COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, September 2, 2016

தமிழக அரசின் மதிய உணவுத் திட்டம்
கொஞ்சம் முட்டை, கொஞ்சம் கொண்டை கடலை, கொஞ்சம் சோறு 
நிறைய மோசடி, நிறைய அலட்சியம்
1995ல் ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் திருமணத்தை நடத்தினார். அந்தத் திருமணம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.
1.50 லட்சம் விருந்தினர்கள் வந்திருந்தனர் என்றும் உணவுக்கு மட்டும் ரூ.2 கோடி செலவு செய்யப் பட்டதாகவும் கின்னஸ் விவரங்கள் சொல்கின்றன. திருமணத்துக்கு வந்தவர்களுக்குத் தர 2 லட்சம் தாம்பூலங்கள் ரூ.16 லட்சம் மதிப்பில் இருந்தன என்றும் மிகமுக்கிய பிரமுகர்களுக்கு தரப்பட்ட உணவு செலவு ஒருவருக்கு ரூ.100, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அஇஅதிமுக தொண்டர்களுக்கு, உணவு செலவு ஒருவருக்கு ரூ.40 என்றும் ஒரு விவரம் சொல்கிறது.
இது 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது. இன்று அந்த ரூ.2 கோடியின் மதிப்பு ரூ.20 கோடியாக இருக்க வாய்ப்புள்ளது. அடுத்தடுத்து சொல்லப்பட்டுள்ள செலவுகளின் மதிப்பும் இன்று 10 மடங்கு கூடியிருக்கும். நல்லது. இருந்துவிட்டுப் போகட்டும். பலமுறை கேட்டு, படித்து, கசந்து, புளித்துப் போய்விட்டது. இப்போது அந்த விவரங்கள் எதற்கு? நொந்து போயிருக்கிற தமிழர் இப்படிக் கேட்கக் கூடும்.
கேட்டால் அவர் இன்னும் நொந்து போகக் கூடிய ஒரு விவரம் பற்றி பேச, அதை நன்கு புரிந்துகொள்ள இந்த ப்ளாஷ்பேக் கொஞ்சம் உதவும். மட்டுமின்றி, இந்த விவரங்கள்தான் நீதிமன்றம் வரை போனதால் பொது வெளியில் வெளிப்படையாக உள்ளன. இன்று ஜெயலலிதா இருத்தலுக்கு நாளொன்றுக்கு என்ன செலவாகிறது என்று நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. இப்படி, அப்படி என்று, சில ஆயிரங்கள் என்று யாராலும் ஊகிக்க முடியும். அதைச் சொன்னால் அவதூறு வழக்கு வரும். அதனால், எடுத்துக் கொண்ட விசயம் பற்றி பேச, திருமணச் செலவுகளை உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம்.
ஆக, ஜெயலலிதாவுக்கும் அவரைச் சுற்றி யிருப்பவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நல்ல, தரமான உணவு ஒருவருக்குத் தர என்ன செலவாகும் என்று மிகமிக நன்றாகத் தெரியும். நல்ல, தரமான உணவு, ஊட்ட உணவாகவும் நிச்சயம் இருக்கும். இன்றைய நிலைமைகளில் புல் மீல்ஸ் சரவணா பவனில் ரூ.120. மற்ற உடுப்பி ஓட்டல்களில் குறைந்தபட்சம் ரூ.70. இந்த உணவில் சக்கை இருக்கும். சாறோ, சத்தோ இருக்காது. அங்கு இங்கு ஒட்டிக் கொண்டு ஏதோ கொஞ்சம் காய்கறி இருக்கும். இந்த நிலைமைகள் ஜெயலலிதாவுக்குத் தெரியவில்லை என்றாலும் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஆனால் தமிழ்நாட்டில், இந்தியாவில், உலகின் எந்த மூலையிலும் கூட, இன்றைய நிலைமைகளில் 1 ரூபாய் 13 பைசாவுக்கு, அது குழந்தைக்கு என்றாலும் கூட, மதிய உணவு கிடைக்குமா? அம்மா உணவகத்தில் கூட மதிய உணவு ரூ.5 கொடுத்தால்தான் கிடைக்கும். அப்படி இருக்க தமிழ்நாட்டின் அரசு துவக்க, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு தர அரசு ஒரு குழந்தைக்கு ரூ.1.13 செலவிடுகிறது. 1995ல் ஒருவருக்கு ஒரு நாளில் ஒரே ஒரு வேளை உணவுக்கு ரூ.100 செலவு செய்தவர் தலைமையிலான அரசாங்கம் 2016ல் ஒரு குழந்தைக்கு ஒரு வேளைக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.300 செலவு செய்வதாகச் சொல்கிறது. ஒரு தாய்க்குத்தான் தன் குழந்தைகளுக்கு என்ன தேவை என்று தெரியும் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா மீண்டும் மீண்டும் சொன்னார். ஓர் ஆண்டில் ஒரு குழந்தைக்கு ஒரு வேளை உணவு தர ரூ.300 போதும் என்று அவர் எப்படி தெரிந்துகொண்டார்? அவருக்கும் ஒரு வேளை உணவுக்கு, அவரது ஒரு காலத்து மாதச் சம்பளம்போல், ரூ.1தான் செலவாகிறதா?
2015 - 2016ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு விவரங்கள்படி தமிழ்நாட்டில் 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளில் 50.7% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளன. 23.8% குழந்தைகள் குறை எடை கொண்டவை. 19.7% குழந்தைகள் வீணாகப் போனவை. 7.9% குழந்தைகள் மிக மோசமாக வீணாகப் போனவை. 27.1% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவை. எந்த அக்கிரமத்தையும் பிற மாநிலங்களோடு, முந்தைய கருணாநிதி ஆட்சியோடு ஒப்பிட்டு தங்கள் ஆட்சியில் அக்கிரமம் குறைவாக நடப்பதாக ஜெயலலிதாவும் அஇஅதிமுகவினரும் எப்போதும் சொல்கிறார்கள். ஆனால், நாடு போற்றும் நல்லாட்சி நடத்தும் புரட்சித்தாய் ஆட்சியில் ஏன் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்? வீணாகவும், மோசமாக வீணாகவும் போன குழந்தைகள் 30% என ஏன் இருக்க வேண்டும்?
துவக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை 69 லட்சம் குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்தில் பயன் பெறுவதாக தமிழக அரசின் சத்துணவுத் துறை சொல்கிறது. நிதியமைச்சர் பன்னீர்செல்வம் 55 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவதாகச் சொல்கிறார். மதிய உணவுத் திட்டத்துக்கு 55 லட்சம் குழந்தைகள் என்ற அடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார். அவரது பார்வையில் 14 லட்சம் குழந்தைகள் மறைந்துவிட்டன. 55 லட்சம் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சத்துணவுத் துறையினர் 69 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு தர வேண்டும். இது எப்படி ஊட்டமும் சத்தும் நிறைந்த உணவாக இருக்க முடியும்?
மாநில அரசின் பல திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்களுடன் சேர்ந்து மத்திய அரசின் நிதியுதவியுடன் அமல்படுத்தப்படுபவை. தமிழ்நாட்டின் மதிய உணவுத் திட்டமும் தேசிய மதிய உணவுத் திட்டத்துடன் சேர்த்து அமலாக்கப்படுகிறது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு உணவூட்டுச் செலவினம் ரூ.3.76 என்றும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு உணவூட்டுச் செலவி னம் ரூ.5.64 என்றும் மத்திய அரசு நிர்ணயிக்கிறது. மோடி சில மணி நேரம் அணியும் கோட்டுக்கு ரூ.10 லட்சம் செலவு செய்பவர்கள், குழந்தைகள் உணவுக்கு பைசா கணக்கு பார்த்து நிதி ஒதுக்குகிறார்கள்.
தேசிய மதிய உணவுத் திட்டத்துக்கான செலவில் 75% மத்திய அரசு தந்து விடுகிறது. மீதி மாநில அரசு தருகிறது. அரிசியை மத்திய அரசு தந்துவிடுகிறது. போக்குவரத்துக்கும் ஒரு மெட்ரிக் டன் அரிசிக்கு ரூ.750 மத்திய அரசு தந்துவிடுகிறது. இதற்கு மேல் நிதி ஒதுக்குவதை தாங்கள் உழைத்துச் சேர்த்த தங்கள் சொந்தப் பணத்தை செலவழிப்பது போல் ஜெயலலிதாவும் பன்னீர்செல்வமும் அறிவிக்கிறார்கள். இந்த நிதியும் முழுமையாக குழந்தைகளுக்கு சென்று சேருமா என்று சொல்ல முடியாது. தேர்தலுக்கு சற்று முன்பு முட்டை வாங்குவதில் நடந்த ஊழல் பெரிய செய்தியாக இருந்தது.
இந்த அளவில் செலவு செய்துகொண்டு, முட்டை, புலவு, பிரியாணி, தக்காளி சாதம், காய்கறிகளுடன் சாம்பார், வெஜிடபிள் சாதம் என்று பெரிய பட்டியலை சில சமயம் முதலமைச்சர் படிக்கிறார். அவர் படித்த மாத்திரத்திலேயே அவையெல்லாம் தமிழ்நாட்டின் குழந்தைகளுக்கு சென்று சேர்ந்து அவர்கள் ஊட்டம் பெற்று துள்ளிவிளையாடுவது போல் காட்சிகள் கண்முன் விரிய வேண்டும் என்று ஜெயலலிதா எதிர்ப்பார்க்கிறார். ஆனால், சத்துணவுப் பணிகளில் இருப்பவர்கள், ஒதுக்கப்படும் நிதியில் இவற்றையெல்லாம் செய்யவே முடியாது என்று பின்னர் கைவிரிக்கிறார்கள்.
நிதிப் பற்றாக்குறையால் கார்ப்பரேசன் பள்ளிகளில் தரப்படும் உணவின் அளவு குறைவாக இருப்பதாகவும் குழந்தைகளுக்கு வயிறு நிறைய உணவு தர முடிவதில்லை எனவும் சத்துணவு ஊழியர்கள் சொல்கின்றனர். சமையல் எரிவாயு கூட ஒரு பள்ளியில் ஆண்டுக்கு 4 உருளைகள்தான் தரப்படுவதாக அவர்கள் சொல்கிறார்கள். இரவும் பகலும் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நல்லது செய்வது என்று யோசித்து யோசித்து களைப்படைந்திருக்கிற ஆட்சியாளர்களுக்கு நிதிப் பற்றாக்குறை முதல் குழந்தைகளுக்கு உணவு தர வேண்டிய ஊழியர் பற்றாக்குறை வரை இருப்பது அந்த யோசனை வளையத்துக்குள் வராமல் போய்விடுகிறதா? அந்த வேலைகளில் 10,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. நிரப்புவதற்கு இன்னும் முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எந்த கோணத்தில் பார்த்தாலும், மதிய உணவு, சத்துணவு, ஊட்ட உணவு என பெயர் சொல்வது தவிர உள்ளடக்கம் வெறும் சக்கை, அதுவும் அளவு குறைந்த சக்கை என்பது தெரிய வருகிறது. இந்த சக்கையாவது கிடைக்கும் என்று மாணவர்கள் பள்ளிக்கு வரும் நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. மோசடி தவிர வேறு எதுவும் செய்வதில்லை என்று அஇஅதிமுக ஆட்சியாளர்களும் உறுதி பூண்டிருக்கிறார்கள்.
இன்னுமொரு வழிபாட்டு உரிமை மறுப்பு
இன்னமொரு சாதிவெறித் தாக்குதல்
எஸ்.இளங்கோவன்
மக்கள் வாக்குகள் வாங்கி சட்டமன்றத்துக்குச் சென்றவர்கள் சட்டமன்றத்தில் பாட்டு பாடுகிறார்கள். பஜனை நடத்துகிறார்கள். மக்கள் பாடு அதே திண்டாட்டமாகவே தொடர்கிறது. அஇஅதிமுகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியவர்களில் பெரும்பாலானோர் தலித் மக்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு பல இடங்களில் இந்த ஆண்டு நடந்த ஆடித் திருவிழாவில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது; ஒரு பிரிவு மக்களின் அரசியல் சாசன உரிமை பறிக்கப்படுவது பற்றி தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட கேள்வி சட்டமன்றத்தில் உள்ளவர்களின் காதுகளில் விழவே இல்லை. அது போன்ற மறுப்பு பற்றி, அந்த மறுப்பை ஒட்டி எழுந்த போராட்டங்கள் பற்றி, தாக்குதல்கள் பற்றி சட்டமன்றத்தில் பேசப்படவே இல்லை.
சாதிவெறி சக்திகளுக்கு தெம்பும் துணிவும் தரும் இந்த நிலைமை மேலும் தாக்குதல்கள் நடக்க வெளி தருகிறது. தஞ்சை மாவட்டத்தின் சன்னாபுரம் கிராமத்தில் நடந்த திருவிழாவின் போது பகுதியின் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் நேரடி நிர்வாகத்தில் இருக்கும் காவல்துறையின் கண் முன்னரே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. காவலர், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துள்ளார். அடுத்து, காவலர்களும் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்களை இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் எஸ்.இளங்கோவன், த.கன்னையன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் மனோகரன் ஆகியோர் சந்தித்து, அவர்கள் போராட்டங்களுக்கு கட்சியின் ஆதரவை தெரிவித்தனர்.
கும்பகோணம் தாலுகாவில் உள்ள சன்னாபுரம் கிராமத்தில் தலித்துகளும் வன்னியர்களும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் தவிர கிறித்துவ வன்னியர்கள், பிள்ளைகள், நாடார்கள், ஒரு சிறு பிரிவு இசுலாமியர்கள் என மொத்தம் 430 குடும்பங்கள் வரை கொண்டது அந்த கிராமம். காலனி தெருவும் (தலித் குடியிருப்பு) குடியானத் தெருவும் (இந்து வன்னியர்கள் குடியிருப்பு) இங்கு முக்கியமான தெருக்களாக உள்ளன.
கிராமத்தில் உள்ள தலித் மக்கள், கிறித்துவ வன்னியர்கள், இசுலாமியர்கள் மத்தியில் சுமுக உறவு நிலவுகிறது. வன்னியர் தெருவில் உள்ள கிறித்துவ தேவாலயத்தில் திருவிழா நடக்கும் போது, சப்பர ஊர்வலம் தலித் மக்கள் வாழும் தெருவுக்குள்ளும் வருகிறது.
இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீவடபத்ரகாளியம்மன் கோயில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அனைத்து பிரிவு மக்களும் கோயிலுக்குள் சென்று வழிபடுவதில் பிரச்சனை ஏதும் இல்லை. சாமி வீதிஉலாதான் இங்கு முக்கிய நிகழ்ச்சி. தீ மிதி, மண்டகப்படி போன்ற சிறப்பு நிகழ்வுகள் கிடையாது. சாமி கோயிலில் இருந்து புறப்பட்டு முதலில் குடியான தெருவுக்கும், பிறகு தலித் தெருவுக்கும் வருவது வழக்கத்தில் உள்ளது.
கோயிலுக்குச் சொந்தமாக பெரிய அளவில் நிலங்களும் சொத்தும் இல்லை. 3 ஏக்கர் நிலம், 1 ஏக்கர் குளம் ஆகியவையே கோயிலின் சொத்துக்கள். குளத்தில் தலித்துகள் குளிப்பதற்கு தடை கிடையாது. குளத்தில் மீன் பிடிப்பதை அனைத்து பிரிவு மக்களும் விகிதாச்சாரப்படி பங்கிட்டுக் கொள்ளும் முறைக்கு சாதி இந்துக்கள் 2005ல் முடிவு கட்டிவிட்டார்கள். தலித்துகளுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. அதனால் தலித் மக்களும் 2005க்கு பிறகு கோயிலுக்கு நன்கொடை தருவதையும் வரி செலுத்துவதையும் நிறுத்திவிட்டார்கள்.
ஆகஸ்ட் 14 அன்று பத்ரகாளியம்மன் சாமி ஊர்வலம் புறப்பட்டு வன்னியர் தெருவுக்குள் வந்து கொண்டிருந்த நேரம், சேரன் என்ற தலித் இளைஞர் இரண்டு சக்கர வாகனத்தில் அங்கு சென்றிருக்கிறார். தனது வாகனத்தை நிறுத்த அங்கிருந்த இரண்டு பேரை சற்று விலகச் சொல்லியிருக்கிறார். அவர்கள் சாதி இந்துக்கள். தலித் ஒருவர் சாதி இந்துவை விலகி நிற்கச் சொல்லலாமா? அவர்கள் இளைஞர்கள் என்றாலும் சாதி வெறியில் மிகவும் பழையவர்களாக இருந்தார்கள். உனக்கு இங்கு என்ன வேலை, உங்கள் தெருவுக்குத்தான் ஊர்வலம் வருமே, அங்கு பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே என்று தலித் இளைஞரை தாக்கியிருக்கிறார்கள்.
தலித் தெருவுக்கு வரும் சாமியை அதற்கு முன்னரே பார்க்க தலித் இளைஞனுக்கு உரிமை இல்லை என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களின் மவுன ஆதரவு சாதியாதிக்க சக்திகளுக்கு இருப்பதால், ஒப்பீட்டுரீதியில் சுமுக நிலை இருக்கும் பகுதிகளில் கூட சாதிவெறி தூண்டப்பட்டு தலித் மக்கள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன.
இந்தத் தாக்குதல் பற்றி அறிந்த தலித் சமூக பிரமுகர் கலியபெருமாள் தலைமையில் 5 பேர் வன்னியர் தெருவுக்கு சென்று கேட்டனர். ஏற்கனவே அங்கு கூடியிருந்த வன்னியர் பிரிவினர் சுமார் 150 பேருக்கும் மேல் சேர்ந்து 5 தலித்துகள் மீது கண்மண் தெரியாமல் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு சாமி உலாவுக்கு பாதுகாப்புக்காக இருந்த காவலர் கண் முன்னே தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதல் பற்றி அறிந்த தலித் மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால், சாமி ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தலித் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை ஒட்டி ஊருக்குள் உடனடியாக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். மறுநாள் காலை மீண்டும் ஒரு தலித் மீது தாக்குதல் நடக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது. அப்போது 20க்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கு வந்த காவல்துறை துணைகண்காணிப்பாளர் பாண்டியன் (கள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்) தலைமையில், தலித் மக்கள் குடியிருப்புக்குள், பெண்கள் உட்பட அனைவர் மீதும் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் ஏவப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தலித் மக்கள் உடைமைகள், பீரோ, தொலைக் காட்சி, இரு சக்கர வாகனங்கள் என அடித்து நொறுக்கப்பட்டு சாதிவெறித் தாக்குதல் அரங்கேறுகிறது.
வன்னிய சாதி வெறியோடு கள்ளர் சாதி வெறியும் சேர்ந்து கொள்ள, தலித் பிரிவைச் சேர்ந்த ஆசிரியர், இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டனர். அந்த மூன்று பேர் மீதும் 307 வழக்கு போடப்பட்டுள்ளது.
சாதி இந்துக்களின் இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு பாமகவைச் சேர்ந்த ராஜவேல், திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன், அஇஅதிமுகவின் நடராஜன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். சாதிவெறியில் அவர்கள் மத்தியில் அரசியல் பேதம் இல்லை. குடந்தை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் (திமுக), அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் பாரதி மோகன், அதிமுக கவுன்சிலர் மஜித் என யாரும் பாதிக்கப்பட்டுள்ள தலித் மக்களை பார்க்கக் கூட செல்லவில்லை. தலித் மக்கள் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகிறார்கள்.
நாடு சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15 அன்று ஆட்சியாளர்கள் வீர உரைகள் ஆற்றிக் கொண்டிருந்தபோதுதான் சன்னாபுரத்தில், வாகனம் நிறுத்த சற்று விலகி நிற்கச் சொன்னதற்காக, தலித் மக்கள் மீது காவல்துறை தாக்குதல் வரை நடத்தப்பட்டுவிட்டது. ஜெயலலிதா அரசின் காவல்துறையினர் சாதியாதிக்க சக்திகளின் சுதந்திரத்தை மட்டும் பாதுகாத்துவிட்டனர்.
இதே நேரத்தில் உனாவில் தலித் மக்கள் உரிமைகளுக்கான குரலும் ஓங்கி ஒலித்தது. தலித் மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு எதிரான காத்திரமான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுப்பெறுகின்றன. தமிழ்நாட்டிலும் தலித் மக்கள் மீது நடக்கும் இது போன்ற தாக்குதல்கள், தலித் மக்கள் தங்கள் உரிமைகளை இனியும் விட்டுத் தர தயாராக இல்லை என்பதையும் அவற்றை அவர்கள் மேலும் வலுவாக அறுதியிடுகிறார்கள் என்பதையும் காட்டுகின்றன. தமிழக சட்டமன்றம் இன்றில்லாவிட்டாலும் நாளை தலித் மக்கள் போராட்டங்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

Search