COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, September 2, 2016

தலையங்கம்
கொசுக்களிடம் தோற்றுப்போய் 
குழந்தைகளைக் கொல்லும் தமிழக அரசு
தமிழக ஆளுங்கட்சிக்காரர்கள் மிகவும் தெம்பாய் இருக்கிறார்கள். நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் துவக்கம் முதல் இறுதி வரை சட்டமன்ற உறுப்பினர்கள் உற்சாகம் சற்றும் குறையவில்லை.
அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சட்டமன்றத்துக்கு வராமல் இருந்ததாக பெரிதாக செய்தி ஏதுமில்லை. சட்டமன்றத்துக்கு உள்ளும் யாருக்கும் களைப்போ, அசதியோ எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. முகம் பார்க்கும் அளவுக்கு மிகவும் சுத்தமான தரை கொண்ட குளிரூட்டப்பட்ட அறை, வாசனையூட்டப்பட்ட காற்று, வசதியான இருக்கைகள், நல்ல உணவு, நல்ல குடிநீர், அமர்வு முடிவில் பரிசுப் பொருட்கள் என மக்கள் வரிப்பணத்தில் சட்டமன்றத்தில் எல்லா சொகுசுகளும் வசதிகளும் அவர்களுக்கு உள்ளன.
சட்டமன்றத்துக்கு மிக அருகில் உள்ள ஒரு மாவட்டத்தில் குழந்தைகள் ‘மர்மக் காய்ச்சலால்’ பாதிக்கப்பட்டு செத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கிராமத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
உள்நாட்டு வெளிநாட்டு மூலதனம் குவிகிற மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் மாறிவிட்டது. அங்கு பொன்னேரியில் ஒரு ஸ்மார்ட் சிட்டி பற்றி திட்டமிடப்படுகிறது. ஒரு புதிய தொழில் பூங்கா பற்றி அறிவிப்புகள் வெளியாகின்றன. ஸ்மார்ட் சிட்டி வந்தால் கான்ட்ராக்ட் கிடைக்கும். பூங்காவில் கமிஷன் கிடைக்கும். ஆனால், கொசு ஒழிப்பில் என்ன கிடைக்கும்? கொசு மருந்து வாங்குவதில் என்ன பெரிய காசு பார்க்க முடியும்? சட்டமன்றத்துக்கு உள்ளேயும் சட்டமன்ற உறுப்பினர்கள் அறைக்குள்ளும் நிச்சயம் கொசுத் தடுப்புக்கு வழியிருக்கும். அவர்களுக்கு டெங்குவோ சிக்குன்குன்யாவோ வேறு மர்மக் காய்ச்சலோ வராமல் பார்த்துக் கொள்ளப்படும்போது, ஆளும் கட்சி, ஆளும் வர்க்க, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் காவேரிராஜபுரம் என்ற ஏதோ ஒரு கிராமத்தில் டெங்கு வந்தால் என்ன? குழந்தைகள் செத்துப் போனால் என்ன? அவர்களுக்கு எல்லாம் காந்தி சிரிக்கும் காகிதம் தொடர்பானது. தவவாழ்வு வாழும் தாயுள்ளம், பக்கத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்காவது ஓடிப்போய் பார்த்திருக்க வேண்டாமா? ஓர் ஆறுதல் சொல் சொல்லியிருக்க வேண்டாமா? ஒரு வேளை குழந்தைகள் அக்டோபரில் செத்திருந்தால் இவை நடந்திருக்கலாம். வஞ்சகர்கள்! தங்கள் குற்றமய அலட்சியத்தால் ஏழு குழந்தைகளை, சாக விட்டுவிட்டார்கள். இப்போது வாளி வாளியாக நிலவேம்பு நீரை அனுப்பி வைக்கிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி அருகில் உள்ள காவேரிராஜபுரத்தில் கிட்டத்தட்ட 250 தலித் குடும்பங்கள் வாழும் தெரு ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாகத் தெரியவில்லை. ஆகஸ்ட் 12 அன்று முதலில் ஒரு குழந்தை இறந்து போகிறது. பக்கத்து தெருவில் அருந்ததிய பிரிவைச் சேர்ந்த இன்னொரு குழந்தை அதே நாளில் செத்துப் போகிறது. மறுநாள் இரண்டு குழந்தைகள் சாகின்றன. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே அந்தக் குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. அடுத்தடுத்து, காய்ச்சல் பரவும்போதுதான், காவேரிராஜபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து குழந்தைகளும் பெரியவர்களும் முதியவர்களும் காய்ச்சல் வந்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டப் பிறகே, சாவுகள் ஊடகங் களில் பெரிதாக்கப்பட்ட பிறகே, அரசு நிர்வாகத்துக்கு சற்று சொரணை வந்தது. இப்போது அங்கு மருத்துவ முகாம்கள் அமைத்திருக்கிறார்கள். தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. கிராமத்து மக்கள் பலர் மருத்துவமனைகளில் இருந்தாலும் நடமாட்டம் சற்று திரும்பியிருக் கிறது. ஏழு குழந்தைகள் திரும்ப மாட்டார்கள்.
இப்போதும் அய்ந்து குழந்தைகள்தான் டெங்கு வந்து இறந்தன, ஒரு குழந்தை மஞ்சள் காமாலை நோயால் இறந்தது என்று அமைச்சர் சொல்கிறார். அரசின் குற்றமய அலட்சியத்தை மூடி மறைப்பது அமைச்சரின் முக்கிய கடமையாக மாறியிருக்கிறதே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது, மீண்டும் பிரச்சனை எழாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பதாக இல்லை. திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி என திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று பார்வையிடுவதாக அறிவித்துவிட்டு பின்னர் ஒரு மருத்துவமனைக்குச் செல்லாமலே அமைச்சர் திரும்பியிருக்கிறார். களைத்துப் போயிருப்பார் பாவம். தேர்தல் காலம் தவிர, இவ்வளவு தூரம் ஒரே நாளில் காரில் பயணப்பட்டு பழக்கம் இருந்திருக்காது.
அமைச்சரும் நிர்வாகமும் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதை விட, செய்தி பரவாமல் இருப்பதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. செய்திகளில் காவேரிராஜபுரம் என்ற பெயர் மட்டுமே அடிபடுகிறது. ஆனால், காவேரிராஜபுரத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்தும் ‘மர்மக் காய்ச்சலால்’ பாதிக்கப்பட்டு பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இககமாலெ மாநிலக் குழு உறுப்பினரும் திருவள்ளூர் மாவட்டச் செயலாளருமான தோழர் எஸ்.ஜானகிராமன் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த போது, அங்கு பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் அவரிடம் சொன்னார்கள். திருவள்ளூருக்கு அருகில் உள்ள பெரியகுப்பம், அரங்குளம், ரகுநாதபுரம், அடிகத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களும், திருத்தணி மருத்துவமனையில் முருகம்பட்டு, குன்னத்தூர், இலப்பூர், பள்ளிப்பட்டு, சொரக்கம்பேட்டை போன்ற கிராமங்களில் இருந்தும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சள்காமாலை வந்ததால் இறந்ததாக அமைச்சர் சொன்ன அந்தச் சிறுமி வைஷ்ணவியும் அருகில் உள்ள கீரப்பாக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். காவேரிராஜபுரம் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அமைச்சரே ஒரு வகையில் ஒப்புக்கொள்கிறார். தலித் குடும்பங்கள், வறியவர்கள் பாதிக்கப்படும் போது அஇஅதிமுக அரசு அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை.
டெங்கு காய்ச்சல் புதிதாக இன்று காவேரிராஜபுரத்தில் வந்துவிடவில்லை. 2012ல் தமிழ்நாட்டில் 12,000 பேருக்கும் மேல் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 66 பேர் உயிரிழந்தார்கள். 2013ல் 6,000 பேருக்கும் மேல் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டது. 2016ல் 7 குழந்தைகள் இறப்பு, 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதி என்பதாகத்தான் நிலைமைகள் உள்ளன. 2012ல் டெங்குக் காய்ச்சல் உக்கிரம் அடைந்திருந்தபோது தடுப்பு திட்டங்கள், நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. நிதி ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. நான்காண்டுகளுக்குப் பிறகு டெங்கு தடுக்கப்படவில்லை. சாவுகள் நிறுத்தப்படவில்லை. 2013ல் டெங்கு பாதிப்பு இருந்தது. சாவுகள் இல்லை. 2014ல் 3 பேர் செத்துப் போனார்கள். 2016ல் இந்த மாதத்தில் கோவையில் ஒரு முதியவர் டெங்கு பாதித்து உயிரிழந்தார். கோவையிலேயே கர்ப்பிணிப் பெண் ஒருவரும் டெங்குக் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே தமிழ்நாடு முழுவதும் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பிழைத்திருக்கக் கூடும். காய்ச்சல் பாதிப்பை குறைத்திருக்கக் கூடும். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் டெங்குக் காய்ச்சல் பரவுகிறது.
2012க்குப் பிறகு, டெங்கு காய்ச்சலுக்கு வேறு பெயர்கள் சொல்லப்பட்டு மறைக்கப்பட்டன. ஒரு முழு ஆட்சிக் காலத்தில் கூடுமானவரை பல்வேறு விதங்களில் தமிழக சாமான்ய மக்களைக் கொன்றாகிவிட்டது. இனியாவது, சாமான்ய மக்களை பலிகொள்ளும் அஇஅதிமுக ஆட்சியின் வெறி தணிய வேண்டும். டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, கொசு கடித்து தமிழன் செத்தான் இல்லை என்ற நிலையையாவது ‘உலகம் போற்றும் அம்மா ஆட்சி’ உருவாக்க வேண்டும்.
தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை 
2016 - 2017 கொள்கை அறிக்கை: ஒரு பார்வை
எஸ்.குமாரசாமி
சட்டமன்றத்தில், தொழிலாளர் மான்யக் கோரிக்கை விவாதத்தில், தமிழக அரசு 2016 -2017க்கான, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் கொள்கை அறிக்கையை முன்வைத்தது. அறிக்கை 152 பக்கங்கள் கொண்டிருந்தது. துறையின், குறிக்கோள் லட்சியம் பற்றி எல்லாம் பேசுகிறது. கொள்கை அறிக்கையின் முன்னுரை, தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கத்தைப் பலப்படுத்துவது, வேலை நிலைமைகளை முறைப்படுத்துவது, தொழிலாளர்களின் பணியிட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது, சிறுவர் உழைப்பை அகற்றுவது, திறன் வளர்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு சேவைகளை முன்னேற்றுவது, சமூக பாதுகாப்பு மற்றும் நல நடவடிக்கைகள் வழங்குவதற்காக, கொள்கைகளை திட்டங்களை அமல்படுத்துவது ஆகியவற்றின் மூலம், அமைப்பாக்கப்பட்ட மற்றும் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களின் வேலை நிலைமைகளையும் வாழ்வின் தரத்தையும் முன்னேற வைப்பதே, துறைக்கு இடப்பட்டுள்ள ஆணை என்கிறது. தொழில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உறுதி செய்ய, துறை, தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளைக் காக்கிறது, பிரச்சனைகளைத் தீர்க்க சமரசம் பேசுகிறது எனவும், பல நலத்திட்டங்கள் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை 17 அமைப்புசாரா நல வாரியங்கள் மூலம் வழங்குவது துறையின் முதன்மைப் பொறுப்பு எனவும், அறிக்கையின் முன்னுரை சொல்கிறது. பணியிடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவை விஷயத்திலான ஆபத்துக்களை நிர்வகிக்க, ஒவ்வொரு தொழிலாளியினுடைய பாதுகாப்பான ஆரோக்கியமான பணி நிலைமைகளை உறுதி செய்ய, அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்த அரசு கடப்பாடு கொண்டுள்ளதாக அறிக்கை சொல்கிறது.
தமிழ்நாடு, தொழில்துறை முதலீட்டிற்கான ஒரு முதன்மையான இடம் என்பதால், எப்போதுமே வேலை வாய்ப்பை அதிகரிக்க முயற்சிக்கப்படும். அரசாங்கத்தின் கொள்கை, தொழிலின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவதாகும்; நீடித்த தொழில் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்யும் தொழிலாளர் நலன் காப்பதையும், உள்ளடக்கியதாக கொள்கை அமையும். தொழில் உறவுகளில் மானுட நீதியை நிலைநாட்ட, ஏற்கத்தக்க (ரிசனபிள்) லாபங்கள் மற்றும் நியாயமான கூலிக்கு இடையில் வேலை நிறுத்தம், கதவடைப்பு களைந்து, சட்டபூர்வமாக ஒரு சம நிலையை உருவாக்குவதே, பரந்த கொள்கை அடிப்படை என்கிறது.
தொழிலாளர்கள் எங்கு பணி புரிகிறார்கள்?
தொழிலாளர் அமைச்சர் டாக்டர் நிலோஃபர் கஃபில் முன்வைத்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்கள் 3,12,482 உள்ளன. (இதனைக் காட்டிலும் பதிவு செய்யப்படாத கடைகளும் வர்த்தக நிறுவனங்களுமே சில மடங்கு கூடுதலாக இருக்கும்). இங்கு எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என அறிக்கையில் அமைச்சர் சொல்லவில்லை. மாநகராட்சிகள் என்ற ஏ மண்டலத்தில் பணியாற்றும், திறன் வாய்ந்த, கடைகள் வர்த்தக நிறுவனத் தொழிலாளர்களின் குறைந்தபட்சக் கூலி, 01.04.2016 முதல் 31.03.2017 வரை ரூ.6,336. அடிப்படைச் சம்பளம் ரூ.2609+பஞ்சப்படி ரூ.3,727=ரூ.6,336. ஒரு மருந்தாளுநருக்கு ரூ.2,921+ரூ.3,727, ரூ.6,648தான் குறைந்தபட்சக் கூலி. அமைச்சர் அறிக்கை, ஹோட்டல், ரெஸ்டாரன்ட், கிளப்பு கள் 31,977 உள்ளன என்கிறது. இங்கும் பதிவு செய்யப்படாத உணவகங்கள் சில மடங்கு கூடுதலாய் இருக்கும் என்பதும், இந்த அரங்கத் தில் சில லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுவதும், அனைவரும் அறிந்ததே. நீண்ட போராட்ட பாரம்பரியம் மற்றும் பொதுவான இயக்கங்களால், மண்டலம் ஏ-வில் உள்ள தலைமை சமையல்காரரின் குறைந்தபட்ச சம்பளம், அடிப்படைச் சம்பளம் ரூ.6,306+பஞ்சப்படி ரூ.4,025 என ரூ.10,331 ஆகும். விலையில்லா சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தர வேண்டும். தராவிடில், நாள் ஒன்றுக்கு ரூ.46.90 உணவுப்படி தர வேண்டும்.
அரசின் கணக்குப்படி மோட்டார் போக்குவரத்து தொழில் நிறுவனங்கள் 2,998 உள்ளன. இவற்றில் 1,41,608 பேர் பணி புரிகின்றனர். இங்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சக் கூலி ரூ.10,000 முதல் ரூ.11,000. அமைச்சர், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வாடகை கார்கள் ஓட்டுபவர்கள் விவரம் தரவில்லை.
தமிழ்நாட்டில் 61,747 ஹெக்டேர் நிலப் பரப்பில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத 2,224 தோட்டங்கள் இருப்பதாகவும் இங்கு 36,043 பெண்கள், 23,090 ஆண்கள் என்று 59,133 பேர் பணி புரிவதாகவும் அறிக்கை சொல்கிறது. இதுபோக, 43,372 பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் 19,87,775 பேர் பணி புரிவதாக அறிக்கை சொல்கிறது. அறிக்கை நிரந்தர, நிரந்தரமற்ற தொழிலாளர்கள் பற்றி எந்த விவரங்களும் தரவில்லை. டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ரூ.14,000 முதல் ரூ.17,000 வரை அனைவருக்கும் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்ய முடிவு எடுத்துள்ளார். அமைச்சரின் கொள்கை அறிக்கை, குறைந்தபட்ச சம்பளம் பற்றி அரசின் கொள்கை என்ன என்பது பற்றி எதுவும் பேசவில்லை. குறைந்தட்ச சம்பளம் தொடர்பான அதிகபட்ச மவுனம், இந்த அரசுக்கு பொருத்தமானதுதான்!
பிரச்சனைகளைத் தீர்க்கும் பொறியமைவுகள்
2011 - 2016ல் 27,507 தொழில் தகராறுகள் எழுந்ததாகவும் அவற்றில் 10,268 தீர்க்கப்பட்டதாகவும் அறிக்கை சொல்கிறது. மீதமுள்ளவை என்னவாயின என அறிக்கை சொல்லவில்லை. 153 கதவடைப்புக்களை, வேலை நிறுத்தங்களை அரசு தீர்த்து முடிவு கண்டதாக அறிக்கை சொல்கிறது. 31.03.2016ல் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் எண்ணிக்கை 12,984 என்றும் 2015 - 2016ல் புதிதாகப் பதிவானவை 182 எனவும் அறிக்கை சொல்கிறது. 2011 முதல் 2015 வரை தமிழ்நாட்டில் 12 தொழிலாளர் நீதிமன்றங்கள் 13,390 வழக்குகளை, தொழில் தீர்ப்பாயம் 159 வழக்குகளை முடித்துள்ளதாகச் சொல்லும் அறிக்கை, கோவையில் ஒரு கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம் வரும் என்கிறது. தமிழ்நாட்டில் தொழிலாளர் நீதிமன்றங்களில் தொழில் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எவ்வளவு என்பது பற்றி அறிக்கை சொல்லவில்லை.
தோல் பதனிடுதல், தமிழ்நாடு ஆஸ்பெஸ்டாஸ், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகத்தில், பீடி தொழிலில் சம்பள உயர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன என அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த 5 வருடங்களில் வேலையாள் இழப்பீட்டு வழக்குகள் 14,892 முடிந்து உடல் உறுப்பு, உயிர் இழப்பு நஷ்ட ஈடு ரூ.263.12 கோடி வழங்கவும், 12,284 பணிக்கொடை வழக்குகள் முடிந்து ரூ.112.24 கோடி பணிக்கொடை வழங்கவும், 1,068 பிழைப்பூதியம் கோரும் வழக்குகளில் ரூ.3,07,46,000 பிழைப்பூதியம் வழங்கவும் உத்தரவாகி உள்ளதாகவும் அறிக்கை சொல்கிறது. போக்குவரத்து கழங்களில், கூட்டுறவு சொசைட்டிகளில் பணி ஓய்வு பெறுபவர்களின் கணக்கு முடிக்கப்படாமல் இருப்பது பற்றி, அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் (புதிய திட் டம்) வழங்கப்படாமல் இருப்பது பற்றி அறிக்கை எதுவும் குறிப்பிடவில்லை. தமிழ்நாடு தொழிலக (தொழிலாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குதல்) சட்டம் 1981ன்படி, 12,586 சோதனைகள் நடத்தி, இரு தொடர் வருடங்களில் 480 நாட்கள் பணி முடித்த 1,044 பேரை கடந்த 5 வருடங்களில் நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிக்கை பெருமை பேசுகிறது. எவ்வளவு பெரிய சாதனை!
அறிக்கை தொழில் தகராறுகளில் காவல்துறை முதலாளிகளுக்கு ஆதரவாகத் தலையிடுவது பற்றியோ, தொழிலாளர் துறையினர் மற்றும் தொழிற்சாலை ஆய்வகம் அப்பட்டமாய் முதலாளிகளுக்கு ஆதரவாய் நிற்பது பற்றியோ ஏதும் சொல்லவில்லை. இந்த அருமை பெருமைகளைப் பட்டியிலிடுவது மானக்கேடல்லவா? தொழிலாளர் துறை, வெளிப்படைத் தன்மை இல்லாமல், பொதுநலனுக்கு எந்த அவசர அவசியத் தேவையும் இல்லாமல், வேலை நிறுத்த உரிமையைச் சட்டபூர்வமாகப் பறிக்கும்விதம், ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகத் தொழில்களை பொது பயன்பாட்டு சேவையாக அறிவித்துள்ளது பற்றி அறிக்கை எதுவும் சொல்லவில்லை.
அமைப்புசாரா தொழிலாளர் நலன்
அறிக்கை, அமைப்புசாரா தொழிலாளர் நலன் என்பதே, நலவாரியங்கள் வழங்கும் நலப்பயன்கள் மட்டுமே என்று கருதுவதாகவே தோன்றுகிறது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இதுவரை 25.90 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாகி உள்ளனர். உடலுழைப்பு தொழிலாளர் வாரியம் உள்ளிட்ட 16 வாரியங்களில் 40.60 லட்சம் பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். மொத்தம் 66.50 லட்சம் பேர், ரூ.10 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள கட்டிடம் கட்டுபவர்கள் 1% நல நிதி கட்டியதால், கட்டுமான வாரியத்தில் வந்த நல நிதி ரூ.395.06 கோடி. இந்த ஆண்டு கட்டுமான நல வாரியம் 1.66 லட்சம் பேருக்கு ரூ.11.86 கோடி நலப்பயன்கள் வழங்கிஉள்ளது. ஆளுக்கு சராசரியாய் ரூ.3,726.50. மற்ற அமைப்புசாரா வாரியங்கள் 1.97 லட்சம் பேருக்கு ரூ.64.03 கோடி நல நிதி வழங்கி உள்ளன. ஆளுக்கு சராசரியாய் ரூ.3,250.25. 2011 முதல் 2016 வரை கட்டுமான நல வாரியம் 6.87 லட்சம் பேருக்கு ரூ.216.74 கோடி, ஆளுக்கு சராசரியாய் ரூ.3,154.00, இதர அமைப்புசாரா வாரியங்கள் 14.74 லட்சம் பேருக்கு ரூ.352.64 கோடி நலப் பயன்களும் ஆளுக்கு சராசரியாய் ரூ.2,392.40 வழங்கியதாக அறிக்கை சொல்கிறது. பணியிட விபத்து மரண நஷ்ட ஈடு ரூ.5 லட்சம் என உயர்த்தப்பட்டுள்ளதும், பதிவு செய்யாத தொழிலாளிக்கும் இதனை வழங்கலாம் என்பதும், பிற மாநில இடம் பெயர்ந்த கட்டுமான தொழிலாளரை வாரியத்தில் சேர்க்கலாம் என்பதும், 0.3% நலநிதி 1% ஆக உயர்த்தப்பட்டுள்ளதும் தொழிற்சங்க இயக்கத்தால் நடந்த விஷயங்களே. கட்டுமான நல நிதியை தமிழக அரசு 2% என உயர்த்தி, நலப்பயன்களையும் பயனாளிகள் எண்ணிக்கையையும் சில மடங்கு உயர்த்த முடியும். தொழிற்சங்கங்கள் மீது குற்றம் சுமத்தி வாரியங்களில் இருந்து விலக்கி வைத்துள்ள தமிழக அரசு, வாரியப் பணம் ரூ.18 கோடியை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக, அரசின் இதர செலவுகளுக்காகத் திசைதிருப்பி உள்ளதைப் பற்றி பேசவில்லை.
விபத்துகளிலிருந்து பாதுகாப்பு
பாய்லர் வெடிப்பு, பட்டாசு தீப்பெட்டி கட்டுமான விபத்து, ஆபத்தான உற்பத்திப் பணிகள் (ஹசார்டஸ் புராசஸ்), மனிதர் மலக்கிடங்கு சுத்தம் செய்தல் விபத்துக்களில், உடல் உறுப்புக்களை, உயிர்களை இழந்தவர்கள் எவ்வளவு பேர் என்ற தகவல்கள் அறிக்கையில் இல்லை. பட்டாசு தொழிலில், விபத்தில் இறந்தவர்கள் வாரிசுகளுக்கு, உச்சநீதிமன்ற உத்தரவு படி, ஈஎஸ்அய்/வேலையாள் இழப்பீடு சட்ட நஷ்ட ஈடு போக, ரூ.50,000 நஷ்ட ஈடு கிடைக்க குரூப் பெர்சனல் விபத்து நஷ்டஈடு திட்டம் அமலாகி உள்ளதாகப் பேசும் அறிக்கை, மலக் கிடங்குகளில் மடிந்த மனிதர்கள் பலரை இன்னமும் ஏன் தேடிப்பிடித்து உச்சநீதிமன்றம் சொன்னபடி, ஆளுக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவில்லை என்பதற்கு எந்த காரணமும் சொல்லவில்லை.
வேலை கிடைக்காதோரும் கிடைத்த வேலைகளும்
31.03.2016ல் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்திருந்தவர் எண்ணிக்கை 83,33,864 என்றும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பதிவு செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 72,00,685 எனவும் அமைச்சர் விவரம் தந்துள்ளார். கடந்த 5 வருடங்களில் அரசு மூலம் உருவான வேலை வாய்ப்புக்கள் வெறும் 77,696 எனவும் தனியார் துறை மூலம் 1,42,114 வேலை வாய்ப்புக்கள் உருவானதாகவும் சொல்கிறார். பிரச்சனையின் தீவிரத்தைத் தணிக்க, 10ஆவது 12ஆவது படிப்பவர்கள் தங்கள் தகுதியை ஆன்லைனில் பதிவு செய்தனர் எனவும் அவர்கள் 60,51,582 பேர் எனவும் சொல்கிறார். 10 ஆவது 12 ஆவது முடித்த எவ்வளவு மாணவர்கள் மேல்படிப்பு படிக்கிறார்கள், எவ்வளவு பேர் வேலை தேடுகிறார்கள் என்பது பற்றி அறிக்கை ஏதும் பேசவில்லை.
சென்னையில் 2, விழுப்புரத்தில் 2, கோவை திண்டுக்கல், தருமபுரி, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர் தலா 1 என 15 பிரும்மாண்ட மான தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டதாக அறிக்கை பெருமையுடன் சொல்கிறது. இந்த முகாம்களில் வேலை தேடி வந்த 4,47,496 பேரில் 59,232 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அடுத்த முகாம் ஆவடியில் நடக்க உள்ளது. வேலை கிடைத்தவர்களின் சராசரி மாதச் சம்பளம் ரூ.7,500 - ரூ.8,000தான் என்பது பேசப்படாத விஷயம்.
சுயமரியாதையைக் காலில் போட்டு மிதிக்கும் வேலை இல்லாக் காலப்படி
5 வருடங்கள் தொடர்ந்து வேலை இல்லாமல் காத்திருக்க வேண்டும். 40 வயது தாண்டியிருக்கக் கூடாது. தலித் பழங்குடியினர் என்றால் 45 வயது தாண்டியிருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் ரூ.50000 தாண்டி இருக்கக் கூடாது. இந்த எல்லா நிபந்தனைகளையும் நிறைவு செய்தவர்களுக்கு 3 ஆண்டு காலம் வேலை இல்லாக் காலப்படி வழங்கப்படும். எஸ்எஸ்எல்சி தேறவில்லை எனில் மாதம் ரூ.100, தேர்வானால் மாதம் ரூ.150, +2 தேர்வானால் ரூ.200, பட்டப்படிப்பு தேர்வானால் ரூ.300 வேலை இல்லாக் காலப்படி. இதை, அஇஅதிமுக உறுப்பினர்கள் மேசையைத் தட்டி வரவேற்றிருப்பார்களா? அவர்களுக்கு பொதுப் பணத்தில் நாம் மாதாமாதம் தண்டம் அழுவது, சம்பளமும் படிகளும் சேர்த்து ரூ.55,000. இதற்கு மேல் சலுகைகள்.
2011 - 2016ல் 4,67,696 தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை இல்லாக் காலப்படி ரூ.111.61 கோடி (ஆளுக்கு சராசரியாய் மொத்தம் ரூ.2,386.38) பெற்றுள்ளனர். 2015 - 2016ல் ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளுக்குச் சிகரம் வைத்ததுபோல் 63,946 பேர் ரூ.16.91 கோடி (ஆளுக்கு சராசரியாய் ரூ.2,664.42) பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை இல்லா காலப்படி எஸ்எஸ்எல்சி தேர்வு ஆனாலும் ஆகாவிட்டாலும் ரூ.600, +2 முடித்தால் ரூ.750, பட்டதாரி என்றால் ரூ.1000 வழங்கப்படுகிறது. 1,33,998 பேருக்கு ரூ.59.54 கோடி தரப்பட்டுள்ளது. வேலை இன்மை என்ற வெந்த புண்ணில், ஜெயலலிதா அரசு வேலை இல்லாக் காலப்படி என்ற நச்சு வேலைப் பாய்ச்சுகிறது!
பயிற்சியும் திறன் வளர்ப்பும்
மோடியும் ஜெயலலிதாவும் நிறையவே பேசுவார்கள்! அவர்கள் நிறைய பேசுவது, பயிற்சி தந்து திறன் வளர்த்து வேலை வாய்ப்பை அதிகரிப்பது பற்றியே ஆகும். தமிழ்நாட்டில் 71 தொழில் பிரிவுகளில் பயிற்சி தரும் 568 தொழில் பயிற்சி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 483 தனியாருடையது. 85 அரசாங்கத்தினுடையது. (அவற்றில் ஒன்று சிறைக் கைதிகளுக்கானது) 2015 - 2016ல் 29,874 பேர் பயிற்சி பெற்றனர். அரசு பயிற்சி நிலைய மற்றும் அரசு உதவி பெறும் பயிற்சி நிலைய மாணவர்க்கு, பஸ்பாஸ், ஷு, சீருடை, சைக் கிள், லேப்டாப், பாடப் புத்தகங்கள், வரையும் கருவிகள், மாதம் ரூ.500 தரப்படுகிறது. எல்லாம் சரி. பயிற்சி முடிந்ததும் வேலை கிடைத்தால் எவ்வளவு ஆறுதல்! மொத்த அய்டிஅய் இருக் கைகள் 67,075. தனியார் அய்டிஅய் தங்கள் இடங்களில் 50% அரசிடம் சரண் செய்ய வேண்டும். அப்போது அவர்களுக்கு, கிராமப்புறப் பகுதியில் ஒரு பயிற்சியாளருக்கு ரூ.10,000 நகர்ப்புறப் பகுதியில் ரூ.12,000 அரசே வழங்கும். அரசு தொழில் பயிற்சி நிலையங்ளை மேம்படுத்த தனியார் பொதுத்துறை கூட்டு (பிபிபி) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஹுண்டாய், இண்டியா சிமென்ட்ஸ், மாருதி, டாடா, ஃபென்னர், ஜேஎஸ்டபுள்யு ஸ்டீல், சக்தி ஆட்டோ, அரவிந்த் குழுமம், டோ கெமிக்கல்ஸ் (முன்னாள் யூனியன் கார்பைட்) போன்றோர் செயலூக்கமான கூட்டாளிகள். சம்பந்தப்பட்ட தொழில் பயிற்சி நிலையத்திற்கு வட்டி இல்லாக் கடன் ரூ.2½  கோடி வழங்கப்படும். 10 வருடங்கள் கழித்து அவர்கள் மாதம் ரூ.12½  லட்சம் வீதம் 20 தவணைகளில் திருப்பித் தரலாம்.
பயிற்சியாளர்கள் சட்டம் 1961ன் கீழ், பொதுத் துறை மற்றும் தனியார் துறையில் ஒப்பந்தத் தொழிலாளி உள்ளிட்ட மொத்த தொழிலாளர்களில், 2.5% முதல் 10% வரை பயிற்சியாளர்களுக்கு வேலை தர வேண்டும். தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தின்படி, 2,341 தொழில்களில் 7,523 பயிற்சியாளர்கள் 31.03.2016ல் பணியில் உள்ளனர். இவர்களுக்கு முதல் வருடம் செமி ஸ்கில்ட் குறைந்தபட்சச் சம்பளம் 70%, 2ஆம் வருடம் 80%, 3ஆம் 4ஆம் வருடஙகள் 90% தரப்படுமாம்! என்ன தாராளம்! இது போக, தமிழ்நாட்டில் 477 தொழில் பள்ளிகள் உள்ளன. சிறுபான்மையினர் நடத்தும் 22 பள்ளிகளுக்கு பராமரிப்பு உதவி அரசு தருகிறது. இங்கு 18,244 பேர் பயிற்சி பெறுகின்றனர். தனியார் வேலை வாய்ப்பு முகாம்களில் 55,200 பேர் திறன் வளர்ப்புக்கு தேர்வானதாகச் சொல்லும் அறிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 2,27,106 பேரின் திறன் வளர்க்கப்பட்டதாகச் சொல்கிறது. திறன் வளர்த்துக் கொண்டவர்கள் பிறகு என்ன ஆனார்கள்? வேலை கிடைத்ததா? என்ன வேலை? என்ன சம்பளம்?
ஓஎம்சிஎல் என்ற கேலிக் கூத்து
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று தரும் கழகத்தில் தமிழ்நாட்டில் 20,773 பேர் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் 10 குடும்பங்களில் 1 குடும்பத்தில் ஒருவராவது வெளிநாட்டு வேலை பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஓவர்சீஸ் மேன் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், 5 வருடங்களில் 1,164 பேருக்கு வேலை பெற்றுத் தந்துள்ளதாம். 2015 - 2016ல் அன்ஸ்கில்ட் 110, செமி ஸ்கில்ட் 66, ஸ்கில்ட் 136, தொழில் முறையாளர்கள் (புரொபெஷனல்ஸ்) 852 பேர் என 1,162 பேருக்கு வேலை பெற்றுத் தந்துள்ளதாம். வெளிநாடுகளில் வேலை செய்து தமிழ்நாட்டிற்குப் பணம் அனுப்புபவர்கள் எண்ணிக்கை, தொகை, அவர்களின் பிரச்சனைகள், தீர்வு காணும் முறைகள் பற்றி தமிழக அரசு பேசத் துவங்குவது நல்லது.
எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்சும் (ஈஎஸ்அய்) தனியார் மருத்துவமனைகளும்
தமிழ்நாட்டில் 10 ஈஎஸ்அய் மருத்துவமனைகள், 216 ஈஎஸ்அய் மருந்தகங்கள் 1 ஈஎஸ்அய் மருத்துவக் கல்லூரி உள்ளன. இந்த ஈஎஸ்அய் மருத்துவமனைகள் 164 தனியார் மருத்துவமனைகளுடன் ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை வழங்க மொத்தமாக ஒப்பந்தம் செய்து கொண்டு, ரூ.115.50 கோடியை அத்தகைய சிகிச்சைக்காக வழங்கியுள்ளன.
தொகுத்துக் காணும்போது
152 பக்க அறிக்கையின் சாரமான செய்திகளையும், அவை பற்றிய குறிப்புக்களையும் பார்த்தோம். துறைக்கு இடப்பட்டுள்ள ஆணைப்படி, அமைப்பாக்கப்படாத அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களின் பணி நிலைமைகளில் எந்த முன்னேற்றமும், வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் வந்ததாகத் தெரியவில்லை. தொழிலாளியின் பாதுகாப்பு ஆரோக் கியம் என்ற நிலைமைகள் முன்னேறவில்லை. வேலை வாய்ப்போ, திறன் வளர்ப்போ, பயிற்சி தகுதியோ, தேவைக்கு சற்றும் பொருந்தாதாகவே உள்ளன. பயிற்சி ஒப்பந்த இதர நிரந்தரமற்ற தொழிலாளர் முறை, சங்கங்களின் கூட்டு பேர உரிமை பறிப்பு/அரிப்பு, அரசும் காவல்துறையும் முதலாளிகள் பக்கம் சாய்வது என்பவையே நாளும் நடக்கின்றன. லாபங்களைக் காட்டிலும் மனிதர்களுக்கு முன் உரிமை தரும் (பிப்பிள் ஓவர் பிராஃபிட்ஸ்) ஒரு மாற்றத்திற்காக ஒரு சமூகத்திற்காக போராட வேண்டிய அவசியத்தை, அரசின் கொள்கை அறிக்கை பளிச்சென புலப்படுத்துகிறது.
(2016 செப்டம்பர் 01 – 15 மாலெ தீப்பொறி தொகுதி 15 இதழ் 3)

Search