COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, September 2, 2016

ஒரு விவசாயி போல நிலத்தை பண்படுத்திக் கொண்டும் 
நல்ல விதைகளை விதைத்துக் கொண்டும் 
வேலை செய்து கொண்டும் இருப்போம்
அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய பிரச்சாரக்குழு உறுப்பினரும் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் சுப.உதயகுமாருடன் மாலெ தீப்பொறி ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் ரமேஷ் நடத்திய நேர்காணல்
கேள்வி: திடீரென கூடங்குளம் அணு உலையை நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்களே? அதுவும் நேரில் வராமலேயே?

பதில்: இது ஒரு வியாபார நாடகம். கூடங்குளம் அணு உலையின் முதல் அலகை ரஷ்ய அதிபர் திரு.விளாடிமிர் புடினும், இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவும் வீடியோ கான் பரன்சிங் மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கின்றனர். ஏறத்தாழ ரூ.2.5 லட்சம் கோடிக்கு அணு உலை வியாபாரம் செய்யவிருக்கும் புடின் தங்கள் நாட்டு ‘உலகத்தரம்’ வாய்ந்த அணு உலையை ஏன் நேரில் வந்து கையளிக்கவில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. உலகெங்கும் சுற்றித் திரியும் இந்தியப் பிரதமர் தனது கட்சியின் நீண்டநாள் கனவான அணுசக்தி வல்லமைக்கு அடித்தளம் அமைக்கும் கூடங்குளம் உலையை நேரில் வந்து நாட்டுக்கு அப்பணிக்காதது ஏன் என்பதும் மக்களுக்குப் புரியவில்லை. தமிழக முதல்வராவது தன் மாநிலத்தில் உருவாகியிருக்கும் மாபெரும் அணு உலையினை தமிழ் மக்களுக்கு நேரில் வந்து கையளித்திருக்கலாம். 2007, யூலை மாதம் வெறும் அய்ந்து நாட்கள் சென்னை துறைமுகத்தில் தங்குவதற்காக வந்த அமெரிக்க அணு சக்தி கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் அங்கே வரவே கூடாது என்று வாதிட்ட செல்வி.ஜெயலலிதா ஒரு மாபெரும் அணு உலையையே அடுத்த அறுபது ஆண்டுகளுக்கு தமிழ் மண்ணில் எப்படி அனுமதிக்கிறார் என்று மக்கள் கேட்க வாய்ப்பு கொடுக்காதது துரதிருஷ்டமானது. இந்த மூன்று தலைவர்களுமே மக்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். மக்களை சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். தங்கள் பாதுகாப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
கேள்வி:: கூடங்குளத்தில் 1 ஆவது அணு உலையின் உண்மை நிலை என்னவாக இருக்கிறது? இரண்டாவது அணு உலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்: கூடங்குளம் திட்டத்தின் முதலிரண்டு அணு உலைகளுமே தோல்விகரமானவை என்பது உறுதியான தகவல். அவற்றில் அடிப்படை வடிவமைப்புப் பிரச்சனைகள் இருக்கின்றன. உலைகள் அமைந்திருக்கும் இடங்களை தேர்வு செய்வதிலேயே குளறுபடி நடந்திருக்கிறது. அங்கே பெரும் ஊழல் நடந்திருக்கிறது. எனவேதான் கூடங்குளம் திட்டம் பற்றிய அடிப்படை அறிக்கைகளைத் தர மறுக்கிறார்கள். என்றாவது ஒருநாள் இந்த உண்மைகள் நிச்சயம் வெளிவந்தே தீரும்.
கேள்வி: ஜெயலலிதா மக்களின் அச்சத்தைப் போக்கிவிட்டதாகக் கூறியுள்ளாரே? ரஷ்ய அதிபர் புடின், கூடங்குளம் அணுஉலை உயர்ந்த தொழில்நுட்பத்தால் ஆனது என்று கூறியுள்ளாரே?
பதில்: அப்படியானால் கூடங்குளம் பகுதி மக்களை நேரில் வந்து சந்தித்திருக்கலாமே? கலந்துரையாடி இருக்கலாமே? ஓடி ஒளிய வேண்டிய தேவை என்ன?
கேள்வி: விபத்து ஏதும் ஏற்பட்டால் யார் பொறுப்பு என்று சொல்லப்படவில்லையே?
பதில்: கூடங்குளம் அணு உலையின் முதலிரண்டு உலைகளில் விபத்தோ அல்லது அசம்பாவிதமோ ஏற்பட்டால் என்ன மாதிரியான இழப்பீடு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் என்று பிரதமரோ, முதல்வரோ வாயைத் திறக்கவே இல்லை. இந்திய, ரஷ்ய அரசுகள் ரகசியமாக செய்திருக்கும் 2008 பிப்ருவரி உடன்படிக்கையை உள்ளூர் மக்களுக்குத் தெரிவிக்காமல் ஒளித்து வைத்திருக்கிறார்கள். மக்களுக்கான இழப்பீடு ஏற்பாடுகள் பற்றி மக்களுக்குத் தெரிய வேண்டாமா? அல்லது தெரியக் கூடாதா? இது மக்களின் அடிப்படை உரிமை இல்லையா? இந்த ஒப்பந்தத்தின் நகலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளார்கள். அதன்படி அணு உலைப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்று சொல்கிறார்கள். இது மக்கள் போராட்டங்களைத் தடுக்கத்தானே?
பதில்: நிச்சயமாக நாடு முழுவதுமே பாசிச வலை படர்ந்து விரிந்து கொண்டிருக்கிறது. இந்தச் சட்டமும் அந்த பாசிசமயமாக்கலின் அங்கம்தான். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க காங்கிரசுக்காரர்கள் மிசா கொண்டு வந்தார்கள். காவிக்காரர்கள் எம்பிசா (ஙடஐநஅ) கொண்டு வருகிறார்கள். அணு உலைகளை, அணைகளை, பெரிய திட்டங்களைக் காக்க இந்த சட்டம் பயன்படுமாம். சரி, கடலோரப் பகுதிகளையும் இந்தச் சட்டத்தின்கீழ் கொண்டு வரவேண்டிய தேவை என்ன? கடற்கரையோரம் முழுவதும் அணு உலைப் பூங்காக்கள் அமைக்கும்போது இந்த மாதிரி பாசிசச் சட்டங்களைப் பாவிப்பது இயல்புதானே?
கேள்வி: இரண்டு மாதங்களில் 3 மற்றும் 4 அணு உலைகளுக்கான வேலைகளும் அடுத்த ஆண்டிற்குள் 5, 6ஆவது அணு உலைகளும் நிறுவப்பட்டுவிடும் என்று புடின் சொல்கிறார். இது தொடர்பாக பகுதி மக்கள் என்ன கருதுகிறார்கள்? அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
பதில்: தரமற்ற ஒரு பொருளை அதிக விலைக்கு விற்கும் வெளிநாட்டு வியாபாரியான விளாடிமிர் புடின் இதுவும் சொல்வார், இன்னும் சொல்வார். இங்கிருக்கிறவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தமிழகம் மின்மிகை மாநிலம் ஆகிவிட்டது என்றால், கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகள் கட்டாதே என்று மத்திய அரசைத் தடுக்க தமிழக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் இதுவரை குரல் கொடுக்கவில்லை? குறைந்தபட்சம் சட்டமன்றத்தில் ஒரு விவாதம் கூட நடக்கவில்லையே ஏன்? கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலைகள் வேண்டாம் என்பதில் மிகவும் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் மக்களை கடுகளவும் மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதும், அவர்களின் காவல் படைகளும், உளவுப் படைகளும் சாதி, மதம், அரசியல் போன்ற பிரிவினைகளை நரித்தனத்துடன் விதைத்து, வளர்த்தெடுத்து வஞ்சனைகள் செய்வதுமாக இருக்கும்போது, எளிய மக்கள் இவ்வளவு நாட்கள் தாக்குப் பிடித்ததே பெரிய சாதனைதான். கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்கள் தங்கள் பங்கினை அருமையாகச் செய்திருக்கிறார்கள்.
இனி நமது கடமை போராட்டத்தை தமிழகத்தின், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதுதான். இதை ஒரு போராட்ட இயக்கம் செய்வதைவிட, ஓர் அரசியல் கட்சிதான் சிறப்பாக செய்ய முடியும். இதற்கு தெளிவான சித்தாந்தம், பரந்துபட்டப் பார்வை, அர்ப்பணிப்போடு களமாடுபவர்கள் தேவை. எனவே ‘பச்சைத் தமிழகம்’ என்கிற அரசியல் கட்சியைத் துவங்கி இந்திய பொதுவுடைமைக் கட்சி மாலெ (விடுதலை) போன்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கைகோர்த்து இயங்குவது என முடிவு செய்திருக்கிறோம். இந்திய அளவில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து அணுசக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பை புனருத்தாரணம் செய்துகொண்டிருக்கிறோம்.
பாசிசமயமாகிக் கொண்டிருக்கும் பாஜகவின் இந்தியாவில் பசுவுக்காகப் போராடுபவர்கள் மட்டும்தான் தெளிவான வெற்றியைப் பெற முடியும். நுணுக்கமான பிரச்சனைகள், தொலைநோக்குப் பார்வை, வருங்காலச் சந்ததிகள் நலம் என இயங்கும் நம்மைப் போன்றவர்கள் அளவற்ற பொறுமையோடும், அதிக உறுதியோடும், அதீத நம்பிக்கையோடும்தான் களமாடியாக வேணடும். ஒரு விவசாயி போல தொடர்ந்து நிலத்தை பண்படுத்திக் கொண்டும், நல்ல விதைகளை விதைத்துக் கொண்டும், வேலை செய்து கொண்டும் இருப்போம். முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். நாம் பயனடையவில்லை என்றாலும், நம் பிள்ளைகள் அறுவடை செய்து அனுபவிப்பார்கள். அது போதும்.
உனா பேரணி சூளுரை
முடைநாற்றமெடுக்கும் பார்ப்பனீய சாதியமுறை 
வகுத்த வேலைப் பிரிவினையை 
இனி ஒரு போதும் செய்ய மாட்டோம்!
பசுமாட்டைக் கொன்றதாகச் சொல்லப்பட்டு, உனா அருகிலுள்ள மோட சமத்தியானா கிராமத்தைச் சேர்ந்த 3 தலித் இளைஞர்களை, இந்து மதவெறி சக்திகள் அடித்துத் துன்புறுத்தி அதை காணொளி காட்சிகளாக பதிவு செய்து பசுவைக் கொன்றால் இதுதான் நடக்கும் என எச்சரிக்கும் விதமாக சுற்றுக்கு விட்டார்கள். ஆனால் அந்த காட்சிகளே குஜராத்தில் மாபெரும் தலித் எழுச்சிக்கு வித்திட்டுவிட்டது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, ஒடுக்குமுறை, சுரண்டல், பெருந்தொழில் குழும சுரண்டலிலிருந்து விடுதலை கோரி, உனா நோக்கிய பேரணிக்கு பல்வேறு தலித் அமைப்புகள் அறைகூவல் விடுத்திருந்தன. தலித் ஒடுக்குமுறைக்கு எதிராக, மதவெறி பாசிச சக்திகளை எதிர்க்கும் இடதுசாரி, ஜனநாயக முற்போக்கு இயக்க செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். பேரணிக்கு முஸ்லீம் சமூகத்தினர் பெரும் ஆதரவு தெரிவித்தனர்.
பேரணியில் பார்ப்பனீயம், மதவெறி பாசிசம், அரசு பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும், பசுமாட்டு வாலை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு நிலம் தாருங்கள் என்றும் தலித்துகளும் முஸ்லீம்களும் சகோதரர்களே என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பேரணி முடிவில் உனாவில் நடைபெற்ற பொதுக் கூட்ட மேடையில் ‘உலக தலித்துகளே ஒன்றுபடுங்கள்’ என்ற வாசகம் பொறித்த பதாகை வைக்கப்பட்டிருந்தது.
ஜிக்னேஷ் மேவானி, சுபோத் பார்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் இககமாலெ அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கவிதா கிருஷ்ணன் உட்பட இகக (மாலெ) தலைவர்கள், பீகார் சட்டமன்ற உறுப்பினர்கள், புரட்சிகர இளைஞர் கழக பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத் தலைவர்கள், அகில இந்திய மாணவர் கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். அகில இந்திய மக்கள் மேடையைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
பேரணியில் சென்றவர்கள் கிட்டத்தட்ட 350 கிமீ தூரம் கிராமம் கிராமமாக நடை பயணமாகவே சென்றனர். அவர்களிடம் ஒலிபெருக்கிகள் இல்லை. ஆனால் ஜெய்பீம் முழக்கம் விண்ணைப் பிளந்தது. செல்லும் இடம் எல்லாம் அங்குள்ள இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைவரும் பேரணியுடன் இணைந்து கொண்டனர்.
இந்துத்துவ பரிசோதனைக் கூடமான குஜராத்தில், முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு தலித்துகளை பயன்படுத்திய குஜராத்தில் தலித் - முஸ்லீம் இணைந்து புதிய போராட்டத்தை முன்னெடுப்போம் என முழக்கமிட்டு இந்தப் பேரணி நடைபெற்றது.
பேரணியில் கலந்து கொண்ட ரமேஷ் பார்மர் கூறும்போது ‘நாங்கள் வயல்களில் வேலைக்குச் செல்லும்போது தட்டு, தம்ளர் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். விழாக்களில் எங்களுக்கென்று தனிப் பந்திதான் போடுவார்கள், கோயில்களில் வழிபாட்டு உரிமை கிடையாது, நாங்கள் மனிதர்களாகவே கூட நடத்தப்பட்டதில்லை’ என்றார்.
பேரணி முடிவில் சுதந்திர தின நிகழ்ச்சி யாக மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த ரோஹித் வேமுலாவின் தாயார் ராதிகா வேமுலா ‘இந்தச் சுதந்திரம் இந்துக்களுக்கும், உயர்சாதியினருக்கும் மட்டுமானதல்ல, முஸ்லீம்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியினருக்குமானதும் கூட என்பதை அறிவிக்கவே இந்தக் கொடி ஏற்றப்பட்டது’ என்றார்.
இகக(மாலெ)யின் தரௌலி (சிவான், பீகார்) சட்டமன்ற உறுப்பினர் அமர்நாத் யாதவ் பேசும்போது இடதுசாரிகள், அம்பேத்கரிய இயக்கங்களின் ஒற்றுமை இன்றைய காலத்தின் கட்டாயம் எனக் குறிப்பிட்டார். தலித்துகள் இந்த சேவைத் தொழில்களிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அவர்களுக்கு மாற்றுத் தொழிலுக்கு, கவுரவமாக வாழ நிலம் வேண்டும் என்றார். பீகாரில் அதுபோல தலித்துகளுக்கு நில விநியோகம் செய்யப்பட்டதோடு அவை தக்க வைக்கவும்பட்டிருக்கின்றன என்றார். இப்போதும் கூட ஒரு நிலப் போராட்டத்தில் இகக(மாலெ) சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் சிறையிலிருப்பதாக கூறினார். உனா பேரணியில் நிலத்துக்கான போராட்டம் உத்வேகம் பெறட்டும் என்றார்.
குஜராத்தில் தலித்துகளுக்கு வழங்கப்பட்ட 1,63,808 ஏக்கர் நிலமும், 50,000 ஏக்கர் பூதான் நிலமும் படேல், தர்பார் சமூக மக்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அது மீட்டெடுக்கப்பட வேண்டும். அதேபோல் தலித்துகள் மீதான தாக்குதலுக்கு எதிரான தண்டனையும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவாக 3.4 சதமாக உள்ளது.
ஜிக்னேஷ் மேவானி தனது உரையில் பசு மாட்டு வால் பாஜக கழுத்தைச் சுற்றும் கயிறாக மாறும் என்றார். தலித்துகள் தாக்கப்படுவது பற்றி பெரிதும் கவலைப்பட்டு முதலில் என்னைத் தாக்குங்கள் என்று காலதாமதமாக இப்போது பேசி வரும் பிரதமர் மோடி 2013ல் 3 தலித்துகள் இதே குஜராத்தில் நெஞ்சில் சுடப்பட்டு இறந்தபோது எங்கே போயிருந்தார் எனக் கேட்டார்.
உனா மைதானத்தில் பாபாசாகிப் அம்பேத்கர் சொன்ன உறுதிமொழியை மேவானி சொல்ல மொத்த கூட்டமும் திரும்பச் சொல்லி உறுதி ஏற்றுக் கொண்டது.
‘நாங்கள் குஜராத்தின் தலித் இனத்தைச் சேர்ந்த மக்கள், எங்கள் வாழ்நாளில் இனி ஒரு போதும் இறந்த விலங்கின் உடல்களை அப்புறப்படுத்த மாட்டோம், மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடமாட்டோம். பதிலாக கீழ்கண்ட கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வைக்கிறோம். குஜராத்தின் ஒவ்வொரு தலித் குடும்பத்திற்கும் 5 ஏக்கர் விவசாய நிலம் வழங்க வேண்டும். 2016, செப்டம்பர் 15க்குள் இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துவங்காவிட்டால் ரயில் மறியல் போராட்டம் துவங்கப்படும்’ என கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முழக்கமெழுப்பினர்.
உனா பேரணிக்கு முழுமனதுடன் உற்சாகமிகு ஆதரவு அளித்த முஸ்லீம் சகோதரர்களுக்கு நன்றி என்றும் உலகத்திலுள்ள தலித்துகளே, தொழிலாளர்களே, பெண்களே ஒன்றுபடுங்கள் என்றும் அறைகூவல் விடப்பட்டது. வன உரிமைச் சட்டத்தின் கீழ் பழங்குடியினர் மீது போடப்பட்டுள்ள 1,20,000 வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் சமூக மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீடுகள் கூட செய்யாமல் நிலத்தை அபகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத்தை எதிர்த்தும் சிறை செல்லும் போராட்டத்துக்கு தயார் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டாக்டர் அம்பேத்கர் இந்துக்களின் ஒற்றுமைக்காக நின்றார் என்று மோடி வரலாற்றை திரித்துக் கூறி சமூக நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் பார்ப்பனீய சாதி படிநிலையை மூடப்பார்க்கும்போது உனா பேரணி அதற்கு எதிரான சவாலாக சமூக பொருளாதார விடுதலை மற்றும் சாதி ஒழிப்பு என்ற பதாகையுடன் முன்வந்துள்ளது.
நாம் அனைவரும் இந்துக்கள் என்ற முழக்கத்தின் பின்னாலுள்ள பார்ப்பனீய சாதிய சமூகத்தை குஜராத் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. உனா எழுச்சி தலித்துகளின் கவுரவமான வாழ்விற்கு நிலத்தை உத்தரவாதம் செய்யட்டும். சாதிகள் ஒழிக்கப்பட்டு புதிய சமத்துவ சமூகம் வளர ஒரு மைல் கல்லாக அமையட்டும்.
குஜராத்தின் மக்கள் தொகையில் 7 சதவீதம் தலித்துகள் இருக்கின்றனர். இவர்களில் 10 - 12% இளைஞர்கள் கல்லூரி படிப்பு படித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லை. படேல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் கூட குஜராத் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. குஜராத்தின் வளர்ச்சி, வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி (டெவலப்மென்ட் வித்தவுட் எம்ப்ளாய்மென்ட்). எனவேதான் படேல் சமூகம் தனி இடஒதுக்கீடு கேட்டு கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறது.
தலித்துகளில் 7 படிநிலை சாதிகள் உண்டு. தலித்துகளின் மத்திய வர்க்கம் சுவாமி நாராயணா, ஆசாராம் போன்ற மத குருக்களை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். குஜராத்தில் நெசவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களாக இருப்பதால் அவர்கள் தலித் சமூகமாக இருக்கின்றனர். மாட்டிறைச்சியைப் பிரிப்பதில் கூட சாதிய படி நிலை கடைப்பிடிக்கப்படுகிறது. மேல்பகுதி அடிப்பகுதி என பிரிவினை உண்டு.
(2016 செப்டம்பர் 01 – 15 மாலெ தீப்பொறி தொகுதி 15 இதழ் 3)

Search