மக்கள் கோரிக்கைகளுக்கான 10 லட்சம் கையெழுத்து இயக்கம் துவங்கியது
தமிழ்நாட்டின் நகர்ப்புற நாட்டுப்புற உழைக்கும் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி ஏஅய்சிசிடியுவும் அவிகிதொசவும் நடத்துகிற 10 லட்சம் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் பல்வேறு புள்ளிகளிலும் துவக்கப்பட்டு பெருந்திரள் தொழிலாளர்கள் பங்கேற்புடன் நடந்துவருகிறது.
சென்னை: சென்னையில் நன்கு திட்டமிட்ட அமைப்பாக்கப்பட்ட விதத்தில் கையெழுத்து இயக்கப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இககமாலெ, ஏஅய்சிசிடியு முன்னணி தோழர்கள் தொழிலாளர் தோழர்களுடன் அம்பத்தூரில் 81, 85, 86 வார்டுகளில், குடியிருப்புப் பகுதிகளில் குழுக்களாக சென்று கையெழுத்துப் படிவங்களில் பகுதியில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்தியில் கையெழுத்துகள் பெற்று வருகின்றனர்.
செப்டம்பர் 24 அன்று அம்பத்தூர் மற்றும் சென்னை நகர் மய்யத்தில் 300 தொழிலாளர்கள் 21 குழுக்களில் 21 புள்ளிகளில் கையெழுத்துக்கள் பெற்றனர்.
கையெழுத்து இயக்கப் படிவத்துடன், அட்டைகள், கொடிகள், பேட்ஜ், கையெழுத்து இயக்க செய்தியுடன் உடலில் கட்டிக் கொள்ளும் அட்டை அணிந்து கொண்டும் உழைக்கும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று கோரிக்கைகளை விளக்கி கையெழுத்துக்கள் பெற்றனர். செப்டம்பர் 24 அன்று மட்டும் ஓஎல்ஜி ஆலையின் 110 தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். அன்று மட்டும் 300 தொழிலாளர்கள், தோழர்கள் பழனிவேல், பாலகிருஷ்ணன், மோகன், புகழ்வேந்தன், பாலசுப்பிரமணியன், முனுசாமி ஆகியோர் தலைமையில் குழுக்களாக சென்று கையெழுத்துக்கள் பெற்றனர். முன்னதாக 75 உண்டியல்கள், 75 கையெழுத்து பெறுவதற்கான அட்டைகள், 1,000 பேட்ஜ்கள், 20,000 துண்டுப் பிரசுரங்கள், 35 ஏப்ரான்கள் என ஏஅய்சிசிடியு அலுவலகத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தன. இந்த இயக்கத்தில் இன்னோவேட்டர், ஸ்டாண்டர்டு கெமிக்கல்ஸ், மெர்குரி பிட்டிங்ஸ் உட்பட பல ஆலைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகரத்திற்குள் அகர்வால் பவன், காஞ்சி காமகோடி மருத்துவமனை உள்ளிட்ட தொழிலாளர்கள் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 8,000 கையெழுத்துக்களும் ரூ.13,000 நிதியும் பெறப்பட்டுள்ளது. அகில இந்திய மாணவர் கழக இளம் தோழர்கள் கோகுல், சுகுமார், கோடீஸ்வரன் ஆகியோருடன் மாணவர்கள் குழு ஒன்றும் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டுவருகிறது. உள்ளாட்சித் தேர்தல் பங்கேற்பு இல்லாத இடங்களில் கையெழுத்து இயக்கத்தைத் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருபெரும்புதூரில் செப்டம்பர் 25 அன்று 100 தொழிலாளர் முன்னோடிகள் கலந்துகொண்ட தயாரிப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
கோவை: கோவையில் பிரிக்கால் பிளாண்ட் 3ல் செப்டம்பர் 21 அன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஅய்சிசிடியு சங்க பொதுச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
செப்டம்பர் 22 அன்று பிளான்ட் 1ல் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் குருசாமி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். செப்டம்பர் 24 அன்று சாந்தி கியர்ஸ் ஆலை வாயிலில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. இதில் ஸ்டீர் கம்பெனி மற்றும் ப்ராஸ் ஏர் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். மூன்று கூட்டங்களிலும் ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் குமாரசாமி, இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 25 அன்று காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அம்பேத்கர்நகர், ஆர்.ஆர்.நகர் குடியிருப்புப் பகுதிகளில் மக்களிடம் சென்று கையெழுத்துக்கள் பெறப்பட்டன. இதில் பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்க பொதுச் செயலாளர் தோழர் சாமிநாதன், தலைவர் தோழர் நடராஜன், பொருளாளர் தோழர் ஜெயப்பிரகாஷ்நாராயணன், இகக மாலெ மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் செப்டம்பர் 26 அன்று இகக மாலெ ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி கலந்துகொண்டார். கூட்டத்தில் 10 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கம் பற்றி திட்டமிடப்பட்டது.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தின் துவக்கமாக செப்டம்பர் 19 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர் தோழர் ராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவிகிதொச மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார், இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி ஆகியோர் உரையாற்றினர். மாவட்டத்தில் நெற்குன்றம், அழிஞ்சிவாக்கம் நல்லூர் ஆகிய பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
நாகை: நாகை மாவட்டம் திருமுல்லைவாசலில் செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. கூட்டத்தில் அவிகிதொச மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். செப்டம்பர் 27 அன்று தஞ்சையில் தஞ்சை மாவட்ட முன்னணிகள் கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி, மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஆசைத்தம்பி, இளங்கோவன் கலந்து கொண்டனர். கையெழுத்து இயக்கத்தை விரிவாக எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் 13 பேர் கொண்ட குழு சுமார் 1,000 கையெழுத்துக்களை பெற்றுள்ளது. கையெழுத்து இயக்கத்தை ஒட்டி நடந்த ஏஅய்சிசிடியு ஊழியர் கூட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் கலந்துகொண்டார்.
சேலம்: சேலத்தில் அம்மாபேட்டை, குப்பனூர், பருத்திக்காடு பகுதிகளில் 20 பேர் குழுவாக சென்று 1000 கையெழுத்துக்கள் பெற்று இயக்கத்தை தொடர்கின்ற நிலையில் மாவட்ட ஊழியர் கூட்டம் செப்டம்பர் 25 அன்று நடைபெற்றது. இதில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் தோழர் சந்திரமோகன், மாநிலச் செயலாளர் தோழர் வேல்முருகன், இககமாலெ மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஏஅய்சிசிடியுவின் 15 கிளைகளுக்கு படிவங்கள் கொடுக்கப்பட்டு தோழர் மணிவேல் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. கிளைகளில் தோழர்கள் ஜானகி, வெள்ளையம்மாள் ஆகியோர் கையெழுத்து இயக்கத்துக்கு தலைமை தாங்குகின்றனர். தங்கள் கிளைகளில் தலா 2,000 கையெழுத்துக்கள் பெற பொறுப்பேற்றுள்ளனர். தோழர் பரமேஸ்வரி தலித் குடியிருப்புப் பகுதிகளில் கையெழுத்தும் நிதி வசூலும் செய்து வருகிறார். திண்டுக்கல் நகரம், ஒய்எம்ஆர்பட்டி, சிதம்பரனார் தெரு, நல்லாம்பட்டி பிள்ளையார் பாளையம் பகுதிகளிலுள்ள அமைப்புச்சாரா பெண் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 15 பேர் கையெழுத்துப் படிவங்களுடன் மக்களிடம் கையெழுத்துப் பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிற பெண் தோழர்களிடம் ஒரு படிவம் தரப்பட்டு அதில் 40 கையெழுத்துக்கள் பெறும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். குஜிலியம்பாறை ஒன்றியத்தில் தோழர் பொன்னுதுரை தலைமையிலான குழு கையெழுத்துக்கள் பெற்று வருகிறது.
மதுரை: மதுரையில் அவிகிதொச மாவட்ட ஊழியர் கூட்டம் கூட்டப்பட்டு திட்டமிட்டதன் அடிப்படையில் கச்சைகட்டி சந்தையிலும், பூச்சம்பட்டி நூறுநாள் வேலை நடக்கும் இடத்திலும் 3,000 கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 01 – 15 தொகுதி 15 இதழ் 5)