COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, July 16, 2016

காஷ்மீர் நீதி கேட்கிறது
எஸ்.குமாரசாமி
(மாலெ தீப்பொறி 2016 ஜுலை 16 – 31 தொகுதி 14 இதழ் 24)
2010ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த கல் எறி கிளர்ச்சியில் 100 பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பேர் சிறை வைக்கப்பட்டனர். அப்போது 15 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் பர்ஹான் முசாபர் வானி, ஹிஸ்புல் முஹாஜிதீன் இயக்கத்தில் இணைந்தான். கணிசமான காஷ்மீர் மக்களைப் போல் அந்தச் சிறுவனும், ‘ஆசாதி’ சுதந்திரம் வேண்டும் என்றான். 08.07.2016 அன்று நடந்த மோதலில் பர்ஹான் முசாபர் வானி மடிந்ததாக அரசப் படையினர் வெற்றிகரமாக அறிவித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு கிளர்ந்தெழுந்தது. 

‘இந்தியாவே திரும்பிப் போ’ என்ற முழக்கமும், (தும் கித்னே பர்ஹான் மரோகே, ஹர் கர் சே பர்ஹான் நிக்லேகே) ‘நீங்கள் எத்தனை பர்ஹான்களைக் கொன்றாலும், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பர்ஹான் எழுவார்’ என்ற முழக்கமும் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் எதிரொலித்தது. இரங்கல் பேரணிகள், எதிர்ப்பு நிகழ்ச்சிகளாக மாறின. மக்கள், அரசின், அரச படையினரின், எதிரிகள் ஆயினர்.
26.04.2016 அன்று நய்லா அலி கான், காஷ்மீர் பற்றி எழுதும்போது, 1989 ஆயுதம் தாங்கிய கலகம், அரச படையின் தாக்குதல் ஆகியவற்றை அடுத்து 50,000 காஷ்மீரிகள் இது வரை இறந்துள்ளனர் எனவும், 8,000 பேர் காணாமல் போய்விட்டனர் (காவல்துறை/படையினரால் கடத்தப்பட்டனர்) எனவும், 5,000 பெண்கள் மீது பாலியல் வன்முறை ஏவப்பட்டது எனவும், ஒரு லட்சம் இந்துக்கள் காஷ் மீரை விட்டு வெளியேறும் சூழல் உருவானது எனவும் எழுதுகிறார். இப்போதைய காஷ்மீரின் சூழல், 8 லட்சம் படையினர், சீற்றமுற்ற 60 லட்சம் இளைஞர்களின் எதிர்ப்பைச் சந்திப்பதாகவே அமைந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, உயிருடன் இருந்த பர்ஹானை விட மடிந்த பர்ஹான், அரசுக்கு பேராபத்தாக இருப்பார் என்று கணித்துள்ளது, நிச்சயம் சரிதான். மெஹ்பூபா முப்டி மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளார். பிரபல பத்திரிகையாளர் சீமா முஸ்தபா, காஷ்மீர் மக்கள் இந்தியாவில் இருந்து அந்நியப்பட்டு இருப்பதற்கு 7 அடிப்படைக் காரணங்கள் சொல்கிறார்.
1. இந்து பண்டிட்டுகளுக்கு தனிக் குடியேற்றம்.
2. தனி இராணுவக் குடியேற்றங்கள்
3. நீர்த்துப் போக வைக்கப்பட்ட பெயரள விலான அரசியலமைப்புச் சட்ட பிரிவு 370 என்பதையும் நீக்கத் துடிப்பது.
4. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை விடாப்பிடியாகத் தொடர்வது.
5. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்.
6. வலை தளங்களில் காஷ்மீர் மக்களுக்கு எதிரான மதவெறி நச்சுப் பிரச்சாரம்.
7. பாகிஸ்தானோடு பேச்சு வார்த்தைகளை நிறுத்தியது.
‘மீண்டும் காஷ்மீர் பற்றியெரிகிறது’ என்ற தமது கடைசி வீடியோவில் பர்ஹான் வானி பேசியதைப் பற்றி சுத்தப்ரதா சென்குப்தா சுட்டிக்காட்டியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. ‘பர்ஹான் வானி அவரோ, அவரது சக போராளிகளோ காஷ்மீருக்கு வந்துள்ள அமர்நாத் புனித யாத்ரீகர்களை தொட மாட்டோம் என்று சொல்லியுள்ளார். புனித யாத்திரை அவர்கள் உரிமை, அவர்களது மதக் கடமைகளை செய்வதை யாரும் தடுக்க முடியாது என்றும் தங்களைத் தாக்காத எந்த காஷ்மீர் காவல்துறை யினரையும் தாங்கள் தாக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். காஷ்மீர் இசுலாமியர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களாக காஷ்மீர் பண்டிட்டுகள் திரும்பி வந்து வாழ அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் நிறுவிய ஆயுதம் ஏந்திய குடியிருப்புகள் போல் உருவாக்குவதை தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்’.
ஜம்மு காஷ்மீரில் இப்போது மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. காஷ்மீர் இளைஞர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெறுவதும் இந்திய கிரிக்கெட் குழுவில் இடம் பெறுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கிறது. ஆனால், காஷ்மீர் இளைஞர்கள் துப்பாக்கி தூக்குவது பரவலாக நடக்கிறது.
காஷ்மீர் என்ற நிலப்பகுதி மீது பூகோளரீதியான கட்டுப்பாடு என்பது மட்டுமே பேச வேண்டிய விசயம் என்று இந்தியா கருதுவதைக் கைவிட வேண்டும். காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். பக்கத்து நாடான பாகிஸ்தானோடு பகைமை பாராட்டாமல், பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டும். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் துணிச்சலுடன் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பேசவும் முன்வந்தார். இந்தியா ஏதேதோ காரணம் சொல்லி பாகிஸ்தானோடு பேச தொடர்ந்து மறுத்து வருகிறது. நிபந்தனை இல்லாமல் பாகிஸ்தானோடு பேச இந்திய அரசு தயாராக வேண்டும்.
காஷ்மீர் மக்களின் நீண்டகால கோரிக்கையான ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை, இந்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், உதய் யு.லலித் ஆகியோர் தமது 85 பக்கங்கள் தீர்ப்பில், மணிப்பூரில் ஆயுதப் படையினரால் 1,528 பேர் கொல்லப்பட்டது பற்றி விசாரிக்க வேண்டும் எனவும், சகஜ வாழ்க்கை திரும்பவில்லை எனச் சொல்லி படையினரை நீடித்து நிரந்தரமாக காலவரையறையில் லாமல் ஈடுபடுத்த முடியாது எனவும், அப்படிச் செய்வது, ஜனநாயக இயக்கப்போக்கின் தோல்வி எனவும், தோற்றுப்போன அரசின் வெளிப்பாடு எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
1968லிருந்து இம்பால் நீங்கலாக மணிப்பூர், அதன் பிறகு நாகாலாந்து, 1990லிருந்து அசாம் மற்றும் காஷ்மீர் மாநிலங்கள், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின்படி இராணுவ பூட்ஸ் கால்களின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. 2015ல், திரிபுரா இந்த சட்டத்திலிருந்து வெளி யேறியது. காங்கிரஸ் முக்த் பாரத் - முசல்மான் முக்த் பாரத் என, சங்பரிவார் பேசும்போது, விடாப்பிடியான ஜனநாயகத்தின் குரல், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் போன்ற ஒடுக்குமுறை சட்டங்கள் இல்லாத இந்தியா என்பதாகவே உள்ளது.
‘ஆயுதம் வைத்திருப்பவர்கள் அனைவரும் எதிரிகள் இல்லை’ எனவும், ‘எதிரிகள் என்றாலே அவர்களைக் கொல்வதுதான் வாய்ப்புள்ள ஒரே தீர்வல்ல’ எனவும் கூட உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதிர்ச்சியுடன் சொல்லியுள்ளனர். இந்திய அரசு ஜ÷லை 2016 உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கேற்ப காஷ்மீரில் இருந்து ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தையும் ராணுவத்தையும் திரும்பப் பெற வேண்டும்.
காஷ்மீரில் கடந்த சில தினங்களில் முப்பது இளைஞர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். 1,500 பேர் காயம் அடைந்துள்ளனர். ராணுவப் படையினர் சுட்ட ரப்பர் குண்டுகள் பட்டு காஷ்மீர் மக்கள் 150 பேருக்கு பார்வை பறிக்கப்பட்டுவிட்டது. மருத்துவமனைகளில் இருப்பவர்கள் மீது, ஆம்புலன்சுகளில் செல்பவர்கள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. காஷ்மீர் மருத்துவமனைகளில் ஒரு சமாளிக்க முடியாத, அவசர சிகிச்சை நிலை நிலவுகிறது.
காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என திரும்பத் திரும்பச் சொல்லும் ஆட்சியாளர்கள், காஷ்மீர் மக்களை தொடர்ந்து எதிரிகள் போல் நடத்துகின்றனர். பர்ஹான் வானியின் மோதல் மரணத்துக்குப் பிறகு, ஆயரமாயிரமாய் காஷ்மீர் இளைஞர்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவிக்கும்போது, காஷ்மீர் இளைஞர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றா பொருளாகும்? காஷ்மீர் பள்ளத்தாக்கு நெடுக இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றால், பயங்கரவாதம் என்ற சொல்லே பொருளற்றுப் போகாதா?
காஷ்மீரில் இப்போது கிளர்ச்சி செய்கிற பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் காஷ்மீரில் பிறந்து வளர்ந்து வாழ்பவர்கள் என்பதை இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் தொடர்பாக ஒரு மென்மையான அணுகுமுறை/பார்வை இருந்தாலும், பாகிஸ்தானில் உள்ள ஜனநாயக விரோத நிலைமைகளையும் பாகிஸ்தான் அரசு ஏகாதிபத்திய அய்க்கிய அமெரிக்காவால் ஆட்டிவைக்கப்படுகிறது, பாகிஸ்தானுக்குள் அய்க்கிய அமெரிக்கா நேரடியாக ட்ரோன் தாக்குதல்கள் நடத்துகிறது என்ற விசயங்களையும் காஷ்மீர் மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, படையினர் நிதானம் காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மோடி ஆதரவாளர் ஒருவர் ட்விட்டரில், ‘பயங்கரவாதி பர்ஹான் இறுதிச் சடங்கில் 20,000 பேர் கலந்துகொண்டனர், 20,000 பேர் மீதும் ஒரு குண்டு வீசி அந்த 20,000 பன்றிகளுக்கும் சுதந்திரம் (ஆசாதி) வழங்கியிருக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். ஒரு பக்கம் இவர்களைப் போன்றவர்கள் விஷத்தைப் பரப்பும்போது, நிதானம் வேண்டும் என்று பேசுவது நம்பத்தகுந்தது அல்ல.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘தேசப் பாதுகாப்பு’ என்று சொல்லி சோனியா காந்தியையும் ஒமர் அப்துல்லாவையும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்ள, அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், நேரு காலத்தில் இருந்து வஞ்சிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் திரும்பத் திரும்ப படுகொலைகளைச் சந்தித்துவிட்ட காஷ்மீர் மக்கள், அமைதி திரும்ப நியாயம் வேண்டும் என, நிச்சயம் வலியுறுத்துவார்கள். காஷ்மீர் மக்களுடன் இந்திய அரசு ஓர் அரசியல் உரையாடலை உடனடியாக துவக்குவதும் அவர்களது விருப்பங்களை செவி கொடுத்துக் கேட்பதும் நடந்தாக வேண்டும். காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை, துப்பாக்கி முனையில், இந்திய அரசு ஒருபோதும் முடிவு செய்ய முடியாது. இணைய சேவைகளை முடக்கி, உலகிடம் இருந்து, உண்மையை மறைத்துவிட முடியாது.
நீதி கேட்கும் காஷ்மீருக்கு நியாயம் வழங்க, இந்தியா தயாராக வேண்டும்.

Search