COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 17, 2016

போர் வேண்டாம், போர் வெறி வேண்டாம்
அமைதி வேண்டும், பாகிஸ்தானோடு நல்லுறவு வேண்டும்

எஸ்.குமாரசாமி

பணக்காரர்கள் பணக்காரர்களோடு போரிடும் போது
வறியவர்களே சாகிறார்கள்!
ழான் போல் சார்த் (JEAN – PAUL SARTRE)
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பாரதிதாசன்

உரி தாக்குதலை அடுத்து

காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது செப்டம்பர் 17 அன்று தீவிரவாத தாக்குதல் நடந்தபோது,
உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த ராணுவ வீரர்களின் சவப்பெட்டிகள் அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று ஊடக கவனமும் பெற்றபோது, மக்கள் பாகிஸ் தான் மீது கோபம் கொள்ளும் நிலை ஏற்பட்டது; ஏற்படுத்தப்பட்டது.
மே, 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, மோடி மட்டும் பிரதமராக இருந்தால், பயங்கரவாதிகள் இந்திய எல்லையைத் தாண்டுவது பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது எனப் பேசியதை, மக்கள் நினைவுபடுத்தி, கேலி செய்தனர்.
அதே நேரம், சங் பரிவாருக்கும் பாஜகவுக்கும், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் சட்ட மன்றத் தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கும் சேர்த்து இந்தச் சூழலில் சங் பரிவாரும், மோடியும் கண்டறிந்த பதில்தான், பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லிய தாக்குதல்கள் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்ஸ்) நடத்துவது என்பதாகும்.
மோடி, அமித் ஷா, வெங்கய்யா நாயுடு, மனோகர் பரிக்கர், மோகன் பகவத் அனைவரும், செப்டம்பர் 29 அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து ஏழு பயங்கரவாத ஏவுதளங்களைத் தாக்கி டஜன் கணக்கான பாகிஸ்தானியர்களைக் கொன்றதாக அறிவித்தனர். அனைத்து கட்சி கூட்டம் கூட்டி எப்படி தாக்குதல் நடந்தது என மத்திய அரசு விளக்க, காங்கிரஸ், இகக, இகக(மா) உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அனைவருமாகச் சேர்ந்து தாக்குதலுக்கு பாராட்டும் இராணுவத்தினருக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.
இராணுவம், வீரம், தியாகம், தேசியம், தேசப்பற்று, போர், அணு ஆயுதப் போர் ஆகியவையே ஊடக விவாத கவனம் பெற்றன.
ஒரு பக்கம் பஞ்சாபின் அகாலி தளம் - பாஜக கூட்டணி ஆட்சியின் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், பாகிஸ்தானோடு 553 கி.மீ. எல்லை இருக்கிற பதான்கோட், குருதாஸ்பூர், அமிர்தசரஸ், தரன்தரன், பிரோஸ்பூர், ஃபாசில்கா ஆகிய 6 மாவட்டங்களின் 957 கிராமங்களின் மக்களை, போர் ஆபத்து என ஊரை விட்டு வெளியேற நடவடிக்கை எடுத்தார். வீடு வாசல்களை விட்டு, வைத் திருந்த பயிர்களை விட்டுவிட்டு, போட்டது போட்டபடி லட்சக்கணக்கானவர்கள், எந்தவித தயாரிப்பும் இல்லாமல் வெளியேற்றப்பட்டனர். வெளியேறிய விவசாயிகளுக்கு அவர்கள் வைத்த பயிர் பற்றிய கவலையே அதிகமாக இருந்தது.
சங் பரிவாரின் சுப்பிரமணிய சாமி, அணு ஆயுதப் போர் பற்றி இந்தியா கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், பாகிஸ்தான் பயங்கர வாதம் தொடரும், அதனால் அணு ஆயுதப் போரில் இந்தியா தரப்பில் 10 கோடி பேர் இறந்தாலும் பரவாயில்லை, பாகிஸ்தானை ஒட்டுமொத்தமாக அழித்து விடுவோம் என்றார். நல்லவேளை, இந்த கட்டுரை எழுதப்படும் 13.10.2016 வரை, இரு நாடுகளும் சுப்ரமண்யம் சாமி பரிந்துரைக்கும் அணு ஆயுதப் போருக்கோ, அல்லது மரபார்ந்த போருக்கோ செல்லவில்லை.

துல்லிய தாக்குதல்களை (சர்ஜிக்கல் ஸ்டிரைக்ஸ்அடுத்து எழுந்த விவாதங்கள்

இந்திய இராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர், செப்டம்பர் 29க்குப் பிறகு, பாகிஸ்தான், அறுவை சிகிச்சைக்கு முன் தரப்படும் மயக்க மருந்தின் விளைவிலிருந்தே மீளவில்லை எனப் பேசினார். காங்கிரஸ் மற்றும் இகக (மா) போன்றவர்கள், தேசபக்த மயக்கத்திலிருந்து சற்று மீண்டனர்.
காங்கிரஸ் தரப்பு, தாக்குதல் நடந்ததா என்பதே சந்தேகத்துக்குரியது, அதனை நிரூபிக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்றது. பாஜககாரர்கள் அரசியல் முதிர்ச்சியில்லாதவர்கள், அதனால்தான் இரகசியமான தாக்குதல்கள் பற்றிப் பகிரங்கமாகப் பேசுகிறார்கள் என்றும் சொன்னார்கள். அய்முகூ ஆட்சிக் காலத்தில் 2008, 2009, 2011, 2013 ஆண்டுகளில் துல்லியத் தாக்குதல்கள் நடந்ததாகவும், தாங்கள் விவரம் அறிந்தவர்கள் என்பதாலும் இந்தத் தாக்குதலில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என்பதாலும் அது பற்றி எல்லாம் பேசியதில்லை என்றனர்.
சங் பரிவார், இந்திய இராணுவம் அனுமன் போல் தன் வலிமையை தானே உணராமல் இருந்தது எனவும், எப்படி அனுமனுக்கு இராமாயணத்தில் ஜாம்பவான், அவன் வலிமையை உணர்த்தினாரோ, அது போல் பாஜக, தான் இந்திய இராணுவத்தைத் தன் வலிமையை உணர வைத்ததாகப் பேசியது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர், இப்படிச் சொன்னதன் மூலம் பாஜக தன்னை மேலே வைத்து இராணுவத்தை சிறுமைப்படுத்திவிட்டதாக, விமர்சனம் செய்தனர். இகக(மா) சில நாட்கள் சென்ற பிறகு, போருக்குப் பதிலாக, அமைதி பற்றியும் அதற்கான பேச்சுவார்த்தைகள் பற்றியும் யோசிக்க வேண்டும் என்றது.
பாகிஸ்தான் தன் பங்கிற்கு, சிஎன்என், பிபிசி போன்ற சர்வதேச தொலைகாட்சி ஊடகங்களை, இந்தியா துல்லியத் தாக்குதல்கள் நடத்தியதாகச் சொல்லும் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அங்கு சகஜ நிலை இருப்பதாகவும், அங்கு தாக்குதல்கள் நடந்த அறிகுறி தெரியவில்லை எனவும் சொல்ல வைத்தது. பாஜகவும் சங்பரிவார் ஆதரவுதேசபக்தஊடகங்களும், தாக்குதல்கள் பற்றி ஆதாரம் காட்டச் சொல்வது, இராணுவத்தை அதன் வீரத்தை சந்தேகிப்பது எனவும், தாக்குதல் ஆதாரங்கள் வெளியிட்டால் அதிலிருந்து பாகிஸ்தான் ஆதாயம் அடையும் எனவும் வாதிட்டன.
ஆர்எஸ்எஸ்ஸின் மோகன் பகவத் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரையும் இந்தியா வசம் கொண்டு வந்தாக வேண்டும் என்றார். மோடிக்கும் மனோகர் பரிக்கருக்கும் மட்டுமே கூடுதல் கவனம் கிடைப்பதால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாமும் இருக்கிறோம் எனக் காட்டிக் கொள்ள, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் என பாகிஸ்தானுடன் உள்ள 2,300 கி.மீ எல்லையிலும் தடுப்பு வேலி சுவர் அமைக்க வேண்டும் என்றார். ஆத்திர அவசரத்தில் இரண்டு விசயங்களை மறந்துவிட்டார். ஒன்று, அவரது அமைச்சகத்தின் கீழ் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் சர்வதேச எல்லை மட்டுமே வரும், ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக் கோடு ராணுவ அமைச்சகத்தின் கீழ் வரும். இரண்டு, அவர் சொல்வதுபோல், ஜம்மு காஷ்மீரில் தடுப்பு சுவர் எழுப்பினால், அது மோகன் பகவத் விரும்புவதற்கு நேரெதிரானதாக மாறும்.

எழுப்பப்பட வேண்டிய கேள்விகள் எவை?

போர் தேவையா என்பதுதான் எழுப்பப்பட வேண்டிய முதல் கேள்வியாகும். 1947 - 1948ல், 1965ல், 1999ல் இந்தியா, பாகிஸ்தானுக்கிடையே போர்கள் நடந்தன. 1947 - 1948 போரில் இந்தியா தரப்பில் 1,500 பேர் மடிந்தனர். 3,500 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 6,000 பேர் மடிந்தனர், 14,000 பேர் படுகாயம் அடைந்தனர். 1965 போரில் இந்தியா தரப்பில் 3,000 பேரும் பாகிஸ்தான் தரப்பில் 3,800 பேரும் மரணம் அடைந்தனர். 1999 கார்கில் போரில் இந்தியா தரப்பில் 550 பேரும் பாகிஸ்தான் தரப்பில் 1,000 பேரும் மரணம் அடைந்தனர். 1971ல் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பங்களாதேஷ் தனி நாடாக இந்தியா உதவியது. அந்தப் போரில் இந்தியா தரப்பில் 3,000 பேர் மடிந்தனர், 12,000 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 8,000 பேர் மடிந்தனர். 25,000 பேர் காயமடைந்தனர். 90,000 பேர் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு, பின்னர் பாகிஸ்தான் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தப் போர்களினால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எந்தப் பிரச்சனை தீர்ந்தது? கொஞ்சமாவது பொறுப்புள்ள எவராவது, சுப்ரமணியம் சாமி போன்ற பாசிச வெறியர்கள் சொல்வதுபோல், 10 கோடி இந்தியர்கள் சாவது மொத்த பாகிஸ்தான் மக்களும் அழிவது பற்றி எல்லாம், யோசிக்கக் கூட முடியுமா? எந்த 10 கோடி பேர் என சுப்ரமணியம் சாமி, சம்மந்தப்பட்ட மக்களிடம் சொல்வாரா? அந்த 10 கோடி பேரில் சுப்பிரமணியம் சாமி, மோடி, மோகன் பகவத், அமித் ஷா, மனோகர் பரிக்கர் இருப்பார்களா?
1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானும் ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவும் உருவானதில் இருந்து, இரு தரப்பிலும் மதவெறியர்கள், போர் வெறியர்கள், சாவு வியாபாரிகள், ஆயுத வியாபாரிகள் ஒவ்வோர் ஆண்டும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவின் இராணுவ பட்ஜெட் ரூ.2.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் இராணுவ பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ.60,000 கோடியாகி உள்ளது. 30 கோடி மக்கள் பயன் அடையும் ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.38,500 கோடிதான் மோடி அரசு ஒதுக்குகிறது. போகிற போக்கைப் பார்த்தால் வரும் ஆண்டு பட்ஜெட்டில் இராணுவத்திற்கான ஒதுக்கீடு ரூ.3 லட்சம் கோடியைத் தொட்டு விடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில், சுழலேணி முறையில் ஆயுதப் போட்டி பல மடங்கு பெருகி உள்ளது. மனித வளர்ச்சிக்குப் பதிலாக இரு நாடுகளும், மனிதகுல அழிவுக்கு ஆயுதக் குவியலை, அணு ஆயுதக் குவியலை வளர்த்துக் கொண்டே போகிறார்கள். இரண்டு நாடுகளிலும் வறுமை தாண்டவமாடுகிறது. வேலை இன்மை குறை கூலி மக்களை வாட்டி வதைக்கிறது. மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணில் இரண்டு நாடுகளும் பின் தங்குகின்றன.
மிகவும் முக்கியமாக, 60 ஆண்டுகளாகப் புரையோடிப் போயிருக்கும் காஷ்மீர் பிரச்சனை இன்னமும் தீராமலே உள்ளது. இன்றைய புவி அரசியலில், பொருளாதார, பூகோள நிலைமைகளில், போரில் வெற்றி என்ற ஒரு தேர்வு (ஆப்ஷன்) இரு நாடுகளுக்கும் இல்லை. இந்தியா ஓடிஓடிச் சென்று அய்க்கிய அமெரிக்காவின் போர்த்தந்திரரீதியான இளைய கூட்டாளி ஆனாலும், சீனாவுக்கு எதிராக அய்க்கிய அமெரிக்காவால் கொம்பு சீவப்பட்டு பிராந்திய துணை மேலாதிக்கமாக நிறுத்தப் பட்டாலும், ஆப்கனிஸ்தான் தலிபன் பிடிக்குள் சென்றுவிடும் ஆபத்து இருப்பதால், அய்க்கிய அமெரிக்காவுக்கு பாகிஸ்தானும் அவசியமான இளைய கூட்டாளியாக இருக்கும். இந்தியாவும் பாகிஸ்தானும், இஸ்ரேல், அய்க்கிய அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிடம் ஆயுதங்களை மலை போல் வாங்கிக் குவிப்பதுதான் மிச்சம்.
போர் மட்டுமல்ல, போர் வெறியும் கூட ஆபத்தானது. போர் வெறி, போர் தயாரிப்புக்கு இட்டுச் செல்லும், ஆயுதப் போட்டியை ஊக்குவிக்கும், முதலாளித்துவ சூறையாடலில் இருந்து, சுரண்டலில் இருந்து, பறித்தெடுப்பதில் இருந்து, கருப்புப் பண மீட்பு, வேலை வாய்ப்பு உருவாக்கம், விவசாயிகள் நலன், போன்ற எல்லா முனைகளிலும் மோடி அரசு சந்திக்கிற படுதோல்விகளில் இருந்து, வெகுமக்கள் கவனத்தைத் திசை திருப்பும் பேராயுதமாக (Weapons of Mass Distraction) மட்டுமே போரும் போர் வெறியும் அமையும்.
ஆகவே என்ன விலை கொடுத்து போர், யாருக்காக போர், போர் வெறியுடன் கூடிய போர் தயாரிப்புக்கள் எதற்கு என்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும்.

நாடெங்கும் பரவிப் படரும் பாசிசம்

பாசிசம் பற்றிய மயிர் பிளக்கும் அறிவாளித்தன விவாதங்களைத் தவிர்ப்போம். பாசிசம் என்பது பற்றி ஹிட்லர் காலத்து, முசோலினி காலத்து பாசிசம் எனக் கற்பனை செய்து, அதனால், எதிர்க்கிறேன் என்று சொல்லக் கூடிய காங்கிரஸ் உள்ளிட்டோரிடம் கூட்டணியா எனக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
இந்திய பாணி பாசிசம், ஓரிரவில் ஓர் ஆட்சியில் புதிதாகப் பிறந்ததல்ல. வாஜ்பாய் ஆட்சியில் மதவாத பாசிசமாக இருந்தது. மோடி ஆட்சியில், பெரும் தொழில்குழும மதவாத பாசிசமாகி உள்ளது. நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையில், ஜனநாயகத்தை முடக்கும் போக்கு எப்போதுமே இருந்து வந்துள்ளது. சமூக பொருளாதார சமத்துவம் இல்லாதபோது, அரசியல் சுதந்திரம் சாத்தியம் அல்ல. ஆகவே நாடாளுமன்ற ஜனநாயகம், முதலாளித்துவ சர்வாதிகாரம் என்ற வகையில், தனக்கு நெருக்கடி வரும் போதெல்லாம், மிஞ்சியிருக்கிற ஜனநாயகத்தை முடக்கும். அதன் மங்கலான சுவடுகளையும் அழிக்கும், ஜனரஞ்சகமாக, பாசிசத்தை, மூலதனத்தின் வெளிப்படையான, ஆகப் பிற்போக்கான, கட்டற்ற சர்வாதிகாரம் எனப் புரிந்து கொள்ளலாம். இப்போது ஒரு தொடர்ச்சியாக, அதில் ஒரு புதிய மோசமான சகஜ நிலை வந்துள்ளது. அந்த வகையில் இது ஒரு பிறழ்வு அல்ல. பொருளாதார நெருக்கடி, பாசிசத்தின் செழிப்பான விளை நிலம் ஆகும். அரசியல் காரணங்களால், காங்கிரஸ் சற்று தயங்கிச் செய்ததை பாஜக வெளிப்படையாக தயக்கமின்றிச் செய்யும். காங்கிரஸ் அரை மனதுடன் செய்ததை பாஜக முழு மனதுடன் செய்யும்.
இந்தியாவில், கார்ப்பரேட் சூறையாடல், சர்வதேச இசுலாமிய பயங்கரவாத எதிர்ப்புப் போரின் ஒரு பகுதியாக, இசுலாமியர்க்கு எதிரான வெறுப்பை விசிறிவிட்டு வளர்ப்பது, இஸ்ரேல் - அய்க்கிய அமெரிக்காவுடன் இராணுவ அச்சு ஆகியவை, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2004 முதல் 2014 வரை பலப்படுத்தப்பட்டவை ஆகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது இங்கே, அந்நிய பாகிஸ்தானோடு பகைமை, இசுலாமியர் மீதான வெறுப்பு என ஏற்கனவே உருக்குலைவுக்கும் சிதைவுக்கும் உள்ளாக்கப்பட்டுவிட்டது. இந்த விஷயங்களை உணர்த்த, அதாவது பாஜக ஆட்சி சில விஷயங்களின் உச்சபட்ச தொடர்ச்சி, அதற்கான அடிப்படை ஏற்கனவே இந்தியாவில் இருந்தது என்பதை உணர்த்த, நமக்கு ஆபரேஷன் ஜிஞ்ஜர் பற்றிய செய்திகள் உதவும். (அக்டோபர் 8 அன்று வந்த ஆங்கில இந்து நாளேடு, இந்திய இராணுவ அதிகாரிகளுடன் உறுதி செய்து கொண்டு இந்தச் செய்தியை வெளியிட்டது. இதுவரை, ஆவண ஆதாரங்கள் கொண்ட இந்தச் செய்தி மறுக்கப்படவில்லை).
ஆபரேஷன் ஜிஞ்ஜர் 2011ல் நடைபெற்றது. 2011 ஜுலை 30 அன்று காஷ்மீர் மாநில குப்வாரா மாவட்டத்தின் குகல்தர்ரிட்ஜில், இந்திய இராணுவத்தின் 19 இராஜ்புத் பட்டாலியனும் 20 குமோன் பட்டாலியனும் இடமாற்றம் செய்து கொண்டிருந்த நேரம், பாகிஸ்தான் எல்லை அதிரடி வீரர்கள், ஹவில்தார் ஜெய் பால்சிங் அதிகாரி, லேன்ஸ் நாயக் தேவந்தர் சிங் என்ற இரண்டு பேரை, இந்திய எல்லைக்குள் நுழைந்து கொன்று, தலைகளை வெட்டி எடுத்தனர். மேலும் ஒருவரையும் கொன்றனர். வெட்டப்பட்ட தலைகளுடன் கொக்கரிப்புடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பழிக்குப்பழி வாங்க இந்திய இராணுவம் முடிவு எடுத்தது. கண்ணுக்கு கண் என எல்லோரும் புறப்பட்டுவிட்டால் உலகமே பார்வை இழந்தவர்களால் நிரம்பிவிடுமே என்ற காந்தியின் கரிசனம் அன்று முன்னே நிற்கவில்லை. இன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்லும், பல் எடுக்கப்பட்டால் தாடையையே உடைத்து நொறுக்குவோம் என்ற கருத்துதான் அன்று ஆணையில் இருந்தது. இப்படியாக, இரகசியமாகத் திட்டமிடப்பட்டது, ஆபரேஷன் ஜிஞ்ஜர்.
பாகிஸ்தானின் 7 இராணுவ முகாம்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. போலீஸ் சவுகி, ஹைபைசாத், லாஸ்தாத் என்ற முகாம்கள் பலவீனமாக இருந் ததாக அறியப்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் அவ்வளவு கவனமாக இருக்க மாட்டார்கள் என்பதால் பக்ரீத்துக்கு முந்தைய நாள், தாக்குதலுக்குத் தேர்வு செய்யப்பட்டது. போரில் வெற்றி பெற, செவ்வாய் ராசியான நாள் என முடிவெடுக்கப்பட்டது. இந்திய அதிரடிப் படையினர் 3 குழுக்களாக பாகிஸ்தானுக்குள் 48 மணி நேரம் ஊடுருவினர். முதல் குழு போலீஸ் சவுகி முகாமுக்கு வெளியே கண்ணி வெடி வைத்தது. ரோந்துக்கு வெளியே வந்த 4 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இந்தியப் படையால் சரமாரியாகச் சுடப்பட்டனர். ஒரு பாகிஸ்தானிய வீரர் நீரோடையில் விழுந்தார். மற்ற மூன்று பாகிஸ்தான் வீரர்களின் தலைகளை இந்தியப் படையினர் வெட்டினர். ஒரு தலையில்லாத உடலின் கீழ் வெடிகுண்டை வைத்தனர். சத்தம் கேட்டு வந்த இன்னும் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள், இரண்டாம் குழுவால் கொல்லப்பட்டனர். அடுத்து வந்த இரண்டு பாகிஸ்தான் வீரர்களை 3ஆவது குழு கொன்றது. தலையில்லாத உடலை எடுக்க வந்த, 2 முதல் 4 வரையிலான பாகிஸ்தான் வீரர்கள் குண்டு வெடித்து செத்திருப்பார்கள் என இந்தியக் குழுக்கள் கணக்கிட்டனர். பாகிஸ்தான் இராணுவத்தின், சுபேதார் பர்வெஸ், ஹவில்தார் அஷ்ரப், நாயக் இம்ரன் ஆகிய மூவரின் தலைகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்த அதிரடிப் படையினர், அந்த தலைகளைப் புகைப்படம் எடுத்துவிட்டு, பின்னர் புதைத்துவிட்டனர். விவரம் அறிந்த மேலதிகாரி, மரபணு (டிஎன்ஏ) ஆதாரம் இருக்கக் கூடாது எனக் கண்டித்த பிறகுபுதைக்கப் பட்ட தலைகளைத் தோண்டி எடுத்து, எரித்து சாம்பலை கிஷென்சங்கா நதியில் எறிந்தனர்.
இரண்டு தரப்பிலும் வீரத்தைக் காட்டிலும் கொடூரமும் பரஸ்பர வெறுப்பும் மிதமிஞ்சி உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பரவி உள்ளது. வீரம், தியாகம் என இருதரப்பினருமே இலட்சியமயப்படுத்தி, இராணுவ நடவடிக்கைகள் பற்றி கேள்வி கேட்பதே தேச துரோகம் என்பார்கள். தேச பக்த இராணுவ வீரர்கள், கேள்வி கேட்கும் தேசப் பற்றில்லாத குடிமக்கள் என்பார்கள். வீரர்கள் மரணத் துயர் என்பதைக் காரணமாக்கி ஜனநாயக விவாதங்களை ஒழித்துக்கட்டி, சமூகத்தை இராணுவமயமாக்குவார்கள்.
ஆகவே, பாசிசம் என்பதில் போர், போர் தயாரிப்புகளுடன் கூடிய போர்வெறி, தேச பக்த கூச்சல் ஆகியவை முக்கிய அம்சங்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். முன்னேறிய குஜ்ஜார், ஜாட், படேல், மராத்தா சாதிகள் எங்களுக்கும் இட ஒதுக்கீடு தா ,இல்லையேல் இட ஒதுக்கீடே வேண்டாம் எனப் பார்ப்பனீய மீட்சிக்கு முயற்சிப்பது, தாத்ரியில் மாட்டுக்கறி வீட்டில் இருந்தது எனக் கொல்லப்பட்ட முகமுது அக்லக் வீட்டின் முன்பாக, கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட 18 பேரில் நோயுற்று இறந்த ரவி சிசோடியா என்பவர் சவப்பெட்டி மேல் தேசியக் கொடியை சங்பரிவார் கும்பல் போர்த்தி, ரவி சிசோடியா குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு மற்ற 17 பேருக்கு விடுதலை எனத் துணிச்சலாக வலியுறுத்துவது, (முகமது அக்லக்கின் மகன் இந்திய விமானப்படையில் பணி புரிபவர்), அய்க்கிய அமெரிக்கா, அம்பானி, அதானி ஆட்சி கட்டற்ற சுதந்திரத்துடன் நடப்பது, தேர்தலைச் சந்திக்கவுள்ள உத்தரபிர தேசத்தின் ராம்லீலாவில் நாட்டின் பிரதமர் கலந்து கொண்டு, ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டு, இராமனும் கிருஷ் ணனும் போரிட்டனர் என்றும் இராவணன் சீதையைத் தூக்கிச் செல்வதைப் பார்த்து அதைத் தடுக்க வந்த ஜடாயுவைக் கொல்வது, பயங்கரவாதச் செயல் என்றும் பேசி, இந்துத்துவா வெறிக்குத் தூபம் போடுவது, லக்னோவில்உரிக்கு பழிவாங்கியவர்களை வரவேற்கிறோம்என்றும், ‘உங்களைக் கொல்வோம், எங்கள் துப்பாக்கியால் தோட்டாவால், எங்களுக்கு வசதிப்படும் நேரம், உங்கள் இடத்திற்கு வந்து உங்களை நிச்சயம் கொல்வோம்என்றும் பாகிஸ்தானுக்கு மட்டும் அல்லாமல் சங்பரிவார் எதிர்ப்பாளர்களுக்கெல்லாம் எச்சரிக்கை விடும் விதம் தட்டிகள் வைப்பது ஆகிய அனைத்துமே, நாடெங்கும் பரவிப் படரும் பாசிசத்தின் வெளிப்பாடுகளே.

போர்வெறி நஞ்சுக்கு முறிவு மருந்து என்ன?

உத்தரவிடுவோனே
முனை முகத்தில் நிற்கும்
முதல் ஆளாய்
இருத்தல் வேண்டும் என்றிருந்தால்
இவ்வுலகில்
போர் நிகழுமா, என்ன?
இது மகுடேசுவரன் என்பவர் எழுதிய நவீன கவிதை. அநீதியான, வர்க்க ஏற்றத்தாழ்வுள்ள, நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கிடையிலும் ஏற்றத்தாழ்வு உள்ள இவ்வுலகில், போருக்காக உசுப்பேற்றுபவர்கள், போருக்கு உத்தரவிடுபவர்கள், போரில் ஈடுபடுவதில்லை. போரில் பலியாவதில்லை. லெனின் ரஷ்ய இராணுவ வீரர்களை, சீருடை அணிந்த விவசாயிகள் என்றார். இந்தியாவில் பணக்கார, மேல் சாதி வீட்டுப் பிள்ளைகள், சாதாரண சிப்பாய்களாக, கீழ்மட்ட அதிகாரிகளாக இருப்பதில்லை. அவர்கள், பெருமளவுக்கு ஆபத்துக்களைச் சந்திப்பதில்லை. தரையில், ஆகாயத்தில், தண்ணீரில் பயன்படுத்தப்படும் எல்லா ஆயுதங்கள், கவசங்கள் முதல் சவப்பெட்டிகள் வரை வாங்குவதில் கோடிகோடியாய் காலா காலமாய் ஊழல் செய்வது, உயர் இராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள், வியாபார தொழில் பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூட்டே ஆகும். இன்று உலகில் உள்ள எல்லா நாடுகளையும் நிதிமூலதனமும், ஏகபோகங்களும் கட்டுப்படுத்துகின்றன. அவர்களுக்குத் தசை வலிமை தருவது, இராணுவம் - அதிகார வர்க்கம் -அரசியல்வாதி அச்சே ஆகும்.
இந்த அச்சு போரையும் போர் வெறியையும் தூண்டுகிறது. ஆயுத வியாபாரிகள், சாவு வியாபாரிகள், இந்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், போரை விரும்புகிறார்கள். போரைத் தூண்டுகிறார்கள். சாமான்ய மக்களும் போர் வீரர்களும், அவர்கள் போக்கில் விடப்பட்டால், அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புவார்கள். உரியில் தன் மகளை இழந்த ஓம்கார் நாத் டோலுய் சொன்னார்: ‘என்னை நம்புங்கள், இரு தரப்பிலும் என் மகள் போன்ற ஏராளமானவர்களின் உயிரைப் பறிக்கும் போர் வேண்டவே வேண்டாம்.‘
உலகம் முழுவதும் உள்ள முற்போக்காளர்கள், எல்லா தடைகளையும் மீறி அதிகாரத்திடம் உண்மையைப் பேசுகிறவர்கள் போர்களை எதிர்த்துள்ளனர். அமைதியை விரும்பி உள்ளனர். ரஷ்ய நாட்டிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் போர் துவங்கி, ஆயிரம் ஆயிரமாய் ரஷ்ய வீரர்கள் உயிர் துறந்திருந்த நேரத்தில், லட்சக்கணக்கான ரஷ்யர்கள் போர் முனையில் கடினமான நிலைமைகளில் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், வீரம், தியாகம், தேச பக்தி பற்றிப் பெரிதும் பேசப்பட்ட நேரத்தில், அந்த போர் ஏகாதிபத்திய போர் என்றும், இரு தரப்பு முதலாளிகளும் ஆதாயம் அடைவார்கள்மக்கள் நாசமாவார்கள், அதனால் ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக்குவோம் என்று சொல்லும் அரசியல் துணிச்சல் தோழர் லெனினுக்கு, போல்ஷ்விக் கட்சிக்கு இருந்தது. நிலம், ரொட்டி, சமாதானம் வேண்டும், போர் வேண்டாம் என்ற அவர்கள்  முழக்கத்தை, ரஷ்யாவின் உழைக்கும் மக்களும் போர் வீரர்களும் ஏற்றுக் கொண்டு புரட்சி ஒன்றைச் செய்து முடித்த நூறாவது ஆண்டில், நாம் நவம்பர் 7, 1917ல் நுழைகிறோம். தாய் நாட்டை, தந்தை நாட்டை ஆதரிப்பது என்ற பெயரால் பல முன்னாள் கம்யூனிஸ்ட்கள், கட்சிகள், தேச வெறியர்கள் ஆனார்கள். ஏகாதிபத்திய  விசுவாசிகள் ஆனார்கள். உலகம் முழுவதும் இருந்த பாட்டாளிகளும் உழைக்கும் மக்களும் தோழர் லெனின் முன்வைத்த நியாயத்தை எற்றுக் கொண்டனர்.
இன்று உலகில் அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்துள்ளஒரு பயங்கரவாத எதிர்ப்புப் போர்நடைபெறுகிறது. இந்தப் போரில் இது வரை அந்த நாடு 4.4 டிரில்லியன் டாலர், ரூ.286 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. இந்தப் போரில் ஈடுபட்ட வீரர்கள், ஒரு நாளுக்கு 20 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 2014ல் மட்டும் 7,400 பேர் நிம்மதியும் திருப்தியும் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டனர். ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை, இந்தப் போரில், ஆப்கானிஸ்தான், இராக், சிரியா, லிபியா, சோமாலியா என 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். ஏகாதிபத்தியம் வெட்டிய கிணற்றிலிருந்து அதற்குப் புதையல் கிடைக்கவில்லை. ஒரு பூதம் புறப்பட்டு தன்னைப் படைத்த ஏகாதிபத்தியத்தை விழுங்க முயற்சிக்கிறது.
கம்யூனிஸ்ட்கள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் துணிச்சலுடன் தேச வெறியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். தேசம், தேசப் பற்று பற்றி அம்பேத்கர், மார்க்ஸ் சொன்ன விஷயங்களைக் காண்பது அவசியமாகும். அம்பேத்கரும் காந்தியும் ஒரு முறை சந்தித்தபோது, இந்து மதம் மற்றும் சாதி பற்றிய அம்பேத்கரின் விமர்சனங்கள், தாய்நாட்டிற்கான போராட்டத்தை விமர்சிப்பதாக ஆகாதா என, காந்தி கேட்டாராம். ‘காந்திஜி, எனக்கு தாய்நாடு இல்லைஎன அப்போது பதில் சொன்ன அம்பேத்கர், வேறொரு சமயம், ‘தன்மானம் உள்ள எந்தத் தீண்டத்தகாத வனும் இந்த நாட்டைப் பற்றிப் பெருமை கொள்ள மாட்டான்என்றாராம்.
1848ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதிய மார்க்சும் எங்கெல்சும், கம்யூனிஸ்ட்கள், தாய்நாட்டையும் தேசியத் தன்மையையும் இல்லாதொழிக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். பின் அதற்குப் பதில் சொல்கிறார்கள், ‘தொழிலாளர்களுக்கு தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை, அவர்களிடமிருந்து பிடுங்குவது முடியாத காரியம்.’
எல்லா அநீதியான போர்களுக்கும் முடிவு கட்ட, கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்க, அவர்கள் ஒரு முறிவு மருந்தைப் பரிந்துரைத்துள்ளனர். ‘தனி ஒருவர் பிறர் ஒருவரைச் சுரண்டுதல் எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு ஒரு தேசம் பிறிதொன்றைச் சுரண்டுதலும் ஒழித்துக்கட்டப்படும். தேசங்களுக்குள் வர்க்கங்களுக்கிடையிலான பகை நிலை எந்த அளவுக்கு மாறுகிறதோ, அந்த அளவுக்கு தேசங்களுக்கு இடையிலான பகைமையும் இல்லாதொழியும்.’
போர் வேண்டாம். போர் வெறி வேண்டாம்.
அமைதி வேண்டும். பாகிஸ்தானோடு நல்லுறவு வேண்டும்.


சார்க் மாநாட்டில் (தெற்கு ஆசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) இந்தியா கலந்துகொள்ளவில்லை. பாகிஸ்தான் கலைஞர்கள், இந்தியாவில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. லக்னோ ராம்லீலா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த சிறந்த பாலிவுட் கலைஞர் நவாசிதீன் சித்திக்குக்கு, அவர் இசுலாமியர் என்பதால் பின்னர் அனுமதி மறுக்கப்பட்டது. அணிசேரா 120 நாடுகள் இயக்கம் வெனிசூலாவின் மார்காராட்டாவில் நடத்திய மாநாட்டிற்கு மோடி செல்லவில்லை. மார்காராட்டாவில் இருந்து சில மணி நேரம் பயண தூரத்தில் உள்ள நியுயார்க் போன அயல்விவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் நிலை சரியில்லை எனச் சொல்லி, இந்தியாவும் சேர்ந்து நிறுவிய அணிசேரா இயக்க மாநாட்டிற்குச் செல்லவில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீரை மய்யங்கொண்ட பதட்டம் நிலவுகிறபோது, சமாதானப் புறா அல்ல போர்க்கழுகுதான் என நன்கறியப்பட்ட இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், 10.10.2016 அன்று ஆங்கில இந்து நாளேட்டில் எழுதிய கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
  • ·         ஜுலை 8 புர்ஹான் வானி மரணத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 100 நாட்களாக எதிர்ப்பு நீடிக்கிறது. பல வார ஊரடங்கு, ஊடக இருட்டடிப்பு, உயிரிழப்புகளுக்குப் பிறகும் காஷ்மீரில் போராட்டம் ஓயவில்லை.
  • ·         காஷ்மீரில் போராட்ட இயக்கம், தலைவர்கள் இல்லாமல்தானே ஆட்டோ பைலட்டில் செயல்படுகிறது. புர்ஹான் வானி இறுதிச் சடங்கில்  2 லட்சம் பேர் கலந்து கொண்டது சொல்லும் செய்தி என்ன?
  • ·         10, 12 வயது பள்ளிப் பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்துவது தீர்வாகாது.
  • ·         காஷ்மீரில் பூகம்ப நிகர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
  • ·         ஜம்மு காஷ்மீர் அரசாங்கமோ, மத்திய அரசாங்கமோ, உண்மையான பிரச்சனையைப் புரிந்து கொள்ளும் கையாளும் நிலையில் இல்லை.
  • ·         காஷ்மீரின் மொத்த இளைய தலைமுறையும் நம்மை விட்டு விலகி உள்ளது. வழமையான தீர்வுகள் உதவாது. அவர்கள் மனங்களை வெல்வதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டும்.


எழு, என் தேசமே!

ரத்தம் தோய்ந்துள்ள பள்ளத்தாக்கின்
வீதிகளில்,
இளைஞர்கள்,
அலை போல் எழுகிறார்கள்.
சுதந்திரமே, அவர்கள் நிலவு.

அவர்களுக்கு வழிமரபாக
கையளிக்கப்பட்ட
பிணங்களின் சுமையை,
வீதிகளில் விட்டுவைத்துள்ளனர்
உலகம் காண்பதற்காக

பட்டினியே அவளது ஆயுதம்
இப்போது அதனைத் துறந்துவிட்டாள்
தான் பசித்திருப்பதாகச் சொல்கிறாள்
இந்த நாட்டின்
வலியவர்களோடு
ஒரு சண்டைக்காக.

அவன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான்
அவன் கடன் பெற்ற ஓர் அறையில்
மரணத்தில் கூட, அவனுக்கான ஓர் அறையை
பெறும் வசதி அவனுக்கில்லை
ஆனால் அவனுக்கோர் இடம் வரலாற்றில் இருக்கும்
ஒடுக்குவோர் கரங்களால்
வெட்டுண்ட வாழ்வில்
அவன் போராட்டத்தை, அவன் நிலைப்பாட்டை
அவன் விட்டுச் சென்ற கடிதங்கள்
நமக்குப் புலப்படுத்தும்.

நீ கேட்கிறாய் யார் இந்த மனிதர்கள்,
அவர்கள் அடித்தட்டு மனிதர்கள்
நியாயப் பள்ளத்தாக்கில் வாழ்பவர்கள்
ஆற்றலும் துணிவும் கொண்ட பெண்கள்
அறிவைத் தேடுபவர்கள்
எவரும் காணாத யாரோதான் அவர்கள்
அவர்கள் விழித்துவிட்டனர்
அவர்கள் எழுந்து நிற்கின்றனர்
இனி தேசம் எப்படி உறங்கும்?
(காஷ்மீர், உனாஅய்ரம் ஷர்மிளாரோஹித் வேமுலா பற்றி
கேரல் டிசவுசா
எகானாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி

24.09.2016)

Search