"ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை"
மக்களின் பிரச்சனையை காரணம் காட்டி புறவாசல் வழியே மீண்டும் நுழைய முயற்சிக்கும் ஸ்டெர்லைட் கார்ப்பரேஷன்
ஆர்.வித்யாசாகர்
சுற்றுப்புற சூழலை நச்சாக்கி மக்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை காணாமல் அடித்து, 13 உயிர்களை துப்பாக்கி சூட்டிற்கு பலியாக்கிய ஸ்டெர்லைட் ஆலை மக்களின் போராட்டங்களின் காரணமாக 3 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கிறது.
எப்படியெல்லாம் முயற்சி செய்தும், நீதி மன்றங்களை நாடியும் ஆலையை திறக்க முடியாத நிலையில், தற்போது தீவிரமான கொரானா இரண்டாம் அலை பரவலை காரணம் காட்டி அதற்காக ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் "மக்கள் மீது கொண்ட அதீத அக்கறையால்" மீண்டும் ஆலையை திறக்க புற வாசல் வழியே நுழையப்பார்க்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆடு நனைகிறதே என்று கசாப்பு போட துடிக்கும் நரி.மோடியின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்ட பெரும் நெருக்கடி
இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே உலக வல்லுநர்கள் வர இருக்கும் இரண்டாம் அலையை பற்றி எச்சரித்துக்கொண்டிருந்தனர். அதை பொருட்படுத்தாத மோடி 2021 பிப்ரவரியில் நடந்த உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் "நாங்கள் கொரோனாவை வென்று விட்டோம்" என்று மார் தட்டிக்கொண்டார். கங்கை கொண்டான் கடாரம் கொண்டான் என்று சோழ மன்னர்களை அக்காலத்தில் பாராட்டியது போல, இந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த பா.ஜ .க . தேசிய செயற்குழு கூட்டத்தில், "கொரோனாவை வென்ற கதாநாயகன்" என் று மோடி பாராட்டப்பட்டார். வரக்கூடிய கொரோனா இரண்டாம் அலையை பற்றி கவலை ஏதும் கொள்ளவில்லை. மக்களை பற்றியும் அக்கறை இல்லை.
நிர்வாகத் திறமையற்ற, மக்கள் மீது அக்கறை அற்ற மோடி அரசின் அலட்சியமான செயல்பாடுகளால் தீவிரமான கொரோனா இரண்டாம் அலை இந்தியாவின் பல்வேறு பகுதி மக்களை கடுமையாக பாதித்துக்கொண்டிருக்கிறது.
பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிற கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது பேரலை, இந்தியாவின் மிகவும் சிதலமடைந்து போயிருக்கும் சுகாதார கட்டமைப்பின் கேவலமான நிலைமைகளை மீண்டும் ஆள்வோரின் கன்னத்தில் அறைவது போல் வெளிப்படுத்தியிருக்கிறது.
Ø பெருந்தொற்றால் பாதித்தவர்களுக்கு உயிர் காக்கும் ஆக்ஸிஜன் எட்டும் தூரத்தில் இல்லை. பலர் கொத்துக்கொத்தாக மடிகின்றனர்.
Ø மருத்துவத்திற்கு தேவையான ரெமிடிசிவர் மருந்திற்கு கடுமையான தட்டுப்பாடு.
Ø மருத்துவ மனைகளுக்கு கொண்டுசெல்ல அவசர ஊர்திக்கு தட்டுப்பாடு
Ø மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் இன்றி தரையிலும் வெளியிலும் தத்தளிக்கும் நிலைமை.
Ø மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பற்றாக்குறை
Ø இவற்றால் ஏற்படும் மரணங்கள். மரணங்களை பார்த்து கையறு நிலையில் மருத்துவர்கள் தற்கொலை. (டெல்லியில் உள்ள தனியார் மருத்துவ மனை மருத்துவர் விவேக் ராம் தற்கொலை செய்துகொண்டார்).
Ø நோயாளிகள் உயிர் பிரிந்தால் அவர்களை புதைக்கவோ எரிக்கவோ இடமில்லை - நீண்ட வரிசை. (மோடியின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் மக்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி வாசல்களில் வரிசையில் நின்று மடிந்தனர். இன்று மடிந்த பிறகு சுடுகாடு வாசலில் வரிசை கட்டி கிடக்கின்றனர். உயிரோடு இருக்கும் வரை கொரோனா மருந்து வாங்க வரிசையில் நிற்கவேண்டிய பரிதாபம். பணமுள்ளவர்கள் கள்ளச்சந்தையில் மருந்தை வாங்கலாம்.)
Ø நோய் தொற்றை தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி போட கடுமையான தட்டுப்பாடு.
மோடியின் மக்கள் விரோத நடவடிக்கைகள்
கொரோனா தொற்றை வேகமாக பரப்பியதில் "சூப்பர் மேன்" மோடிதான் என்று இந்திய மருத்துவார்கள் சங்கம் கூறியுள்ளது. கொரானா பரவும் எச்சரிக்கையை மீறி மோடி அரசு மக்கள் மீது அக்கறைஇன்றி எடுத்த நடவடிக்கைகள் பல.
பா .ஜ .க தன்னுடைய சுய லாபத்திற்காக மட்டுமே, நியாயப்படுத்துவதற்கு எந்தவித முகாந்திரமுமின்றி மேற்கு வங்கத்தில் இதுவரை கண்டிராத வகையில், எட்டு கட்டங்களாக தேர்தலை திட்டமிட்டது, அஸ்ஸாமில் 4 கட்டங்களாக திட்டமிட்டது (பா .ஜ .க.விற்கு பெரிதும் ஆதரவாக இருந்த முதன்மை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, ஓய்வுபெற்ற மூன்று நாட்களிலேயே கோவா ஆளுநராக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்).
கொரோனா உச்சம் பெற்றுக்கொண்டிருந்த காலத்தில், நிபுணர்களின் ஆலோசனைகளை எல்லாம் புறம்தள்ளி, உத்தரகண்ட் மாநிலத்தில், பல லட்சக்கணக்கான மக்களை கூட்டி கும்ப மேளா நடத்தியது பா.ஜ .க அரசு. கும்ப மேளா துவங்கி 25 நாட்களில் உத்தரகண்ட் மாநிலத்தில் தொற்றின் எண்ணிக்கை 1800% உயர்ந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. இது மட்டும் அல்லாமல் கும்ப மேளாவில் பங்கெடுத்த உ.பி., டெல்லி, இதர வட மாநிலங்களில் கொரோனா தோற்று மிக வேகமாகப் பரவியது.
இந்தியாவை அழிவை நோக்கி வழிநடுத்தும் மோடி என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் ஒரு பிரபலமான பத்திரிக்கை – “திமிர் பிடித்தஅதீத தேசிய வாத சிந்தனை கொண்ட, மற்றும் நிர்வாகத்திறமை அற்ற மோடி அரசின் செயல்பாடுகள்தான் இந்தியாவில் மிக அதிக உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறது.
வலைத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்கள் குறைகளை மக்கள் தெரிவிப்பதற்கு தடை. உ.பி. அரசு அவ்வாறு செய்வோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சொத்து பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்தது. (மக்கள் தங்கள் குறைகளை தெரியப்படுத்த அவ்வாறு செய்வதில் எந்த தவறும் இல்லை என உச்ச நீதி மன்ற நீதியரசர் சந்திரசூட் ஆணை பிறப்பித்தார்)
உலகத்தரம் வாய்ந்த 7 பிரம்மாண்ட பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களை வைத்துக்கொண்டு இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தடுப்பூசி உரிமத்தை மத்திய அரசு வழங்கியது ஏன்? மக்களின் உயிரைவிட கார்ப்பரேட்டுகளின் லாபம் தான் அரசுக்கு முக்கியமாக இருக்கிறது. நோய் தடுப்பு மாநில அரசுகளின் பொறுப்பு என்று கூறி ஒன்றிய அரசுக்கு ஒரு விலை மாநில அரசாங்கங்களுக்கும் தனியார் மருத்துவ துறைக்கும் ஒரு விலை என்று ஒப்புக்கொண்டதேன். உச்ச நீதி மன்றமே இதை கேள்வி எழுப்பி இருக்கிறதே. காப்புரிமை சட்டத்தின் 92 வது பிரிவு, தடுப்பூசி உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு, தொழில் நுட்பம் அளிக்க கட்டாயமாக உரிமம் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. இது கிடப்பில் போடப்பட்டது.
தடுப்பூசி அரசியல் தந்திரம் (vaccination diplomacy) என்ற பெயரில் சுமார் 6.5 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இத்தனை கோளாறுகளையும் செய்துவிட்டு, ஆக்சிஜன் நிர்வாகத்தை பற்றி கவலைப்படாமல் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கி விட்டார் மோடி. இந்த சிக்கலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மூடிய ஆலையை திறக்கப்பார்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்.
ஆக்சிஜன் அரசியல்:
மாநில உரிமைக்கு உட்பட்ட சுகாதாரத்துறையை மத்திய அரசு கையில் எடுத்துக்கொண்டதால், கொரோனா காலகட்டத்தில் மாநில அரசுகளால் சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு மத்திய அரசின் மெத்தனப் போக்கைத் தவிர வேறு எதையும் காரணமாகச் சொல்ல முடியாது.
இப்போது ஆக்ஸிஜன் தேவையையும் சரிசெய்திருக்க வேண்டும். தமிழகத்தில் கிட்டத்தட்ட 70,000-க்கும் மேல் பாதிக்கப்பட்டோர் இருக்கும்போது 30,000 பேர் பாதிக்கப்பட்ட தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு இங்கிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரை அனுப்பிவைத்திருப்பதெல்லாம் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் சூழலில், ஆக்சிஜன் பற்றாக்குறை பல மாநிலங்களில் கொரோனா பரவலைவிட மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே உற்பத்தியாகும் ஆக்சிஜனின் அளவில் தற்போதைய தேவை என்பது ஒரு சிறு பகுதியே. ஏற்கனவே நிறைய நிறுவனங்களும், எக்கு தொழிற்சாலைகளும் இந்தியாவில் ஆக்சிஜென் தயார் செயகிறார்கள். இதுவரை மருத்துவ ஆக்சிஜெனின் தேவை என்பது மொத்த உற்பத்தியில் ஒரு சிறிய அளவே. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா நெருக்கடியால் இந்த தேவை அதிகரித்திருக்கிறது. ஒரு முக்கியமான ஆக்சிஜென் தயாரிக்கும் நிறுவனத்தின் ஒரு மூத்த அதிகாரியின் கூற்றின் படி ஏற்கனவே நாளொன்றிற்கு 7000 மெட்ரிக் டன் அளவிற்கும் மேலாக ஆக்சிஜென் தயாராகும் இந்த நாட்டில், போதுமான தயாரிப்பும் திட்டமிடுதலும் இருந்திருந்தால் இந்த நெருக்கடியை எளிமையாக எதிர் கொண்டிருக்க முடியும் என்பதாகும்.
அதிகார பூர்வமான தகவல்களின் படி, ஏப்ரல் 24 நிலவரப்படி பல தொழிற்சாலைகளில் நாள் ஒன்றுக்கு 9103 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜென் தயாரிக்கும் உற்பத்தி திறன் இருக்கிறது. ஆகஸ்ட் 2020ல் 5700 மெட்ரிக் டன்களாக இருந்த திறன் ஏப்ரல் 25, 2021ல் 8922 மெட்ரிக் டன்களாக அதிகரித்து விட்டது என்று தெரிவிக்கிறது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இது நாளொன்றிற்கு 9250 மெட்ரிக் டன் தயாரிக்கும் அளவிற்கு அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியில் 33 பெரிய ஆலைகள் உற்பத்தி திறன் கொண்டவைகளாக தெரிவிக்க்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக தொழிற் தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தியை மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியாக மாற்ற உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த உற்பத்தி அளவு தற்போதுள்ள தேவைகளை விட பன்மடங்கு அதிகம்.
ஆக்சிஜென் உற்பத்தி தொழில் தேவைகளுக்காகவும் மருத்துவ தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. முதலில் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜென் 99.4% தூய்மையானதாக இருக்க வேண்டும். (தொழிற் தேவைக்கானது 93 முதல் 94% தூய்மையானதாக இருந்தால் போதும்). தொழிற்துறை ஆக்சிஜென் மருத்துவ ஆக்சிஜனாக எளிதாக மற்ற முடியும். ஆனால் அதை திரவ நிலைக்கு மாற்றி, அதை நெருக்கி அழுத்தி (compression) சிலிண்டர்களில் அடைப்பதற்கு பிரத்யேக உள்கட்டுமானம் தேவை. அல்லது திரவ மருத்துவ ஆக்சிஜனை தேவை படும் இடங்களுக்கு கொண்டு செல்ல ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் டேங்கர்ஸ் (கொள்கலன்கள்) தேவை.
எனவே இன்றைய சூழலில் முக்கிய தேவை திரவ ஆக்சிஜனை அடைத்து கொண்டு செல்வதற்கான சிலிண்டர்கள், பொருத்தமான கிரையோஜெனிக் டேங்கர்ஸ் மற்றும் போக்குவரத்து வசதிதான். தற்சமயம் இந்தியாவில் திரவ மருத்துவ ஆக்சிஜனை வேறு இடங்களுக்கு எடுத்து செல்ல 16732 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1224 டேங்கர்கள் தான் உள்ளன. இதை சரி செய்ய 2000 ஹைட்ரஜன் டேங்கர்கள் ஆக்சிஜன் எடுத்து செல்லும் டேங்கர்களாக மாற்றப்படுகின்றன. இது தவிர 162 டேங்கர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும் காலி ஆக்சிஜன் டேங்கர்களை மீண்டும் உற்பத்தி தலங்களுக்கு கொண்டு செல்ல இந்திய விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகள் ஒழுங்காக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலே ஆக்சிஜன் நெருக்கடியை எளிமையாக தீர்க்க முலடியும் என பல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கூடிய விரைவில் ஆக்சிஜன் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவது எளிது.
அவசியமில்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி:
வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கும் வண்ணம் இரண்டு யூனிட்டுகள் உள்ளன. ஆனால் அவை தாமிரத்தை உருக்க பயன்படுத்தப்படும் தொழிற் கூட ஆக்சிஜன் ஆகும். திரவ மருத்துவ ஆக்சிஜனுக்கு தேவையான தூய்மை இதில் இல்லை. இதில் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜனை திரவ மருத்துவ ஆக்சிஜனாக மாற்றுவதற்கு மட்டுமே ஸ்டெரிலைட் ஆலைக்கு திறன் இருக்கிறது என அட்வொகேட் ஜெனரல் விஜய் நாராயணன் உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்டெரிலைட் சொன்னது போல் நாள் ஒன்றுக்கு 1000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இந்த நிறுவனம் கம்ப்ரெஷன் மற்றும் சிலிண்டரில் அடைப்பதற்கான சாதனங்களை நிறுவ வேண்டும். இதை செய்ய குறைந்தது ஆறு மாத காலமாகும். ஆலை திறப்பதற்கு அனுமதித்த காலக்கெடுவே 4 மாதங்கள்தான். உச்ச நீதி மன்றத்தில் பொய் தகவல்களை அளித்து ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஏப்ரல் 21 அன்று அனுமதி வாங்கி விட்டது.
ஏற்கனவே ஆக்சிஜன் டேங்க்கர்கள் போக்குவரத்தில் அதிக பிரச்சனை உள்ளதால் உற்பத்தித்தி செய்யும் இடத்திலிருந்து தேவை படும் இடங்களுக்கு எதுத்துசெல்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. தென் கோடியிலிருந்து வேறு தொலை தூர இடங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச்செல்வது என்பதும் மிக சிக்கலான பிரச்சினை. எனவே இந்த ஆலையை திறப்பது என்பது, மக்கள் பிரச்சனையை காரணம் காட்டி ஆலையை திறக்கும் முயற்சியாகும். ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் அழுவது ஆடுகளை பலியாக்கத்தான்.
ஏன், தமிழ் நாட்டில் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் தவிர வேறு வழி இல்லையா. BHEL போன்ற பல பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கிறன்றன என்று இந்தியாவின் ஆகப்பெரும் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனமான லிண்டே இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹனுமன் மால் பெங்கானி கூறுகிறார். இதில் ஸ்டெரிலைட் ஆலையை மட்டும் தேர்ந்தெடுப்பது தனியார் லாபத்தை பெருக்கத்தான் . மாற்று ஏற்பாடுகளை பற்றி அரசுக்கு கவலை இல்லை. ஸ்டெர்லைட் ஆலையின் நோக்கம் ஆக்சிஜன் உற்பத்தி மட்டுமல்ல என்பது நாம் அறிந்ததே. மக்களிடம் எந்த விவரத்தையும் தெரிவிக்காமல் ஒன்றிய அரசும் மாநில அரசும் கொரோனா தொற்று பரவல் உயிர் காப்பது என்ற உணர்ச்சிகளை கொட்டி ஆட்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கப்பார்கிறார்கள். தேசப்பிரச்சினை என்ற அளவில் ஆளும் கட்சிகள் எதிர்க்கட்சிகளையும் இதில் சிக்க வைத்து விட்டன.
ஆக்சிஜனுக்காக ஆலையை திறக்கலாம் என முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கோ அரசியல் கட்சிகளுக்கோ கிடையாது. தூத்துக்குடி மக்களுக்கு மட்டுமே உண்டு. மக்கள் ஆலை திறப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். ஏப்ரல் 23ல் தூத்துக்குடியில் நடந்த கருத்து கணிப்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதை மக்கள் மிக வன்மையாக கண்டித்துள்ளனர். மீறி திறக்க நேரிட்டால் தூத்துக்குடியில் நடந்து கொண்டிருக்கும் எதிர்ப்பு மிகப் பெரிய போராட்ட களமாக மாறும். தங்கள் சொந்தபந்தங்களை துப்பாக்கி சூட்டிற்கு பலி கொடுத்த மக்களின் ஆவேசக்கனல் இன்னும் கனன்று கொண்டிருக்கிறது. மக்களின் ஜனநாயக கோரிக் கைகளுக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டும்.