COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, August 15, 2018


கோவையில் இருந்து சேலம் நோக்கி வாகனப் பிரச்சாரமும்
பிரிக்கால் வேலை நிறுத்தத்திற்கு தயாரிப்பு வேலைகளும்

விவசாயம் காப்போம், ஜனநாயகம் காப்போம் என்ற முழக்கங்களுடன், எட்டு வழிச்சாலைக்கு எதிராக, தமிழக அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக கோவை மற்றும் உளுந்தூர்பேட்டையில் இருந்து சேலம் நோக்கி ஆகஸ்ட் 5 அன்று புறப்பட்ட பிரச்சாரப் பயணங்கள் துவங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு பயணத்தில் கலந்துகொண்ட இககமாலெ தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் பிரச்சாரப் பயணத்தில் கோவையில் கலந்துகொண்ட ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் ஜெயபிரகாஷ் நாராயணன் தனது அனுபவங்களை இங்கு தொகுத்துள்ளார்.

ஆட்சியும் அதிகாரமும் செல்லக் கூடாதவர்களிடம் சென்றால் ஜனநாயகம் எப்படி சீரழியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக
தமிழ்நாட்டின் எடுபிடி மிதியடி எடப்பாடி பழனிச்சாமி  ஆட்சியை விட பொருத்தமான வேறு எந்த ஆட்சியையும் முன்னிறுத்த முடியாது. எதிர்ப்பும் எதிர் கருத்துக்களும் ஜனநாயகத்திலிருந்து பிரிக்க முடியாதவை. தமிழக அரசு எதிர்ப்பையும் எதிர் கருத்துகளையும் அனுமதிக்க மறுப்பது ஜனநாயக விரோதமானது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாடம் கற்றுத் தந்ததாக கருதிக் கொண்டு, சேலம் - சென்னை 8 வழிச்சாலை எனும் பசுமை அழிப்பு, விவசாயம், மக்களின் வாழ்வாதாரச் சீரழிவு திட்டத்தை எதிர்க்கும் பிரிவினர், இடதுசாரி ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் மக்களை சந்திக்க விடாமல் பழனிச்சாமி அரசு தடுக்கிறது. தடையை  மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) திட்டமிடுகிற பல்வேறு மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, கைது, சிறையில் அடைப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, ‘விவசாயத்தைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம் என்ற கோரிக்கைகளோடு ஆகஸ்ட் 5 அன்று கோவையிலிருந்து புறப்பட்டு சேலம் நோக்கி வாகன பிரச்சார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது காவல்துறையிடம் முறையாக அனுமதி கோரப்பட்டது. பிரச்சாரப் பயணத் துக்கான ஏற்பாடுகள் முழுவதும் தயாரான நிலையில் காவல்துறை ஆகஸ்ட் 3 அன்று இரவு அனுமதி மறுத்து கடிதம் தந்தது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 5 அன்று தடையை மீறி நடைபயணம் செல்வது என்று ஆகஸ்ட் 4 அன்று மாலை 6 மணிக்கு மேல் முடிவு செய்து தோழர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 5 அன்று தோழர்கள் காலை 7 மணி முதலே சங்க அலுவலகத்திற்கு வர ஆரம்பித்தனர். காலை 9 மணிக்கு பத்திரிகையாளர்கள் வந்தார்கள். காலை 9.30 மணியளவில் இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமார சாமி துவங்கி வைக்க சங்க அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தை நோக்கி  அனைவரும் நடந்து சென்று சேர்ந்தபோது காவல்துறை பெரும்படையோடு, கைது செய்ய தயாராக இருந்தது. பத்திரிகையாளர்கள் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமியிடம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேட்டி எடுத்தனர். போதிய முன் தயாரிப்புகள் இல்லாத நிலையிலும் 100க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 38 பேர் கைதாயினர்.
சிறைக் கதவுகளே திறந்தாலும் போராட்டங்களுக்கும் தயாரிப்புகளுக்கும் தடை போட முடியாது
பிரிக்கால் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த காலங்களில் நமது கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட மண்டபத்தில் செங்கொடிகளோடு சிறை வைக்கப்பட்டோம். சிறை வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அடுத்த கட்ட கூட்டத்துக்கு தயாரானோம். தீப்பொறியில் வெளியானஎல்லா மரணங்களும் சமமானவையல்ல, செவ்வணக்கம் தோழர் பக்ஷி, ‘தோழர் பக்ஷி சில நினைவுகள் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. தோழர் பக்ஷி  பற்றி அறிந்த தோழர்கள் பேசினார்கள். தமிழக விவசாயத் தொழிலாளர் மத்தியிலான தோழர் பக்ஷியின் வேலைகள், இளம் தோழர்களோடு அவர் பழகிய விதம், அவர்களை வளர்த்தெடுத்தது, கட்சித் தோழர்கள் என்ன வேலை செய்கிறார்கள், எப்படி வேலை செய்கிறார்கள் என கேட்பது, கட்சி உறுப்பினர்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் என எளிய முறையில் எடுத்துச் சொல்வது ஆகியவற்றில் தோழருக்கு நிகர் அவரே என உதாரணங்களோடு தோழர் நாராயணன் எடுத்துரைத்தார்.
அடுத்ததாககால்பந்து உலகக் கோப்பை பற்றிய கட்டுரை வாசித்து விவாதிக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்குப் பின் 1.30 மணிக்கு கூட்டம் மீண்டும் துவங்கியது. நம் போராட்டத்தை ஆதரித்து வாழ்த்த வந்திருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் தோழர் பாலமூர்த்தி பேசினார்.
போராடும் தோழர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் கவிதை படிக்கப்பட்டது.
நான் எரியவில்லை என்றால்
நீ எரியவில்லை என்றால்
நாம் எரியவில்லை என்றால்
இந்த இருள் எப்படி ஒளியாய் மாறும்?
                                                    - நசீம் ஹிக்மெத், துருக்கி நாட்டு இடதுசாரி சிந்தனை கவிஞர்
போராடுபவர்களுக்கு உத்வேகம் தரக் கூடிய, போராடுவதன் அவசியத்தை எடுத்துச் சொல்கிற இந்தக் கவிதை திரும்பத் திரும்ப படிக்கப்பட்டது. படித்தோரும் கேட்டோரும் உத்வேகம் பெற்றனர்.
ஆனந்த விகடனில்சொல்வனம் பகுதியில் .பொன்ராஜ் அவர்களின் அற்புதமான, ஆணாதிக்க சிந்தனைக்கு வேட்டு வைக்கும் காவி மதவாத அடிப்படை பழமைவாதிகளின் கருத்துகளை காவு கேட்கும் கவிதை வாசிக்கப்பட்டது. (குறிப்பு: புதிய தலைமுறை தொலை காட்சி விவாதமொன்றில் நெறியாளர் கார்த்திகைசெல்வன் இந்தக் கவிதையை மேற்கோள் காட்டியதால், மதவெறிக் கூட்டங்களின் மிரட்டலுக்கு ஆளாகி, பின்னர் மன்னிப்பு கேட்க நேர்ந்தது).
அந்த மூன்று நாட்களில்
கோவிலுக்குள் செல்வது
தீட்டாகவே இருக்கட்டும்
எந்த மூன்று நாட்களில்
பெண் தெய்வங்கள்
கோயிலுக்குள் இருக்காதென
கொஞ்சம் சொல்லுங்களேன்
இந்தக் கவிதை வாசிக்கப்பட்டது. கவிதை பற்றிய விவாதத்தில் பலரும் பேசினர்.
தேனீர் இடைவேளைக்கு பின் பிரிக்கால் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 14.08.2018 வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. 06.08.2018 அன்று முன்னணித் தோழர்கள் மத்தியிலான கூட்டமும் 07.08.2018 அன்று மதியம் 3.00 மணியளவில் 2ஆவது ஷிப்ட் முன்னணி தோழர்களின் கூட்டமும், மாலை 4.15 மணியளவில் வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பெண் தோழர்களுக்கான கூட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது. பகுதி மக்களின் ஆதரவு திரட்டும் விதம் பிரச்சார பிரசுரம் வெளியிடுவது, சுவரொட்டி வெளியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மாலை 5 மணியளவில் பிரிக்கால் வேலை நிறுத்தப் போராட்டம் பற்றிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு அனைவரையும் கோரப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
கைபேசியில் பேசாமல் மணிக்கணக்கில் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகின்ற மெய்நிகர் நாட்களில், கைபேசி இல்லாமல், சிறை வைக்கப்பட்டுள்ளோம் என்ற உணர்வேதும் இல்லாமல், வகுப்பறைக்கு வந்துள்ள மாண வர்கள் போல் நேர்த்தியான வரிசை கொண்ட இருக்கைகளில் தோழர்கள் அமர்ந்திருந்தனர்.
மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் விடுதலை செய்தனர். அதன் பின் அலுவலகம் வந்தோம். 190 நாட்களை கடந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் எல்ஜிபி தோழர்கனோடு சிறிது நேரம் பேசி விட்டு அடுத்தகட்ட வேலையாக பிரிக்கால் நிர்வாகத்திற்கும்  தொழிலாளர் துறை துணை ஆணையருக்கும் கடிதங்கள் தயார் செய்யப்பட்டன. 14.08.2018 வேலை நிறுத்தம் தொடர்பான அடுத்தகட்ட வேலைகள் பற்றிய நினைவூட்டல் அறிவிப்பு தயாரிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி 06.08.2018 மாலை முன்னணிகள் கூட்டம் நடைபெற்றது. வேலை நிறுத்த அறிவிப்பை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்வது, 14.08.2018 அன்று தொழிலாளர்கள் குடும்பங்களோடு பட்டினிப் போராட்டம் நடத்துவது, சங்கம் சொல்லும் எந்த இடத்துக்கும் செல்வது ஆகியவை பற்றி விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.
முன்னதாக காலையில் சங்க நிர்வாகிகள் தோழர்கள் பாபு, ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் ஆகியோரோடு தோழர் எஸ்.கே, கோவை தொழி லாளர் துணை ஆணையர் சந்திப்பு நடைபெற்றது. அதன் விவரங்களும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகம் தொழிலாளர்களுக்கு கல்வித்தொகை கொடுக்காமல் இழுத்தடிக்கும் நிலையில் சென்னை இசபெல்லா மருத்துவமனை தொழிலாளர்கள், சிறையில் இருக்கும் தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தியின் குழந்தைகளின் கல்விக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கிய செய்தியும் தொழிலாளர் மத்தியில் தெரிவிக்கப்பட்டது. இசபெல்லா மருத்துவமனை தொழிலாளர்களுக்கு கூட்டத்தில் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட் டது. இரவு, பிரச்சாரத்துக்கான பிரசுரம், சுவரொட்டி ஆகியவற்றின் உள்ளடக்கம்  இறுதி செய்யப்பட்டது.
07.08.2018 மதியம் 3 மணிக்கு தொழிலாளர் முன்னணிகள் கூட்டமும் மாலை 4.30 மணிக்கு பெண் தொழிலாளர் கூட்டமும் நடத்தப்பட்டன. பெண் தொழிலாளர்கள் கூட்டத்துக்கு முன்னணி பெண் தோழர்கள் 15 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக ஆகக் கூடுதலான பெண் தோழர்கள் கலந்து கொண்டது வேலை நிறுத்தத்தில்தான் எங்களுக்கு விலக்கே தவிர சங்க நடவடிக்கைகளில் விலக்கு இல்லை என்று சொல்லாமல் சொன்ன செய்தியாக இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை பற்றிய செய்தியும் வந்து கொண்டிருந்ததால் கூட்டம் விரைவாக நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் நடந்த 3 கூட்டங்களில் 400 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
190 நாட்களை கடந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் எல்ஜிபி தொழிலாளர் சங்கத்தின் முன்னணித் தோழர்களின் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 14 நடக்கவுள்ள பிரிக்கால் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம், தொழிலாளர்கள் குடும்பங்களுடன் நடத்தவிருக்கிற பட்டினிப் போராட்டம் ஆகியவை வெற்றி பெற பொது மக்கள் எப்போதும்போல் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம்.

Search