COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 17, 2016

விழுப்புரத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி
இகக மாலெ குழு அறிக்கை

ஆலை உரிமையாளர், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்
உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, துருவை கிராமத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 09.10.2016 அன்று நடைபெற்ற விபத்தில் ஆலை முழுவதுமாக தரைமட்டமானது
. தண்ணீர் டேங்கர் லாரி கவிழும் அளவிற்கு கடும் அதிர்ச்சியுடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் தீக்கிரையாகி மடிந்துள்ளனர். 11 தொழிலாளர்கள் கடுமையான தீக்காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) புதுச்சேரி மாநிலச் செயலாளர் தோழர் சோ.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் தோழர் புருஷோத்தமன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் தோழர் மா.வெங்கடேசன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டச் செயலாளர் தோழர் செண்பகவள்ளி, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க வானூர் பகுதி அமைப்பாளர்கள் தோழர்கள் சங்கர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் கொண்ட குழு விபத்து நடந்த இடத்தை 12.10.2016 அன்று பார்வையிட்டது. வெடி விபத்தை நேரில் பார்த்தவர்களைச் சந்தித்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களையும் இகக மாலெ குழு நேரில் சந்தித்தது. அவர்களில் பலருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துருவை கிராமத்தில் நடந்த இந்த வெடி விபத்திற்கு அடிப்படைக் காரணம், அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை சேகரித்து வைத்ததுதான் என்று சொல்லப்படுகிறது. இந்த பட்டாசு ஆலையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற பணி நிலைமைகளிலேயே பணிபுரிய அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஆலை உரிமையாளரின் அலட்சியமும், பட்டாசு ஆலைகளில் விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டிய அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற நடைமுறைகளும் கண்காணிப்பு தோல்விகளும்தான் இந்தக் கொடூரமான உயிரிழப்புகளுக்குக் காரணம்.
மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் விழாக்காலங்களில் பட்டாசு ஆலை வெடி விபத்து வாடிக்கையாகி வருகிறது. இந்த விபத்துகள் நிகழ்வது பற்றி அஇஅதிமுக அரசாங்கத்துக்கு நன்கு தெரிந்திருந்தும் ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பெரும்எண்ணிக்கை உயிர்ப்பலி ஏற்படுகிறது.
பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பது, அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை இகக மாலெ குழு முன்வைக்கிறது.
1.            பட்டாசு ஆலை உரிமையாளர் ரமேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
2.            பட்டாசு ஆலைகளில் விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அரசு அதிகாரிகளான, வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304ஏபடி வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
3.            பட்டாசு உற்பத்தி தொழில் முழுவதுமாக எந்திரமயமாக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
4.            விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.
5.            பட்டாசு ஆலை தொடர் விபத்துகள், மரணம் மற்றும் பொருள் இழப்புகள், நெருக்கடிகள் பற்றி விவாதிப்பதற்கு அமர்வில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
6.            பாதுகாப்பற்று இயங்கும் அனைத்து பட்டாசு ஆலைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டும். ஊழல் அதிகாரிகள், குறிப்பாக வருவாய், காவல் துறை, தீயணைப்பு துறையில் உள்ள ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இதுபோல் தவிர்க்கக் கூடிய விபத்துகளுக்கு அவர்களையே பொறுப்பாக்க வேண்டும்.
7.            படிப்படியாக பட்டாசு ஆலைகளை நிரந்தரமாக மூடுவது, இதனால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு அரசு வேலை அளிப்பது ஆகியவை செய்யப்பட வேண்டும்.
சோ.பாலசுப்பிரமணியன், மா.வெங்கடேசன்

பகத்சிங் 109ஆவது பிறந்த தினத்தன்று
டெல்லியில் மாணவர், இளைஞர் பேரணி

பகத்சிங் பிறந்த தினமான செப்டம்பர் 28 அன்று மாவீரன் பகத்சிங், டாக்டர் அம்பேத்கர் கனவு கண்ட இந்தியாவுக்காக போராட உறுதியேற்று இந்தியா முழுவதும் இருந்து திரண்டிருந்த மாணவர் - இளைஞர்களின் எழுச்சிப் பேரணி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் பேரணியை அகில இந்திய மாணவர் கழகமும், புரட்சிகர இளைஞர் கழகமும் இணைந்து நடத்தின.
பகத்சிங்கின் உறவினரும் அறிவுஜீவியும் செயற்பாட்டாளருமான பேராசிரியர் ஜக்மோகன் பேரணியைத் துவக்கி வைத்தார். அம்பேத்கர் பவனிலிருந்து நாடாளுமன்ற வீதி நோக்கி நடைபெற்ற வண்ணமயமான பேரணியில், எழு என் தேசமே அம்பேத்கர், பகத்சிங் வழியில் புதிய இந்தியா படையெடுப்போம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரணியின் முடிவில் நாடாளுமன்ற வீதியில் நடந்த பொதுக் கூட்டத்தை அகில இந்திய மாணவர் கழக தேசியத் தலைவர் தோழர் சுசேதா டே தலைமையேற்று நடத்தினார். கூட்டத்தில் பாட்னாவின் ஹிராவால் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் சுசேதா தனது உரையில், மாணவர் மீது தொடுக்கப்படும் தேசத் துரோக வழக்குகள், தலித் மாணவர்கள் மீதான தாக்குதல், பல்கலைக் கழகத்திலும் விடுதிகளிலும் அவர்கள் மீதான பாரபட்ச அணுகுமுறை, இவற்றிற்கு எதிராக நடைபெற்றுவரும் மாணவர்களின் எழுச்சி ஆகியவை பற்றிக் குறிப்பிட்டார். ஆளும் வர்க்கத்தின் யுத்த வெறிக் கூச்சலுக்கு எதிராக தெற்காசிய மாணவர்கள் ஒன்றுபட வேண்டுமெனவும், சாதிய பாகுபாட்டுக்கு எதிராக ரோஹித் வேமுலா நினைவாக சட்டமியற்ற வேண்டுமெனவும் தொடர் போராட்டம் நடத்த மாணவர், இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கூட்டத்தில் பேசிய இகக (மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் தனது உரையில், இந்தியாவில் பாசிசத்தின் அச்சுறுத்தலை மக்கள் இயக்கங்களும், முற்போக்கு மரபும் தடுத்து முறியடிக்கும் என்றார். பகத்சிங், காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுகிற அதே சமயம் உள்நாட்டு பழுப்பு நிற ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் போராட அழைப்பு விடுத்ததையும், சமத்துவமும் சகோதரத்துவமும் இல்லாவிட்டால் சுதந்திரம் உண்மையானதாக இருக்காது என்று அம்பேத்கர் சொன்னதையும் சுட்டிக் காட்டிய அவர், சாதி மறுப்புத் திருமணங்களுக்காக, பெண்களின் முழுமுற்றூடான சுதந்திரத்திற்காக, விவசாயிகள், தொழிலாளர்கள் ஒற்றுமைக்காக போராடாமல் சாதியை ஒழிப்பது சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டார். காஷ்மீரிலும், வடகிழக்குப் பகுதியிலும் இராணுவத்தின் வன்கொடுமைகளுக்கு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்ற தோழர் திபங்கர், பதான்கோட், உரி இராணுவ தளங்களை பாதுகாக்க முடியாத அரசாங்கம் பாகிஸ்தான் எதிர்ப்பு யுத்த வெறிக் கூச்சலிலும் வெறுப்பிலும் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். ரோஹித் சட்டம் மற்றும் வளாக ஜனநாயகத்துக்கான போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற அவர் பகத்சிங்கையும் அம்பேத்கரையும் சுவீகரித்துக் கொள்ள சங் பரிவாரம் எடுக்கும் முயற்சியை மாணவர்களும் இளைஞர்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.
கூட்டத்தில் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் தோழர் மோஹித், கர்வால் பல்கலைக் கழக மாணவர் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் சிவானி, ஜேஎன்யு மாணவர் சங்க மேனாள் பொதுச் செயலாளர் தோழர் ராமநாகா, அகில இந்திய விவசாய மகாசபையின் பொதுச் செயலாளர் தோழர் ராஜாராம் சிங், பேராசிரியர் ஜக்மோகன், பிரபல செயற்பாட்டாளர் ராம் புன்யானி, மூத்த பத்திரிகையாளர் அனில் சமாரியா, பிரபல எழுத்தாளரும் தலித் பெண்கள் உரிமை செயற்பாட்டாளருமான அனிதா பார்தி, ஜேஎன்யு தூய்மைப் பணி தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் ஊர்மிளா ஆகியோர் உரையாற்றினர்.
புரட்சிகர இளைஞர் கழக பொதுச் செயலாளர் தோழர் ஓம்பரகாஷ், அகில இந்திய மாணவர் கழக பொதுச் செயலாளர் தோழர் சந்தீப் சவுரவ், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக செயலாளர் தோழர் கவிதா கிருஷ்ணன், அனைத்திந்திய விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் சங்க தேசியத் தலைவர் தோழர் ரமேஷ்வர் பிரசாத் மேடையில் இருந்தனர்.

ஹோண்டா தொழிலாளர் போராட்டத்துக்கு ஒருமைப்பாடு

செப்டம்பர் 28 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹோண்டா தொழிலாளர்களை தமிழக மாணவர்கள் இளைஞர்கள் சந்தித்து ஒருமைப்பாடு தெரிவித்தனர்
தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் நிறைந்த திருபெரும்புதூர் பகுதியில் ஏஅய்சிசிடியுவும் புரட்சிகர இளைஞர் கழகமும்  அப்பகுதி தொழிலாளர்களின் வாழ்வுரிமை, கவுரவத்திற்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

டெல்லி மாணவர், இளைஞர் பேரணிக்கும் அப்பகுதியின் இளம் தொழிலாளர்கள் சென்றிருந்தனர். அப்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஹோண்டா தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் அங்கு நடந்து கொண்டிருந்தது. 5 தொழிலாளர்களின் கால வரையற்றப் பட்டினிப் போராட்டம் செப்டம்பர் 28 அன்று 10ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் தமிழக இளைஞர்கள் அவர்களை சந்தித்து தங்களது ஒருமைப்பாட்டைத் தெரிவித்தனர். புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். அந்தக் குழுவில் புரட்சிகர இளைஞர் கழக மாநில பொதுச் செயலாளர் தோழர் தனவேல், மாநில துணைத் தலைவர் தோழர் ராஜசங்கர், மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர் கண்ணன், தோழர் ஆறுமுக வடிவேல், காஞ்சிபுரம் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் செந்தில், தோழர் திவ்யா (மதுரை), தோழர் வெற்றிவேல் (விழுப்புரம்) உட்பட முன்னணிகள் பலரும் இருந்தனர்.

(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 16 – 31 தொகுதி 15 இதழ் 6)

Search