COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 17, 2016

தலையங்கம்

தமிழக விவசாய சமூகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்

தமிழ்நாடெங்கும் உள்ள தொழிலாளர்கள் ஆயுத பூஜை கொண்டாடினார்கள். (இந்தக் கொண்டாட்டத்தில் சமீப ஆண்டுகளில் மது ஒரு முக்கிய பாகமாகிவிட்டது)
. தொழிலாளர்களுக்கு செய்யும் தொழிலே தெய்வம். ஆயுத பூஜை அன்று தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் கருவிகளை துடைத்து அழகுபடுத்தி வழிபடுகிறார்கள். இந்து மக்கள் கட்சி (தமிழகம்)யின் அர்ஜுன் சம்பத்தும் ஆயுத பூஜை செய்தார். அவர் வழிபட்ட கருவிகள் துப்பாக்கி, அரிவாள்கள், கத்திகள் போன்றவை. அவரே அதை நிழற்படம் எடுத்து சமூக வலைதளத்திலும் உலாவவிட்டார். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வர வேண்டும் என்று சொன்ன சுப்ரமணியம் சுவாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும் அதற்கு நக்சலைட்டுகள், எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள், அய்எஸ் அமைப்பின் ஸ்லீப்பர் செல்கள், திராவிடர் கழகத்தின் ஆதரவு செயல்பாடுகள் ஆகியவை செயலூக்கம் பெற்றிருப்பதாகவும் அதனால் குடியரசுத் தலைவர் ஆட்சியையும், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலும் சென்னையிலும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என்றும் இந்த வருமுன் காக்கும் நடவடிக்கை மிகவும் அவசரம் என்றும் வலியுறுத்தி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அக்டோபர் 7 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு உண்மையில் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ்தான் உள்ளது என்றும் ஷீலா பாலகிருஷ்ணனும் ராமானுஜமும்தான் நிர்வாகத்தை நடத்துகிறார்கள் என்றும் இது சட்டவிரோதம் என்றும் சட்டபூர்வமாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறார். ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் மூலம்தான் ஜெயலலிதா தனது மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார். அதற்குத் தோதானவர்கள் என்பதால்தான் அவர்கள் அந்த இடத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின், அஇஅதிமுகவின் விருப்பப்படி நிர்வாகத்தை நடத்துவதில் அவர்கள் பெரும் திறமை பெற்றவர்களே.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்ததற்குப் பிறகு நடந்த பெரிய வன்முறை வெறியாட்டம் என்றால் அது கோவையில் செப்டம்பர் 23 அன்று இந்துத்துவ சக்திகள் நடத்தியதுதான். இது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது நாள் நடந்தது. இந்த வன்முறைக்குப் பிறகு இந்துத்துவ சக்திகள் நடத்திய முழுஅடைப்பை தமிழக அரசு நிர்வாகம் சிறப்பாக நடத்தித் தந்தது. காவிரி நீர் வேண்டும் என்று தமிழக மக்கள் நடத்திய முழுஅடைப்பு அன்று அரசுப் பேருந்துகள், பள்ளிகள் இயங்கின. டாஸ்மாக் கடைகளுக்குக் கூட பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. செய்தது.
சுப்ரமணியம் சுவாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் எந்தப் பிரிவினரும் இந்த கால கட்டத்தில் எந்த வன்முறை சம்பவத்திலும் ஈடுபடவில்லை. இந்துத்துவ சக்திகள்தான் கட்டமைக்கப்பட்ட கும்பல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. சமூக விரோதிகள், முன்னாள் இந்நாள் குற்றவாளிகள், ரியல் எஸ்டேட் தாதாக்கள், காவல்துறையினர்தான் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இந்த கால கட்டத்தில் அது அதிகரித்தும் இருக்கிறது. இந்தச் சம்பவங்களுக்கும் சுப்ரமணியம் சுவாமி குறிப்பிடும் பிரிவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் குறிப்பிட்டுக் காட்டியவற்றில் விடுபட்டுப் போன இந்துத்துவ கும்பல்தான் இன்றைய தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆபத்து. அர்ஜ÷ன் சம்பத் இதை படம் பிடித்துக் காட்டிவிட்டார். சுப்ரமணியம் சுவாமி போன்ற பாசிச வெறியர்கள் கண்ணெதிரில் நடந்த இந்துத்துவ வன்முறை வெறியாட்டத்துக்கு ஆசி தந்து விட்டு, இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பிதம் செய்யப் பார்க்கிறார்கள். அதன் மூலம் ஆகப் பெரிய ஆபத்தான இந்துத்துவ வன்முறை ஆபத்தை மூடி மறைக்க கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள் பாசிச வெறியைத் தூண்டி விட, பரப்ப, தமிழக மக்கள் இடம் தந்துவிட மாட்டார்கள்.
சுப்ரமணியம் சுவாமி பட்டியலிடுகிற ஆபத்துகளை விட பெரிய ஆபத்து, தமிழக அரசின் வெளிப்படைத்தன்மையின்மை. இது பல்வேறு கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் இட்டுச் செல்கிறது. பன்னீர்செல்வம் தனது இலாகாக்களை கவனித்துக் கொள்ள, பேசவே முடியாத ஜெயலலிதா எப்படி ஒப்புதல் தந்தார் என்று கருணாநிதியும் ராமதாசும் கேள்வி எழுப்பும் போது, அரசியல் நாகரிகம் என்ற பெயரில் அந்தக் கேள்வியை தவிர்க்கப் பார்க்கிறார்கள். கருணாநிதிக்கும் ராமதாசுக்கும் இதுபோன்ற கேள்விகள் எழுப்புவது, அறிக்கைகள் விடுவது மட்டும்தான் அரசியல். ஆனால், வாக்களித்த தமிழக மக்களுக்கு ஜெயலலிதாவின் உடல் நலம், அவருக்கு அளிக்கப்படும் மருத்துவம் ஆகியவை பற்றி தெரிவிக்கப்பட வேண்டும். ஜெயலலிதா இருந்தாலும், அவர் நேரடியாக இல்லை என்றாலும், அஇஅதிமுக அரசு தமிழக மக்களை வாக்குகளுக்காகவன்றி வேறெதற்கும் சற்றும் மதிக்காத அரசு என்பதையே இந்த வெளிப்படைத்தன்மையின்மை தெளிவாகக் காட்டுகிறது.
முதலமைச்சரின் இலாகாக்களை கவனித்துக் கொள்ள வேண்டிய பன்னீர்செல்வம் 25,000 பெண்களுடன் பால் குடம் எடுப்பது போன்ற வேலைகளில் மூழ்கியிருக்கும்போது தமிழக மக்கள் பிரச்சனைகள் பற்றியெரிகின்றன.
தமிழ்நாட்டின் விவசாய சமூகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீற்றத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது. காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை கோரி அரசாணைகள், நீதிமன்ற உத்தரவுகளுக்காக போராடி, அவற்றில் வெற்றி கண்ட பிறகு, அந்த அரசாணைகளும் நீதிமன்ற உத்தரவுகளும் அமல்படுத்தப்படாமல் மத்திய அரசால் மீண்டும் ஒரு சுற்று வஞ்சகத்துக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிராக போராட்டத்தில் எழுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, உடனடியாக காவிரி மேலாளுமை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் அமைப்புகளும் அழைப்பு விடுத்த ரயில் மறியல் போராட்டத்தில் அக்டோபர் 17, 18 தேதிகளில் இகக மாலெ கலந்துகொள்கிறது.
காவிரி மேலாளுமை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று மோடி அரசு சொல்லும் காரணம் சற்றும் ஏற்கத் தக்கதல்ல. பல சுற்று விவாதங்கள், பல சுற்று போராட்டங்கள், பல சுற்று வழக்குகள், மேல் முறையீடுகள், சீராய்வுகள் என்று பல ஆண்டு காலம் நடந்த பலவிதமான நடவடிக்கைகள்தான், வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு வரை வந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத காங்கிரஸ் அரசை கலைக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இப்போது மத்திய அரசும் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கிறது. மத்திய அரசை இப்போது என்ன செய்வது? காவிரி நீரைத் தராமல் தமிழகத்தின் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிற மத்திய மாநில அரசுகள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலி தராமல் தமிழ்நாட்டின் விவசாயத் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கின்றன.
2016 - 2017 ஆண்டுக்கான நூறு நாள் வேலைத் திட்டக் கூலி உயர்வை மார்ச் 23 அன்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட்ட கூலி அமலுக்கு வரும் என்று அறிவிப்பு சொன்னது. தமிழ்நாட்டில் ரூ.183 என இருந்த கூலி ரூ.203 என உயர்த்தப்பட்டது. ஜார்க்கண்டின் நூற்றுக்கணக்கான கிராமப்புறத் தொழிலாளர்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் அந்த மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5 உயர்வை ஓர் உறையில் போட்டு மோடிக்கு அனுப்பி வைத்தார்கள். நீங்கள் பாவம், கார்ப்பரேட்டுகளுக்கு லட்சம் லட்சம் கோடிகளில் சலுகைகள் தர உங்களுக்குத் தேவைப்படலாம் என்று தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட கூலி உயர்வும் அப்படி திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டியதுதான். இந்தத் தொகை அவர்கள் வாழ்வில் எந்த பெரிய முன்னேற்றத்தையும் கொண்டு வராது.
தமிழ்நாட்டில் தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் அலைபேசி வரை வாக்குறுதிகள் தந்த ஜெயலலிதா, மத்திய அரசு அறிவித்த கூலி உயர்வு அமல்படுத்தப்படும் என்றோ, அது தமிழ்நாட்டில் இன்னும் உயர்த்தித் தரப்படும் என்றோ எந்த வாக்குறுதியும் தரவில்லை.
அஇஅதிமுகவினரை, மக்கள் தண்டனை தந்து விடுவார்களோ என்ற அச்சம் உள்ளுக்குள் வருத்த, வெளியில் பெரிய பெரிய வசனங்கள் பேசி, அவர்களுக்கே திகைப்பு தந்த, திக்குமுக்காடிப் போன மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகாவது, கிராமப்புற வறிய மக்களுக்கு இந்த விசயத்தில் ஏதாவது மாற்றம், முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று யாராவது எதிர்ப்பார்த்திருந்தால், அஇஅதிமுக எந்த அளவுக்கு பெரிய வெற்றி பெற்றதோ அந்த அளவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியும் ஏமாற்றமும்தான் கிடைத்துள்ளது. கிராமப்புற வறுமைக்கு, கிராமப்புற வேலையின்மைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வரும் நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டில் மே மாதம் முதல், ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்றது முதல், கூலி தரப்படவில்லை. அய்ந்து மாதங்களுக்கும் மேல் தமிழ்நாட்டின் கிராமப்புற வறியவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூலியில்லாமல்.
இந்த கால கட்டத்தில் ஜெயலலிதாவும் அஇஅதிமுகவினரும் அம்மாவின், ஆட்சியின் சாதனை என்று வானளாவப் பேசியதை நாம் பார்த்தோம். இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழக மக்களுக்கு என்ன வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நாங்கள் சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று ஜெயலலிதா சட்டமன்றத்துக்கு உள்ளும் சட்டமன்றத்துக்கு வெளியிலும் பல முறை சொல்லியுள்ளார். வேலை செய்தவர்களுக்கு, வேறு வாழ்வாதாரம் எதுவும் இன்றி அதை நம்பிக் கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கான கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் செய்த வேலைக்கு கூலி தரப்படவில்லை என்பது அவர்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்திருக்கிறது. இன்னமும் இருக்கிறது. இந்தக் கூலி பற்றி இத்தனை நாட்களாக இல்லாத அக்கறை, இன்று செயற்கை சுவாசத்தில் உள்ள தமிழக அரசுக்கு தானாக வரும் என்று நாம் சொல்ல முடியாது. இது வெறும் நிர்வாகக் கோளாறு இல்லை. இது கொள்கைக் கோளாறு.
தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைக்காக 1,29,51,000 பேர் பதிவு செய்துள்ளார்கள். இவர்களில் 85,02,000 பேர் பெண்கள். மொத்தம் 85 லட்சம் பேருக்கு வேலை அட்டை தரப்பட்டுள்ளது. ஆனால் 73 லட்சம் அட்டைகள்தான் செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு செப்டம்பர் வரை கிட்டத்தட்ட 20 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டது. 2017 மார்ச் வரை தமிழ்நாட்டில் 34 கோடி வேலை நாட்கள் வேலை தரப்பட வேண்டும் என்று மத்திய அரசின் திட்டம் இருந்தது; 31 கோடி வேலை நாட்கள் தர தமிழக அரசு ஒப்புக்கொண்டது. ஆண்டுக்கு 42 வேலை நாட்கள் மட்டும் தரத்தான் திட்டமே உள்ளது. இதுவும் அட்டைகள் வைத்துள்ள 73 லட்சம் பேருக்கு மட்டும். பதிவு செய்துவிட்டு வேலை அட்டைகள் வரும் எனக் காத்திருக்கும் கிட்டத்தட்ட 56 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இது மோடி அரசு செய்கிற துரோகம். இந்த அளவுக்கு வேலை செய்தவர்களுக்கும் கூலி தராமல் இருப்பது ஜெயலலிதா நேரடியாக நடத்திய ஆட்சி செய்துள்ள துரோகம். மோசடி.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இது வரை தரப்பட்டுள்ள வேலை நாட்கள் எண்ணிக்கை பற்றி நூறு நாள் வேலைத் திட்ட இணைய தளம் இரண்டு வெவ்வேறு விவரங்களை, ஒரே பக்கத்தில் தருகிறது. தமிழக அரசு பெருமையை விரும்பும் என்பதால் கூடுதல் வேலை நாட்கள் விவரத்தை கணக்கில் கொள்ளலாம்.
நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் ஏப்ரல் முதல் இது வரை 36,55,44,000 நாட்கள் வேலை தரப்பட்டுள்ளது. இவற்றில் கிட்டத்தட்ட 31 கோடி வேலை நாட்கள் பெண்களுக்கு தரப்பட்டவை. சராசரியாக மாதத்துக்கு 6 கோடி வேலை நாட்கள் என எடுத்துக் கொண்டாலும் மே முதல் பெண்களுக்கு மட்டும் 25 கோடி வேலை நாட்களுக்குக் கூலி தரப்படவில்லை. நாளொன்றுக்கு ரூ.203 கூலி என்றால், தமிழக அரசிடம் மாநிலத்தின் உழைக்கும் வறிய பெண்களின் பணம் ரூ.5,075 கோடி இருக்கிறது. (பெரும்பகுதி பெண்களுக்குத் தரப்பட வேண்டியது என்பதால் தரப்படாமல் இருக்கிறதா?) மே மாதத்துக்குப் பிறகு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ.6,090 கோடி அளவுக்குக் கூலி தரப்படவில்லை.
அறிவிக்கப்பட்ட கூலி ரூ.203 என இருக்க, இதுவரை சராசரியாக ரூ.140 என்ற அளவில் கூலி கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தாலும், ரூ.5,117.62 கோடி அளவுக்கு சாமான்ய மக்கள் பணத்தை அரசு தராமல் தன் வசம் வைத்துள்ளது.
அய்ந்து மாதங்களாக யாருக்கும் கூலி தரப்படாத நிலையில், ரூ.3,035.68 கோடி செலவு என்றும் அதில் ரூ.2,663.59 கூலிக்கான செலவு என்றும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த விவரம் ஏட்டில் மட்டுமே இருக்கிறது என்று தமிழ்நாட்டின் யதார்த்தம் நமக்குச் சொல்லும் போது, ரூ.6,090 கோடி, ரூ.5,117 கோடி அளவு கூலியை தமிழக அரசு எப்படி ஈடு செய்யும்?
நூறு நாள் வேலைத் திட்டத்துக்காக, இது வரை, 19.05.2016, 24.06.2016, 08.09.2016, 15.09.2016 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட ஆணைகள் மூலம் மொத்தம் ரூ.2308.68 கோடி நிதி மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. இந்த நிதி என்ன ஆனது என்றாவது நமக்குத் தெரிய வேண்டும்.
சென்ற நிதியாண்டில் 37.29 கோடி வேலை நாட்கள் வேலை தர திட்டமிடப்பட்டு 36.86 கோடி வேலை நாட்கள் வேலை தரப்பட்டதுஅறிவிக்கப்பட்டக் கூலி ரூ.183 இருந்தபோதும் சராசரியாக ரூ.133தான் கூலி தரப்பட்டது. திட்டத்துக்கு ரூ.6,923.82 கோடி நிதி இருந்த போதும் ரூ.6,254.27 கோடிதான் செலவிடப்பட்டது. (இதில் 77%தான் கூலியாக தரப்பட்டது). மீதி ரூ.669.55 கோடி எங்குள்ளது? திருப்பி அனுப்பப்பட்டதா? அடுத்த ஆண்டு கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டதா? இது பற்றி தமிழக அரசு விவரம் தரவில்லை. இந்த ஆண்டு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது எனக் கொண்டாலும் அதுவும் அரசின் கைகளில்தான் இருக்கிறது. திட்டத்தில் வேலை செய்த கிராமப்புற வறிய மக்களுக்குச் சென்று சேரவில்லை.
÷ன் 1 அன்று மத்திய அரசு வெவ்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்தது. நெல்லுக்கு ஒரு குவின்டாலுக்கு ரூ.60 உயர்த்தி ரூ.1,470 என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் அந்த விலையை விட சற்று கூடுதலாக சில பத்து ரூபாய்கள் அறிவித்து தங்கள் மாநில விவசாயிகள் மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்வது வழக்கம். காவிரி நீர் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, நெல்லுக்கு என்ன குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்பது வாழ்வாதாரப் பிரச்சனை. இதையும் தமிழக அரசு நான்கு மாதங்களாக கண்டும் காணாததுபோல் இருக்கிறது. 2015 - 2016க்கு தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையில்தான், தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.1,470 என்ற விலையைவிட ரூ.10 குறைவான விலையில்தான், தற்போது தமிழக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை மிகவும் சுருக்கமாக, தமிழக அரசு மோசடி செய்கிறது என்று சொல்ல முடியும்.
மொத்தத்தில், அஇஅதிமுக அரசாங்கம் தமிழக விவசாய சமூகத்துக்கு அனைத்தும் தழுவிய துரோகம் இழைக்கிறது.

முதலமைச்சர் உடல்நலம் தேறுவதற்காக, தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் காத்திருக்க முடியாது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூலி உடனடியாக தொழிலாளர்களுக்குச் சென்று சேர வேண்டும். கடன்பட்டு விவசாயம் செய்து சோறு போடும் விவசாயிக்கு மாற்றியமைக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையுடன் வழக்கமாக தமிழக அரசு தரும் உயர்வையும் சேர்த்து உடனடியாக அறிவிக்க வேண்டும். தமிழக விவசாய சமூகத்தை கர்நாடகமும், மத்திய அரசும் காலம் காலமாக வஞ்சிக்கின்றன. இப்போதும் அது தொடர்கிறது. மாநில அரசும் இந்த விசயத்தில் மாறுபட்டதல்ல. இன்று இருக்கும் நிலைமைகளில், தமிழக அரசு உடனடியாக இந்த இரண்டு அம்சங்களிலும் தனது கடமையை ஆற்றத் தவறினால், மக்கள் போராட்டங்கள் நிர்ப்பந்தங்கள் உருவாக்க வேண்டும்.
(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 16 – 31 தொகுதி 15 இதழ் 6)

Search