சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி
கண்ணுக்குத் தெரிந்துவிட்ட புண்ணுக்கு களிம்பு
கண்ணுக்குத் தெரிந்துவிட்ட புண்ணுக்கு களிம்பு
(மாலெ தீப்பொறி 2016 ஜுலை 16 – 31 தொகுதி 14 இதழ் 24)
வங்கியில் வாங்கிய கடனில் கடைசி இரண்டு தவணைகள் செலுத்த முடியாமல் தஞ்சையில் விவசாயி ஒருவர் வங்கியின் குண்டர்களாலும் காவல்துறையினராலும் தாக்கப்பட்ட காட்சியும் அடுத்து உடனடியாக அரியலூரில் இன்னொரு விவசாயி கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதும் தேர்தலுக்கு சற்று முந்தைய தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக எழுந்தது. விவசாயிகள் நலனில் அக்கறையற்ற அரசு என்று வலுவான எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. முதலமைச்சர் வேட்பாளர்கள் எல்லாம் கடன் தள்ளுபடி அறிவித்தனர். ஜெயலலிதாவும் அறிவித்தார். பதவியேற்ற நாளில், மே 23 அன்று இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான அரசாணை எண் 59, 28.06.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. உடனடியாக வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களைச் சந்திக்க இது மிகவும் அவசியம்.
2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளும் 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் குறு விவசாயிகளும் கடன் தள்ளுபடி பெறுவார்கள் என்று அரசாணை சொல்கிறது. மார்ச் 31, 2016 அன்று நிலுவையில் உள்ள அசல், வட்டி, அபராத வட்டி, பிற கட்டணங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. குறுகிய கால பயிர்க் கடன், நடுத்தரக் கால, நீண்ட காலக் கடனாக மாற்றப்பட்ட குறுகிய கால பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ரூ.5,780 கோடி அளவுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின் றன. இந்தக் கடனை அரசு அய்ந்து ஆண்டுகளில் கடன் கொடுத்த நிறுவனங்களுக்குத் திருப்பித் தரும். இந்தக் கடன்களுக்கு ஏதாவது அரசு மானியம் அளிக்கப்பட்டிருந்தால், அது தவிர மீதி கடன் தள்ளுபடி செய்யப்படும். இன்னும் 15 நாட்களில் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அரசாணை சொல்கிறது.
சிறு, குறு விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி என்று ஜெயலலிதா அறிவித்தவுடனேயே இந்தத் தள்ளுபடி அனைத்து விவசாயிகளுக்கும் வேண்டும், கூட்டுறவு வங்கிக் கடன்கள் மட்டுமின்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் அந்த அறிவிப்பு தொடர்பான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
வழக்கம்போல் இந்தக் குரலும் அலட்சியப்படுத்தப்பட்டு, சிறு, குறு விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி தொடர்பான வழிகாட்டுதல்கள் அரசாணையில், எல்லா விவசாயிகளுக்கும் தள்ளுபடி தருவது பற்றி விவரங்கள் ஏதும் இல்லை.
தமிழ்நாட்டின் சிறு குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி முதன்முதலில் ஜெயலலிதா அறிவித்துவிடவில்லை. 2006ல் கருணாநிதியும் அறிவித்திருக்கிறார். அய்முகூ 2 ஆட்சி அறிவித்திருக்கிறது. பல்வேறு மாநில அரசுகள் அறிவித்து அமலாக்கியுள்ளன. கருணாநிதியும் அய்முகூவும் அறிவித்த கடன் தள்ளுபடிகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் செல்வாக்கு உள்ளவர்களால் அபகரிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஜெயலலிதாவின் தற் போதைய அறிவிப்பிலும் அப்படி நடந்துவிட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் 74 லட்சம் சிறு குறு விவசாயிகள் உள்ளனர். 2011 - 2012ல் 8,99,974 விவசாயிகளுக்கு ரூ.3,280.42 கோடி, 2012 - 2013ல் 9,17,550 விவசாயிகளுக்கு ரூ.3,728.74 கோடி, 2013 - 2014ல் 10,46,839 விவசாயிகளுக்கு ரூ.4,716.16 கோடி, 2014 - 2015ல் 10,36,859 விவசாயிகளுக்கு ரூ.5,279.91 கோடி என 2011 முதல் 2015 வரையிலான நிதியாண்டுகளில் தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் தரப்பட்டுள்ளது. 2015 - 2016ல் ரூ.5,500 கோடி பயிர்க்கடன் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எத்தனை பேருக்கு பயிர்க் கடன் தரப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் தரப்படவில்லை.
இவர்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் 1,49,245 பேருக்கு 2011 - 2012ல், 1,73,685 பேருக்கு 2012 - 2013ல், 1,84,325 பேருக்கு 2013 - 2014ல், 1,54,159 பேருக்கு 2014 - 2015ல் என, 2011 முதல் 2015 வரை பயிர்க்கடன் தரப்பட்டுள்ளது. இவர்கள் சிறு, குறு விவசாயிகளாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இவர்கள் ஒவ்வோர் ஆண்டும் புதிதாகக் கடன் வாங்குபவர்கள் அல்ல. வாங்கியவர்களே திரும்பவும் வாங்கியிருக்கக் கூடும். ஆக, மொத்தமுள்ள சிறு, குறு விவசாயிகள் 74 லட்சம் பேரில் அதிக பட்சம் 5 லட்சம் பேருக்கு கடன் தரப்பட்டுள்ளதாகவும் அது தள்ளுபடி செய்யப்படவுள்ளதாகவும் எடுத்துக் கொண்டாலும், தமிழ்நாட்டின் ஏகப்பெரும்பான்மை சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பால் பெரிய பயன் ஏதும் இல்லை என்பது தெரிய வருகிறது.
தமிழக அரசு சொல்லும் விவரங்கள்படி பார்த்தாலும், 2011 முதல் 2015 வரையிலான நான்கு நிதியாண்டுகளில் சராசரியாக ஒரு விவசாயிக்கு ரூ.43,265 கடன் தரப்பட்டுள்ளது எனக் கொண்டாலும், ரூ.5,780 கோடிக்குக் கடன் தள்ளுபடி எனும்போது, இதனால் 13 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன் பெற வேண்டும். ஆனால், அப்படி நடக்கும் என்று அரசு சொல்லும் விவரங்களில் இருந்து கூட முடிவு செய்ய முடியவில்லை. கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகள் எண்ணிக்கை அந்த அளவுக்குப் பெரியதல்ல என்பதும் அரசு தரும் விவரங்களில் இருந்து தெரிய வருகிறது.
10% விவசாயிகள்தான் இந்த அறிவிப்பால் பயன்பெறுவர் என்று தென்னிந்திய கரும்பு சாகுபடியாளர் சங்கம் சொல்கிறது. எட்டு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் அதைக் காட்டி மூன்று ஏக்கருக்கான பயிர்க் கடன் பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு தள்ளுபடி கிடைக்காமல் போகும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சொல்கிறது.
தமிழக விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களில் 22% மட்டுமே கூட்டுறவு வங்கிக் கடன்கள். மற்றவை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் நிதிநிறுவனங்கள் மற்றும் தனியாரிடமும் வாங்கப்பட்டவை. ட்யுக் பல்கலைக் கழகத்தின் ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள, நிதி நிர்வாகம் மற்றும் ஆய்வு அமைப்பின் (இன்ஸ்டியூட் பார் பினான்சியல் மேனேஜ் மென்ட் அண்டு ரிசர்ச்), கொள்கை உருவாக்கத்துக்கான சாட்சி (எவிடன்ஸ் ஆப் பாலிசி டிசைன்), என்ற அமைப்பு, தமிழக விவசாயிகள் 60% வரை வட்டிக்கு ஆண்டுக்கு கடன் வாங்குகிறார்கள் என்று சொல்கிறது. கூட்டுறவு நிறுவனங்களில், பிற முறைசார்ந்த நிதி நிறுவனங்களில் கடன் உடனடியாக கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதால், பிறரிடம் அநியாய வட்டிக்குக் கடன் வாங்குகிறார்கள் என்று, இன்னும் நடந்து கொண்டிருக்கிற அந்த ஆய்வு சொல்கிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்வது மத்திய அரசு சம்மந்தப்பட்ட பிரச்சனை என்று குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளிடத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சொல்லியுள்ளார். ஆனால், கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்பட்ட கடன்களை அடுத்த அய்ந்து ஆண்டுகளில் மாநில அரசுதான் திருப்பித் தரப் போகிறது என்றால், அதே போல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களையும் அரசு தந்துவிட முடியுமல்லவா?
பெரிய விவசாயிகளின் கடன் உட்பட மொத்த கடனும் ரூ.5,000 கோடிக்குள்தான் வரும் என்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டி யன் சொல்கிறார். மொத்த கடனும் ரூ.4,500 கோடிதான் இருக்கும் என்று தினகரன் செய்தி ஒன்று சொல்கிறது. மொத்தத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள அதிகாரிகளுக்கு வரவு செலவு சரியாகக் காட்ட முடியவில்லை. கூட்டுறவு சங்கங்களில் தலைவர்களாக இருக்கிற கழகக் கண்மணிகளின் ஆணைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியிருப்பதால் சரியான கணக்குக் காட்டுவது சிரமம்தான். குமாரசாமி கணக்குதான் காட்ட முடியும்.
அப்படியானால், ஜெயலலிதா ரூ.5,780 கோடி என்ற தொகையை ஏன் அறிவித்தார்? அதிகாரிகள் தவறான விவரங்கள் தந்தார்கள் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியுமா? கடந்த அய்ந்தாண்டு கால ஊழல் ஆட்சி வேறு வேறு விசயங்களையும் சேர்த்து விளக்கிக் கொள்ள நம்மை நிர்ப்பந்திக்கிறது. இந்தக் கடன் தள்ளுபடி பெறுவதற்கு, அஇஅதிமுக பிரமுகர்கள் என்ற வடிவத்தில் உள்ள குட்டி சாமிகள் சிலவற்றை அந்த சிறு, குறு விவசாயிகள் தாண்டித்தான் வர வேண்டும். அவற்றுக்கு படைக்க வேண்டியதை படைத்துத்தான் ஆக வேண்டும். இந்தக் கடன்களையே, விவசாயிகள் பெயர் சொல்லி இந்த மண்டகப்படிகளே வாங்கிவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. குட்டி சாமிகளுக்குப் போனதுபோக, அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும், கட்டிங்கும் கமிசனும் போய்ச் சேர வேண்டும். ஆக, வரும் அய்ந்து ஆண்டுகளில் அஇஅதிமுகவைச் சேர்ந்த பலருக்கும் இந்தக் கடன்களுக்கு அப்பால் சில நூறு கோடிகள் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லலாம்.
இவையனைத்துக்கும் பிறகு, புல்லுக்குப் பாய்வதுபோல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் கொஞ்சம் பாயும். மக்கள் பணம்தான். மக்களுக்கு வந்து சேரட்டும். பல பத்தாயிரம் சிறு, குறு விவசாயிகள் தள்ளுபடி பெறட்டும். ஆனால், சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்துவிடுவதால் மட்டும் தமிழக விவசாயிகளின் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து, அவர்கள் வாழ்க்கையில் மாற்றமும் மலர்ச்சியும் வந்து விடாது. விவசாயத்துக்கு மலிவான இடுபொருட்கள் தருவதில், விளைபொருளுக்கு கட்டுப்படியாகும் விலையை உத்தரவாதம் செய்வதில் தமிழக அரசாங்கம் தொடர்ந்து துரோகம் செய்கிறது. இடுபொருள், கட்டுப்படியாகும் விலை ஆகியவற்றுக்கு முன்னால், விவசாயம் செய்ய பாசன வசதி இல்லாமல் பம்ப் செட் வாங்கக் கடன் வாங்கி தற்கொலை வரை செல்லும் விவசாயிகளை தமிழ்நாடு பார்த்தது.
விவசாயிகளின் நலன் காக்கும் அரசு தனது அரசு என்று தனது கடந்த ஆட்சி காலத்தில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ஜெயலலிதா சொன்னார். பொன்னியின் செல்வி பட்டம் சூட்டிக் கொள்வது வரை புரட்டு சென்றது. ஆனால், மொத்த சாகுபடி பரப்பு 2011 - 2012ல் 49.54 லட்சம் ஹெக்டேர். 2012 - 2013ல் 45.44 லட்சம் ஹெக்டேர். 2013 - 2014ல் 49.86 லட்சம் ஹெக்டேர். இது முந்தைய கருணாநிதி ஆட்சியில் இருந்ததை விட குறைவு. 2006 - 2007ல் 51.26 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் நடந்தது. இந்த நிலப்பரப்பிலும், 2011 - 2012ல் 29.12 லட்சம் ஹெக்டேர், 2012 - 2013ல் 26.43 லட்சம் ஹெக்டேர், 2013 - 2014ல் 29.64 லட்சம் ஹெக்டேர் என மட்டுமே பாசன வசதி இருந்தது. தமிழக அரசு இதே கால கட்டத்துக்கு தந்துள்ள விவரங்களை விட மத்திய அரசு தந்துள்ள விவரங்கள் சற்று கூடுதலானவை. இந்த விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் கூட தமிழக விவசாயிகளுக்கு பாசன வசதியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. ஜெயலலிதாவை இந்தக் காலக்கட்டத்தில்தான் காவிரித்தாய் என அஇஅதிமுகவினர் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மொத்த உணவு தானிய உற்பத்திப் பரப்பு, நெல் உற்பத்திப் பரப்பு, மொத்த உணவு தானிய உற்பத்தி, நெல் உற்பத்தி என எல்லாம் இந்த ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து போயிருக்கின்றன. கடைசியாக 2015 - 2016 ஆண்டுக்கு தமிழக அரசு தரும் விவரங்கள்படி கூட, சாகுபடிப் பரப்பு 47.14 லட்சம் ஹெக்டேர்; அதில் பாசன வசதி பெற்ற பரப்பு 33.11 லட்சம் ஹெக்டேர்தான். இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் வாழ்க்கை நலிந்து கொண்டே போனதையே இந்த விவரங்கள் காட்டுகின்றன.
இந்த நிலைமைகளில் மாற்றம் கொண்டு வராமல் கடன் தள்ளுபடி செய்வது, அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்கள் கடன் வாங்காமல் இருப்பதையோ அல்லது வாங்கினால் திருப்பிச் செலுத்துவதையோ உறுதி செய்யாது. எல்லாவற்றுக்கும் மேல், சிறு, குறு விவசாயிகள் மீது அக்கறை உள்ளதாக காட்டிக் கொள்ளப் பார்க்கும் அரசு அவர்கள் விவசாயம் செய்ய அவர்கள் வசம் நிலம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதுபோன்ற அடிப்படை பிரச்சனைகளைத் தீர்ப்பதை புறந்தள்ளிவிட்டு, மேம்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதில், சலுகைகள் அறிவிப்பதில், ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கம் காலம்கடத்துமானால், ஜெயலலிதா ஆட்சி நடக்கவிருக்கிற அடுத்த அய்ந்தாண்டு காலத்தில் தமிழக விவசாயிகள் இன்னும் பாதகமான நிலைமைகளுக்குத் தள்ளப்படுவதைத்தான் இந்த அரசாங்கம் உத்தரவாதம் செய்யும். இன்று, சிறு, குறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடி கண்ணுக்குத் தெரிந்துவிட்ட காயத்துக்குப் பூசப்படும் களிம்புதான். தமிழ்நாட்டின் விவசாய சமூகம் எதிர்கொண்டிருக்கும் அனைத்தும் தழுவிய தாக்குதல்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி மட்டும் தீர்வாகாது.