COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, October 1, 2016

சிவான், சகாபுதீன் மற்றும் இகக மாலெ
திபங்கர்
பத்திரிகையாளர் அஜாஸ் அஷ்ரப்புடன் நடத்திய உரையாடலில் இருந்து
பீகாரில் மற்ற இடங்களில், குறிப்பாக போஜ்பூரிலும், பிற பக்கத்து மாவட்டங்களான பாட்னா, ஜெகனாபாத், ஆர்வால் ஆகிய மாவட்டங்களிலும், இகக மாலெ உருவாகி வளர்ந்ததுபோல்தான், சிவானிலும் இகக மாலெ உருவாகி வளர்ந்தது. நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு எதிராக, கிராமப்புற வறிய மக்களின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மத்தியில் உருவான எழுச்சியில்தான், நிலமறு விநியோகம், குறைந்தபட்ச கூலி, சமூக/மானுட கவுரவம், அரசியல் உரிமைகள் ஆகிய ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள முக்கியமான பிரச்சனைகள் மீது நடந்த தாக்குப் பிடித்து நின்ற சக்தி வாய்ந்த போராட்டங்களின் ஊடேதான், இகக மாலெ பீகாரில் வளர்ந்தது. ஷாஹாபாத் மற்றும் மகத் பிராந்தியங்களில் 1970களிலும் 1980களின் துவக்கத்திலும் கட்சி உருவாகி வளர்ந்தது; அப்போது கட்சி தலைமறைவு கட்சியாக இருந்தது; பீகாரில் நெருக்கடி நிலைக்குப் பின் கர்பூரி தாகூர், ராம்சுந்தர் தாஸ் ஆகியோர் ஆட்சி இருந்த குறுகிய காலம் தவிர, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது; சிவானில் 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் துவக்கத்திலும் கட்சி வளரத் துவங்கியது. இந்த கால கட்டத்தில் இகக மாலெ வெளிப்படையான வெகுமக்கள் போராட்டங்கள் மூலம் விரிவடைந்தது; பீகாரில் நீண்ட காலம் இருந்த, காங்கிரஸ் ஆட்சியில் இருந்து, ஜனதா தளத்தின் துவக்க கால பிளவுபடாத கட்டத்தில் இருந்து தற்போதைய கூட்டணி கட்டம் வரையிலான அதன் நீடித்த ஆட்சியாக மாறியிருக்கிற அரசியல் மாற்றத்தின் துவக்கத்தை, பீகார் அப்போது பார்த்தது. 
1980களின் பிற்பகுதியிலும் 1990களிலும் சிவானின் தரோலி ஒன்றியம் கட்சியின் கரு மய்யமாக இருந்தது. இகக மாலெயின் தலைமையில், பெரும்பாலும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நிலமற்ற வறிய மக்களும் குறுவிவசாயிகளும், அந்தப் பகுதியில் விரவிப் பரவியிருந்த, பெரும்பாலும் ராஜ்புத் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுத்துவ சக்திக்கெதிராக போராடினார்கள். தரோலியின் பிஸ்வானியா தர்பார், மிரித்யுன்ஜெய் சிங் மற்றும் அவரது அடியாள் பிரபுநாத் சிங் என்ற நிலப்பிரபுக்களின் தலைமையிலான நிலப்பிரபுத்துவ அதிகாரத்தின் முக்கியமான கோட்டையாக இருந்தது. கிஷ்ணுபாலியின் சம்பு சிங், கவுரியின் கோவிந்த் சிங், பேல்தன்ரியின் வினோத் துபே ஆகியோர் நிலப்பிரபுத்துவ - குற்றகும்பல் கூட்டின் பயங்கரமான அடையாளங்களாக இருந்தார்கள். 1990ல் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், சீராடி தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளராக சகாபுதீன் முதன்முதலில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றபோது, தோழர் அமர்நாத் யாதவும், 1989ல் எம்எல் இயக்கத்தின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் ராமேஷ்வர் பிரசாத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய, 1990ல் 7 சட்டமன்ற உறுப்பினர்களை பீகார் சட்டமன்றத்துக்கு அனுப்பிய, இகக மாலெ வழிநடத்திய வெகு மக்கள் அரசியல் மேடையான இந்திய மக்கள் முன்னணியின் சக்திவாய்ந்த செல்வாக்குமிக்க தலைவராக எழுந்தார். இந்திய மக்கள் முன்னணி/இககமாலெயின் எழுச்சியை தடுக்க நிலப்பிரபுத்துவ சக்திகள் ஆனதெல்லாம் செய்தன; போஜ்பூரின் தன்வர் - பிட்டா கிராமத்தில், வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்படுவதை எதிர்த்த, தங்களது அரசியல்சாசன உரிமையான வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்திய தலித் மக்கள்  கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்; சிவானிலும் தோழர் அமர்நாத் யாதவின் தேர்தல் பிரச்சாரத்தினூடே இந்திய மக்கள் முன்னணியின் செயல்வீரர் தோழர் நந்த் கிஷோர் யாதவ் படுகொலை செய்யப்பட்டார்.
ஆயினும், இகக மாலெயின் முன்னோக்கிய பயணத்தை நிலப்பிரபுத்துவ வன்முறை தாக்குதல்களால் தடுக்க முடியவில்லை. 1995ல் பீகாரில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வடிவமைத்த புகழ்மிக்க தலைவர்களின் ஒருவரும் இகக மாலெ அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான தோழர் ராம்நரேஷ் ராமும், இந்திய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ராமேஷ்வர் பிரசாதும் சாஹர் மற்றும் சந்தேஷ் தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். சிவானின் தரோலியிலும் மைர்வாவிலும் இகக மாலெ வெற்றி பெற்றது. இந்த நேரத்தில் சகாபுதீன் ஜனதா தளத்தில் இணைந்திருந்தார்; சீராடி தொகுதியை தக்க வைத்துக்கொண்டார். அதன் அக்கம்பக்க தொகுதிகளான தரோலியிலும் மைர்வாவிலும் இகக மாலெ தலைவர்கள் அமர்நாத் யாதவும் சத்யதேவ் ராமும் வெற்றி பெற்றார்கள். 1996ல் சகாபுதீன் சிவானில் இருந்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்ற இகக மாலெ மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்தக் கட்டத்தில்தான் குற்ற நடவடிக்கைகள் - அரசியல் கூட்டின் தலைவனாக, தாதாவாக சகாபுதீன் வளர்ச்சி பெற்றார்; அரசியல் எதிரிகளை படுகொலை செய்வது அவரது முக்கியமான செயல்தந்திரமாக இருந்தது. பிரபலமான மாணவர் தலைவரும் ஜவஹர்லால் பல்கலை கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான தோழர் சந்திரசேகர் படுகொலை அந்தப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் படுகொலையாக பரவலாக அறியப்பட்டது; ஆனால், இகக மாலெயின், பல மாவட்ட மட்ட தலைவர்கள் சிவானிலும் கோபால்கஞ்சிலும் படுகொலை செய்யப்பட் டார்கள். தோழர்கள் வியாஸ்பிரதாப் சிங், உமேஷ் பாஸ்வான், சுரேந்திர யாதவ், ஷ்யாம் நாராயண் யாதவ், சுரேஷ் ராம், ராஜ்குமார் போன்ற தியாகிகள் சிவானிலும் கோபால் கஞ்சிலும் சந்திரசேகருடன் கூடவே வாஞ்சையுடன் நினைவுகூரப்படுகிறார்கள். உண்மையில், 1997, மார்ச் 31 அன்று பட்டப்பகலில் சிவானின் ஜேபி சதுக்கத்தில் ஒரு தெருமுனைக் கூட்டத்தில், ஊழல், விலை உயர்வு, தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான ரன்வீர் சேனா வின் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராக ஏப்ரல் 2 அன்று நடக்கவிருந்த பீகார் முழு அடைப்புக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்த சந்திரசேகர் படுகொலை செய்யப்பட்டார். சிவானின் வளர்ந்து வந்த இளம்தலைவரும் மாவட்டக் கட்சி கமிட்டியின் உறுப்பினருமான தோழர் ஷ்யாம்நாராயண் யாதவ், அங்கு இருந்தார். கூட்டத்துக்காக ஒலிபெருக்கி வைத்திருந்த ரிக்ஷா ஓட்டுநர் புடேலி மியானும் தோழர் ஷ்யாம்நாராயண் யாதவும் அன்று தோழர் சந்திரசேகருடன் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஜவஹர்லால் பல்கலை கழகத்தில் பல ஆண்டு காலம் மாணவர்களுக்கு தலைமை தாங்கி அவர்கள் பிரதிநிதியாக இருந்த தோழர் சந்திரசேகர் அப்போதுதான் தனது சொந்த ஊரான சிவானில் கட்சிப் பணியாற்ற திரும்பியிருந்தார். ராணுவத்தில் பணிபுரிந்த தனது தந்தையை, குழந்தையாக இருந்தபோதே இழந்துவிட்ட தோழர் சந்திரசேகர், அவரது தாயார் கவுசல்யா தேவியுடன் நெருக்கமான பிணைப்புகள் கொண்டிருந்தார். தனது தாயாருக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில், கார்க்கியின் இறவா படைப்பான தாய் நாவலில் வரும் தாயாக தனது தாய் பற்றி விவரித்திருந்தார். சந்து படுகொலை செய்யப்பட்ட பிறகு, கவுசல்யா உண்மையில் ஒரு போராடும் தாயாக  பாத்திரமாற்றினார். தனது அன்பான மகனுக்காக நீதி கோருவது மட்டுமின்றி, அரசு கொடுத்த இழப்பீட்டையும் அதற்கே உரிய கண்டனத்துடன் வாங்க மறுத்தார். மிகவும் முக்கியமாக சந்துவின் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும், அவர் வாழும் வரை அவர்கள் அனைவரும் அவரது குழந்தைகள் என்பதுபோல் உத்வேகமளிக்கும் விதம், ரோஹித்துக்கு நீதி கோரும் போராட்டத்தில் இன்று ராதிகா வேமுலா ஆற்றுகிற பாத்திரம் போன்ற ஒன்றை, அன்று அவர் ஆற்றினார்.
சந்திரசேகர் படுகொலை நாடு முழுவதும், மாணவர் இயக்கத்தை, நீதி விரும்பும் மக்களின் இயக்கத்தைப் பற்ற வைத்தது. குறிப்பாக சிவானில் பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் அரசியல் குற்றமயமாக்கப்படுவதற்கு எதிராக மாணவர் இயக்கமும் மக்கள் இயக்கமும் தீவிரமடைந்தன. இந்த கால கட்டத்தில் பீகாரில், இசுலாமியர் - யாதவர் என்ற ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் புகழ்மிக்கதாகக் கருதப் பட்ட சமன்பாட்டில் பிளவுகள் ஏற்பட்டன. அதிகரித்து வந்த சகாபுதீனின் பயங்கரமும் இறுமாப்பும் சிவானில் யாதவ மக்களின் பெரும்பிரிவினரை அந்நியப்படுத்தியது. தோழர்கள் சந்திரசேகர், ஷ்யாம்நாராயண் யாதவ் படுகொலைக்கு நியாயம் கோரிய இயக்கம், அரசு ஆதரவுடன் சகாபுதீன் நடத்திய பயங்கரத்துக்கு எதிரான மக்கள் சீற்றம் ஆகியவற்றின் ஒன்றுசேர்ந்த விளைவை 1999 மக்களவை தேர்தல்களில் காண முடிந்தது; இககமாலெ வேட்பாளர் தோழர் அமர்நாத் யாதவுக்கு ஆதரவாக வீசிய அலை, கிட்டத்தட்ட சகாபுதீனை, அவரது பயங்கரம், அரசு ஆதரவு ஆகியவற்றுக்கும் அப்பால், வீழ்த்தியது. இந்த மிகப்பெரிய தேர்தல்ரீதியான எதிர்ப்புக்குப் பிறகும் அந்தத் தேர்தலில் சகாபுதீன் பெற்ற வெற்றியின் ரகசியம், சிவானின் நிலப்பிரபுத்துவ சக்திகள் அளித்த ஆதரவில் இருக்கிறது. சிவானில் உள்ள அரசியல் நோக்கர்கள் அனைவருக் கும் இந்த வெளிப்படையான ரகசியம் தெரியும்; இதை இப்போது சகாபுதீனே உறுதிப்படுத்தியுள்ளார்: சிவானில் உள்ள நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு அரசியல் புகலிடம் தந்ததாகவும், அவரது கைதுக்குப் பிறகு மேல்சாதி வாக்காளர்கள் பாஜக பக்கம் போய்விட்டதாகவும் அவர் வருத்தப்பட்டுள்ளார்.
குற்றகும்பல் - அரசியல்வாதிகள் கூட்டு அல்லது அரசியல் குற்றமயமாக்கப்படுவதில் சகாபுதீனை கிட்டத்தட்ட தனித்ததோர் உதாரணம் என இசுலாமியர் வெறுப்பு விவாதப் போக்கு சொல்லப் பார்க்கலாம். ஆனால், பீகாரின் தற்போதைய அரசியல் சூழலை மேலோட்டமாக பார்த்தால்கூட, சகாபுதீனுக்கு அவரைப் போன்றவர்களுடன் போட்டி அல்லது கூட்டு இருப்பது தெரியும். சப்ரா - சிவான் - கோபால்கஞ்ச் பகுதி என்று மட்டும் பார்த்தாலும் சகாபுதீனுக்கும் சதீஷ் பாண்டேவுக்கும் (உள்ளூரில் சட்டிஸ் பாண்டே என்று அழைக்கப்படுகிறார்) அல்லது சகாபுதீனுக்கும் பிரபுநாத் சிங்குக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பது அங்குள்ள மக்களுக்குத் தெரியும். அரசியலில் குற்றச்செயல்கள் நடப்பதுடன் மதவெறி நஞ்சு தோய்ந்திருக்கும் உத்தரபிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் போன்றவர்களைப் பார்க்க முடிகிறது. அதிகாரம் படைத்தவர்கள் தண்டனை பற்றி அச்சமின்றி இருப்பதில் சகாபுதீன் தனித்தவர் அல்ல. கோத்னானி போன்றவர்களும் குஜராத்தில் உள்ள அவரது தலைவர்களும், அல்லது, கோப்ராபோஸ்ட் காணொளி காட்சிகள் அம்பலப்படுத்தியது போல், ரன்வீர் சேனா தளபதிகளும் சகாபுதீன் போலவே தண்டனை பற்றிய அச்சமின்றி இருக்கின்றனர். நமது நீதி மற்றும் சிறை கட்டமைப்புகளின் ஏற்றத்தாழ்வான இயல்பால், சகாபுதீனுக்கு பிணை தரப்படுகிறது; சஞ்சய் தத்துக்கு மீண்டும் மீண்டும் பரோல் தரப்படுகிறது; ஆனால், பீகாரில் ஷா சந்த் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் தடாவில் ஆயுள் தண்டனை தரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சிறையிலேயே சாகவும் நேர்கிறது. இதே கட்டமைப்பு, கிராமப்புற வறியவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்படுவது, மதவெறி தாக்குதல்கள் ஆகியவற்றில் குற்றம் புரிந்தவர்களை விடுதலை செய்கிறது; அப்சல் குரு, யாகூப் மேமன் போன்றவர்களை, சந்தர்ப்பங்களின் சாட்சி என்ற பெயரில், நாட்டின் கூட்டு மனசாட்சிக்கு பதில் சொல்வது என்ற பெயரில் கூட, தூக்கிலிட்டு விடுகிறது.
இன்று சகாபுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளபோது, உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் அது இருக்கிறபோது, தரோலியின் இகக மாலெ சட்டமன்ற உறுப்பினரும் அவிகிதொசவின் பீகார் மாநிலத் தலைவருமான தோழர் சத்யதியோ ராம், புரட்சிகர இளைஞர் கழகத் தின் தேசியத் தலைவர் தோழர் அமர்ஜீத் குஷ்வாஹா ஆகியோர் இன்னும் சிறையில் உள்ளனர். 2010 மற்றும் 2015 பீகார் சட்ட மன்றத் தேர்தல்களில் சீராடி தொகுதியில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட தோழர் அமர்ஜீத் குஷ்வாஹா மீது தரோலியின் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர்தான் பொய் வழக்கு தொடுத்தார். ஜனநாயகத்தில் ஆளும்கட்சியின ருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் வேறு வேறு நீதி வரையறைகள் இருக்க முடியாது. கட்டமைப்பு ஏற்றத்தாழ்வானதாக இருந்தாலும் நீதிக்கான போராட்டம் விடாப்பிடியானதாக இருக்க வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்க முடியாது.
இககமாலெயை ஒடுக்க நிலப்பிரபுத்துவ சக்திகளின் ஆதரவு இருந்ததை சகாபுதீன் ஒப்புக்கொள்கிறார்
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் வந்திதா மிஸ்ரா 2016, செப்டம்பர் 18 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் ‘முகமது சகாபுதீனுடன் ஒரு சந்திப்பு: தனது இடத்தை தேடிக் கொண்டிருக்கும் பீகாருக்கு அவரது விடுதலை என்ன சொல்கிறது?’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், ‘வறிய மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருப்பது பற்றியும் அவர் வறிய மக்களுக்கு உதவிகள் செய்வது பற்றியும் பல செய்திகள் இருந்தாலும், இககமாலெவுக்கு எதிரான தங்கள் சண்டையில் உதவ அவரை வளர்த்துவிட்ட அந்தப் பகுதியின் நிலவுடைமை சாதியினர் ஆதரவில்தான் சிவானின் சாஹிப் வாழ்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று’ என்று சொல்லியுள்ளார்.
அவருடன் பேசியபோது சகாபுதீனே, ‘அந்த காலத்தில், நிலப்பிரபுத்துவ சக்திகள் என்று இககமாலெ அடையாளப்படுத்தியவர்கள் என்னுடனும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனும் இருந்தார்கள். அப்போது இரண்டே இரண்டு பிரிவுகள்தான் இருந்தன. சிவானில் உள்ள மேல்சாதியினருக்கு நான் அரசியல் புகலிடம் கொடுத்தேன்; அவர்கள் இப்போது பாஜகவுக்குப் போய்விட்டார்கள்’ என்று சொன்னார்.
(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 01 – 15 தொகுதி 15 இதழ் 5)

Search