COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 15, 2018

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்
கோழைத்தனம் ஒரு ரகசிய நோய் 
சேற்றில் அதிக நேரம் நின்றால் 
நம் பாதங்கள் அழுகிவிடும்

நாம் வாழும் காலம், ஒடுக்குமுறையின் காலம். அரச பயங்கரவாதத்தின் காலம். பாசிஸ்டுகளின் ஆட்சிக் காலம்.
அதே நேரம் அது மக்களது எதிர்ப்பு போராட்டங்களின் காலமாகவும் இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, எட்டுவழிச் சாலை எதிர்ப்பு மீதான மூர்க்கத்தனமான ஒடுக்குமுறை, மதவாத சாதிய ஆணாதிக்க சக்திகளின் விஷம் தோய்ந்த உளறல்கள் ஒருபுறம் இருக்கும்போது, மறுபுறம் மக்கள் போராட்டங்களில் இருந்து நம்பிக்கையும் உற்சாகமும் பெற்று, அந்த போராட்டங்களுக்கு வேகம் தரும் வகையில் கவிஞர்கள் மனுஷ்ய புத்திரன், சுகிர்தராணி, ஆதவன் தீட்சண்யா, வெண்புறா சரவணன் ஆகியோர் கவிதை சாட்டைகளை வீசுகிறார்கள். மனுஷ்யபுத்திரனின் ஒரு போராட்ட கவிதையில் இருந்தே, கட்டுரையின் தலைப்பு அமைந்தது. போராட்ட கவிதைகள் மிக மிக அவசியம். அவற்றை விட மேலானதாக, எனக்கும் புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுருவுக்கும் பிரிக்கால் தொழிலாளர் போராளிகளை, சிறையிலும் களத்திலும் சந்தித்த நிகழ்ச்சிகள், அமைந்தன.
போராட்டக் களத்தில் சந்திப்பு
ஆலைகளிலும் வயல் வெளிகளிலும் உழைக்கும் மக்களை சந்திக்கச் சொல்லி, இளைஞர்களுக்கு பகத்சிங் அறைகூவல் விடுத்தான். அப்போதுதான் சமூக மாற்றம் வரும் என்றான். டிசம்பர் 25 அன்று நடக்க இருக்கிற அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்க மாநாட்டை ஒட்டி கிராமப்புறங்களில் வேலை செய்ய புரட்சிகர இளைஞர் கழகம் முடிவு செய்துள்ளது.
கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகள் மீது 21.08.2018 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுருவும் நானும் அவர்களைச் சந்திக்க 04.09.2018 அன்று கோவை சென்றோம். 06.09.2018 அன்று தொழிலாளர் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இருந்தது. நிர்வாகம் இழுத்த இழுப்புக்கு தொழிலாளர் துறை செல்வதாக கருதிய தொழிலாளர்கள், செப்டம்பர் 4 அன்று பெரும் திரளாக தொழிலாளர் அலுவலகம் சென்று நியாயம் கேட்க முடிவு செய்தனர். நல்ல வாய்ப்பென நாங்களும் சேர்ந்து கொண்டோம். கிட்டத்தட்ட 200 தொழிலாளர்கள் சிறை செல்ல தயாரிப்புடன் பையுடன் வந்திருந்தனர். வழக்கம்போல் காவல்துறை வந்தது, கெடுபிடி செய்தது கலைந்து போ என மிரட்டியது. நியாயம் கேட்டு சிறை செல்ல தயாராய் வந்துள்ளோம், பதில் தெரியாமல் கலையும் பேச்சுக்கு இடம் இல்லை என, தோழர்கள் சொன்னவுடன் காவல்துறை பின்வாங்கியது. அதே காவல் துறை, தொழிலாளர்கள், தொழிலாளர் துறை அதிகாரிகளை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ததும் நிர்வாகிகள், சந்திக்கச் சென்றனர். அவர்கள் பேசிவிட்டு வர, தொழிலாளர்கள் காத்திருந்தனர். இந்த இடைவெளியில், தோழர் மணிவண்ணன், ராமமூர்த்தி ஆகியோரைச் சந்திக்க கோவை சிறைக்கு நானும் தோழர் ராஜகுருவும் சென்றோம்.
கோவை சிறையில்
தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர், மிகப் பெரிய தொழிலாளர் போராட்ட தலைவர், கப்பல் ஓட்டிய தமிழர், வழக்கறிஞர் வ.உ.சிதம்பரனார், அந்தச் சிறையில்தான் இருந்தார். அங்கேதான், வெள்ளையர்கள் அவரை செக்கிழுக்க வைத்தார்கள். அன்று, சுதந்திரத்துக்காக தியாகங்கள் பல செய்தனர். ஆனால், இன்று, உழைக்கும் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. சிறைவாசம்தான் காத்திருக்கிறது. பொய்யான கொலைச் சதி வழக்கில், பிரிக்கால் தோழர்கள் மணிவண்ணனும், ராமமூர்த்தியும் 03.12.2015 முதல் இங்கேதான், ஆயுள்கால சிறைவாசிகளாக இருக்கிறார்கள். இருவருக்கும், பள்ளி செல்லும் குழந்தைகள், குடும்பங்கள் உள்ளன. காத்திருந்தோம். பரிசோதனை செய்தார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு அன்று தோழர் மணிவண்ணனை மட்டுமே சந்திக்க முடிந்தது. 
தோழர் மணிவண்ணனை நான் தீப்பொறி அட்டையில்தான் பார்த்திருக்கிறேன் நேரில் பார்த்தது இல்லை. காத்திருந்தபோது திடீரென வந்தார். கையை உயர்த்தி உற்சாக சிரிப்புடன் வணக்கம் சொன்னார். திகைத்து போன நாங்கள் எப்படி தோழரே உங்களால் இப்படி இருக்க முடிகிறது என்று கேட்டோம். அவர் சிறிதும் யோசிக்காமல் மிகவும் சாதாரணமாக எனக்கு கட்சியின் மீதும் சங்கத்தின் மீதும் தொழிலாளர்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. எனது இயக்கத்தை பற்றி அஞ்சுவதால்தான், அதன் பெயரைக் கூட எழுதாமல் மறைக்கிறார்கள் என்றார். தோழர் மணிவண்ணன், எங்களிடம் சொந்த விஷயங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நாட்டு நிலைமை பற்றி, நாடெங்கும் இயக்கம் எப்படி இருக்கிறது என்பது பற்றி விசாரித்தார். எஸ்.கே. உள்ளிட்ட தோழர்களை பற்றி விசாரித்தார். அரசியல் புத்தகங்கள் படிக்க வாய்ப்பில்லை என வருந்திய தோழர் பி.காம் படிக்க இருப்பதாகச் சொன்னார்.
தோழர் ராஜகுருவிடம் திருபெரும்புதூர் வேலைகள் பற்றி, அய்ந்து பேர் கைது பற்றி, அக்கறையுடன் விசாரித்தார். தோழர் ராஜகுருவும், இளம் தோழர்கள் மத்தியில் வேலைகள் முன்னேறுவதாக தெரிவித்தார். அடுத்து சில நாட்களில் மற்ற தோழர்கள் வர இருப்பதாக சொன்னவுடன் அன்று அவரது மனைவி அல்லது வீட்டார் வர வேண்டாம் என தகவல் சொல்லச் சொன்னார். உங்கள் குடும்பம் பற்றி உங்கள் எதிர்காலம் பற்றி கவலை ஏதும் இல்லையா என்று கேட்டோம். நீங்கள் இருக்கும் போது எனக்கு ஏன் கவலை என்றும், தொழிலாளர்களுக்காக தூக்கு தண்டனை வந்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்றும் சொன்னார்.
தோழர் மணிவண்ணனைச் சந்தித்துவிட்டு திரும்பியபோது, ஒரு பக்கம் மனம் கனத்துக்  போனது. மறுபக்கம் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் அவசியம் என உணர்ந்தோம். அதற்கான நம்பிக்கையும் பெற்றவர்களாய் சிறையில் இருந்து வெளியே வந்தோம்.
மீண்டும் பிரிக்கால் தொழிலாளர்களுடன்
நாங்கள் சிறையிலிருந்து திரும்பியவுடன், அதிகாரிகளுடன் பேசச் சென்றிருந்த நிர்வாகிகளும் திரும்பி வந்தார்கள். தொழிலாளர்கள் மத்தியில் பிரிக்கால் நிர்வாகிகள் தோழர்கள் நடராஜன்,  ஜெயபிரகாஷ் நாராயணன் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்ரமணியன், தோழர் ராஜகுரு, நான் உரையாற்றினோம். விபத்தில் காயமுற்று சிகிச்சையில் இருந்த சங்கப் பொதுச் செயலாளர் தோழர் சாமிநாதனை அன்று மாலை சந்தித்தோம். அவர்களது சங்க நிர்வாக குழு அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிட்டபோது நாங்களும் கூட இருந்தோம்.
அன்று முழுவதும் நடந்த விஷயங்கள், பாட்டாளி வர்க்க கட்டுக்கோப்பை, உறுதியை, நம்பிக்கையை எங்களுக்கு உணர்த்தின. ரயிலில் சென்னை திரும்பி வரும்போது தோழர் ராஜகுரு, தொழிலாளர் தலைவர்களை காண வேண்டும் என்றால், சிறை சென்று தோழர்கள் மணிவண்ணனை, ராமமூர்த்தியை பாருங்கள், போராளிகளை காண வேண்டும் என்றால், பிரிக்கால் தொழிலாளர்களை பாருங்கள் என இளைஞர்களுக்கு நாம் சொல்ல வேண்டும் என்றார்.
ஒரு வாரம் கழித்து சென்னையில் சந்தித்தோம்
பாரதி நினைவு தினமான செப்டம்பர் 11 அன்று பிரிக்கால் தொழிலாளர்கள் 192 பேர் சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் வந்து நியாயம் கேட்டார்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் சென்னை வந்த பிரிக்கால் தோழர்களை பல இடங்களில் இருந்தும் நமது தோழர்கள் தினகர், மோகன், சீதா, சுரேஷ், பிரபாகரன், மோகன்ராஜ், விக்டர், கார்த்தி, பாஸ்கர் ஆகியோர் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு 11 மணி அளவில் அழைத்து சென்றோம். காவல்துறை யாரையும் நுழைய விடாமல் அலுவலகத்தை சுற்றி வளைத்திருந்தது. வந்தவர்களை கைது செய்து அழைத்துச் செல்ல பேருந்துகள், வாகனங்கள், காவலர்கள் கணிசமான எண்ணிக்கையில் திரண்டிருந்தனர். எல்லாவற்றையும் தாண்டி தொழிலாளர் அலுவலக வளாகத்துக்குள் பிரிக்கால் தோழர்களை அழைத்துச் சென்றுவிட்டோம்.
காவல்துறை நான்கு பக்கமும் சுற்றி வளைத்திருந்தது. இந்த முறையும் தோழர்கள் சிறை செல்லும் தயாரிப்புடன் வந்திருந்தனர். ஒரு பக்கம் எழுச்சியுடன் கூட்டம் நடைபெற்றது. மறுபக்கம் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன. தொழிலாளர் கூடுதல் ஆணையருடன், முதல் சுற்றில் பிரிக்கால் சங்க நிர்வாகிகளுடன் தோழர்கள் சுரேஷ், சீதாவும் கலந்து கொண்டனர். இரண்டாவது சுற்றில் தோழர்கள் குமாரசாமியும், பாரதியும் வந்திருந்தனர். மூன்றாவது சுற்றில் கூடுதல் ஆணையர் மற்றும் தொழிலாளர் ஆணையருடன் சில இளம் தோழர்களுடன் தோழர் பாரதி மட்டுமே பேச சென்றிருந்தார்.
தொழிலாளர் துறையினர் மிகுந்த தயக்கத்திற்கு பிறகு சென்னையில் பேச்சு வார்த்தைகள் நடத்தலாம், அடுத்த சுற்று பேச்சு வார்த் தைகள் 14.09.2018 அன்று இருக்கும் என தெரிவித்ததால் போராட்டத்தை தோழர்கள் அத்துடன் முடித்துக் கொண்டனர். அடுத்த கட்ட போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. பிரிக்கால் தொழிலாளர்களின் வீரமிக்க போராட்டம் வெல்லட்டும்.

Search