COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, May 7, 2021

பெரியார் சொல் கேளீர்.....


சீர்திருத்தமா?
அழிவு வேலையா?


13.01.1945 , குடி அரசு
பெரியார் இன்றும் என்றும்
தொகுதி 25, பக்கம் 353 – 354


1944, டிசம்பர் 29 - 31 தேதிகளின் கான்பூரில் நடந்த
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பார்ப்பனரல்லாதார் மாநாட்டு தலைமையுரை


தோழர்களே! தாய்மார்களே!
சாதி முறைகள் என்பவையெல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்து கடவுள்கள் பேராலும் சாஸ்திரங்கள் பேராலுமேதான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன.

பகுத்தறிவற்ற சில சமுதாய சீர்திருத்தக்காரர் என்பவர்கள் இப்படிப்பட்ட கடவுள் - மத சாஸ்திரங்களுக்கும் இந்து மதத்திற்கும் வேதாந்தமும் தத்துவார்த்தமும் சொல்லி, இவற்றை ஏற்படுத்தினவர்களுக்கு நல்ல பிள்ளையாக ஆவதற்கு முயற்சிப்பவர்கள். இந்த அறிவீனமும் மோசமும் தந்திரமும் ஆன காரியங்களால் தாங்கள் மாத்திரம் மரியாதை அடையலாமே தவிர  சமுதாயத்தின் இழிநிலையைப் போக்க ஒரு கடுகளவும் பயன்படாது. ஆகையால் உங்களுக்கு முதலாவதாக நான் என்ன சொல்லுகிறேன் என்றால், நீங்கள் உங்களுடைய நிலையை சிறிதாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உண்மையாய் ஆசைப்படுவீர்களானால், இந்து மதம் என்பதையும் அது சம்பந்தப்பட்ட கடவுள், மத, புராண, சாஸ்திர, இதிகாசம் என்பவைகளையும் உதறித்தள்ளி, அவற்றிலிருந்து வெளியே வாருங்கள். நீங்கள் அதை செய்யவில்லையானால் இனியும் ஓராயிரம் ஆண்டிற்குக் கூட நீங்கள் எப்படிப்பட்ட மாநாடுகளும் சங்கங்களும் பிரச்சாரங்களும் கிளர்ச்சிகளும் நடத்தினாலும், எவ்வளவுதான் அரசியல் சுதந்திரமும் பொருளாதார முன்னேற்றமும் பட்டமும் பெற்றாலும் பதவிகளும் பெற்றாலும் உங்கள் சமுதாயத்திற்குள்ளான இடைநிலை நீங்கப் போவதில்லை இது உறுதி, உறுதி!
உங்களுக்கு முன் முயற்சித்தவர்கள் செய்த தவறுகளை நீங்கள் செய்து கொண்டிருந்தால், உங்கள் வாழ்நாளும் அவர்களைப் போலவே தவறு செய்யத்தான் முடியுமே ஒழிய, திருத்தம் காண முடியவே முடியாது. மலைக் காய்ச்சலால் அவதிப்படும் மக்கள் 'கொய்னா' சாப்பிடுவதையே அதற்கு பரிகாரம் என்று கருதுவார்களானால், அம்மக்களுக்கு  மருந்து சாப்பிடுகிற வேலையும், மருந்து வியாபாரிகளுக்கு இலாபம் கிடைக்கிற வேலையும்தான் நடைபெறுமே தவிர அவர்களுக்கும் அவர்கள் சந்ததிகளுக்கும் மலைக் காய்ச்சல் ஏற்படுவது தடுக்கப்பட மாட்டாது.
உண்மையில் மலை காய்ச்சலை ஒழிக்க வேண்டுமானால், மலைக் காய்ச்சலுக்கு ஆதாரமான, அதை உற்பத்தி செய்கிற கொசு பூச்சிகள் விஷக் காற்றுகள் முதலியவைகளை ஒழிக்க வேண்டும். ஒழிக்கப்பட வேண்டுமானால் மறுபடியும் இவைகளை உற்பத்தி ஆகாவண்ணம் கசுமாலங்களையும் குப்பை கூளங்களையும் நெருப்பு வைத்து எரித்து, அழுக்குத் தண்ணீர் குட்டைகளை மூடியாக வேண்டும். அது போலதான், நம் சமுதாய இழிவுக்குக் காரணங்களாய் இருக்கின்ற எப்படிப்பட்ட மதத்தையும் கடவுளையும் ஆதாரங்களையும் நாம் அடியோடு அழித்தே தீர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இந்து மதத்தையோ, அது சம்பந்தமான கடவுள், மதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்களையோ சீர்திருத்தி விடலாம் என்று நினைப்பது வெறும் கனவும் வீண் வேலையும் கடைந்தெடுத்த முட்டாள்தனமுமேயாகும்.
சரியான வழி புத்திசாலித்தனமான வழி என்னவென்றால் அதில் இருந்து தப்பித்துக் கொள்வதுதான்; அதாவது, இந்து மதத்தை விட்டு வெளியேறி விட வேண்டியதுதான்.
அதாவது, இந்து மதம் என்பதற்கு - வேறு வார்த்தை சொல்ல வேண்டுமானால் ஆரியம், பார்ப்பனீயம் என்று தான் சொல்ல வேண்டும். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் அகராதிப் புத்தகங்களையும், அறிஞர்களால் - ஆராய்ச்சி நிபுணர்களால் எழுதப்பெற்ற ஆராய்ச்சிக் குறிப்புகளையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதை நீங்கள் யாவரும் நன்றாக ஞாபகத்தில் வையுங்கள் ஆஷாடபூதிகளைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். புத்தர், சங்கரர், ராமானுஜர் போன்றவர்களின் முயற்சிகள் என்ன, என்ன? புத்தரை ஒழிக்கவே - இராமன், கிருஷ்ணன், ராமாயணம், கீதை, புராணங்கள், அவை சம்பந்தப்பட்ட கோவில்கள் முதலிய வைகள் கற்பிக்கப்பட்டன. இவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவே சங்கரர், இராமானுஜர்கள் முயன்று வந்தார்கள். இவர்களை பின்பற்றித்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும், பக்தர்களும், தாசர்களும், மகாத்மாக்களும், ஆனந்தாக்களும், சுவாமிக ளும் தோன்றினர். எனவே இதை எல்லாம் உணர்ந்தவர்கள்தான் இன்று இந்நாட்டு மனித சமுதாய சீர்திருத்தத்திற்கு ஒரு கடுகளவாவது தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

Search