவர்களுக்காகவும் வேலை செய்கிறோம். முற்போக்கு அரசியலில் ஏதாவது பாடம் கற்றுக் கொள்ள மோடி விரும்பினால் அவர் ஜேஎன்யுவுக்கு வரலாம். ஜேஎன்யு மாணவர் சங்கம் அவருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். நாங்கள் மாணவர்களுக்கான தேவைகளை செய்து கொடுத்துக் கொண்டே நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் பிரகடனம் செய்துள்ள விசயங்களுக்காக போராடவும் செய்கிறோம். நாங்கள் எங்கள் எதிர் அணியின் மீது தாக்குதல் தொடுப்பதோ, அவர்களை அடித்து உதைப்பதோ, சமூக ஊடகங்களில் வசைபாடுவதோ செய்வதில்லை. நாங்கள் வேலை செய்கிறோம். மாணவர் பிரதிநிதிகளிடமிருந்து முற்போக்கு அரசியலைக் கற்றுக் கொள்ள பாஜககாரர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்’.
பள்ளி கல்லூரிகளை அரசே ஏற்று நடத்துக!
அகில இந்திய மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% ஒதுக்கீடு உடனே நிரப்பப்பட வேண்டும், கல்வியை கடைச் சரக்காக்காமல், அனைத்து பள்ளி கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும், கல்விக் கட்டணக் கொள்ளை உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுன் 14 அன்று சென்னையில் அகில இந்திய மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அகில இந்திய மாணவர் கழகத்தின் தோழர் கோகுல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புதிதாக கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கோஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொதுப் பேரவை கூட்டத்தில் தீப்பொறி சந்தா சேர்ப்பு
கோஆப்டெக்ஸ் ஊழியர் சங்கத்தின் 52ஆவது பொதுப் பேரவைக் கூட்டம் 12.06.2016 அன்று சேலத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவரும், ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவருமான தோழர் குமாரசாமி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் இகக (மாலெ) அரசியல் ஏடான மாலெ தீப்பொறி இதழுக்கு சந்தா சேர்ப்பதற்காக வேண்டுகோள் விடுத்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. வேண்டுகோளை ஏற்று கூட்டத்திற்கு வந்திருந்த ஊழியர்கள் 65 பேர் 6 மாத சந்தாத் தொகையை வழங்கினர்.
கள்ளக்குறிச்சி மகா பாரதி பொறியியல் கல்லூரியில் 
அகில இந்திய மாணவர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி
கல்வி முடித்த ஒவ்வொரு மாணவரும் ரூ.8000 கட்டினால்தான் மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியும் எனக் கூறி சான்றிதழ் வழங்க மறுத்த கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக அகில இந்திய மாணவர் கழகம் வட்டாட்சியரிடம் நிர்வாகத்தின் மீது ஊழல் புகார் அளித்தது. எஸ்சிஎஸ்டி மாணவர்களின் விடுதி மானியத்தை கல்லூரி நிர்வாகமும் வங்கி நிர்வாகமும் கூட்டு வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கின்றன என புகாரில் கூறப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையிலும் மாணவர் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். இப்போது ரூ.8000 வசூல் செய்யாமல் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கஜேந்திரன், மாவட்டப் பொறுப்பாளர் தோழர் வெற்றிச்செல்வன், மாணவர்கள் ரஞ்சித், இளையராஜா, பூபதி, மணிவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தோழர் அண்ணாதுரைக்கு அஞ்சலி
இகக(மாலெ) விடுதலையின் மாநிலக்குழு உறுப்பினராகவும், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பிற்காலங்களில் கக(மாலெ) மக்கள் விடுதலையின் கட்டுப்பாட்டுக்குழு தலைவராகவும் இருந்த தோழர் எஸ்.அண்ணாத்துரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 21.06.2016 அன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 65.
சென்னை தொழிலாளர் வர்க்க இயக்கத்திலிருந்து 1970களில் நக்சல்பாரி புரட்சியாளர்கள் பலரும் கிராமப்புறங்களில் மக்கள் பணி என பயணப்பட்ட போது புரட்சியே வாழ்க்கை என்ற முடிவுடன் அன்றைய தென்னாற்காடு (கடலூர், விழுப்புரம்) மாவட்டத்தில் பணியாற்றியவர் தோழர் அண்ணாதுரை.
தலித் மக்களின் சுயமரியாதைக்காக, மனித உரிமைகளுக்காகப் போராடுவது, சாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தலித்துகளை திரட்டி பதிலடி கொடுப்பது, தாக்குதலுக்கு உள்ளான மக்களைப் பாதுகாப்பது ஆகிய பல்வேறு பிரச்சனைகளில் அவர் ஒரு உறுதியான போராளியாக வாழ்ந்தவர். கிராமப்புற வேர்க்கால்மட்ட வேலைக்கு அவர் அழுத்தம் கொடுத்து வந்தார். தன் வாழ்நாள் முழுவதும் ஒரு களப் போராளியாக பணியாற்றினார்.
சென்னையில் ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அவரது இறப்பு செய்தி வந்தது. உடனே கூட்டம் மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தியது.
கூட்டம் முடிந்தவுடன் இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கட்சியின் மாநிலச் செயலாளருமான தோழர் குமாரசாமி, மத்தியக்குழு உறுப்பினர்கள் தோழர் பாலசுந்தரம், புவனா ஆகியோருடன் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் எ.எஸ்.குமார், என்.கே.நடராஜன், தேசிகன், தாமோதரன், இரணியப்பன், தேன்மொழி, ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் மணிவேல், மற்றும் இகக மாலெ சென்னை, திருவள்ளூர் மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் எனப் பலரும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
22.06.2016 அன்று நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் சேகர் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Search