டாக்டர் அம்பேத்கர் பக்கம்
இந்துப் பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும்
இதற்கு யார் பொறுப்பு?
மகாபோதி சஞ்சிகை,
மே - ஜுன், 1951
பக்கம் 167 - 177, தொகுதி 36
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
நூல் தொகுப்பு
.....இந்தியாவில் பெண்களின் நிலை ஒரு காலத்தில் இருந்ததிலிருந்து பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒரு காலத்தில் ஒரு பெண் உபநயனம் செய்து கொள்வதற்குத் தகுதியுடையவளாயிருந்தாள் என்பது அதர்வ வேதத்திலிருந்து தெளிவாகிறது. அதில், ஒரு பெண், தனது பிரம்மச்சரியத்தை முடித்த பின்னர் திருமணத்திற்கு தகுதியுடையவராகிறார் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வேத மந்திரங்களை திருப்பி கூற முடியும் என்பதும் வேதங்களை படிப்பதற்கும் பெண்கள் கற்றுக் கொடுக்கப்பட்டார்கள் என்பதும் ஷ்ரௌத்த சூத்திரங்களிலிருந்து தெளிவாகிறது. பெண்கள் குருகுலத்தில் (கல்லூரியில்) பங்கேற்றார்கள், வேதங்களின் பல்வேறு ஹாகாக்களை (பிரிவுகளை) கற்றார்கள், மற்றும் மீமாம்சாவில் நிபுணர்களாயினர் என்ற உண்மைக்கு பாணினியின் அஷ்டாத்யாய் சான்று கூறுகிறது. பெண்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள், மாணவிகளுக்கு வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்கள் என்று பதஞ்சலியின் மகாபாஷ்யம் காட்டுகிறது. மதம், தத்துவம், உண்மை பற்றி ஆயும் கோட்பாட்டுத் துறை முதலிய மிகவும் மறைபொருளான விஷயங்கள் பற்றியும் கூட ஆண்களுடன் பெண்கள் பொது விவாதங்களில் ஈடுபடுவது பற்றிய பல சம்பவங்கள் உள்ளன. ஜனகருக்கும் சுலபாவுக்கும் இடையிலும், யக்ஞவல்கியருக்கும் கார்க்கிக்கும் இடையிலும், யக்ஞவல்கியருக்கும் மைத்ரேயிக்கும் இடையிலும், சங்கராச்சாரியருக்கும் வித்யாதாரிக்கும் இடையிலுமான பகிரங்க விவாதங்கள் (மோதல்கள்) மனுவுக்கு முந்திய காலத்தில் இந்தியப் பெண்கள் கற்பதிலும் கல்வியிலும் மிக உயர்ந்த சிகரத்திற்கு எட்ட முடியும் என்பதை காட்டுகிறது.
ஒரு காலத்தில் பெண்கள் உயர்வாக மதிக்கப்பட்டு வந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. பண்டைக் கால இந்தியாவில் மன்னரின் முடி சூட்டுவிழாவில் மிகவும் முக்கியமாக பங்காற் றிய ராணிகளில் அரசியாவார். இந்த சமயத்தில் மன்னர் மற்றவர்களுக்கு செய்தது போலவே அரசிக்கும் ஒரு பரிசு அளிக்கிறார். மன்னராக நியமிக்கப்பட்டவர் அரசுக்கு பெரும் மரியாதை செலுத்தியதோடு, கீழ் சாதிகளைச் சேர்ந்த தனது இதர மனைவிகளுக்கும் வணக்கம் தெரிவித்தார்.
இதே முறையில், முடிசூட்டுவிழா முடிந்த பின்னர் மன்னர் கில்டுகளின் (பொது அமைப்புகளின்) பெண் தலைவிகளுக்கும் வணக்கம் தெரிவிக்கிறார்.
இது உலகின் எந்தப் பகுதியிலும் பெண்களுக்கான ஒரு மிகவும் உயர்வான நிலையாகும். அவர்களின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? இந்துக்களுக்கு சட்டம் வழங்கியவரான மனுதான் இதற்குக் காரணம். இதற்கு வேறு எந்த பதிலும் இருக்க முடியாது. ஐயப்பாட்டுக்கு எத்தகைய இடமும் அளிக்காத வகையில், பெண்கள் சம்பந்தமாக மனு இயற்றிய, மற்றும் மனுஸ்மிருதியில் காணப்படுகிற சில விதிகளை (சட்டங்களை) நான் மேற்கோள் காட்டுகிறேன்.
1. 213. இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் செல்ல தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்தக் காரணத்திற்காகவே, விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்போது உஷாராயில்லாமல் ஒருபோதும் இருக்க மாட்டார்கள்.
2. 213. ஏனெனில், இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி, ஒரு கல்விமானையும் பாதை தவறி செல்ல செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும் கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உள்ளவர்கள்.
2. 215. ஒருவர் தனது தாயாருடனோ, அல்லது சகோதரியுடனோ அல்லது மகளுடனோ ஒரு தனிமையான இடத்தில் உட்கார்ந்திருக்கக்கூடாது; ஏனெனில் உணர்வுகள் சக்தி வாய்ந்தவை, ஒரு கல்விமானைக் கூட அடிமைப்படுத்தி விடும்.
9. 14. பெண்கள் அழகை எதிர்பார்ப்ப தில்லை, அதுபோன்றே வயதை பற்றியும் கவலைப்படுவதில்லை. அவன் ஓர் ஆணாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அவர்கள், அழகுடைய ஒரு ஆணுக்கு மட்டுமின்றி அழகற்றவருக்கும் தங்களை விட்டுக் கொடுக்கிறார்கள்.
9. 15. ஆண்களின்பலான தங்களுடைய வெறி ஆர்வத்தின் வாயிலாக, தங்களுடைய மாறத்தக்க மனோநிலையின் வாயிலாக, இயல்பான ஈவிரக்கமற்ற இயல்பின் வாயிலாக அவர்கள் - இந்த உலகில் எவ்வளவு கவனமாக பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தாலும் தங்கள் கணவன்மார்களிடம் விசுவாசமற்றவர்களாகி விடுகிறார்கள்
9. 16. உலகத்தைப் படைத்தவர் பெண்களை எவ்வாறு படைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டுள்ள நிலைமையில், ஒவ்வொரு ஆணும், அவர்களைக் காவல் காப்பதற்கு மிகவும் உறுதியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
9. 17. (அவர்களை உருவாக்கும்போது) கடவுள் பெண்களுக்கு அவர்களின் பதவி, நகைகள் ஆகியவற்றின் மீது அவர்களுக்குப் பிரேமையையும், மற்றும் தூய்மையற்ற விருப்பங்கள், ஆங்காரம், நேர்மையற்ற தன்மை, தீங்கான கெட்ட நடத்தை ஆகியவற்றை உடையவர்களாகவும் படைத்தார்.
மனு, பெண்களைப் பற்றி எவ்வளவு மோசமான எண்ணத்தைக் கொண்டிருந்தார் என்பதை காட்டுகின்றன. பெண்களுக்கு எதிரான மனுவின் சட்டங்கள் இந்தக் கருத்துடன் ஒத்தவையாகும்.
எந்த சூழ்நிலையிலும் பெண்கள் சுதந்திரமாக இருக்கக் கூடாது. மனுவின் கருத்துப்படி,
9. 2. பகலிலும், இரவிலும் பெண்கள், ஆண்களையும், அவர்களின் குடும்பங்களுக்கும் சார்ந்திருப்பவர்களாகவே வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் உணர்வுரீதியாக களியாட்டங்களில் ஈடுபடும்போதும், அவர்கள் ஒருவருடைய கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும்.
9. 3. குழந்தைப் பருவத்தில் அவளுடைய தந்தை (அவளை) பாதுகாக்கிறார். இளமையில் அவளுடைய கணவன் (அவளை) பாதுகாக்கிறார்; முதிய வயதில் அவளுடைய மகன்கள் (அவளை) பாதுகாக்கிறார்கள்; ஒரு பெண் ஒரு போதும் சுதந்திரமாக இருப்பவளல்ல.
9. 5. தீய மன இசைவுகளுக்கு எதிராக - அவை எவ்வளவு அற்பமாகத் தோன்றிய போதிலும் - பெண்கள் கண்காணிக்கப்பட வேண்டும்; அவற்றிற்கெதிராகத் தற்காப்பு செய்து கொள்ளப்படவில்லையெனில், அவை இரண்டு குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்தும்.
9. 6. எல்லா சாதிகளின் உயர் கடமையை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது, பல வீனமான கணவர்களும்கூட தனது மனைவிகளை பாதுகாப்பதற்கு முயல வேண்டும்.
5. 147. ஒரு சிறுபெண்ணோ, ஓர் இளம்பெண்ணோ, அல்லது வயதான பெண்ணும் கூட - தனது சொந்த வீட்டிலும் கூட - எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது.
5. 148. குழந்தைப் பருவத்தில் ஒரு பெண், தனது தகப்பனாருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், இளமைப் பருவத்தில் தனது கணவருக்கும், கணவர் இறந்ததற்கு பின்னர், தனது மகன்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது.
5. 149. அவள் தனது தந்தை, கணவர் அல்லது மகன்களிடமிருந்து பிரிந்து செல்வதற்கு முயலக்கூடாது. அவர்களை விட்டுப் பிரிந்து செல்வதன் மூலம் அவள் இரு (தனது சொந்த மற்றும் தனது கணவனின்) குடும்பங்களையும் இகழ்ச்சிக்குள்ளாக்குவாள்.
பெண்ணுக்கு விவாகரத்து செய்து கொள்வதற்கு உரிமை இருக்கக் கூடாது.
5. 45. கணவன் மனைவியுடன் ஒன்றி ணைவதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள், ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளப்பட்விட்டால் அதற்கு பிறகு பிரிந்து செல்ல முடியாது என்பதே.
பல இந்துக்கள், மனுவின் விவாகரத்து சம்பந்தமான மனுவின் சட்டம் சம்பந்தமாக இதுதான் முழுக்கதையுமாகும் என்று நினைத்து இத்துடன் நின்று விடுகிறார்கள். திருமணத்தை ஒரு புனித சடங்காக மனு கருதினார், அதனால் விவாகரத்தை அனுமதிக்கவில்லை என்ற சிந்த னையுடன் தமது மனசாட்சியைத் திருப்திப்படுத்திக் கொள்வதோடு இதைத் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். இது உண்மைக்கு புறம்பானது என கூறத் தேவையில்லை. விவாகரத்துக்கு எதிரான அவருடைய சட்டம் ஒரு மிகவும் வேறுபட்ட உள்நோக்கத்தைக் கொண்டிருந்தது. இது ஒரு ஆணை ஒரு பெண்ணுடன் பிணைத்து விடுவதற்கல்ல. ஆனால் இது, ஒரு பெண்ணை ஓர் ஆணுடன் பிணைத்து வைப்பதற்கும் ஆணை சுதந்திரமாக விடுவிப்பதற்குமாகும்.
ஏனெனில் மனு ஓர் ஆணைத் தனது மனைவியைக் கைவிடுவதைத் தடுப்பதில்லை. உண்மையில் தனது மனைவியைக் கைவிடுவதற்கு அவர் அவனை அனுமதிப்பதோடு மட்டுமின்றி, அவன் அவளை விற்பதற்கும் அனுமதிக்கிறார். ஆனால், அவன் செய்வது என்னவெனில், மனைவி சுதந்திரமடைவதைத் தடுக்கிறார். இது குறித்து மனு கூறுவதைப் பாருங்கள்:
9. 46. விற்பனையோ அல்லது நிராகரிக்கப் படுவதன் மூலமாகவோ ஒரு மனைவி தனது கணவனிடமிருந்து விடுதலையாவதில்லை.
இதன் பொருள் தனது கணவனால் விற்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட ஒரு மனைவி, அவளை விலைக்கு வாங்கிய, அல்லது நிராகரிக்கப்பட்டபின் அவளைத் தன் வசப்படுத்திக் கொண்ட மற்றொருவருக்கு ஒருபோதும் சட்டபூர்வமான மனைவியாக முடியாது என்பதேயாகும். இது அட்டூழியமானதல்ல என்றால் வேறு எதுவும் அட்டூழியமானதாக இருக்க முடியாது. ஆனால் தனது சட்டத்தை உருவாக்குகையில், நீதி அல்லது அநீதி என்ற கருத்தோட்டங்களைப் பற்றி மனு கவலைப்படவில்லை. பௌத்த சமய ஆட்சியின்கீழ் பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தைப் பறிப்பதற்கு அவர் விரும்பினார். சுதந்திரத்தைக் கண்டு மனு ஆத்திரமடைந்து, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அவர் அவளுடைய சுதந்திரத்தைப் பறித்தார்.....
தொடர்ச்சி அடுத்த இதழில்....