COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 15, 2018

பாசிச பாஜக ஆட்சி ஒழிக!
ஜனநாயகம்  வெல்லட்டும்!

எஸ்.குமாரசாமி

ஆராய்ச்சி மாணவர் சோஃபியா, தூத்துக்குடி படுகொலை உள்ளிட்ட அநீதிகளுக்கு பாஜகவே காரணம் என்பதால், பாஜக தமிழ்நாடு தலைவர் தமிழிசையை கண்டவுடன், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்றார்.
அவரது குரல் தமிழகத்தின் குரல். அவரது குரல் இந்தியாவின் குரல். இந்தியாவில் ஜனநாயகம்  பிறந்ததிலிருந்தே குறைவளர்ச்சி ஜனநாயகம்தான். அம்பேத்கர், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மேல் பூச்சு அலங்காரமே என்றும், அதன் அடிமண் ஜனநாயக விரோதமானது என்றும் சொன்னார். இங்கே சமத்துவமும் ஜனநாயகமும் சம்பிரதாயமானவை, பெயரளவிலானவை, ஒப்புக்கானவை என்ற அவரது குற்றச்சாட்டிலிருந்து, இந்திய ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும், வரலாறு, இதுவரை விடுதலை செய்யவில்லை.
நாட்டு விடுதலைக்காக போராடிய கப்பல் படை வீரர்களுக்கு, சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கிய, இந்திய தேசிய ராணுவத்தினருக்கு, ஜனநாயக இந்தியா அதன் துவக்க காலத்திலேயே கூட கவுரவம் தரவில்லை. நியாயம் வழங்கவில்லை. வீரத் தெலங்கானா விவசாயப் புரட்சியாளர்களும் அவர்களை வழிநடத்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களும் சுதந்திர இந்தியாவின் ராணுவத்தால், ஜனநாயக அரசால் வேட்டையாடப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டனர். சேலம் சிறையில் கொடூரமாக கம்யூனிஸ்ட்களைக் கொன்றதும் சுதந்திர ஜனநாயக இந்திய அரசுதான். இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பாளர்களும், ஜனநாயக இந்தியாவால்தான் கொல்லப்பட்டார்கள். வாழ்வாதாரத்துக்காக ஜனநாயகத்துக்காக போராடியவர்கள் எல்லாம், ஜனநாயக இந்தியாவால் வேட்டையாடப்பட்டார்கள்.
இந்தியாவின் நீதிபரிபாலன முறை, ஆட்சி முறை, நிர்வாக முறை, ஆயுதப்படைகள் ஆகிய அனைத்துமே துவக்கத்திலிருந்தே அடிமை ளை ஒடுக்கும் காலனிய நாட்டு பாணியிலேயே இருந்தன. கேடுகெட்ட மெக்காலே கல்வி முறை முதல் சட்டங்கள் வரை, காலனிய எசமானர்கள் கொண்டு வந்தவற்றையே, இந்திய ஆட்சியாளர்களும் தொடர்ந்தனர். துவக்கத்திலிருந்தே, இங்கு நவீன ஜனநாயக குடியரசும் இல்லை. சுதந்திரமான உரிமை உள்ள குடிமக்களும் இல்லை. ஒடுக்குமுறைச் சட்டங்கள், தடை உத்தரவுகள், மேல் கீழ் இறுக்கத்துடனான சாதி ஆதிக்க ஆணாதிக்க கட்டமைப்பும், குறை வருமான வாழ்வை முடக்கும் நிலைமைகளும், இந்திய ஜனநாயகத்தின் வேர்களில் விஷம் பாய்ச்சின.
நக்சல்பாரி கவிஞன் செரபண்ட ராஜ÷, ஜனநாயக மறுப்பையும், அந்த மறுப்பை எற்க மறுக்கும், அதற்கு அடங்க மறுக்கும், அஞ்ச மறுக்கும் எதிர்ப்பையும், எழுச்சிக் கவிதை ஒன்றில் எடுத்துச் சொன்னான்.
எனது சிந்தனையின் வெப்பத்தை
அழிப்பதற்கு
என் நிழல்களைக் கூட
பின்தொடரும் போலீசார்
அப்பாவியாக வானத்தை
நான் பார்க்கும்போது
எனது கண்களை அளக்கிறார்கள்
முரண்டு பிடிக்கும்
எனது புரட்சிப் பாடலை
கைப்பற்றுவதற்கு
எனது காலடித் தடத்தின் தூசியை
ஆய்வகத்துக்கு அனுப்புகிறார்கள்
உங்களுக்கும் எனக்கும் உணர்வூட்டும்
மானுட விளக்குகளை
அணைப்பதற்கு
முயற்சி செய்கிறார்கள்
நான் பார்க்க வெறுக்கும்
கழிவுகளை அகற்றுவதற்குப் பதிலாக
எனது கண்களை பிடுங்க முயற்சி செய்கிறார்கள்
குழந்தைகளை நான் முத்தமிடும்போது
அவர்களின் கன்னத்து ஈரத்தை
கத்திகளால் சுரண்ட முயற்சி செய்கிறார்கள்
எனது குரல் ஒரு குற்றம்
எனது சிந்தனை அராஜகம்
ஏனெனில்
அவர்களது தாளத்துக்குப் பாடுவதில்லை நான்
எனது தோள்களில் அவர்களைச் சுமப்பதில்லை நான்
இந்திய ஜனநாயகம் குறைவளர்ச்சியுடன் பிறந்தது. வளர்ந்தது. அது பிழைத்திருப்பது இந்திய மக்களால். இந்திய ஆட்சியாளர்கள், அதனை எப்போதுமே குற்றுயிரும் குலையுயிருமாய்க் குதறிப் போடுகிறார்கள்.
இந்திராவே இந்தியா இந்தியாவே இந்திரா என துதிபாடிகள், பாகிஸ்தானைப் பிளந்த இந்திரா காந்தியை, இந்திய துர்கையாக வழிபட்ட காலங்களில், அவரது சோசலிச முற்போக்கு முகமூடி, வங்கி தேசியமயம், மன்னர் மானிய ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என்ற அனைத்தும் வாய்ச்சவடால்கள் என, மக்கள் உணர்ந்த போது, நாறு நாறாய்க் கிழிந்து தொங்கியது. ஆட்சிக்கு நெருக்கடி. நீதிமன்றத் தீர்ப்பால் நாடாளுமன்றப் பதவி இழந்த இந்திரா, நெருக்கடியில் இருந்து மீள, நெருக்கடி நிலையை, அவசர நிலையை கொண்டு வந்தார். உள்நாட்டு கலவரம் எனக் காரணம் சொல்லி, வலதுசாரி ஆபத்து எனக் கூப்பாடு போட்டு, அவசர நிலை கொண்டுவந்த இந்திரா, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறை வைத்தார். பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறித்தார். உயிர் வாழும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைத் தற்காலிகமாய் நீக்கினார். நக்சல் வேட்டையும் நடந்தது.
ஆட்சியாளர்கள் ஜனநாயகப் பறிப்பில் ஈடுபட்டபோது, ஜனநாயகத்தை விரிவுபடுத்த, ஆழப்படுத்த, பலப்படுத்த இந்திய மக்கள் போராடினார்கள். ஒரு கட்டம் வரை, அந்தப் போராட்டத்தில் வென்றார்கள்.
உள்நாட்டுக் கலகம் எனக் காரணம் சொல்லி அவசர நிலை கொண்டுவரும் சட்டப்பிரிவு அகற்றப்பட்டது. நீண்டகால சிறைவாசிகள் பலர் விடுதலையாயினர். கொஞ்சம் நன்றாகவே சுதந்திரக் காற்று வீசியது. மக்கள் சிவில் உரிமை அமைப்புகளும் மக்களின் வர்க்க அமைப்புகளும் குடியிருப்பு பகுதிகள் அமைப்புகளும் பரந்து விரிந்து உருவாயின. வேர்க்கால்கள் வரை ஜனநாயக தாகம் எழுந்தது.
எப்போதும் ஜனநாயகம் குறுகலாகவே இருந்தது, இப்போது என்ன புதிதாக மாறி விட்டது என பாசிச கால ஜனநாயக மறுப்பை நாம் குறைத்து மதிப்பிடலாமா? நிச்சயம் முடியாது. இன்று அறிவிக்கப்பட்ட அவசர நிலை இல்லை. அறிவிக்கப்பட்டு அடிப்படை உரிமைகள் தற்காலிக நீக்கம் செய்யப்படவில்லை. மிகச் சரியே.
ஆனால், அரசியல் சட்டத்தின் அடிப்படையையே ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்கள். அம்பேத்கர் ஸ்மிருதி என அரசியலமைப்புச் சட்டத்தை நையாண்டி செய்யும் சங் பரிவார், மனுஸ்மிருதியை கொண்டு வரப்பார்க்கிறது. 2025ல் இந்து ராஷ்டிரா என வெறியுடன் முன்னேறுகிறது. புராணத்தை, இதிகாசத்தை வரலாறு என நம்பச் சொல்கிறது. நீதிமன்றம் எங்கள் கையில், அயோத்தியில் ராமர் கோயில் எனக் கொக்கரிக்கிறது. கும்பல் படுகொலைகளுக்கு இசுலாமியர்களும் தலித்துகளும் ஆளாவது, பெண்கள் மீதான வன்முறை, குறிவைத்த கொலைகள், முடிவே இல்லாத தொடர்கதை ஆகிவிட்டன. கல்வி, கலாச்சாரம், வரலாறு, மொழி, இஆப, இகாப பணிகள், ஆராய்ச்சி, நீதி பரிபாலனம், ஆட்சிமுறை, காவல்துறை, ராணுவம் என கார்ப்பரேட் செல்வாக்கும் காவி இருளும் பரவிப் படர்ந்துள்ளதுதான், இந்திய ஜனநாயகம் சந்திக்கும் அதிகபட்ச ஆபத்தாகும். உள்ளுக்குள் காவி கரையான் படை புகுந்து அரிக்கிறது.
நிச்சயமாக, வரலாறு பாடம் கற்பிக்கவே செய்கிறது. யார் என்ன கற்கிறோம் என்பது மட்டுமல்லாமல், வரலாற்றுக்குப் பாடம் கற்பிப்பதும் கூட முக்கியமே. மாபெரும் உலகப் பொருளாதார நெருக்கடிகள், இடது வலது திசை பாதைகளை முன்வைத்திருக்கின்றன. 1917ல் உலகம் சக்திவாய்ந்த ஓர் இடது திசை பயணத்தை மேற்கொண்டது. சோசலிச சோவியத் உருவானது. 1930களின் நெருக்கடியில் நாஜிக்களும் பாசிஸ்ட்டுகளும் உருவாயினர். 1940களில் சீனம் சிவந்தது. 1980களில் சோசலிச முகாம் சரிந்தது. சீனம் நிச்சயமாய் மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்கு, இன்று நம்பிக்கை தரும் முன்மாதிரி அல்ல. அய்க்கிய அமெரிக்காவில், ஹங்கேரி, ஆஸ்திரியா, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளில், ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற அரசியல், இசுலாமிய எதிர்ப்பை, குடியேறுபவர்கள் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட வலதுசாரி தேசிய அரசியல் தலையெடுத்துள்ளது. வலதுசாரி அரசியல் பரவிப் படர்வதுடன், ஒரு நம்பிக்கை வறட்சியும் பரவுகிறது.
இந்தியாவில் பாசிச எதிர்ப்பு எப்படி இருக்க வேண்டும்? சீனம் பாகிஸ்தான் விஷயங்களில் பாஜகவுடன் காங்கிரஸ் போட்டி போடும். அரசியல் நிகழ்ச்சிநிரலை, தான் தீர்மானித்து, மற்றவர்களை அம்பேத்கர் மொழியில் ‘போலச் செய்ய’ வைக்கிறது பாஜக. இருக்கவே இருக்கிறது கார்ப்பரேட் கருத்தொற்றுமை. ஆனால் பன்மைத்துவ இந்தியாவில், ஒற்றைத் தன்மையைத் திணிக்கும் பாஜகவின் முயற்சி கட்சிகளிடம் மக்களின் மிகப் பெரும் பிரிவினரிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி கட்சிகள் கூட சங்கடப்படும் நிலை உள்ளது.
ஏழைத்தாயின் புதல்வர், கங்கையின் மைந்தர், வளர்ச்சியின் நாயகர் முகமூடி கிழிந்து, மோடி, இந்திரா காந்தியாக, இந்திய ஹிட்லராக தோற்றம் அளிக்கத் துவங்கிவிட்டார். தண்டனை பற்றிய அச்சம் இல்லாமல் சங் பரிவாரங்கள் திரிகிறார்கள்.
சவாலோடு வாய்ப்பும் வருவதுபோல், அவர்கள் ஒருபக்கம் மக்கள் மீது போர் தொடுத்தாலும், மோடியும் மோடி பக்தர்களும் மக்களைக் கண்டு அஞ்சுவதும் நடக்கிறது. நாளும் வாழ்வுரிமை பறிக்கப்பட்டாலும், நாளும் வதை பட்டாலும், நாளும் வேட்டையாடப்பட்டாலும், நாளும் கொல்லப்பட்டாலும், மக்கள் திமிறி எழுந்து திருப்பி அடிக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் மோடியின் தயவில் நடக்கும் ஊழல், சூறையாடல், ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராக மக்கள் சவால்விட்டு திரும்பத் திரும்ப போராட்டங்களில் எழுகிறார்கள்.
எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத, எல்லா அறிவிப்புக்களும் மோசடிகளே என நிரூபித்துள்ள இந்த அரசாங்கத்திற்கு, ‘கெட்ட காலம்’ துவங்கிவிட்டது. தேர்தல் முனையில், மோடி பாஜக சங் பரிவார் எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல், அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரம் நாம் சாத்தியமானதை மட்டுமல்லாமல் அவசியமானதைச் செய்யத் தயாராகி மக்களையும் தயார்படுத்த வேண்டும். பாசிசம் வீழ ஜனநாயகம் வெல்ல, நிகழ்காலப் போராட்டங்களில் எதிர்கால நலன்களை நுழைத்தாக வேண்டும்.
உதாரணமாக சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்ட சிறைவாசத்தை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றம், அந்தரங்க உரிமை, பிறன்மனை விழைவு, கோவில் நுழைவு, தன்பால் ஈர்ப்பு உறவு பிரச்சனைகளில் முதிர்ச்சியுடனும் காலத்திற்கேற்பவும் தீர்ப்பு வழங்கி உள்ள உச்சநீதிமன்றம், காலனிய தேசவிரோதச் சட்டப்பிரிவை, அவதூறு பிரிவை நீக்க வேண்டும் என கோர வேண்டும். நிலம், ஜனநாயகம், சுதந்திரம், கல்வி, மருத்துவம், நல்வாழ்க்கை, நல்ல சம்பள நிரந்தர வேலைகள், பெண்கள் சிறுபான்மையினரின் அச்சமற்ற சுதந்திரம், தலித் உரிமைகள் போன்ற, மக்கள் சார்பு நிகழ்ச்சிநிரல், கோரிக்கைகள் முன்வருவதும் அவற்றின் மீதான போராட்டங்கள் வலுப்பெறுவதுமே, பாசிசத்தை வீழ்த்த, ஜனநாயகத்தை ஆழப்படுத்த, விரிவுபடுத்த, பலப்படுத்த உதவும்.

Search