COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, August 15, 2018


தேசிய குடிமக்கள் பதிவேடு:
சில கேள்விகள் பதில்கள்

எஸ்.குமாரசாமி

கேள்வி: அசாம் மாணவர்களுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் என்ன ஒப்பந்தம் போடப்பட்டது?

பதில்: சுதந்திரம் பெற்ற நேரத்தில் இருந்தே இந்தியா பாகிஸ்தான் பிரிவினை நடந்த நேரத்தில் இருந்தே, அசாமின் உள்ளூர் மக்கள், வெளியார் குடியேற்றத்தால் தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கருதினர். 1971 இந்தியா பாகிஸ்தான் போருக்குப் பிறகு, அசாமின் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் 50,000 போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள், அவர்களில் பெரும்பாலானோர் அந்நியர்கள், வங்கதேச அகதிகள் என்ற கொந்தளிப்பு மக்களிடம் எழுந்தது. 1979ல் மாணவர் கிளர்ச்சி வெடித்தது. காங்கிரஸ் அரசு வீழ்ந்தது. கிளர்ச்சிக்காரர் முதல்வரானார். அந்த நேரம், தமது நிலம், மொழி, பண்பாடு, இனம் அழிந்து விடுமோ என்ற அசாம் மக்களின் அச்சத்துக்கு அடிப்படை இருந்தது. அதனால்தான் 1985ல் அசாம் மாணவர் அமைப்புடன் பிரதமர் ராஜீவ் ஒப்பந்தம் போட நேர்ந்தது. 25.03.1971க்கு முன் இருந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்றும் அதற்காக ஒரு தேசிய குடிமக்கள் பதிவேடு தயாராகும் எனவும் பதிவேட்டில் இடம் பெறாத அந்நியர் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் ஒப்பந்தம் சொன்னது.
கேள்வி: 1983ல் ஒப்பந்தம் போடப்பட்டது. ÷லை 30, 2018 அன்று நகல் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியானது. இடையில் என்னதான் நடந்தது?
பதில்: ஆம், 43 ஆண்டுகளுக்கு பிறகுதான் நகல் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாராகிறது. போராட்டக்காரர்களே 1988ல் இருந்து 10 வருடங்கள் ஆண்டபோதும், பதிவேடு தயாராக வில்லை. 1951 தேசிய குடிமக்கள் பதிவேடும், 1971 வரையிலான வாக்காளர் பட்டியல்களும், புதிய தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு அடிப்படையான ஆவணங்கள் என முடிவான நிலை யில், சில பத்தாண்டுகளுக்குப் பிறகு, எங்கிருந்து ஆதாரங்களை சமர்ப்பிப்பது என்ற சாரமான பிரச்சனை எழுந்தது. ஏராளமான, அப்பட்டமாகத் தெரியும் குளறுபடிகளுடன், நகல் தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரானது.
கேள்வி: பதிவேடு நிலைமை 30.07.2018ல் என்னவாக இருந்தது?
பதில்: 6.6 கோடி ஆதார ஆவணங்களுடன், 3,24,91,384 பேர் விவரங்கள் சமர்ப்பித்தனர். இவர்களில் 40,07,707 பேர் அதாவது 12% பேர் விடுபட்டதாகச் சொல்லப்பட்டது. இது அதிர்ச்சி தரும் எண்ணிக்கையாகும். உலகம் முழுவதும் நாடற்றோர் 1 கோடி பேர் என, ஏற்கனவே அய்நா சொல்லியுள்ளபோது, அசாம் நகல் பட்டியல் 40 லட்சம் பேரை 2018ல் நாடற்றோர் ஆக்கும் என்பது பேரதிர்ச்சிதானே?
கேள்வி: என்ன குளறுபடிகள் நடந்தன?
பதில்: மிகவும் சுலபமாகப் புரியும் சில உதாரணங்கள் பார்ப்போம்: 1. ஒரே வீட்டில் சிலர் உள்ளே. சிலர் வெளியே. 2. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதின் உறவினர் பெயர் பட்டியலில் இல்லை. 3. அசாமின் ஒரே பெண், ஒரே முஸ்லீம் முதலமைச்சர் பெயர் பட்டியலில் இல்லை. 4. கார்கில் போரில், இந்திய விமானப் படையில் பணியாற்றிய சம்சுல் ஹக், கதுல் அகமது பெயர்கள் பட்டியலில் இல்லை. 1979ல் இருந்து சில பத்தாண்டுகள் தேசத்திற்கு சேவை செய்த நான் குடிமக்கள் பட்டியலில் வர மாட்டேனா என, இதுல் அகமது கேட்கிறார்.
குளறுபடிகள் போக நிஜமான தீவிரமான சிக்கல்களும் இருந்தன. ஏழைகள், விளிம்பு நிலை மனிதர்கள், ஆவணங்கள் பெறுவதும் அவற்றைப் பத்திரமாகப் பாதுகாப்பதும் உலகெங்கும் கடினமான விஷயமாகும். 1963லிருந்து 1986க்குள் அசாமிலிருந்து, நாகாலாந்து, அருணாச்சலபிரதேசம், மேகாலயா, மிசோரம் மாநிலங்கள் பிரிந்தன. அசாமுக்குள் மட்டுமே நிறைய இடம்பெயர்தல் நடந்தது. இவை போக பெரும்பாலான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளின் ஆவணங்களையே கொண்டிருந்தனர். அவை செல்லாது என்ற அசாம் உயர்நீதிமன்றம் எடுத்த முடிவை இப்போதுதான் உச்சநீதிமன்றம் ரத்து செய்து, உள்ளாட்சி அமைப்பு ஆவணங்களை ஏற்கலாம் என்று சொல்லி உள்ளது. நெல்லி இனக் கலவரங்கள் அச்சுறுத்தியதும் கூட ஒரு காரணம்.
கேள்வி: என்ஆர்சி ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு பற்றி?
பதில்: 30.07.2018 அன்று நேஷனல் சிட்டிசன் ரெஜிஸ்டர் நகலில் 40 லட்சம் பேர் இல்லை என அதன் ஒருங்கிணைப்பாளர் பிரதிக் ஹஜேலா அறிவித்ததை உச்சநீதிமன்றம் கண்டித்தது. தன்னிடம் சொல்லாமல் இனி அறிவிக்கக் கூடாது என்றது. அசாம் நிதியமைச்சர் ஹிமாந்த விஸ்வ சர்மா 40 லட்சத்தில் 15 லட்சம் பேர் இந்துக்கள் என்று சொன்னதன் மூலம், 25 லட்சம் பேர் இசுலாமியர் என்றார். இந்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் தேவையற்ற பதட்டம் உருவாக்கும்தானே?
கேள்வி: 15 லட்சம் இந்துக்கள் பெயர்கள் இல்லை, அசாமில் வெறிவாதக் கொண்டாட்டங்கள் இல்லை என்பது, பாஜகவின் பொறுப்பான, பாரபட்சமல்லாத நிலையைத்தானே காட்டுகிறது?
பதில்: தவறு. பட்டியலில் இல்லை, நாம் நாடற்றோர் என்ற நினைப்பு எவ்வளவு பதட்டம் ஆகும்? ஏதோ ஒரு விதத்தில், ஹிமந்தா, 15 லட்சம் இந்துக்கள் இந்து ராஷ்டிராவில் தொடர்ந்து இருப்பார்கள், 25 லட்சம் இசுலாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று சொல்வதாகும்தானே?
கேள்வி: அது எப்படி?
பதில்: குடியுரிமை மசோதா கொண்டு வருவதில் பாஜகவின் இந்து ராஷ்டிரா உருவாக்கும் நோக்கம் இருப்பதை காணத் தவறக் கூடாது.
2016 குடியுரிமை மசோதா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் நாடுகளிலிருந்து வரும் இந்து, சீக்கியர், பவுத்தர்கள், ஜைனர் கிறித்துவர் ஆகியோரை அகதிகள் எனக் கருதி அவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்கிறது. இசுலாமியர்க்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்து ராஷ்டிராவில், 15 லட்சம் இந்துக்கள் உள்ளே, 25 லட்சம் இசுலாமியர்கள் வெளியே என பாஜக முயற்சிப்பது புலப்படவில்லையா? பாப்ரி மசூதி இடிக்க மாட்டோம் என்ற பாஜகவின் வாக்குறுதியை உச்சநீதிமன்றம் நம்பி ஏமாந்ததை மறக்கலாமா?
கேள்வி: டிசம்பர் முடியும் வரை ஆதாரம் காட்டி பட்டியலுக்குள் வரலாமே. பின் ஏன் பீதியும் பதட்டமும் உருவாக்கப்படுகிறது?
பதில்: கொஞ்சம் யோசிக்கலாம். 3.2 கோடி விண்ணப்பம் பார்க்க 43 ஆண்டுகள் தேவைப் பட்டபோது அவசரஅவசரமாய் அதிகாரத்துவப் போக்கில், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 28 வரை ஒரு மாதத்தில், 40 லட்சம் பேர் ஆதாரம் காட்டி உள்ளே வரலாம் எனச் சொல்வது நடைமுறை சாத்தியமா? இந்த, குறைந்த கால அவகாசம், பல லட்சம் பேரை வெளியே நிறுத் தவே பயன்படும்.
கேள்வி: பிரச்சனை எதுவும் தெளிவாக எழாத போது, வெறுப்பரசியல் பற்றிப் பேசப் படுகிறதா?
பதில்: நாடாளும் பாஜகவின் தலைவர் அமித் ஷா. அவர், பதிவேடு இறுதியாகும் முன்பே, அந்நிய நாடுகளில் இருந்து ஊடுருவிய ஒவ்வொருவரும் வெளியேற்றப்படுவர் என, விஷம் கக்குகிறாரே. அவர்களது தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர் டி.ராஜாசிங் லோத், மியன்மர் ரோஹிங்கியாக்களையும் பங்களாதே ஷில் இருந்து ஊடுருவியர்களையும் சுட்டுவிட வேண்டும் என்கிறாரே. ஆர்எஸ்எஸ்சின் தொலைக்காட்சி பிரதிநிதி ராகுல் அவாஸ்தி செய்துள்ள ட்வீட் தெரியுமா? ‘எனாக் கோல், ரத்த ஆறுகள் ஓடும் எனச் சொல்வது அசாமில் ஓடாமல் இருக்க வேண்டுமானால், பங்களா தேஷில் இருந்து சட்டவிரோதமாக வந்துள்ள 40 லட்சம் பேரை திரும்ப அனுப்புவதை தயவுசெய்து உறுதி செய்யுங்கள். அல்லது அவர்களை (கட்டாய) உழைப்பு முகாம்களில் அடையுங்கள். மேற்குவங்க முதலமைச்சர் உள்நாட்டுப் போர் நடக்கும், இரத்த ஆறு ஓடும் எனப் பேசுவது, பாஜகவின் ஆட்டத்தையே அவரும் ஆடப் பார்ப்பதைக் காட்டும்.
40 ஆண்டுகளுக்கு மேலாய் வாழ்பவர்கள் வேறு மொழி பேசுபவர்கள், வேறு கடவுளை வழிபடுவதால், ஹிட்லரின் வதை முகாம் போன்றவற்றில் இருக்க வேண்டும் என்பது, வெறுப்பு அரசியல் இல்லையா? முகாம்கள் கட்ட ரூ.48 கோடி மத்திய அரசு ஒதுக்கி, துணை  இராணுவத்தினரை அசாமுக்கு கணிசமாக அனுப்பி, கோல்புரா மாவட்டச் சிறையில் அந்நிய நாட்டு சிறைவாசிகளுடன் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களை அடைத்துள்ளது, வெறுப்பு அரசியல் இல்லையா?
கேள்வி: வெறுப்பு அரசியலுக்கு என்ன அடிப்படை?
பதில்:  இது வெறும் கருத்து நிலை அல்ல. அய்க்கிய அமெரிக்கா, அய்ரோப்பா எங்கும் வெள்ளை இன கிறிஸ்துவர், வேலை, மருத்து வம், வருமானம் பெற முடியாத நிலையில் உள்ளனர். அவர்களிடம் இருந்து வெகுதொலைவில் உள்ள ஆட்சியாளர்கள், தாம் தப்பிக்கநாம் எதிர் அவர்கள் என்ற வெகுமக்களை ஏமாற்றும் ஆயுதங்களை ஏவுகிறார்கள். மெக்சிகர்களும் இசுலாமியர்களும் சட்டவிரோதக் குடியேறிகள், அவர்களால் நம் வாழ்க்கை நாசமாகிறது, அவர்கள் ஆபத்தானவர்கள், நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சொல்கிறார்கள். இடதுசாரி அரசியல். மக்கள் சார்பு அரசியல் வலுவாக இல்லாத போது, நெருக்கடியில் உள்ள மக்கள் மத்தியில்நாம் எதிர் அவர்கள் கதை எடுபடுகிறது.
கேள்வி: இதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்?
பதில்: மோடியின் 2014 வளர்ச்சிக் கதைகள் தோற்றுவிட்டன. விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கவில்லை. 2 கோடி பேருக்கு ஒவ்வோர் ஆண்டும் வேலை இல்லை. தலித், இசுலாமியர் மீது கும்பல் படுகொலை நடக்கிறது. பெண்ணுக்கு பாதுகாப்பே இல்லை. தொழிலாளர்க்கு ஆயுள் தண்டனை. இந்தப் பின்னணியில் மோடி 2019ல் வெற்றிபெற அவர் வேறு ஒரு கதையாடலுக்கு தயாராகிவிட்டார். 2011 மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்தவர்கள் 13 கோடியே 90 லட்சம் பேர். இவர்களுக்கு ரேஷன் அட்டை, வாக்குரிமை கிடையாது. பெருநகரங்களும் சிறு நகரங்களும் இவர்களை ஆபத்தானவர்களாகவே காண்கின்றன. அரசுகள், இவர்கள் உழைக்க வேண்டும், உரிமை கேட்கக் கூடாது என்கின்றன. சொந்த குடிமக்கள் நிலை இது என்றால், தூத்துக்குடி உள்ளிட்ட, சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுக்க முடியுமென்றால், சங் பரிவார் கூட்டத்தினர், அந்நிய நாட்டில் இருந்து ஊடுருவியவர்கள் என்று சொல்லப்படுபவர்களை என்ன வெல்லாம் சொல்வார்கள்? செய்வார்கள்? அவர்களை திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் பங்களாதேஷோடு இல்லாததால் அவர்களை அங்கு அனுப்ப முடியாது. விஜய் மல்லையா, முகுல் சோக்சி, நீரவ் மோடி ஆகியோர் நாட்டின் செல்வங்களை சூறையாடிவிட்டு, நாட்டை விட்டே ஓட முடிகிறது. ஆனால் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும்பங்காற்றிய சாமான்ய உழைக்கும் மக்கள் அந்நிய நாட்டில் இருந்து ஊடுருவியவர்களா? தேசம், குடிமக்கள், தேச பக்தி எதிர் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள், ஆபத்தானவர்கள், தேச விரோதிகள் என்ற நமக்கு கைவந்த வசதியான தளத்தில் மோடி 2019 தேர்தலுக்கு தயாராகிறார். அதனால்தான் 43 ஆண்டுகள் கழித்து, 40 லட்சம் பேர் பட்டியலில் இல்லை என்கிறார்கள்.
கேள்வி: அடுத்து என்ன செய்யலாம்?
பதில்: மேலும் பரந்த, மேலும் உள்ளடக்கக் கூடிய  தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டும். யாரும் விடுபடுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் அதே நேரம், விடுபடக் கூடிய மக்களின் எதிர்காலம் பற்றிய தெளிவான திட்டத்தை அரசு முன்வைக்க வேண்டும். அசாம் மக்கள் வளர்ச்சி, நல்லிணக்கம் நோக்கி நகரப் பார்க்கும்போது, அவர்களைப் பின் னோக்கி, காட்டுமிராண்டித்தனம் நோக்கித் தள்ளும் பாஜக முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விடுபடக் கூடியவர்களின் கவுரவம், மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ரோஹிங்கியா நெருக்கடிக்கு உலகே தீர்வு கோரும்போது, இந்தியா ஒரு மிகப்பெரிய மானுட சமூக துயரில் தள்ளப்படக் கூடாது. திபெத்தியர் உள்ளிட்ட பலருக்கு அடைக்கலம் தந்த இந்தியா, நம் பொருளாதாரத்துக்கு பல பத்தாண்டுகளாகப் பங்களிப்பு செய்பவர்களை அந்நியராக்கக் கூடாது.

Search