COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, August 15, 2018


பெண் மீதும் பெண் உடல் மீதும் தொடரும் போர்

காம்ரேட் 

ஆணாதிக்கம் பெண்களை நேரடியாக முரட்டுத்தனமாக நீ கீழானவள் எனச் சொல்லி அடிமைப்படுத்துகிறது.
நீ தெய்வம், நீ புனிதமானவள், நீ பாசமான தாய், துயர்தாங்கும் தாய், நீயே அனைவரையும் கவனித்துக் கொள்கிறவள் என்று உயர் பீடத்தில் வைத்திருப்பதாக பெண்ணிடம் சொல்லி அவளையும் சமூகத்தையும் சிந்திக்க வைத்தும் அடிமைப்படுத்துகிறது. பெண்களுக்குத்தான் எத்தனை முகங்கள். அவள் கீழானவள். அவள் தெய்வம். அவள் மாயப் பிசாசு.
அந்த நாட்கள்
மனுதர்மப்படி தலித்துகள் தீண்டத்தகாதவர்கள். அம்பேத்கர், சுத்தக் கோட்பாட்டில் இருந்து தீண்டாமை தோன்றியது என்கிறார். பெண் பதின்ம வயதில் மாதவிடாய் சுற்றுக்குள் நுழைகிறாள். மானுட சமூகம் தழைக்க, திரும்பத்திரும்ப உருவாக, கருவுற்று குழந்தைகள் பிறக்க, பெண் மாதவிடாய் சுற்றுக்குள் நுழையும் பருவம் எய்த வேண்டும். அப்போது ரத்தப் போக்கு இயற்கையானது. இந்த ரத்தப் போக்கை சாக்காக்கி, நீ அசுத்தமானவள், நீ தீட்டு, நீ தீண்டத்தகாதவள் எனப் பெண்ணை ஒதுக்கி வைக்கின்றனர். எல்லா மதங்களும் பெண்ணைக் கீழ்நிலையில்தான் வைத்தன. அய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால், அதாவது பெண்களோடு எப்போதும் உறவு கொள்ளாத தெய்வம் என்பதால், தீட்டாகிற பெண்கள் அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய முடியாது. 2018ல் உச்சநீதிமன்றம் இது தவறு என உணர்ந்துள்ளது. மாதவிடாய் என்ற இயற்கையான உடல் நிகழ்வை பெண்ணுக்கெதிராக நிறுத்தக் கூடாது என நீதிபதிகள் சொல்கின்றனர். நல்ல வேளையாக, மதச் சுதந்திரம் என்ற பெயரால் பெண்ணுரிமை காவு தரப்படவில்லை.
உச்சநீதிமன்றமே சொன்னாலும் சங்பரிவார் நஞ்சை உமிழாமல் நிறுத்திக் கொள்ளுமா? ஆனந்தவிகடன் இதழில் சொல்வனம் என்ற பகுதியில் .பொன்ராஜ் என்பவர் அந்த நாட்கள் என்ற அர்த்தமுள்ள சிறு கவிதை எழுதுகி றார். ‘அந்த மூன்று நாட்களில் கோவிலுக்குள் செல்வது தீட்டாகவே இருக்கட்டும். எந்த மூன்று நாட்களில் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள் இருக்காதெனக் கொஞ்சம் சொல்லவும். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த கவிதை முன் வைக்கப்பட்டதால், சங் பரிவார் தெய்வ நிந்தனை எனத் தகராறு செய்து புதிய தலைமுறை தொலைக்காட்சியை வருத்தம் தெரிவிக்க வைத்தனர். காலகாலமாய் பெண்ணை நிந்தனை செய்து வருபவர்கள்தான் தெய்வ நிந்தனை பற்றிப் பேசுகிறார்கள்.
அயனாவரம், ஆதரவற்றோர் இல்லங்கள்
அயனாவரத்தில் ஒரு மாற்றுத் திறனாளியான பெண் குழந்தையை, பலர் பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி உள்ளனர். அந்தக் குழந்தை, பல நாட்கள் கழித்து தன் சகோதரி டில்லியிலிருந்து வந்த பிறகே, அவரிடம் தன் மீது ஏவப்பட்ட வன்முறை பற்றிச் சொல்லி உள்ளது. நமது நீதித்துறைக்கு நடப்புக்கள் பற்றிக் கூருணர்வு இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி சுமத்தக் கூடாது, அவர்களை குற்றவாளியாக்கக் கூடாது என்ற எளிய உண்மை தெரியாமல், சாதாரண கூருணர்வு கூட இல்லாமல் போவது துரதிர்ஷ்டமே! கணவன் மனைவி தனித்தனியாய் பிரிந்து இருந்து குழந்தை வளர்க்கக் கூடாது என உபதேசம் செய்யும்போது, அயனாவரம் சம்பவத்தில், தாய் தன் மகளுக்கு பல நாட்கள் நடப்பதை எப்படி தெரிந்து கொள்ளாமல் இருந்தார் எனச் சாடி உள்ளது. குழந்தை அச்ச உணர்வில் தாயிடமும் சொல்லவில்லை. இப்படித்தான் தாக்குதலுக்கு உள்ளாகும் குழந்தைகள் அஞ்சுகிறார்கள், பெண்கள் தயங்குகிறார்கள் என்பது நாகரிக உலகம் அறிந்த செய்தி. மிகச் சுலபமாக பெண்ணை, தாயை குறை சொல்ல முடிகிறது?
குழந்தை மீது வன்முறை என்ற கொடிய குற்றத்துக்கு, வழக்கை விரைவாகவும் கவனத்தோடும் நடத்த வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமான விஷயமாகும். ஆனால் இந்த விஷயத்திலும், கும்பல் விசாரணை, ஊடக விசாரணை நடக்கிறது. விசாரணையே வேண்டாம், உடனே மரண தண்டனை,  நாமே தண்டிப்போம் என கற்றறிந்தவர்களே தண்டிக்கச் செல்வதும் நடந்தது. குற்றம் சுமத்தப்பட்ட எவரும், நிரூபிக்கப்பட்ட குற்றவாளி அல்ல. விசாரணையில் சாட்சியங்கள் மூலம் குற்றம் நிரூபிக்கப்படாத எவரும் குற்றம் செய்யாதவரே என்பதுதான், சட்டம் சொல்லும் சரியான அணுகுமுறையாகும். நமது நீதிபரிபாலன முறையும், ஏழைகள், உழைக்கும் மக்களுக்குப் சாதகமானது அல்ல. வெண்மணி குற்றவாளி கோபால கிருஷ்ண நாயுடு தப்பிக்க முடிந்தது. பதானி தோலாவில் தலித்துகளையும் இசுலாமியர்களையும் படுகொலை செய்த ரன்வீர் சேனா கொலையாளிகள் தப்பிக்க முடிந்தது. ஆனால், மாருதி தொழிலாளர்களுக்கு, பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை. எந்தக் குற்றத்துக்கும் நீதிமன்றம் சட்டப்படி விசாரித்து தண்டனை வழங்கட்டும். மரண தண்டனை, பாலியல் குற்றவாளிகளை தடுத்ததாக எந்த ஆதாரமும் இல்லை. பாலியல் குற்றவாளிகள் தப்பிக்க சாட்சியை அப்புறப்படுத்த கொலையும் செய்ய வாய்ப்புண்டு.
பீகார் முசாபர்பூர் ஆதரவற்றோர் இல்லம் அரசு அனுமதியுடன் நடைபெறுகிறது. இங்கு இருந்த, 10 முதல் 17 வயது வரை உள்ள, மாற்றுத் திறனாளி குழந்தை உட்பட, ஹெட் சார் என அழைக்கப்பட்ட பிரஜேஷ் தாகுராலும் மாவட்ட நலக்கமிட்டி தலைவர் திலீப் வர்மாவாலும் அவர்களால் அழைத்து வரப்பட்டவர்களாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கொடூரமான, வக்கிர மான சித்திரவதையும் சிறுமைப்படுத்துதலும் நடந்துள்ளது. நாடெங்கும் அரசியல் பலமும் அதிகாரமும் உள்ளவர்கள் ஆதரவற்ற பெண்களை, தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறார்கள். எந்தப் பெண்ணும் உடமை எனும்போது, ஆதரவற்ற பெண்களிடம் நினைத்தபடி நடந்து கொள்கிறார்கள். கண்காணிக்காத தடுக்காத அரசுகளும் கூட்டுக் குற்றவாளிகளே.
பிறர் மனைவியுடன் உறவு (அடல்டரி)
வெள்ளையர் ஆண்டபோது இந்திய தண்டனை சட்டத்தில் 158 ஆண்டுகள் முன்பு 397 பிரிவு இடம் பெற்றது. அடுத்தவர் மனைவி என அறிந்து, அப்படி நம்ப காரணம் இருக்கும்போது ஒருவர், அந்த அடுத்தவரின் சம்மதத்துடனோ அவர் கண்டும் காணாமல் இருக்கும் போதோ பாலியல் பலாத்காரம் இல்லாத விதத்தில் உடல் உறவு கொண்டால் அவர் மாற்றார் மனைவியுடன் உறவு கொண்ட குற்றம் புரிந்தார் ஆவார். 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். அவர் உறவு கொண்ட பெண் குற்றத்திற்கு துணை நின்றவர் ஆக மாட்டார். திருமணமான பெண்ணுடன் உறவு கொண்டால்தான் குற்றம். திருமணமாகாத பெண்ணுடன் உறவு கொண்டால் குற்றம் அல்ல. என் மனைவியோடு உறவு கொண்டாய் என கணவன்தான், புகார் தர முடியும். உறவு கொண்ட கணவனின் மனைவி, புகார் தர முடியாது.
மண உறவுக்கு வெளியில் உறவில் ஈடுபட்ட பெண் மீது வழக்கு போட முடியாது என்பதால், இந்த சட்டப்பிரிவு பெண் ஆதரவு பிரிவு அல்ல. இந்தப் பிரிவு பெண்ணை வெறும் உடமையாகவே பார்க்கிறது. கணவனுக்கு பாத்தியதைப்பட்ட பொருளை  அடுத்த ஆள் களவாடி விட்டார்! அத்துமீறிவிட்டார்! அப்பட்டமான இந்த ஆணாதிக்க பிரிவு, ஒரு வினோத வழக்கில் விடைபெறும் போல் தெரிகிறது. ஆணை மட்டும் தண்டித்தால் போதாது பெண்ணையும் தண்டிக்க வேண்டும் என்பதே, உச்சநீதிமன்றம் முன்பு வந்த வழக்கு. வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கனிவால்கர், சந்திரசூட் நாரிமன், இந்து மல்ஹோத்ரா விசாரித்தனர். 27.05.1985 அன்று சவுமித்ரி விஷ்ணு வழக்கில் நீதிபதி சந்திரசூடின் தந்தை, அப்போதைய தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட், அடல்டரி  சட்டப் பிரிவை நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது, நாடாளுமன்றம்தான் மாற்ற முடியும் என்றார். 2017 - 2018ல் உச்சநீதிமன்றம், அந்தரங்க உரிமை, ஒருபால் ஈர்ப்பு, அடல்டரி விஷயங்களில், நாகரிக உலகில் நுழையும் மனப்பக்குவமும் முதிர்ச்சியும் அடைந்துள்ளது.
நீதிபதி சந்திரசூட் இப்போது சொன்னது கவனிக்கத்தக்க விஷயமாகும். நாங்கள் எமது தீர்ப்புக்களை சம காலத்துக்கு பொருத்தமானவையாக மாற்ற வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள், சம்பாதிக்காத கணவர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள். அத்தகைய பெண் மணமுறிவை விரும்புகிறார். ஆனால் வழக்கு பல வருடம் நடக்கிறது. அது வரை அந்த பெண் வேறொரு ஆணின் காதலை, பாசத்தை, ஆறுதலை நாடுவதை மறுக்க வேண்டுமா?  நீதிபதிகள் அய்வருமே, வயது வந்த ஆணும் பெண்ணும், சம்மதத்துடன் உறவு கொள்வது தண்டிக்கத்தக்க குற்றமல்ல எனத் தெரிவித்து உள்ளனர். சமத்துவத்தைத் தலைகீழாக்கி தண்டனை ஆணுக்கு மட்டுமின்றி பெண்ணுக்கும் தரப்பட வேண்டும் என்ற ஆபத்தான, அபத்தமான வாதத்தை நிராகரிக்கின்றனர். மண உறவில் உள்ள தம்பதியரில் ஒருவர் மண உறவுக்கு அப்பால் உறவு கொண்டால், அது ஆண் பெண் இருவருக்கும் மண முறிவு பெற காரணமாக அமையும் எனச் சொல்லி உள்ளனர். வீடு அத்து மீறல் போல், மனைவி அத்துமீறல் (House Tresspass, Spouse Tresspass) என தலைமை நீதிபதி, வழக்கறிஞர்களின் சிரிப்பலையில் பேசியது ரசனைக் குறைவாகவும் ஆண் ஆதிக்க நீட்சியுமாகவே உள்ளது. தனி நபர் தொடர்பான முதிர்ச்சி காட்டியுள்ள உச்சநீதிமன்றம், பிரிட்டிஷ் கால தேசத்துரோகம் மற்றும் அவதூறு குற்றங்களையும், அவை குற்றங்கள் ஆகாது எனச் சொன்னால் நல்லது.
அம்மா பிம்பம் அகல வேண்டும் 
ஆண்மை தத்துவம் ஒழிய வேண்டும்
பெண் மீதும் பெண் உடல் மீதும் போர் தொடர்கிறது. குலைய வேண்டுமா குடும்ப அமைப்பு என டாக்டர் ராமதாஸ் தினமணியில் ஒரு கட்டுரை எழுதியபோது, மாலெ தீப்பொறி குலைய வேண்டும் குடும்ப அமைப்பு என அக்டோபர் 01 - 15, 2013 இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டது.
குடும்ப அமைப்பின் அச்சாணி  திருமணம் என்றும்,  குடும்பம் இயற்கையானது, அரசுக்கு முந்தையது என்றும் வாதாடுகிறார்கள். மானுடவியலோ, ஆதிகால மனிதர்கள், கணவன் மனைவி சகோதரன் சகோதரி போன்ற குடும்ப உறவுகளில் இருந்ததில்லை என்கிறது. ஆதியில் தாய்வழி பொது உடைமைச் சமூகம் இருந்தது. தனிச்சொத்து பிறந்தபோது, அதனை ஆணின் சந்ததியினர்க்கு மாற்ற குடும்பமும், சுரண்டலைக் காக்க, எதிர்ப்பவரை ஒடுக்க அரசும் உருவா யின. தனிச் சொத்து, குடும்பம், அரசு என்ற மூன்றும் ஆதி பாவங்கள். தனிச் சொத்தும் ஆண் வழி வாரிசுக் குடும்பமும் உருவானதுதான், பெண்ணின் ஆகப் பெரிய வரலாற்றுத் தோல்வியாகும். தனிச் சொத்து ஒழிக்கப்படும்போது, இன்றைய முதலாளித்துவ பொருளாதார விவகாரங்களில் பின்னிப் பிணைந்துள்ள குடும்ப அமைப்பின் உள்ளடக்கமும் வடிவங்களும், நிச்சயம் மாறும்.
குடும்பம், முதலாளித்துவ சுரண்டல் நடை பெறும் ஓர் இடமாகும். பெண்ணின் இலவச உழைப்பு, குடும்பம் மூலம் முதலாளித்துவத்தால் சுரண்டப்படுகிறது. குடும்ப அமைப்பு,  தொழிலாளியை அடக்கி மிரட்டி வைக்க உதவுகிறது. முதலாளித்துவமும் முதலாளித்துவ அரசும் தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை குடும்பத்தின் மீது சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்கின்றனர்.
ஆண் பெண் சமத்துவம் எப்படி வரும்? என்ன உடை அணிவது, எப்படி அணிவது, எப்படி நடப்பது, எப்படி குனிவது, என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது ஆதிக்கமே ஆகும். மாறாக பிள்ளைப் பிராயத்தில் இருந்தே ஆண்களுக்கு, பெண் வெறும் உடல் அல்ல, பெண்ணுக்கு சொந்த கருத்து வைத்திருக்க, சொந்த வாழ்க்கை வாழ, சொந்த தேர்வுகள் செய்ய, சொந்த தேவைகள் கொண்டிருக்க உரிமை உண்டு என்றும், பெண் வேண்டாம் என்றால் வேண்டாம் என்று மட்டுமே பொருள் என நினைத்து விலகி ஒதுங்க வேண்டும் என்றும், கற்றுத்தர வேண்டும். பெண்ணுக்கு தேவை அச்சமற்ற சுதந்திரம் எனவும், எந்த ஆணின் வீரமான பாதுகாப்பும் ஆதிக்கமே எனவும் புரிய வைக்கப்பட வேண்டும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் கணவன் மனைவி, தாய் தந்தை, சகோதர சகோதரி, காதலர்கள் உறவு தாண்டி நட்பும் தோழமையும் நிலவ முடியும் என்பது மட்டுமே மனிதர்களை மதிப்பதாகும் என உணர்த்தப்பட வேண்டும்.
தாய்மை, மகப்பேறு சம்பந்தமாக பெண் ஏன் அடிமையானாள் பிரசுரத்தில் பெரியார் எழுதியதை மீண்டும் நினைவில் கொள்வோம். இன்றைய நம் உலகில் ஆண் பெண் இருவரின்  சுயேச்சைக்கு கர்ப்பமாவதும் பிள்ளை பெறுவதும் இடையூறு ஆகிறது. அதிலும் பெண்ணின் சுயேச்சைக்கு கர்ப்பம் கொடிய விரோதியாகும். சொத்தும் வருவாயும் தொழிலும் இல்லாததால்  குழந்தைகளை வளர்க்க மற்றவர்கள் ஆதரவை எதிர்பார்த்தே தீர வேண்டி உள்ளது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிறோம். பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்கும் முன்னேற்றத்துக்கும் அவர்கள் பிள்ளை பெறுவதை நிறுத்த வேண்டும் என நாம் சொல்கிறோம்.
ஆண்மை தத்துவம் அழிய வேண்டும் என்கிறார் பெரியார். ஆண்மை தத்துவம் அழிய, ஆணாதிக்கத்தின் அடையாளங்களான அம்மா பிம்பமும் குடும்பத்தைப் புனிதம் எனக் கருதுவதும் மாற வேண்டும்.
பீகாரின் முசாபர்பூரின் அரசு காப்பகத்தில் சிறுமிகள் பாலியல்ரீதியாக தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி டாடா சமூகக் கல்வி நிறுவனம் முன்வைத்த அறிக்கை தொடர்பாக ஊடகங்கள் மவுனம் காத்தாலும் பீகார் மக்கள் பிரச்சனையை அரசியல் அரங்குக்கு கொண்டு வந்தார்கள். அந்த காப்பகத்தில் சிறுமிகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் ÷ன் 2 அன்று அம்பலத்துக்கு வந்தன. தங்கும் விடுதிகளில் உள்ள ஆண்களுக்கு இந்தச் சிறுமிகள் சப்ளை செய்யப்படுவது, காப்பகத்துக்கே ஆண்கள் பலர் வந்து செல்வது, எதிர்ப்பு காட்டும் சிறுமிகள் சிகரெட் நெருப்பால் சுடப்படுவது, கம்பிகளால் அடிக்கப்படுவது என பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஒரு சிறுமி இறந்துவிட்டதாகவும் காப்பகத்திலேயே புதைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கொடுமைகள் பற்றிய அறிக்கை 2018 பிப்ரவரியிலேயே அரசுக்கு தரப்பட்டபோதும், மே மாதம்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. காப்பகத்துக்குச் சென்ற முற்போக்கு பெண்கள் கழக குழு வெளியிட்ட அறிக்கை பற்றி ஒரே ஒரு தொலைகாட்சிதான் செய்தி வெளியிட்டது. ÷ன் 22 அன்று ஆயிரக்கணக்கான பெண்கள் முற்போக்கு பெண்கள் கழகத்தின் தலைமையில் பீகார் சட்டமன்றத்தை முற்றுகையிட்டனர். ÷லை 13 அன்று பெண்கள் அமைப்புகள் கூட்டாக பத்திரிகையாளர் கூட்டம் நடத்தி முதலமைச்சருக்கு திறந்த கடிதம் வெளியிட்டனர். இந்தச் செய்தியும் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. ÷லை 20 அன்று முற்போக்கு பெண்கள் கழகம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புகள் கருப்பு நாள் அறிவித்து பேரணி நடத்தின. சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல் நாள், இககமாலெ சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சனையில் எதிர்ப்பு தெரிவித்து ஒத்தி வைப்பு தீர்மானம் முன்வைத்தனர். இககமாலெயின் இந்த முயற்சிக்கு சில எதிர்க்கட்சிகளின் ஆதரவு இருந்தது. இந்தத் தொடர் எதிர்ப்புகளின் விளைவாக அரசு மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் 2 அன்று இடதுசாரி கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்த பீகார் முழுஅடைப்பில் பீகார் சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மா, பாஜக அமைச்சர் சுரேஷ் சர்மா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. முசாபர்பூர் காப்பகத்தில் 47 சிறுமிகள் இருப்பதாக அதிகாரபூர்வ விவரங்கள் சொல்கின்றன. இன்னும் மூன்று சிறுமிகளைக் காணவில்லை. அவர்கள் பற்றி தகவல் ஏதும் இல்லை. முழுமையான நீதி கிடைக்கும் வரை போராட்டங்களை தொடர இககமாலெயும் முற்போக்கு பெண்கள் கழகமும் பிற பெண்கள் அமைப்புகளும் உறுதியேற்றுள்ளன.

Search