COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 31, 2016

2017 ஜனவரி முதல் மாலெ தீப்பொறி தனி இதழ் ரூ.10 ஆண்டு சந்தா ரூ.150 என மாற்றப்படுகிறது.

Monday, October 17, 2016

போர் வேண்டாம், போர் வெறி வேண்டாம்
அமைதி வேண்டும், பாகிஸ்தானோடு நல்லுறவு வேண்டும்

எஸ்.குமாரசாமி

பணக்காரர்கள் பணக்காரர்களோடு போரிடும் போது
வறியவர்களே சாகிறார்கள்!
ழான் போல் சார்த் (JEAN – PAUL SARTRE)
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பாரதிதாசன்

உரி தாக்குதலை அடுத்து

காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது செப்டம்பர் 17 அன்று தீவிரவாத தாக்குதல் நடந்தபோது,
காதல்

.வெ.ராமசாமி

(பெரியார் மண்ணில் பெண்கள் ஆணாதிக்க கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவது புதிதாக நடக்கவில்லை.
தலையங்கம்

தமிழக விவசாய சமூகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்

தமிழ்நாடெங்கும் உள்ள தொழிலாளர்கள் ஆயுத பூஜை கொண்டாடினார்கள். (இந்தக் கொண்டாட்டத்தில் சமீப ஆண்டுகளில் மது ஒரு முக்கிய பாகமாகிவிட்டது)
விழுப்புரத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி
இகக மாலெ குழு அறிக்கை

ஆலை உரிமையாளர், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்
உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, துருவை கிராமத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 09.10.2016 அன்று நடைபெற்ற விபத்தில் ஆலை முழுவதுமாக தரைமட்டமானது

Saturday, October 1, 2016

தலையங்கம்
ஜெயலலிதா ‘பூரண குணம்’ பெற வாழ்த்துக்கள்!
ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வந்து கருணாநிதி முதல் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் அவர் நலம் பெற்று பணிக்குத் திரும்ப வாழ்த்துச் சொன்னார்கள். மாபெரும் அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்திவிட்டதாக அனைவரும் தமக்குத் தாமே முதுகுத் தட்டிக் கொண்டிருந்தபோது அந்த அறிவிப்பு வந்தது. அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் தமிழ் நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்! யாருக்கும் எந்த கால அவகாசமும் இன்றி, உடனடியாக மனுத்தாக்கல்!! திருமாவளவன் உண்மையிலேயே தான் உணர்ந்ததை வெளிப் படுத்தினார். அறிவிப்பு அதிர்ச்சி தருகிறது என்றார். தமிழ்நாட்டின் மூத்த, இளைய, சாணக்கிய, மெக்கியவில்லிய அரசியல்வாதிகள் அனைவரையும், யாரும் எதிர்பாராத இந்த அறிவிப்பை வெளியிட்டு ஜெயலலிதா ஒரே வீச்சில் வீழ்த்தினார். படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று காமராஜர் சொன்னதாகச் சொல்வார்கள். எம்.ஜி.ராமசந்திரன் ஜெயித்தார். ஜெயலலிதா அப்படி ஒன்றை முயற்சி செய்து பார்ப்பதாகத் தெரிகிறது.
தேர்தல் அறிவிப்பே அதிர்ச்சி தந்தது எனும்போது இனிதான் மற்ற அரசியல் கட்சிகள் சுதாரித்துக் கொண்டு ஏதாவது செய்தாக வேண்டும். திமுக - காங்கிரஸ் கூட்டணி இதற்கு மேல் கூட்டணி பற்றி பேசப் போவதில்லை. அந்த அணி சற்று சமாளித்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் அஇஅதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் எதிர்க்க முடியாது என்பதற்கு திருமா வளவன் நீண்ட விளக்கம் தந்துகொண்டிருக்கும்போது, மறுபுறம், மக்கள் நலக் கூட்டணி இப்போதுதான் சில நிகழ்ச்சிகளில், மிகவும் துவக்கமாக, ஒரே மேடையில் காட்சி அளித்தது. அவர்கள் இனிதான் மற்றவர்களை அழைக்க வேண்டும். அதிமுக, திமுக இரண்டையும் எதிர்த்து நிற்பதற்கு திருமாவளவன் மாற்று விளக்கம் அளிக்க வேண்டும். இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
ஆனால், அனைவரையும் விட ஜெயலலிதாதான் மிகவும் பயந்திருப்பதைப்போல் தெரிகிறது. மேயர் பதவிக்கு, நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு இருந்த நேரடி தேர்தலை ரத்து செய்தபோதே அது தெளிவாகத் தெரிந்தது. ஜெயலலிதா தனது விருப்பம்போல் அமைச்சர்களை, அதிகாரிகளை மாற்றுவதுபோல், மேயர்களை, நகராட்சித் தலைவர்களை, பேரூராட்சித் தலைவர்களை மாற்ற முடிவதில்லை. இந்தப் பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்திருக்கிற ஜெயலலிதா, அவர்களை மாற்றுவதற்கான அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொள்ள அடுத்து அமைப்புரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் பற்றியும் யோசிக்கலாம். நமக்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அய்ந்து ஆண்டுகளுக்கும் தமிழ்நாட்டின் மாநகராட்சிகளில் ஒரே மேயர் இருந்துவிட்டார் என்றால் பெரிய விசயம்தான். அடுத்தடுத்த பதவிகளுக்கும் இது பொருந்தும்.
இந்தப் பதவிகளுக்கு நேரடி தேர்தல் முறையை ரத்து செய்ததில் ஜெயலலிதா தனது விருப்பம்போல் பதவிப் பறிப்பு நடத்தலாம் என்பதை விட, நேரடி தேர்தலைச் சந்தித்தால் தோற்கடிக்கப்படக் கூடும் என்ற பயமே விஞ்சி நிற்கிறது. ஏனென்றால், வெளியில் என்ன பேசினாலும், வண்ணவண்ண அறிவிப்புகள் வெளி யிட்டாலும், தான் நடத்துவது மிகமிக மோசமான, மக்கள் விரோத, எதேச்சதிகார ஆட்சி என்று அவருக்கே மிக நன்றாகத் தெரிகிறது. மக்கள் மத்தியில் சென்று அஇஅதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும் துணிச்சல் அவருக்கே இல்லை.
திருவாரூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி, காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு வீட்டில் சுவர் ஏறிக் குதித்து தப்பித்து வெளியேறி, வெளியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஊருக்குச் செல்ல காசு வேண்டும் என்று நடுநடுங்கிய நிலையில் கேட்டிருக்கிறார். அவர்கள் அந்தச் சிறுமியை காவல் நிலையத்தில் ஒப்படைக்க, அந்தச் சிறுமியை அவரது தாய் ரூ.1,000க்கு விற்றுவிட்டதாகத் தெரிய வந்தது. அந்தச் சிறுமி இப்போது அரசு காப்பகத்தில் இருக்கிறார். அரசு காப்பகங்கள் பாதுகாப்பற்றவை என்ப தையும் நாம் பார்த்தோம். அந்தச் சிறுமியை 20 மணி நேரம் வேலை வாங்கினார்களாம். மிகவும் கடுமையான வேலைகளைச் செய்யச் சொன்னார்களாம். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதாக ஜெயலலிதா சொன்ன வசந்தத்தில் வெறும் ரூ.1,000க்கு ஒரு தாய் தன் மகளை விற்றுவிட நேர்கிறது. ஜெயலலிதா மக்களுக்கு என்ன பதில் சொல்வார்? வசந்தம் என்றால் இதுதான் என்றா பதில் சொல்ல முடியும்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.
சிறைக்குச் சென்று திரும்பிய பச்சமுத்து உடலில் ஒரு சிறு கீறல் இல்லை. அப்படித்தான் இருக்க வேண்டும். பிணையில் வந்தபிறகு கையெழுத்து போடச் சென்ற அவரை  காவல் துறையின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ராஜேந்திரன் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். பச்சமுத்து அங்கு வருவதற்கு முன்பு அவருக்கு சரவண பவனில் இருந்து சிற்றுண்டி வரவழைக்கப்பட்டிருந்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால் கண்ணகி நகர் கார்த்திக், காவல் நிலையத்தில் இருந்து பிணமாகத்தான் வீடு திரும்பினார். காவல்துறை கண்ணியமாகவும் கறாராகவும் நடந்துகொள்வதாக இந்த இரண்டு சம்பவங்களையும் ஜெயலலிதா விளக்க முற்படுவாரானால், கரூர் காவல்துறையினர் மூன்று பேர் செய்த வழிப்பறி கொள்ளை பற்றி, அது கட்டுப்பாடு வகையைச் சேர்ந்ததா என்று அவர் விளக்க வேண்டும். இந்த கேடு கெட்ட காவல் துறைக்கு ஜெயலலிதாதான் நேரடி பொறுப்பு. மக்களுக்கு என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.
இன்னும் எந்தவித விளக்கமும் தராப்படாமல் உடற்கூறாய்வு கூட நடத்தப்படாமல் கிடக்கிறது ராம்குமாரின் உடல். மின்கம்பியாம். இழுத்தாராம். கடித்தாராம். செத்தாராம். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். ஹிலாரி கிளின்டனுக்கு ‘முன்மாதிரியாக’ இருக்கிற ஜெயலலிதா ஆட்சியில் இது நடந்துள்ளது என்றால், என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்க பயப்படுகிறார்.
ஜெயலலிதாவின் நம்பகமான அமைச்சர்களில் ஒருவராக இருந்த நத்தம் விசுவநாதன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடிக்கு மேல் கணக்கில்லாத சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எப்படி வந்தது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.
கொத்தடிமைகள் மீட்கப்பட்டதாக வாரம் ஒரு செய்தி வருகிறது. அவர்கள் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் அல்ல. தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு மாவட்டத்தில் கூட்டம் கூட்டமாய்க் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள். சுமங்கலித் திட்டமே தமிழ்நாட்டில் இல்லை என்று  சட்டமன்றத்திலும் வெளியிலும் அமைச்சர்கள் சொல்வதுபோல் தமிழ்நாட்டில் கொத்தடிமைகளே இல்லை என்று ஜெயலலிதா சொல்வாரா? இல்லை என்றால், அவர்கள் யார்? விருப்பப்பட்டு வேலைக்குப் போனவர்களா? மக்களுக்கு வேறு என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார்.
ஒரு குடும்பத்தில் வறுமை தாளாமல் மூன்று பேர் மொத்தமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். வயிற்று வலி அதனால் தற்கொலை செய்துகொண்டார்கள் என இனி ஜெயலலிதா சொல்ல முடியாது. வறுமையால் தற்கொலை என்று போதுமான அளவுக்கு செய்திகள் வந்துவிட்டன. ஜெயலலிதாவோ, அவரது ஆலோசகர்களோ மூன்று உயிர்கள் போனதற்கு என்ன காரணம் கண்டுபிடிப்பார்கள்? வேறு என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.
கொத்தடிமைகளாக வேலை செய்யச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளாவது படிக்கட்டும் என்று அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள். திரும்பி வந்து பார்க்கும்போது சிலரது குழந்தைகள் உயிருடன் இருப்பதில்லை.  அந்தப் பள்ளிகளை நடத்துபவர்கள் கவனிக்க வேண்டியவர்களை கவனித்துவிட்டால், அந்தக் குழந்தைகள் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்று கூட வெளியில் தெரிவதில்லை. விழுப்புரத்தில் சந்தப்பேட்டையில் சமீபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழப்பில் இன்னும் ‘மர்மம்’ அவிழவில்லை. மற்றவர்கள் மறந்துவிட்டு அடுத்த வேலை பார்க்கச் சென்றுவிடலாம். பெற்றவர்கள் கேள்வி கேட்பார்கள். ஜெயலலிதா என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.
இந்தச் சம்பவங்களில் பல அடுத்தடுத்து  ஒரே வாரத்தின் சில நாட்களில் நடந்தவை. இந்த நூறு நாட்களில் அய்ந்து இளம்பெண்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதுபோன்ற இன்னும் பல சம்பவங்களில், பல்வேறு காரணங்க ளால், மக்கள் உயிரிழப்பது ஜெயலலிதாவின் நூறு நாள் சாதனை ஆட்சியில் நடந்து முடிந்துவிட்டன. இதுவரை எதற்கும் எந்தத் தீர்வும், எந்தப் பதிலும் ஜெயலலிதா சொல்லவில்லை. இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவும் இல்லை. சில இடைநீக்கம், சில இடமாற்றம் ஆகியவைதான் நடவடிக்கைகள் என்றால், அது அவர்களுக்கு மயிலிறகால் வருடப்படுவது போன்றதே. யார் மீதும் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாததே கடுமையான குற்றம் எதுவும் நடக்கவில்லை என்பதற்கு சாட்சி என்றா சொல்வார்?
புதிதாக அறிவிக்கப்பட்ட 107 அம்மா உணவகங்களில் பணியில் யாரும் அமர்த்தப்படாத தால் அருகில் உள்ள அம்மா உணவகங்களில் இருந்து வந்த உணவு தரப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து செய்ய முடியாததால் அவற்றில் சில மூடப்பட்டு விட்டன. பெரம்பூரில் சமுதாய நலக் கூடம் அம்மா உணவகமாக மாற்றப்பட்டது. புரசைவாக்கத்தில் குப்பைத் தொட்டி இருந்த இடத்தில் அம்மா உணவகம் வந்துள்ளது!
விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கர்நாடகத்துடன் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். காவிரி தாண்டி வேறு ஏற்பாடு பற்றி ஜெயலலிதா ஏதும் சொல்ல மறுக்கிறார். நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் அய்ந்து மாதங்களாக கூலி தரப்படவில்லை. ஜெயலலிதா இதற்கு என்ன பதில் சொல்வார்?
தமிழ்நாடு இப்படி கொந்தளித்துக்கொண்டிருக்கும்போதுதான் ஜெயலலிதாவுக்குக் காய்ச்சல் வந்துள்ளது. காய்ச்சல் எதனால் வந்ததென அப்போலோ மருத்துவர்கள் எல்லா கோணங்களிலும் ஆய்ந்தறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளித்திருப்பார்கள். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைவிட, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலோ, அல்லது ‘அந்த’ ஓமந்தூரார் மருத்துவமனையிலோ ஏன் அனுமதிக்கப்படவில்லை?  அந்த மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த ஜெயலலிதா அயராது ஆற்றிய பணிகள் பற்றி அவரே கூட கடந்த அய்ந்து ஆண்டுகளில் பல முறை பேசியிருக்கிறார். அப்படி தரமுயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் ஏன் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்? ஜெயலலிதாவின் இன்றைய ஆகிருதிக்கு அவர் ஒரு பார்வை பார்த்திருந்தாலே அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருப்பார்களே. ஆதிபராசக்தி கடைக்கண் பார்க்க ஏன் மறுத்து விட்டார் என்று அவர் குணம் பெற்று பணிக்குத் திரும்பிய பின் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. சட்டம், ஒழுங்கு, பிற நோயாளிகளுக்கு இடையூறு என எந்தக் காரணத்தையும் அவர் சொல்ல முடியாது. இந்த பிரச்சனைகள் அப்போலோ மருத்துவமனையிலும் இருந்தன.
ஜெயலலிதா குணம்பெற்று ‘பணிக்குத்’ திரும்பிய பிறகாவது, அவர் குணம் பெற வாழ்த்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்தக் கேள்விகளை எல்லாம் தமிழக மக்கள் சார்பாக மேலும் வலுவாகக் கேட்க வேண்டும். ஜெயலலிதா ‘பூரண குணம்’ பெற வாழ்த்துக்கள்!
(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 01 – 15 தொகுதி 15 இதழ் 5)
ஒரு நாள் முழுவதும் இந்துத்துவா வன்முறைக் கும்பலின் பிடியில் சிக்கிய கோவை
இந்து முன்னணியின் முழுஅடைப்பு அழைப்பை செயல்படுத்தித் தந்த தமிழக அரசு
கடந்த 10 ஆண்டுகளில், ஆட்சியில் இல்லாத திமுக, அஇஅதிமுக அல்லது தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட பல பொது வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. காவிரி பிரச்சனை முதல் பல்வேறு  ஜனநாயக பிரச்சனைகள் மீது  முழு அடைப்புக்கு, பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்புக்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், அப்போதெல்லாம் அரசு, பேருந்துகளை இயக்கியுள்ளது; சகஜ வாழ்க்கை இருந்தாக வேண் டும் என, அந்த வேலை நிறுத்தங்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது. ஆனால், 23.09.2016 அன்று, தமிழக அரசும் காவல்துறையும் கோவையில் கடந்த காலத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுள்ளன.
22.09.2016 அன்று இரவு 11.00 மணிக்குப் பிறகு, இந்து முன்னணியின் மாவட்ட அளவிலான சசிகுமார் என்ற ஒரு நிர்வாகி, கோவை துடியலூர் கவுண்டர் மில் அருகில் தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார். இது வரை (28.09.2016 மாலை 6.00 மணி) குற்றவாளி என எவரும் கைது செய்யப்படவில்லை. வழக்கம்போல், மதவாத நஞ்சு உமிழும் தினமலர் மட்டும், ‘பசு விவகாரமா’, ‘ஸ்லீப்பர் செல்’ ‘அதிரவைக்கும் பிளான்’ என்று பரபரப்பான தலைப்பிட்டு, இசுலாமியர்களுக்கு எதிரான மதவாத வன்முறையைத் தூண்டும் தன் பணியை செய்துள்ளது.
23.09.2016 அன்று விடியற்காலை 3.30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் இந்துத்துவா சக்திகள் தங்கள் வெறியாட்டத்தைத் துவக்கிவிட்டார்கள். வடகோவை சண்முகா தியேட்டர் எதிரிலுள்ள பள்ளிவாசல், சுக்கரவார் பேட்டை பட்டுநூல்கார சந்து பள்ளிவாசல், கெம்பட்டி காலனி லிங்கேச கவுண்டர் தோட்டம் பள்ளிவாசல் ஆகியவற்றின் மீது குண்டுகள் வீசப்பட்டன.
அரசும், காவல்துறையும் இந்த நிகழ்ச்சிகளிலிருந்தும், திருப்பூரில் 25.09.2016 அன்று இந்து முன்னணி பொதுப்பேரவை கூடுகிறது என்ற தகவல்களிலிருந்தும், எச்சரிக்கை அடைந்து, சூழலைச் சரியாகக் கையாண்டு நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்திருக்க வேண்டும். ஆனால், 23.09.2016 அன்று, இந்துத்துவா வன்முறைக் கும்பல் பிடிக்குள் கோவை, திருப்பூர் மற்றும் மேற்கு மாவட்டங்களின் சில பகுதிகள் இருந்ததை, தமிழக அரசு உத்தரவாதப்படுத்தியது.
முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு இருந்ததால் காவல்துறையும் அரசு நிர்வாகமும் தடுமாறி விட்டன என்று, சிலர் சொல்ல வாய்ப்புண்டு. ஆனால், அது சரியல்ல. தமிழ்நாட்டின் அமைச்சர்கள், ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உயர்காவல்துறை அதிகாரிகள், ஜெயலலிதா என்ன விரும்புவாரோ அதை மட்டுமே செய்வார்கள். அவர் உடல் நலத்தோடு இல்லாத போதும் அவர் சிறையில் இருந்தபோதும், இதுதான் காவல்துறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும், ஆணையில் இருந்த எழுதப்படாத விதியாகும். ஜெயலலிதா தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் என்னவாகும் என்ற கவலையில் இருக்கிறார். அன்புநாதன், நத்தம் விசுவநாதன் மற்றும் ஜெயலலிதாவின் மிகவும் நெருங்கிய உள்வட்டத்தில் உள்ள முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், தாய்லாந்தில் தீவு வாங்கியிருக்கிறார்கள், துபாயில் அடுக்கு மாடி கட்டிடம் சொந்தமாக வைத்துள்ளனர், ஆயிரமாயிரம் கோடிகளில் சொத்து குவித்துள்ளனர் எனச் சொல்லி, அவர்களில் பலர் மீது அமலாக்கத் துறை விசாரணை கிடுக்கிப் பிடியாக பாய்ந்துள்ளது என்ற பின்னணியில், கிடுகிடுத்துப் போயுள்ள ஜெயலலிதா, மத்திய அரசை பகைத்துக் கொள்வாரா? மோடி ஆளும்போது இந்து முன்னணி போன்றவர்கள் வைத்ததுதானே சட்டம். ஜெயலலிதாவிற்கு இருக்கின்ற அரசியல் நெருக்கடி தவிர, அஇஅதிமுகவின் மரபணுவில் (டிஎன்ஏ) இந்துத்துவா நெருக்கம், இந்துத்துவா சார்பு எப்போதுமே இருந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், அரசு எந்திரத்தில் உள்ள அதிகாரிகளும் காவல் துறையினரும் கூட மதச்சார்பின்மைக்கு எதிரான இந்துத்துவா ஆதரவு இசுலாமிய எதிர்ப்பாளர்களே ஆவார்கள். அதில் குறிப்பாக சில மாநிலங்களில், சில குறிப்பிட்ட மாவட்டங்களில் காவல்துறை, இந்துத்துவா காவல்துறையாக இருக்கிறது. 1997ல் அத்வானி கூட்ட குண்டு வெடிப்பிற்குப் பிறகு, கோவை காவல்துறையினர் கிட்டத்தட்ட பகிரங்கமாகவே இசுலாமிய எதிர்ப்பாளர்களாகவும் இந்துத்துவா ஆதரவாளர்களாகவுமே செயல்பட்டுள்ளனர் என்ற புகார் உள்ளது. 23.09.2016 அன்று, பகவத் கீதை வாசகப்படி ‘எது நடக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடந்தது’. அரசாங்கம் திட்டமிட்டு பேருந்துகளை நிறுத்தியது. கல்வி நிறுவனங்களை மூடச் சொன்னது. காவல்துறையே, அச்சுறுத்தும் வகையில் கடைகளை, வணிக நிறுவனங்களை மூடச் சொன்னது. சிறிய அளவிலான எண்ணிக்கையில் இருந்த இந்து முன்னணி இளைஞர்கள், தலையில் காவித் துணி கட்டிக் கொண்டு, கைகளில் தடிகளும், கொடிகளும் வைத்துக் கொண்டு, காவல்துறை கண் முன்பாகவே உருட்டல் மிரட்டல்களிலும் வன்முறையிலும் ஈடுபட்டனர்.
அரசாங்கத்திற்கு, அரசு நிர்வாகத்திற்கு 23.09.2016 அன்று என்னவெல்லாம் நடக்கும் என்பதை, மிக எளிதாக முன்னரே அறிந்து கொண்டிருக்க முடியும். கோவையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் ஊர்வலங்களில், வன்முறைக் கும்பல்கள், போதை தலைக்கு ஏற, ‘வெட்டுவோம் வெட்டுவோம் துலுக்கன்களை வெட்டுவோம்’ என முழக்கமிட்டார்கள். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (எபிவிபி) கோவை மாநகரச் செயலாளரான அருண் விக்னேஷ், பகிரங்கமாக தொலைக் காட்சி ஊடகங்கள் முன்பு, தன் பெயரையும் தான் வகிக்கின்ற பொறுப்பையும் அறிவித்து விட்டு, ‘பாகிஸ்தான் கொடியை நடுவீதியில் எரிப்பது போல பயங்கரவாதி, தீவிரவாதி ஆகியோரை ஆதரிப்போரை நடுவீதியில் எரிப்பேன்’ என, சட்டம் ஒழுங்கிற்கு சவால் விட்டார்.
23.09.2016 காலை இந்து முன்னணியின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கும்போதே, ‘கோவையை குஜராத்தாக மாற்றுவோம்’ எனப் பிரகடனம் செய்தார். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும், மதவாத குற்றக் கும்பல்களுடன் கைகோர்த்துக் கொண்டன, அரசு நிர்வாகமும் காவல்துறையும்.
குற்றப் பின்னணி உள்ளவர்களின் நடமாட்டத்தை கோவைக்குள் தடுப்பதற்குப் பதிலாக, பக்கத்து மாவட்டங்களில் இருந்தெல்லாம் இந்து முன்னணியினர் பெரும் எண்ணிக்கையில் அரசு மருத்துவமனை அருகில் கூடுவதை, காவல்துறை அனுமதித்து வேடிக்கை பார்த்தது. அரசு மருத்துவமனையிலிருந்து 15 கி.மீ.க்கு அப்பால் தள்ளியுள்ள மதுக்கரையிலிருந்து, 150 இரு சக்கர வாகனங்களில் இந்து முன்னணியினர் ஊர்வலமாக வந்து இசுலாமியர் பெரும் எண்ணிக்கையில் வாழும் பகுதியிலுள்ள ஆத்துப்பாலம் டோல்கேட் வரை வர அனுமதித்தது. இந்துத்துவா மதவாத சக்திகள் வன்முறைக்குத் தயாராக இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிந்தும், இறந்த சசிகுமாரின் உடலை அவரின் தாயார் வீடு உள்ள ரத்தினபுரி, அதற்குப் பிறகு இசுலாமியர் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள் வழியாக எல்லாம் சென்று துடியலூர் மின் மயானம் வரை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதித்தது. இந்த வகையில் இசுலாமியர்களுக்கு எதிராக கலவரம் செய்ய, கொள்ளையடிக்க, சூறையாட, பொருளாதார சுயசார்பை சிதைக்க, உடல்ரீதியாகத் தாக்க, அச்சத்தையும் பீதியையும் உருவாக்க, இந்து முன்னணிக்கு காவல்துறை துணை நின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிறிஸ்தவ தேவாலயங்களும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டன.
இந்துக்கள், கோவையின் பெரும்பான்மை மக்கள், இசுலாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் என்று காட்ட, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் முயன்றுள்ளனர். கலவரம் கோவை மாவட்டம் முழுவதும் நடக்காமலே, அரசாங்கமே வெற்றிகரமாக கலவரக்காரர்களின் பின்னால் நின்று, மாவட்டம் முழுவதும் முழு அடைப்பை உறுதி செய்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதத்தை, தேசியம் கொண்டு முறியடிக்க வேண்டும் என மோடியின் சங்பரிவார் சொல்லும் பின்னணியில், பாகிஸ்தானோடு பதட்டத்தை நாளும் அதிகரிக்கும் பின்னணியில், 23.09.2016 சம்பவத்தைக் காண்பது நல்லது.
இறந்தவர் எதனால் இறந்தார், அவரை யார் தாக்கினார்கள் என்பதில் பல கருத்துகள் உள்ளன. இறந்தவரின் சாதியும் அவர் சாதி மாறி செய்த திருமணமும்கூட காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த காலத்தில் இந்துத்துவா அமைப்புகளின் நிர்வாகிகள், கவனம் பெற, பதவிகள் பெற, காவல்துறை பாதுகாப்பைப் பெற, தாமே தம் வீட்டில் குண்டு வீச ஏற்பாடு செய்த சம்பவங்களும், சுசீந்திரத்துக்கு கடத்தப்பட்டதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டதும் கூட காணத்தக்கவை. இவர் களில் முக்கிய புள்ளிகள் ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து தாதாக்கள் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுப்பவர்களாக உள்ளனர். சமீபத்தில் நடந்த ஓசூர், திண்டுக்கல் கொலைகள், இந்தப் பின்னணிகள் கொண்டவையே. சசிகுமார் கொலைக்கு முன்பாக, கோவையில் விநாயகர் சதுர்த்தி வசூல் தொடர்பாக, வெவ்வேறு இந்துத்துவா அமைப்புக்கள் மத்தியில் பகைமையும் மோதலும் நிலவி வந்தன. ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் சசிகுமாரை கொன்றிருந்தாலும் சட்டப்படி விசாரணை, கைது, வழக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை என்பதைத் தாண்டி வன்முறைக் கலவரத்தில் ஈடுபட இந்து முன்னணியினருக்கு சட்டமும் நாகரீக சமூகமும் இடம் தரக் கூடாது.
செப்டம்பர் 24 அன்று, சில நூற்றுக்கணக்கில், இகக(மாலெ) தோழர்கள் தாமோதரன், வேல்முருகன் உள்ளிட்ட இடதுசாரி இயக்கத்தினரும் இந்துத்துவா வன்முறையை ஏற்காத பலரும் திரண்டு, கண்டனம் முழங்கினர்.
இந்தக் கலவரம் பற்றிய செய்திகள் வெளியிடுவதிலும் தினமலர் போன்ற ஊடகம் மோசமான பாத்திரம் வகித்தது. வட மாநில இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டு கொள்ளையடித்ததாக, அவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்ட முயற்சி செய்தது. பாஜக வின் எச்.ராஜா, ஒரு படி மேலே போய், கலவரம் செய்தவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்க தேசத்தவர் என அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம், விஷப் பிரச்சாரம் செய்தார்.
கோவை முழுவதும் இந்து முன்னணியின் வன்முறை, மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் வெறுப்பையும் சீற்றத்தையும் உருவாக்கியுள்ளது. இதனைக் கணக்கில் கொண்டே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட காவல்துறை, இந்து முன்னணியினர் பலரை கைது செய்தனர். 28.09.2016 அன்று சசிகுமார் அஸ்தியை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஊர்வலமாகச் சென்று கரைக்க, இந்து முன்னணியினர் அனுமதி கேட்டனர். காவல்துறை அனுமதி மறுத்து உறவினர்களை மட்டுமே அஸ்தி கரைக்க அனுமதித்தனர். இந்து முன்னணியின் முழுஅடைப்பு அழைப்பு மக்களால் நிராகரிக்கப்பட்டது. இடதுசாரி இயக்கம், சுரண்டல் எதிர்ப்பு போராட்டத்தோடு மதவெறி சாதிவெறி எதிர்ப்புப் போராட்டங்களையும் கருத்துத் தளத்திலும் களங்களிலும் தீவிரமாக நடத்த வேண்டிய அவசர தேவை முன்வந்துள்ளது.
இந்துத்துவா அமைப்புக்கள் இல்லாத அல்லது அவ்வளவு வலுவாக இல்லாத கோபி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் கூட வதந்திகள் பரப்பப்பட்டு தொழில் நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டன, கோவையில் இந்துத்துவா அமைப்பின் அராஜகம், கட்டபஞ்சாயத்து அதிகமாகி இருக்கிறது, மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், 23.09.2016 தேதிய இந்து முன்னணி வன்முறை, அரசியலமைப்புச் சட்ட மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கு முரணானதாகும்.
(எழுத்தாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பாலமுருகன், 24.09.2016)
நேற்று நடந்த கலவரம் 18 கி.மீ. அளவிற்கு நடந்துள்ளது. கடந்த கோவை கலவரத்தில் இந்துத்துவா அமைப்புக்கள் வலுவாக இருந்த உக்கடம், கெம்பட்டி காலனி, கண்ணப்ப நகர் போன்ற பகுதிகளில் இருந்த தலைவர்கள் பலர் சிறையில் இருக்கின்றனர். தற்போது இந்த அமைப்புக்கள் கவுண்டர் மில்லில் இருந்து மேட்டுப்பாளையம் வரை உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் இரு பகுதிகளிலும் சிறுசிறு கிராமங்கள் வரை வேரூன்றி உள்ளனர். இந்த இளைஞர்களின் பெற்றோர்கள் இடதுசாரி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள். அப்போது இந்துத்வா அமைப்புக்கள் வலுவாக இல்லை. நிறைய பஞ்சாலைகள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இடதுசாரி நடவடிக்கைகள் குறைந்து போனதும், இந்துத்துவா அமைப்புக்கள் செல்வாக்கு பெற ஒரு காரணம் ஆகும்.
சம்பவத்திற்குப் பிறகு பெரிய கலவரம் நடப்பதை தடுத்திருக்கலாம். இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி தந்தது சந்தேகத்தை உருவாக்குகிறது. ஜிஹெச்சிலிருந்து துடியலூர் செல்ல வேறு வழி இருக்கும்போது இசுலாமியர்கள் நிறைந்த டவுன் ஹால், கோட்டைமேடு, மரக்கடை வழியாக அனுமதி அளித்தது தவறு. காவல்துறையே இறந்தவர் உடலை அவர் உறவினர்களிடம் துடியலூரில் ஒப்படைத்திருக்கலாம். பேருந்துகளுக்கு பாதுகாப்பு கொடுத்து ஓட்டியிருக்க வேண்டும். முக்கிய பகுதிகளில் காவல் பாதுகாப்பை அதிகரித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தும்பை விட்டு வாலைப் பிடித்ததில் பயனில்லை. இந்துத்துவா அமைப்புக்கள் வளர இங்கு தொழில் வியாபாரம் நடத்தும் பல வடஇந்தியர்களும் காரணம். அவர்கள் பாஜகவில் இருப்பதே பாதுகாப்பு என்று கருதுகின்றனர்.
(எழுத்தாளர் முருகவேள், 24.09.2016)
எனதருமை கடவுள் நம்பிக்கையாளர்களே!
உங்கள் கடவுளின் பெயரால்தான் - சிலர்
மனிதர்களைக் கொல்கின்றனர்
உங்கள் கடவுளின் பெயரால்தான் - சிலர்
குண்டுகள் வெடிக்கின்றனர்
அமைதியாய் வேடிக்கை பார்ப்பது
அறமாகுமா?
தயங்கியே கடந்து செல்வது
தர்மமாகுமா?
உங்கள் அமைதியே
அவர்களின் செயலுக்கு
அங்கீகாரம்
உங்களின் தயக்கமே
அவர்களின் செயலுக்கு
அனுமதி
உங்கள் மவுனத்தின் பாரங்களை
உடனே இறக்கி வையுங்கள்
உங்கள் மனச்சாட்சிக் கதவுகளை
இப்போதே திறந்து வையுங்கள்
புதிதாய் ஒரு உலகம்
கண்முன்னே விரிவதைப் பாருங்கள்
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பைப் போல - அது
அவ்வளவு அமைதியானது
ஓடும் நதியின் சலசலப்பைப் போல - அது
அவ்வளவு அழகானது
ஒரு பிஞ்சுக் குழந்தையின் புன்னகையைப் போல - அது
அவ்வளவு அன்பானது
அந்த அழகிய பூமியில்
மனிதமே மதம்
மனித நேயமே கடவுள்
புன்னகையே மொழி உழைப்பே வாழ்க்கை
அங்கு மக்களின் மனங்களில் யாரும்
வெறுப்பை விதைப்பதில்லை
அங்கு மனிதனை மனிதன் - எப்போதும்
வேறுபடுத்திப் பார்ப்பதில்லை
எப்போதும் கொலைகள் விழுவதில்லை
எங்கேயும் குண்டுகள் வெடிப்பதில்லை
ஆயுதங்களைப் புதைத்த மண்மேட்டில்
குழந்தைகள் விளையாடுகின்றன
அவ்விடத்தில் பூச்செடிகள் துளிர்விடுகின்றன
அந்தக் கனவு பூமியை மக்களோடு சேர்ந்து
படைத்தெடுக்க வேண்டும்
அந்தக் கனவு பூமியை மக்களுக்கு
பரிசளிக்க வேண்டும். 
                         - சம்சுதீன் ஹீரா, ‘மவுனத்தின்  சாட்சியங்கள்’ 
இந்தக் கலவரத்தில், இந்த இறுதி ஊர்வலத்தில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி பகுதிகளிலிருந்து வந்தவர்களும் கலந்து கொண்டனர், இசுலாமியர்களும் மசூதிகளும் குறிவைத்துத் தாக்கப்பட்டன, இந்த வன்முறை கோவையின் அமைதிக்கு மக்களின் சகஜ வாழ்விற்கு மதச்சார்பின்மைக்கு விரோதமானதாகும். இசுலாமியர்கள் மிகுந்த நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் இந்த விசயத்தை கையாண்டுள்ளனர். அவர்கள் தங்கள் சமூகம் தாண்டி ஓர் இணக்கம் காண்பதில் அதற்கான சக்திகளுடன் உறவுகள் பேணுவதில் அக்கறை கொண்டுள்ளனர்.
(தந்தை பெரியார் திராவிடர் கழகம் கு.இராமகிருஷ்ணன், 24.09.2016)
பயிற்சியாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்கள்
பிரிக்கால் தொழிலாளர்களின் முன்னுதாரண நடவடிக்கை
பிரிக்கால் நிர்வாகம் தொழிலாளர்களின் உணவகத்தில் உணவுப் பொருட்கள் விலையை உயர்த்துமாறு, ஊதிய உயர்வு ஒப்பந்த மை உலரும் முன்பு இருந்தே கேட்டு வந்தது. தொழிலாளர்கள் இந்த விலை உயர்வு சம்பள வெட்டு என வாதிட்டு ஏற்க மறுத்தனர். இப்போது நிர்வாகம் பயிற்சியாளர்களுக்கு அலுவலகப் பணியாளர்களுக்கு 01.10.2016 முதல் ரூ.8.44 சாப்பாடு ரூ.12 ஆகும், ரூ.12.32 சிறப்பு சாப்பாடு ரூ.18 ஆகும், ரூ.4.81 சிற்றுண்டி ரூ.10 ஆகும், பல்வகை சாப்பாடு ரூ.7.31ல் இருந்து ரூ.12 ஆகும், காபி ரூ.1.61ல் இருந்து ரூ.3.50 ஆகும், தேநீர் ரூ.1.35ல் இருந்து ரூ.3.50 ஆகும், தயிர் ரூ.2.85ல் இருந்து ரூ.5 ஆகும் என அறிவித்தது.
சங்கம் இது தவறு என சொன்னபோது, உங்களுக்கு விலை உயர்வு இல்லாதபோது, தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடாதீர்கள் என நிர்வாகம் ஆலோசனை தந்தது. தொழிலாளர்கள் விலை உயர்வுக்கு எதிராக 24.09.2016 அன்று ஆலை வாயில் ஆர்ப்பாட்டமும் 27.09.2016 அன்று பட்டினிப் போராட்டமும் நடத்தினார்கள்.
நிர்வாகம், பயிற்சியாளர்களுக்காக நிரந்தரத் தொழிலாளர்கள் நடவடிக்கை எடுத்ததை கண்டிக்கும் வகையில், 28.09.2016 அன்று ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. 200 தொழிலாளர்கள் வரை கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்குபவர்களுக்கே விலை உயர்வு கட்டுப்படியாகாது என்ற நிலைமையில், மாதம் ரூ.7,800 என்ற குறைசம்பளம் வாங்குபவர்களுக்கு விலை உயர்வு அநியாயம் என பதிலடி தந்தார்கள்.
பெரியதடாகத்தில் தலித் மக்கள் மீது சாதிவெறி தாக்குதல்
நடவடிக்கை எடுக்க மறுக்கும் தமிழக காவல்துறை
கே.பாலசுப்ரமணியன்
விநாயகர் ஊர்வலத்தில் அதை சாக்காக பயன்படுத்தி இந்துத்துவ சக்திகள் இசுலாமியர் மீது தாக்குதல்கள் நடத்துவது புதிதில்லைதான். கோவையில் உள்ள பெரியதடாகம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஊர்வலத்தை ஒட்டி இந்த ஆண்டு தலித்துகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது சாதி இந்துக்கள் தலித்துகள் மீது நடத்தியுள்ள தாக்குதல்.
இசுலாமியர்களுக்கு எதிராக இந்து - தலித் ஒற்றுமையை கட்டமைக்க இந்துத்துவ சக்திகள் முயற்சி செய்யும்போது, அதே தீவிரத்துடன் தலித் - இசுலாமியர் ஒற்றுமைக்காக நாடு முழுவதும் சக்தி வாய்ந்த குரல்கள் எழுகின்றன. பெரியதடாகத்தில் தலித்துகள் மீது நடந்துள்ள தாக்குதல் தலித் - இசுலாமியர் ஒற்றுமையின் அவசியத்தை மேலும் வலியுறுத்துகிறது.
பெரியதடாகத்தில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிற இந்தப் பிரச்சனையில் தலித்துகள் சாதி இந்துக்கள் 18 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். காவல்துறையினர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சாதி இந்துக்களும் தலித் மக்கள் மீது புகார் கொடுத்துவிட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அந்த கிராமத்தை விட்டு வெளியேறப் போவதாகச் சொல்கிறார்கள். 
இந்தப் பிரச்சனையில் உண்மையில் நடந்தது பற்றி அறிந்துகொள்ள கோவை மாவட்ட இகக மாலெ குழு செப்டம்பர் 16 அன்று பெரிய தடாகத்துக்குச் சென்றது. மாநிலக்குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன், மாவட்டச் செயலாளர் தோழர் கே.பாலசுப்பிரமணியன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் குருசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் நாராயணன், வேல்முருகன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றனர். 
பெரியதடாகத்தில் வேட்டுவ கவுண்டர் குடும்பங்கள் 200 வரை உள்ளன. இவர்கள் நில உடைமையாளர்கள். பலர் செங்கல் சூளை முதலாளிகள். இங்குள்ள செங்கல் சூளைகளில் மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக கொத்தடிமைகள் போல் வேலை செய்கின்றனர். பகுதியில் உள்ள 25 தலித் (அருந்ததியர்) குடும்பங்களில், பட்டப் படிப்பு படித்த மிகச் சில இளைஞர்கள் தவிர, மேல்சாதியினரின் செங்கல் சூளைகளில் வேலை செய்கின்றனர். ஆண்களுக்கு ரூ.175, பெண்களுக்கு ரூ.150 என நாள் கூலி தரப்படுகிறது.
இவர்களில் 10 குடும்பங்களுக்கு மட்டும் வீட்டுமனைக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களின் குடிமனைகளுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. 
கண்ணுக்குத் தெரிகிற நிலைமைகளே, தலித் மக்கள் மீது சாதியாதிக்கம் எந்த நேரமும் ஏவப்படும் சாத்தியப்பாடுகள் கொண்டவையாக இருக்கின்றன.
இந்த ஆண்டு தலித் மக்கள் தங்கள் பகுதி யில் தனியாக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினார்கள். தங்கள் கொண்டாட்டத்தில் தாங்களே ஜமாப் அடித்தார்கள். தலித் மக்கள் தாங்களே தனியாக, சுதந்திரமாக, ஒரு கொண்டாட்டம் நடத்திக் கொள்வதையே சாதி இந்துக்கள் பொறுத்துக் கொள்வது சிரமம். இதில் இந்த முறை சாதி இந்துக்கள் நடத்தும் விழாவில் ஜமாப் அடிக்க மறுத்து, அவர்கள் தங்கள் பகுதியில் தனியாகக் கொண்டாடினால், சாதி ஆதிக்கம் சகித்துக் கொள்ளுமா? வழக்கம்போல், தெருவில் போய்க்கொண்டிருந்த ஒரு தலித்தை வம்புக்கிழுத்து, அதை சாக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சாதி இந்துக்கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவில் தலித் மக்கள் ஜமாப் அடித்துக் கொண்டிருந்தனர். இந்த ஆண்டு ஜமாப் அடிக்க மறுத்தனர். சென்ற ஆண்டு ஜமாப் அடிக்க சாதி இந்துக்கள் தருவதாக ஒப்புக்கொண்ட பணத்தை ஜமாப் அடித்த தலித்துகளுக்குத் தரவில்லை. அவர்களை சாதியால் இழிவுபடுத்தியும் பேசியுள்ளனர். அதனால் இந்த ஆண்டு தலித்துகள் அங்கு சென்று ஜமாப் அடிக்க மறுத்ததுடன் தாங்கள் தனியாக விழா நடத்தி அதில் ஜமாப் அடிக்கவும் செய்துள்ளனர்.
பெரியதடாகம் பகுதியின் தலித் மக்கள் ஜமாப் அடிக்கக் கற்றுகொண்டதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. அவர்கள் பகுதியில் உள்ள பட்டத்தரசியம்மன் கோயில் விழாவில் ஜமாப் அடிக்க ஆகும் பெரும்செலவுக்கு அவர்களால் அவர்கள் மத்தியில் இருந்து நிதி திரட்டிக் கொள்ள முடிவதில்லை. எனவே, தாங்களே ஜமாப் அடிக்கக் கற்றுக்கொண்டனர். வெளியில் இருந்து ஜமாப் அடிக்க வருபவர்களுக்கு கூடுதலாக பணம் தர வேண்டியிருப்பதால் சாதி இந்துக்களும் மிகக் குறைவாக பணம் கொடுத்து தலித் மக்களை தங்கள் விழாவில் ஜமாப் அடிக்க பயன்படுத்திக் கொண்டனர். கூடவே சாதியாதிக்கமும் சேர்ந்துகொள்ள இன்று தலித் மக்கள் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
செப்டம்பர் 5 அன்று இரவே, சாதி இந்துக்கள் சிலர், தலித் குடியிருப்புக்கு வந்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். அன்று இரவே துடியலூர் காவல்நிலையத்தில் வாய் வழி புகார் கொடுத்த தலித் மக்கள், மறுநாள் காலை நேரில் சென்று புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் தரப்பில் மதியம் 2 மணிக்கு மேல்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சாதி இந்துக்கள் சிலர் மீண்டும் தலித் குடியிருப்புக்குச் சென்று அவர்கள் அனைவரும் பகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும் என்றும் இல்லையென்றால் அங்குள்ள வீடுகள் அனைத்தையும் தீக்கிரையாக்கி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். காவல் துறை வழக்கம்போல் உடனடி நடவடிக்கை எடுக்காமல், சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
செப்டம்பர் 7 அன்று தலித் மக்கள் தங்கள் பகுதிக்குள்ளேயே விநாயகர் சிலையை 50 மீட்டர் தூரம் அளவுக்கு எடுத்துச்சென்று அங்கேயே ஒரு சிமென்ட் தொட்டியில் சிலையைக் கரைத்தனர். அப்போதுதான் அவர்கள் மீது சாதி இந்துக்கள் கற்களை வீசி மீண்டும் தாக்குதல் நடத்தினர். அன்றிரவு 9 மணிக்கு கருப்ப சாமி என்பவர் தடாகத்தில் இருக்கும் மருந்து கடையில் தனது மனைவிக்காக மருந்து வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவர் மீது சாதி இந்துக்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை அறிந்து அங்கு வந்த இன்னொரு தலித்தும் தடிகளாலும் செங்கற்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இரண்டு நாட்கள் முன்னரே அங்கு தலித்துகள் மீது தாக்குதல் நடந்துள்ளபோதும் அவர்கள் பாதுகாப்புக்காக காவல்துறையினர் யாரும் அந்தப் பகுதியில் போடப்படாத நிலையில், மேலும் தாக்குதல் நடக்கக்கூடும் என்று அஞ்சிய தலித் மக்கள் அனைவரும் அன்று இரவு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
தலித் மக்கள் கொடுத்துள்ள புகார்களை எதிர்கொள்ள, சாதி இந்துக்களும் தலித்துகள் தாக்கியதாக புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நள்ளிரவில் தலித் வீடுகளுக்குச் சென்று அங்கு சோதனையிட்டு, புகாரை திரும்பப் பெறும்படி அங்குள்ள பெண்களை மிரட்டியுள்ளனர்.
தாக்குதல் நடந்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் சாதி இந்துக்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. தலித்துகள் மறைமுகமான சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளியில் பயிலும் தலித் குழந்தைகள் வகுப்புகளுக்குச் செல்ல அஞ்சும் நிலை உள்ளது. பகுதியின் தலித்துகளுக்கு செங்கல் சூளைகளில் வேலை மறுக்கப்பட்டுள்ளது.
தங்களை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டாக வேண்டும் என்று தலித் மக்கள் உறுதியாக இருக்க உள்ளூர் முதலாளிகள், புகாரை திரும்பப் பெறச் சொல்லி அவர்களிடம் வலியுறுத்துகின்றனர். சமாதானமாக முடித்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். வேறு சில உள்ளூர் தலித் அமைப்புகள் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் கொடுத்து வருகின்றன. இகக மாலெயும் அவர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் கொடுத்துள்ளது.
கோவையில் ஏற்கனவே இந்துத்துவ சக்திகள் வெறியாட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். பெரியதடாகத்தில் தலித் மக்கள் மீது நடந்துள்ள தாக்குதலை உள்ளூர் தன்மை கொண்டது என்று புறக்கணித்துவிட முடியாது. இந்துத்துவ பிளவுவாத சக்திகள் கிடைக்கும் வாய்ப்புக் களை பயன்படுத்தி மக்களைத் துண்டாடக் காத்திருக்கும்போது, இதுபோன்ற தாக்குதல்களின் விளைவுகளை துவக்கத்திலேயே தடுக்க வேண்டியுள்ளது. பெரியதடாகத்தில் இன்னும் நிலைமைகள் சீரடையவில்லை. தலித் மக்கள் இன்னும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. அவர்களுக்கு வேலை, வாழ்வாதாரம் மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பெரியதடாகம் தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தாக்குதல் நடத்திய சாதி இந்துக்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் காயமுற்ற தலித்துகளுக்கு உரிய சிகிச்சையும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்றும் தலித் மக்களை சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக்கியுள்ளவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இகக மாலெ கோருகிறது.
(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 01 – 15 தொகுதி 15 இதழ் 5)
சிவான், சகாபுதீன் மற்றும் இகக மாலெ
திபங்கர்
பத்திரிகையாளர் அஜாஸ் அஷ்ரப்புடன் நடத்திய உரையாடலில் இருந்து
பீகாரில் மற்ற இடங்களில், குறிப்பாக போஜ்பூரிலும், பிற பக்கத்து மாவட்டங்களான பாட்னா, ஜெகனாபாத், ஆர்வால் ஆகிய மாவட்டங்களிலும், இகக மாலெ உருவாகி வளர்ந்ததுபோல்தான், சிவானிலும் இகக மாலெ உருவாகி வளர்ந்தது. நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு எதிராக, கிராமப்புற வறிய மக்களின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மத்தியில் உருவான எழுச்சியில்தான், நிலமறு விநியோகம், குறைந்தபட்ச கூலி, சமூக/மானுட கவுரவம், அரசியல் உரிமைகள் ஆகிய ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள முக்கியமான பிரச்சனைகள் மீது நடந்த தாக்குப் பிடித்து நின்ற சக்தி வாய்ந்த போராட்டங்களின் ஊடேதான், இகக மாலெ பீகாரில் வளர்ந்தது. ஷாஹாபாத் மற்றும் மகத் பிராந்தியங்களில் 1970களிலும் 1980களின் துவக்கத்திலும் கட்சி உருவாகி வளர்ந்தது; அப்போது கட்சி தலைமறைவு கட்சியாக இருந்தது; பீகாரில் நெருக்கடி நிலைக்குப் பின் கர்பூரி தாகூர், ராம்சுந்தர் தாஸ் ஆகியோர் ஆட்சி இருந்த குறுகிய காலம் தவிர, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது; சிவானில் 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் துவக்கத்திலும் கட்சி வளரத் துவங்கியது. இந்த கால கட்டத்தில் இகக மாலெ வெளிப்படையான வெகுமக்கள் போராட்டங்கள் மூலம் விரிவடைந்தது; பீகாரில் நீண்ட காலம் இருந்த, காங்கிரஸ் ஆட்சியில் இருந்து, ஜனதா தளத்தின் துவக்க கால பிளவுபடாத கட்டத்தில் இருந்து தற்போதைய கூட்டணி கட்டம் வரையிலான அதன் நீடித்த ஆட்சியாக மாறியிருக்கிற அரசியல் மாற்றத்தின் துவக்கத்தை, பீகார் அப்போது பார்த்தது. 
1980களின் பிற்பகுதியிலும் 1990களிலும் சிவானின் தரோலி ஒன்றியம் கட்சியின் கரு மய்யமாக இருந்தது. இகக மாலெயின் தலைமையில், பெரும்பாலும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நிலமற்ற வறிய மக்களும் குறுவிவசாயிகளும், அந்தப் பகுதியில் விரவிப் பரவியிருந்த, பெரும்பாலும் ராஜ்புத் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுத்துவ சக்திக்கெதிராக போராடினார்கள். தரோலியின் பிஸ்வானியா தர்பார், மிரித்யுன்ஜெய் சிங் மற்றும் அவரது அடியாள் பிரபுநாத் சிங் என்ற நிலப்பிரபுக்களின் தலைமையிலான நிலப்பிரபுத்துவ அதிகாரத்தின் முக்கியமான கோட்டையாக இருந்தது. கிஷ்ணுபாலியின் சம்பு சிங், கவுரியின் கோவிந்த் சிங், பேல்தன்ரியின் வினோத் துபே ஆகியோர் நிலப்பிரபுத்துவ - குற்றகும்பல் கூட்டின் பயங்கரமான அடையாளங்களாக இருந்தார்கள். 1990ல் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், சீராடி தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளராக சகாபுதீன் முதன்முதலில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றபோது, தோழர் அமர்நாத் யாதவும், 1989ல் எம்எல் இயக்கத்தின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் ராமேஷ்வர் பிரசாத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய, 1990ல் 7 சட்டமன்ற உறுப்பினர்களை பீகார் சட்டமன்றத்துக்கு அனுப்பிய, இகக மாலெ வழிநடத்திய வெகு மக்கள் அரசியல் மேடையான இந்திய மக்கள் முன்னணியின் சக்திவாய்ந்த செல்வாக்குமிக்க தலைவராக எழுந்தார். இந்திய மக்கள் முன்னணி/இககமாலெயின் எழுச்சியை தடுக்க நிலப்பிரபுத்துவ சக்திகள் ஆனதெல்லாம் செய்தன; போஜ்பூரின் தன்வர் - பிட்டா கிராமத்தில், வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்படுவதை எதிர்த்த, தங்களது அரசியல்சாசன உரிமையான வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்திய தலித் மக்கள்  கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்; சிவானிலும் தோழர் அமர்நாத் யாதவின் தேர்தல் பிரச்சாரத்தினூடே இந்திய மக்கள் முன்னணியின் செயல்வீரர் தோழர் நந்த் கிஷோர் யாதவ் படுகொலை செய்யப்பட்டார்.
ஆயினும், இகக மாலெயின் முன்னோக்கிய பயணத்தை நிலப்பிரபுத்துவ வன்முறை தாக்குதல்களால் தடுக்க முடியவில்லை. 1995ல் பீகாரில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வடிவமைத்த புகழ்மிக்க தலைவர்களின் ஒருவரும் இகக மாலெ அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான தோழர் ராம்நரேஷ் ராமும், இந்திய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ராமேஷ்வர் பிரசாதும் சாஹர் மற்றும் சந்தேஷ் தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். சிவானின் தரோலியிலும் மைர்வாவிலும் இகக மாலெ வெற்றி பெற்றது. இந்த நேரத்தில் சகாபுதீன் ஜனதா தளத்தில் இணைந்திருந்தார்; சீராடி தொகுதியை தக்க வைத்துக்கொண்டார். அதன் அக்கம்பக்க தொகுதிகளான தரோலியிலும் மைர்வாவிலும் இகக மாலெ தலைவர்கள் அமர்நாத் யாதவும் சத்யதேவ் ராமும் வெற்றி பெற்றார்கள். 1996ல் சகாபுதீன் சிவானில் இருந்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்ற இகக மாலெ மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்தக் கட்டத்தில்தான் குற்ற நடவடிக்கைகள் - அரசியல் கூட்டின் தலைவனாக, தாதாவாக சகாபுதீன் வளர்ச்சி பெற்றார்; அரசியல் எதிரிகளை படுகொலை செய்வது அவரது முக்கியமான செயல்தந்திரமாக இருந்தது. பிரபலமான மாணவர் தலைவரும் ஜவஹர்லால் பல்கலை கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான தோழர் சந்திரசேகர் படுகொலை அந்தப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் படுகொலையாக பரவலாக அறியப்பட்டது; ஆனால், இகக மாலெயின், பல மாவட்ட மட்ட தலைவர்கள் சிவானிலும் கோபால்கஞ்சிலும் படுகொலை செய்யப்பட் டார்கள். தோழர்கள் வியாஸ்பிரதாப் சிங், உமேஷ் பாஸ்வான், சுரேந்திர யாதவ், ஷ்யாம் நாராயண் யாதவ், சுரேஷ் ராம், ராஜ்குமார் போன்ற தியாகிகள் சிவானிலும் கோபால் கஞ்சிலும் சந்திரசேகருடன் கூடவே வாஞ்சையுடன் நினைவுகூரப்படுகிறார்கள். உண்மையில், 1997, மார்ச் 31 அன்று பட்டப்பகலில் சிவானின் ஜேபி சதுக்கத்தில் ஒரு தெருமுனைக் கூட்டத்தில், ஊழல், விலை உயர்வு, தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான ரன்வீர் சேனா வின் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராக ஏப்ரல் 2 அன்று நடக்கவிருந்த பீகார் முழு அடைப்புக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்த சந்திரசேகர் படுகொலை செய்யப்பட்டார். சிவானின் வளர்ந்து வந்த இளம்தலைவரும் மாவட்டக் கட்சி கமிட்டியின் உறுப்பினருமான தோழர் ஷ்யாம்நாராயண் யாதவ், அங்கு இருந்தார். கூட்டத்துக்காக ஒலிபெருக்கி வைத்திருந்த ரிக்ஷா ஓட்டுநர் புடேலி மியானும் தோழர் ஷ்யாம்நாராயண் யாதவும் அன்று தோழர் சந்திரசேகருடன் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஜவஹர்லால் பல்கலை கழகத்தில் பல ஆண்டு காலம் மாணவர்களுக்கு தலைமை தாங்கி அவர்கள் பிரதிநிதியாக இருந்த தோழர் சந்திரசேகர் அப்போதுதான் தனது சொந்த ஊரான சிவானில் கட்சிப் பணியாற்ற திரும்பியிருந்தார். ராணுவத்தில் பணிபுரிந்த தனது தந்தையை, குழந்தையாக இருந்தபோதே இழந்துவிட்ட தோழர் சந்திரசேகர், அவரது தாயார் கவுசல்யா தேவியுடன் நெருக்கமான பிணைப்புகள் கொண்டிருந்தார். தனது தாயாருக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில், கார்க்கியின் இறவா படைப்பான தாய் நாவலில் வரும் தாயாக தனது தாய் பற்றி விவரித்திருந்தார். சந்து படுகொலை செய்யப்பட்ட பிறகு, கவுசல்யா உண்மையில் ஒரு போராடும் தாயாக  பாத்திரமாற்றினார். தனது அன்பான மகனுக்காக நீதி கோருவது மட்டுமின்றி, அரசு கொடுத்த இழப்பீட்டையும் அதற்கே உரிய கண்டனத்துடன் வாங்க மறுத்தார். மிகவும் முக்கியமாக சந்துவின் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும், அவர் வாழும் வரை அவர்கள் அனைவரும் அவரது குழந்தைகள் என்பதுபோல் உத்வேகமளிக்கும் விதம், ரோஹித்துக்கு நீதி கோரும் போராட்டத்தில் இன்று ராதிகா வேமுலா ஆற்றுகிற பாத்திரம் போன்ற ஒன்றை, அன்று அவர் ஆற்றினார்.
சந்திரசேகர் படுகொலை நாடு முழுவதும், மாணவர் இயக்கத்தை, நீதி விரும்பும் மக்களின் இயக்கத்தைப் பற்ற வைத்தது. குறிப்பாக சிவானில் பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் அரசியல் குற்றமயமாக்கப்படுவதற்கு எதிராக மாணவர் இயக்கமும் மக்கள் இயக்கமும் தீவிரமடைந்தன. இந்த கால கட்டத்தில் பீகாரில், இசுலாமியர் - யாதவர் என்ற ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் புகழ்மிக்கதாகக் கருதப் பட்ட சமன்பாட்டில் பிளவுகள் ஏற்பட்டன. அதிகரித்து வந்த சகாபுதீனின் பயங்கரமும் இறுமாப்பும் சிவானில் யாதவ மக்களின் பெரும்பிரிவினரை அந்நியப்படுத்தியது. தோழர்கள் சந்திரசேகர், ஷ்யாம்நாராயண் யாதவ் படுகொலைக்கு நியாயம் கோரிய இயக்கம், அரசு ஆதரவுடன் சகாபுதீன் நடத்திய பயங்கரத்துக்கு எதிரான மக்கள் சீற்றம் ஆகியவற்றின் ஒன்றுசேர்ந்த விளைவை 1999 மக்களவை தேர்தல்களில் காண முடிந்தது; இககமாலெ வேட்பாளர் தோழர் அமர்நாத் யாதவுக்கு ஆதரவாக வீசிய அலை, கிட்டத்தட்ட சகாபுதீனை, அவரது பயங்கரம், அரசு ஆதரவு ஆகியவற்றுக்கும் அப்பால், வீழ்த்தியது. இந்த மிகப்பெரிய தேர்தல்ரீதியான எதிர்ப்புக்குப் பிறகும் அந்தத் தேர்தலில் சகாபுதீன் பெற்ற வெற்றியின் ரகசியம், சிவானின் நிலப்பிரபுத்துவ சக்திகள் அளித்த ஆதரவில் இருக்கிறது. சிவானில் உள்ள அரசியல் நோக்கர்கள் அனைவருக் கும் இந்த வெளிப்படையான ரகசியம் தெரியும்; இதை இப்போது சகாபுதீனே உறுதிப்படுத்தியுள்ளார்: சிவானில் உள்ள நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு அரசியல் புகலிடம் தந்ததாகவும், அவரது கைதுக்குப் பிறகு மேல்சாதி வாக்காளர்கள் பாஜக பக்கம் போய்விட்டதாகவும் அவர் வருத்தப்பட்டுள்ளார்.
குற்றகும்பல் - அரசியல்வாதிகள் கூட்டு அல்லது அரசியல் குற்றமயமாக்கப்படுவதில் சகாபுதீனை கிட்டத்தட்ட தனித்ததோர் உதாரணம் என இசுலாமியர் வெறுப்பு விவாதப் போக்கு சொல்லப் பார்க்கலாம். ஆனால், பீகாரின் தற்போதைய அரசியல் சூழலை மேலோட்டமாக பார்த்தால்கூட, சகாபுதீனுக்கு அவரைப் போன்றவர்களுடன் போட்டி அல்லது கூட்டு இருப்பது தெரியும். சப்ரா - சிவான் - கோபால்கஞ்ச் பகுதி என்று மட்டும் பார்த்தாலும் சகாபுதீனுக்கும் சதீஷ் பாண்டேவுக்கும் (உள்ளூரில் சட்டிஸ் பாண்டே என்று அழைக்கப்படுகிறார்) அல்லது சகாபுதீனுக்கும் பிரபுநாத் சிங்குக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பது அங்குள்ள மக்களுக்குத் தெரியும். அரசியலில் குற்றச்செயல்கள் நடப்பதுடன் மதவெறி நஞ்சு தோய்ந்திருக்கும் உத்தரபிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் போன்றவர்களைப் பார்க்க முடிகிறது. அதிகாரம் படைத்தவர்கள் தண்டனை பற்றி அச்சமின்றி இருப்பதில் சகாபுதீன் தனித்தவர் அல்ல. கோத்னானி போன்றவர்களும் குஜராத்தில் உள்ள அவரது தலைவர்களும், அல்லது, கோப்ராபோஸ்ட் காணொளி காட்சிகள் அம்பலப்படுத்தியது போல், ரன்வீர் சேனா தளபதிகளும் சகாபுதீன் போலவே தண்டனை பற்றிய அச்சமின்றி இருக்கின்றனர். நமது நீதி மற்றும் சிறை கட்டமைப்புகளின் ஏற்றத்தாழ்வான இயல்பால், சகாபுதீனுக்கு பிணை தரப்படுகிறது; சஞ்சய் தத்துக்கு மீண்டும் மீண்டும் பரோல் தரப்படுகிறது; ஆனால், பீகாரில் ஷா சந்த் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் தடாவில் ஆயுள் தண்டனை தரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சிறையிலேயே சாகவும் நேர்கிறது. இதே கட்டமைப்பு, கிராமப்புற வறியவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்படுவது, மதவெறி தாக்குதல்கள் ஆகியவற்றில் குற்றம் புரிந்தவர்களை விடுதலை செய்கிறது; அப்சல் குரு, யாகூப் மேமன் போன்றவர்களை, சந்தர்ப்பங்களின் சாட்சி என்ற பெயரில், நாட்டின் கூட்டு மனசாட்சிக்கு பதில் சொல்வது என்ற பெயரில் கூட, தூக்கிலிட்டு விடுகிறது.
இன்று சகாபுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளபோது, உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் அது இருக்கிறபோது, தரோலியின் இகக மாலெ சட்டமன்ற உறுப்பினரும் அவிகிதொசவின் பீகார் மாநிலத் தலைவருமான தோழர் சத்யதியோ ராம், புரட்சிகர இளைஞர் கழகத் தின் தேசியத் தலைவர் தோழர் அமர்ஜீத் குஷ்வாஹா ஆகியோர் இன்னும் சிறையில் உள்ளனர். 2010 மற்றும் 2015 பீகார் சட்ட மன்றத் தேர்தல்களில் சீராடி தொகுதியில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட தோழர் அமர்ஜீத் குஷ்வாஹா மீது தரோலியின் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர்தான் பொய் வழக்கு தொடுத்தார். ஜனநாயகத்தில் ஆளும்கட்சியின ருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் வேறு வேறு நீதி வரையறைகள் இருக்க முடியாது. கட்டமைப்பு ஏற்றத்தாழ்வானதாக இருந்தாலும் நீதிக்கான போராட்டம் விடாப்பிடியானதாக இருக்க வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்க முடியாது.
இககமாலெயை ஒடுக்க நிலப்பிரபுத்துவ சக்திகளின் ஆதரவு இருந்ததை சகாபுதீன் ஒப்புக்கொள்கிறார்
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் வந்திதா மிஸ்ரா 2016, செப்டம்பர் 18 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் ‘முகமது சகாபுதீனுடன் ஒரு சந்திப்பு: தனது இடத்தை தேடிக் கொண்டிருக்கும் பீகாருக்கு அவரது விடுதலை என்ன சொல்கிறது?’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், ‘வறிய மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருப்பது பற்றியும் அவர் வறிய மக்களுக்கு உதவிகள் செய்வது பற்றியும் பல செய்திகள் இருந்தாலும், இககமாலெவுக்கு எதிரான தங்கள் சண்டையில் உதவ அவரை வளர்த்துவிட்ட அந்தப் பகுதியின் நிலவுடைமை சாதியினர் ஆதரவில்தான் சிவானின் சாஹிப் வாழ்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று’ என்று சொல்லியுள்ளார்.
அவருடன் பேசியபோது சகாபுதீனே, ‘அந்த காலத்தில், நிலப்பிரபுத்துவ சக்திகள் என்று இககமாலெ அடையாளப்படுத்தியவர்கள் என்னுடனும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனும் இருந்தார்கள். அப்போது இரண்டே இரண்டு பிரிவுகள்தான் இருந்தன. சிவானில் உள்ள மேல்சாதியினருக்கு நான் அரசியல் புகலிடம் கொடுத்தேன்; அவர்கள் இப்போது பாஜகவுக்குப் போய்விட்டார்கள்’ என்று சொன்னார்.
(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 01 – 15 தொகுதி 15 இதழ் 5)
பருப்பு கொள்முதல், இருப்பு, விநியோகம் தனியாருக்கா?
தலைமை பொருளாதார ஆலோசகரின் பரிந்துரை பருப்பு வேகாது
மக்கள், குறிப்பாக சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள், புரதச் சத்துக்கு பருப்பு வகைகளை பெரிதும் சார்ந்திருக்கிறார்கள். சென்ற ஆண்டு வல்லூறுபோல் உயரச் சென்ற பருப்பு விலை பழைய நிலைக்குத் திரும்பவில்லை.
பருப்பு விலை உயர்வுக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நிலவிய மழையின்மையும் அதனால் ஏற்பட்ட குறைவிளைச்சலும் முதன்மை காரணம் என்று மத்திய அரசு சொன்னது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பின்வரும் நடவடிக்கைகள் எடுத்ததாகச் சொல்லப்பட்டது.
  • பருப்பு இறக்குமதி செய்யப்பட்டது.
  • இருப்புக்கு (ஸ்டாக்) வரம்பு விதிக்கப்பட்டது.
  • கிலோ ரூ.100 என்ற உயரத்தைத் தொட்டுவிட்ட கொண்டைக் கடலைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள ஊக வணிகம் தடை செய்யப்பட்டது.
  • அரசிடம் உள்ள சேமிப்பு இருப்பின் (பஃப்பர் ஸ்டாக்) அளவை 1.5 லட்சம் டன்னில் இருந்து 8 லட்சம் டன்னாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • கருப்புச் சந்தை, பதுக்கல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • கார்ட்டல்கள் உடைக்கப்பட்டன.
  • அரசு நியாய விலைக் கடைகளில் ரூ.120க்கு பருப்பு விற்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு சென்ற ஆண்டு ரூ.200அய் தாண்டிய பருப்பு வகைகளின் விலை பிறகு ஓரளவு இறங்கி அங்கேயே நிற்கின்றன. இன்றும் உளுத்தம்பருப்பு ரூ.190, துவரம்பருப்பு ரூ.165 என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பருப்புகள் கூடுதல் விலையில்தான் விற்கப்படுகின்றன. ஆனால் மத்திய அரசு பருப்பு விலை இறங்கிவிட்டதாக, ரூ.100க்கு துவரம்பருப்பு கிடைப்பதாகச் சொல்கிறது. எந்தச் சந்தை என்று சொன்னால் நாமும் வாங்கிக் கொள்ளலாம்.
உற்பத்தி, இறக்குமதி, இருப்பு நிலைமைகள்
நாட்டு மக்களின் பருப்பு நுகர்வு தேவை 25 மில்லியன் டன் எனும்போது 2014 ஜு÷லை முதல் 2015 ஜுன் வரையிலான பருப்பு உற்பத்தி 17 மில்லியன் டன்னாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டு 19 மில்லியன் டன்னாக இருந் தது. 2015 - 2016ல் உற்பத்தி 16.5 மில்லியன் டன் என இன்னும் குறைந்துள்ளது.
2014 - 2015ல் 4.58 மில்லியன் டன் பருப்பு வகைகளும் 2015 - 2016ல் 5.79 மில்லியன் டன் பருப்பு வகைகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. செலவு முறையே ரூ.14,396 கோடி, ரூ.25,691 கோடி என ஆகியுள்ளது. 2016 - 2017 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் 7 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட் டுள்ளது. ஜுன் 13 தேதிய நிலவரப்படி 1,15,000 டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 2016 ஜுலை வரை 69,000 டன் இருப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி, இருப்பு எல்லாம் சேர்ந்து 2015 - 2016 ஆண்டுக்கு 22.86 மில்லியன் டன் பருப்பு வகைகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையிலும் பற்றாக்குறை நிலவும்.
2016 - 2017ல் பருப்பு உற்பத்தி 20 மில்லியன் டன்னாக இருக்கும் என மத்திய விவசாய அமைச்சகம் மதிப்பிடுகிறது. 2016 - 2017ல் சேமிப்பு இருப்பு 20 லட்சம் டன் என உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை 2017 - 2018 நிலைமைகளை சமாளிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள். அரசு சொல்லும் விவரங்களில் இருந்தே, இந்த ஆண்டும் பருப்பு விலை கட்டுக்குள் வராது என்பது தெரிகிறது.
இந்த நிலையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்க முதன்மை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் தலைமையில் 2016 ஜுலையில், குறைந்தபட்ச ஆதார விலை மூலமும் தொடர்புள்ள பிற கொள்கைகள் மூலமும் பருப்பு உற்பத்திக்கு ஊக்கமளிப்பது என்பது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு செப்டம்பர் 16 அன்று பரிந்துரையை வெளியிட்டுள்ளது. இந்திய போட்டி ஆணையம் அமைத்துள்ள குழு இது. விவசாயத் துறையில் நிலவுகிற நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை புரிந்துகொள்வதில் இந்தக் குழுவின் பரிந்துரைகள் உதவும் என்று ஆணையம் சொல்கிறது. பருப்பு விலை உயர்வுக்கு போட்டிக்கு எதிரான நடைமுறைகளே காரணம் என்றும் சொல்லப்படுவதால் ஆணையம் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகச் சொல்கிறது. குழுவின் பரிந்துரைகள் பருப்பு விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவையாக தெரியவில்லை.
குறைந்தபட்ச ஆதார விலை
குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி கூடுதல் உற்பத்திக்கு, விவசாயத்தை ஊக்குவித்து அதன் மூலம் விலையைக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரை சொல்கிறது. இந்தப் பரிந்துரை வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்தப் பரிந்துரையை, முதல் பரிந்துரையாக, அடிப்படையான பரிந்துரை என்ற பொருள்பட சொல்லிவிடுவதாலேயே, குழு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறது என்று அவசரப்பட்டு சொல்லிவிட முடியாது.
2016 - 2017க்கு மத்திய அரசு பருப்பு வகைகளுக்கு ஜுன் 1 அன்று அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையில் ஆதார விலையும் போனசும் சேர்த்து வெவ்வேறு பருப்பு வகைகளுக்கு ரூ.150 முதல் ரூ.425 வரை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5,000 முதல் ரூ.5,225 வரை அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆதார விலை மற்றும் போனஸ் உயர்வுகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன. இந்த குறைந்தபட்ச ஆதார விலை சென்ற ஆண்டு இருந்ததை விட ரூ.150 முதல் ரூ.200 வரை கூடுதல். ஜுலையில் அமைக்கப்பட்டு செப்டம்பரில் அறிக்கை முன் வைத்துள்ள குழு, குறைந்தபட்ச ஆதார விலையை 2017ல் ரூ.6,000, 2018ல் ரூ.7,000 என (குவின்டாலுக்கு) உயர்த்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது. இது ரூ.1,000த்துக்கும் மேல் கூடுதல்.
குழு மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் தலைமையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதத்தில் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படவுள்ளது பற்றி அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்? ரூ.1,000 வரை உயர்வு பற்றி அப்போதே அவர் ஏன் பரிந்துரைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. பரிந்துரைகளின் மற்ற அம்சங்களைப் பார்க்கும் போது, அவற்றின் பாதகமான விளைவுகள் பற்றி மறைப்பதற்காக குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட அழுத்தம் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்றுமதி தடை, இருப்பு வரம்பு நீக்கம்
விலைக்கட்டுப்பாடு பற்றிய அதன் பரிந்துரைகளில் முதல் பரிந்துரையே ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் இருப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரம்புகளையும் நீக்க வேண்டும் என்கிறது. இந்தப் பரிந்துரை விவசாயிகளின் நலன் காக்கவே என்றும் இந்த தடைகளும் வரம்புகளும் நீக்கப்பட்டால்தான் விவசாயிகளிடம் கூடுதலாக கொள்முதல் செய்ய ஊக்குவிப்பு இருக்கும் என்று அறிக்கை சொல்கிறது. விலை உயர்கிறது என்பதற்காக இந்த தடைகளும் வரம்புகளும் விதிக்கப்பட்டால், இதனால் உற்பத்தி குறைந்தால், அப்போதும் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நுகர்வோர் நலன் பாதுகாக்கவும் இது அவசியம் என்று அறிக்கை சொல்கிறது. ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டால், உள்நாட்டு நுகர்வுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அது விலை உயர்வுக்குத்தான் இட்டுச் செல்லும். இருப்பின் அளவுக்கு வரம்பு விதிக்கப்படாவிட்டால், அது பதுக்கலுக்கும், பின் விலை உயர்வுக்கும்தான் இட்டுச் செல்லும். உள்நாட்டு நுகர்வுக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டுமே தவிர அதற்கேற்ற கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமே தவிர இந்த தலைகீழ் ஆலோசனை சாமான்ய மக்கள் உணவில் இருந்து பருப்பை முழுவதுமாக விலக்கிவிடவே இட்டுச்செல்லும்.
சேமிப்பு இருப்பு
அரசின் வசம் சேமிப்பு இருப்பு 20 லட்சம் டன் இருக்க வேண்டுமென பரிந்துரை சொல்கிறது. விளைச்சல் 17 மில்லியன் டன் என்ற அளவிலும், இறக்குமதி இதுவரையில் 6 மில்லியன் டன் என்ற அளவிலும் இருக்கும்போது, நுகர்வு போக, 20 லட்சம் டன் அரசின் சேமிப்பில் வைப்பது, அதுவும் விலை குறைவாக இருக்கும் நேரங்களில் வாங்கி சேமிப்பது என்பது சாத்தியமே இல்லை. மழை பிரச்சனை இல்லாத காலத்தில் கூட 19 மில்லியன் டன்தான் பருப்பு உற்பத்தி நடந்துள்ளது. கூடுதல் கொள்முதல், கூடுதல் குறைந்தபட்ச ஆதார விலை என என்ன தரப்பட்டாலும் பருப்பு விளைச்சல் பரப்பை, விளைச்சலை அதிகரிக்காமல், இந்த அளவிலான சேமிப்பு இருப்பு சாத்தியமில்லாதபோது, விலைக் கட்டுப்பாடும் சாத்தியமில்லை. விளைச்சல் பரப்பை, உற்பத்தியை அதிகரிக்க வெறும் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு மட்டும் போதாது. அதற்கு இன்னும் வேறு பல அடிப்படை கொள்கை நடவடிக்கைகள் அவசியம். அதற்கான பார்வையும் நோக்கமும் இல்லாமல் சேமிப்பு இருப்பு, கூடுதல் குறைந்தபட்ச ஆதார விலை, கூடுதல் உற்பத்தி ஆகியவை வாய்ப் பந்தல்களாகவே தெரிகின்றன.
அரசு - தனியார் கூட்டு
கொள்முதல், இருப்பு வைத்தல், விநியோகம் ஆகியவற்றில் போட்டியை ஊக்குவிக்கவும் இருக்கிற நிறுவனங்களை இட்டு நிரப்பும்படி இருக்கவும் புதிய அரசு - தனியார் கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு - தனியார் கூட்டு என்பது உலகமய பொருளாதாரத் தில் கார்ப்பரேட் கொள்ளையின் மறுபெயர் என்பதை நாம் பல விசயங்களில் பார்க்கிறோம். இப்போது, அத்தியாவசிய உணவு தேவையான பருப்பு கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் பரிந்துரையை அர்விந்த் சுப்ரமணியம் முன்வைத்திருக்கிறார். பருப்பு கொள்முதலில், இருப்பு வைப்பதில், விநியோகம் செய்வதில் போட்டி இருக்க வேண்டும் என்று சொல்வதே குரூரமான கருத்தாக இருக்கிறது. குறைந்த பட்ச ஆதார விலையை விட குறைவான விலையில் தனியார் கொள்முதல் செய்வதாக அறிக்கையே சொல்கிறது. நுகர்வோருக்குச் செல்லும் பருப்பின் விலை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால், அரசே கொள்முதல் செய்து, இருப்பு வைத்து, விநியோகம் செய்வதை அதிகரிப்பதுதான் ஆகச்சிறந்த வழியாக இருக்கும். ஆனால், அர்விந்த் சுப்ரமணியம் தலைகீழாக பரிந்துரைக்கிறார். இந்தப் பரிந்துரை தற்போது அரசு செய்யும் கொள்முதலுக்கு முடிவு கட்டி, தனியார் நிறுவனங்களை ஊக்குவித்து, மகிழ்வூட்டி, அனைத்தையும் சந்தையின் இரக்கமற்ற ஏற்றஇறக்கங்களுக்கு விட்டுவிடுகிற பரிந்துரை.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நாட்டின் மொத்த விவசாயத்துக்குமே ரூ.36,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளபோது, அரசு - தனியார் கூட்டு என்ற பரிந்துரையுடன் பருப்பு கொள்முதலுக்கு கூடுதல் ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை சேரும்போது, அர்விந்த் சுப்ரமணியத்துக்கு யார் மீது அக்கறை என்பது தெரிந்துவிடுகிறது.
மரபணு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பது
பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்துவது என்ற தலைப்பில் மரபணு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அசாம் விவசாய பல்கலைக் கழகம் பூச்சி எதிர்ப்பு பருப்பு வகைகளை உருவாக்கியிருப்பதாகவும் அவை தயாரானதும் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அறிக்கை சொல்கிறது. மரபணு பயிர்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பிரிவினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். மரபணு பருத்தி விவசாயம் விதர்பாவின் பருத்தி விவசாயிகளை தற்கொலைக்கு விரட்டியது.
கட்டுப்பாடுகள் அகற்றுதல்
விவசாய உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழு சட்டத்தில் (அக்ரிகல்சுரல் புரொட்யூஸ் மார்கெட்டிங் கமிட்டி ஆக்ட்) இருந்து பருப்பு வகைகள் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை சொல்கிறது. இந்தப் பரிந்துரையும் விலைக் கட்டுப்பாட்டுக்கான கொள்கை வடிவமைப்பு என்ற தலைப்பில் சொல்லப்படுகிறது. பதுக்கலை, கருப்புச் சந்தையை கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சட்டம் 1955, உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதாக இல்லை என்றும் இருப்புக்கு வரம்புகள் விதித்து சிறுவியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் பெருவியாபாரிகளுக்கு பயனளிப்பதாக இல்லை என்றும் அதனால் அது பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அறிக்கை சொல்கிறது. சுருங்கச் சொன்னால், பருப்பு வகைகளை விவசாயிகளிடம் இருந்து வாங்கி, இருப்பு வைத்து, விற்க, எந்த அரசுக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்பதுதான் இந்தப் பரிந்துரை. எபிஎம்சி சட்டப்படி இப்போது உரிமம் வாங்கித்தான் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய முடியும். இந்த உரிமம் பெற கட்டணம் செலுத்த வேண்டும். உத்தர வாதக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தச் செலவுகளை, கட்டுப்பாடுகளை முழுவதுமாக விலக்க பரிந்துரை செய்து, எல்லா வளமும் தனியாருக்கே என்கிறது தலைமை பொருளாதார ஆலோசகர் தந்துள்ள பரிந்துரை.
இந்தப் பரிந்துரைகளில் குறைந்தபட்ச ஆதார விலை, சேமிப்பு இருப்பு போன்ற பரந்த மக்கள் ஆதரவு அம்சங்கள் சாத்தியப்பாட்டுக்கு அப்பாற்பட்டவையாகவும் அவையல்லாத அம்சங்கள் உடனடி அமலாக்கம் செய்யக் கூடியவையாகவும் உள்ளன. இவை பரிந்துரைகள்தான். மோடி அரசு இந்தப் பரிந்துரைகள் மீது முடிவுகள் எடுக்க வேண்டும். மோடி அரசின் மூர்க்கத்தனமான கார்ப்பரேட் ஆதரவு பாதைக்கேற்பவே இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சாமான்ய மக்கள் பருப்பு நுகர்கிறார்களா என்பதை விட முன்னுரிமைப் பிரச்சனைகள் பல, இந்த நவதாராளவாதக் கொள்கை ஆதரவு அரசுக்கு உள்ளன.  விவசாயிகள் வாழ்க என்று சொல்லிக்கொண்டே, விவசாயிகளையும் பிற பிரிவு மக்களையும் ஒரே நேரத்தில் வஞ்சிக்க இந்தப் பரிந்துரைகள் மோடி அரசுக்கு பெரிதும் உதவும்.
பருப்பு விலையைக் கட்டுப்படுத்துவது, நியாயமற்ற வியாபார நடவடிக்கைகளைக் களைவது என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த மக்கள் விரோத, விவசாயிகள் விரோத பரிந்துரைகள் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும்.
உத்தரபிரேதேச தேர்தல் நெருங்கும் நேரம் நாட்டின் மிகவும் பெரிய மாநிலத்தில் ஆன வரை இடங்களை, ஆட்சியைப் பிடிக்க வெறித்தனமான முயற்சிகள் மேற்கொள்ளும் பின்னணியில், பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம், காஷ்மீர் மக்கள் பிரச்சனையைத் தீர்ப்பதில் முழுவதுமாக தோற்றுப்போய், பாகிஸ்தான் மீதான துவேசத்தை கிளப்பும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. அண்டை நாடு ஒன்றுடன் சுமுக உறவு வந்து விடக் கூடாது, தொடர்ந்து பதட்டம் இருக்க வேண்டும் என்பதாகவே அதன் அணுகுமுறை இருக்கிறது. சொந்த நாட்டின் ராணுவ வீரர்களை பலிகளாக தருவது மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கு மேலும் ஆபத்துகளை வரவேற்பதையே மோடியின் உச்சஸ்தாயி தேசவெறிவாத கூக்குரல் செய்கிறது. இந்தக் கூக்குரல் உத்தரபிரதேச தேர்தல்களை எதிர்கொள்ள மட்டுமின்றி, பொதுத்துறை முதலீடு அகற்றுதல், ரயில்வே தனியார்மயம், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை தனியாருக்குத் தருவது போன்ற அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோத கொள்கைகள் அமலாக்கத்தை கேள்விகள் இன்றி, எதிர்ப்புகள் இன்றி உறுதி செய்யவும் கை கொள்ளப்படுகிறது. தனது தோல்விகளை, தவறுகளை மறைக்க, மக்கள் மீது அவர்கள் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் நவதாராளவாதக் கொள்கைகளைத் திணிக்க மோடி அரசாங்கம் பயன்படுத்தும் இந்த தேசவெறிவாதக் கூக்குரலையும் அனுமதிக்கக் கூடாது. மக்கள் மீது பல முனை போர் நடத்தும் மோடி அரசாங்கத்துக்கு அந்த அனைத்து முனைகளிலும் சரியான பதிலடி தந்தாக வேண்டும்.
(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 01 – 15 தொகுதி 15 இதழ் 5)
பயிற்சியாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்கள்
பிரிக்கால் தொழிலாளர்களின் முன்னுதாரண நடவடிக்கை
பிரிக்கால் நிர்வாகம் தொழிலாளர்களின் உணவகத்தில் உணவுப் பொருட்கள் விலையை உயர்த்துமாறு, ஊதிய உயர்வு ஒப்பந்த மை உலரும் முன்பு இருந்தே கேட்டு வந்தது. தொழிலாளர்கள் இந்த விலை உயர்வு சம்பள வெட்டு என வாதிட்டு ஏற்க மறுத்தனர். இப்போது நிர்வாகம் பயிற்சியாளர்களுக்கு அலுவலகப் பணியாளர்களுக்கு 01.10.2016 முதல் ரூ.8.44 சாப்பாடு ரூ.12 ஆகும், ரூ.12.32 சிறப்பு சாப்பாடு ரூ.18 ஆகும், ரூ.4.81 சிற்றுண்டி ரூ.10 ஆகும், பல்வகை சாப்பாடு ரூ.7.31ல் இருந்து ரூ.12 ஆகும், காபி ரூ.1.61ல் இருந்து ரூ.3.50 ஆகும், தேநீர் ரூ.1.35ல் இருந்து ரூ.3.50 ஆகும், தயிர் ரூ.2.85ல் இருந்து ரூ.5 ஆகும் என அறிவித்தது.
சங்கம் இது தவறு என சொன்னபோது, உங்களுக்கு விலை உயர்வு இல்லாதபோது, தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடாதீர்கள் என நிர்வாகம் ஆலோசனை தந்தது. தொழிலாளர்கள் விலை உயர்வுக்கு எதிராக 24.09.2016 அன்று ஆலை வாயில் ஆர்ப்பாட்டமும் 27.09.2016 அன்று பட்டினிப் போராட்டமும் நடத்தினார்கள். 
நிர்வாகம், பயிற்சியாளர்களுக்காக நிரந்தரத் தொழிலாளர்கள் நடவடிக்கை எடுத்ததை கண்டிக்கும் வகையில், 28.09.2016 அன்று ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. 200 தொழிலாளர்கள் வரை கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்குபவர்களுக்கே விலை உயர்வு கட்டுப்படியாகாது என்ற நிலைமையில், மாதம் ரூ.7,800 என்ற குறைசம்பளம் வாங்குபவர்களுக்கு விலை உயர்வு அநியாயம் என பதிலடி தந்தார்கள்.
நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தி தொடர் போராட்டம்
அம்பத்தூர், காமராஜபுரம் 85வது வார்டு மக்களுக்கு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஏற்கனவே இந்தப் பகுதியில் இயங்கி வருகிற அரசு நடுநிலைப்பள்ளி அருகிலேயே போதுமான இடமிருந்தும் அந்தப் பள்ளியை தரம் உயர்த்த அரசு மறுத்து வருகிறது. புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் இணைந்து நடத்தும் ‘எழு என் தேசமே’ இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தக்  கோரிக்கை மீது கைùழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பகுதி மக்கள் கட்சி பேதமின்றி பேராதரவு தந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 21 அன்று அம்பத்தூரில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் கைகோர்த்து முழக்கமிட்டு நின்றனர். அம்பேத்கர், பகத்சிங் படங்களுடனான பதாகைகளை தாங்கி நின்றனர்.
செப்டம்பர் 24 அன்று புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 100 ஆண்களும் 14 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி உடனே சுவரொட்டி வெளியிடப்பட்டது. ‘கற்பி, அமைப்பாக்கு, புரட்சி செய்’ என்ற டாக்டர் அம்பேத்கரின் முழக்கங்களுடன் ‘எழு என் தேசமே’ இயக்கத்தில் அகில இந்திய மாணவர் கழகம் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தியது.
அம்பத்தூரில் காமராஜபுரத்திலுள்ள நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினால் அந்தப் பகுதியில் பெரும்எண்ணிக்கையில் உள்ள தலித் மாணவர்கள் பயன் பெறுவர். புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் முன்னோடிகளான தோழர்கள் கண்ணன், சுரேஷ், சங்கர், புகழ்வேந்தன், ரகுநாதன், கோகுல் ஆகியோர் விடாப்பிடியாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும் கோரிக்கை மனு முதலமைச்சர் தனிப்பிரிவு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வித் துறை அதிகாரிகள் என அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர்.
மங்களூரில் அகில இந்திய துறைமுகத் தொழிலாளர் கூட்டமைப்புக் கூட்டம்
கர்நாடக மாநிலம் மங்களூரில் செப்டம்பர் 18 அன்று அகில இந்திய துறைமுகத் தொழிலாளர் கூட்டமைப்பு உருவாக்குவதற்கான தயாரிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் இகக(மாலெ) மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் சங்கர், ஏஅய்சிசிடியு தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், தூத்துக்குடியிலிருந்து தோழர்கள் சகாயம், ராஜ், அலெக்ஸ் ஆகியோரும் சென்னைத் துறைமுகத்திலிருந்து தோழர் கணேஷ், மங்களூர் துறைமுகத்திலிருந்து திவாகர், ரிச்சர்ட் மோகன், சதீஷ் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியு கொடியுடன் கலந்துகொண்டனர். மேற்கு வங்கம், ஒடிஷா, குஜராத் மாநிலங்களில் இருக்கும் தொடர்புகளை இணைக்க, தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது இயக்கம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. தற்காலிக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் துவங்கப்பட்டது
செப்டம்பர் 25 அன்று தருமபுரி ஏஅய்சிசிடியு அலுவலகத்தில் உழைப்போர் உரிமை இயக்க கூட்டம் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கொ.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தோழர் ஸ்வப்பன் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் 45 பேர் உழைப்போர் உரிமை இயக்கத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். தோழர் கொ.கோவிந்தராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. குழுவில் தோழர்கள் முனிராஜ், சண்முகம், குமார், தென்னரசு, தனம், அருள்மொழி, சக்தி, ரவிக்குமார், பிரபு, முத்துசாமி, சுரேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.
கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநாட்டிற்குப் பிறகு அக்டோபர் 5 முதல் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்களின் பொதுக்குழுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிட்டுக் கொள்ளவும் கூட்டம் முடிவு செய்தது. கூட்டத்தில் மின்சார வாரிய தொழிற்சங்க நிர்வாகி தோழர் முருகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சங்க மண்டலச் செயலாளர் தோழர் மணி, ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தோழர் வடிவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 01 – 15 தொகுதி 15 இதழ் 5)

Search