COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 1, 2018

மோடி அரசாங்கத்தின் கொடூர அணுகுமுறையை 
அம்பலப் படுத்தியுள்ள கேரள வெள்ளம்

ரமேஷ் 



மலை நாடு கேரளா மழையால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது.
மலையாள நாட்டில் மழை பெய்தால் தங்காது, வழிந்தோடிவிடும் என்பார்கள். ஆனால், அங்குள்ளோர் தங்கள் ஆயுளில் பார்த்திராத மழை, விடாப்பிடியான தொடர் மழை, எல்லா இடத்திலும் பெய்த எல்லையில்லா மழை, இயற்கையின் சீற்றம் ஒட்டு மொத்த கேரள மாநிலத்தையே மூழ்கடித்துவிட்டது. வெள்ளம் வடிந்து விட்டபோதிலும் வீடுகளெல்லாம் சகதிப் புதைகுழிகளாக மாறியுள்ளன. 400க்கும் மேற்பட்டவர்கள் மரணமுற்றுவிட்டனர். ரூ.21,000 கோடிக்கு மேல் ஈடு செய்யவே முடியாத இழப்பு என்று கேரள அரசு சொல்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உழைத்துச் சம்பாதித்த அனைத்தையும் இழந்து மக்கள் தவிக்கிறார்கள். சாவை வைத்து சங்கம் வளர்க்கும் சங்கிகள் கூட்டம் மனிதாபிமான உணர்வு கொஞ்சமும் இன்றி, இது சபரிமலைச் சாஸ்தாவின் சாபம் என்கின்றன. சபரிமலைக்குள் எல்லா வயதுப் பெண்களும் போகலாம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் சொன்னதும் அதுவும் சரிதானே என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுமே இதற்குக் காரணமாம். சொன்னவர்களை, கேள்வி எழுப்பியவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஏது மறியாதவர்களையா பழி வாங்குவார் சாமி? மனிதன் (அவன் உருவாக்கிய) ஆகம விதிக்குப் புறம்பாக யோசித்ததால் இந்த பேரழிவு என வைத்துக் கொண்டாலும் சங்கிகள் வழிபடும் பசுவும் எருதும் மயிலும் மானும் கூட கூட்டங்கூட்டமாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு செத்தனவே அவை எந்தக் கோவிலுக்குள் செல்ல நினைத்ததால் இந்தச் சாபமோ? சாமி குத்தம், தெய்வ நிந்தனை, கடவுளின் சாபம் என்று சொல்லிச் சொல்லி பயமுறுத்தியே சாமான்ய மக்களை அடக்கியாண்ட கூட்டம் இன்றும் இந்த விஞ்ஞான யுகத்திலும்கூட அதையே சொல்லி ஆளத் துடிக்கின்றன. பிறப்பால் இசுலாமியரான மனுஷ்யபுத்திரன் இந்துத் தெய்வங்களைப் பற்றி, இந்து பெண்களைப் பேச என்ன உரிமை இருக்கிறது என்கிறார் எச்.ராஜா. இந்து என்று சொல்லிக் கொள்ளும் மோடியும் ராஜாவும் இஸ்லாமியப் பெண்களுக்காக முத்தலாக் பற்றி அக்கறை கொள்ள உரிமை உண்டென்றால், அதே உரிமை மனுஷ்யபுத்திரனுக்கும் உண்டுதானே.
ஒக்கிப் புயல் பாதிப்பை குமரி வந்து வரை படத்தில் பார்வையிட்டதுபோல, வயநாட்டிற்கும் வந்தார் மோடி. வானத்தில் வட்டமடித்தார். பேரிழப்புதான். 500 கோடி தருகிறேன் என்று அறிவித்தார். நான்கரை ஆண்டுகால மோடி ஆட்சியில் அவருக்கான விளம்பரங்களுக்கு மட்டும் இதுவரை 4300 கோடி ரூபாய் அரசாங்கத்தால் செலவு செய்யப்பட்டுள்ளது. இப்போது பெட்ரோல் பங்க்குகளில் மோடியைப் பாராட்டி விளம்பரம் வைக்கப்பட வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளதாம். மோடி உலகம் சுற்றிய வகைக்கு மட்டும் ரூ.1,484 கோடி செலவாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்கள் வந்துள்ளன. அம்மணச் சாமியார்கள் ஆட்டம் போடும் கும்பமேளாவிற்கு ரூ.4,200 கோடி, வீர சிவாஜி சிலைக்கு ரூ.3,600 கோடி, ஒற்றுமையின் சின்னம் என்று சொல்லி சர்தார் வல்லபாய் படேல் சிலையை கடலுக்குள் அமைப்பதற்கு ரூ.2,989 கோடி, கங்கை நதியைச் சுத்தமாக்க ரூ.4,000 கோடி, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் பயணம் செய்ய வாங்கப்பட்ட விமானங்களுக்கு ரூ.4469.5 கோடி என ஒதுக்கியுள்ள மோடி, கேரளாவிற்கு, அதி தீவிரப் பேரிழப்பு என்று அறிவிப்பு செய்து விட்டு வெறும் 600 கோடி ரூபாயை ஒதுக்கி விட்டு, மிச்சத்திற்குப் பிரார்த்திக்கிறாராம். யாரிடம்? சாபமிட்ட சாமியிடமேவா?
கேரள மக்களின் உழைப்பாலும் முன்னேறிய அரபு நாட்டு அரசு கேரளாவிற்காக 700 கோடி ரூபாய் தர முன்வந்தபோது, அதை வாங்கக் கூடாது என்கிறது மோடி அரசு. அது அரசின் கொள்கை முடிவாம். அதுவும் மன்மோகன் காலத்திலேயே எடுக்கப்பட்டுவிட்டதாம். தங்கள் முடிவல்லவாம். மன்மோகன் ஆட்சியை அவரின் கொள்கையை, திட்டங்களை விமர்சித்துதானே மோடி நாடாளுமன்ற வாசல் படியை நமஸ்காரம் செய்து அரியணை ஏறினார். மன்மோகன் இடத்தில் மோடி இருக்க லாமாம், மன்மோகன் அரசின் கொள்கை முடிவை மட்டும் மாற்ற மாட்டாராம். அய்முகூ அரசால் உருவாக்கப்பட்ட மும்பை - அகமதாபாத் புல்லட் இரயில் திட்டத்திற்கு தேஜகூ அரசு ஜப்பானிடமிருந்து ரூ.88,000 கோடி கடன் வாங்கும்போது, வெறும் ரூ.700 கோடி ரூபாயை அரபு நாட்டு அரசிடமிருந்து உதவியாகப் பெற்றால் என்ன தவறு? இதை ராஜாவிடம் கேட்டதற்கு, கடன் வாங்கினால் திருப்பிக் தந்துவிடுவோம். உதவி யாசிப்பது போல் ஆகாதா என்கிறார். ஆனால், மோடி நாடு நாடாகச் சென்று அம்பானிக்காகவும் அதானிக்காவும் பல லட்சம் கோடிகளை, சலுகைகளைப் பெற்றுக் கொடுத்து ஒப்பந்தம் மட்டும் போடலாமாம். அம்பானிக்கும் அதானிக்கும் இவர்களே கேட்டுவாங்கினாலும் அது பிச்சை கிடையாதாம். சாமான்ய மக்களுக்காக வெளி நாட்டு அரசுகள் தாங்களே தந்தாலும் பிச்சையாம். என்னவொரு மக்கள் நலச் சிந்தனை? தானும் கொடுக்கமாட்டார்கள். தருபவர்களையும் கொடுக்கவிடமாட்டார்கள்.
விமர்சனங்கள் வந்தவுடன், வழக்கம்போல் சங்கிக் கூட்டங்கள் அரபு அரசு ரூ.700 கோடி தருவதாக சொல்லவேயில்லை என்றதாக சமூக ஊடகங்களில் கதை கட்டி விட்டார்கள். மோடி, அரபு அரசரின் உதவிக்கு நன்றி என்று தன் சுட்டுரையில் சொல்லியுள்ளாரே அது பொய்யா என்று கேட்டவுடன் சத்தத்தைக் காணோம் சங்கிகளிடம் இருந்து.
ஒவ்வொரு முறையும் வெள்ளம் வந்துதான் சாதி, மதங்கள் தாண்டிய மனித நேயத்தை காட்ட வேண்டுமா? உயிர் போகும் நிலை வரும்போது உங்களுக்கு சாதியில்லை, மதமில்லை ஏதுமில்லை. இனி நான் சங்கிகளுக்காகப் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கேரள வெள்ளத்தில் இஸ்லாமியர்களோடும் கிறிஸ்தவர்களோடும் இணைந்து செயல்பட்ட, இது வரை ஆர்எஸ்எஸ் ஆதரவாளாக இருந்த முன்னாள் ராணுவவீரர், திரைப்பட இயக்குநர் மேஜர் ரவி என்பவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதுதான் எதார்த்தம்.
நிவாரணப் பணிகளில் உழைக்கிற மக்கள்
உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியும் அதானியும் முன்னேற நாடு நாடாக ஓடி ஓடி உழைக்கிற, மக்கள் பணம் ஆறாயிரம் கோடியை விழுங்கியவனை தப்ப விட்டு இங்கிலாந்து நீதிமன்றம் சொன்னது என்று மும்பைச் சிறையில் மல்லய்யாவுக்காக கக்கூஸ் கட்டுவதில் மும்முரமாயிருக்கிற, சிலைகளுக்காகவும் வெட்டி விழாக்களுக்காகவும் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை வெட்டியாய் செலவழிக்கிற மோடி வகையறாக்களும் நோக்கியா, பிரிக்கால், ஹ÷ண்டாய் நிறுவனங்கள் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி கொழுக்கச் செய்ய ஓவர் டைம் வேலை செய்யும் எடப்பாடி போன்ற எடுபிடி அரசுகளும் இருந்து கொண்டிருக்க, வெள்ளத்தில் மீட்புப் பணிகளிலும் வெள்ள நிவாரணப் பணிகளிலும் உழைக்கிற மக்களே உண்மையில் இருக்கிறார்கள். மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு கேரள அரசு தினமும் ரூ.3000 உதவிப் பணம் தருவதாகச் சொன்னதை வாங்க மறுத்துவிட்டனர் அந்த மீனவத் தொழிலாளர் கள். கொடையாளர் வேடம் போடும் கோவை பிரிக்கால் நிர்வாகத்தின் கொடுமைக்கு எதிராக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காக 144 தொழிலாளர்களுக்கு பகுதிக் கதவடைப்பு செய்து, அவர்கள் அதுபற்றி பேசக் கூட முடியாமல் காவல்துறை கொண்டு ஒடுக்கியபோதும், தங்கள் பிரச்சனையைக் காட்டிலும் கேரள மக்களின் துயரம்தான் பெரிது என்று கருதி, கேரள மக்களுக்காக நிவாரண நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கிய கோவை பிரிக்கால் தொழிலாளர்கள், 3 மணி நேரத்தில் ரூ.35,000 வசூலித்தார்கள். இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கு.பாரதி தலைவராக உள்ள கோஆப்டெக்ஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் ஊழியர் சங்கம் ரூ.5 லட்சம் தந்துள்ளது. சங்கிகள் போல், உத்தர்கண்ட்டிலும் கேரளாவிலும் குஜராத்திலும் எப்போதோ எடுத்தப் படங்களைப் போட்டும் இந்து போன்ற பத்திரிகைகள் மூலம் பொய்ப் பிரச்சாரமும் செய்து கொண்டிருக்காமல் உழைக்கிற மக்கள் உண்மையான உணர்வுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நிவாரணப் பணிகளில் இகக (மாலெ) மற்றும் வெகுசன அமைப்புகள்
இகக (மாலெ), ஏஅய்சிசிடியு, புரட்சிகர இளைஞர் கழகம், அவிகிதொச, அவிமச, அகில இந்திய மாணவர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் நாடெங்கிலும் கேரளாவின் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் கோவையில் ஆகஸ்ட் 18 அன்று பிரிக்கால் தொழிலாளர்கள் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்தனர். அந்த நிகழ்ச்சியின் இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி, கோவை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர்கள் தோழர் தாமோதரன், தோழர் லூயிஸ், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் சுரேஷ், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச்சங்கத்தின் நிர்வாகிகள் தோழர் நடராஜன், தோழர் ஜெயப்பிரகாஷ், தோழர் நாராயணன், தோழர் ரத்தீஷ், தோழர் பாபு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
21.08.2018 அன்று ஹ÷ண்டாய் பயிற்சித் தொழிலாளர்கள் இருங்காட்டுக்கோட்டை டோல்கேட் அருகில் கேரள மக்களுக்காக நிவாரண நிதி திரட்டியபோது, ஒரு மணி நேரத்தில் ரூ.10,212 திரட்ட முடிந்தது.
சென்னையில் 22.08.2018 அன்று அம்பத்தூர் பகுதியில் கட்சி மற்றும் தொழிற்சங்கம், மாணவர் கழகத் தோழர்கள் 15 பேர் நிவாரண நிதி ரூ.6,300 திரட்டினர். 23.08.2018 அன்று மாலை பாடி சரவணா ஸ்டோர்ஸ் முதல் பாடி காந்தி சிலை வரை ஓஎல்ஜி தொழிலாளர்கள், அய்சா தோழர்கள் உள்ளிட்ட 30 பேர் நிவாரண நிதி திரட்டினார்கள். 24.08.2018 அன்று செங்கல்பட்டு டோல்கேட் பகுதியில் ஹ÷ண்டாய் பயிற்சியாளர்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் உள்ள சவுந்தர்யா டெக்கரேட்டர்ஸ் தொழிலாளர்கள் ரூ.14,585 நிதி திரட்டினார்கள். 25.08.2018 அன்று மாலை அம்பத்தூர் அம்பேத்கர் சிலையில் இருந்து நிதி வசூலில் ஈடுபட்டார்கள். சென்னை இகக (மாலெ) செயலாளர் தோழர் சேகர், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல், ஏஅய்சிசிடியு நிர்வாகிகள் முனுசாமி, மோகன், அய்சா தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 25.08.2018 அன்று அம்பத்தூர் உழவர் சந்தை முதல் அம்பத்தூர் அம்பேத்கர் சிலை வரை நிதி திரட்டும் பணியில் சிபிஅய் எம்எல், அம்பத்தூர் ஏஅய்சிசிடியுவின் ஓஎல்ஜி கிளை, ஜெய் இன்ஜினியரிங், வெல்மெக், அய்சா தோழர்கள் ஈடுபட்டார்கள். 26 பேர் கலந்து கொண்டு ரூ.4,262 நிதி திரட்டினர். ஹ÷ண்டாய் தோழர்கள் மற்றும் புரட்சிகர இளைஞர் கழகத் தோழர்கள் தோழர் ராஜகுரு தலைமையில் பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் திருபெரும்புதூர் டோல்கேட்டில் வெள்ள நிவாரண நிதி ரூ.10,800 வசூல் செய்தனர்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநில அமைப்பாளர் தோழர் பாரதி தலைமையில் தோழர் சங்கர், அதியமான் உள்ளிட்ட தோழர்கள் வெள்ள நிவாரண நிதியாக ரூ.10,290 திரட்டினர். 26.08.2018 அன்று 17 தோழர்கள் ஆவடி மார்க்கெட் பகுதியில் ரூ.6,300 நிதி திரட்டினார்கள். இகக (மாலெ) தோழர் கே.வேணுகோபால் குடும்பத்தினர் ரூ.4,000 நிதியாக வழங்கினர். குணால் தோழர் ஏ.எல்.துரைராஜ் ரூ.1,000 நிதி வழங்கினார். ராணே பிரெக்ஸ் தோழர் டில்லி மற்றும் அவரது குடும்பத்தினர் பாலமுருகன், பாலகணேஷ், பிருந்தா ரூ.575 நிதியாக வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி ஒன்றியத்தில் தோழர் விஜயன் தலைமையிலும் புஇக தோழர் திருமேனிநாதன் தலைமையிலும் நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் தலைமையில் தோழர்கள் தொடர்ச்சியாக கேரள வெள்ள நிவாரண நிதி திரட்டினர். விழுப்புரம் மாவட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் செண்பகவள்ளி தலைமையில் நிதி திரட்டப்பட்டது. சேலத்தில், கரூரில் வெள்ள நிவாரண நிதி திரட்டப்பட்டது.
25.08.2018 அன்று நெல்லை பேட்டையில், 24.08.2018 டவுன் பஜார் மற்றும் பேருந்து நிலை யத்தில் இகக (மாலெ) தோழர்கள் கணேசன், அன்புச்செல்வி, மீனாட்சி, சுப்பிரமணியன், முத்துராமலிங்கம் உள்ளிட்ட தோழர்கள் வசூலில் ஈடுபட்டனர். 22.08.2018 அன்று நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பாக தோழர்கள் சுந்தர்ராஜ், மாரிமுத்து பேச்சிராஜா ரூ.5,000 வசூல் செய்தனர்.
ஆகஸ்ட் 16 அன்றே கேரளா வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களுக்குத் தேவையான பொருட்களுக்கான நிதியைத் திரட்ட கன்னியாகுமரி தோழர்கள் இறங்கிவிட்டனர். குமரி மாவட்டத்தில் அரிசி 1420 கிலோ, பாசிப்பயறு 44 கிலோ, சிறு வெங்காயம், வெந்தயம், உப்பு, பூண்டு, உருளைக்கிழக்கு, பிளிசிங் பவுடர், பிஸ்கட், பாக்கட் சோப்பு, லுங்கி, சட்டை, சுடிதார், தண்ணீர் பாட்டில்கள், பேஸ்ட், பிரஸ், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி சுருள், ரொட்டி, மருந்துகள், பாய், தீப்பெட்டி என ரூ.1,80,000க்கான பொருள்களுடன் இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் அந்தோணிமுத்து, மேரிஸ்டெல்லா, மற்றும் தோழர்கள் சுசீலா, கார்மல், அய்யப்பன், மணவை கண்ணன் ஆகியோர் கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடியில் ஏஅய்சிசிடியு தோழர்கள் சிவராமன், சகாயம் மற்றும் முருகன் தலைமையில் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கேரள மக்களுக்காக தமிழ்நாட்டின் இகக மாலெ மற்றும் அதன் வெகுமக்கள் அமைப்புகள் இது வரை ரூ.9 லட்சம் வரை நிதியாகவும் பொருட்களாகவும் நிவாரணம் வழங்கியுள்ளனர். இது ரூ.10 லட்சம் வரை போக வாய்ப்புள்ளது. இது தவிர நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இகக மாலெ மற்றும் அதன் வெகு மக்கள் அமைப்புகள் கேரளத்துக்கு நிதி அனுப் பியுள்ளனர். கேரளத்தில் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இகக மாலெ தோழர்கள் மூலமும் கேரள முதலமைச்சர் நிவாரண நிதி மூலமும் இகக மாலெயின் பங்களிப்பு பாதிக்கப்பட்ட மக்களை சென்று சேர்ந்துகொண்டிருக்கிறது.
ஓர் இடதுசாரி அரசாங்கம் என்பதற்காக, அங்குள்ள மக்கள் சாகட்டும் வேடிக்கைப் பார்க்கிறேன் என்ற அணுகுமுறையை வெளிப்படுத்தும் ஒரு கொடூரமான அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி அனுப்பாதீர்கள் என்று சொல்லும் அந்த அரசின் ஆதரவாளர்கள் என இது வரை எந்த இயற்கைப் பேரழிவிலும் பார்க்காததை நாடு பார்த்தது. கேரள வெள்ளமும் தன் பங்குக்கு நரவேட்டை நரேந்திர மோடி அரசின் முகத்திரையை கிழித்து விட்டுச் சென்றுள்ளது. அனைத்தையும் இழந்துவிட்ட கேரள மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் மிகக் கடினமான, துன்பமான கட்டத்தின் ஊடே சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் அதே நேரம், மக்களை வஞ்சிக்கும் மோடி அரசின் சாவு வியாபாரத்தையும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

Search