நிரந்தரமற்ற
தொழிலாளர்
நலன் காக்க
நிலையாணைகள்
திருத்தச்
சட்டத்துக்கு
விதிகள்
வேண்டும்!
பிரிக்கால்
நிறுவனத்தை
அரசே ஏற்று நடத்த வேண்டும்!
ஆகஸ்ட்
14, முற்றுகைப்
போராட்டம்
நிரந்தரமற்ற
தொழிலாளர்
நலன் காக்க நிலையாணைகள் திருத்தச் சட்டத்துக்கு விதிகள் வேண்டும், பிரிக்கால் நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற முழக்கங்களுடன் ஏஅய்சிசிடியுவும் புரட்சிகர இளைஞர் கழகமும் ஆகஸ்ட் 14 அன்று சென்னையில் நடத்திய முற்றுகைப் போராட்டத்தில்
கலந்துகொள்ள வந்திருந்த அந்தத் தோழரை எந்தப் பள்ளியில் படிக்கிறாய் என்றுதான் கேட்க வேண்டியிருந்தது. பள்ளிச் சீருடையில் வந்திருந்தார். +2 படிப்பதாகச் சொன்னார். பள்ளிச்சாலைக்குச் செல்ல வேண்டியவர் போராட்டப் பாட சாலைக்கு வந்திருந்தார். என்ன பார்த்தீர்கள், கைது செய்துவிட்டார்களே, என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, முதலில் பேசத் தயங்கிய அவர், இவ்வளவு பேர் இருக்கிறார்கள், எனக்கு மட்டும் என்ன ஆகிவிடும், அண்ணன்கள் சொன்னார்கள், அவர்களுடன் வந்தேன், எனக்கு அச்சமில்லை என்றார். காஞ்சிபுரம் மாவட்டம் குமிழியின் புரட்சிகர இளைஞர் கழகத்தில் இருக்கிறார். பகுதியில் புஇக தோழர்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் அவரை ஈர்த்துள்ளன. குடும்பம், அக்கம்பக்கம், நண்பர்கள், உறவினர்கள் என நிரந்தரமற்ற தொழிலாளர்கள் துன்பங்களை அன்றாடம் பார்த்திருக்கவும் கூடும். அவருடன் வந்திருந்த இன்னொரு இளைஞர், இருபது வயது தாண்டாதவர், ஜாலியாக இருந்தது என்றார். உழைக்கும் மக்களுக்கு போராட்டம் திருவிழாதானே.
அய்க்கிய
அமெரிக்க
நிறுவனத்தின்
கடுமையான
சுரண்டலுக்கு
எதிராக
தொடர்ச்சியாக
போராட்டங்கள்
நடத்திக்
கொண்டிருக்கிற,
அதனால்
தொடர் தாக்குதல்களை சந்திக்கிற சான்மினா தொழிலாளர்களில் பலர் முந்தைய நாள் இரவுப் பணி முடித்துவிட்டு முற்றுகைப் போராட்டத்துக்கு வந்திருந்தார்கள். நான் ஒப்பந்தத் தொழிலாளியாக இருந்தேன், வேலையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டேன், இப்போது எனது உரிமைகளுக்காக சட்டரீதியாகப் போராடிக் கொண்டிருக்கிறேன், என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நீதி கிடைத்தால்தான் எனக்கும் கிடைக்கும், அதனால்தான் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளேன் என்றார். ஜனவரி 31 பேரணியில் கலந்துகொண்டதுபோல் எங்களால் முழுவதுமாக கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் பெரும்பாலான எங்கள் தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர், இப்போது அடுத்த கட்ட வேலைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார் ஒரு நிர்வாகி.
பிரிக்காலில்
நடப்பதுதான்
சான்மினாவிலும் நடக்கிறது
என்று சொன்ன சான்மினா தொழிலாளர் சங்கத்தின் மற்றொரு நிர்வாகி, பிரிக்கால் தொழிலாளர் பிரச்சனையை முன்னிறுத்தியது போல், இந்த அளவுக்கு பெரிய கூட்டம் கூடியிருக்கும் நேரம், சான்மினா தொழிலாளர்கள் என்ற வார்த்தைகளையும் முழக்கத்தில் சேர்த்திருக்கலாமே என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மக்கள்
கோரிக்கைகள்
மீதான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது புதிய சகஜ நிலை என்றாகியுள்ள இன்றைய சூழலில் காவல்துறையினர் ஆகஸ்ட் 14 போராட்டத்துக்கும் வழக்கம் போல் அனுமதி மறுப்பார்கள் என்பதால், அனுமதி கேட்கவில்லை. காலையில் இருந்தே பல மாவட்டங்களில் இருந்தும் தோழர்கள் வரத் துவங்கிவிட்டனர். உயர்நீதிமன்ற வளாகத்தின் அருகில் உழைக்கும் மக்களுக்கு நீதி கேட்க கூடத் துவங்கிவிட்டனர். பிரிக்கால் தோழர்கள் காலை 8 மணிக்கே உயர்நீதிமன்றத்தின் அருகில் வந்துவிட்டதால், அப்போதிருந்தே காவல் துறையினருக்கு பதட்டம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. அன்றைய போராட்டத்தை அந்தப் பக்கமாக வந்து சென்று கொண்டிருந்த பொது மக்கள் மத்தியில் காவல்துறையினரே பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னார் ஒரு பிரிக்கால் தொழிலாளி. போக்குவரத்து காவலர் ஒருவர், என்ன போராட்டம் என்று அந்த வழியாக வந்த ஒருவர் கேட்டதற்கு பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் என்று சொன்னாராம். உயர்நீதிமன்ற வளாகத்தின் அருகில் பிரிக்கால் தொழிலாளர்கள் தங்கள் சொந்த கோரிக்கைகளுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்கள் பிரச்சனைகளில் அடிக்கடி போராட்டங்கள் நடத்துவது அவர் மீது தாக்கம் செலுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டையில் இருந்து
வந்த தோழர், தொழிலாளர் பிரச்சனைகளை இந்த அரசு செவி கொடுத்து கேட்க மறுக்கிறது. இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிராமப்புற, நகர்ப்புற தொழிலாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து உயர்நீதிமன்றத்தின் அருகில் வந்து தொழிலாளர்களுக்காக நீதி கேட்கிறோம். இந்தக் குரலுக்கும் அரசு செவிமடுக்கவில்லை என்றால் மேலும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் என்றார். கிராமப்புறத்தில் வந்திருக்கும் எங்கள் கோரிக்கை எதுவும் இல்லையே என்று அவர் கேட்கவில்லை. நான் எனது குடும்பத்துடன் வந்திருக்கிறேன், எனது மகன்கள் இருவரும் பள்ளியில் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்துள்ளார்கள் என்று சொன்ன அவர், மிகவும் தெளிவாக, நகர்ப்புறத் தொழிலாளர் பிரச்சனைக்காக நாட்டுப்புற தொழிலாளர் அணிதிரண்டு வந்துள்ளதாகச் சொல்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தின் இன்னொரு தோழர், பயணக் களைப்பு இருந்தது, ஆனால், இந்த புரட்சிகரமான போராட்டத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சி தருகிறது என்றார்.
கோரிக்கைகள்
மீது பேசுவதாகச் சொன்னார்கள் அல்லவா, அதனால்தான் அமைதியாக வாகனத்தில் ஏறிவிட்டோம், இல்லை என்றால், உயர்நீதிமன்றத்தின் அருகில் மறியல் நடத்தியிருப்போம் அல்லவா என்று கேட்டார், திருவள்ளூர் மாவட்டத்தின் அமைப்புசாரா தொழிலாளி. பெண். கோரிக்கைகள் மீது பேசுவதாகச் சொன்னார்களா என்று கேட்டபோது, ஆமாம் உங்களுக்குத் தெரியாதா என்று திருப்பிக் கேட்டார். போராட்டம்தான் சாதிக்கும் என்றார்.
2007ல் பிரிக்கால் தொழிலாளர்கள் சென்னை வந்து தங்கள் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்தினர். அந்தப் பேரணி போல் இந்தப் போராட்டம் மிகவும் அமைதியாக நடந்தது. ஆயிரம் பேருக்கும் மேல் கூடியிருந்தாலும் தோழர்கள் அமைதி காத்தனர் ஆனால், இதே அமைதியை அரசாங்கம் எப்போதும் எதிர்ப்பார்க்க முடியாது. இப்போது எழுப்பப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் மீண்டும் உயர்நீதிமன்றத்தின் அருகில் கூடுவோம். அப்போது போராட்டம் தீவிரமாக இருக்கும். சென்னை மாவட்ட பெண் தோழர் ஒருவரது கருத்து இது.
நாளை சுதந்திர தினம் வருகிறது. இன்று நம்மை சிறையில் அடைத்தால், பழனிச்சாமி அரசு சுதந்திர தினத்தில் எங்களை சிறையில் அடைத்துவிட்டது என்று நாம் சொல்வோம் என்பதால் கைது செய்திருந்தாலும் மாலை விடுதலை செய்துவிடுவார்கள் என்று கருதுகிறேன். இன்று நூற்றுக்கணக்கில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தோழர்கள் இங்கு வந்துள்ளார்கள். பெருந்திரள் போராட்டங்கள் தமிழ்நாட்டில் நமது கட்சிதான் நடத்துவதாகத் தெரிகிறது. சென்னையின் அமைப்புசாரா தொழிலாளி இப்படிச் சொன்னார்.
சென்னை
- காஞ்சிபுரம்,
திருவள்ளூர்,
கோவை, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், நாகை, தஞ்சை, கடலூர், நெல்லை, குமரி, திண்டுக்கல், கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், திருபெரும்புதூரின் ஹ÷ண்டாய், சான்மினா, கேபாரோ உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்தும் கோஆப்டெக்ஸ், நுகர்பொருள் வாணிபக் கழகம், உயிரியல் பூங்கா போன்ற அரசு நிறுவனங்களில் இருந்தும் தொழிலாளர்கள் கலந்துகொண்ட பேரணி எழுப்பிய குரல் பழனிச்சாமி அரசின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும்.