COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, August 15, 2018


கருணாநிதி மறைவுக்கு
இககமாலெ இரங்கல் தெரிவிக்கிறது

கருணாநிதி இறந்துவிட்டார். நெருக்கடி நிலைக்கு எதிராக போராடியவர். மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்.
சமூகநீதியின்பால்பட்ட இடஒதுக்கீட்டுக்கு உதவியவர். கலை, இலக்கியம், அரசியல் ஆகியவற்றை சாமான்ய மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பங்காற்றியவர். தனது எழுத்தாலும் பேச்சாலும் கலைத்திறனாலும் அயராத உழைப்பாலும் மக்கள் திரள் செல்வாக்கு பெற்றவர்.
தமிழ்நாட்டில் நிலஉடைமை, சாதியாதிக்க பார்ப்பனீய சமூகத்துக்கு எதிராக, சமூக நீதி இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் நடத்திய போராட்டங்களால்தான், சாமானியரான, எளிய, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த கருணாநிதி, அய்ந்து முறை முதலமைச்சராக இருக்க முடிந்தது.
கார்ப்பரேட் மதவெறி பாசிசமும் இந்துத்துவாவும் வெறியாட்டம் போடுகிற காலத்தில், தமிழ்நாட்டு உரிமைகள் மீது, தமிழ்நாட்டு மக்கள் மீது போர் தொடுக்கப்பட்டுள்ள நேரத்தில், அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
திமுகவினருக்கு, அவரது குடும்பத்தினருக்கு உறவினருக்கு இகக மாலெ இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இறந்துவிட்டவரை விமர்சிக்கக் கூடாது என்ற நாகரிகம் கருதி பலரும் 1 ஜெயலலிதா புகழ் பாடியது நமக்கு நினைவில் இருக்கிறது. இறந்து விட்டவர் மீது துவேஷம் காட்ட முடியும் என்றால், ஆர்எஸ்எஸ் எந்த அளவுக்கு கொடூரமானது. ஆனால், இதற்கு மறுபக்கமும் உள்ளது. கருணாநிதியின் இருத்தல், ஒரு கட்டம் வரை திராவிட இயக்கம் கடைபிடித்த, அமல்படுத்திய சமூகநீதி கொள்கைகள், நடவடிக்கைகள், பார்ப்பனீய எதிர்ப்பு, ஆகியவை ஆர்எஸ்எஸ்சை எந்த அளவுக்கு அடக்கி வைத்தன என்பதை, அவரது மரணத்தில் ஆர்எஸ்எஸ் விடும் பெருமூச்சு காட்டுகிறது.
படுக்கையறைக்குள் புகுந்த நச்சுப்பாம்பு என்று ஒரு கட்டத்தில் கருணாநிதி பாஜகவை விவரித்தார். நல்லபாம்பு பழிவாங்க காலம் பார்த்து காத்திருக்கும் என்று சொல்வதுண்டு. ஆர்எஸ்எஸ் பாம்பு விஷம் கக்க காலம் பார்த்து காத்திருந்தது ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி பேசியதில் தெரிய வந்தது. பதவியில் இருக்கும் முதலமைச்சர்களுக்குத்தான் மெரினாவில் இடம் என்றார். கருணாநிதியின் மரணத்தை ஒட்டி துரதிர்ஷ்டவசமாக ஜெயலலிதாவுடன் ஒப்பிட நேர்கிறது. ஜெயலலிதா இறந்தபோது அவர் முன்னாள் முதலமைச்சர்தான். அந்த நேரத்தில் பன்னீர்செல்வம்தான் முதலமைச்சர். எழுதித் தந்த வசனத்தை பிசகாமல் படித்து விட்டுப் போய்விடும் ஸ்டாரும் மெரினாதான் வேண்டும் என்று சொல்லிவிட்டதால்தான் ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி பேச நேர்ந்தது. ஒரு சூத்திரனுக்கு இந்த அளவு மதிப்பு, மரியாதை தந்துவிடக் கூடாது, தடுத்து விட வேண்டும், பார்ப்பனீயத்தை எதிர்த்த ஒருவருக்கு எந்த பெருமையும் வந்துவிடக் கூடாது, வரலாற்றில் இடம் தந்து விடக் கூடாது என்றெல்லாம் பார்ப்பனீயம் சூழ்ச்சி செய்ய முற்பட்டது. 
ஆனால், தமிழ்நாடு முழுவதும் மிகச் சரியான கேள்வி எழுந்தது: ‘ 1க்கு மெரினா, கலைஞருக்கு இல்லையா?’
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கியதுதான் சரி என்று சொல்லிவிட்டு அவசரஅவசரமாக அந்த ஒலிபெருக்கிகளிடம் இருந்து வேகமாக நகர்ந்தார் பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை. இப்படிச் சொல்லவில்லை என்றால், தமிழ்நாட்டில் அடுத்து அரசியல் கருத்து ஏதும் பேசுவது சிரமம் என்பது அவருக்குத் தெரியும்.
மோடியின் முகத்தில்தான் பீதி தெரிந்தது. அசைவற்று இருந்த கருணாநிதியின் சடலம் மோடியுடன் ஏதாவது பேசியிருக்குமோ? ‘மோடியே திரும்பிப் போ என்ற குரலால் தமிழ்நாட்டின் தரையைத் தொடாமல் போன மோடிக்கு, ‘வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும் என்ற பெருங்குரல் நிச்சயம் அச்சம் தந்திருக்க வேண்டும். மெரினாவில் இடம் உண்டு என்ற உறுதி, அன்று கருணாநிதிக்கு விட மோடிக்கு கூடுதலாக தேவைப்பட்டது. ஏனென்றால் அதன் பிறகுதான் தமிழ்நாட்டு மண்ணில் கால் வைக்க முடியும், இல்லை என்றால், ஏப்ரல் 12 மீண்டும் நிகழும் என்று அவர் எதிர்ப்பார்த்தார். மீண்டும் பலத்த பாதுகாப்பு, அமைச்சர்கள், கட்சியினர் சூழ வந்துவிட்டு போனார். முகத்தில் துயரத்தை விட அச்சம் சற்று தூக்கலாகவே காணப்பட்டது.
இது உங்கள் கற்பனை என்று கூட சங் கும்பல் கூச்சல் போடும். ஆனால், மெரினாவில் இடம் உண்டு என்ற தீர்ப்பு வந்ததும் ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம், மோடியின் அச்சம் எந்த அளவுக்கு உண்மை என்பதை போதுமான அளவுக்குச் சொல்லும்.
தமிழ்நாட்டில் ஏதாவது பிரச்சனைகளை உருவாக்கியே தீருவது என்று விடாமுயற்சி மேற்கொண்டுள்ள ஆர்எஸ்எஸ்சின் தலையீடு தீர்ப்பில் எதிரொலிக்கக் கூடும் என்பதால் மக்கள் மீது அக்கறை கொண்ட பல பிரிவினர் மத்தியிலும் தீர்ப்பு தொடர்பான பதட்டம் இருந்தது. கருணாநிதிக்கு கடற்கரையில் இடம் வேண்டும் என்று கோருபவர் மத்தியில் மட்டுமின்றி, எதிர்கருத்து கொண்டோர் மத்தியிலும் ஆர்எஸ்எஸ் சதி பற்றிய அறிவும் அனுபவமும் இருப்பதால் கேள்விகள் இருந்தன. மருத்துவ மனையிலேயே கூடிவிட்ட தொண்டர் கூட்டம், மறைவுச் செய்தியறிந்து வந்துகொண்டிருந்த தொண்டர் கூட்டம், எதிர்மறை தீர்ப்பு வந்தால் கட்டுக்குள் இருக்குமா? தொண்டர்கள் சீற்றத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடுமா? தொண்டர்களுக்கு, மற்றவர்களுக்கு பாதிப்பு  நேர்ந்துவிடுமா? பழி நேர்ந்து விடுமா? அரசு அதை பயன்படுத்தி இறுதி நிகழ்ச்சியை கலவரமாக்கிவிடுமா? அசாதாரணமாக ஏற்பட்டு விடக் கூடிய நெருக்கடியை எப்படி சமாளிப்பது? பாசிச வெறிபிடித்த பார்ப்பனீய கூட்டம் துக்கத்தில் இருந்த பலரையும் பல மணி நேரங்களுக்கு இப்படி தவிக்க வைத்தது பாசிச வகை சித்திரவதைகளில் ஒன்று.
எல்லாவற்றுக்கும் பிறகு ஒரு சூத்திரனின் உயிரற்ற உடலின் முன் ஒருபுரோஹித் சல்யூட் அடித்துக் கொண்டே சில நிமிடங்கள் நிற்க நேர்ந்த காட்சி.... அற்புதம்.... குருமூர்த்திகளும் வைத்தியநாதன்களும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய காட்சி அது.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் முறைகேடாக சொத்து குவித்த, உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவுக்கு கடற்கரையில் நினைவிடத்துக்கு இடம் தரப்பட்டுள்ளது. அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு, சங் பரிவார் விருப்பத்துக்கு ஏற்ப, கடற்கரையில் நினைவிடம் மறுத்தது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மேற்கொள்ளப்படுகிற, கண்டிக்கத்தக்க நடவடிக்கையே. ஜெயலலிதா நினைவிடத்துக்கு தடையாக இருந்த வழக்குகளை திரும்பப் பெற பழனிச்சாமி மேற்கொண்ட சாதுரியமான நகர்வு என்றெல்லாம் இதைச் சொல்கிறார்கள். ஜெயலலிதா கல்லறையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று மோடி கட்டளையிட்டால் அதையும் உடனே செய்து முடித்துவிடக் கூடியவர்கள்தான் நமது அடிமை ஆட்சியாளர்கள். நீதிமன்றத்துக்குச் செல்லும் அளவுக்கான பிரச்சனையா இது? பெருந்தன்மையோடு தாமாக முன்வந்து மேற்கொண்டிருக்க வேண்டிய நடவடிக்கையல்லவா? பாசிசத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவது தவிர வேறொன்றியோம் என்கிறது அடிமைகள் கூட்டம்.
ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் நடக்கும் என்று சொல்லிவிட்டு பாதுகாப்பு ஏற்பாடு களில் அப்பட்டமான அலட்சியத்தை வெளிப்படுத்தியது அடிமை பழனிச்சாமி அரசாங்கம். இதுவும் பாசிச உத்தரவாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. மோடி வந்து செல்லும்வரை இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதன் பிறகு இல்லை. ராகுல் காந்திக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் தமது தலை வரை இறுதியாகப் பார்த்துவிட வேண்டும் என்று கூடி, காத்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் எந்தவித தடையும் இன்றி மரியாதை செலுத்தவும் யாருக்கும் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை. காவல்துறையினர் எண்ணிக்கை குறைந்து பாதுகாப்புப் படையினரை மட்டுமே காண முடிந்தது. உடலை நெருங்கியவர்கள் பாதுகாப்புப் படையினரால் மோசமாக நடத்தப்பட்டார்கள். தள்ளிவிடப்பட்டார்கள். மீண்டும் துக்கத்தில் இருக்கும் ஸ்டாலினே நேரடியாக சில நிமிடங்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வேலை பார்க்க நேர்ந்தது. பிறகு வேண்டுகோள் விடுக்க நேர்ந்தது. நெரிசலில் தடியடி, பிறகு, காயம், பிறகு இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி என்றான பிறகுதான், கண்டனங்கள் எழுந்த பிறகுதான், காவல்துறை மீண்டும் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஏதாவது பெரிய கலவரம் ஒன்றை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற பாசிசத் திட்டத்துக்கு இடம் தந்துவிடாமல் எப்படியோ அவரது இறுதி நிகழ்ச்சியை தொண்டர்கள் நடத்தி முடித்தனர்.
பாசிச வெறுப்புணர்வும் காழ்ப்புணர்வும் அன்றுடன் முடிந்துவிடவில்லை. தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்களுடன் சமீபத்தில் டில்லியில் மோடி நடத்திய கூட்டத்தின் முதல் விளைவை கருணாநிதி இறப்பை ஒட்டி பார்க்க முடிந்தது. ஆகஸ்ட் 9 அன்று இந்து ஆங்கில நாளேடு கருணாநிதி, காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தார் என்று திண்டிவனம் ராமமூர்த்தி சொன்னதாக ஒரு செய்தியை கவனம் ஈர்க்கும் விதம் வெளியிட்டது. வாட்சப்பில் வந்த இந்தச் செய்தி தவறு என்று ஆகஸ்ட் 8 அன்றே தெளிவுபடுத்தப்பட்ட பிறகும் இந்து போன்ற ஒரு நாளேடு ஏன் மீண்டும் அதை வெளியிட வேண்டும்? கண்ணதாசனும் ஜெயகாந்தனும் உயிருடன் இல்லாதபோதும் உயிருடன் இருக்கும் நெடுமாறனிடம் ஏன் விவரத்தையாவது சரி பார்த்திருக்கக் கூடாது? அடுத்தடுத்த நாட்களில் நியுஸ்மினிட் என்ற இணையதள பத்திரிகை, நியு இன்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, தமிழ் இந்து நாளேடு ஆகியவை, காமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவே இல்லை என்றும், கருணாநிதி தாமாக முன்வந்து காந்தி மண்டபம் அருகில் இடம் தந்ததையும் காமராஜர் தகனம் செய்யப்பட்டார் என்பதையும் அன்றைய காங்கிரஸ்காரர் பழ.நெடுமாறன் தெளிவுபடுத்தியதை வெளியிட்டன. இந்தச் செய்திகள் வந்த பிறகும் இந்து நாளேட்டில் மறுப்புச் செய்தி எதுவும் வரவில்லை.
பாசிசக் கூட்டம் தமிழக மக்கள் மீது தாக்குதல் தொடுக்க விதவிதமாக தயாராகிறது என்பதை கருணாநிதி இறப்பை ஒட்டி நடக்கும் விசயங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. தமது தலைவன் மீது, அவனது கொள்கைகள் மீது பற்று கொண்ட சாமான்ய மக்களின் எதிர்ப்பார்ப்புகளை ஸ்டாலின் தலைமையிலான திமுக நிறைவேற்றுவது வருங்காலங்களில் பெரிய சவால்தான். கருணாநிதியின் இருத்தலே பாசிச வெறிபிடித்த கூட்டத்துக்கு கிலி தந்து கொண்டிருந்தது என்றால், கருணாநிதி சார்ந்திருந்த சமூகநீதி இயக்கத்தின் துவக்க கால சமூக அரசியல் நடவடிக்கைகளை சீர்திருத்தங்கள் என்ற அளவிலாவது மீட்டெடுத்து, பாசிச சக்திகளின் அந்தக் கிலியை என்றும் அகலாமல் வைத்திருப்பது. தமிழ்நாட்டின் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் முன் உள்ள சவால்தான்.

Search