COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 16, 2014

மாற்றுக் கொள்கைக்காக போராடும் இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வீர் !

ஏப்ரல், 11 2014 தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி

சென்னை, ஏப்ரல் 10: மக்களவை தேர்தலில் வடசென்னை - திருவள்ளூர்  - ஸ்ரீபெரும்பத்தூர்  தொகுதிகளில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டுமென சிஅய்டியு - ஏஅய்டியுசி - ஏஅய்சிசிடியு ஆகிய தொழிற்சங்கங்கள் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளன.

சிஅய்டியு - ஏஅய்டியுசி -  ஏஅய்சிசிடியு தொழிற்சங்கங்களின் கூட்டம் வடசென்னை சிஐடியு அலுவலகத்தில் ஏப்ரல் 9 அன்று பி.என்.உண்ணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வி.குமார், மாலதி சிட்டிபாபு, ஏ.ஜி.காசிநாதன் (சிஅய்டியு) எஸ். குப்பன் (ஏஅய்டியுசி), ஏ.எஸ். குமார், பழனிவேல், பசுபதி (ஏஅய்சிசிடியு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை, விவசாயிகள் தற்கொலை என துயரப்பட்டியல் நீண்டு  கொண்டே செல்கிறது. மறுபுறம் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக்கூடிய தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

பன்னாட்டு - உள்நாட்டுப் பெருமுதலாளிகள் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டுவிட்டது. தொழிலாளர்களை ஒட்டச்சுரண்ட அனுமதித்தது மட்டுமல்ல, நாட்டின் நீர்வளம் - நிலவளம் - கனிம வளம், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அடிமாட்டு  விலைக்கு, அரசு, முதலாளிகளுக்கு விற்று வருகிறது.

வங்கி - காப்பீடு போன்ற அரசுக்கு சொந்தமான நல்ல லாபம் ஈட்டக்கூடிய நிதி நிறுவனங்களை, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க மூர்க்கத்தனமாய் முயற்சி எடுத்து வருகிறது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளர்களை படிப்படியாக அகற்றிவிட்டு, ஒப்பந்தமுறை புகுத்தப்படுகிறது. கூடுதலான வேலைநேரம், படுமோசமான வேலைச்சூழல், மிகக் குறைந்த சம்பளம் என கசக்கிப் பிழியப்படும் நிலை உள்ளது. தொழிலாளர் நலச்சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆலைகள் மூடி, பணிக்கொடை கூட தராமல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் தள்ளப்படுகின்றனர். உழைப்பாளி மக்களின் உரிமைகள் காத்திட சங்கம் அமைத்ததால் வேலை நீக்கம், பணியிடை நீக்கம், ஊர் மாற்றல்,  பொய் வழக்கு என முதலாளிகள் அரசின் ஆதரவோடு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்ட உழைப்பாளி மக்களின் நலனுக்கு விரோதமாக, பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளின் ஊது குழலாக ஆட்சியாளர்கள் செயல்படுவது கொடுமையிலும் கொடுமை.
தவறான மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கையினால் காங்கிரஸ் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாற்று நாங்கள் என பாரதிய ஜனதா கட்சியினர் மோடியை முன்னிலைப்படுத்தி தம்பட்டம் அடிக்கின்றனர். 1998ஆம் ஆண்டிலிருந்து 2004 வரை பிஜேபி தலைமையிலான ஆட்சி 35 முறை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது. ஆன்லைன் வர்த்தகத்தைக் கொண்டுவந்தது. பொதுத்துறை பங்குகளை விற்பதற்கென்றே தனி அமைச்சரை நியமித்தது,  சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. புதிய பென்சன் மசோதாவைக் கொண்டு வந்தது போன்ற காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்த அதே பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது பாரதிய ஜனதா கட்சி என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
இதேபோன்று ஊழலிலும் இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. இந்த இரண்டு பெரிய கட்சிகளும் கடைப்பிடிக்கின்ற தாராளமய தொழிலாளர் விரோத கொள்கைகளை தாங்கிப் பிடிக்கின்ற கட்சிகளாக அதிமுக, தேமுதிக, திமுக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் செயல்படுகின்றன.

எனவே, உழைக்கும் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்திட இடதுசாரி வேட்பாளர்களாக வடசென்னையில் போட்டியிடும் உ.வாசுகி அவர்களையும், திருவள்ளூரில் போட்டியிடும் ஏ.எஸ்.கண்ணன் அவர்களையும் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் கே.பாரதி அவர்களையும் வெற்றி பெறச்செய்ய உழைப்பாளி மக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.     

Search