COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, October 1, 2016

பருப்பு கொள்முதல், இருப்பு, விநியோகம் தனியாருக்கா?
தலைமை பொருளாதார ஆலோசகரின் பரிந்துரை பருப்பு வேகாது
மக்கள், குறிப்பாக சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள், புரதச் சத்துக்கு பருப்பு வகைகளை பெரிதும் சார்ந்திருக்கிறார்கள். சென்ற ஆண்டு வல்லூறுபோல் உயரச் சென்ற பருப்பு விலை பழைய நிலைக்குத் திரும்பவில்லை.
பருப்பு விலை உயர்வுக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நிலவிய மழையின்மையும் அதனால் ஏற்பட்ட குறைவிளைச்சலும் முதன்மை காரணம் என்று மத்திய அரசு சொன்னது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பின்வரும் நடவடிக்கைகள் எடுத்ததாகச் சொல்லப்பட்டது.
  • பருப்பு இறக்குமதி செய்யப்பட்டது.
  • இருப்புக்கு (ஸ்டாக்) வரம்பு விதிக்கப்பட்டது.
  • கிலோ ரூ.100 என்ற உயரத்தைத் தொட்டுவிட்ட கொண்டைக் கடலைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள ஊக வணிகம் தடை செய்யப்பட்டது.
  • அரசிடம் உள்ள சேமிப்பு இருப்பின் (பஃப்பர் ஸ்டாக்) அளவை 1.5 லட்சம் டன்னில் இருந்து 8 லட்சம் டன்னாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • கருப்புச் சந்தை, பதுக்கல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • கார்ட்டல்கள் உடைக்கப்பட்டன.
  • அரசு நியாய விலைக் கடைகளில் ரூ.120க்கு பருப்பு விற்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு சென்ற ஆண்டு ரூ.200அய் தாண்டிய பருப்பு வகைகளின் விலை பிறகு ஓரளவு இறங்கி அங்கேயே நிற்கின்றன. இன்றும் உளுத்தம்பருப்பு ரூ.190, துவரம்பருப்பு ரூ.165 என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பருப்புகள் கூடுதல் விலையில்தான் விற்கப்படுகின்றன. ஆனால் மத்திய அரசு பருப்பு விலை இறங்கிவிட்டதாக, ரூ.100க்கு துவரம்பருப்பு கிடைப்பதாகச் சொல்கிறது. எந்தச் சந்தை என்று சொன்னால் நாமும் வாங்கிக் கொள்ளலாம்.
உற்பத்தி, இறக்குமதி, இருப்பு நிலைமைகள்
நாட்டு மக்களின் பருப்பு நுகர்வு தேவை 25 மில்லியன் டன் எனும்போது 2014 ஜு÷லை முதல் 2015 ஜுன் வரையிலான பருப்பு உற்பத்தி 17 மில்லியன் டன்னாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டு 19 மில்லியன் டன்னாக இருந் தது. 2015 - 2016ல் உற்பத்தி 16.5 மில்லியன் டன் என இன்னும் குறைந்துள்ளது.
2014 - 2015ல் 4.58 மில்லியன் டன் பருப்பு வகைகளும் 2015 - 2016ல் 5.79 மில்லியன் டன் பருப்பு வகைகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. செலவு முறையே ரூ.14,396 கோடி, ரூ.25,691 கோடி என ஆகியுள்ளது. 2016 - 2017 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் 7 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட் டுள்ளது. ஜுன் 13 தேதிய நிலவரப்படி 1,15,000 டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 2016 ஜுலை வரை 69,000 டன் இருப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி, இருப்பு எல்லாம் சேர்ந்து 2015 - 2016 ஆண்டுக்கு 22.86 மில்லியன் டன் பருப்பு வகைகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையிலும் பற்றாக்குறை நிலவும்.
2016 - 2017ல் பருப்பு உற்பத்தி 20 மில்லியன் டன்னாக இருக்கும் என மத்திய விவசாய அமைச்சகம் மதிப்பிடுகிறது. 2016 - 2017ல் சேமிப்பு இருப்பு 20 லட்சம் டன் என உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை 2017 - 2018 நிலைமைகளை சமாளிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள். அரசு சொல்லும் விவரங்களில் இருந்தே, இந்த ஆண்டும் பருப்பு விலை கட்டுக்குள் வராது என்பது தெரிகிறது.
இந்த நிலையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்க முதன்மை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் தலைமையில் 2016 ஜுலையில், குறைந்தபட்ச ஆதார விலை மூலமும் தொடர்புள்ள பிற கொள்கைகள் மூலமும் பருப்பு உற்பத்திக்கு ஊக்கமளிப்பது என்பது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு செப்டம்பர் 16 அன்று பரிந்துரையை வெளியிட்டுள்ளது. இந்திய போட்டி ஆணையம் அமைத்துள்ள குழு இது. விவசாயத் துறையில் நிலவுகிற நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை புரிந்துகொள்வதில் இந்தக் குழுவின் பரிந்துரைகள் உதவும் என்று ஆணையம் சொல்கிறது. பருப்பு விலை உயர்வுக்கு போட்டிக்கு எதிரான நடைமுறைகளே காரணம் என்றும் சொல்லப்படுவதால் ஆணையம் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகச் சொல்கிறது. குழுவின் பரிந்துரைகள் பருப்பு விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவையாக தெரியவில்லை.
குறைந்தபட்ச ஆதார விலை
குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி கூடுதல் உற்பத்திக்கு, விவசாயத்தை ஊக்குவித்து அதன் மூலம் விலையைக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரை சொல்கிறது. இந்தப் பரிந்துரை வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்தப் பரிந்துரையை, முதல் பரிந்துரையாக, அடிப்படையான பரிந்துரை என்ற பொருள்பட சொல்லிவிடுவதாலேயே, குழு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறது என்று அவசரப்பட்டு சொல்லிவிட முடியாது.
2016 - 2017க்கு மத்திய அரசு பருப்பு வகைகளுக்கு ஜுன் 1 அன்று அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையில் ஆதார விலையும் போனசும் சேர்த்து வெவ்வேறு பருப்பு வகைகளுக்கு ரூ.150 முதல் ரூ.425 வரை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5,000 முதல் ரூ.5,225 வரை அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆதார விலை மற்றும் போனஸ் உயர்வுகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன. இந்த குறைந்தபட்ச ஆதார விலை சென்ற ஆண்டு இருந்ததை விட ரூ.150 முதல் ரூ.200 வரை கூடுதல். ஜுலையில் அமைக்கப்பட்டு செப்டம்பரில் அறிக்கை முன் வைத்துள்ள குழு, குறைந்தபட்ச ஆதார விலையை 2017ல் ரூ.6,000, 2018ல் ரூ.7,000 என (குவின்டாலுக்கு) உயர்த்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது. இது ரூ.1,000த்துக்கும் மேல் கூடுதல்.
குழு மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் தலைமையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதத்தில் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படவுள்ளது பற்றி அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்? ரூ.1,000 வரை உயர்வு பற்றி அப்போதே அவர் ஏன் பரிந்துரைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. பரிந்துரைகளின் மற்ற அம்சங்களைப் பார்க்கும் போது, அவற்றின் பாதகமான விளைவுகள் பற்றி மறைப்பதற்காக குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட அழுத்தம் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்றுமதி தடை, இருப்பு வரம்பு நீக்கம்
விலைக்கட்டுப்பாடு பற்றிய அதன் பரிந்துரைகளில் முதல் பரிந்துரையே ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் இருப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரம்புகளையும் நீக்க வேண்டும் என்கிறது. இந்தப் பரிந்துரை விவசாயிகளின் நலன் காக்கவே என்றும் இந்த தடைகளும் வரம்புகளும் நீக்கப்பட்டால்தான் விவசாயிகளிடம் கூடுதலாக கொள்முதல் செய்ய ஊக்குவிப்பு இருக்கும் என்று அறிக்கை சொல்கிறது. விலை உயர்கிறது என்பதற்காக இந்த தடைகளும் வரம்புகளும் விதிக்கப்பட்டால், இதனால் உற்பத்தி குறைந்தால், அப்போதும் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நுகர்வோர் நலன் பாதுகாக்கவும் இது அவசியம் என்று அறிக்கை சொல்கிறது. ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டால், உள்நாட்டு நுகர்வுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அது விலை உயர்வுக்குத்தான் இட்டுச் செல்லும். இருப்பின் அளவுக்கு வரம்பு விதிக்கப்படாவிட்டால், அது பதுக்கலுக்கும், பின் விலை உயர்வுக்கும்தான் இட்டுச் செல்லும். உள்நாட்டு நுகர்வுக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டுமே தவிர அதற்கேற்ற கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமே தவிர இந்த தலைகீழ் ஆலோசனை சாமான்ய மக்கள் உணவில் இருந்து பருப்பை முழுவதுமாக விலக்கிவிடவே இட்டுச்செல்லும்.
சேமிப்பு இருப்பு
அரசின் வசம் சேமிப்பு இருப்பு 20 லட்சம் டன் இருக்க வேண்டுமென பரிந்துரை சொல்கிறது. விளைச்சல் 17 மில்லியன் டன் என்ற அளவிலும், இறக்குமதி இதுவரையில் 6 மில்லியன் டன் என்ற அளவிலும் இருக்கும்போது, நுகர்வு போக, 20 லட்சம் டன் அரசின் சேமிப்பில் வைப்பது, அதுவும் விலை குறைவாக இருக்கும் நேரங்களில் வாங்கி சேமிப்பது என்பது சாத்தியமே இல்லை. மழை பிரச்சனை இல்லாத காலத்தில் கூட 19 மில்லியன் டன்தான் பருப்பு உற்பத்தி நடந்துள்ளது. கூடுதல் கொள்முதல், கூடுதல் குறைந்தபட்ச ஆதார விலை என என்ன தரப்பட்டாலும் பருப்பு விளைச்சல் பரப்பை, விளைச்சலை அதிகரிக்காமல், இந்த அளவிலான சேமிப்பு இருப்பு சாத்தியமில்லாதபோது, விலைக் கட்டுப்பாடும் சாத்தியமில்லை. விளைச்சல் பரப்பை, உற்பத்தியை அதிகரிக்க வெறும் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு மட்டும் போதாது. அதற்கு இன்னும் வேறு பல அடிப்படை கொள்கை நடவடிக்கைகள் அவசியம். அதற்கான பார்வையும் நோக்கமும் இல்லாமல் சேமிப்பு இருப்பு, கூடுதல் குறைந்தபட்ச ஆதார விலை, கூடுதல் உற்பத்தி ஆகியவை வாய்ப் பந்தல்களாகவே தெரிகின்றன.
அரசு - தனியார் கூட்டு
கொள்முதல், இருப்பு வைத்தல், விநியோகம் ஆகியவற்றில் போட்டியை ஊக்குவிக்கவும் இருக்கிற நிறுவனங்களை இட்டு நிரப்பும்படி இருக்கவும் புதிய அரசு - தனியார் கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு - தனியார் கூட்டு என்பது உலகமய பொருளாதாரத் தில் கார்ப்பரேட் கொள்ளையின் மறுபெயர் என்பதை நாம் பல விசயங்களில் பார்க்கிறோம். இப்போது, அத்தியாவசிய உணவு தேவையான பருப்பு கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் பரிந்துரையை அர்விந்த் சுப்ரமணியம் முன்வைத்திருக்கிறார். பருப்பு கொள்முதலில், இருப்பு வைப்பதில், விநியோகம் செய்வதில் போட்டி இருக்க வேண்டும் என்று சொல்வதே குரூரமான கருத்தாக இருக்கிறது. குறைந்த பட்ச ஆதார விலையை விட குறைவான விலையில் தனியார் கொள்முதல் செய்வதாக அறிக்கையே சொல்கிறது. நுகர்வோருக்குச் செல்லும் பருப்பின் விலை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால், அரசே கொள்முதல் செய்து, இருப்பு வைத்து, விநியோகம் செய்வதை அதிகரிப்பதுதான் ஆகச்சிறந்த வழியாக இருக்கும். ஆனால், அர்விந்த் சுப்ரமணியம் தலைகீழாக பரிந்துரைக்கிறார். இந்தப் பரிந்துரை தற்போது அரசு செய்யும் கொள்முதலுக்கு முடிவு கட்டி, தனியார் நிறுவனங்களை ஊக்குவித்து, மகிழ்வூட்டி, அனைத்தையும் சந்தையின் இரக்கமற்ற ஏற்றஇறக்கங்களுக்கு விட்டுவிடுகிற பரிந்துரை.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நாட்டின் மொத்த விவசாயத்துக்குமே ரூ.36,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளபோது, அரசு - தனியார் கூட்டு என்ற பரிந்துரையுடன் பருப்பு கொள்முதலுக்கு கூடுதல் ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை சேரும்போது, அர்விந்த் சுப்ரமணியத்துக்கு யார் மீது அக்கறை என்பது தெரிந்துவிடுகிறது.
மரபணு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பது
பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்துவது என்ற தலைப்பில் மரபணு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அசாம் விவசாய பல்கலைக் கழகம் பூச்சி எதிர்ப்பு பருப்பு வகைகளை உருவாக்கியிருப்பதாகவும் அவை தயாரானதும் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அறிக்கை சொல்கிறது. மரபணு பயிர்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பிரிவினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். மரபணு பருத்தி விவசாயம் விதர்பாவின் பருத்தி விவசாயிகளை தற்கொலைக்கு விரட்டியது.
கட்டுப்பாடுகள் அகற்றுதல்
விவசாய உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழு சட்டத்தில் (அக்ரிகல்சுரல் புரொட்யூஸ் மார்கெட்டிங் கமிட்டி ஆக்ட்) இருந்து பருப்பு வகைகள் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை சொல்கிறது. இந்தப் பரிந்துரையும் விலைக் கட்டுப்பாட்டுக்கான கொள்கை வடிவமைப்பு என்ற தலைப்பில் சொல்லப்படுகிறது. பதுக்கலை, கருப்புச் சந்தையை கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சட்டம் 1955, உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதாக இல்லை என்றும் இருப்புக்கு வரம்புகள் விதித்து சிறுவியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் பெருவியாபாரிகளுக்கு பயனளிப்பதாக இல்லை என்றும் அதனால் அது பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அறிக்கை சொல்கிறது. சுருங்கச் சொன்னால், பருப்பு வகைகளை விவசாயிகளிடம் இருந்து வாங்கி, இருப்பு வைத்து, விற்க, எந்த அரசுக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்பதுதான் இந்தப் பரிந்துரை. எபிஎம்சி சட்டப்படி இப்போது உரிமம் வாங்கித்தான் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய முடியும். இந்த உரிமம் பெற கட்டணம் செலுத்த வேண்டும். உத்தர வாதக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தச் செலவுகளை, கட்டுப்பாடுகளை முழுவதுமாக விலக்க பரிந்துரை செய்து, எல்லா வளமும் தனியாருக்கே என்கிறது தலைமை பொருளாதார ஆலோசகர் தந்துள்ள பரிந்துரை.
இந்தப் பரிந்துரைகளில் குறைந்தபட்ச ஆதார விலை, சேமிப்பு இருப்பு போன்ற பரந்த மக்கள் ஆதரவு அம்சங்கள் சாத்தியப்பாட்டுக்கு அப்பாற்பட்டவையாகவும் அவையல்லாத அம்சங்கள் உடனடி அமலாக்கம் செய்யக் கூடியவையாகவும் உள்ளன. இவை பரிந்துரைகள்தான். மோடி அரசு இந்தப் பரிந்துரைகள் மீது முடிவுகள் எடுக்க வேண்டும். மோடி அரசின் மூர்க்கத்தனமான கார்ப்பரேட் ஆதரவு பாதைக்கேற்பவே இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சாமான்ய மக்கள் பருப்பு நுகர்கிறார்களா என்பதை விட முன்னுரிமைப் பிரச்சனைகள் பல, இந்த நவதாராளவாதக் கொள்கை ஆதரவு அரசுக்கு உள்ளன.  விவசாயிகள் வாழ்க என்று சொல்லிக்கொண்டே, விவசாயிகளையும் பிற பிரிவு மக்களையும் ஒரே நேரத்தில் வஞ்சிக்க இந்தப் பரிந்துரைகள் மோடி அரசுக்கு பெரிதும் உதவும்.
பருப்பு விலையைக் கட்டுப்படுத்துவது, நியாயமற்ற வியாபார நடவடிக்கைகளைக் களைவது என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த மக்கள் விரோத, விவசாயிகள் விரோத பரிந்துரைகள் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும்.
உத்தரபிரேதேச தேர்தல் நெருங்கும் நேரம் நாட்டின் மிகவும் பெரிய மாநிலத்தில் ஆன வரை இடங்களை, ஆட்சியைப் பிடிக்க வெறித்தனமான முயற்சிகள் மேற்கொள்ளும் பின்னணியில், பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம், காஷ்மீர் மக்கள் பிரச்சனையைத் தீர்ப்பதில் முழுவதுமாக தோற்றுப்போய், பாகிஸ்தான் மீதான துவேசத்தை கிளப்பும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. அண்டை நாடு ஒன்றுடன் சுமுக உறவு வந்து விடக் கூடாது, தொடர்ந்து பதட்டம் இருக்க வேண்டும் என்பதாகவே அதன் அணுகுமுறை இருக்கிறது. சொந்த நாட்டின் ராணுவ வீரர்களை பலிகளாக தருவது மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கு மேலும் ஆபத்துகளை வரவேற்பதையே மோடியின் உச்சஸ்தாயி தேசவெறிவாத கூக்குரல் செய்கிறது. இந்தக் கூக்குரல் உத்தரபிரதேச தேர்தல்களை எதிர்கொள்ள மட்டுமின்றி, பொதுத்துறை முதலீடு அகற்றுதல், ரயில்வே தனியார்மயம், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை தனியாருக்குத் தருவது போன்ற அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோத கொள்கைகள் அமலாக்கத்தை கேள்விகள் இன்றி, எதிர்ப்புகள் இன்றி உறுதி செய்யவும் கை கொள்ளப்படுகிறது. தனது தோல்விகளை, தவறுகளை மறைக்க, மக்கள் மீது அவர்கள் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் நவதாராளவாதக் கொள்கைகளைத் திணிக்க மோடி அரசாங்கம் பயன்படுத்தும் இந்த தேசவெறிவாதக் கூக்குரலையும் அனுமதிக்கக் கூடாது. மக்கள் மீது பல முனை போர் நடத்தும் மோடி அரசாங்கத்துக்கு அந்த அனைத்து முனைகளிலும் சரியான பதிலடி தந்தாக வேண்டும்.
(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 01 – 15 தொகுதி 15 இதழ் 5)

Search