COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, October 1, 2016

பயிற்சியாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்கள்
பிரிக்கால் தொழிலாளர்களின் முன்னுதாரண நடவடிக்கை
பிரிக்கால் நிர்வாகம் தொழிலாளர்களின் உணவகத்தில் உணவுப் பொருட்கள் விலையை உயர்த்துமாறு, ஊதிய உயர்வு ஒப்பந்த மை உலரும் முன்பு இருந்தே கேட்டு வந்தது. தொழிலாளர்கள் இந்த விலை உயர்வு சம்பள வெட்டு என வாதிட்டு ஏற்க மறுத்தனர். இப்போது நிர்வாகம் பயிற்சியாளர்களுக்கு அலுவலகப் பணியாளர்களுக்கு 01.10.2016 முதல் ரூ.8.44 சாப்பாடு ரூ.12 ஆகும், ரூ.12.32 சிறப்பு சாப்பாடு ரூ.18 ஆகும், ரூ.4.81 சிற்றுண்டி ரூ.10 ஆகும், பல்வகை சாப்பாடு ரூ.7.31ல் இருந்து ரூ.12 ஆகும், காபி ரூ.1.61ல் இருந்து ரூ.3.50 ஆகும், தேநீர் ரூ.1.35ல் இருந்து ரூ.3.50 ஆகும், தயிர் ரூ.2.85ல் இருந்து ரூ.5 ஆகும் என அறிவித்தது.
சங்கம் இது தவறு என சொன்னபோது, உங்களுக்கு விலை உயர்வு இல்லாதபோது, தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடாதீர்கள் என நிர்வாகம் ஆலோசனை தந்தது. தொழிலாளர்கள் விலை உயர்வுக்கு எதிராக 24.09.2016 அன்று ஆலை வாயில் ஆர்ப்பாட்டமும் 27.09.2016 அன்று பட்டினிப் போராட்டமும் நடத்தினார்கள். 
நிர்வாகம், பயிற்சியாளர்களுக்காக நிரந்தரத் தொழிலாளர்கள் நடவடிக்கை எடுத்ததை கண்டிக்கும் வகையில், 28.09.2016 அன்று ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. 200 தொழிலாளர்கள் வரை கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்குபவர்களுக்கே விலை உயர்வு கட்டுப்படியாகாது என்ற நிலைமையில், மாதம் ரூ.7,800 என்ற குறைசம்பளம் வாங்குபவர்களுக்கு விலை உயர்வு அநியாயம் என பதிலடி தந்தார்கள்.
நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தி தொடர் போராட்டம்
அம்பத்தூர், காமராஜபுரம் 85வது வார்டு மக்களுக்கு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஏற்கனவே இந்தப் பகுதியில் இயங்கி வருகிற அரசு நடுநிலைப்பள்ளி அருகிலேயே போதுமான இடமிருந்தும் அந்தப் பள்ளியை தரம் உயர்த்த அரசு மறுத்து வருகிறது. புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் இணைந்து நடத்தும் ‘எழு என் தேசமே’ இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தக்  கோரிக்கை மீது கைùழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பகுதி மக்கள் கட்சி பேதமின்றி பேராதரவு தந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 21 அன்று அம்பத்தூரில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் கைகோர்த்து முழக்கமிட்டு நின்றனர். அம்பேத்கர், பகத்சிங் படங்களுடனான பதாகைகளை தாங்கி நின்றனர்.
செப்டம்பர் 24 அன்று புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 100 ஆண்களும் 14 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி உடனே சுவரொட்டி வெளியிடப்பட்டது. ‘கற்பி, அமைப்பாக்கு, புரட்சி செய்’ என்ற டாக்டர் அம்பேத்கரின் முழக்கங்களுடன் ‘எழு என் தேசமே’ இயக்கத்தில் அகில இந்திய மாணவர் கழகம் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தியது.
அம்பத்தூரில் காமராஜபுரத்திலுள்ள நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினால் அந்தப் பகுதியில் பெரும்எண்ணிக்கையில் உள்ள தலித் மாணவர்கள் பயன் பெறுவர். புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் முன்னோடிகளான தோழர்கள் கண்ணன், சுரேஷ், சங்கர், புகழ்வேந்தன், ரகுநாதன், கோகுல் ஆகியோர் விடாப்பிடியாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும் கோரிக்கை மனு முதலமைச்சர் தனிப்பிரிவு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வித் துறை அதிகாரிகள் என அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர்.
மங்களூரில் அகில இந்திய துறைமுகத் தொழிலாளர் கூட்டமைப்புக் கூட்டம்
கர்நாடக மாநிலம் மங்களூரில் செப்டம்பர் 18 அன்று அகில இந்திய துறைமுகத் தொழிலாளர் கூட்டமைப்பு உருவாக்குவதற்கான தயாரிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் இகக(மாலெ) மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் சங்கர், ஏஅய்சிசிடியு தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், தூத்துக்குடியிலிருந்து தோழர்கள் சகாயம், ராஜ், அலெக்ஸ் ஆகியோரும் சென்னைத் துறைமுகத்திலிருந்து தோழர் கணேஷ், மங்களூர் துறைமுகத்திலிருந்து திவாகர், ரிச்சர்ட் மோகன், சதீஷ் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியு கொடியுடன் கலந்துகொண்டனர். மேற்கு வங்கம், ஒடிஷா, குஜராத் மாநிலங்களில் இருக்கும் தொடர்புகளை இணைக்க, தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது இயக்கம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. தற்காலிக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் துவங்கப்பட்டது
செப்டம்பர் 25 அன்று தருமபுரி ஏஅய்சிசிடியு அலுவலகத்தில் உழைப்போர் உரிமை இயக்க கூட்டம் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கொ.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தோழர் ஸ்வப்பன் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் 45 பேர் உழைப்போர் உரிமை இயக்கத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். தோழர் கொ.கோவிந்தராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. குழுவில் தோழர்கள் முனிராஜ், சண்முகம், குமார், தென்னரசு, தனம், அருள்மொழி, சக்தி, ரவிக்குமார், பிரபு, முத்துசாமி, சுரேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.
கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநாட்டிற்குப் பிறகு அக்டோபர் 5 முதல் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்களின் பொதுக்குழுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிட்டுக் கொள்ளவும் கூட்டம் முடிவு செய்தது. கூட்டத்தில் மின்சார வாரிய தொழிற்சங்க நிர்வாகி தோழர் முருகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சங்க மண்டலச் செயலாளர் தோழர் மணி, ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தோழர் வடிவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 01 – 15 தொகுதி 15 இதழ் 5)

Search