ஊழல் மலிந்த அடிமை அஇஅதிமுக அரசு,
அதன் பிற்போக்கு கூட்டணி முறியடிக்கப்பட்டுள்ளது!
எஸ்.குமாரசாமி
திமுக அணி வெற்றி பெற்றுவிட்டது. 159 இடங்களுடன் ஆட்சி பொறுப்பேற்றுவிட்டது. அலை எதுவும் அடித்து, ஜெயலலிதா தோற்ற காலங்களைபோல், அதிமுகவை துடைத்தெ றிந்துவிடவில்லை.
திமுக 2014ல் பெற்ற 31.64 % வாக்குகள், இந்த முறை 37.7% ஆக உயர்ந்துள்ளது. அஇஅதிமுக 2016ல் 234 இடங்களில் போட்டியிட்டு 40.77% வாக்குகளுடன் 136 இடங்களை பெற்றது. இந்த முறை 191 இடங்களில் போட்டியிட்டு 33.29% வாக்குகளுடன் 66 இடங்களை வென்றுள்ளது. அஇஅதிமுக கூட்டணியில் 43 இடங்களில் போட்டியிட்ட பாமகவும், பாஜகவும், முறையே, 3.82%, 2.73% என 6.53% வாக்குகள் பெற்றுள்ளன. கூட்டணி 2021ல் 39.82% வாக்குகளைப் பெற்றுது. இது அஇஅதிமுக 2016ல் 234 இடங்களில் பெற்ற 40.77% வாக்குகளிலிருந்து வெறும் 0.95 % மட்டுமே குறைவானதாகும். 2019 மக்களவை தேர்தலில் பலத்த அடி வாங்கிய அஇஅதிமுக மிகக்குறைந்த அளவிலான சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்த அஇஅதிமுக இரண்டாண்டுகளில் 66 இடங்களில் வெற்றி பெற்று மீண்டு எழுந்துள்ளது.
ஜெயலலிதா இருந்தபோது 2001ல் 31.04% வாக்குகளுடன் 132 இடங்கள் வென்றனர், 2011ல் 38.04% வாக்குகளுடன் ஆட்சியை வென்றனர் என்ற விவரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 2021ல் தன் கூட்டணியோடு சேர்ந்து 39.82% வாக்குகள் பெற்றுள்ள அஇ அதிமுக, ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் வலுவான ஓர் இருதுருவ போட்டியாளராக இருப்பது தெளிவாகிறது. இரண்டு கூட்டணிகளு மாகச் சேர்ந்து 85.2% வாக்குகளுடன் 234 இடங்களையும் வென்றுள்ளன என்பது தமிழ்நாட்டில் கழகங்கள் என்ற இரு துருவங்கள் தாண்டி தேசிய கட்சிகளோ 3ஆவது அணியோ, தேர்தல்ரீதியாக எடுபடவில்லை என்பதை புலப்படுத்து கிறது. தம்மை 3ஆவது அணியாக மாற்ற வாக்குகள் கேட்ட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என்ற மூவரும், முறையே 2.4%, 6.6%, 2.4% வாக்குகள் என 11.4% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
பாஜக, திமுகவை வீழ்த்தி, அதிமுகவை விழுங்கி, தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் போட்டியாளராக மாறலாம் என, கண்ட கனவுகள் எல்லாம் தவிடுபொடியாயின. திமுக வென்றது. அஇஅதிமுக நின்றுவிட்டது. ஜெவின் மறைவுக்குப் பிறகும் அஇஅதிமுக பாஜக நிழலில் சுருங்காமல் தனக்கென ஓர் இடம் பெற்றுள்ளது. புறநிலைரீதியாக அதிகாரங்களை குவித்துள்ள ஒன்றிய அரசு, நாடெங்கும் செல்வாக்குள்ள பெரிய கட்சி என பாஜக முன்நகர்த்தும் அரசியலுக்கு, தமிழ்நாடு பலத்த அடி கொடுத்துள்ளது.
அஇஅதிமுக மேற்கு மண்டலத்தில் 57ல் 40, தென் தமிழ்நாட்டில் 58ல் 19, என தொகுதி களை வென்று தன்னை நிறுத்திக் கொண்டுள்ளது. டெல்டாவில் 41ல் 4, வட தமிழ்நாட்டில் 78ல் 14, என்ற மோசமான நிலைமையே அதன் தோல்விக்கு காரணமானது. ஆனபோதும் கவுண்டர், முக்குலத்தோர், தேவேந்திரர், வாக்குகளை கணிசமாக தக்க வைத்துள்ளது. கடைசி நேர, வன்னியருக்கான கூடுதல் உள்ஒதுக்கீடு, அதற்கு வடதமிழ்நாட்டில் பெரிய அளவிலான தேர்தல் பயன்களை தரவில்லை.
20 இடங்களில் போட்டியிட்ட பாஜக கோவை தெற்கு, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில் என்ற நான்கு இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பாமக போட்டியிட்ட 23 இடங்களில் மேட்டூர், பென்னாகரம், தர்மபுரி, சேலம் மேற்கு, மயிலம் என்ற அய்ந்து தொகு திகளை மட்டுமே வென்றுள்ளது. 43ல் 9 என்ற இந்த வெற்றி விகிதம் திமுக கூட்டணியின் காங்கிரஸ், விசிக என்ற கூட்டாளிகளின் 31க்கு 21 என்ற விகிதத்தோடு ஒப்பிடும்போது மிக மிக குறைவானதுதான். ஆனாலும் பாஜக தமிழ்நாட்டில் 4 இடங்கள் வென்றுள்ளது நல்லதல்ல. ஆனால், இந்த நான்கும் கூட்டணியிருந்தால் வரும், இல்லாவிட்டால் போகும் என்ற கணக்கில் உள்ளவையே.
அமமுக வாக்குகள் 20 தொகுதிகளில் அஇஅதிமுக தோல்விக்கு உதவின என்பதை தாண்டி, அது அதிமுகவிற்கு போட்டியாக எழ வாய்ப்பு தெரியவில்லை. தேமுதிகவின் கதையும் கிட்டத்தட்ட முடிந்த கதைதான். மக்கள் நீதி மய்யம், அதன் தலைவரை சட்டமன்றத்திற்கு அனுப்பும் வாய்ப்பை, மிக குறைந்த வாக்குகளில் இழந்தது.
நாம் தமிழர் கட்சி 172 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 34 இடங்களிலும், அமமுக 24 இடங்களிலும் 3ஆம் இடம் பெற்றன. மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கிலும், அமமுக கோவில்பட்டியிலும் இரண்டாவது இடம் பெற்றன. நாம் தமிழர் கட்சி 2016 இல் 231 தொகுதிகளில் 1.06% வாக்குகளும் 2019 இல் 3.9% வாக்குகளும், இம்முறை 117 ஆண், 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தி, 6.6% வாக்குகளுடன் முன்னேறியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் அடுத்த கட்ட நிலைப்பாடுகள் இனிதான் திட்டவட்டமாக உருவெடுக்க வேண்டியுள்ளன. சென்றமுறை சட்டமன்றத்தில் ஒருவர் கூட இல்லை என்பதை ஒப்பிடும்போது, இந்த முறை 4 இடதுசாரி உறுப்பினர்கள் இருப்பார்கள். கெடுவாய்ப்பாக, 21 பெண் உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை 12 என குறையும்.
திமுக வென்று ஆட்சி அமைத்துவிட்டது. கொரோனா சவால், பெரும் சவாலாக உள்ளது. முந்தைய அஇஅதிமுக அடிமை அரசில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, மத்திய அரசோடு மாநில உரிமைகளுக்காக போராடுகிற, மக்கள் நலன் காக்கின்ற கடமை, புதிய அரசின் முன் உள்ளது. 2021 தேர்தலுக்கான திமுக அறிக்கை, முன்னுரை, 10 ஆண்டுகால தொலைநோக்குத் திட்டங்கள் என்பவை தாண்டி, 61 தலைப்புகளில், 505 வாக்குறுதிகளை தமிழ்நாட்டு மக்களிடம் முன்வைத்துள்ளது.
பொருளாதாரம், விவசாயம், நீர்வளம், கல்வி, மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உள்கட்டமைப்பு, சமூகநீதி என்ற 7 தூண்கள் மீது தன் தேர்தல் அறிக்கையை திமுக தயாரித்துள்ளது. 'நேர்மையானதும் சீர்மையானதுமான நல்லாட்சியை நெறிமுறை தவறாது நாளும் வழங்கிடுவோம்', 'இந்தியாவின் ஈடுஇணையற்ற மாநிலம் இன்பத்தமிழகம்தான் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டுவோம்' என்ற முழக்கங்களை, புதிய அரசு எப்படி செயல்படுத்துகிறது என்பதற்கேற்ப, தமிழ்நாட்டு மக்கள் அந்த அரசை அணுகுவார்கள்.