ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில்
இடதுசாரி மாணவர்கள் சங்கக் கூட்டணி வெற்றி!
பாஜக மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வி!
மத்தியில் ஆளும் மோடி அரசு ஜேஎன்யு பல்கலைக் கழகத்தையே மூடிவிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ‘ஜேஎன்யுவை பாதுகாப்போம்’ என இகக(மாலெ)யின் அகில இந்திய மாணவர் கழகமும் இகக(மா)வின் இந்திய மாணவர் சங்கமும் கரம் கோர்த்து தேர்தலை சந்தித்தன.
இககவின் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இந்த அணிக்கு தனது ஆதரவினை தெரிவித்திருந்தது. ஆட்சி அதிகார பின்புலத்துடனான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)யின் மூர்க்கத்தனமான பிரச்சாரத்தை எதிர்கொண்டு இடதுசாரி மாணவர் அணி பெருவெற்றி பெற்றிருக்கிறது.
இககவின் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இந்த அணிக்கு தனது ஆதரவினை தெரிவித்திருந்தது. ஆட்சி அதிகார பின்புலத்துடனான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)யின் மூர்க்கத்தனமான பிரச்சாரத்தை எதிர்கொண்டு இடதுசாரி மாணவர் அணி பெருவெற்றி பெற்றிருக்கிறது.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அகில இந்திய மாணவர் கழகத்தின் தோழர் மொஹித் பாண்டே வெற்றி பெற்றார். இடதுசாரி மாணவர் அணியின் வேட்பாளர்களான தோழர் அமல் (துணைத் தலைவர்), தோழர் சத்ரூபா சக்ரபர்த்தி (பொதுச் செயலாளர்), அகில இந்திய மாணவர் கழகத்தின் தோழர் தப்ரேஷ் ஹசன் (இணைச் செயலாளர்) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
இடதுசாரி அணி மொத்தம் 8,509 வாக்குகளைப் பெற்றது. அடுத்து வந்த ஏபிவிபி 4,503 வாக்குகளையும், பிர்சா முண்டா அம்பேத்கர், புலே மாணவர் அணி 3,805 வாக்குகளையும் காங்கிரசின் என்எஸ்யுஅய் 712 வாக்குகளையும் பெற்றன.
தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றிருந்த மொஹித் பாண்டே டெல்லி பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரும் ‘கல்வி அடிப்படை உரிமைக்கான அகில இந்திய மேடை’ என்ற அமைப்பின் செயற்பாட்டாளரும் ஆவார். டெல்லி ‘யுஜிசியை ஆக்கிரமிப்போம்’ இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவரும் ஆவார். 31 கவுன்சில் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 15 இடங்களை இடதுசாரி அணி கைப்பற்றியிருக்கிறது. மாணவர் தலைவர்கள் மீது தேசத்துரோக வழக்கு முதல் அத்தனை அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்ட ஏபிவிபிக்கும், மோடி ஆட்சிக்கும் இந்த தேர்தல் முடிவுகள் பலத்த அடி கொடுத்திருக்கிறது.
டெல்லி பல்கலைக் கழக தேர்தலில் அகில இந்திய மாணவர் கழகம்
டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் அகில இந்திய மாணவர் கழகம் சிறப்பாக செயல்பட்டு வாக்கு எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. ஏபிவிபியின் தாக்குதல், கோடிக்கணக்கில் பணம் செலவழித்து பிரும்மாண்டப் பிரச்சாரம், பொய் வழக்குகள் அத்தனையும் தாண்டி அய்சா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது அய்சாவின் எளிய பிரச்சாரத்துக்கு, மாற்று அரசியலுக்கு கிடைத்துள்ள மாபெரும் ஆதரவு என்று தலைவர் பதவிக்கான வேட்பாளர் கவல்ப்ரீத் கவுர் குறிப்பிட்டார்.
கட்டைப் பை தைக்கும் தையல் தொழிலாளர் கூலி உயர்வு போராட்டம் வெற்றி
ஈரோடு மாவட்டம் பவானியில், கட்டைப் பை தைக்கும் பெண் தொழிலாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக கூலி உயர்வு தரப்படவில்லை. பை ஒன்றுக்கு 75 பைசா கூலி உயர்வு கேட்டு கடந்த ஓராண்டு காலமாக ஏஅய்சிசிடியு போராடி வருகிறது. பவானி வட்டாட்சியர் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
செப்டம்பர் 2, பொது வேலை நிறுத்தத்துக்கான பிரச்சாரத்தின்போது, செப்டம்பர் 2 முதல் கட்டைப் பை தைக்கும் பெண் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 2 அன்று சுமார் 1,000 பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பை உற்பத்தியாளர்கள் கடைகளை செப்டம்பர் 3 அன்று முற்றுகை இட அழைப்பு விடுத்தனர். உடனடியாக பவானி வட்டாட்சியரும் காவல்துறையும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். கட்டைப் பை உற்பத்தியாளர்களும் ஏஅய்சிசிடியு தோழர்களும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டனர்.
தற்போது சைடு பட்டிக்கு பை ஒன்றுக்கு ரூ.1.75 கூலியாக தரப்படுகிறது. பேச்சுவார்த்தையில் ரூ.0.25 கூடுதலாக, ரூ.2.00 தரப்படும் என முடிவானது. சுற்றுப் பட்டி பை ஒன்றுக்கு தற்போது தரப்படும் ரூ.2, இனி ரூ.2.25 என உயர்த்தப்படும். நேரடியாக உற்பத்தியாளர்களிடம் பை எடுத்து தைக்கும் பெண்களுக்கு இந்த கூலி உயர்வு கிடைக்கும். ஏஜென்டுகளிடம் தைக்கும் பெண்களுக்கு பை ஒன்றுக்கு 15 பைசா உயர்வு கிடைக்கும்.
இந்த கூலி உயர்வு போராட்டத்தை திருவள்ளுவர் நகர், சேர்வராயன்பாளையம், காடையாம்பட்டி, குருப்பநாயக்கன்பாளையம், ஊராட்சிகோட்டை வர்ணாபுரம், பழனிபுரம், பாவடிதெரு ஆகிய பகுதியில் உள்ள தையல் தொழிலாளர்கள் நடத்தினர்.
இந்த கூலி உயர்வு மூலம் நாள் ஒன்றுக்கு 100, 200 பை தைப்பவர்களுக்கு, நேரடியாக கடைக்கு சென்று பை எடுத்து தைக்கும் பெண்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.25 முதல் ரூ.50 வரையிலும், வாரத்திற்கு ரூ.150 முதல் ரூ.300 வரையிலும் கூடுதலாக கிடைக்கும். ஏஜென்டுகளிடம் தைப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரையிலும், வாரத்திற்கு ரூ.90 முதல் ரூ.180 வரையிலும் கூடுதலாக கிடைக்கும்.
இந்த கூலி உயர்வுக்குப் பிறகும் இந்த பெண்கள் பெறவிருக்கும் மாத வருமானம் ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை மட்டுமே. இந்த கூலி உயர்வு போராட்டத்தின் மூலம் பவானியில் பெண் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்ற ஏஅய்சிசிடியுவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏ.கோவிந்தராஜ்
(மாலெ தீப்பொறி 2016 செப்டம்பர் 16 – 30 தொகுதி 15 இதழ் 4)