COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 16, 2014

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி

கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்ட பிரதிநிதி

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ்  சாரு பாலா தொண்டமான், திமுக மு.அன்பழகன், அதிமுகவில் பா.குமார் மற்றும் சிபிஅய்எம்  ஸ்ரீதர் போட்டியிடுகிறார்கள். இது பொதுத் தொகுதி. இகக (மாலெ) தவிர முக்கிய கட்சிகள் தலித் வேட்பாளரை களமிறக்கவில்லை. இகக(மாலெ) கிராமப்புறப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள தலித் ஒடுக்குமுறை, 100 நாள் வேலையில் உள்ள ஊழல், கூலி உயர்வு, ஆண்டு முழுமைக்கும் வேலை, சாமானிய மக்களை அவர்களின் சம்பாத்தியத்தை உறிஞ்சிச் சீரழிக்கும் சாராயக் கடைகளை மூடுதல், கல்லாக்கோட்டை சாராய ஆலை உட்பட அனைத்து சாராய ஆலைகளையும் மூட வலியுறுத்துதல், சிறுபான்மையோர் நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இகக (மாலெ) வேட்பாளர் பழ.ஆசைத்தம்பி  மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறார். கட்சியின் மக்கள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகளும் பிரச்சாரத்தில் முன்வைக்கப்படுகின்றன.

மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் (சிபிஅய்எம் தவிர) மக்கள் பிரச்சினைகளில், மக்கள் இயக்கங்களில் பங்கெடுத்தவர்கள் கிடையாது. அனைவருமே கோடீஸ்வரர்கள். ஆதிக்கத்துக்கு துணை நிற்பவர்கள். இகக (மாலெ) வேட்பாளர் மக்கள் பங்களிப்பில் தேர்தலைச் சந்திக்கிறார். இவருடைய வங்கிக் கணக்கில் வெறும் 1000 ரூபாய் மட்டுமே இருப்பு.

கந்தர்வக்கோட்டைப் பகுதியில் உள்ள தலித் மக்கள் அவர்கள் திமுக அதிமுகவில் இருந்தாலும் எம்எல் கட்சிதான் தலித் மக்களுக்காக குரல் கொடுக்கிறது, போராடுகிறது, இவர்களோடுதான் நாம் நிற்கவேண்டும் என்று வெளிப்படையாகவே பேசிக் கொள்கிறார்கள். கரம்பக்குடி இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதி. இப்பகுதியில் இகக(மாலெ)வின் இஸ்லாமிய மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஊராட்சி மட்டத்தில் 10 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒன்றியத் தலைநகரங்களில் 5 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஊராட்சிகள் மட்டத்தில் 3 முன்னணி ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 200 பேர் வரை கலந்து கொண்டனர். 20 ஊராட்சிகளில் கட்சியின் முன்னணி ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்த வாக்குச் சேகரிப்பில் 500 பேர் வரை கலந்து கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். பிரச்சார வேனில் வேட்பாளர் சென்று வாக்கு சேகரிப்பது ஏப்ரல் 13 முதல் நடக்கிறது. புதுக்கோட்டை, கீரனூர், கந்தர்வக் கோட்டை, கரம்பக்குடி, குன்றாண்டார்கோவில், திருச்சி என அனைத்துப் பகுதிகளுக்கும் வேனில் சென்று வாக்குக் கேட்கவும் ஊராட்சிகள் மட்டத்தில் பெரிய அளவில் 7 பொதுக் கூட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஊராட்சி மட்ட ஒன்றிய மட்ட பிரச்சார மற்றும் பொதுக் கூட்டங்களில் இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்துகொண்டார். மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரமும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.

Search