COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, May 7, 2021

 மோடியால் தண்டிக்கப்படும் மக்கள்
மோடியை தண்டிக்காமல் விட்டுவிடுவார்களா?


எஸ்.குமாரசாமி


கொரோனா பரவ காரணமாக இருந்த மோடி கும்பல், கொரோனா பரவி பாதிப்புக்கு உள்ளாக்கி உயிர்ப்பலி வாங்கியபோது கையைப் பிசைந்து நின்றது. அரசின் கையாலாகாத்தனம் நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, ஒன்றிய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்தபோது, உச்சநீதிமன்றம்தான் ஒன்றிய அரசை மீட்க வேண்டியிருந்தது.


கொரோனாவை விரட்டி, வீழ்த்தி உலகத்துக்கு உதவியதாக மோடி பெருமை பேசிய குரல் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்போது, இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,10,41,370 என உயர்ந்தது. இது வரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,29,573 ஆனது. இப்போது ஒரு நாளில் உலகெங்கும் சராசரி யாய் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் இரண்டு பேரில் ஒருவர் இந்தியராக உள்ளார். உயிரிழப்பவர்களில் 27% பேர் இந்தியர்கள். சராசரி நாள் தொற்றில் 3.8 லட்சம் என்ற எண்ணிக்கையுடன் இந்தியா முதலிடத்திலும் பிரேசல் 59,000 என்ற பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சராசரி நாள் இறப்பில் இந்தியா 3,571 என முதலிடத்திலும், பிரேசில் 2,366 என இரண்டாவது இடத்திலும் உள்ளன.
வேலைவாய்ப்பும் வருமானமும் பலத்த அடி வாங்கியுள்ளன. ஒர்கிங் இந்தியா (வேலை செய்யும் இந்தியா) 2021 என அசிம் பிரேம்ஜி நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. 'கோவிட் 19 - ஒரு வருடம்' பற்றி அந்த அறிக்கை பேசுகிறது.
2019 - 2010 இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் உழைப்பு/லேபர் பங்களிக்கும் மதிப்பு 32.5% என்பதில் இருந்து 27% என குறைந்தது. இதில் 90% வேலை வாய்ப்பு வகையிலும் 10% வருமானம் என்ற வகையிலும் குறைந்தது. தொழிலா ளர் வருமானம் 17% குறைந்தது. 23 கோடி இந்தியர்களின் மாத வருமானம் ரூ.9,750அய் தாண்டவில்லை. (நாள் வருமானம் ரூ.375). இந்தியாவின் கால் பகுதி மாதம் ரூ.10,000க்கும் குறைவாக வருமானம் ஈட்டும்போது, மக்களின் வாங்கும் சக்தி, பொருளாதாரம் நலிந்து, சமூகம் நசிந்து போகும் என்பவை கூடவே சேர்ந்துதானே வரும்.
மோடியின் சாகச நாயகன் பிம்பம் சுக்குநூறாக நொறுங்கிக் கொண்டிருந்தபோது, மோடி பக்தர்களே மோடிக்கு ஆதரவாகப் பேசத் தயங்கியபோது, ஆதரவு ஊடகங்கள் மெதுவாக விமர்சனம் நோக்கி திரும்பியபோது, மே 2 அன்று அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாயின. தேர்தல் முடிவுகள் மோடியின் சரிவை தடுக்கவில்லை. மாறாக, அதற்கு வேகமளித்துள்ளன.
கேரளத்தில் பாஜக சென்ற தேர்தலைவிட இந்தத் தேர்தலில் குறைவான வாக்குகளையே பெற்றது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தயவில் சில இடங்களைப் பெற்று, கூட்டணி ஆட் சியில் இடம் பெறும். தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 20 இடங்களில் 4 இடங்களில்தான் வெற்றி பெற்றது. அந்த நான்கும் வரும்  போகும் ரகமாகத்தான் உள்ளன. அசாமில் பாஜக, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. வடகிழக்கு இந்தியா ஒன்றிய அரசுக்கு இணக்கமாகச் செல்லும் மாநில அரசுகளுக்கு முன்னுரிமை தரும் ஏற்றத்தாழ்வான நிலையில் சிக்குண்டுதானே உள்ளது.
இந்திய இதிகாசங்கள் அசுவமேத யாகம் பற்றி பேசுகின்றன. பேரரசர்கள் தங்கள் செல்வாக்கு நீக்கமற நிறைந்துள்ளது என்று காட்ட, ஒரு குதிரையையும் கூடவே ஒரு படையையும் அனுப்புவார்கள். குதிரை அடக்கப்படாவிட்டால் பேரரசர் வெற்றிவீரராக முடிசூட்டிக்கொண்டு வேள்வி நடத்துவார். குதிரை அடக்கப்பட்டால் பேரரசர் தோல்வி அடைந்ததாகக் கருதப்படும்.
மேற்குவங்க மக்கள் மாமன்னர் மோடியின் குதிரையை சிறைப்படுத்திவிட்டார்கள். வங்கம் இன்று எண்ணுவதை, செய்வதை, நாளை இந்தியா எண்ணும், செய்யும் என்று சொல்வார்கள். மோடியும் அமித் ஷாவும் 38 முறை மேற்குவங்கத்துக்கு தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்கள். பாஜக விரும்பியபடி, நான்கரை வாரங்கள் நீடிக்கும் எட்டு கட்ட தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதில் நான்கு கட்டங்கள் முடிந்த நிலையிலேயே, பெரும்பான்மை வந்துவிட்டது என பாஜக சொன்னது. மோடியும் அமித் ஷாவும் பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் சொன்னார்கள். தீதி ஓ தீதி என பெண் முதலமைச்சரை கேலி செய்து பாட்டுப் பாடி மோடி வக்கிரமாக சீண்டினார். மமதா பெர்முடாஸ் என்ற அரை டவுசர் அணியலாம் என்றார்கள். மம்தாவை பேகம் என்று அழைத்தார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தல்கள் அடிப்படையாய் அமைந்திருந்தன.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், திரிணாமூல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர் கள் 30 பேர் பாஜகவுக்குச் சென்றனர். 2019ல் பாஜக 18 இடங்களிலும் திரிணாமூல் 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. திரிணாமூல் 164 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக 121 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னிலை பெற்றன. திரிணாமூல் 43%, பாஜக 40% என இரண்டு கட்சிகளுக்கும் இடையில் வாக்குகள் வித்தியாசம் 3% மட்டுமே இருந்தது. 2019 தேர்தல்களில் இடதுசாரிகளுக்கு வாக்களித்தவர்களில் அய்ந்தில் இரண்டு பேரும், காங்கிரசுக்கு வாக்களித்தவர்களில் மூன்றில் ஒருவரும் பாஜகவுக்கு வாக்களித்தனர். திரிணாமூலை விட்டு ஓடி பாஜகவில் பெரிய மனிதராக மாறிய சுவேந்து அதிகாரி 70:30 என பேசினார். அதாவது 30% இசுலாமியர்கள் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மேற்குவங்க மக்கள்தொகையில் 27% பேர் இசுலாமியர்) மமதாவுக்கு, திரிணாமூலுக்கு வாக்களித்தால் 70% இந்துக்கள் பாகவுக்கு வாக்களிப்பார்கள் என்றார். 2019ல் இந்துக்களில் 57% பேர் பாஜகவுக்கு வாக்களித்தனர். அப்பட்டமான இந்துத்துவ பிரச்சாரம் மூலம், துணை ராணுவத்தின் துணைகொண்டு, மத்திய புலனாய்வு துறை, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் ஆதரவுடன், 2019ன் 3% இடைவெளியைக் கடந்து 4% என வந்தால் கூட வெற்றி என, பாஜக கணக்கு போட்டது.
கணக்கு மாறியது. பாஜக தோற்றது. 2021ல் இடதுசாரிகள் ஆதரவாளர்கள் 33% பேர் வாக்குகளும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் 25% பேர் வாக்குகளும்தான் பாஜகவுக்குச் சென்றன. 2019ல் பாஜகவை ஆதரித்து 57% இந்துக்கள் வாக்களித்தனர் என்றால், 2021ல் 50% இந்துக்கள்தான் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். 2019ல் 32% இந்துக்கள் திரிணாமூலுக்கு ஆதரவு அளித்தபோது, 2021ல் 39% இந்துக்கள் திரிணாமூலுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
2019ல் 50% இசுலாமிய வாக்காளர்கள் உள்ள 74 சட்டமன்றத் தொகுதிகளில் 60 தொகுதிக ளில் திரிணாமூலும் 14 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலை பெற்றனர். இந்த முறை அவற்றில் ஒன்றில் மட்டுமே, ஓர் இசுலாமிய கட்சி, காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கூட்டணியில் வெற்றி பெற்றது. இந்துத்துவ பரப்புரை, இசுலாமியர்களை மொத்தமாக, பாஜகவை திரிணா மூலால் மட்டுமே முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை கொள்ள வைத்தது. வெளியாட்கள் நிறைந்த பாஜகவுக்கு எதிராக மண்ணின் மகள் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று மமதா கேட்டது எடுபட்டது. பாஜகவின் பணபலம், அடியாட்கள் பலம், நிறுவன பலம், துரோகிகள் துணை ஆகிய அனைத்தையும் மமதா ஒரு பெண்ணாக துணிந்து எதிர்க்கிறார் என்ற எண்ணம் மக்களின் பேராதரவை மமதாவுக்கு தேடித் தந்தது.
2014ல் இடதுசாரிகளை தோற்கடித்த மமதா 2021ல் இந்துத்துவ வலதுசாரிகளை மண்ணைக் கவ்வ வைத்துள்ளார். 2011ல் மமதா 38.93% வாக்குகளுடன் 184 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தபோது, இகக (மா) 17.5% வாக்குகளுடன் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2016ல் திரிணாமூல் 44.9% வாக்குகளு டன் 211 இடங்களை வென்றது. 2021ல் 48% வாக்குகளுடன் 213 இடங்களை வென்றுள்ளது. அக்கம்பக்கமாக இடதுசாரிகள் என்ற துருவம் படிப்படியாய் கரைந்து காணாமல் போவதும் நடந்தது. 2016ல் 26.6%. 2019ல் 7.5% வாக்குகள் பெற்ற இடதுசாரிகள், 2021ல் 4.3% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். 1947க்குப் பிறகு, முதல்முறையாக காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் ஓர் இடம் கூட கிடைக்கவில்லை.
பாஜகவைப் பொறுத்தவரை, வெற்றியில் தோல்வி அடைந்துள்ளது. 2016ல் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, 2021ல் 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது வெற்றியே. ஆனால் 2019ல், 121 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை பெற்ற பாஜக, 44 இடங்களை இழந்துள்ளது. மீண்டும் வேறு விதமாகப் பார்த்தால், எதிர்க்கட்சி வெளியை பாஜக கைப்பற்றி, திரிணாமூலை அடுத்த ஒரே துருவமாக மேற்குவங்கத்தில் எழுந்துள்ளது. இந்த நிலை இடதுசாரி அரசியலுக்கு நிச்சயம் பலத்த அடிதான். இடதுசாரிகளும் காங்கிரசும் பாஜகவை வீழ்த்துவதே முதன்மை கடமை என தேர்தல் தந்திரங்களை வகுத்திருந்தால், பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது எளிதில் புலப்படும் உண்மை.
பாஜக ஊழல் (பரிபர்த்தன்) மாற்றம் என்று பேசியபோது, அதையே இடதுசாரிகளும் காங்கிரசும் எதிரொலித்ததாக, மேற்குவங்க மக்கள் கருதும் நிலை உருவானது பற்றி, இடதுசாரிகள் பரிசீலனை செய்வது நல்லது.
திரிணாமூலும் கூட, தமிழ்நாட்டின் கழகங்கள், ஒடிஷாவின் பட்நாயக் போல், நலத் திட்டங்கள் மூலம் மேற்குவங்க மக்களின் ஆதரவைப் பெறுவதும் நடந்தது.
திரிணாமூல் அரசின் 9 முதல் 11 நலத்திட்டங்கள் 3% மக்கள் மத்தியில் சென்றன. அவர்களில் 83% பேர் திரிணாமூலுக்கும் 14% பேர் பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர். 6 முதல் 8 நலத்திட்டங்கள் 14% மக்களுக்குச் சென்றன. அவர்களில் 72% பேர் திரிணாமூலுக்கும் 20% பேர் பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர். 3 முதல் 5 நலத் திட்டங்கள் 46% மக்கள் மத்தியில் சென்றன. அவர்களில் 49% பேர் திரிணாமூலுக்கும் 37% பேர் பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர். 1 முதல் 2 நலத் திட்டங்கள் 29% மக்கள் மத்தியில் சென்றன. அவர்களில் 37% பேர் திரிணாமூலுக்கும் 48% பேர் பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர். எந்தத் திட்டப் பயனும் பெறாத 8% பேரில் 25% பேர் திரிணாமூலுக்கும் 54% பேர் பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர்.
திரிணாமூல் மூன்று முறை அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளது. வேறுவேறு அரசியல் சக்திகளை வேறுவேறு தருணங்களில் தோற்கடித்துள்ளது. ஊழல், அராஜகம் என்ற குற்றச்சாட்டுகள் திரிணாமூலுக்குப் பொருந்தும்.
இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெருமுதலாளித்துவ ஆதரவு பொருளாதாரச் சீர்திருத்தங்களை நரசிம்மராவ் கொண்டு வந்தார். அவரது ஆட்சி கவிழாமல் இருக்க மம்தா சக்கர நாற்காலியில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு குளிரில் வெடவெடத்து வந்து வாக்களித்தார். அந்த சீர்திருத்தங்களால் கொழுத்த கார்ப்பரேட் கூட்டத்தின் பணமூட்டைகளுடன் பாஜக களம் இறங்கிய போது, அவர்களை எதிர்க்க, இந்த முறையும் மமதா சக்கர நாற்காலியில் அமர வேண்டியிருந்தது. வரலாறு விசித்திரமானதுதான். ஆன போதும் பாஜகவின் முன்னேற்றத்தை திரிணாமூல் தடுத்து நிறுத்தியுள்ளது. மேற்குவங்க மக்களுக்கு, இந்தியா கடமைப்பட்டுள்ளது.

Search