உதய் திட்டம்
கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை அமலாக்கத்தில் கைகோர்த்து முன்செல்லும் மத்திய மாநில அரசுகள்
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழ்நாடு வந்த பாஜக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், மாநில முதல்வரை யாரும் சந்திக்க முடிவதில்லை என்றும் அதனால் தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய மத்திய அரசின் சில நல்ல திட்டங்களை கொண்டு சேர்க்க முடிவதில்லை என்றும் சொன்னார்.
அஇஅதிமுகவினர் அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பியுஷ் கோயல் சொல்லும் உதய் திட்டம் தமிழக மக்களை பாதிக்கும் என்பதால் அதில் சேரவில்லை என்று அப்போது அதிமுகவினர் சொன்னார்கள்.
அஇஅதிமுகவினர் அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பியுஷ் கோயல் சொல்லும் உதய் திட்டம் தமிழக மக்களை பாதிக்கும் என்பதால் அதில் சேரவில்லை என்று அப்போது அதிமுகவினர் சொன்னார்கள்.
தேர்தல் நேரத்தில் திட்டம் வேண்டாம் என்று சொல்லப்பட்டுவிட்டது. அப்போது தமிழக மக்கள் நலன் காப்பது போன்ற தோற்றம் எல்லா சாத்தியமான விதத்திலும் தர வேண்டியிருந்தது. இப்போது வலுவான ஆட்சி அமைத்தாகிவிட்டது. அடுத்த அய்ந்து ஆண்டுகளுக்கு என்னமும் செய்யலாம், இடையில் ஒரு உள்ளாட்சித் தேர்தல், மூன்று ஆண்டுகள் கழித்து ஒரு மக்களவை தேர்தல், பார்த்துக் கொள்ளலாம் என்று ஜெயலலிதா திட்டமிட்டு இருக்க வேண்டும். இப்போது திட்டத்தில் இணைவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது. எரிசக்தித் துறை அமைச்சர் பி.தங்கமணி, ஒரு குழுவுடன் டில்லி சென்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை சந்திக்க உள்ளார்.
2016 ஏப்ரல், மே மாதங்களில் தமிழக மக்க ளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக இருந்த ஒரு திட்டம், அதனால் ஒப்புக்கொள்ளப்படாத ஒரு திட்டம், 2016 செப்டம்பரில் எப்படி ஒப்புக் கொள்ளப்படுகிறது? தமிழக மக்களுக்கு பாதிப்புகள் உருவாக்கும் அம்சங்கள் உதய் திட்டத் தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனவா?
நவம்பர் 20, 2015 அன்று மத்திய எரிசக்தி அமைச்சகம் உதய் திட்டத்தை (மின்பகிர்மான கழகங்கள் ஒளிர்வதை உறுதி செய்யும் திட்டம்) அறிவித்தது. இந்தத் திட்டம் முன்வைத்துள்ள இலக்குகள் மார்ச் 31, 2019க்குள், அதாவது பாஜக அரசாங்கம் அதன் ஆட்சிக் காலத்தை முடிப்பதற்குள், எட்டப்பட வேண்டும் என்று அறிவிப்பாணை சொல்கிறது.
நாடு முழுவதும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மின்பகிர்மான நிறுவனங்கள் பெரும் கடனில் உள்ளன. இது அடுத்தடுத்து கூடுதல் நிதிச்சுமைக்கு, கூடுதல் கடனுக்கு இட்டுச் செல்கிறது. இந்தக் கடன் சுமையில் இருந்து அவற்றை மீட்டு அவற்றின் நிதிரீதியான செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவது திட்டத் தின் நோக்கம் என்றும் இதற்காக, மின்பகிர்மான நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவது, மின்உற்பத்திச் செலவைக் குறைப்பது, மின்பகிர்மான நிறுவனங்களின் வட்டிச் சுமையை குறைப்பது, மின்பகிர்மான நிறுவனங்களின் நிதிரீதியான செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவது ஆகியவை உறுதி செய்யப்படும் என்று திட்டம் சொல்கிறது.
செப்டம்பர் 30, 2015 தேதி நிலவரப்படி உள்ள மின்பகிர்மான நிறுவனங்களின் 75% கடனை திட்டத்தில் சேரும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும். அதில் 50% 2015 - 2016லும் 50% 2016 - 2017லும் ஏற்றுக்கொள்ளும். இது, நிதிப்பற்றாக்குறை கணக்கில் காட்டப்பட மாட்டாது. (அதாவது, மாநில அரசுகள் தமது வேறு சில திட்டங்களுக்கு இன்னும் கூடுதல் கடன் வாங்கிக் கொள்ளலாம்). இந்தத் தொகைக்கு மாநில அரசுகள் கடன் பத்திரங்கள் வழங்கும். மின்பகிர்மான நிறுவனத்தின் மீதமுள்ள 25% கடனுக்கு அந்த நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் தரலாம். இதன் மூலம் மின் பகிர்மான நிறுவனங்கள் தர வேண்டிய வட்டி மிச்சமாகும். இதன் மூலம் மின்பகிர்மான நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ளலாம்.
உதய் திட்டம் முன்வைக்கிற இலக்குகளை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உதவி தரப்படும். கூடுதல் நிலக்கரி கிடைக்கும். நிறைவேற்றவில்லை என்றால் இந்தச் சலுகை கிடைக்காது. தேசிய அனல்மின் நிலையம் மற்றும் பிற பொதுத்துறை மின்உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கிக் கொள்ள முடியும்.
திட்டம் மாநில அரசுகளின் மின்பகிர்மான நிறுவனங்களுக்கு மட்டும்தான். தனியார் மின் பகிர்மான நிறுவனங்களுக்கு அல்ல. (தனியார் கடன்களை அரசு ஏற்கட்டும் என்று நேரடியாக சொல்லும் அளவுக்கு இன் னும் ஆட்சியாளர்களுக்கு துணிவு பிறக்கவில்லை). திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு மார்ச் 31, 2016 என்று இருந்தது. மார்ச் 31, 2017 என இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
என்ன பிரச்சனை, நல்ல திட்டம்தானே, சேர்ந்தால் என்ன என்று சாமான்யர்களுக்கு தோன்றலாம். இது வரை 15 மாநிலங்களும் 1 யூனியன் பிரதேசமும் சேர்ந்துவிட்டன. இவற்றில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் உண்டு. கட்சி பேதம் பாராமல் சேர்ந்திருப்பதால் இது நல்ல திட்டம் ஆகிவிடுமா?
மேற்குவங்கம் திட்டத்தில் சேர மறுக்கிறது. மாநில உரிமைகளைப் பறிக்கும் திட்டம் என்று காரணம் சொல்கிறது. அது மட்டும்தான் காரமாக இருக்க முடியுமா? அப்படியானால் மாநில அரசு உரிமைகள் பறிபோனால் போகட்டும் என்று ஜெயலலிதா தலைமையிலான அரசு கருதுகிறதா? நவதாராளவாதக் கொள்கைகளை தீவிரமாக அமலாக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லக்குத் தூக்குகிற பாஜக அரசுதான் ஒரு நல்ல திட்டத்தை முன்வைத்து விடுமா?
திட்டம் சில நிபந்தனைகள் போடுகிறது. அவற்றில் ஒன்று, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. இந்த ஒரு நிபந்தனை, பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு முகத்தை காட்டிவிடுகிறது. மக்களுக்கு பாதிப்பு உருவாக்கும் என்று சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அஇஅதிமுக சொன்னது இந்த நிபந்தனை பற்றித்தான். இப்போது இந்த நிபந்தனையில் ஓரளவு தளர்வு செய்துகொள்ள மத்திய அமைச்சகம் முன்வந்திருக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்பதற்குப் பதிலாக ஓராண்டுக்கு ஒரு முறை என்று அதை மாற்றிக் கொள்ளலாம் என்று ‘உறுதி’ தரப்பட்டுள்ளது.
மின்பகிர்மான நிறுவனத்தின் கடனை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்போது, அதை நிதிப்பற்றாக்குறையாக மத்திய அரசு கணக்கில் கொள்ளாது என்ற சலுகை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே. அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது அஇஅதிமுக அரசின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு இப்போதும் ஏற்கவில்லை.
திட்டத்தில் இணைந்துள்ள 12 மாநில மின் பகிர்மான நிறுவனங்களின் மொத்த கடன் 2015 செப்டம்பர் 30 அன்று ரூ.4 லட்சம் கோடி. இந்தக் கடன்கள் எல்லாம் 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து முதிர்ச்சி பெறும் கடன் பத்திரங்களாக மாற்றப்பட்டால், கடன் தந்த நிறுவனங்களின் ஆரோக்கியம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தந்து நட்டமாகும்போது அரசு நிறுவனங்களுக்குத் தந்து நட்டமானால் என்ன என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. அப்படியானால், இந்தக் கடன்களை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய அவசியமே எழ வில்லை. தமிழ்நாடு மின்பகிர்மான நிறுவனத்தின் கடனில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ள ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசு நிதி ஒதுக்குகிறது. நோக்கம் இந்த நிறுவனங்கள் செயல்பாட்டை மேம்படுத்துவதாகத் தெரியவில்லை. முடக்குவதாகத் தெரிகிறது.
வங்கிகளோ, பிற நிதிநிறுவனங்களோ இனி மின்பகிர்மான நிறுவனங்களுக்கு கடன் வழங்காது. இந்தத் திட்டத்திலும் தேறாமல் போய், மாநில அரசின் மின்பகிர்மான நிறுவனம் மேலும் நிதி தேவை என்ற நிலை ஏற்பட்டால், அது நாசமாகிப் போகும். மாநில அரசின் மின்பகிர்மான நிறுவனம் நாசமாகிப் போனால், தனியார் மின்பகிர்மான நிறுவனங்கள் அந்தச் சந்தையைப் பிடித்து ஆட்டும். வறிய விவசாயிகளுக்கு, வறிய மக்களின் குடிசை வீடுகளுக்கு, சிறுதொழில் முனைவோருக்கு தரப்படும் சலுகைகள், தமிழக மக்கள் இப்போது பெற்றுக்கொண்டிருக்கிற நூறு யூனிட் கட்டணமில்லா மின்சாரம் எல்லாம் மெல்ல மெல்ல காற்றில் கரைந்து போகும்.
இன்றைய நிலைமைகளில் உதய் திட்டத்தில் சேர்ந்த மாநிலங்களில் ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர், அரியானா மாநிலங்கள் மொத்த இழப்பை குறைக்க திட்டம் முன்வைத்த இலக்குகளை எட்டவில்லை. பஞ்சாப், பீகார் மாநிலங்கள் இலக்குகளை எட்டியுள்ளன. திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ப மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் சொல்கிறது. அப்படிச் செய்தும் இந்த மாநிலங்கள் இலக்கை எட்டவில்லை என்பது தெரிகிறது. திட்டம் இப்போது சொல்கிற வட்டிச் செலவு குறைப்பு போதுமானது அல்ல என்று ஃபிட்ச் என்ற தரநிர்ணய நிறுவனம் சொல்கிறது.
தொழில்நுட்ப மற்றும் வர்த்தகரீதியான மொத்த இழப்பை 2018 - 2019ல் 15% குறைத்திருக்க வேண்டும் என்றும் 2018 - 2019ல் சராசரி மின்விநியோகச் செலவுக்கும் ஈட்டப்பட்ட சராசரி வருவாய்க்கும் இடையிலான இடைவெளி பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்றும் திட்டம் சொல்கிறது. மின்பகிர்மான நிறுவனங்கள் இவற்றைச் செய்வதற்கான ஒரே வழி மின்கட்டணத்தை உயர்த்துவதுதான். உதய் இறுதியில் இங்குதான் வந்து நிற்கிறது.
தமிழ்நாட்டின் மின்பகிர்மான கழகத்தின் கடன்கள் பற்றி ஆண்டுக் கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறோம். இன்றைய தேதியில் அது ரூ.81,782 கோடி என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. கருணாநிதியும் ராமதாசும் அது ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் என்கிறார்கள். இதில் பாதிக்கடன்தான் பகிர்மானம் தொடர்பானது. மீதக்கடன் மின்உற்பத்தி தொடர்பானது. பகிர்மானத்துக்கான கடன் மட்டும்தான் உதய் திட்டத்தின் கவலை. கடன் மறுகட்டமைப்பு செய்யும் உதய் திட்டம் போன்ற ஒன்றின் மூலம் தமிழ்நாடு அரசு 2012 முதல் தமிழக மின்பகிர்மான நிறுவனத்தின் நிதிச் சுமையைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாகச் சொல்கிறது. வங்கிகளிடம் கடன் வாங்கி மின்பகிர்மான நிறுவனத்தின் கடன்கள் மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன. இப்படி எல்லாம் செய்த பிறகும் மின்பகிர்மான கழகம் கடுமையான நிதி நெருக்கடியில்தான், கடனில்தான் உள்ளது.
ஏன் இந்தக் கடன் சேர்ந்தது? தனியார் நிறுவனங்களிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கியதால் வந்தது என்று இன்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். இவ்வளவு கடன் சேர்ந்த பிறகும், அதானியிடம் மிகக் கூடுதல் விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது பற்றியும் தமிழ்நாட்டின் சாமானிய மக்களுக்குத் தெரியும்.
அடுத்த அய்ந்து ஆண்டுகளில் ரூ.90,440 கோடி செலவில் பல்வேறு புனல் மற்றும் அனல் மின்உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தமிழக அரசு சொல்கிறது. மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடனில் இருக்கும்போது, அந்தக் கடன்களையும் அரசு ஏற்று இருக்கும்போது, கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி யார் தருவார்?
தமிழ்நாடு மின்உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டது, மின்மிகை மாநிலமாகிவிட் டது என்று ஜெயலலிதாவும் அஇஅதிமுகவினரும் சத்தம்போட்டு, மேசை தட்டி சொல்லும்போது, இதற்கு மேல் பிற மாநிலங்களிலும் தனி யாரிடமும் ஏன் மின்சாரம் வாங்க வேண்டும்? பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மின்இணைப்புக்கு விண்ணப்பித்துவிட்டு ஏன் காத்திருக்க வேண்டும்? கூடுதல் விலையில் மின்சாரம் வாங்கப்படுவதை கேள்விக்குள்ளாக்கும் கருணாநிதியும் ராமதாசும் தன்னிறைவு பெற்றுவிட்டபின் ஏன் வெளியில் வாங்க வேண்டும் என்று ஏன் கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் தெரிந்து நமக்குத் தெரியாமல் இருக்கும் விசயம் அதில் என்ன? தனியாரிடம் வாங் குவதை எல்லாம் சேர்த்துத்தான் மின்மிகை என்று ஜெயலலிதா சொல்கிறாரா? அதிகாரபூர்வ விவரம் அப்படிதான் காட்டப்பட வேண்டுமா? அதனால் அப்படி காட்டுகிறார்களா? அது உண்மை என்றால் அப்படி காட்டுவதும் தவறுதானே. இதில் மிகையும் தன்னிறைவும் எங்கே உள்ளன? தன்னிறைவு பெற்றுவிட்டது என்றால் கூடுதல் மின்உற்பத்தித் திட்டங்கள் எதற்கு? பிறகு அந்த அணுஉலைகள் எதற்கு? (அய்யோ.... எங்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்....) இப்படி ஓர் உண்மை இருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் எரிசக்தி துறை பற்றி ஆட்சியாளர்கள் தரப்பில் சொல்லப்படுவது அனைத்தும் பொய், பொய்யைத் தவிர வேறு எதுவும் இல்லை.
தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் 2014 - 2015ல் இருந்ததை விட ரூ.4,214 கோடிக்கு 2015 - 2016 வருவாய் இழப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சொல்கிறது. அடுத்த நிதியாண்டில் இன்னும் ரூ.2,000 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது உதய் மூலமா அல்லது ஏற்கனவே இருக்கிற ஏற்பாடு மூலமா என்று சொல்லப்படவில்லை.
இப்போதும், இதுவரை மின்பகிர்மான கழகத்துக்கு அரசு தந்துள்ள கடன் ரூ.6,223 கோடி. தமிழ்நாட்டு ‘தரங்களுக்கு’ இது ஒரு பெரிய தொகையே இல்லை. ஓர் ஓட்டை போட்டு சில கோடிகளை எடுத்துச் சென்றுவிட முடிகிறது. சரியான ஆவணங்களே இல்லாமல் பலநூறு கோடிகள் சாலைகளில் இங்குமங்கும் செல்கின்றன. அதனால் தமிழக அரசே இன்னும் கடன் தரலாம். மொத்த கடனையும் கூட தீர்த்து விடலாம் இந்தக் கடன் ஒரு சுமை என்று சொல்லி, ஆண்டுக்கொரு முறை மின்கட்டணத்தை மாற்றியமைப்பதை நிபந்தனையாக்கும் ஒரு திட்டத்தில் தமிழக அரசு இணைய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை ஜெயலலிதாவுக்கு அவசியம் இருக்கலாம். ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்து திரும்பி வந்த பிறகுதான் அதானி தமிழ்நாட்டில் மின்உற்பத்தி திட்டம் துவங்க ஒப்பந்தம் இறுதியானது. இப்போது உச்சநீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எந்த நேரமும் வரக் கூடும் என்ற நிலை உள்ளபோது, உதய் திட்டத்தில் இணைய தமிழக அரசு தயாராகிறது. உளறுகிறீர்கள் என்று அஇஅதிமுககாரர்கள் உறுமுவது கேட்கிறது. அப்படி ஏதும் இல்லை என்றால் தமிழகத்துக்கு நல்லதுதான்.
ஆண்டுக்கு ஒரு முறை மின்கட்டணத்தை மாற்றியமைக்க ஒப்புக்கொண்டு ஒரு திட்டத்தில் சேரவிருக்கும் தமிழக அரசு, அதானியிடம் மின்சாரம் வாங்க 15 ஆண்டுகளுக்கு எப்படி ஒப்பந்தம் போட்டது? அதானி இன்று போட்ட ஒப்பந்தத்தில் என்ன விலைக்கு மின்சாரத்தை விற்பதாகச் சொல்லியுள்ளாரோ, அந்த விலை அடுத்த 15 ஆண்டுகளுக்கும் தொடரும் என்று சொல்ல முடியாது. நாளை விலையை ஏற்ற ஏற்ற தமிழக அரசும் ஏற்றும். இந்தக் அநியாயக் கொள்ளையை சட்டபூர்வமாக்க நடைமுறைக்கு வருவதுதான் உதய் திட்டம். அதானியின் உத்தரவின் பேரில் 2019க்குள் இந்த மொத்த நிகழ்வுப்போக்கையும் முடித்து, கூடுதல் மின் கட்டணம் செலுத்த மக்களை பழக்கிவிடவே இந்தத் திட்டம். ரயில் கட்டணத்தை விமான கட்டணம் போல் உயர்த்தி பகல் கொள்ளையில் ஈடுபடுகிற மோடி அரசு, அதானியின் தொழில் செழிக்க எந்த உயர்வையும் மக்கள் தலையில் சுமத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறது.
எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் நூறு யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் இல்லை என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார் என்றுதான் நாம் முடிவுக்கு வர வேண்டும். அதாவது, முதலமைச்சர் மக்களுக்காக இருக்கிறார், மின்வாரியம் நட்டத்தில் இயங்கினால் அவர் என்ன செய்வார் பாவம், ஆண்டுக்கு ஒரு முறை மின்கட்டணம் ஏறத்தான் செய்யும் என்று பாதிக்கப்பட்ட மக்களே பேச வேண்டும் என்பது அவரது திட்டமாக இருக்கிறது என்று நாம் வியாக்கியானம் சொன்னால் அதை மறுக்க முடியாது. மோடி அரசு கார்ப்பரேட் ஆதரவு திட்டத்துக்கு பெயர் ஒன்று வைத்துள்ளது. ஜெயலலிதா தனது திட்டத்துக்கு பெயர் எதுவும் வைக்கவில்லை. அவ்வளவுதான் வேறுபாடு. மத்திய அரசு கடுமையான அதிருப்திக்கு உள்ளாகும், ஜெயலலிதா அரசு சாமானிய மக்களின் அனுதாபத்தை பெறும் என்பது எதிர்பார்ப்பா?
தமிழ்நாடு உதய் திட்டத்தில் சேர்ந்து அதை அமலாக்கத் துவங்கும் முன்பு உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்துவிடக் கூடும். இல்லையென்றாலும், முன்னேற்பாடாக மாமன்ற தலைவர்கள், ஊராட்சித் தலைவர்கள் ஆகியோருக்கான நேரடித் தேர்தலை ரத்து செய்தாகிவிட்டது.
மோடி அரசு ஜெயலலிதா அரசின் ஆதர வுடன், பிற மாநில அரசுகளின் ஆதரவுடன் நிறைவேற்றும் உதய் திட்டம் வெற்றி கூட பெறலாம். வெற்றி பெற்றுவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் நேரம் மக்கள் தலையில் மின்கட்டணம் பெரும் சுமையாக ஏற்றப்பட்டிருக்கும். அதானியின் மின் உற்பத்தி நிறுவனம் போன்ற தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் சொத்து மதிப்பை இன்னும் சில பத்தாயிரம் கோடிகளுக்கு உயர்த்தி இருக்கலாம்.
(மாலெ தீப்பொறி 2016 செப்டம்பர் 16 – 30 தொகுதி 15 இதழ் 4)