COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 17, 2016

தோழர் ஸ்வப்பன் பற்றிய நினைவுகள்
எஸ்.குமாரசாமி
எப்போதும் உயிர்ப்புடனும் உயிர்த்துடிப்புடனும் இருந்த தோழர் ஸ்வப்பன் இப்போது உயிருடன் இல்லை.
என்ன விந்தை முரண்! கட்சியின் மத்திய கமிட்டி மற்றும் அரசியல் தலைமைக்குழு கூட்டங்களில் அவர் இல்லாததை, நான் நிச்சயம் பெரிதும் உணர்வேன். இந்தக் கூட்டங்களில் நான் எப்போதும் தேர்ந்தெடுத்து அவர் பக்கத்தில் உட்காருவேன். இந்தி பேசாத இந்தி அறியாத ஒரு நபராக, இந்தக் கூட்டங்களில் நடப்பவற்றை, நான் ஸ்வப்பன் மூலமே அறிவேன். முறைசார்ந்த மொழிபெயர்ப்பு தாண்டி இந்தக் கூட்டங்களில் பல பரிமாற்றங்கள் இயல்பாக நடக்கும். தோழர் ஸ்வப்பனுடன் கேலியும் கிண்டலுமாகப் பேசிக் கொள்ளும் மாற்றுத் திறன் மூலம்தான் மொழித் திறன் இல்லாத குறையுள்ள நபர் என்ற என் நிலையைக் கடக்க முடிந்தது. தோழர் ஸ்வப்பன், உங்கள் இழப்பை நான் மத்தியக்குழு அரசியல் தலைமைக்குழு கூட்டங்களில் நிச்சயமாய் உணர்வேன். நெருங்கியவர்களின் மரணம் நினைவுக் குளத்தில் அலை அடிக்க வைக்கிறது. மனிதர்கள் நம்மை விட்டுச் சென்றாலும், அவர்களது போற்றத்தக்க நினைவுகள், என்றும் நம்மோடு வாழும்.
கடந்த பல வருடங்களாக, நான், எந்த ஒரு செயல்படுகிற, நடைமுறையில் உள்ள குடும்பத்தின் பகுதியாகவும் இல்லை. கிட்டத்தட்ட எனது அனைத்து உறவுகளும் அரசியல் உறவுகளே. ஸ்வப்பனின் இறுதிச் சடங்கில்தான் நான் அவருடைய மகளையும் மகனையும் முதன் முறையாகப் பார்த்தேன். டில்லி கட்சி அலுவலகத்தில், தோழர் ஸ்வப்பனால் பெரிதும் பரிந்து ரைக்கப்பட்ட நான் படிக்க விரும்பிய, சைனா மேன் என்ற புத்தகத்தைக் கொண்டுவந்து தந்தபோது, அவர் மனைவியைப் பார்த்திருக்கிறேன். ஸ்வப்பனும் நானும், பல நேரங்களில் கட்சியும் இடதுசாரி இயக்கமும் சந்திக்கும் பிரச்சனைகளையும் சவால்களையும் விவாதிப்போம்.
இந்த ஆண்டு துவக்கத்தில் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாட்டிற்கு தோழர் ஸ்வப்பன் மத்திய பார்வையாளராக வந்திருந்தார். கணிசமான தோழர்கள் எமக்குத் தொழில் புரட்சி என்பதில் இருந்து நகர்ந்து விட்டதை, மந்தமான மத்தியதர வாழ்க்கை நடைகளுக்கு மாறிவிட்டதை, தோழர்கள் மேலும் மேலும் குடும்பங்கள் என்ற மண்டலத்தில் உழல்வதைப் பற்றி எல்லாம், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். அப்போது தோழர் ஸ்வப்பன், அவதார்சிங் பாஷின் ஒரு கவிதையைப் பற்றி எனக்குச் சொன்னார். தோழர் ஸ்வப்பன், நான் உங்களையோ, உங்கள் மூலம் கேட்ட பாஷின் கவிதையையோ ஒருபோதும் மறக்க மாட்டேன்.
‘மிகமிக ஆபத்தானது
மரணம் நிகர் அமைதியால் நிரம்பியிருப்பது
எந்த வலியையும் உணராமல்
எதையும் தாங்கிக் கொள்வது.
வேலைக்காக வீட்டை விட்டுச் செல்வது
பின் வேலை முடிந்து வீடு திரும்புவது
மிகமிக ஆபத்தானது
நம் கனவுகளின் மரணமே’
தோழர் ஸ்வப்பன், உங்கள் கடைசி கணம் வரை உங்கள் கனவுகள் உயிரோடு இருந்தன என நான் நிச்சயம் அறிவேன். நாம் போற்றி மதிக்கும் கம்யூனிஸ்ட் கனவுகளை நனவாக்க, நானும் உங்கள் தோழர்களும் நிச்சயம் கடுமையாய்ப் போராடுவோம்.
1987ல் தன்பாத்தில் அகில இந்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு உருவானது எனக்கு நினைவில் உள்ளது. அதிலிருந்துதான் தற்போதைய அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில் உருவானது. 1987ல் தோழர்கள் சுப்பாராவ் தலைவராகவும், சுவேந்து சாட்டர்ஜி பொதுச் செயலாளராகவும், ஜெகதீஷ் நந்தி துணைத் தலைவராகவும், நானும், பின்னர் கொல்லப்பட்டு தியாகியான தோழர் தரஸ்ராம் சாஹுவும் இணைச் செயலாளர்களாகவும் இருந்தோம். அப்போது கட்சி தலைமறைவாய் இருந்தது. இந்தியாவின் மிகவும் இளைய தொழிற்சங்க மய்யத்தை 1989ல் உருவாக்கினோம். முதல் மாநாட்டில் ஸ்வப்பன் பொதுச் செயலாளரானார். அப்போது முதல், ஏஅய்சிசிடியுவின் செயலாளர்களில் ஒருவராக, துணைத் தலைவராக, செயல் தலைவராக, தலைவராக, தோழர் ஸ்வப்பனை அறிவேன். இந்தியாவில் நவதாராளவாத ஆட்சி முறை வந்த காலத்திலிருந்தே, எங்களது இணைந்த பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.
அப்போது சோவியத் ஒன்றியம் சரிந்திருந்தது. உலகம் கண்டிருந்த ஒரு குறிப்பிட்ட சோசலிஸ்ட் மாதிரி அமைப்பு முறை தோற்றுப் போய் இருந்தது. இந்தியாவில் இந்துத்துவா வலதுசாரிகள் அரசியலில் காலூன்றத் துவங்கினர். காங்கிரசையும் இடதுசாரிகளையும் தவிர மற்ற எல்லா கட்சிகளும், சங்பரிவார் அரசியல் கட்சியுடன் உறவாடினர். அவர்கள் ஆதரித்த அரசாங்கத்தை, இடதுசாரிகளும் ஆதரித்ததும் கூட, நடந்தது.
இந்தக் காலகட்டத்தில்தான் மிகப் பெரிய முதலாளித்துவ மறுகட்டமைப்பு நடந்தது. இது சர்வதேச வேலைப் பிரிவினையாகவும், இந்தியாவில் தற்காலிக ஒப்பந்தமயமாகவும், வேலைகளை வெளியில்/வெளியாருக்குத் தந்துச் செய்வதாகவும் நடந்தது. தொழிலாளர் வர்க்கத்துடன் சுமுக ஒப்பந்தம் எனச் சொல்லப்பட்டது, பொருளாதாரத்தின் சிகரங்களின் உயரத்தில் பொதுத்துறை, நேருவின் வழிமரபு ஆகியவை எல்லாம் நிலைகுலைந்தன. அரசியல் மேல் நிலைக்கு வந்த புதிய சமூக சக்திகள் உட்பட, தாராளமயம், தனியார்மயம், உலகமயம் தொடர்பான ஒரு பரந்த கருத்தொற்றுமைக்குள் சென்று சேர்ந்தனர். இந்தக் காலங்களுக்கேற்ப ஏஅய்சிசிடியுவும் வளர்ந்தது. கடினமான, அதே நேரம் வாய்ப்புக்களை வழங்கிய இந்த சில பத்தாண்டுகள், தோழர் ஸ்வப்பன் ஏஅய்சிசிடியு பொதுச் செயலாளராக இருந்தார். கடலில் கப்பலைச் செலுத்துவதில் பெரும்பங்காற்றினார்.
ஒருங்கிணைப்புக் குழு காலம் என்ற ஒரு மிகக் குறுகிய காலம் சுவேந்து சாட்டர்ஜி பொதுச் செயலாளராக இருந்தார். இடையில் கட்சி பொதுச் செயலாளர் ஆவதற்கு முன்பு தோழர் திபங்கர் ஏஅய்சிசிடியு பொதுச் செயலாளராக இருந்தார். நிறுவனப் பொதுச் செயலாளர் என்பது தாண்டி, 1998 முதல் 2015 வரை 17 ஆண்டுகள் தோழர் ஸ்வப்பன் ஏஅய்சிசிடியுவின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.
2015ல் தோழர் ராஜீவ், பாட்னா மாநாட்டில் பொதுச் செயலாளரானார். புனே தேசிய கவுன்சிலுக்கு வந்திருந்த ஒவ்வொரு தேசிய கவுன்சில் உறுப்பினருக்கும், உடல் அசதி இருந்த போதும், மாறிச் செல்லும் கட்டத்தில், துணைத் தலைவர் என்ற முறையில் அமைப்புக்கு உதவும் விதம், தோழர் ஸ்வப்பன் தேசிய கவுன்சில் கூட்டத்தில்  செயலூக்கமான பங்காற்றியதும், செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை பெருவெற்றியடைய வைக்க உணர்ச்சிமயமாய் அழைப்பு விடுத்ததும் தெரியும். கூட்டத்திற்கு முன்பு, தோழர் ஸ்வப்பன் என்னிடம் கூட்டத்திற்கு வந்துதான் தீர வேண்டுமா எனக் கேட்டதும், அவர் உடல்நிலையை மதிப்பிட்டு அவரையே முடிவெடுக்கச் சொன்னதும், எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.
தோழர் ஸ்வப்பன் நிலக்கரி, எஃகு, கட்டு மானம், நகராட்சி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் மத்தியில் கூட்டமைப்புக்கள் நிறுவும் ஏஅய்சிசிடியு முயற்சிகளுக்கு உற்சாகத்துடன் வழிகாட்டினார். அரசு ஊழியர்கள் மத்தியிலான நமது மாநிலங்கள் அளவிலான வேலைகளை ஒருங்கிணைப்பதில், ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு ஊழியர்கள் அமைப்பாக்கத்தில் ஆர்வத்துடன் உதவினார். டெல்லி போக்குவரத்து கழக ஊழியர்களுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டிருந்தார்.
பிலாய் வேலையை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்த தோழர் ஸ்வப்பன், ஜார்கண்ட் ஏஅய்சிசிடியு வேலைகளுக்கும் முக்கியப் பங்காற்றினார். தொழிலாளர் வர்க்கத் தலைவராக தன்பாத் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். கர்நாடக மாநில வேலைகள் வளர்ச்சி பற்றி மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். ஏஅய்சிசிடியு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிற்சங்க மய்யமாவதில், தேசந்தழுவிய அளவில் பரந்து விரிந்து உருப்பெறுவதில் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
ஸ்வப்பனின் மகாராஷ்டிரா, பஞ்சாப் தொடர்பான வேலைகள் கவனம் கொள்ளத் தக்கவை. ஒரு மத்திய தொழிற்சங்கத்தின் மய்யத் தலைவர், கிராமப்புற வறியவர்கள் மத்தியில் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் வேலை பார்த்ததில், அவர்களோடு அவர்களுக்காகச் சிறை சென்றதில் தோழர் ஸ்வப்பனின் பாத்திரம் முன்னுதாரணத் தன்மை வாய்ந்தது. அவர் சிறையில் இருந்து பஞ்சாப் அரசிற்கு அரசியல்ரீதியாக நெருக்கடி தந்தது, சண்டிகரை நமது வரைபடத்தில் கொண்டு வந்தது, பிஜிஅய் போராட்டத்தில் அவர் பங்கு ஆகியவை, ஏஅய்சிசிடியுவுக்கு முக்கியப் பதிவுகளாகும்.
ஸ்வப்பன் மேல்தோற்ற அளவில் மேம்போக்கானவர் போல் தெரிவார். ஆனால் நமது அய்க்கிய முன்னணி நடவடிக்கைகளில், அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு, அகில இந்திய மக்கள் மேடை உருவாக்குவதில், அவரது காத்திரமான பங்களிப்பும் ஆழமான வேலைகளும், இயக்கத்திற்குப் பேருதவியாய் அமைந் தன. பஞ்சாப் சிபிஎம், மகாராஷ்டிரா லால் நிஷான் கட்சி, இடதுசாரி கட்சிகள், இடதுசாரி மய்ய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட மற்ற மய்யங்களுடன் உறவாடுவதிலும் ஸ்வப்பனின் பங்கு அடிப்படையானதாக இருந்தது.
நிகழ்ந்து வரும் இயக்கங்கள், புதிய எழுகிற சமூக சக்திகள், எழுந்துவரும் இளம் தோழர்கள் ஆகியோருடனும் அவரது ஊடாடல்கள் குறிப்பிடத்தக்கவை. தோழரின் இறுதிச் சடங்கில் மகாராஷ்டிரா, பஞ்சாப், சண்டிகரின் இளம் பெண் தோழர்களும் டெல்லியின் இளம் தோழர்களும், அவரது உடலைத் தூக்கிச் சென்று மயானத்திற்குச் செல்லும் வண்டியில் வைத்தனர். ஸ்வப்பன் சர்வதேச விவகாரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதில், நம்மைச் சுற்றி நடக்கும் பொருளாதார அரசியல் சமூக மாற்றங்களைப் புரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்.
கட்சிக்கு எங்கெல்லாம் எப்போதெல்லாம் ஒரு தலைமைத் தோழரை ஏதாவது மாநிலத்திற்கு அனுப்ப நேர்ந்ததோ, அப்போதெல்லாம் கட்சி தோழர் ஸ்வப்பனிடம் அந்தப் பணியை ஒப்படைத்துள்ளது; அவரும் அதனை நிறைவேற்றியுள்ளார். கடைசியாகத் தமக்கு அளிக் கப்பட்ட ஒடிஷா பொறுப்பாளர் என்ற கடமையையும் கடப்பாட்டுடன் மேற்கொண்டார். நீண்ட கடினமான பயணங்கள் நிச்சயம் அவர் உடலையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கவே செய்தன. உடல்நிலைக்கு அப்பாலும் அவர் பிரச்சனைகளைத் தீர்க்க, அமைப்புப் பணியாற்ற எங்கும் சென்றார். அவர் நிலைமைகள் பற்றிப் புகார் செய்ததில்லை. ‘இருக்கும் நிலைமைகளில்’ இருந்துதான், விஷயங்களை மாற்ற முயற் சித்தார். நமது தலைமறைவு, ரகசிய கட்சி காலங்களிலிருந்து நமக்கு கிடைத்த பெருமைக்குரிய மதிப்புமிக்க தோழர்களில் ஒருவரான ஸ்வப்பன், வேலைகளுக்கு மதிப்பு கூட்டினார்; பண்புரீதியான மாற்றங்கள் கொண்டு வந்தார். நம் இயக்கத்தில் ஸ்வப்பன் வகை தோழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
ஸ்வப்பன் பற்றிய எனது நினைவுகளை, அவருக்கும் பிரிக்கால் போராட்டத்திற்கும் இடையிலான உறவுகள் பற்றிச் சொல்லித்தான் முடித்தாக வேண்டும். பிரிக்கால் ஆலையின் மனிதவளத் துறை துணைத் தலைவர் துரதிர்ஷ் டவசமாக 21.09.2009 அன்று இறந்தார். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தொழிலாளர் போராட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் கோவை முதலாளிகளும் காவல்துறையும் தொழிற்சங்கத்தை முற்றுகையிட்டனர். ரத்த தாகம் கொண்டிருந்தனர். நான் கைதாவதைத் தவிர்த்து, முன்ஜாமீனுக்கு முயன்று கொண்டிருந்தேன். ஏஅய்சிசிடியு தலைமை தோழர்கள் நிதானமாக சீராக எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டமைத்து வந்தனர். தோழர் சங்கரும் கோவை வந்து பங்களித்துக் கொண்டிருந்தார். காலத்தால் சோதிக்கப்பட்டு புடம் போடப்பட்ட தொழிலாளர் வர்க்கத் தலைவரின் பண்பு களுடன், தோழர் ஸ்வப்பன் கோவை வந்திருந்து பங்களித்தார். மய்ய தொழிற்சங்கங்களுடன் தொடர்பு கொண்டார். பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அரசு அதிகாரிகளைச் சந்தித்தார். தொழிலாளர் முன்னோடிகளுடன் பேசினார். பெரும்திரள் தொழிலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு செங்கல் செங்கல்லாக இயக்கம் திரும்பக் கட்டப்பட்டபோது, தமிழகத் தோழர்களுக்கு தோழர் ஸ்வப்பன் உதவியாக இருந்தார்.
போர்க்குணமிக்க பிரிக்கால் தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தின் அந்த முக்கிய தருணத்தில், செயற்கையான எந்த போர்க் குணத்தையும் நுழைக்க அவர் முயற்சிக்கவில்லை. அந்த நேரத்தில் தோழர் ஸ்வப்பன் தமிழகத்தின் ஓர் உயர்காவல் அதிகாரியை மற்ற தோழர்களுடன் சந்தித்தார். தோழர்கள் வெளியே வரும்போது, அந்த அதிகாரி, தோழர் ஸ்வப்பனிடம் போலி மோதல் நடக்க தமக்கு  நிர்ப்பந்தம் இருப்பதாகவும், தாம் அதை ஏற்கப் போவதில்லை எனவும், விரைந்து சட்டபூர்வமாக முன்ஜாமீனுக்கு வழி செய்யுங்கள் என்றும் இந்தியில் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தனக்குள் வைத்துக் கொண்டு, உரிய கவனத்தோடு இயக்கம் முன்செல்ல தோழர் ஸ்வப்பன் உதவினார். 10.10.10 அன்று பிரிக்கால் தொழிலாளர்கள் சில ஆயிரம் பேர் கலந்து கொண்ட தொழிலாளர் குடும்பத் திருவிழாவில், தோழர் ஸ்வப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தோழர் ஸ்வப்பனுக்கு இறுதியாக விடை தரும் நிகழ்ச்சி 07.09.2016 நடந்தபோது பிரிக்கால் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான தோழர் குருசாமி கோவையில் இருந்து வந்து, இந்தியா முழுவதிலும் இருந்து வந்த தோழர்களுடன் கலந்துகொண்டது மிகவும் பொருத்தமானது.
செவ்வணக்கம், தோழர் ஸ்வப்பன்!
இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஸ்வப்பன் முகர்ஜியின் இறுதி நிகழ்ச்சி
செப்டம்பர் 7, 2016, புதுடெல்லி.
இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தொழிற்சங்க இயக்கத்தின் குறிப்பிடத் தக்க தலைவருமான தோழர் ஸ்வப்பன் முகர்ஜி திடீர் மாரடைப்பு காரணமாக செப்டம்பர் 6 அன்று காலமானார். அவரை தகனம் செய்வதற்கு முன்பாக பல இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள், செயல்வீரர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
செங்கொடியால் போர்த்தப்பட்டு மலர் தூவப்பட்ட அவரது உடல் இகக(மாலெ) மத்திய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், இகக(மா) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத், இககவின் தேசிய செயலக உறுப்பினர் தோழர் அமர்ஜித் கவுர், இகக(மா)(பஞ்சாப்) செயலாளர் தோழர் மங்கத்ராம் பஸ்லா, லால்நிசான் கட்சி (லெனினிஸ்ட்)ன் தோழர் உதய் பட், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் அமரேஷ்குமார், டெல்லி மாநிலச் செயலாளர் தோழர் தர்மேந்திர வர்மா, இகக(மா) மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர் புஷ்பேந்திர கிரேவால், எஸ்யுசிஅய்(சி) மற்றும் ஏஅய்யுடியுசி தேசியச் செயலாளர் தோழர் ஆர்.கே.சர்மா, மனித உரிமை செயற்பாட்டாளர் ஜான் தயாள், பியுசிஎல் அமைப்பின் என்.டி.பஞ்சோலி, சிஅய்டியு பொதுச் செயலாளர் தோழர் தபன்சென் மற்றும் சுவதேஷ் தேப்ராய்(சிஅய்டியு), ஏஅய்டியுசி தலைவர்களான டி.எல்.சச்தேவா, விஜயலஷ்மி, டியுசிசியின் தேசியச் செயலாளர் ஏ.கே.மிஸ்ரா, என்டியுஅய்யின் பொதுச் செயலாளர் கவுதம் மோடி, இகக(மா) டெல்லி மாநிலச் செயலாளர் கே.எம்.திவாரி, சிஅய்டியுவின் டெல்லி மாநில பொதுச் செயலாளர் அனுராக் சக்சேனா, அகில இந்திய மக்கள் மேடையின் லீனா தபிரு ஆகியோர் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். தோழர் ஸ்வப்பனின் மனைவி தோழர் சர்மிளா, மகன் சௌபிக், மகள் உபசனா மற்றும் அவர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
1970 காலகட்டத்தில் டெல்லி பல்கலைக் கழக கிரோரிமால் கல்லூரி நாட்களிலிருந்தே அவரை ஒரு செயற்பாட்டாளராக அறிந்த பேராசிரியர் வினோத் குரானா, பத்திரிகையாளர் ஊர்மிலேஷ், அணில் கேமாடியா, கலாச்சார செயற்பாட்டாளர்களான சம்சுல் இஸ்லாம், நீலிமா, சுபேந்து சென், பேராசிரியர் விஜய் சிங் உட்பட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஸ்வதேஷ் பட்டாச்சார்யா, ராம்ஜிராய், எஸ்.குமாரசாமி, கார்த்திக் பால், பிரபாத் குமார், மனோஜ் பக்த் மற்றும் கவிதா கிருஷ்ணன், மத்தியக் கமிட்டி உறுப்பினர்களான ஜார்கண்டின், வினோத்சிங், ஒடிஷாவின் யுதிஷ்திர் மகாபட்ரா, டெல்லியின் ரவிராய், சஞ்சய் சர்மா, உத்தரகாண்டிலிருந்து ராஜேந்திர பர்தோலி, ராஜா பகுகுணா, உத்தரபிரதேசத்தின் முகம்மது சலீம், பஞ்சாபின் குர்மீத் சிங், ராஜ்விந்தர் சிங் ரானா, அகில இந்திய கிசான் மகாசபையின் பொதுச் செயலாளர் தோழர் ராஜாராம்சிங், ஏஅய்சிசிடியு பொதுச் செயலாளர் தோழர் ராஜீவ் டிம்ரி, அகில இந்திய மாணவர் கழகத்தின் தேசியத் தலைவர் சுசேதா டே, புரட்சிகர இளைஞர் கழகத்தின் பொதுச் செயலாளர் ஓம் பிரகாஷ், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தலைவர்கள் இக்பால் உதாசி, ஜஸ்பிர் கவுர், இகக(மாலெ)யின் ஹரியானா மாநிலப் பொறுப்பாளர் பிரேம்சிங் ஹேக்லவாட், இகக(மாலெ)யின் சண்டிகர் செயலாளர் தோழர் கன்வல்ஜித் சிங், ராஜஸ்தான் மாநில ஏஅய்கேஎம் தலைவர் பூல்சந்த் தேவா, பஞ்சாபிலிருந்து சுக்தர்ஷன், பக்வந்த் சங்வானின் கபில் ஷர்மா, கோவை பிரிக்கால் தொழிற்சங்க தலைவர்களுள் ஒருவரான தோழர் குருசாமி ஆகியோர் ஸ்வப்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதி ஊர்வலத்தில் அவர் வழிகாட்டுதலில் வளர்ந்த இளம் தோழர்கள் அதிதி, நவ்கிரண், இஷா மற்றும் அபிலாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். டெல்லி இகக(மாலெ) தோழர்கள் உரக்க முழக்கமிட்டு தங்களது தோழருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
தியாகிகளான மறைந்த தோழர்கள் மற்றும் செங்கொடிக்கு வணக்கம் தெரிவித்து தோழர்கள் சம்சுல் இஸ்லாம், நீலிமா புரட்சிகரப் பாடல்கள் பாடினார்கள். சர்வதேசிய கீதம் பாடப்பட்டது.
                செப்டம்பர் 16 அன்று புதுடெல்லியிலுள்ள கான்ஸ்டிடியுசன் கிளப் வளாகத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.          
பிரபாத் குமார்,
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இகக மாலெ
தோழர் ஸ்வப்பன் முகர்ஜிக்கு செவ்வஞ்சலி
அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர உறுதியேற்புக் கூட்டங்கள்
செப்டம்பர் 6 அன்று தோழர் ஸ்வப்பன் முகர்ஜி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சண்டிகரில் இறந்த செய்தி கேள்விப்பட்டவுடன் கோயம்புத்தூர் பிரிக்கால் ஆலையின் பிளாண்ட் 1, பிளாண்ட் 3 ஆலை வாயில்களில் தொழிற்சங்க செங்கொடி இறக்கப்பட்டது. மறைந்த தோழருக்கு நூற்றுக்கணக்கான தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.
செப்டம்பர் 7 அன்று பெரியநாயக்கன்பாளையம் பிரிக்கால் தொழிற்சங்க அலுவலகத்தில் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இகக (மாலெ) மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், தாமோதரன், மாநகரக் கமிட்டி  உறுப்பினர் தோழர் வேல்முருகன், பிரிக்கால் தொழிற்சங்க நிர்வாகிகள் தோழர்கள் சாமிநாதன், ஜெயப்பிரகாஷ்நாராயணன், நடராஜ் ஆகியோருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் அஷ்ரப் அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)ன் ஒன்றியச் செயலாளர் தோழர் கேசவமணி, பெரியார் திராவிட கழகத்தின் மாவட்டத் தலைவர் தோழர் ராமசாமி, தோழர் சீனிவாசன், பெரியநாயக்கன்பாளையம் கவுன்சிலர் சிவராஜ் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர்.
சாந்தி கியர்ஸ் ஆலை வாயிலில் செப்டம்பர் 6 அன்று நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் தாமோதரன் கலந்து கொண்டு தோழர் ஸ்வப்பன் முகர்ஜியின் அர்ப்பணிப்புமிக்க பணியைப் நினைவு கூர்ந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் காரனோடை இகக(மாலெ) கட்சி அலுவலகத்தில் செப்டம்பர் 9 அன்று தீப்பொறி வாசகர் வட்டக் கூட்டத்திற்கு முன்னதாக தோழர் ஸ்வப்பன் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை, சேலம், கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தருமபுரி, கோவை, நாமக்கல், மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல இடங்களிலும் செப்டம்பர் 6 அன்று அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
திருநெல்வேலியில் செப்டம்பர் 8 அன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ரமேஷ், இகக மாவட்டச் செயலாளர் தோழர் காசிவிஸ்வநாதன், இகக(மா) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கருணாநிதி, அகில இந்திய மக்கள் மேடையின் தேசியப் பிரச்சாரக்குழு உறுப்பினரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் உதயகுமார் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 11 அன்று அம்பத்தூரிலும் வண்டலூரிலும் நடந்த அஞ்சலிக் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர் தோழர்கள் கலந்துகொண்டனர். சென்னை மாவட்டத்தில் பணியாற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.
புதுச்சேரியில் செப்டம்பர் 8 அன்று தோழர் பாலசுப்ரமணியம் அஞ்சலி ஊர்வலம், இரங்கல் கூட்டத்தில் இகக (மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரத்துடன் விழுப்புரம் மாவட்ட இகக (மாலெ) தோழர்கள் கலந்துகொண்டனர்.

(மாலெ தீப்பொறி 2016 செப்டம்பர் 16 – 30 தொகுதி 15 இதழ் 4)

Search