COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 1, 2018

வயலைச் சேராது பொங்கிய காவிரி 
வந்தென்ன? போயென்ன?

என்.குணசேகரன்

முதலமைச்சர் பழனிச்சாமி மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார். எத்தனையோ வேலைகள் கோட்டையில் காத்து கிடக்க ஒரு சாதாரண வேலைக்கு ஏனிந்த களேபரங்கள்?
எதற்காக இந்த பகட்டு விளம்பரங்கள்? பத்திரிகைகள், ஊடகங்கள் எல்லாம் இதனை தமிழக வரலாற்றில் எந்த முதல்வரும் செய்யாத சாதனையாக சிலாகித்தன. தண்ணீர் வந்தால் சரி என்று நமக்கும் கொஞ்சம் மகிழ்ச்சிதான். ஆனால் முக்கொம்பு அணை பாலத்தை உடைத்து வந்த தண்ணீர் பாசனத்திற்கும் வராமல், நதியோர மக்களை நடுத்தெருவில் தவிக்க விட்டு வீணாக கடலில் கலந்தது. மூன்று முறை முழுக் கொள்ளளவை எட்டியும் கடைமடையை எட்டிப் பார்க்காமல் காவிரிநீர் போன மாயம்தான் என்ன? காலிப் பானைகளோடு காவிரி மண்டல மக்கள் குடிநீர் கேட்பதும், முகாம்களில் தஞ்சமடைந்தவர்கள் உணவுக்கு அலையவுமான அவலத்திற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? யாருக்காக இந்த பெருநாசம்? 
விநாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் பொங்கி வந்த காவிரி நீரை முறையாக பயன்படுத்தும் நீர் மேலாளுமையும் முன்தயாரிப்பும் அரசிடம் இருந்திருந்தால், நாமக்கல், ஈரோடு, பள்ளிபாளையம், திருச்சி, கொள்ளிடக் கரையோர மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருப்பார்களா? ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது என்று சொன்ன கர்நாடகாவிடம் இருந்து, பலப்பல போராட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் வரை சென்று தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெற்றோம். அதனால் ஒரு சொட்டல்ல, ஒரு கடலளவு நீரை தமிழகம் பெறும் தருவாயில் அதை பயன்படுத்த வழியில்லாமல் வீணாக கடலில் விட்டு கலங்கி நிற்கிறோம். வெள்ளம் கரை புரண்டோட மக்களுக்கு வெள்ள நிவாரணம், பாதுகாப்பு நடவடிக்கை என திண்டாடும் இதே காவிரி சமவெளியில், ஆடுமாடு கள் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் வறண்டு போன ஏரிகள், நீர்ப்பாசன வாய்க்கால்கள், குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் போராடும் அவலம் இன்னும் தொடர்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க வந்த முதலமைச்சர் பழனிச்சாமி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அக்கறையாக இருப்பதாக காட்டிக் கொண்டு மக்களை சந்திக்கிறார். என்ன செய்வதனெ தெரியாமல் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். அமைச்சர் செல்லூர் ராஜ÷வை உடன் அழைத்துப் போயிருந்தால் அய்ன்ஸ்டீன் அளவுக்குச் சிந்தித்து தெர்மோ கூல் பார்மூலா போல் மொத்த தண்ணீரையும் உறிஞ்சி பாதுகாக்கும் அரிய பெரிய ஆலோசனைகள் தந்திருப்பார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட போயிருந்தால் அம்மா இட்லி சாப்பிட்டதாக, பேப்பர் பார்த்ததாக சொன்னதெல்லாம் பொய் என்று போட்டுடைத்தது போல, தூர்வாரி விட்டோம் என்பதெல்லாம் பொய், தூர்வார ஒதுக்கிய நிதியெல்லாம் நாங்களே ஒதுக்கி கொண்டோம் என்று உண்மையை பேசியிருப்பார். அல்லது வெள்ளம் சூழ்ந்த நாமக்கல், ஈரோடு தமிழக எல்லைகளுக்குள் கிடையாது என்று சொல்லியிருந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
ஒரு துறையில் தலைமைப் பொறுப்புக்கு வருபவர்கள், உதாரணமாக, மருத்துவம், விஞ்ஞானம், கலை, சட்டம், பொறியியல், வானவியல் என வெவ்வேறு துறைகளிலும் தலைமையேற்பவர்கள், அந்தந்த துறை சார்ந்த அறிவு, ஆற்றல், அனுபவத்தில் சிறந்தவர்களாக இருப்பது இயல்பு.  ஆனால் முதலாளித்துவ அரசியல் துறையில் மட்டும் பல காரணங்களால் விபத்துபோல எந்த தகுதிகளும் இல்லாதவர்கள் அதிகாரத்தில் அமர்ந்து விடுகிறார்கள். அதிமுக முதலமைச்சர், அமைச்சர்கள் பற்றி பேச ஒன்றுமில்லை. ஒரு கால் நூற்றாண்டுக்கும் மேலாக அம்மா பஜனை பாடி காலில் விழுந்தே பழக்கப்பட்டவர்கள். சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார், ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை என்ற பாடலுக்கு இலக்கணமாகிப் போன இபிஎஸ், ஓபிஎஸ் கும்பலிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்?
இயற்கை சீற்றமல்ல, அரச குற்றமே
முன்னெச்சரிக்கையின் அவசியம் பற்றி அரிய கருத்துக்கள் பல நம்மிடம் உண்டு. ஆனாலும் காலம் முழுவதும் காலில் விழுந்து பதவி பெற்ற பழனிச்சாமிகளுக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். வார்த்தைக்கு வார்த்தை இதய தெய்வம் புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா என்று பேசும் ஆட்சியாளர்கள், இந்த உயரத்தை கொடுத்த மக்கள் பற்றி கனவில் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. பெருக்கெடுத்த வெள்ளத்தையும், அதனால் உடைந்த, 180 ஆண்டுகள் பழமையான முக்கொம்பு அணைகளையும் பார்வையிட்ட பழனிச்சாமி நல்ல மனிதனுக்கு திடீரென காய்ச்சல் தாக்குவது போல இது திடீர் விபத்து என விளக்கமளிக்கிறார். 180 வருடங்களாக, 40க்கும் மேற்பட்ட பெருவெள்ளத்தை சந்தித்த அந்த அணைகளை பராமரித்திருக்க வேண்டுமா இல்லையா? எல்லாம் முடிந்த பிறகு இப்படி பேசுவதற்கு மந்திரி, ஆய்வு மாளிகைகள், அதிகாரம், பொதுப் பணித்துறை, கோடிக்கணக்கில் மக்கள் வரிப் பணம் எல்லாம் எதற்கு?
கோவை, திருப்பூர் ரசாயன ஆலைகளின் கழிவு நொய்யலாற்றிலேயே வந்து குடிநீரையும், பாசனத்தையும் கெடுத்து வாழ்வாதாரத்தையே அழிக்கும் நாசத்தை தடுத்து நிறுத்த சூழலியலாளர்களும் பொதுமக்களும் போராடியபோது, அது ரசாயனக் கழிவல்ல நதிக்கரையில் மக்கள் அதிகம் சோப்பு போட்டுக் குளித்ததால் வந்த நுரைதான் என்று விஞ்ஞான விளக்கமளித்த அதிமுக அமைச்சர்களிடம் வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்?
நீர் நிலை ஆதாரத்தை பெருக்க வேண்டியவர்கள் அதற்கு நேர்மாறாக நிலத்தடி நீரின் ஆதாரமாக இருக்கும் ஆற்று மணலை மணல் குவாரிகள் அமைத்து 3 அடிக்கு அனுமதி பெற்று 30 அடி ஆழம் வரை அள்ளி பல லட்சம் கோடிகளை சுருட்டினார்கள். மணல் அற்றுப் போன ஆறுகள் கடைமடைக்கோ கடலுக்கோ அதன் இயல்பான வேகத்தில் ஓடாது. வாய்க்காலிலும் ஏறிப் பாயாது. மணல் இருந்தால் பூமி உறிஞ்சி கொள்ளத் தடுப்பணைகளில் தேங்கும் அளவுக்கான நீரை சேமித்து கொள்ளும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட நீராதாரத்தை அடியோடு அழித்தார்கள். மணல் மாஃபியாக்களின் பிடியில் சில அமைச்சர்களே அடக்கம் எனும் அளவுக்கு மணல் கொள்ளை கொடி கட்டி பறந்தது. நீர்வரத்து குறைந்த ஜனவரி முதல் ஜ÷ன் வரையிலான மாதங்களில் கட்டி முடிக்க வேண்டிய, தூர் வார வேண்டிய ஏரி, குளங்கள் ஆகிய மராமத்து பணிகளை உரிய காலத்தில் நடத்தி முடிக்காமல் காலம் தாழ்த்தி தண்ணீர் வரும்போது அது உரிய பாசன பகுதிகளுக்கு போகாமல் தடுத்து கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்ததோடு, காடுகளை அழித்து மணலைக் கொள்ளையடித்து ஏரி குளங்களை ஆக்கிரமித்து மராமத்து தூர்வாரும் பணிகளை செய்யாமல் கோடிகளை சுருட்டி மோசடி செய்துவிட்டு இப்போது இயற்கை மீது பழிபோட்டு நழுவப்பார்க்கும் இந்த மோசடி கும்பலை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதே ஒரே வழி.
பொய்யில் பிறந்து ஊழலில் திளைக்கும் ஆட்சி
மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டு உச்சநீதிமன்றம் தண்டித்த பிறகும் மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொன்னவரின் வாரிசுகள் அதே வழியில் அயராது பொய் சொல்கிறார்கள். காவிரி பகுதிகள் சமவெளியாக இருப்பதால் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முடியாது என்று முதலில் அறிவித்த முதலமைச்சர் பழனிச்சாமி, இப்போது நிலைமை கை மீறி போனதால் அதே காவிரி ஆற்றின் 62 தடுப்பணைகள் கட்ட ரூ.292 கோடி ஒதுக்கியிருப்பதாக மாற்றி பேசுகிறார். இந்த அறிவிப்பும் ஏதோ முதல் தடவையாக அறிவிப்பது அல்ல. இதே அதிமுக அரசின் பொதுப் பணித்துறை சார்பில் 09.06.2014 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தடுப்பணைகள், கதவணைகள், தரைமட்ட சுவர்கள் என 61 சிறு அணைகளை ரூ.117 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டதாகவும் இதன் மூலம் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாசன மற்றும் குடிநீர் வசதி மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 2014 ஜ÷ன் மாதத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.117 கோடி என்ன ஆனது? இப்போது ரூ.292 கோடி அதே திட்டத்திற்கு இரண்டாவது முறை ஏன் ஒதுக்க வேண்டும்? இரண்டில் எது உண்மை? எது பொய்? பாலாற்றில் 2 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டி விவசாயத்தை பெருக்க சந்திரபாபு நாயுடுவால் முடியும்போது, காவிரியில் கட்ட முடியாது என்று  பழனிச்சாமி சொல்வது யாரை திருப்திப்படுத்த? 62 தடுப்பணைகள் கட்ட திடீரென அறிவிக்கும் முரண்பாடு ஏன்?
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மாற்று பாசனத் திட்டத்தின் பேரில் வைகை - காவிரி - குண்டலாறு இணைப்பு திட்டத்திற்கு, காவிரி பாசன மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.11,000 கோடியும் அந்த திட்ட அமலாக்கமும் எங்கே? தமிழகத்தின் 107 முக்கிய அணைகளின் முழு கொள்ளளவை தூர் வாரி 100 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக சேமிக்க, 2012ல் தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.745 கோடியும் பணிகளும் என்ன ஆயின? கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா அறிவித்தபடி குடித்தாங்கியில் (குடந்தை அருகே) காவிரியின் குறுக்கே கதவணைகள் கட்ட ரூ.400 கோடி நிதி ஒதுக்கியதாக சொல்லப்பட்ட பணி எங்கே நடக்கிறது? கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்த தென்பெண்ணை கதவணை (பண்ருட்டி அருகே) அமைக்கும் பணி ரூ.14 கோடியில் எங்கே நடக்கிறது? அங்கெல்லாம் ஆளும் கட்சிக்காரர்களின் மணல் குவாரிகள்தான் தென்படுகிறது. இது தவிர நீர்வள, நிலவளத்திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.3,008 கோடி, இப்படி இன்னும் பல திட்டங்களின் பெயரால் ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.5,000 கோடி எங்கே? அம்மாவின் வழியில் அயராது பணி செய்யும் கொள்கை கோமான்கள் ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் மக்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அஇஅதிமுக ஆட்சி நடக்கிற கடந்த 8 ஆண்டுகளில் நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க, மேம் படுத்த என சொல்லப்பட்ட பணிகளுக்கு முன்வைக்கப்பட்ட திட்டங்கள், முடிந்த பணிகள், ஒதுக்கப்பட்ட தொகை, பயன்பெற்ற பாசனப் பகுதிகள் ஆகியவை பற்றி அறிக்கை தர வேண்டும்.
நீர் மேலாளுமை போதாமை மட்டுமல்ல கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுப்பதே
மக்களாட்சி என்கிற பெயரில் உலகமய, கார்ப்பரேட் கொள்கைகளுக்கான ஆட்சியே நடக்கிறது. காவிரி மண்டலம் கனிமவளக் கொள்ளைக்காக மீத்தேன், ஹைட்ரோகார்பன் பெட்ரோ கெமிக்கல் மற்றும் மணற் கொள்ளை எனும் நாசகார திட்டங்களுக்காக, கார்ப்பரேட் முதலாளிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இந்த பிரதான கொள்ளைக்கு சாதகமாகத்தான் காவிரி டெல்டா மண்டலம் தண்ணீர் வராமல் தரிசாக்கப்பட்டது. அல்லது வந்த நீரையும் வடிகாலில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்தது அரசு. ஆட்சியாளர்களின் இந்த திட்டமிட்ட அலட்சியப் போக்கை நீர் மேலாளுமையின் அக்கறையின்மை என்று மட்டும்  ஊடகங்கள் செய்தியாக்குவது வரவிருக்கும் பேராபத்துக்களை எடுத்துச் சொல்லும் கடமையிலிருந்து வழிவிலகுவதாக அமையும். சூழலையும் வாழ்வாதாராத்தையும் இழந்து போராடிய மக்களை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்து வேதாந்தாவுக்கு தன் விசுவாசத்தை காட்டிய பழனிச்சாமி அரசு, தேவையேயில்லாமல் 10,000 கோடி ரூபாயை கொட்டி எட்டு வழிச்சாலை அமைத்தே தீருவது என்று போராடும் விவசாயிகளை போலீசை வைத்து ஒடுக்கி அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியை நடத்தும் கார்ப்பரேட்களின் கைக்கூலி ஆட்சி, காவிரி பாசனப் பிரச்சனைகளிலும் தன் கார்ப்பரேட் விசுவாசத்தை காட்டி காவிரி மண்டலத்தில், ஒரு மகாகொள்ளைக்கு பாதை போடுகிறது. தமிழகத்தை இடுகாடாக்கிவிடும் ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் ஏற்கனவே எழுந்துவிட்டன.

Search