அய்க்கிய அமெரிக்காவில் தொடரும் அநீதி
(மாலெ தீப்பொறி 2016 ஜுலை 16 – 31 தொகுதி 14 இதழ் 24)
அய்க்கிய அமெரிக்காவின் மின்னசோட்டா வீதியிலிருந்து, டைமண்ட் ரேனால்ட்ஸ் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் ஒருவர் 07.07.2016 அன்று ஃபேஸ்புக் மூலம் அனுப்பிய நேரடி காணொளிக் காட்சி (லைவ் ஸ்ட்ரீம்) ஒன்று உலகையே உலுக்கியது. 9 நிமிடங்கள் 30 நொடிகள் ஓடிய அந்தக் காட்சிகள், வெள்ளை இனக் காவலர்கள் டைமண்ட் ரேனால்ட்ஸ் மற்றும் அவரது ஆண் நண்பர் பிலாண்டோ கேஸ்டைல் சென்ற வண்டியை, அந்த வண்டியின் பின்கண்ணாடி உடைந்து போனதால் நிறுத்துகிறார்கள். பிலாண்டோ கேஸ்டைலிடம் காவலர்கள் அவருக்கான அடையாளச் சான்றுகளைக் காட்டச் சொல்கிறார்கள். அவர் தமது உரிமத்தை எடுத்துக் காட்டத் தயாராகிறார். முயற்சிக்கிறார். அவர் காவல் அதிகாரியிடம் தாம் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பதை முதலிலேயே சொல்லி விடுகிறார்.
அந்தப் பெண் வெள்ளை இனக் காவலரிடம், ‘அய்யா (சார்), நீங்கள்தானே அவரை அடையாளச் சான்று காட்டச் சொன்னீர்கள், அவரது ஓட்டுனர் உரிமத்தை எடுக்கச் சொன்னீர்கள்’ எனச் சொல்கிறார். வெள்ளை இனக் காவலர், அவர் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆப்பிரிக்க அமெரிக்கரான பிலான்டோ கேஸ்டைலை சுட்டுத் தள்ளி விடுகிறார். டைமண்ட், ‘நீங்கள் அவரை நான்கு தோட்டாக்களால் சுட்டு விட்டீர்கள், அய்யா (சார்), அவர் உரிமத்தை எடுக்கும் போதே சுட்டுவிட்டீர்கள்’ என அழுது கொண்டே சொல்கிறார்.
அதற்குள் இன்னொரு வெள்ளை இனக் காவலர், டைமண்ட் ரேனால்ட்சை வண்டியை விட்டு வெளியே வரச் சொல்லி, பின்பக்கமாய்த் திரும்பி நடந்து, முட்டி போட்டு அமரச் சொல்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு 5 குழந்தைகளுக்குத் தந்தையான கருப்பினத்தவரான அல்டன் ஸ்டெர்லிங், ஒரு கடையின் முன்பு குறுந்தகடுகளை விற்றுக் கொண்டிருந்த போது லூய்சியானா மாவட்டத்தில் வெள்ளை இனக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஏழாவது முறையாக விம்பிள்டன் பெண்கள் டென்னிஸ் போட்டியில் தமது 35 வயதில் வெற்றி பெற்றவரும், ஆஸ்திரேலிய பிரெஞ்ச் யுஎஸ் ஓபன் மற்றும் விம்பிள்டன் வெற்றிப் பதக்கத்தை 22 முறை வென்றவருமான ஆப்பிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரரான செரினா வில்லியம்ஸ், தமது விம்பிள்டன் வெற்றிக்குப் பின் சொன்னார். ‘எனக்கு மருமகன்கள் இருக்கிறார்கள். நீங்கள் காரில் போனால் அதுவே உங்களை நான் பார்க்கும் கடைசி சமயமாக இருக்கலாம், வெளியே போக வேண்டாம் என்று அவர்களிடம் நான் சொல்ல வேண்டுமா? அய்க்கிய அமெரிக்காவில் நாம் நமது கருப்பின இளைஞர்களைச் சுட்டுக் கொல்வது தொடரும் என்பதுதான் பதிலாக இருக்குமா? என்னைப் போன்ற ஒருவருக்கு இந்தச் சூழல் மிகவும் சோகம் தருகிறது.’
அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தேர்தல் கால ஞானத்துடன் திடீரென கண்டறிந்து சொன்னார்: ‘நமது தோலின் நிறத்தால் நாம் மதிப்பற்றவர்கள் என நம் நாடு கருதுவதாக, பல அமெரிக்கர்கள் கருதுவதால், ஏதோ ஆழமான பிரச்சனை இருக்கிறது என்பது தெரிகிறது.’
2015ல் அய்க்கிய அமெரிக்க காவல்துறையால் கொல்லப்பட்ட 1,152 பேரில் 30% பேர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். மக்கள் தொகையில் அவர்கள் 13% மட்டுமே உள்ளனர். இப்படி காவல்துறை நிகழ்த்திய 97% படுகொலைகளுக்குப் பிறகு, எந்த சட்டபூர்வமான மேல் நடவடிக்கைகயும் எடுக்கப்படவில்லை. கருப்பினத்தவரான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஒருபுறம் கவுரவம், சுயமரியாதை பார்த்தால் ஆகாது, நியாயம் மாற்றம் எல்லாம் நடக்கிற விஷயம் அல்ல, வெள்ளைக்கார காவலரைக் கண்டால் தூர விலகிப் போய்த் தப்பி உயிர்ப் பிழைப்போம் எனக் கருதும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகின்றனர்.
மறுபுறம் கருப்பு உயிர்களுக்கு பொருள் உண்டு இயக்கம், நியாயம் இல்லையேல் அமைதி இல்லை, இனவெறி காவல் துறையை அனுமதியோம் என்ற முழக்கத்துடன் (நோ ஜஸ்டீஸ், நோ பீஸ், நோ ரேசிஸ்ட் போலீஸ்) என முன்னேறுகிறது. டல்லாஸில் நடந்த எதிர்ப்பு போராட்டத்தில், வெள்ளை இன காவலர்கள் சிலர் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க முன்னாள் போர் வீரரால் கொல்லப்பட்டதும், அவர் ரோபோ வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டதும், அய்க்கிய அமெரிக்கா சந்திக்கிற நிறவெறி, இனவெறி பதட்டங்களின் வெளிப்பாடுகளே.