கோவை பிரிக்காலில்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது
மீண்டும் தர்மமே வென்றது!
ஜெயபிரகாஷ் நாராயணன்
2017ல் தமிழ்நாடு நூற்றாண்டு கால வரலாறு காணாத கடும் வறட்சியை சந்தித்தது. தமிழ்நாட்டு விவசாயிகள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். விவசாயத்தையே நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் வேலை, வருமானமின்றி பெரும் துன்பத்திற்கு ஆளாயினர்
ஒரு வார காலமே அவகாசம் இருந்ததால், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கம் 19.04.2017 அன்று பொதுப் பேரவை கூட்டி தீர்மானம் இயற்றி 20.04.2017 அன்று, 2017 ஏப்ரல் 25க்கான வேலைநிறுத்த அறிவிப்பைக் கொடுத்தனர். சங்கத்தோடு மோதுவதற்கு காரணங்களை தேடிக் கொண்டிருந்த பிரிக்கால் நிர்வாகம் வேலை நிறுத்த அறிவிப்பை ஏற்காமல், 25.04.2017ல் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு 8 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்வேன் என மிரட்டியது. (2012, 2014 ஒப்பந்தங்களில் தேசிய, மாநில அளவிலான பொது வேலை நிறுத்தங்கள், முழு அடைப்புகள் நடக்கும்போது மாற்று வேலை நாளில் வேலை செய்யலாம் என்ற சரத்து உள்ளது. 25.04.2017 வேலை நிறுத்தத்திறகு முன்பும் 2020 வரையிலும் வேலை நிறுத்தங்களுக்கு விடுமுறை தரப்பட்டு மாற்று நாளில் வேலை நடந்துள்ளது).
2007ல் நிர்வாகத்தின் அடாவடிகளை தடுத்து நிறுத்தி வரலாற்றை மாற்றி எழுதிய தொழிலாளர்கள், 2017ல் உறுதியாக நின்றனர். வேலைநிறுத்தத்தில் 802 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர்களுக்கு பொருளாதார மரணதண்டனை வழங்கும் முதலாளித்துவ நடைமுறையில் ஊறித் திளைத்த பிரிக்கால் நிர்வாகம், 8 நாட்கள் சம்பளத்தை பிடித்தது. விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய பிரிக்கால் தொழிலாளர்களுக்கு சம்பளம் பிடிக்கப்பட்ட செய்தி அறிந்த அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கத்தினரும், பொதுமக்களும் கண்டித்த போதும் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
பிரிக்கால் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தமிழக அரசு தலையிட்டு தடுத்த நிறுத்தக்கோரி, 19.06.2017 அன்று கோவையிலும், சென்னையிலும் ஒரே நேரத்தில் காணொலி காட்சி மூலம், தோழர் எஸ்.குமாரசாமி முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.அரிபரந்தாமன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். விவசாயிகளுக்காக போராடி சம்பள இழப்பை சந்தித்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக டெல்டா மாவட்டத்தை சேர்ந்த 3 விவசாயிகளும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டது கூடுதல் கவனத்தைப் பெற்றது.
உண்ணாவிரதம் துவங்கி பத்து நாட்கள் கடந்தபோதும் அரசு தலையிடாததால் இளைஞர் மாணவர் அமைப்புகள், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் கலந்துகொண்ட இடது தொழிற்சங்க மய்யம், கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற வாயில் முற்றுகைப் போராட்டம், அதைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகையில் நூற்றுக்கணக்கானோர் கைது ஆகிய நடவடிக்கைகளுக்கு பிறகு, தமிழகஅரசு தலையிட்டு வழக்கை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பி அரசாணை போட்டது. தொழிற் தகராறு சட்டம் 1948ன் 10பி பிரிவின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட 8 நாட்கள் சம்பளத்தை முன் பணமாக தரவேண்டும் என உத்தரவிட சங்கம் கோரியது.
பிரிக்கால் உள்ளிட்ட முதலாளிகளின் எதிர்ப்புக்கு அடிபணிந்து அஇஅதிமுக அரசு 10பி ஆணை போடாமல் இழுத்தடித்தது. உடனடியாக ஆணை பெற வாய்ப்பில்லை எனக் கருதியதால், தோழர்களின் உடல்நலம் கருதியதால், 10 பி ஆணை இல்லாமலேயே இடைக்கால தீர்வம் தொடர்பான ஒரு கோரிக்கை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்படும் உத்தரவாதத்துடன், 16ஆவது நாள் உண்ணாவிரதம் முடித்துக் கொள்ளப்பட்டது.
கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு இழுத்தடிக்கப்பட்டதால், அரசு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பிய இரண்டு எழுவினாக்களில், "எழுவினா - 1ன் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டு 8 நாட்கள் சம்பளத்தை பிரிக்கால் லிமிடெட் பிளான்ட் - 1 மற்றும் பிளான்ட் - 3 நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு முன்பணமாக வழங்க இடைக்கால தீர்வம் பிறப்பிக்க வேண்டுமென்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?௸ என்ற இரண்டாவது எழுவினாவை சங்கம் வலியுறுத்தவில்லை. வழக்கில் சங்கத் தரப்பு சாட்சி விசாரணை முடிந்து நிர்வாகத் தரப்பு சாட்சியை விசாரிக்க இருந்த நிலையில், வழக்கு தரப்பினரின் ஒப்புதலோடு, சமரச தீர்வகத் திற்கு அனுப்பப்பட்டது.
ஆர்பிட்ரேட்டர்கள் முன்பான பேச்சு வார்த்தைகளில் பிடிக்கப்பட்ட சம்பளத்தில் 7 1/2 நாட்கள் சம்பளம் தரப்பட வேண்டும் என்று சங்கத் தரப்பில் கேட்கப்பட்டது. நிர்வாகத் தரப்பு 294 பேருக்கு எதிரான வேலை நீக்கத்திற்கு ஒப்புதல் கோரும் வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற முன்நிபந்தனையோடு, பிடித்தம் செய்யப்பட்ட 8 நாட்கள் சம்பளத்தில் ஒருநாள் சம்பளம் தர முன்வந்தது. சமரச தீர்வக முயற்சி ரத்து செய்யப்பட்டு வழக்கு விசாரணை மீண்டும் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நிர்வாகத் தரப்பு சாட்சியை தோழர் எஸ்.குமாரசாமி குறுக்கு விசாரணை செய்து முடித்த நிலையில், பிரிக்கால் நிர்வாகம் தன் நிலைப்பாட்டிலிருந்து மாறி 6 1/2 நாட்கள் சம்பளத்தைக் கொடுக்க சம்மதித்தது.
இந்த நிலையில் தோழர் எஸ்.கே. சங்க நிர்வாகக் கமிட்டியினரிடம் வழக்கு நிலைமைகள், வழக்கின் அடுத்த சுற்று நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார். வழக்கில் நாம் முழுமையாக வெற்றி பெற்றாலும் நிர்வாகம் ரிட் மனு, ரிட் அப்பீல் உச்சநீதிமன்றம் என இழுத்தடிக்க வாய்ப்பு உள்ளதாலும், நாம் நிர்வாகத்திடம் மோதுவதோடு மட்டுமல்லாமல் பேசி முடிக்கவும் முடியும் என காட்ட விரும்புவதாலும் 6 1/2 நாட்கள் சம்பளம் பெறுவது என்பதோடு முடித்துக் கொள்ளலாம் என ஆலோசனை சொன்னார். அதன்படி 6 1/2 நாட்கள் சம்பளத்தை பெற்றுக் கொண்டு வழக்கை முடித்துக் கொள்ளலாம் என நிர்வாகக் கமிட்டி முடிவு செய்தது.
இந்த நிலையில் நிர்வாகம், கணக்கு முடித்துச் சென்ற தொழிலாளர்களின் சம்பளத்தை வழங்க முடியாது எனக் கூறியது. சங்கத் தரப்பில், 8 நாட்கள் சம்பள பிடித்தத்திற்கு எதிரான வழக்கை வலியுறுத்தவில்லை என்று குறிப்பாக நிர்வாகத்திடம் எழுதிக் கொடுத்த தொழிலாளர்களைத் தவிர, வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு சம்பளம் பிடிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க முன்வந்தால் மட்டுமே வழக்கை முடிக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. சங்கம் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றதால், நிர்வாகம் சம்பளம் பிடிக்கப்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 11 அன்றுதி லோக்அதாலத் நீதிமன்றத்தில் 6 1/2 நாட்கள் சம்பளத்தை கொடுத்து விடுவதாக ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் வழக்கு முடிவுக்கு வந்தது.
2014 ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்கு பிறகு சங்கத்தை சிறுபான்மை சங்கமாக்க வேண்டும், சங்கத்திடமிருக்கும் தொழிலாளர்களை பிரித்திட வேண்டும் என்று உறுதியோடு இருந்த பிரிக்கால் நிர்வாகம், 25.04.2017 வேலை நிறுத்தத்தை, தண்டனை வழங்க பயன்படுத்திக் கொண்டது. நான்காண்டுகளாக விடாப்பிடியாக நடைபெற்ற போராட்டங்கள், நூற்றுக் கும் மேற்பட்டோர் கைது, வழக்குகள், தமிழக அரசின் தலையீட்டுக்காக சென்னை, கோவையில் 16 நாட்கள் உண்ணாவிரதங்கள், 70 முறைகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் நடந்த இழுத்தடிப்பு ஆகியவற்றுக்குப் பிறகு இப்போது தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ. 48,00,000 (நாற்பத்தி எட்டு இலட்சம்) பிரிக்கால் நிர்வாகத்திடம் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க வீரத்தை, தியாகத்தை, அர்ப்பணிப்பை, பாட்டாளி வர்க்க உணர்வை, முன்நிறுத்திய போராட்டங்களை வழிநடத்திய கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கம், விவசாயிகளுக்கு ஆதரவான வேலை நிறுத்தம் நடந்தால் 8 நாட்கள் சம்பளப் பிடித்தம் வரும், தனது பெரும்பான்மை நிலையின் முடிவு துவங்கும் என நன்கு தெரிந்த பிறகும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. பெரும்பான்மைச் சங்கம் சிறுபான்மை சங்கம் ஆனது. மீண்டும் 300 பேருக்கு மேல் வெளிமாநில பணியிட மாற்றம், வேலை நீக்கம் என நிர்வாகத்தின் மூர்க்கமான தாக்குதல்கள் தொடர்ந்தன. ஆலை வாயில் போராட்டம், வீதிப் போராட்டம் ஆகியவற்றை அதன் உயர்ந்த கட்டங்கள் வரை எடுத்துச் சென்ற சங்கம், விடாப்பிடியான நீதிமன்ற போராட்டங்களால் இப்போதும் நிர்வாகத்தின் முற்றுகையை முறியடிக்கப் முயற்சி செய்கிறது.
802 தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்திலிருந்து ரூ.48,00,000 (நாற்பத்தி எட்டு இலட்சம்) பிரிக்கால் நிரவாகம் கொடுத்தாக வேண்டும் என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது. இது, இரண்டாம் சுற்று போராட்டத்தில் நமக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இந்த வெற்றி, தமிழ்நாட்டு தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றியாகும்.