COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 1, 2018

அன்று அறிவிக்கப்பட்ட அவசர நிலை முறியடிக்கப்பட்டது
இன்று அறிவிக்கப்படாத அவசர நிலையை முறியடிப்போம்

எஸ்.குமாரசாமி

இந்தியா எழுந்து நின்றது
தலைசிறந்த மனித உரிமைப் போராளிகளை, மக்கள் சார்பு சிந்தனையாளர்களை, கவிஞரை, மக்கள் உரிமை வழக்கறிஞரை, புனே காவல்துறை ஆகஸ்ட் 28 அன்று கைது செய்தது.
பல மாநிலங்களில் வேட்டையும் சோதனையும் நடத்தியது. இந்த முறை நாடெங்கும் கண்டனம் எழுந்தது. பஞ்சாப் அரியானா, டெல்லி உயர்நீதிமன்றங்களும் இந்திய உச்சநீதிமன்றமும் தலையிட்டன. கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர்கள் சுதா பரத்வாஜ், அருண் பெரேராவை, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கவுதம் நவலாகா, வெர்னான் கன்சால்வஸ் ஆகியோரை சிறையில் அடைக்காமல் 06.09.2018 வரை வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதிமன்றம் 29.08.2018 அன்று உத்தரவிட்டது. இவர்கள் மோடி கொலைச்சதி வழக்கில் உயிர் தப்பினர். மோடியைக் கொல்லப் பார்த்தார்கள் என்று சொல்லிதான் குஜராத்தில் இஷ்ரத் ஜஹானும் அவருடன் இருந்தவர்களும் சோராபுதினும் கொல்லப்பட்டனர்.
முதலமைச்சராய்ச் செய்ததைப் பிரதமராய்ச் செய்ய முடியாமல் போனது. கவிஞர், பத்திரிகை ஆசிரியர் மனுஷ்ய புத்திரன், நானும் நகர்ப்புற நக்சல் என்ற கவிதை எழுதினார். நக்சல்பாரி இயக்கத்தோடு தொடர்பில்லாத ஜனநாயக சக்திகள் நானும் நகர்ப்புற நக்சல் என சுட்டுரை செய்தனர். எதிர்ப்பாளர்கள் மீது தேச விரோதிகள் என சுமத்தப்பட்ட முத்திரை இப்போது அரை மாவோயிஸ்ட்கள், நகர்ப்புற நக்சல்கள் என்ற முத்திரை ஆனது. இந்த முத்திரை கொண்டு, ஒடுக்குமுறை தடி கொண்டு, பாசிச சக்திகள் எதிர்ப்பை நசுக்கத் தயாரானார்கள். யாரும் தூர விலகிச் செல்லவில்லை. பயந்து பின்வாங்கவில்லை. மாறாக திருப்பி அடித்தனர். அந்த முத்திரையைப் பெருமையுடன் சுமந்தனர். இந்தப் பெயர் கம்பீரமாக இருக்கிறது என்றனர். இந்தியாவில் ஓர் அற்புதமான ஸ்பார்டகஸ் தருணம் நிகழ்ந்தது. ஸ்பார்டகஸ் ஹாலிவுட் படத்தில் ஒரு காட்சி வரும். ரோமாபுரி சாம்ராஜ்யம், கைது செய்யப்பட்ட அடிமை புரட்சியாளர்களிடம் யார் ஸ்பார்டகஸ் என்று சொல்பவர்களை விட்டு விடுவதாகச் சொல்கிறது. உயிருக்கு அஞ்சாமல் எல்லோரும் நான்தான் ஸ்பார்டகஸ் என்றார்கள். இன்று, நானும் நகர்ப்புற நக்சல் என இந்தியர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏன் இந்த கைதுகள்?
பிரித்தாளும் சூழ்ச்சிபோல், திசை திருப்பி ஆளும் சூழ்ச்சி என்பதும் சங் பரிவாரின் அரசாட்சிக் கோட்பாடு என்று அருந்ததி ராய் சரியாகவே சொல்கிறார். வெகுமக்களை ஏமாற்றும், திசை திருப்பும் கருத்தாயுதங்கள் பாசிஸ்டுகளுக்கு வேண்டும்.
பண மதிப்பகற்றும் நடவடிக்கை இந்த தேசத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மோசடி, சாமான்ய மக்களின் வாழ்க்கை மீது, வேலை வாய்ப்புகள் மீது தொடுக்கப்பட்ட போர் என்பது, ஆகஸ்ட் இறுதியில் வெளியாகியுள்ள ரிசர்வ் வங்கி அறிக்கையில் அப்பட்டமாக அம்பலமாகிவிட்டது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் 99.3% திரும்ப வந்துவிட்டன. கருப்புப் பணம் எங்கும் போகவில்லை. மறையவில்லை. வெள்ளையாய் உள்ளது.
ஆண்டில் 2 கோடி வேலைவாய்ப்புகள், விவசாய வருமானம் இரட்டிப்பு எல்லாம் பொய் என்றானது. ஜிஎஸ்டியும் வேலையை, வியாபாரத்தை, சிறு தொழில்களைத் தாக்கியது.
ஒரு பக்கம் தலித்துகள் இசுலாமியர்கள் கும்பல் படுகொலைகளுக்கு உள்ளாவது, பாஜக கூட்டாளிகளையே நெளிய வைக்கும்போது, இந்துத்துவா அமைப்பான சனாதன் சன்ஸ்தான்தான், கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரை படுகொலை செய்ததாக புலன் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
எல்லா முனைகளிலும் மோடி அரசு குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டபோதுதான், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள் மீது, ஜனநாயக உரிமைகள் மீது, கொலைச் சதி என குற்றம் சுமத்தப்பட்டு போர் தொடுக்கப்பட்டது.
பிரச்சனைகளின் துவக்கம்
ஜனவரி 1, 1818ல் மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் மேல்சாதி, பார்ப்பன, பெஷாவா தளபதிகள் தலைமையிலான படைகளை தலித் படைவீரர்கள் தோற்கடித்தனர். இந்த நாளை, தலித்துகளின் சுயமரியாதை, கவுரவம், சமத்துவம் மற்றும் அறுதியிடலுக்கான நாளாக டாக்டர் அம்பேத்கர் அனுசரிக்கத் துவங்கினார். பீமா கொரேகான் போரின் 200ஆம் ஆண்டு 01.01.2018 அன்று அனுசரிக்கப்பட்டது. 3 லட்சம் பேர் திரண்டனர். அவர்கள் திரும்பிச் செல்லும்போது சம்பாஜி பிடே, மிலிந்த் ஏக்போடே ஆகியோர் தலைமையிலான இந்துத்துவ அமைப்புகள், அவர்கள் மீது, கொடூரமான தாக்குதல்கள் நடத்தினர். தாக்குதல் நடத்திய இந்துத்துவ தளபதிகளை காவல்துறை மென் மையாக அணுகியது. ஆனால் பீமா கொரேகான் செய்தியை உயர்த்திப் பிடிக்க 31.12.2017 அன்று புனேயில் நடத்தப்பட்ட எல்கர் பரிஷத் கூட்டத்தை, காவல்துறை பயங்கரவாத கூட்டமாக சித்தரித்தது. இதனை அடுத்துதான் ஜ÷ன் துவக்கத்தில் ரோனா வில்சன், சுரேந்திர கட்லிங், சுதிர் தவாலே, மகேஷ் ராவுத், சோமா சென் என பிரபல மனித உரிமை செயல்பாட்டாளர்களை கைது செய்தது. அப்போது, மனுஷ்ய புத்திரன் கவிதையில் சொல்வதுபோல், ஒரு போலி சதி கடிதத்தை நூறு பிழைகளுடன் தயாரிக்க வேண்டும், அதில் ஒழிக்க விரும்புபவர்களின் பெயர்களை வரிசையாக எழுத வேண்டும் என்ற அடிப்படையில், ரோனா வில்சன் மடிக்கணினியில் மோடியை கொல்வதற்கான சதி பதிவாகி இருப்பதாகச் சொல்லப்பட்டது. பொது நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுபோல், நரேந்திர மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாக வழக்கு புனையப்பட்டது. நாட்டின் பிரதமரை கொல்ல சதி பற்றி ஜ÷ன் மாதம் தெரிந்தவர்கள், அரசல் புரசலாக அதுதான் காரணம் என வெளியே கசியவிட்டு, மிகவும் தாமதமாக ஆகஸ்ட் 28 அன்று மக்கள் நலன் காக்கும் அய்ந்து பேரை கைது செய்தனர். இவர்கள் எவரும் 31.12.2017 புனே எல்கர் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, அந்தக் கூட்டத்திற்கு பணம் திரட்டவில்லை, கூட்டத்தை நடத்தவில்லை. அந்தக் கூட்டத்தை எல்லா விதங்களிலும், தாங்களே ஏற்பாடு செய்ததாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, பி.பி.சவந்தும் முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சே பாட்டிலும், தெரிவித்தனர். எல்கர் பரிஷத் கூட்டத்தை ஒட்டி, ஜனவரி துவக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்த அய்வரின் பெயரும் இடம் பெறவில்லை. அச்சத் தின் குடியரசை நிறுவவே, இந்த கைதுகள் நடந்துள்ளன. தலித்துகள் பழங்குடியினர் நலன் காப்பவர்களுக்கு எதிரான இந்த கைதுகள், மோடி அரசு, ஒடுக்கப்பட்ட மக்களின் விரோதி என மீண்டும் உறுதி செய்துள்ளன.
நீதிமன்றங்களில் என்ன நடந்தது?
பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் சுதா பரத்வாஜை சிறை செய்து புனேக்கு அழைத்து செல்ல தடை விதித்தது. டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் முரளிதர் மற்றும் வினோத் கோயல் அமர்வத்தின் முன்பு வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன், கவுதம் நவலாகாவுக்காக வழக்காடினார். மாநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மராத்தி மொழி தெரியாதபோது மராத்தியிலுள்ள ஆவணங்களை பார்த்து எப்படி புனேக்கு ரிமாண்ட் செய்ய அனுமதி தந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மகாராஷ்டிராவிலிருந்து வந்த சாட்சிகளை எப்படி பயன் படுத்தினர் என்றும் கேள்வி எழுப்பினர். விடுதலை செய்ய தயாராகி உத்தரவை சொல்லிக் கொண்டிருந்தபோது, உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது என்ற தகவல் வர உடனே நிறுத்திக் கொண்டனர்.
ஜனநாயக உரிமைகள் மீது போர் என்பதால் உச்சநீதிமன்றம் தலையிட்டாக வேண்டும் என ரோமிலா தாப்பர், சதிஷ் தேஷ்பாண்டே, தேவகி ஜெயின், பிரபாத் பட்நாயக், மாயா தருவாலா என்ற 5 அறிவுலக ஆளுமைகள் உச்சநீதிமன்ற கதவை தட்டினார்கள். வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கனிவால்கர், சந்திரசூட் அமர்வத்தால் விசாரிக்கப்பட்டது. குற்றவியல் வழக்கில் அடுத்தவர்கள் அவர்களுக்காக வழக்காடலாமா என்ற தொழில்நுட்ப வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ஜனநாயகத்தில் மாற்று கருத்து சொல்ல வாய்ப்பு தருவது பிரஷர் குக்கரில் சேஃப்டி வால்வ் போன்றது என்றும் மாற்று கருத்து மறுக்கப்பட்டால் அழுத்தம் தாங்காமல் அமைப்பு வெடித்துவிடும் என்றும் சொன்ன உச்சநீதிமன்றம் அய்ந்து பேரையும் புனே செல்லவிடாமல் அடுத்த விசாரணை நாளான 06.09.2018 வரை வீட்டு காவலில் வைக்க சொன்னது. மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், சுதா பரத்வாஜ், தமது அலுவலக வழக்கறிஞர் என்றார். மூத்த வழக்கறிஞர் டாக்டர் ராஜீவ் தவான், கைது செய் யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் சார்ந்துள்ள அமைப்புக்கு தாம் தொடர்ந்து நன்கொடை தருவதாகவும், தம் மீதும் காவல் துறை வழக்கு போட்டால் வியப்பேதும் இல்லை என்றும் சொன்னார். டாக்டர் அபிஷேக் சிங்வி முன்னணிப் பங்காற்ற விருந்தா குரோவர், ராஜ÷ ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய வழக்கறிஞர்கள், அரை மாவோயிஸ்ட்டுகளுக்கு, நகர்ப்புற நக்சல்களுக்கு வழக்காடியது, நம்பிக்கை அளிக்கும் மாற்றமாகும். நீதிமன்றம் உடனடி நிவாரணம் வழங்குவதும் நல்ல விஷயமே.
தமிழ்நாட்டில்
மாவோயிஸ்ட் என குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞர் முருகன் மாவோயிஸ்ட் எனக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். திருமுருகன் காந்தியை வளர்மதியை, சட்டத்திற்கும் புறம்பாக தொடர்ந்து துன்புறுத்துகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர், துன்பப்படுவோரின் துயர் துடைக்கும் விதம் பேசியுள்ளனர்; கட்டாய கையகப்படுத்துதலை தடுத்துள்ளனர். நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வம், சட்டவிரோத அநியாயமான தேசப்பாதுகாப்பு சட்ட உத்தரவுகளை ரத்து செய்துள்ளனர். சென்னை குற்றவியல் நடுவர் பிரகாஷ், ரோசலின் துரை ஆகியோர் கண்ணை மூடிக் கொண்டு காவல்துறை சொற்படி கையெழுத்திட மறுத்தனர். தமிழ்நாட்டின் நீதித்துறைக்கு, வழக்கறிஞர் சமூகத்திற்கு, மக்களுக்கு ஜனநாயகம் காக்கும் கடமை உண்டு.
அன்று அறிவிக்கப்பட்ட அவசர நிலை கொண்டுவந்த இந்திரா காந்தி வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்டார். மக்கள் போராட்டம், அறிவிக்கப்படாத அவசர நிலையை ஏவும் மோடிக்கும் பாடம் புகட்டும்.

Search