10 பி இல்லனா பத்தாது!
அய்ந்து முறை பெற்ற கதை!
எஸ்.குமாரசாமி
இந்தியாவில் தொழில் தகராறுகள் சட்டம் 1947லிருந்து, செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் தொடர்பான சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலுக்கு concurrent list உட்பட்டவையாகும்.
இந்தச் சட்டத்தின் நோக்கம், தொழில் தகராறுகளை கண்டறிவதும், தீர்வு காண்பதும் என்று சொல்லப்படுகிறது. இந்த நோக்கம், சமரசம் மற்றும் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்தல் என்று இரண்டு வழிமுறைகளில் [conciliation and adjudication] நடைபெறும் என சொல்லப்படுகிறது. சட்டத்தின் 10ஆவது பிரிவு மட்டுமே சட்டத்தின் 3ஆவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. 3ஆவது அத்தியாயம் தொழில் தகராறுகளை வாரியங்களுக்கு, நீதிமன்றங்களுக்கு, தீர்ப்பாயங்களுக்கு விசாரணைக்கு அனுப்புவது பற்றி பேசுகிறது. உரிய அரசாங்கம் ஒரு தொழில் தகராறு நிலவுகிறது அல்லது எழலாம் என நினைக்கும்போது, அந்த தொழில் தகராறை, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்ப முடியும்.
இந்த சட்டத்தின் 10(3) பிரிவு 'போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தான பிறகு போர் தொடரக்கூடாது' என்பது போல் சொல்வதாக, ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொழிற்தகராறு ஒன்றை உரிய அரசு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் போது, இந்தப் பிரிவின் கீழ் வேலை நிறுத்தம் அல்லது கதவடைப்பு தொடரக்கூடாது என, ஆணையிட முடியும்.
தமிழ்நாடு அரசு ஒரு படி மேலே போய், தமிழ்நாடு சட்டம் 36/82 மூலம் 15.08.1982 முதல் அமலுக்கு வரும் விதத்தில், 10 பி என்ற சட்டப்பிரிவை புதிதாக கொண்டுவந்தது. இந்த சட்டப்பிரிவின்படி, ஒரு தொழில் தகராறை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும்போது, மாநில அரசு பொது பாதுகாப்பு அல்லது வசதிகளை காக்க, பொது ஒழுங்கு சமூக வாழ்க்கைக்கு தேவையான வழங்குதல்கள் அல்லது சேவையை பராமரிப்பது, அல்லது தொழில் தகராறு தொடர்பான நிறுவனத்தில் வேலை வாய்ப்பை தொழில் அமைதியை பராமரிப்ப தற்கு, அவசியமெனக் கருதினால் வேலை அளிப்பவர்கள் அல்லது வேலை செய்பவர்கள் என்னென்ன நிபந்தனைகள் படி நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, பொதுவான அல்லது குறிப்பான ஆணை/உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த ஆணையில் தொழிலாளியாக இருக்கிற அல்லது இருந்த ஒருவருக்கு வேலை அளிப்பவர் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்றும் சொல்லமுடியும். இந்த ஆணை 6 மாத காலங்களுக்கு அமலில் இருக்கும். இந்த ஆணைப்படி வழங்கப்படுகின்ற பணத்தை இறுதி தீர்ப்பு தொகை வழங்கும் போது சரி கட்டிக் கொள்ள முடியும்.
ஆட்டோமொபைல் தொழிலில் இந்தியா நெடுக ஒரு கொந்தளிப்பு வந்த 2007ஆம் ஆண்டு, கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்டத்தில் மலையாய் எழுந்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் ஆணும், பெண்ணுமாய் குழந்தைகளோடு திரண்டதால் ஊட்டி செல்லும் நெடுஞ்சாலை 18 மணிநேரம் முடங்கிப் போகும் நிலை வந்தது. புரட்சிகர கம்யூனிச பூதம் தோழர் குமாரசாமி தலைமையிலான சங்கம் மூலம் கோவையை பிடித்தாட்டுவதாக முதலாளிகள் கூப்பாடு போட்டார்கள். தமிழ்நாடு அரசு 05.03.2007 அன்று துவங்கிய வேலைநிறுத்தம் மற்றும் அடுத்து வந்த உடனடியாக பகுதி கதவடைப்பு பிரச்சனையில் தலையிட்டு 10(1) பிரிவில் நீதிமன்ற விசாரணையும் 10(3)பிரிவின் கீழ் வேலை நீக்கம், கதவடைப்பு தொடர்வதற்கு தடை விதித்தும், 10.04.2007 அன்று உத்தரவிட்டது.
ஆனால் துணை யூனிட் தொழிலாளர்களின் வேலை நீக்கம், பகுதி கதவடைப்பு, பிரேக் இன் சர்வீஸ் போன்ற பிரச்சனைகளில் தீர்வு வராததால் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு கோவை மே தினத்தில் 10 பி இல்லைனா பத்தாது என முழங்கினார்கள். கோவை பற்றி எரியுமோ என அஞ்சிய அரசு 24.05.2007 அன்று தொழிலாளர்கள் எழுப்பிய கோரிக்கைகளை அரசாணை எண் 397 மூலம் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பி, அரசாணை 398 மூலம் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தீர்ப்புக்கு உட்பட்டு நிறுத்தி வைக்குமாறு 10 பி பிரிவின் கீழ் ஆணை யிட்டது. 30.04.2007 அன்று 10 பி உத்தரவுக்கு நிர்வாகம் தடைபெற, அதற்கு எதிராக சங்கம் ரிட் அப்பீல் 777/2007 என்ற வழக்கு தொடர்ந் தது. வியக்கத்தக்க வகையில் உயர் நீதிமன்றத்தில் இரண்டு கட்ட வழக்குகளும் 10.12.2007 அன்று முடிவுக்கு வந்தன. 10 பி உத்தரவு, 10 (1) நீதிமன்ற விசாரணை ஆணை, கதவடைப்பு தொடர தடையாணை ஆகியவற்றிற்கு எதிரான நிர்வாகத்தின் ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பஸ்தி சுகர் மில்ஸ் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பின்பற்றியது. அவசர தடையாணைக்கு 10 பி என்றும், தரப்பினர் இறுதி உரிமைகளை தீர்மானிக்க நீதிமன்ற விசாரணை என்றும் நீதிபதி ந.ஒ.முக்கோப்பாத்யாயா தீர்ப்பளித்தார். (இவர் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார்). இந்த வழக்கில் டி.எஸ்.கோபாலன் அண்ட் கோ சார்பாக முன்னாள் அரசு தலைமை வழக் கறிஞர் அ.க.சோமையாஜி மற்றும் சஞ்சய் மோகன் வழக்கு நடத்தினர். தொழிலாளர் தரப்பில் குமாரசாமி வழக்கு நடத்தினார். 10.12.2007 தேதிய இந்த தீர்ப்பு இன்று வரை யில், பிரிவு 10 பி தொடர்பான கட்டுப்படுத்தும் தீர்ப்பாக உள்ளது.
இதற்குப் பிறகும் நிர்வாகம் சங்கத்தோடு பேச மறுத்து ஒப்பந்தம் போட மறுத்தது. நேரடி/ரெகுலர் உற்பத்தியில் ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்களை ஈடுபடுத்தியது. சட்டமன்றம் கூடியிருந்த நேரத்தில் பெண் தொழிலாளர்கள் உட்பட 26 பேர் 16 நாட்கள் வரை நீண்ட காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் கோரிக்கையை ஏற்பதாக சட்டமன்றத்தில் அமைச்சர் வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில் 29.06.2009 அன்று தமிழக அரசு 10 (1) பிரிவின்கீழ் 393, 10 பி பிரிவின் கீழ் அரசாணை 394ம் பிறப்பித்தது. இந்த 10 பி ஆணையில் நிரந்தர தொழிலாளியின் வேலை, வருமானத்தை பாதிக்கும் வகையில் ரெகுலர் உற்பத்தியில் ஒப்பந்த/பயிற்சி தொழிலாளர் களை ஈடுபடுத்தக் கூடாது என, உத்தரவிடப்பட்டது. இந்த ஆணைக்கு எதிராக மீண்டும் நிர்வாகம் ஒப்பந்ததாரர், பயிற்சியாளர் தரப்பு என, முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் அ.க.சோமையாஜி, இப்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆகியோரை கொண்டு வந்து வாதாடினார்கள். சங்கத் தரப்பில் தோழர் குமாரசாமி ஆஜரானார். சென்னை உயர்நீதிமன்றம் 23/10/2010 அன்று நிர்வாகத்தரப்பின், ஒப்பந்ததாரர் தரப்பின், பயிற்சியாளர் தரப்பின் அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இடைக்கால நிவாரணம் வழங்குவது என்ற அளவில் மட்டும், 10ஆ உத்தரவின் ஒரு பகுதியை ஏற்கவில்லை
தொழிற் தகராறுகள் சட்டம் 1947ன் 10(1), 10(3), 10 பி பிரிவுகளில் போடப்படும் ஆணை கள் நிர்வாக முடிவு ஆணைகளே என்றும், அவை தரப்பினரின் உரிமைகளை முடிவாக தீர்மானிக்கும் நீதித்துறை ஆணைகள் அல்ல என்றும், அதனால் இந்த ஆணைகள் போடும் முன்பு தரப்பினருக்கு அரசு வாய்ப்பு தர வேண்டியதில்லை என்றும், நீதிபதி முகோபாத்யாயா தீர்ப்பு சொல்லியது. சங்கம் பெற்ற அய்ந்து 10 பி ஆணைகளிலும், 10(1) பிரிவு வழக்கு எந்த நிறுவனம் தொடர்பான விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதோ, அந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பாதிப்பு தொழில் அமைதியின்மை கருதி 10 பி உத்தரவு போடப்பட முடியும் என சொல்லப்பட்டுள்ளது. அத்தியாயம் 5 பி பாதுகாப்பு, தொழிற்சாலை, சுரங்கம் மற்றும் தோட்டத் தொழிலுக்கு மட்டுமே உண்டு எனும் போது, பிரிவு 10 பி பாதுகாப்பு அனைத்து வகை தொழிலுக்கும் பொருந்தும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
10 பி சட்டப்பிரிவு, வேலை அளிப்பவர் தொழிலாளிக்கு பணப்பயன் அளிக்க உத்தரவிட முடியும் என திட்டவட்டமாக சொல்கி றது. சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வம், 10 (1), 10(3), 10 பி ஆணைகளில் தரப்பினருக்கு வாய்ப்பு தர வேண்டியதில்லை என அறுதியிட்டு சொல்கிறது. ஆகவே நீதிபதி ப.ராஜா நிர்வாகத்திற்கு வாய்ப்பு தராமல் இடைக்கால நிவாரணம் வழங்கியது சரியல்ல என தீர்ப்பு வழங்கியது தவறாகும்.
இதன் பின்னர் பிரிக்கால் தொழிற்சாலையில் போராடும் தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்டு 2012 மற்றும் 2014ல் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 01.07.2018 முதல் புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என்ற நிலையில், நிர்வாகம் சங்கத்தை ஒழித்துக்கட்ட தொழிலாளிக்கு சேர வேண்டிய பல தொகைகளை சலுகைகளை தர மறுத்தது. 03.12.2018 அன்று 302 தொழிலாளர்களை வெளிமாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்தது. பணியிட மாற்ற பிரச்சனையை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பக் கோரி 24.01.2019 அன்று தொழில் தகராறு எழுப்பப்பட்டது. அதன் கூடவே வழக்கு தீர்ப்புக்கு உட்பட்டு பணியிட மாற்ற உத்தரவை நிறுத்திவைத்து 10 பி உத்தரவு போடுமாறு கோரப்பட்டது. இத்தகைய பின்னணியில் 11.02.2019 அன்று 302 தொழிலாளர்களும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் சங்கத்திற்கு எந்த சூழ்நிலையிலும் 10 பி உத்தரவு தரக்கூடாது என கொள்கை முடிவு எடுத்திருந்தார்கள். விசாரணை இல்லாமல் ஒரே நாளில் 302 பேரை வேலை நீக்கம் செய்தார்கள் என்ற பின்னணியில், வேலை நீக்கத்திற்கு தடை கோரியும் பணியிடமாற்றல் தொடர்பான வழக்கை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்ப, 10 பி பிரிவின் கீழ் அரசு உத்தரவிடக் கோரியும், அந்த வழக்கு தீர்ப்பு வரும்வரை 10 பி பிரிவின் கீழ் பணியிட மாற்றல் உத்தரவுகளை நிறுத்தி வைக்குமாறு ஆணையிட வேண்டும் என்று கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினோம். 06.03.2019 அன்று தனி நீதிபதி பார்த்திபன் அவர்களும், 02.04.2019 அன்று நீதிபதிகள் ப.ந.சிவஞானம், ய.பவானி சுப்பராயன் அமர்வமும், நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விரைந்து முடிவெடுக்க அரசுக்கு ஆணையிட்டார்கள். நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 03.05.2019 அன்று 10(1), 10 பி பிரிவுகளின் கீழ் பணியிட மாற்றல் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த முறையும் வழக்குகளை தோழர் குமாரசாமிதான் நடத்தினார்.
கோவை பிரிக்காலில் 10 பி உத்தரவுக்கு எதிரான ரிட் மனுக்கள் 2007ல், 2009ல் சில மாதங்களுக்குள் முடிந்துவிட்டன. 2019ல் பணியிட மாற்றல் உத்தரவு 03.12.2018 அன்று பிறப்பிக்கப்பட்டதென்றால் இரண்டு மட்டங்களில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு, சில மாதங்களுக்குள்ளேயே 03.02.2019 அன்று 10 பி ஆணை பெறப்பட்டது.
கொரோனா காலத்தில் தொழிற்சாலை அல்லாத மெட்ராஸ் ஜிம்கானா கிளப்பில் 04.11.2020 அன்று 56 பேரும், மெட்ராஸ் போட் கிளப்பில் 10.12.2020 அன்று 39 பேரும் ஆட்குறைப்பு செய்யப்பட்டார்கள். தீவிரமான போராட்டங்கள், மாநிலம் முழுவதும் பரப்புரை, சங்கங்கள், கட்சிகளின் ஆதரவு, தோழர் பாரதியின் காலவரையற்ற 13 நாள் உண்ணாநிலை போராட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், இடது தொழிற்சங்க மையத்தின் சார்பாக தோழர் எஸ்.குமாரசாமி தலைமையில் எடுக்கப்பட்ட முயற்சிகளால், 07.04.2021 அன்று 95 தொழிலாளர்களின் ஆட்குறைப்பு நியாயம்தானா என இரண்டு 10 (1) அரசாணைகளையும் வழக்கு தீர்ப்பு வரும்வரை 95 பேரின் ஆட்குறைப்பு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று இரண்டு 10 பி ஆணைகளையும் சங்கம் வென்றெடுத்தது. அஇஅதிமுக அரசு தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த ஆணை போட ஒப்புக்கொண்டது என்பதும், தேர்தல் முடிந்த மறுநாள் ஆணை போடப்பட்டது என்பதும், தொழிற்சங்க இயக்கத்திற்கு பயன்படக்கூடிய செய்திகளாகும்.
போராட்டங்களால் 10 பி உத்தரவை பெறுவது ஒரு விதத்தில் முடியும் என்று சொல்லலாம். ஆனால் அதனை செயலுக்குக் கொண்டு வருவது மிக மிக கடினம். அந்த உத்தரவு போட்ட பிறகு, உத்தரவை அமல்படுத்தாவிட்டால், பிரிவு 29அ படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருக்கும்போதும், உத்தரவை அமல்படுத்த அரசு இது வரை எதுவும் செய்வதாக தெரியவில்லை.
1982ல் 10 பி சட்டப்பிரிவு வந்தபிறகு பிரிமியர் மில்ஸ், ஆர்சிட் கெமிகல்ஸ் பிரச்சனையில் 10 பி உத்தரவு போடப்பட்டது என உறுதியாகச் சொல்ல முடியும். அது போக ஒன்று அல்லது இரண்டு முறை 10ஆ உத்தரவு போடப்பட்டிருக்கலாம். அய்ந்து முறை புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கம் தனது பலவிதமான போராட்டங்களின் மூலம் 10 பி உத்தரவுகளை பெற்றிருப்பது, வருங்காலத்திலும் போராடும் தொழிற்சங்கங்களுக்கு நற்செய்தி ஆகவே இருக்கும்.