COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, July 16, 2016

ஊழலின் ஊற்றுக்கண் முகேஷ் அம்பானி
நாட்டு மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் 
கார்ப்பரேட் பெருமுதலாளிகள்
ஆர்.வித்யாசாகர்
(மாலெ தீப்பொறி 2016 ஜுலை 16 – 31 தொகுதி 14 இதழ் 24)
ஏற்கனவே நாட்டைக் குலுக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழலுக்குப் பிறகு மறுபடியும் ஒரு 4 ஜி அலைக்கற்றை ஊழல். ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் மூலம் பின்வழியாக நுழைந்து பல தில்லுமுல்லுகள் செய்து 4 ஜி அலைக்கற்றை உரிமத்தைப் பெற்றிருக்கிறார் முகேஷ் அம்பானி. இந்த ஊழல் மத்திய தணிக்கையாளர் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தப்பட்டது; பிரசாந்த் பூஷன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கம் போல நீதிமன்றமும், அரசும் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

மோசடியின் பின்னணி
கைப்பேசி மூலம் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதற்கு பயன்படும் மின்காந்த அலைகளை செயல்படுத்த, அதைப் பராமரிக்க வலைப்பின்னல்களை ஏற்படுத்துவது மொபைல் சர்வீஸ் அளிக்கும் கம்பெனிகளின் வேலை. இதைச் செய்வதற்காக மின்காந்த அலைகள் பயணிக்கும் அலைக்கற்றைகள் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு இந்த கம்பெனிகளுக்கு ஏலம் விடப்படுகிறது. பொது ஏலத்தின் மூலம் இது நடைபெறும். இதற்காக இந்தியா 22 நிர்வாக பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இவை பெருநகரங்கள், சிறு நகரங்கள், கிராமப்புறங்கள் என மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த 22 பகுதிகளுக்கும் அலைக்கற்றை சேவை அளிக்க அந்த சேவை வழங்கும் நிறுவனங்கள் அலைக்கற்றை தொகுதிகளை அரசாங்கத்திடமிருந்து வாங்க வேண்டும். இதற்கு பின்வரும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
1. கீழ்க்கண்ட உரிமங்களில் ஏதாவது ஒன்றை போட்டியிடும் கம்பெனிகள் பெற்றிருக்க வேண்டும்.
அ). கைப்பேசி தொலைத் தொடர்பு மற்றும் செய்தி பரிமாற்றத்திற்கான உரிமம்.
ஆ) இணையத் தொடர்பு அளிப்பதற்கான உரிமம்.
இ) இவையிரண்டும் அளிக்கும் உரிமம்.
(3 ஜி அலைக்கற்றையை, தொலைபேசித் தொடர்பு மற்றும் இணையத்தளத் தொடர்புக்கு பயன்படுத்தப்படலாம். 4 ஜி அலைக் கற்றையை, கைப்பேசி மூலம் புகைப்படம் மற்றும் செய்திக்குறிப்புகள் அனுப்ப அல்லது பெற மட்டுமே பயன்படுத்தலாம்).
2. ஏலத்தில் உண்மையாகவே பங்கேற்பதை நிரூபிக்க, அலைக்கற்றை தொகுதிகளுக்கு ஏற்ப ஒரு தொகையை அரசாங்கத்திற்கு முன்பணமாகச் செலுத்த வேண்டும்.
ரிலையன்சின் மோசடி
பாரதி ஏர்டெல், வோடாஃபோன் போன்ற நிறுவனங்களுடன், இன்ஃபோடெல் பிராட்பேண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (அய்பி எஸ்பிஎல்) என்ற நிறுவனமும் 3ஜி - 4ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கு பெற்றது. இதுவரை அறியப்பட்டிராத ஒரு சிறிய நிறுவனம் 2010 மே - ஜ÷ன் மாதங்களில் நடைபெற்ற ஏலத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்த நிறுவனம் 22 பகுதிகளிலும் எல்லா அலைக்கற்றை தொகுதிக்களுக்குமான ஏலத்தில் பங்கெடுத்தது. ரூ.12,847 கோடிக்கு ஏலம் கேட்டது. ஏலம் முடிந்த உடனேயே இந்த நிறு வனம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இது ரிலையன்ஸ் ஜியோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தில்லு முல்லு செய்து ஏலத்தில் வென்றது எப்படி? பின்புற வாசல் வழியாக வந்த அம்பானி
அய்பிஎஸ்பிஎல் என்ற கம்பெனி 2007ல் அலைக்கற்றை ஏலத்தில் பங்கு பெறுவதற்கான உரிமம் பெற்றிருந்தது. டெலிகாம் அதாரிட்டி ஆஃப் இந்தியாவின் குறிப்புப்படி இந்த நிறுவனம் 150ஆவது இடத்தில் இருந்தது. ஏலம் கேட்டபொழுது அதன் மூலதனத்தின் மதிப்பு வெறும் ரூ.2.5 கோடிதான். அதன் வங்கி கணக்கில் வெறும் ரூ.18 லட்சம் மட்டுமே இருந்தது. அதிலும் ரூ.11 லட்சம் வங்கியில் பிணையத் தொகையாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அலைக்கற்றை ஏலத்தில் பங்குபெற ரூ.252.5 கோடி முன் பணமாகச் செலுத்த வேண்டும். அந்த நிறுவனத்திடம் அவ்வளவு நிதி இல்லாத நிலையில், வேறு ஏதோ பெயரில் கொடுக்கப் பட்ட வங்கி உத்தரவாத பத்திரத்தில், அந்தப் பெயரை அடித்துவிட்டு தனது பெயரை கையால் எழுதி அதை முன்பணமாகச் செலுத்தி ஏலத்தில் பங்கெடுத்தது.
ஏமாற்றி, மோசடி செய்து ஒரு சிறு நிறுவனத்தால் எப்படி ஏலத்தில் பங்கெடுக்க முடிந்தது? வெற்றி பெற முடிந்தது? இதை எவ்வாறு அரசு அனுமதித்தது? அதற்குக் காரணம் இதன் பின்னணியில் இருந்த அம்பானிதான்.
இந்த வங்கி உத்தரவாத ஆவணத்தை எந்த அரசு அதிகாரியும் ஆய்வு செய்யவில்லை. ஏலம் முடிந்தவுடன் கூட மத்திய அமைச்சரவை செயலர், நிதித்துறை செயலர், இப்போது செயலற்று இருக்கும் திட்டக் கமிஷன் செயலர் மற்றும் தொலைபேசித் தொடர்புத் துறை செயலர் (டிஓடி) ஆகியோர் அதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றனர்.
3ஜி - 4ஜி ஆகிய அலைக்கற்றை ஏலங்களில் வலுவாக தீவிரமாகப் பங்கெடுத்த அய்பிஎஸ்பிஎல் நிறுவனம், ஏலத்தில் முதல் தகுதி பெற்றது. ஏலத்தில் பங்குபெறத் தேவையான 350 புள்ளிகளிலும் முதன்மையாக வந்தது (வர வைக்கப்பட்டது). ஏலம் முடிந்து 6 நாட்களுக்குப் பின் அய்பிஎஸ்பிஎல் நிறுவனம் தனியார் லிமிடெட் நிறுவனம் என்பதில் இருந்து பொது லிமிடெட் (பப்ளிக் லிமிடெட்) நிறுவனமாக மாறியது. ரூ.10 வீதம் 475 கோடி பங்குகளை சந்தையில் இறக்கியது. இதில் 75% பங்குகள் ரிலையன்ஸ் அம்பானியின் கைகளுக்கு வந்தது. 3 ஆண்டுகளுக்குள் இந்தக் கம்பெனி ரிலையன்ஸ் ஜியோ என்ற புது உருவமெடுத்தது. கற்பனைக்கெட்டாத தில்லுமுல்லுகள் மூலம் ரிலையன்ஸ் தன்னுடைய முதல் நிலையைத் தக்கவைத்துக் கொண்டது.
ஏலம் முடிந்த 12 நாட்களில் ஏலத் தொகை அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டது. இந்த தில்லுமுல்லுகள் மத்திய தணிக்கையாளர் அறிக்கை மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டன. தனது மூலதன மதிப்பைவிட 5,000 மடங்கு அதிகமான ஏலத்தொகையை ஒரு சிறிய நிறுவனம் எவ்வாறு பெற்றது என மத்திய தணிக்கையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
4ஜி அலைக்கற்றை ஏலம் எடுப்பவர்கள் அதை வாய்மொழி தொலைத் தொடர்புக்கு (வாய்ஸ் சர்வீசஸ்) பயன்படுத்தக் கூடாது என்று கொள்கை இருந்தது; 2013ல் இந்தக் கொள்கை மாற்றப்பட்டது. 2013ல் இந்த கம்பெனி ரிலையன்ஸ் ஜியோ என்று மாறியது. உடனே நுழைவுக் கட்டணமாக ரூ.15 கோடியும், நிறுவனத்தின் பெயர் மாற்றத்திற்காக ரூ.1,658 கோடியும் கட்டிவிட்டு ரிலையன்ஸ் ஜியோ புது உரிமம் பெற்றது. இதன்படி வாய்மொழித் தொடர்பு சேவையும் 4ஜி மூலம் வழங்கலாம் என்ற உரிமத்தைப் பெற்றது. ஆனால் துவக்கத்தில் 4ஜி அலைக்கற்றைக்கான கட்டணம் 2010ல் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சந்தை விலையில் அது மிகவும் குறைவு. பழைய கட்டணத்திலேயே ரிலையன்ஸ் ஜியோ புதிய உரிமத்தைப் பெற்று கொள்ளை லாபம் பார்த்தது. இந்த விஷயமும் சிஏஜி அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.
2001ல் 2ஜி அலைக்கற்றை ஏலத்திலேயே அது மிகவும் குறைவான விலைக்கு ஏலம் விடப்பட்டு, உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதை விட குறைவான விலையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அது கிடைத்திருக்கிறது. அரசின் விசுவாசம் எங்கே இருக்கிறது என்பது நாம் அறிந்ததே. நீதிமன்றமும் கூட பெரும் கார்ப்பரேட் முதலாளிக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பளித்திருக்கிறது. பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெற்ற உரிமத்தின் பேரில் குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரசாந்த் பூஷணின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. வங்கி உத்தரவாத ஆவண மோசடி கணக்கில் கொள்ளப்படவில்லை.
நாட்டைக் கொள்ளையடித்துக் கொழுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும், துணை நிற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இது பெரும் வெற்றி. ரிலையன்ஸ் அம்பானி தில்லுமுல்லுகளுக்கும் மோசடிகளுக்கும் சளைத்தவர் அல்ல. ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பதே முகேஷ் அம்பானி போன்ற பெருமுதலாளிகள்தான்.
இந்திய இளைஞர்களை கடனாளிகளாக்கி, அடிமைகளாக்கி குற்றவாளிகளாக்கும் கொள்கைகள் முறியடிக்கப்பட வேண்டும்
முகேஷ் அம்பானி மோசடி செய்து சொத்து சேர்க்க வழிசெய்வதுபோல், அனில் அம்பானிக்கும் வேறு வழியில் சொத்து சேர்க்க ஆட்சியாளர்கள் வழி செய்கிறார்கள்.
தனியார்மயக் கல்வி, மாணவர்களை கடனாளிகளாக்கிவிட்டது. நிரந்தரமான நிரந்தரமற்ற வேலை வாய்ப்புகள் அவர்களை அடுத்து அடிமைகளாக்கிவிடுகின்றன. அவர்கள் கல்வி பெற கடன் கொடுத்த வங்கிகள் அவர்களை குற்றவாளிகளாக்கிவிடுகின்றன. பாரத ஸ்டேட் வங்கி தனது கல்விக் கடனை வசூல் செய்யும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றிருப்பது இதற்கான முயற்சியாகவே தெரிகிறது.
தமிழ்நாட்டில், பாரத ஸ்டேட் வங்கி தனது வாராக்கடனை (நான் பெர்ஃபாமிங் அசெட்ஸ்) குறைப்பதற்காக, கல்விக் கடன் தொகையில் 45% மதிப்பிற்கு, அதாவது ரூ.847 கோடி அளவுக்கான கல்விக் கடனை ரூ.381 கோடிக்கு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் அசெட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது.
மொத்தக் கல்விக் கடனில் சுமார் 40% கல்விக் கடன் தமிழகத்திலும் கேரளாவிலும் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. புற்றீசல் போல் பெருகியிருக்கும் பொறியியல் கல்லூரிகள் வங்கிக் கடன் மூலம் ஏராளமான மாணவர்களை சேர்த்தன. இவர்களில் பெரும்பாலா னோருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவர்கள் திண்டாடுகின்றனர். தற்சமயம் ரிலையன்ஸ் அடியாட்கள் மூலம் இந்தக் கடன்களை வசூலிக்க முயற்சிக்கிறது. ஏற்கனவே பலருக்கு நோட்டீஸ் வந்திருக்கிறது. கடனை மொத்தமாக வசூலித்துவிட்டால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.847 கோடி கிடைக்கும்.
2015 ஜுலையில் கேரளாவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூரின் கல்விக் கடன்கள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டன. 8,568 பேரின் ரூ.130 கோடி மதிப்பிலான கடன் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.63 கோடிக்கு விற்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் உடனடியாக ரூ.9 கோடி செலுத்தியது. ரூ.54 கோடியை 15 ஆண்டுகளில் தர ஒப்பந்தம் போடப்பட்டது. வங்கியில் கடன் வாங்கிய முன்னாள், இந்நாள் மாணவர்கள் தங்கள் கடன் பாக்கி என்னவென்று தெரிந்துகொள்ளக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடன் கட்டச் சொல்லி அறிவிப்புகள் வருவதாகவும் ஆனால், அது பற்றி அந்த நிறுவனத்தில் யாருடனும் பேசி எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கடன் வாங்கிய மாணவர்கள் சொல்கிறார்கள்.
தனியார் கல்வி நிறுவனங்களை கொழுக்க வைக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் மேலும் மேலும் அதிகரிக்க, இந்திய இளைஞர்களை கடனாளிகளாக்கி, அடிமைகளாக்கி, குற்றவாளிகளாக்கும் கொள்கைகள் முறியடிக்கப்பட வேண்டும்.

Search