COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, October 1, 2016

ஒரு நாள் முழுவதும் இந்துத்துவா வன்முறைக் கும்பலின் பிடியில் சிக்கிய கோவை
இந்து முன்னணியின் முழுஅடைப்பு அழைப்பை செயல்படுத்தித் தந்த தமிழக அரசு
கடந்த 10 ஆண்டுகளில், ஆட்சியில் இல்லாத திமுக, அஇஅதிமுக அல்லது தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட பல பொது வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. காவிரி பிரச்சனை முதல் பல்வேறு  ஜனநாயக பிரச்சனைகள் மீது  முழு அடைப்புக்கு, பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்புக்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், அப்போதெல்லாம் அரசு, பேருந்துகளை இயக்கியுள்ளது; சகஜ வாழ்க்கை இருந்தாக வேண் டும் என, அந்த வேலை நிறுத்தங்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது. ஆனால், 23.09.2016 அன்று, தமிழக அரசும் காவல்துறையும் கோவையில் கடந்த காலத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுள்ளன.
22.09.2016 அன்று இரவு 11.00 மணிக்குப் பிறகு, இந்து முன்னணியின் மாவட்ட அளவிலான சசிகுமார் என்ற ஒரு நிர்வாகி, கோவை துடியலூர் கவுண்டர் மில் அருகில் தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார். இது வரை (28.09.2016 மாலை 6.00 மணி) குற்றவாளி என எவரும் கைது செய்யப்படவில்லை. வழக்கம்போல், மதவாத நஞ்சு உமிழும் தினமலர் மட்டும், ‘பசு விவகாரமா’, ‘ஸ்லீப்பர் செல்’ ‘அதிரவைக்கும் பிளான்’ என்று பரபரப்பான தலைப்பிட்டு, இசுலாமியர்களுக்கு எதிரான மதவாத வன்முறையைத் தூண்டும் தன் பணியை செய்துள்ளது.
23.09.2016 அன்று விடியற்காலை 3.30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் இந்துத்துவா சக்திகள் தங்கள் வெறியாட்டத்தைத் துவக்கிவிட்டார்கள். வடகோவை சண்முகா தியேட்டர் எதிரிலுள்ள பள்ளிவாசல், சுக்கரவார் பேட்டை பட்டுநூல்கார சந்து பள்ளிவாசல், கெம்பட்டி காலனி லிங்கேச கவுண்டர் தோட்டம் பள்ளிவாசல் ஆகியவற்றின் மீது குண்டுகள் வீசப்பட்டன.
அரசும், காவல்துறையும் இந்த நிகழ்ச்சிகளிலிருந்தும், திருப்பூரில் 25.09.2016 அன்று இந்து முன்னணி பொதுப்பேரவை கூடுகிறது என்ற தகவல்களிலிருந்தும், எச்சரிக்கை அடைந்து, சூழலைச் சரியாகக் கையாண்டு நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்திருக்க வேண்டும். ஆனால், 23.09.2016 அன்று, இந்துத்துவா வன்முறைக் கும்பல் பிடிக்குள் கோவை, திருப்பூர் மற்றும் மேற்கு மாவட்டங்களின் சில பகுதிகள் இருந்ததை, தமிழக அரசு உத்தரவாதப்படுத்தியது.
முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு இருந்ததால் காவல்துறையும் அரசு நிர்வாகமும் தடுமாறி விட்டன என்று, சிலர் சொல்ல வாய்ப்புண்டு. ஆனால், அது சரியல்ல. தமிழ்நாட்டின் அமைச்சர்கள், ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உயர்காவல்துறை அதிகாரிகள், ஜெயலலிதா என்ன விரும்புவாரோ அதை மட்டுமே செய்வார்கள். அவர் உடல் நலத்தோடு இல்லாத போதும் அவர் சிறையில் இருந்தபோதும், இதுதான் காவல்துறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும், ஆணையில் இருந்த எழுதப்படாத விதியாகும். ஜெயலலிதா தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் என்னவாகும் என்ற கவலையில் இருக்கிறார். அன்புநாதன், நத்தம் விசுவநாதன் மற்றும் ஜெயலலிதாவின் மிகவும் நெருங்கிய உள்வட்டத்தில் உள்ள முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், தாய்லாந்தில் தீவு வாங்கியிருக்கிறார்கள், துபாயில் அடுக்கு மாடி கட்டிடம் சொந்தமாக வைத்துள்ளனர், ஆயிரமாயிரம் கோடிகளில் சொத்து குவித்துள்ளனர் எனச் சொல்லி, அவர்களில் பலர் மீது அமலாக்கத் துறை விசாரணை கிடுக்கிப் பிடியாக பாய்ந்துள்ளது என்ற பின்னணியில், கிடுகிடுத்துப் போயுள்ள ஜெயலலிதா, மத்திய அரசை பகைத்துக் கொள்வாரா? மோடி ஆளும்போது இந்து முன்னணி போன்றவர்கள் வைத்ததுதானே சட்டம். ஜெயலலிதாவிற்கு இருக்கின்ற அரசியல் நெருக்கடி தவிர, அஇஅதிமுகவின் மரபணுவில் (டிஎன்ஏ) இந்துத்துவா நெருக்கம், இந்துத்துவா சார்பு எப்போதுமே இருந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், அரசு எந்திரத்தில் உள்ள அதிகாரிகளும் காவல் துறையினரும் கூட மதச்சார்பின்மைக்கு எதிரான இந்துத்துவா ஆதரவு இசுலாமிய எதிர்ப்பாளர்களே ஆவார்கள். அதில் குறிப்பாக சில மாநிலங்களில், சில குறிப்பிட்ட மாவட்டங்களில் காவல்துறை, இந்துத்துவா காவல்துறையாக இருக்கிறது. 1997ல் அத்வானி கூட்ட குண்டு வெடிப்பிற்குப் பிறகு, கோவை காவல்துறையினர் கிட்டத்தட்ட பகிரங்கமாகவே இசுலாமிய எதிர்ப்பாளர்களாகவும் இந்துத்துவா ஆதரவாளர்களாகவுமே செயல்பட்டுள்ளனர் என்ற புகார் உள்ளது. 23.09.2016 அன்று, பகவத் கீதை வாசகப்படி ‘எது நடக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடந்தது’. அரசாங்கம் திட்டமிட்டு பேருந்துகளை நிறுத்தியது. கல்வி நிறுவனங்களை மூடச் சொன்னது. காவல்துறையே, அச்சுறுத்தும் வகையில் கடைகளை, வணிக நிறுவனங்களை மூடச் சொன்னது. சிறிய அளவிலான எண்ணிக்கையில் இருந்த இந்து முன்னணி இளைஞர்கள், தலையில் காவித் துணி கட்டிக் கொண்டு, கைகளில் தடிகளும், கொடிகளும் வைத்துக் கொண்டு, காவல்துறை கண் முன்பாகவே உருட்டல் மிரட்டல்களிலும் வன்முறையிலும் ஈடுபட்டனர்.
அரசாங்கத்திற்கு, அரசு நிர்வாகத்திற்கு 23.09.2016 அன்று என்னவெல்லாம் நடக்கும் என்பதை, மிக எளிதாக முன்னரே அறிந்து கொண்டிருக்க முடியும். கோவையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் ஊர்வலங்களில், வன்முறைக் கும்பல்கள், போதை தலைக்கு ஏற, ‘வெட்டுவோம் வெட்டுவோம் துலுக்கன்களை வெட்டுவோம்’ என முழக்கமிட்டார்கள். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (எபிவிபி) கோவை மாநகரச் செயலாளரான அருண் விக்னேஷ், பகிரங்கமாக தொலைக் காட்சி ஊடகங்கள் முன்பு, தன் பெயரையும் தான் வகிக்கின்ற பொறுப்பையும் அறிவித்து விட்டு, ‘பாகிஸ்தான் கொடியை நடுவீதியில் எரிப்பது போல பயங்கரவாதி, தீவிரவாதி ஆகியோரை ஆதரிப்போரை நடுவீதியில் எரிப்பேன்’ என, சட்டம் ஒழுங்கிற்கு சவால் விட்டார்.
23.09.2016 காலை இந்து முன்னணியின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கும்போதே, ‘கோவையை குஜராத்தாக மாற்றுவோம்’ எனப் பிரகடனம் செய்தார். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும், மதவாத குற்றக் கும்பல்களுடன் கைகோர்த்துக் கொண்டன, அரசு நிர்வாகமும் காவல்துறையும்.
குற்றப் பின்னணி உள்ளவர்களின் நடமாட்டத்தை கோவைக்குள் தடுப்பதற்குப் பதிலாக, பக்கத்து மாவட்டங்களில் இருந்தெல்லாம் இந்து முன்னணியினர் பெரும் எண்ணிக்கையில் அரசு மருத்துவமனை அருகில் கூடுவதை, காவல்துறை அனுமதித்து வேடிக்கை பார்த்தது. அரசு மருத்துவமனையிலிருந்து 15 கி.மீ.க்கு அப்பால் தள்ளியுள்ள மதுக்கரையிலிருந்து, 150 இரு சக்கர வாகனங்களில் இந்து முன்னணியினர் ஊர்வலமாக வந்து இசுலாமியர் பெரும் எண்ணிக்கையில் வாழும் பகுதியிலுள்ள ஆத்துப்பாலம் டோல்கேட் வரை வர அனுமதித்தது. இந்துத்துவா மதவாத சக்திகள் வன்முறைக்குத் தயாராக இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிந்தும், இறந்த சசிகுமாரின் உடலை அவரின் தாயார் வீடு உள்ள ரத்தினபுரி, அதற்குப் பிறகு இசுலாமியர் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள் வழியாக எல்லாம் சென்று துடியலூர் மின் மயானம் வரை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதித்தது. இந்த வகையில் இசுலாமியர்களுக்கு எதிராக கலவரம் செய்ய, கொள்ளையடிக்க, சூறையாட, பொருளாதார சுயசார்பை சிதைக்க, உடல்ரீதியாகத் தாக்க, அச்சத்தையும் பீதியையும் உருவாக்க, இந்து முன்னணிக்கு காவல்துறை துணை நின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிறிஸ்தவ தேவாலயங்களும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டன.
இந்துக்கள், கோவையின் பெரும்பான்மை மக்கள், இசுலாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் என்று காட்ட, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் முயன்றுள்ளனர். கலவரம் கோவை மாவட்டம் முழுவதும் நடக்காமலே, அரசாங்கமே வெற்றிகரமாக கலவரக்காரர்களின் பின்னால் நின்று, மாவட்டம் முழுவதும் முழு அடைப்பை உறுதி செய்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதத்தை, தேசியம் கொண்டு முறியடிக்க வேண்டும் என மோடியின் சங்பரிவார் சொல்லும் பின்னணியில், பாகிஸ்தானோடு பதட்டத்தை நாளும் அதிகரிக்கும் பின்னணியில், 23.09.2016 சம்பவத்தைக் காண்பது நல்லது.
இறந்தவர் எதனால் இறந்தார், அவரை யார் தாக்கினார்கள் என்பதில் பல கருத்துகள் உள்ளன. இறந்தவரின் சாதியும் அவர் சாதி மாறி செய்த திருமணமும்கூட காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த காலத்தில் இந்துத்துவா அமைப்புகளின் நிர்வாகிகள், கவனம் பெற, பதவிகள் பெற, காவல்துறை பாதுகாப்பைப் பெற, தாமே தம் வீட்டில் குண்டு வீச ஏற்பாடு செய்த சம்பவங்களும், சுசீந்திரத்துக்கு கடத்தப்பட்டதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டதும் கூட காணத்தக்கவை. இவர் களில் முக்கிய புள்ளிகள் ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து தாதாக்கள் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுப்பவர்களாக உள்ளனர். சமீபத்தில் நடந்த ஓசூர், திண்டுக்கல் கொலைகள், இந்தப் பின்னணிகள் கொண்டவையே. சசிகுமார் கொலைக்கு முன்பாக, கோவையில் விநாயகர் சதுர்த்தி வசூல் தொடர்பாக, வெவ்வேறு இந்துத்துவா அமைப்புக்கள் மத்தியில் பகைமையும் மோதலும் நிலவி வந்தன. ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் சசிகுமாரை கொன்றிருந்தாலும் சட்டப்படி விசாரணை, கைது, வழக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை என்பதைத் தாண்டி வன்முறைக் கலவரத்தில் ஈடுபட இந்து முன்னணியினருக்கு சட்டமும் நாகரீக சமூகமும் இடம் தரக் கூடாது.
செப்டம்பர் 24 அன்று, சில நூற்றுக்கணக்கில், இகக(மாலெ) தோழர்கள் தாமோதரன், வேல்முருகன் உள்ளிட்ட இடதுசாரி இயக்கத்தினரும் இந்துத்துவா வன்முறையை ஏற்காத பலரும் திரண்டு, கண்டனம் முழங்கினர்.
இந்தக் கலவரம் பற்றிய செய்திகள் வெளியிடுவதிலும் தினமலர் போன்ற ஊடகம் மோசமான பாத்திரம் வகித்தது. வட மாநில இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டு கொள்ளையடித்ததாக, அவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்ட முயற்சி செய்தது. பாஜக வின் எச்.ராஜா, ஒரு படி மேலே போய், கலவரம் செய்தவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்க தேசத்தவர் என அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம், விஷப் பிரச்சாரம் செய்தார்.
கோவை முழுவதும் இந்து முன்னணியின் வன்முறை, மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் வெறுப்பையும் சீற்றத்தையும் உருவாக்கியுள்ளது. இதனைக் கணக்கில் கொண்டே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட காவல்துறை, இந்து முன்னணியினர் பலரை கைது செய்தனர். 28.09.2016 அன்று சசிகுமார் அஸ்தியை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஊர்வலமாகச் சென்று கரைக்க, இந்து முன்னணியினர் அனுமதி கேட்டனர். காவல்துறை அனுமதி மறுத்து உறவினர்களை மட்டுமே அஸ்தி கரைக்க அனுமதித்தனர். இந்து முன்னணியின் முழுஅடைப்பு அழைப்பு மக்களால் நிராகரிக்கப்பட்டது. இடதுசாரி இயக்கம், சுரண்டல் எதிர்ப்பு போராட்டத்தோடு மதவெறி சாதிவெறி எதிர்ப்புப் போராட்டங்களையும் கருத்துத் தளத்திலும் களங்களிலும் தீவிரமாக நடத்த வேண்டிய அவசர தேவை முன்வந்துள்ளது.
இந்துத்துவா அமைப்புக்கள் இல்லாத அல்லது அவ்வளவு வலுவாக இல்லாத கோபி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் கூட வதந்திகள் பரப்பப்பட்டு தொழில் நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டன, கோவையில் இந்துத்துவா அமைப்பின் அராஜகம், கட்டபஞ்சாயத்து அதிகமாகி இருக்கிறது, மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், 23.09.2016 தேதிய இந்து முன்னணி வன்முறை, அரசியலமைப்புச் சட்ட மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கு முரணானதாகும்.
(எழுத்தாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பாலமுருகன், 24.09.2016)
நேற்று நடந்த கலவரம் 18 கி.மீ. அளவிற்கு நடந்துள்ளது. கடந்த கோவை கலவரத்தில் இந்துத்துவா அமைப்புக்கள் வலுவாக இருந்த உக்கடம், கெம்பட்டி காலனி, கண்ணப்ப நகர் போன்ற பகுதிகளில் இருந்த தலைவர்கள் பலர் சிறையில் இருக்கின்றனர். தற்போது இந்த அமைப்புக்கள் கவுண்டர் மில்லில் இருந்து மேட்டுப்பாளையம் வரை உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் இரு பகுதிகளிலும் சிறுசிறு கிராமங்கள் வரை வேரூன்றி உள்ளனர். இந்த இளைஞர்களின் பெற்றோர்கள் இடதுசாரி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள். அப்போது இந்துத்வா அமைப்புக்கள் வலுவாக இல்லை. நிறைய பஞ்சாலைகள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இடதுசாரி நடவடிக்கைகள் குறைந்து போனதும், இந்துத்துவா அமைப்புக்கள் செல்வாக்கு பெற ஒரு காரணம் ஆகும்.
சம்பவத்திற்குப் பிறகு பெரிய கலவரம் நடப்பதை தடுத்திருக்கலாம். இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி தந்தது சந்தேகத்தை உருவாக்குகிறது. ஜிஹெச்சிலிருந்து துடியலூர் செல்ல வேறு வழி இருக்கும்போது இசுலாமியர்கள் நிறைந்த டவுன் ஹால், கோட்டைமேடு, மரக்கடை வழியாக அனுமதி அளித்தது தவறு. காவல்துறையே இறந்தவர் உடலை அவர் உறவினர்களிடம் துடியலூரில் ஒப்படைத்திருக்கலாம். பேருந்துகளுக்கு பாதுகாப்பு கொடுத்து ஓட்டியிருக்க வேண்டும். முக்கிய பகுதிகளில் காவல் பாதுகாப்பை அதிகரித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தும்பை விட்டு வாலைப் பிடித்ததில் பயனில்லை. இந்துத்துவா அமைப்புக்கள் வளர இங்கு தொழில் வியாபாரம் நடத்தும் பல வடஇந்தியர்களும் காரணம். அவர்கள் பாஜகவில் இருப்பதே பாதுகாப்பு என்று கருதுகின்றனர்.
(எழுத்தாளர் முருகவேள், 24.09.2016)
எனதருமை கடவுள் நம்பிக்கையாளர்களே!
உங்கள் கடவுளின் பெயரால்தான் - சிலர்
மனிதர்களைக் கொல்கின்றனர்
உங்கள் கடவுளின் பெயரால்தான் - சிலர்
குண்டுகள் வெடிக்கின்றனர்
அமைதியாய் வேடிக்கை பார்ப்பது
அறமாகுமா?
தயங்கியே கடந்து செல்வது
தர்மமாகுமா?
உங்கள் அமைதியே
அவர்களின் செயலுக்கு
அங்கீகாரம்
உங்களின் தயக்கமே
அவர்களின் செயலுக்கு
அனுமதி
உங்கள் மவுனத்தின் பாரங்களை
உடனே இறக்கி வையுங்கள்
உங்கள் மனச்சாட்சிக் கதவுகளை
இப்போதே திறந்து வையுங்கள்
புதிதாய் ஒரு உலகம்
கண்முன்னே விரிவதைப் பாருங்கள்
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பைப் போல - அது
அவ்வளவு அமைதியானது
ஓடும் நதியின் சலசலப்பைப் போல - அது
அவ்வளவு அழகானது
ஒரு பிஞ்சுக் குழந்தையின் புன்னகையைப் போல - அது
அவ்வளவு அன்பானது
அந்த அழகிய பூமியில்
மனிதமே மதம்
மனித நேயமே கடவுள்
புன்னகையே மொழி உழைப்பே வாழ்க்கை
அங்கு மக்களின் மனங்களில் யாரும்
வெறுப்பை விதைப்பதில்லை
அங்கு மனிதனை மனிதன் - எப்போதும்
வேறுபடுத்திப் பார்ப்பதில்லை
எப்போதும் கொலைகள் விழுவதில்லை
எங்கேயும் குண்டுகள் வெடிப்பதில்லை
ஆயுதங்களைப் புதைத்த மண்மேட்டில்
குழந்தைகள் விளையாடுகின்றன
அவ்விடத்தில் பூச்செடிகள் துளிர்விடுகின்றன
அந்தக் கனவு பூமியை மக்களோடு சேர்ந்து
படைத்தெடுக்க வேண்டும்
அந்தக் கனவு பூமியை மக்களுக்கு
பரிசளிக்க வேண்டும். 
                         - சம்சுதீன் ஹீரா, ‘மவுனத்தின்  சாட்சியங்கள்’ 
இந்தக் கலவரத்தில், இந்த இறுதி ஊர்வலத்தில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி பகுதிகளிலிருந்து வந்தவர்களும் கலந்து கொண்டனர், இசுலாமியர்களும் மசூதிகளும் குறிவைத்துத் தாக்கப்பட்டன, இந்த வன்முறை கோவையின் அமைதிக்கு மக்களின் சகஜ வாழ்விற்கு மதச்சார்பின்மைக்கு விரோதமானதாகும். இசுலாமியர்கள் மிகுந்த நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் இந்த விசயத்தை கையாண்டுள்ளனர். அவர்கள் தங்கள் சமூகம் தாண்டி ஓர் இணக்கம் காண்பதில் அதற்கான சக்திகளுடன் உறவுகள் பேணுவதில் அக்கறை கொண்டுள்ளனர்.
(தந்தை பெரியார் திராவிடர் கழகம் கு.இராமகிருஷ்ணன், 24.09.2016)
பயிற்சியாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்கள்
பிரிக்கால் தொழிலாளர்களின் முன்னுதாரண நடவடிக்கை
பிரிக்கால் நிர்வாகம் தொழிலாளர்களின் உணவகத்தில் உணவுப் பொருட்கள் விலையை உயர்த்துமாறு, ஊதிய உயர்வு ஒப்பந்த மை உலரும் முன்பு இருந்தே கேட்டு வந்தது. தொழிலாளர்கள் இந்த விலை உயர்வு சம்பள வெட்டு என வாதிட்டு ஏற்க மறுத்தனர். இப்போது நிர்வாகம் பயிற்சியாளர்களுக்கு அலுவலகப் பணியாளர்களுக்கு 01.10.2016 முதல் ரூ.8.44 சாப்பாடு ரூ.12 ஆகும், ரூ.12.32 சிறப்பு சாப்பாடு ரூ.18 ஆகும், ரூ.4.81 சிற்றுண்டி ரூ.10 ஆகும், பல்வகை சாப்பாடு ரூ.7.31ல் இருந்து ரூ.12 ஆகும், காபி ரூ.1.61ல் இருந்து ரூ.3.50 ஆகும், தேநீர் ரூ.1.35ல் இருந்து ரூ.3.50 ஆகும், தயிர் ரூ.2.85ல் இருந்து ரூ.5 ஆகும் என அறிவித்தது.
சங்கம் இது தவறு என சொன்னபோது, உங்களுக்கு விலை உயர்வு இல்லாதபோது, தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடாதீர்கள் என நிர்வாகம் ஆலோசனை தந்தது. தொழிலாளர்கள் விலை உயர்வுக்கு எதிராக 24.09.2016 அன்று ஆலை வாயில் ஆர்ப்பாட்டமும் 27.09.2016 அன்று பட்டினிப் போராட்டமும் நடத்தினார்கள்.
நிர்வாகம், பயிற்சியாளர்களுக்காக நிரந்தரத் தொழிலாளர்கள் நடவடிக்கை எடுத்ததை கண்டிக்கும் வகையில், 28.09.2016 அன்று ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. 200 தொழிலாளர்கள் வரை கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்குபவர்களுக்கே விலை உயர்வு கட்டுப்படியாகாது என்ற நிலைமையில், மாதம் ரூ.7,800 என்ற குறைசம்பளம் வாங்குபவர்களுக்கு விலை உயர்வு அநியாயம் என பதிலடி தந்தார்கள்.
பெரியதடாகத்தில் தலித் மக்கள் மீது சாதிவெறி தாக்குதல்
நடவடிக்கை எடுக்க மறுக்கும் தமிழக காவல்துறை
கே.பாலசுப்ரமணியன்
விநாயகர் ஊர்வலத்தில் அதை சாக்காக பயன்படுத்தி இந்துத்துவ சக்திகள் இசுலாமியர் மீது தாக்குதல்கள் நடத்துவது புதிதில்லைதான். கோவையில் உள்ள பெரியதடாகம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஊர்வலத்தை ஒட்டி இந்த ஆண்டு தலித்துகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது சாதி இந்துக்கள் தலித்துகள் மீது நடத்தியுள்ள தாக்குதல்.
இசுலாமியர்களுக்கு எதிராக இந்து - தலித் ஒற்றுமையை கட்டமைக்க இந்துத்துவ சக்திகள் முயற்சி செய்யும்போது, அதே தீவிரத்துடன் தலித் - இசுலாமியர் ஒற்றுமைக்காக நாடு முழுவதும் சக்தி வாய்ந்த குரல்கள் எழுகின்றன. பெரியதடாகத்தில் தலித்துகள் மீது நடந்துள்ள தாக்குதல் தலித் - இசுலாமியர் ஒற்றுமையின் அவசியத்தை மேலும் வலியுறுத்துகிறது.
பெரியதடாகத்தில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிற இந்தப் பிரச்சனையில் தலித்துகள் சாதி இந்துக்கள் 18 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். காவல்துறையினர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சாதி இந்துக்களும் தலித் மக்கள் மீது புகார் கொடுத்துவிட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அந்த கிராமத்தை விட்டு வெளியேறப் போவதாகச் சொல்கிறார்கள். 
இந்தப் பிரச்சனையில் உண்மையில் நடந்தது பற்றி அறிந்துகொள்ள கோவை மாவட்ட இகக மாலெ குழு செப்டம்பர் 16 அன்று பெரிய தடாகத்துக்குச் சென்றது. மாநிலக்குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன், மாவட்டச் செயலாளர் தோழர் கே.பாலசுப்பிரமணியன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் குருசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் நாராயணன், வேல்முருகன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றனர். 
பெரியதடாகத்தில் வேட்டுவ கவுண்டர் குடும்பங்கள் 200 வரை உள்ளன. இவர்கள் நில உடைமையாளர்கள். பலர் செங்கல் சூளை முதலாளிகள். இங்குள்ள செங்கல் சூளைகளில் மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக கொத்தடிமைகள் போல் வேலை செய்கின்றனர். பகுதியில் உள்ள 25 தலித் (அருந்ததியர்) குடும்பங்களில், பட்டப் படிப்பு படித்த மிகச் சில இளைஞர்கள் தவிர, மேல்சாதியினரின் செங்கல் சூளைகளில் வேலை செய்கின்றனர். ஆண்களுக்கு ரூ.175, பெண்களுக்கு ரூ.150 என நாள் கூலி தரப்படுகிறது.
இவர்களில் 10 குடும்பங்களுக்கு மட்டும் வீட்டுமனைக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களின் குடிமனைகளுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. 
கண்ணுக்குத் தெரிகிற நிலைமைகளே, தலித் மக்கள் மீது சாதியாதிக்கம் எந்த நேரமும் ஏவப்படும் சாத்தியப்பாடுகள் கொண்டவையாக இருக்கின்றன.
இந்த ஆண்டு தலித் மக்கள் தங்கள் பகுதி யில் தனியாக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினார்கள். தங்கள் கொண்டாட்டத்தில் தாங்களே ஜமாப் அடித்தார்கள். தலித் மக்கள் தாங்களே தனியாக, சுதந்திரமாக, ஒரு கொண்டாட்டம் நடத்திக் கொள்வதையே சாதி இந்துக்கள் பொறுத்துக் கொள்வது சிரமம். இதில் இந்த முறை சாதி இந்துக்கள் நடத்தும் விழாவில் ஜமாப் அடிக்க மறுத்து, அவர்கள் தங்கள் பகுதியில் தனியாகக் கொண்டாடினால், சாதி ஆதிக்கம் சகித்துக் கொள்ளுமா? வழக்கம்போல், தெருவில் போய்க்கொண்டிருந்த ஒரு தலித்தை வம்புக்கிழுத்து, அதை சாக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சாதி இந்துக்கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவில் தலித் மக்கள் ஜமாப் அடித்துக் கொண்டிருந்தனர். இந்த ஆண்டு ஜமாப் அடிக்க மறுத்தனர். சென்ற ஆண்டு ஜமாப் அடிக்க சாதி இந்துக்கள் தருவதாக ஒப்புக்கொண்ட பணத்தை ஜமாப் அடித்த தலித்துகளுக்குத் தரவில்லை. அவர்களை சாதியால் இழிவுபடுத்தியும் பேசியுள்ளனர். அதனால் இந்த ஆண்டு தலித்துகள் அங்கு சென்று ஜமாப் அடிக்க மறுத்ததுடன் தாங்கள் தனியாக விழா நடத்தி அதில் ஜமாப் அடிக்கவும் செய்துள்ளனர்.
பெரியதடாகம் பகுதியின் தலித் மக்கள் ஜமாப் அடிக்கக் கற்றுகொண்டதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. அவர்கள் பகுதியில் உள்ள பட்டத்தரசியம்மன் கோயில் விழாவில் ஜமாப் அடிக்க ஆகும் பெரும்செலவுக்கு அவர்களால் அவர்கள் மத்தியில் இருந்து நிதி திரட்டிக் கொள்ள முடிவதில்லை. எனவே, தாங்களே ஜமாப் அடிக்கக் கற்றுக்கொண்டனர். வெளியில் இருந்து ஜமாப் அடிக்க வருபவர்களுக்கு கூடுதலாக பணம் தர வேண்டியிருப்பதால் சாதி இந்துக்களும் மிகக் குறைவாக பணம் கொடுத்து தலித் மக்களை தங்கள் விழாவில் ஜமாப் அடிக்க பயன்படுத்திக் கொண்டனர். கூடவே சாதியாதிக்கமும் சேர்ந்துகொள்ள இன்று தலித் மக்கள் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
செப்டம்பர் 5 அன்று இரவே, சாதி இந்துக்கள் சிலர், தலித் குடியிருப்புக்கு வந்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். அன்று இரவே துடியலூர் காவல்நிலையத்தில் வாய் வழி புகார் கொடுத்த தலித் மக்கள், மறுநாள் காலை நேரில் சென்று புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் தரப்பில் மதியம் 2 மணிக்கு மேல்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சாதி இந்துக்கள் சிலர் மீண்டும் தலித் குடியிருப்புக்குச் சென்று அவர்கள் அனைவரும் பகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும் என்றும் இல்லையென்றால் அங்குள்ள வீடுகள் அனைத்தையும் தீக்கிரையாக்கி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். காவல் துறை வழக்கம்போல் உடனடி நடவடிக்கை எடுக்காமல், சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
செப்டம்பர் 7 அன்று தலித் மக்கள் தங்கள் பகுதிக்குள்ளேயே விநாயகர் சிலையை 50 மீட்டர் தூரம் அளவுக்கு எடுத்துச்சென்று அங்கேயே ஒரு சிமென்ட் தொட்டியில் சிலையைக் கரைத்தனர். அப்போதுதான் அவர்கள் மீது சாதி இந்துக்கள் கற்களை வீசி மீண்டும் தாக்குதல் நடத்தினர். அன்றிரவு 9 மணிக்கு கருப்ப சாமி என்பவர் தடாகத்தில் இருக்கும் மருந்து கடையில் தனது மனைவிக்காக மருந்து வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவர் மீது சாதி இந்துக்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை அறிந்து அங்கு வந்த இன்னொரு தலித்தும் தடிகளாலும் செங்கற்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இரண்டு நாட்கள் முன்னரே அங்கு தலித்துகள் மீது தாக்குதல் நடந்துள்ளபோதும் அவர்கள் பாதுகாப்புக்காக காவல்துறையினர் யாரும் அந்தப் பகுதியில் போடப்படாத நிலையில், மேலும் தாக்குதல் நடக்கக்கூடும் என்று அஞ்சிய தலித் மக்கள் அனைவரும் அன்று இரவு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
தலித் மக்கள் கொடுத்துள்ள புகார்களை எதிர்கொள்ள, சாதி இந்துக்களும் தலித்துகள் தாக்கியதாக புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நள்ளிரவில் தலித் வீடுகளுக்குச் சென்று அங்கு சோதனையிட்டு, புகாரை திரும்பப் பெறும்படி அங்குள்ள பெண்களை மிரட்டியுள்ளனர்.
தாக்குதல் நடந்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் சாதி இந்துக்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. தலித்துகள் மறைமுகமான சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளியில் பயிலும் தலித் குழந்தைகள் வகுப்புகளுக்குச் செல்ல அஞ்சும் நிலை உள்ளது. பகுதியின் தலித்துகளுக்கு செங்கல் சூளைகளில் வேலை மறுக்கப்பட்டுள்ளது.
தங்களை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டாக வேண்டும் என்று தலித் மக்கள் உறுதியாக இருக்க உள்ளூர் முதலாளிகள், புகாரை திரும்பப் பெறச் சொல்லி அவர்களிடம் வலியுறுத்துகின்றனர். சமாதானமாக முடித்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். வேறு சில உள்ளூர் தலித் அமைப்புகள் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் கொடுத்து வருகின்றன. இகக மாலெயும் அவர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் கொடுத்துள்ளது.
கோவையில் ஏற்கனவே இந்துத்துவ சக்திகள் வெறியாட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். பெரியதடாகத்தில் தலித் மக்கள் மீது நடந்துள்ள தாக்குதலை உள்ளூர் தன்மை கொண்டது என்று புறக்கணித்துவிட முடியாது. இந்துத்துவ பிளவுவாத சக்திகள் கிடைக்கும் வாய்ப்புக் களை பயன்படுத்தி மக்களைத் துண்டாடக் காத்திருக்கும்போது, இதுபோன்ற தாக்குதல்களின் விளைவுகளை துவக்கத்திலேயே தடுக்க வேண்டியுள்ளது. பெரியதடாகத்தில் இன்னும் நிலைமைகள் சீரடையவில்லை. தலித் மக்கள் இன்னும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. அவர்களுக்கு வேலை, வாழ்வாதாரம் மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பெரியதடாகம் தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தாக்குதல் நடத்திய சாதி இந்துக்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் காயமுற்ற தலித்துகளுக்கு உரிய சிகிச்சையும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்றும் தலித் மக்களை சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக்கியுள்ளவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இகக மாலெ கோருகிறது.
(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 01 – 15 தொகுதி 15 இதழ் 5)

Search