COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 16, 2014

ஆணாதிக்க அறிவாளிகள் சிலர் பார்க்க மறுப்பது

2012 டிசம்பர் 16 பிறகு, தருண் தேஜ்பால் போன்றவர்கள் நினைப்பதுபோல், அவர்கள் முன்னரே எழுதி வைத்த ஆணாதிக்க விதிகள்படி, அனைத்தும் நடப்பதில்லை. தெஹல்கா ஆசிரியரான ஷோமா சவுத்ரிக்கு, தருண் தேஜ்பால் எழுதிய கடிதத்தில் தான் தவறு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு தனக்குத் தானே 6 மாதகால நீக்கம் செய்து தண்டனை கொடுத்துக் கொண்டதாகச் சொன்னார். அந்த சமயத்திலும் எதுவும் கைமீறிப் போகாது, பார்த்துக் கொள்ளலாம் என்ற அவரது அதிகார ஆணாதிக்க ஆணவம் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பின் அடுத்தடுத்து மிக வேகமாக நடந்த எதையும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. உலகப் புகழ்பெற்ற அவர் பத்திரிகையில் வேலை செய்த பத்திரிகையாளர்கள் விலகினார்கள். அவருக்காக பரிந்து பேச முயன்ற ஷோமா சவுத்ரியும் விலக நேர்ந்தது. பத்திரிகைகளில் அவர் செய்த குற்றம் போதுமான அளவுக்கு விவாதிக்கப்பட்டது. நான்கு மாதங்களாக சிறையில் இருக்கிறார்.

பிரச்சனை தீவிரமாக தீவிரமாக, மொத்த நிகழ்வுக்குப் பின் அரசியல் சதி இருப்பதாக தருண் தேஜ்பால் குற்றம் சுமத்தினார். பாதிக்கப்பட்ட பெண் தன் அரசியல் எதிரிகளால் செலுத்தப்படுவதாக சொன்னார். அவர் சிறையில் இருக்கும்போதே, பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது குடும்பத்தினர், உற்றவர்கள் சந்தித்து, அந்தப் பெண்ணை மிரட்டிப் பார்த்தார்கள்.

செல்வாக்குமிக்க தருண் தேஜ்பாலுக்கு பிணை வழங்காமல் இருந்தபோதே, சிறையில் இருந்தபோதே பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நீதிமன்றத்தில் குற்றம் பற்றி விவரித்தபோது அவர் அழுதுவிட்டதாக செய்திகள் வெளியாயின.
பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் அவர் மீது அதிகாரபூர்வமாக புகார் கொடுப்பதற்கு முன்பே, தான் செய்த குற்றத்தை எழுத்துபூர்வமாக ஒப்புக்கொண்ட தருண் தேஜ்பால், கைது செய்யப்பட்டபோதும், சிறையில் அடைக்கப்பட்ட போதும், அவரது பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டபோதும், நான் நிரபராதி, தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என்று சொல்லத் துவங்கினார். நாட்கள் செல்லச் செல்ல, குற்றம் நடந்த நாளன்று பதிவான அந்த விடுதியின் காணொளி சாட்சி, தான் நிரபராதி என்று நிரூபிக்கும் என்று சொல்லிவந்தார்.

அவர் சொன்ன காணொளி காட்சியும் நீதி மன்றத்தின் பார்வைக்கு வந்தது. அதில் தருண் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்க ஏதும் இல்லை என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ஆணாதிக்க கருத்துக்கள் மிகவும் வன்மத்துடன், பாதிக்கப்பட்டு, புகார் தரத் துணிந்த அந்தப் பெண்ணை சுற்றிவளைத்துத் தாக்கத் துவங்கியுள்ளன.

அந்த காணொளி காட்சியை சட்டபூர்வமாக யாரும் பார்க்க முடியாது. ஏனென்றால், அது பாதிக்கப்பட்ட பெண் யாரென்று வெளிப்படுத்திவிடும். சட்டத்தில் இதற்கு இடமில்லை. நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடும் வழக்கறிஞர் பார்வைக்கும் வந்த அந்த காணொளி சட்டவிரோதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு காட்டப்பட்டது. பத்திரிகையாளர்கள் மனு ஜோசப், சீமா முஸ்தபா மற்றும் இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் கஷ்யப் சட்டவிரோதமாக அந்த காணொளியை பார்த்திருக்கிறார்கள்.

தருண் தேஜ்பாலை சிறையில் அடைக்கும் அளவுக்கு அந்த மின்தூக்கியில் ஏதும் நடந்து விடவில்லை, அந்தப் பெண் சொல்வது பொய் என்று நிரூபிக்க மனு ஜோசப் எடுத்த முயற்சியில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பத்திரிகையாளர், புகார் தந்த தனது துணிச்சலுக்கான விலை கொடுக்க நேர்ந்துள்ளது. அனுராக் கஷ்யப் தனது வார்த்தைகளில் எந்த ஒளிவு மறைவுக்கும் நாகரிகத்துக்கும் இடம்தராமல், அந்தப் பெண் சொல்வது பொய் என்று சொல்கிறார். துரதிர்ஷ்டவசமாக, ஜனநாயகக் கருத்துக்களை முன்வைப்பவர்களாக இதுகாறும் கருதப்பட்டு வந்த மற்ற இரண்டு எழுத்தாளர்களும் தேஜ்பால் பாவ மன்னிப்பு கேட்டதை மறந்துவிட்டு, அவருக்காக பரிந்து பேச முன்வந்துள்ளனர். இந்தப் போக்கில் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் இற்றுப்போன நிலப்பிரபுத்துவ கருத்துக்களுக்கு துணைபோய் விடுகின்றனர்.

அவுட்லுக் பத்திரிகையில் அந்த ‘மின்தூக்கி பார்த்தது என்ன’ என்று தலைப்பிட்டு மனு ஜோசப் தேர்ந்த சொற்களைப் பின்னி எழுதியுள்ள கட்டுரை மின்தூக்கிக்குள் அந்தக் குற்றம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை எனச் சொல்லப் பார்க்கிறது. தருண் தேஜ்பாலும் அவர் குடும் பத்தினரும், பாதிக்கப்பட்ட  பெண் பத்திரிகையாளரின் வயதை ஒத்த, அந்தப் பெண்ணின் நெருக்கமான நண்பர்களான தருண் தேஜ்பாலின் மகள்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் துன்பம் பற்றி உருக்கமாகச் சொல்லி, அவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அனுதாபச் சித்திரத்துடன் துவங்கும் மனு ஜோசப் கட்டுரை, பாதிக்கப்பட்டு, புகார் கொடுத்த பெண்ணின் துன்பத்துடன் அதை ஒப்பிட்டால், அந்தப் பெண்ணின் துன்பம் பெரிய விசயமில்லை அல்லது அதற்கு இது சரியாகிவிட்டது என்று சொல்ல வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் சொல்வது பொய் என்பதை அந்த காணொளியில் பதிவாகியுள்ள விவரங்கள் அடிப்படையில் மிகவும் நுணுக்கமாக விளக்கப் பார்க்கிறது. குற்றம் நடந்த இடம் மின்தூக்கியின் உள்பகுதியில். அந்த குறிப்பிட்ட நேரத்தில் மின்தூக்கிக்கு வெளியே நடந்தவை  மட்டுமே அந்த கண்காணிப்பு காணொளியில் பதிவாகியுள்ளன. மின்தூக்கியின் உள்ளே கண்காணிப்பு கேமிரா இல்லை. மின்தூக்கிக்கு வெளியே நடந்தவற்றை மட்டும் பார்த்து, மின்தூக்கிக்கு உள்ளே குற்றம் எதுவும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கட்டுரை சொல்கிறது. அதனால்தான், ‘மின்தூக்கி பார்த்தது என்ன’ என்று கட்டுரைக்கு தலைப்பு.

அதாவது நடந்த உண்மை மின்தூக்கிக்குத்தான் தெரியுமாம். புகார் அடிப்படையில் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாதாம். நீதி மற்றும் அறம் கருதி, அந்தக் கட்டுரை முன்வைக்கும் கருத்துக்களில் சில மட்டும் இங்கு தரப்படுகின்றன.

•    மின்தூக்கியில் இரண்டாவது தளத்தில் இருந்து தரைதளத்துக்கு வர 14 வினாடிகள் மட்டுமே ஆகும்.

•    குற்றம் நடப்பதற்கு முன் இருவரும் பாலியல்ரீதியான விவகாரங்கள் பற்றிய தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

•    தேஜ்பால் தன்னை மின்தூக்கிக்குள் பல வந்தமாக இழுத்ததாக அந்த இளம்பெண் சொல்கிறார். ஆனால், காணொளி காட்சியில் அந்தப் பெண்ணை தருண் அழைத்துச் செல்வது போலவே உள்ளது.

•    முதல் நாள் குற்றம் 100 வினாடிகளில் நடந்திருக்கிறது.

•    மின்தூக்கியில் இரண்டாவது தளத்தில் இருந்து தரைதளம் அல்லது தரைதளத்தில் இருந்து இரண்டாவது தளம் செல்ல 14 வினாடிகள் மட்டும் ஆகும்போது, தேஜ்பால் தனது விரல்களால் மின்தூக்கியின் வேறுவேறு பொத்தான்களை மாற்றி மாற்றி அழுத்தி மின் தூக்கி எந்தத் தளத்திலும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்குமாறு செய்தார் என்று புகாரில் சொல்லப்பட்டுள்ளது. ஒரே பொத்தானை அழுத்தித்தான் அவ்வாறு செய்ய முடியுமே தவிர வேறுவேறு பொத்தான்களை அழுத்தி மின்தூக்கி ஓடிக்கொண்டே இருக்குமாறு செய்ய முடியாது.

•    ஒரு கை விரல்களில் மின்தூக்கி நிற்காமல் ஓடுவதை உறுதிப்படுத்திக்கொண்டு மறு கை விரல்களால் புகாரில் சொல்லப்பட்டுள்ளவற்றை அவரால் செய்திருக்க முடியுமா?

•    பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் தனது சக ஊழியர்களிடம் நடந்ததைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தேஜ்பாலிடம் இருந்து ஆபாச குறுஞ்செய்தி ஒன்று அந்தப் பெண்ணுக்கு வந்துள்ளது. தன்னிலை மறந்து குடிபோதையில் அவர் அதை அனுப்பி இருக்க வேண்டும்.

•    குற்றம் நடந்த மின்தூக்கியில் இருந்து வெளியே வந்தபோது அந்தப் பெண்ணின் நடத்தையில் குற்றம் நடந்ததற்கான பதட்டம் எதுவும் காணப்படவில்லை. அவர் எப்போதும் போல் சாதாரணமாக இருந்தார். தனது கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டு போனார்.

•    குற்றம் நடந்த பிறகு, அந்தப் பெண் தனது நண்பர்களுடன் பார்ட்டிகளில் சகஜமாக கலந்து கொண்டிருக்கிறார்.

• பாதிக்கப்பட்ட பெண் முதல் நாள் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்கள் காணொளி சாட்சிப்படி இரண்டாவது நாளில் நடந்துள்ளன.

• பாதிக்கப்பட்ட பெண் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர்.

கட்டுரையின் நோக்கம் சில உண்மைகளை அப்படியே உள்ளது உள்ளவாறு முன்வைப்பது என்று சொல்லப்படுகிறது. ஆனால், கட்டுரையில் இந்த வரிகளுக்கு இடையில் மறைக்கப்பட்டு சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. முதல் நாள் குற்றம் நடந்தது என்றால், இரண்டாவது நாள் ஏன் அந்தப் பெண் தேஜ்பாலுடன் மீண்டும் மின்தூக்கியில் செல்ல வேண்டும்? 14 வினாடிகளில் என்ன பாலியல் குற்றம் செய்து விட முடியும்? 100 வினாடிகளில் கூட என்ன பெரிய தவறு நடந்திருக்கும்? தருண் தேஜ்பாலுடன் பாலியல்ரீதியான விவாதத்தில் ஈடுபட்டது அந்தப் பெண்ணின் குற்றமல்லவா? அதுதான் குற்றத்துக்கான சூழலை உருவாக்கி இருக்கிறது. பாலியல்ரீதியான விவாதத்தில் ஈடுபடும் பெண்ணின் நடத்தை சரியானதாக இருக்குமா? புகார் செய்துள்ள பெண் சொல்லும் விசயங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே? குற்றம் நடந்ததற்கு அறிகுறி எதுவும் அந்தப் பெண்ணிடம் இல்லை எனும் போது, நடந்தது அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தானே நடந்திருக்க வேண்டும்? பாலியல் குற்றங்களுக்கு எதிராக பேசி வருகிற ஒரு பெண்ணுக்கு அது தொடர்பான புகாரை எப்படி முன்வைக்க வேண்டும் என்பது நன்கு தெரியுமல்லவா? ஆக, இது திட்டமிட்டு எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு அல்லவா?

ஆணாதிக்க சிந்தனை முறைக்கு பழக்கப்பட்டவர்களுக்கு இவர்களின் வாதங்கள் அந்தப் பெண்ணின் மீது சந்தேகத்தையும் குற்றமிழைத்துவிட்டு குற்றமிழைத்ததை எழுத்து பூர்வமாக ஒப்புக்கொண்ட தருண் தேஜ்பால் மீது இரக்கத்தையும் உருவாக்கலாம். இவ்வளவு தானே, எல்லாம் 14 வினாடிகள் மற்றும் நூறு வினாடிகள் அவ்வளவுதானே, இதற்கு இந்த மனிதருக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று அனுதாபத்தை உருவாக்கலாம். அதாவது, பாதிக்கப்பட்ட பெண் மீது கோபத்தையும் குற்றம் செய்த ஆண் மீது அனுதாபத்தையும் கொண்டு வரலாம். கட்டுரையின் நோக்கமும் அதுதான்.

ஆனால், அந்த நோக்கம் அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடவில்லை. மனு ஜோசப் மற்றும் சீமா முஸ்தாபாவின் கட்டுரைகளும் அனுராக் கஷ்யப்பின் ட்விட்டர் செய்தியும் கடும்                                                                                                                                                                                                                                                                                                                                                                          கண்டனத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் நியாயங்கள் வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை பற்றி பேசி, அவர் எழுப்புகிற புகாரை கேள்விக்குள்ளாக்கும் உத்தி கடுமையாக சாடப்பட்டுள்ளது.

தெரியாத ஒருவர் தாக்குதல் நடத்தும்போது தாக்கப்படும் பெண்ணுக்கு உடனடியாக அபயக் குரல் எழுப்பத் தோன்றலாம். ஆனால், தனக்கு நன்கு பழக்கப்பட்ட, அதிகாரத்தில் மேல்நிலையில் உள்ள, குடும்பரீதியாக நல்லுறவு கொண்டுள்ள, சமூகத்தில் செல்வாக்கு, மதிப்பு கொண்ட ஒருவர் பாலியல் தாக்குதலில் இறங்கும்போது, அந்தப் பெண் நிலைகுலைந்து போவதுதான் முதல் பதில்வினையாக இருக்க முடியும். வெளியே சொல்வதால் ஏற்படும் விளைவுகளை மனம் ஓட்டிப் பார்க்கும். மீண்டும் இப்படி நடந்துகொள்ள மாட்டார் என்று எதிர் பார்க்கத் தோன்றும். சரிசெய்து விடலாம் என்று நம்பத் தோன்றும். இந்த, இன்னும் இது போன்ற காரணங்களால், எதுவும் நடக்காதது போல், பாதிக்கப்பட்ட பெண் நடந்துகொள்ள முயற்சி செய்யக்கூடும். இரண்டாவது நாள் தருண் நிர்ப்பந்தித்ததால்தான் மின்தூக்கியில் சென்றிருக்கிறாரே தவிர, கட்டுரை சொல்லப் பார்ப்பதுபோல், தானே செல்லவில்லை.

எதிர்பாராத இடத்தில் இருந்து, தந்தையின் நண்பர், நண்பர்களின் தந்தை என்ற நிலையில் இருப்பவரிடம் இருந்து வந்தத் தாக்குதலை, அதிர்ச்சிக்குள்ளான நிலையை, அப்படியே சம்பவம் ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்திச் சொல்வது, பாதிக்கப்பட்டு, கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் நிலையில் சாத்தியமில்லை. அப்படிச் சொல்ல முடியவில்லை என்பதால், சொன்னதில் விவரங்கள் முன்பின் இருந்ததால், குற்றம் நடக்கவில்லை என்றும் சொல்லிவிட முடியாது.

என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்திக் கொண்டு அந்தப் பெண் மின்தூக்கியில் இருந்து வெளியே ஓடி வந்தால்தான் உள்ளே குற்றம் நடந்ததை ஒப்புக்கொள்ள முடியும் என்று ஒருவர் சொன்னால் அவர் ஓர் அப்பட்டமான ஆணாதிக்கவாதி. பிற்போக்குவாதி. அப்படியானால் தருண் அந்தப் பெண்ணுக்கு அந்தச் சூழலில் அனுப்பிய குறுஞ்செய்தி குற்றமற்றதா? குடிபோதையில் இருந்தால் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் தொடுக்கலாம், பெண்களிடம் வரம்பு மீறி நடந்துகொள்ளலாம், பேசலாம் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று தருண் தேஜ்பாலுக்கோ, மற்ற ஆண்களுக்கோ, உரிமம் ஏதும் வழங்கப்பட்டுள்ளதா? குடிபோதை குற்றத்தை நியாயப்படுத்திவிடாது. சத்தியவான் சாவித்திரி காலத்து நியாயத்தை மனு ஜோசப் பேசுகிறார். பேசவே முடியாத மின்தூக்கியை பேசச் சொல்கிறார். மின்தூக்கியில் நடக்காததை, அல்லது நடந்திருக்கக் கூடியதை தனது அனுமானத்தில் மீண்டும் கட்டியெழுப்புகிறார்.

தன் மீது நடத்தப்பட்ட வன்முறை பற்றி எந்தப் பெண்ணும் பொதுவாக பொதுவில் சொல்லத் தயங்கும் விசயங்களை, அந்தப் பெண்ணின் உடல் ஓர்மை பலவந்தமாக மீறப்பட்டதை கட்டுரை மீண்டும் சொல்வதன் மூலம் அந்தப் பெண்ணை மீண்டும் மனரீதியாக அதே வன்முறைக்கு, மேலும்மேலும் மனரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது.  பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்துகிறது. பெண்களை மவுனப்படுத்த ஆணாதிக்கம் பல ஆண்டு காலங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் உத்தி இது.

மும்பை சக்தி மில்ஸ் பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதுபற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் பின்னணியில், பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்பாக, நாடு முழுவதும், கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பெண்களும் ஜனநாயக சக்திகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சூழலிலேயே இதுபோன்ற ஆணாதிக்க வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன என்றால், ஆணாதிக்கக் கருத்துக்கள் எவ்வளவு வலிமையானவை? ஆனால், அவை அடித்து நொறுக்கித் தள்ளப்படாமல், நாகரிக சமூகம் ஓர் அடி கூட முன்செல்ல முடியாது என இன்னும் ஆழமாக அழுத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது என்பதைத்தான் மின்தூக்கி சொல்கிறது.

இப்போது அந்தப் பெண்ணின் போராட்டம் இன்னும் கடுமையானதாக ஆக்கப்பட்டுள்ளது. தருண் மீதான குற்றச்சாட்டுக்கு அரசியல் பின்னணி இருப்பதால், அவர் செய்தது குற்றம் இல்லை என்றாகிவிடாது. தருண் போன்றவர்களும் பாலியல் குற்றம் செய்துவிட்டு தண்டனையில் இருந்து தப்பிவிட முடியாது என்பதை அந்தப் பெண்ணின் துணிச்சல் உறுதிசெய்துள்ளது. அந்த உறுதியை, அந்த உறுதி, பெண்களின் போராட்டத்துக்கு சேர்த்துள்ள வலிமையை குலைக்க, குறைக்க ஆணாதிக்க சதி நடக்கும் என்றால், அந்தச் சதியை, பாலியல் புகார் எழுப்பினால் பாதிப்பு ஏற்படும் என்று புகார் செய்யத் தயாராகும் பெண்களை மீண்டும் மவுனமாக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டியுள்ளது.

பல ஆண்டுகால அறிவாளிப் பயிற்சி, தேஜ்பாலுக்கு ஆதரவான வாதங்களை முன்வைத்துள்ள அறிவாளிகளை, முன்னே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். மாறாக அவர்கள் பின்னோக்கிச் செல்கிறார்கள். இந்த அறிவாளிகள், இந்தியப் பெண்கள் நடத்திக்கொண்டிருக்கும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கவில்லையென்றாலும் அதன் சீற்ற அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுவிடாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொண்டு பேசாமல் இருக்கவாவது கற்றுக்கொள்ள வேண்டும்.

Search