தமிழ்நாட்டில் இருக்கும் தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
கர்நாடகம் பற்றியெரிகிறது. தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தொடர்ந்த மறுசீராய்வு மனுவிலும் அந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் நடக்கும் வெறிவாதக் கலவரங்கள் மேலும் உக்கிரம் அடைந்துள்ளன.
முதல் கட்டத்தில் விவசாயிகள் களத்தில் இருந்தனர். இப்போது கன்னட வெறிவாத அமைப்புகளும் எரியும் வீட்டில் புகுந்துகொண்டு ஆதாயம் தேடப் பார்க்கின்றன. அங்கு வாழும் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். பிழைப்புக்காகச் சென்றுள்ள தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த முறை இந்தத் தாக்குதல்களில் தாக்குதல்களை விட தமிழர்களை அவமானப்படுத்து வது மேலோங்கியதாக இருக்கிறது. கன்னடம் பேசு, கன்னடம் படி, காவிரி கர்நாடகத்துக்கே என்று கன்னடத்தில் சொல் என்று வன்முறை கும்பல் சூழ்ந்து கொண்டு கட்டாயப்படுத்துகிறது.
முதல் கட்டத்தில் விவசாயிகள் களத்தில் இருந்தனர். இப்போது கன்னட வெறிவாத அமைப்புகளும் எரியும் வீட்டில் புகுந்துகொண்டு ஆதாயம் தேடப் பார்க்கின்றன. அங்கு வாழும் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். பிழைப்புக்காகச் சென்றுள்ள தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த முறை இந்தத் தாக்குதல்களில் தாக்குதல்களை விட தமிழர்களை அவமானப்படுத்து வது மேலோங்கியதாக இருக்கிறது. கன்னடம் பேசு, கன்னடம் படி, காவிரி கர்நாடகத்துக்கே என்று கன்னடத்தில் சொல் என்று வன்முறை கும்பல் சூழ்ந்து கொண்டு கட்டாயப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் வெறிவாதம் தலைதூக்கவில்லை. சமூக ஊடகங்களில் சட்டம், நீதி, அமைதி என்று நல்லெண்ணக் குரல்கள் எழுகின்றன. ஏதோ பழைய தமிழ்ப்பட காட்சியை எடுத்து ஓட விடுகிறார்கள். உங்கள் மக்கள் எங்கள் பகுதியில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது உட்பட அந்தக் காட்சி பேசுகிறது. (தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை பற்றி, அந்தப் படத்தில் தமிழராக நடிக்கும் ஒரு மலையாள நடிகர் பேசுவது போன்ற காட்சி அது).
கர்நாடகாவில் தமிழ்நாட்டின் 65 தனியார் பேருந்துகள் தீயில் கொளுத்தப்பட்டு நாசமாகிவிட்டதையும் தமிழ்நாட்டில் கர்நாடகாவின் பேருந்துகளுக்கும் கர்நாடக வங்கிக்கும் காவல் துறையினர் பாதுகாப்பு தருவதையும் தொலைக்காட்சி அலைவரிசைகள் அக்கம்பக்கமாக காட்டுகின்றன. அதாவது, கர்நாடக அரசு தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கவில்லை, கட்டுப்படுத்தவில்லை, தமிழக அரசு மிகவும் நியாயமாக நடந்து கொள்கிறது என்று தோற்றம் உருவாக்கப் பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டின் நீராதாரங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தால், மேம்படுத்தப்பட்டிருந்தால் இந்த மொத்த கொந்தளிப்பையுமே தவிர்த்திருக்க முடியும் என்று ஜெயலலிதா அரசாங்கத்துக்கு மிக நன்றாகத் தெரியும். இப்போது, தமிழக, கர்நாடக, மத்திய ஆட்சியாளர்கள், முதலாளித்துவ கட்சிகள் எதை எதிர்ப்பார்த்தார் களோ, மிகச்சரியாக அது நடந்துகொண்டிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் நியாயமாக நடந்து கொள்ளவே இல்லை. ராமதாஸ் 356 வரை போய்விட்டார். வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு இப்போது விசயமும் கிடைத்துவிட்டது.
தமிழ்நாட்டின் சட்டபூர்வமாக உரிமையான நீரில் ஒரு பகுதியை தருவதையும் அங்குள்ள விவசாயிகள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. இருக்கிற தண்ணீரை இரண்டு மாநிலங்களும் சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண் டும் எனும்போது, அங்கும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதுதான். நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனிடம் இல்லாதவர்கள் இயற்கையிடமும் கையேந்த வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லி பழக்கப்பட்டவர்கள் நாம். கர்நாடகா நமது ஊர் என்றும் அங்குள்ள விவசாயிகள் நமது கேளிர் என்றும் இன்று நம்மால் சொல்ல முடியவில்லை. தனக்கு மிஞ்சி தர்மம் என்பது மேலோங்கி நிற்கிறது. அவர்களும் அப்படியே கருதுகிறார்கள். அவர்களுக்கு மிஞ்சவில்லை. நமக்கு இல்லவே இல்லை. அவர்கள் குடிக்கத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்கள். நமக்கு நமது உடனடி விவசாயத்தைக் காக்க உடனடியாக தண்ணீர் வேண்டும். தீர்ப்பாயத்தின் உத்தரவு அமலாக வேண்டும். காவிரி மேலாளுமை வாரியம் அமைக்கப்பட்டு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டாக வேண்டும். காவிரியில் நமது உரிமையானது வேண்டும். நிச்சயம் வேண்டும். மொழிவெறியோ, இனவெறியோ வேண்டாம்.
செப்டம்பர் 3 அன்று, காவிரி நீர் கேட்டு தமிழ்நாட்டு விவசாயிகள் நடத்திய போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, நாகை மாவட்டம், கடலங்குடியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். தண்ணீர் கிடைக்காமல் அவர் வைத்த பயிர் வாடிப் போனதால் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர் விவசாயம் செய்த பயிரில் பாதியை அறுவடை செய்து விட்டு மீதியையும் அறுவடை செய்ய தயாராகிக் கொண்டிருந்தபோது, அந்த மீதப் பயிர் மழையில் மூழ்கிப் பாழாகிப் போனது. தண்ணீர் தேங்கியவுடன் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்திருக்கிறார். அவருக்கு அதற்கான பணம் இல்லை. கடனும் கிடைக்கவில்லை. மீதமுள்ள பயிர் போனால் வாங்கிய கடனையும் திருப்ப முடியாமல் போகும் என்பதால் தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.
அதிகப்படியான தண்ணீர் தேங்கியதால், அது வடிந்து செல்ல வழியில்லாததால், அதனால் பயிர் மூழ்கியதால் இந்தத் தற்கொலை நடந்துள்ளது. டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் தனபால் இந்தத் தற்கொலை பற்றி பேசியபோது தமிழக அரசு ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீரை சேமித்து வைக்க வேண்டும் என்றார். இது போன்ற கோரிக்கையை டெல்டா விவசாயிகள் இதற்கு முன்பும் எழுப்பி உள்ளார்கள்.
தமிழக விவசாயிகள் காவிரி நீரில் தங்கள் பங்கைக் கேட்டு போராடிக் கொண்டிருந்த போது, நெல்லையில் விவசாயிகள் கூட்டம் ஒன்றில் பேசிய அன்புமணி, தமிழக அரசு தடுப்பணைகள் கட்டுவதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை என்றார். தனது எல்லைக்குள் 32 கி.மீ மட்டுமே ஓடும் பாலாற்றில் ஆந்திர அரசாங்கம் 22 தடுப்பணைகள் கட்டியுள்ளதாகவும் 250 கி.மீக்கு பாலாறு ஓடும் தமிழ்நாட்டில் ஒரே ஒரு தடுப்பணைதான் கட்டப்பட்டுள்ளதாகவும் அந்த ஒன்றும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்றும் சொன்னார்.
வைகை அணையை தூர் வார அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து 2014ல் இருந்து வழக்கு நடக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்டும் மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரத்தை கொண்டுள்ள அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. வைகை அணையை தூர் வாரினால் 72 அடி உயரத்துக்கு கூடுதலாக தண்ணீர் சேமிக்க முடியும் என்று வழக்கு தொடுத்தவர்கள் சொல்கிறார்கள். கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்துவிட்டதற்கு எதிரான கர்நாடக விவசாயிகள் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, செப்டம்பர் 8 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விவசாயிகள் தரப்பிலும், பாமக போன்ற, காவிரி பிரச்சனையில் அரசியல் குளிர் காயப் பார்க்கும் முதலாளித்துவ கட்சிகள் தரப்பிலும் கூட, தமிழ்நாட்டுக்குள் நீர்வளப் பாதுகாப்புக்கு வழியேதும் செய்யப்படவில்லை என குரல்கள் வலுவாக எழத் துவங்கிவிட்டன.
பாமக இந்தக் கேள்வியை தைரியமாக எழுப்பலாம். ஏனென்றால் ஒரு நாளும் அவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப் போவ தில்லை. பல முறை ஆட்சியில் இருந்த கருணாநிதி இந்தக் கேள்வியை எழுப்ப மாட்டார். அவரும் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தவரே. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கர்நாடகம் காவிரி நீரைத் திறந்து விட்டு, அது தமிழ்நாடு வந்த பிறகும், தமிழ்நாட்டுக்கு பாத்தியதைப்பட்ட நீரைப் பெற வேண்டும் என்கிறார். மட்டுமின்றி தமிழ்நாட்டுக்குள் இருக்கும் நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் சொல்ல முடியாது. சொன்னால் அவரது கட்சிக்காரர்கள் நடத்திய ஆக்கிரமிப்பில் காணாமல் போன நீர் சேமிப்பு நிலைகள் பற்றியும் அவர் பதில் சொல்ல நேரும்.
கடந்த அய்ந்து ஆண்டுகளாகவும், அதற்கு முன்பு ஆட்சியில் இருந்தபோதும், விவசாயிகள் துன்பத்தில் எப்படி குளிர் காய்ந்தாரோ, அதே போல் இப்போதும் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. போதுமான அளவுக்கு கடிதங்கள் எழுதிவிட்டு, வழக்குகள் போட்டு விட்டு போயஸ் தோட்டத்தில் ஓய்வு எடுத்தபடி நடப்பதை வேடிக்கை பார்க்கிறார்.
என்ன என்ன நல்ல திட்டங்களைத் தீட்டி தமிழக மக்களுக்கு என்ன என்ன நல்லது செய்யலாம் என்று எப்போதும் சிந்தித்தும் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் வேண்டும் என்பது பற்றி மட்டும் ஏன் சிந்திக்காமல் இருக்கிறார் என்று நமக்கு கேள்வி எழுகிறது. இது புதிய பிரச்சனையும் அல்லவே. கடிதம் எழுதுவது, வழக்கு போடுவது ஆகியவற்றுக்கு அப்பால் உருப்படியான நடவடிக்கை எதுவும் ஏன் எடுப்பதில்லை? கடல்நீரை குடி நீராக்கும் திட்டம் பற்றி பேசும் ஜெயலலிதா அரசு கடலில் வீணாகக் கலக்கும் நீரை சேமித்து வைத்து விவசாயத்துக்கும் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்துவது பற்றி ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது? ஏன் திட்டமிடக் கூட மறுக்கிறது?
அப்படிச் செய்தால் இரண்டு இழப்புகள் அவருக்கு நேரும். காவிரி பெயரால் அரசியல் செய்ய முடியாமல் போகும். நீர்வளத்தைப் பாது காப்பதற்காக திட்டங்களை அறிவித்துவிட்டு, நிதி ஒதுக்கிவிட்டு வேலை நடந்ததாகக் காட்டி, அல்லது வேலையே செய்யாமல் நிதியை வேறு பக்கம் திருப்பிவிட முடியாமல் போகும். இந்த இரண்டும் கருணாநிதிக்கும் பொருந்தும்.
காவிரி நீர் பற்றி தீவிரமாகக் குரல் எழுப்பி விட்டு, நீராதாரங்களை அழிக்கிற, நீர்வளத்தைப் பாதுகாக்க, பெருக்க தவறிய, தவறுகிற தமிழக ஆட்சியாளர்களை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல் விட்டுவிடுகிற சில அமைப்புகளுக்கும் இதில் ஒரு வசதி உள்ளது. தமிழக மக்கள் நலன்களுக்காக பேசியதுபோலவும் ஆனது; தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் தவிர்த்ததுபோலவும் ஆனது. அப்பால் உள்ள கர்நாடக அரசை, அது காங்கிரசோ, பாஜகவோ, மத்தியில் இருக்கிற அரசை அதுவும் காங்கிரசோ, பாஜகவோ, தீவிரமாக எதிர்த்துவிட்டுப் போய் விடலாம். இதை, அந்த அமைப்புகள் வசதி கருதி செய்வது இல்லை என்றாலும், உண்மையிலேயே தமிழக மக்கள் நலன் காக்கவே குரல் எழுப்புகின்றன என்றாலும், விளைவு, இப்போது வந்ததுபோல் கொஞ்சம் தண்ணீர், நிறைய பகை மற்றும் விவசாயிகளை வைத்து பகடை ஆடும் ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பு என்றே இருக்கும். இதுவரை இப்படி இருந்துள்ளதைத்தான் நாம் பார்த்து வருகிறோம். தமிழக விவசாயிகளுக்கு அனைத்து விதங்களிலும் துரோகம் இழைத்தவர்கள், இழைப்பவர்கள் சாதனைப் பட்டியலை சற்று நீட்டிக் கொள்கிறார்கள். செய்த துரோகத்தின் பழியில் இருந்து தப்பித்து விடுகிறார்கள். அதன் மூலம் அடுத்து அதே துரோகத்தைத் தொடர துணிச்சல் பெற்றுவிடுகிறார்கள். காவிரி விசயத்தில், தமிழ்நாட்டின் நீர்பாசன விசயத்தில் பல பத்தாண்டுகளாக இது நடந்துகொண்டிருக்கிறது. விவசாயிகள் விரோத கொள்கைகளை அமல்படுத்தும் மத்திய, மாநில அரசுகள் தப்பித்துக் கொள்ள, விவசாயிகள் படும் துன்பம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கிறது.
காவிரிதான் டெல்டா விவசாயிகளுக்கு இருக்கிற ஒரே நீராதாரம் என்று மீண்டும் மீண்டும் உறுதியாகச் சொல்வதன் மூலம் அடைக்கப்பட்ட பிற வழிகளை நிரந்தரமாக அடைக்கும் வேலையையே ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். தங்கள் பொறுப்பின்மையை மறைத்து, நியாயப்படுத்தி, மக்கள் சீற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் பார்க்கிறார்கள். கர்நாடகம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், கர்நாடகத்தில் உள்ள தமிழக சாமான்ய மக்கள் அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், மக்கள் மத்தியில் முரண்பாடுகள் வளர்ப்பதில் தேர்ந்தவரான மோடி தாமதமாக பேசிய நேரத்தில், அணை பாதுகாப்பு மசோதா பற்றி ஜெயலலிதா கடிதம் எழுதுகிறார். தமிழக மக்கள் மீது விவசாயிகள் மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ள இன்னொரு ஏமாற்று நாடகத்துக்கான களத்தை தயார் செய்கிறார். சிறுவாணி, அணைப் பாதுகாப்பு மசோதா என இன்னும் சில நாட்களை அவர் கடந்துவிடுவார். பற்றியெரிகிற பிரச்சனைகள் அப்படியே தொடரும். மேலும் தீவிரமடையும்.
கர்நாடகமோ, கேரளாவோ, ஆந்திராவோ தங்கள் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டுவதால் மட்டும் தமிழ்நாடு பாலைவனமாகிவிடாது. தமிழக ஆட்சியாளர்கள் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு, நீராதாரங்களை அழிப்பவர்களுக்கு துணையாய் நின்று, நீர்வளத்தைப் பாது காக்க, மேம்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதாலும், அந்த நடவடிக்கைகளின் பெயர்களில் ஒதுக்கப்படும் நிதியை ‘பாதுகாப்பான இடங்களில்’ வைத்துவிடுவதாலும் கூட தமிழ்நாடு பாலைவனமாகிப் போகும்.
பாசன வசதியை மேம்படுத்த, நீராதாரங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று கேட்டால் ஜெயலலிதா பெரிய பட்டியல் தரத் தயாராக இருப்பார். அந்தச் சாதனைகளை விளக்க ஒரு சட்டமன்ற கூட்டத் தொடர் போதாது என்பார். விவசாயிகள் தற்கொலைகளை சொந்தப் பிரச்சனை, வயிற்றுவலி என்று கொச்சைப்படுத்தி கடுமையான துன்பத்தில் இருக்கும் அவர்களை கேலி செய்வார். ஜெயலலிதா சட்டமன்றத்துக்கு உள்ளும் சட்டமன்றத்துக்கு வெளியிலும் என்னதான் அறிவிப்புகள் செய்தாலும் அவை வெற்று அறிவிப்புகள் என்பதால் அவற்றால் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் எதுவும் ஏற்படுவதில்லை. இப்போது இதை மத்திய தணிக்கையாளரும் சொல்லியிருக்கிறார்.
மத்திய தணிக்கையாளர் தமிழ்நாட்டின் நிதி நிலைமைகள் பற்றி முன்வைத்துள்ள 2015 மார்ச் 31 தேதி வரையிலான அறிக்கை, கடந்த ஜெயலலிதா ஆட்சி அனைத்து அம்சங்களிலும் தோற்றுப் போன ஆட்சி என்கிறது. அம்மா உணவகங்களால் நட்டம். 2012 - 2017 விவ சாயத்துக்கு அய்ந்தாண்டு திட்டமே தயாராகவில்லை. பள்ளிக்கூட கட்டிடங்கள் அறிவிக்கப்பட்டதுபோல் கட்டப்படவில்லை. மோனோ ரயில் திட்டம், கூவம் மறுசீரமைப்பு திட்டங்களுக்கான நிதி திருப்பியனுப்பப்பட்டது. மடிக்கணினி வாங்கியதில் முறைகேடு. மின்வாரியம் மின்கடத்தல் கட்டணத்தைப் பெறுவதில் முறைகேடு..... துரோகம் வெளுக்கப்பட்டது. (இதில் ஒரு விசயத்தை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது இல்லை. நூறு நாட்கள் வேலைத் திட்டம், காங்கிரஸ் அரசின் தோல்விக்கு சாட்சி என்று மோடி சொன்னது போல், அம்மா உணவகம் ஜெயலலிதா அரசின் தோல்விக்கு சாட்சி. மறுபக்கம், முறைகேடுகளுக்கு அப்பால், ஏதிலிகளுக்கு உணவையாவது உறுதிப்படுத்தும் ஒரு திட்டம் நட்டத்தில் இயங்கினால் எந்தப் பொருளாதாரப் பதட்டமும் நிகழ்ந்துவிடாது).
மகப்பேறு விடுப்பு 9 மாதங்கள் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். வேறு எந்த மாநில முதலமைச்சராவது அருகில் நெருங்க முடியுமா? பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களிலும் தமிழ்நாட்டை வேறு யாரும் எளிதில் நெருங்கி விட முடியாதபடி கூடுதல் எண்ணிக்கையுடன் இருப்பதை தேசிய குற்றங்கள் ஆவண அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. காதலித்த பெண் மறுத்தால் மட்டும் அல்ல, காதலுக்கு மறுப்பு தெரிவித்த தாய்க்கும் இங்கு அரிவாள் வெட்டு. அறிவிப்பதொன்றும் நடப்பது வேறொன்றுமாக இருக்கும் ஜெயலலிதா ஆட்சி, தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு துவக்கத்தில் சென்னையும் கடலூரும் தண்ணீரில் மூழ்கியதை ஒட்டி, நீர் வளங்களை பாதுகாக்கும் எளிமையான மற்றும் இயற்கையான வழிகள், வாய்ப்புகள் காலகாலமாக இருந்தது பற்றி, அந்த வழிகளும் வாய்ப்புகளும் அடைக்கப்படுவது புறக்கணிக்கப்படுவது பற்றி, தமிழ்நாட்டின் அடுத்தடுத்த அரசாங்கங்கள் நீர்ப் பாசனம் என்ற பொறுப்பில் தமிழக விவசாயிகளை தொடர்ந்து கைவிட்டுவிட்டது பற்றி பொது வெளியில் போதுமான அளவுக்கு மிகவும் விரிவாக, குறிப்பாக எழுதப்பட்டது. இருக்கிற நீர்வளத்தைப் பாதுகாப்பது பற்றி, கடலில் வீணாகக் கலக்காமல் சேமிப்பது பற்றி திட்டமிட ஜெயலலிதாவுக்கு விவரங்கள் வேண்டும் என்றால், அவர் எடுத்துக் கொள்ளலாம். அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பெரிய பெரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் உத்தரவாதப்படுத்த முடிந்தது என்றால், இன்று அறிவியல், தொழில்நுட்பம், திரும்பும் திசை எல்லாம் நிதி என எல்லாம் இருக்கும்போது, விவசாயத்தை, விவசாயிகளைக் காப்பது, ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்கு இருக்கும் அரசியல் விருப்பத்தை, தயார்நிலையை மட்டுமே கோருகிறது. இதற்குக் குறைவாகவோ, கூடுதலாகவோ எதுவும் இல்லை.
(மாலெ தீப்பொறி 2016 செப்டம்பர் 16 – 30 தொகுதி 15 இதழ் 4)