COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 15, 2018

சாமான்யரும் சட்டம் அறியலாமே

எஸ்.குமாரசாமி

அரச ஒடுக்குமுறை நீக்கமற நிறைந்துள்ள சூழலில், காவல்துறை கட்டற்ற விதத்தில் சட்டத்திற்குப் புறம்பாக, அநியாயமாக நடந்து கொள்ளும் சூழலில், நீதித்துறையில் ஒரு சிலரே, அதிகாரத்திடம் துணிந்து உண்மை பேசும், நியாயத்தைக் கேட்கும் சூழலில்,
அடிப்படை உரிமைகள் தொடர்பான, கைது, சிறை வைத்தல் தொடர்பான நான்கு தீர்ப்புகளை சற்று விவரமாகப் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆராய்ச்சி மாணவர் சோபியா கைது செய்யப்பட்டவுடன் நிறைய விவாதங்கள் எழுந்தன. தமிழிசை, நிர்மலா, ஸ்மிருதி என பெண் தலைவர்கள் மூலம் பாசிச பாஜக, தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. இந்தச் சூழலில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், பெயில் விதி என்றும் ஜெயில் விதிவிலக்கே என்றும் மறுஉறுதி செய்தது மிகவும் நல்ல விசயம்.
கால வரிசைப்படி சில தீர்ப்புகளைக் காண்போம். அரவிந்தன் மற்றும் இதரர் எதிர் கேரள அரசு வழக்கில் நீதிபதி சந்திரசேகர மேனன் 07.02.1983 அன்று தீர்ப்பு வழங்கினார். ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என ஒரு வாக்குச்சாவடி முன்பு மனுதாரர்கள் முழக்கமிட்டனர் என அவர்களுக்கெதிராக இந்திய தண்டனை சட்டத்தின் 121 ஏ, 124 ஏ 143, 149 பிரிவுகளிலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 131(1) (க்ஷ)ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 131(1)( க்ஷ) வாக்குச் சாவடி அருகில் முறை கேடாக நடந்து கொள்வது தொடர்பானதாகும். இந்திய தண்டனைச் சட்டம் 121 ஏ பிரிவு, குற்றமய வலிமை கொண்டு அரசாங்கத்தை அஞ்ச வைப்பது தொடர்பானதாகும். 124 ஏ சட்டப்படியான அரசாங்கத்துக்கு எதிராக மக்களிடம்  வெறுப்பை ஏற்படுத்துவது தொடர்பானதாகும். பிரிவு 143 சட்டவிரோதமான நோக்கத்துடன் சட்ட விரோதமாக அய்ந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுகிறார்கள் என்ற குற்றம் என்பது தொடர்பானதாகும். 149 பிரிவு, சட்டவிரோத கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும், சட்டவிரோத கூட்டத்தின் எல்லா செயல்களுக்கும் பொறுப்பு என்கிறது.
ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலமாகவே அரசாங்கத்தை மாற்ற முடியும் என சில இளைஞர்கள் முழக்கமிடுவது, பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துவது ஆகாது என்று நீதிபதி சொல்கிறார். கருத்தை வைத்திருப்போரை சிறை வைப்பதன் மூலம் கருத்தை ஒடுக்க முடியாது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், மரபுசாரா கருத்துகளை அழுத்தமாக முன்வைப்பவர்கள் என்பதாலேயே, அந்த கருத்துகளை முடக்கக் கூடாது. கருத்துக்களை ஒடுக்குவது, காத்திரமான (சீரியசான) சமூக பிரச்சனைகளில் இருந்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்பும். மேலும், எதிர்ப்பை வெளிப்படுத்த வாய்ப்பு மறுக்கப்படுவதால், எதிர்ப்பு தலைமறைவாகி விடும். கருத்துகளால் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பதற்கு மாறாக வன்முறைதான் தீர்வு என்றாகிவிடும். ஏழை பணக்காரர் வேறுபாடு பெரிதாக உள்ள இந்தியாவில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் அதிகமாக இருக்கும் இந்தியாவில், ஒரு குறிப்பிட்ட வகை கருத்தை ஒடுக்குவது, சமூகம் நெடுக, கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து உருவாக்கும். ஓர் ஆரோக்கியமான சமூகத்தின் வாழ்விற்கும் முன்னேற்றத்துக்கும் தேவையான சுதந்திர சூழலை, அழிக்கிற ஒரு கருவியைப்படைக்காமல், இப்படிப்பட்ட கருத்து ஒடுக்குமுறை  சாத்தியமாகாது. இந்த தீர்ப்பில் அவர், பிரபல அய்க்கிய அமெரிக்க நீதிபதி ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் அளித்த ஒரு தீர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார். ‘ஒரு நீண்டகால நோக்கில் சமூகத்தின் மேலோங்கிய சக்திகள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனச் சொல்லப்படுவதில் உள்ள நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமேயானால், அதற்குரிய சக்திகளுக்கு பேச வாய்ப்பு தந்து அதற்குரிய வழியில் செல்லவிடுவதுதான், பேச்சு சுதந்திரம்’.
ஆயுதம் தாங்கிய போராட்டம் மூலம் சமூக மாற்றம் என சிலர் முழக்கமிடுவது, 121 ஏ, 124 ஏ, 143, 149 ஆகிய இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளையும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட பிரிவு 131 (1), (க்ஷ)யையும் மீறியதாகாது என இந்தத் தீர்ப்பு திட்டவட்டமாகச் சொல்லி உள்ளது.
அடுத்து பீஜோ எமானுவேல் மற்றும் பிறர் எதிர் கேரள அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் 11.08.1986 அன்று வழங்கிய தீர்ப்பை காண்போம். ஜெஹோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ பிரிவைச் சார்ந்த பிள்ளைப் பருவ மாணவர்கள் மூவர் தேசிய கீதம் பாடப்படும் போது எழுந்து நின்றனர். ஆனால் பாடவில்லை. பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கைகள் படி, அந்த மாணவர்கள் ஒழுங்கீனம் புரிந்ததாக, பள்ளியை விட்டு நீக்கப்பட்டனர். உச்சநீதிமன்றம், கேரள அரசின் கல்வித்துறை நடவடிக்கை, மாணவர்களின் கருத்துரிமையை (அரசியலமைப்பு சட்ட பிரிவு 19(1) (ஏ)), வழிபாட்டு உரிமையை (அரசியலமைப்பு சட்ட பிரிவு 25), மீறியதாக தீர்ப்பளித்தது. தேசிய கீதம் பாடும்போது, தேசிய கீதம் பாடுவதா வேண்டாமா என்பது, அவரவர் உரிமை என்றது. போலி தேசபக்திக்கு நல்ல அடி. (தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்பப்படும்போது கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என முதலில் தீர்ப்பு வழங்கி, பிறகு அதனை மாற்றிக்கொண்டார் என்பதும் காணத்தக்கதாகும்).
மூன்றாவது பல்வந்த்சிங் மற்றும் ஒருவர் எதிர் பஞ்சாப் அரசு என்ற வழக்கில் 01.03.1995 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாகும். இந்திராகாந்தி கொல்லப்பட்ட சமயம், 31.10.1984 மாலை 5.45 மணியளவில் சண்டிகர் மாநிலம் நீலம் திரையரங்கு அருகே, மனுதாரர்கள், காலிஸ்தான் ஜிந்தாபாத், தனி சீக்கிய நாடு வாழ்க என முழக்கம் இட்டதாக வழக்கு போடப்பட்டது. அவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 ஏ தேசத் துரோகம், அதாவது சட்டபூர்வ அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுதல், இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ இரண்டு சமுதாயங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.
எந்தச் செயலும் இல்லாமல், வெறுமனே சில முறை முழக்கமிட்டதும், அந்த முழக்கத்திற்கு சீக்கிய சமூகத்திடம் எந்த பதில் வினையும் இதர சமூகத்திடம் இருந்து எந்த எதிர் வினையும் வராதபோது, எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாதபோது, சமூகம் சகஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபோது, 124ஏ, 153ஏ பிரிவு வழக்குகள் பொருந்தாது, வெறுமனே முழக்கமிட்டவர்களுக்கு எதிராக வழக்கு போட்டதில், காவல்துறைக்கு முதிர்ச்சியும் கூருணர்வும் இல்லை என்பதே புலனாகிறது என்றது உச்சநீதிமன்றம்.
நான்காவது வழக்கு அன்றாட முக்கியத்துவம் வாய்ந்தது. வழக்கு வரதட்சணை தொடர்பானது. ஆனாலும் கோட்பாடுகள், ஜனநாயக உரிமைப் போராளிகளுக்கு உதவும். அர்னேஷ் குமார் எதிர் பீகார் அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் 02.07.2014 அன்று ஒரு தீர்ப்பு வழங்கியது. அரசியலமைப்புச் சட்டம்  பிரிவு 141படி, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும். உச்சநீதிமன்றமும், இந்தத் தீர்ப்பை, எல்லா மாநில அரசு தலைமைச் செயலாளர்களுக்கும் உயர்நீதிமன்ற பதிவாளர்களுக்கும் அனுப்பச் சொல்லி தன் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
தீர்ப்பு பின்வரும் விஷயங்கள் சொன்னது:
கைது, அவமானம் ஏற்படுத்துகிறது. சுதந்திரத்தை முடக்குகிறது. காலத்திற்கும் வடுக்களை விட்டுச் செல்கிறது. இது சட்டம் இயற்றுபவருக்கும் தெரியும். காவல்துறைக்கும் தெரியும்.
சட்டம் இயற்றுபவருக்கும் காவல்துறை யினருக்கும் இடையிலான போராட்டத்தில், காவல்துறை, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் உள்ளார்ந்த விதத்தில் உட்பொதிந்துள்ள பாடத்தைக் கற்றதாகத் தெரியவில்லை. 60 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகும், காவல்துறை, தன்னைப் பற்றிய, காலனிய காவல்துறை என்ற பிம்பத்தை விட்டு வெளியே வந்ததாகத் தெரியவில்லை.
காவல்துறை இப்போதும் பெருமளவிற்கு துன்புறுத்தலின், ஒடுக்குமுறையின் கருவியாகவே பயன்படுகிறது. அது, நிச்சயமாக மக்களின் நண்பராகக் காணப்படவில்லை.
கைது செய்யும் மிகையான அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை என திரும்பத்திரும்ப வலியுறுத்தியும் விரும்பத்தக்க விளைவுகள் ஏற்படவில்லை.
கைது செய்யும் அதிகாரம் காவல்துறையின் ஆணவத்திற்கு வழி வகுக்கிறது. கீழமை நீதிமன்றங்களும் அதனைத் தடுப்பதில்லை
கைது செய்யும் அதிகாரம், பணம் கொழிக்கும் ஊழலுக்கு உதவுகிறது. முதலில் கைது செய், பிறகு மற்ற விஷயங்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற அணுகுமுறை வெறுக்கத் தக்கதாகும். இந்த அணுகுமுறை, கூருணர்வு இல்லாத, உள்நோக்கம் உள்ள அதிகாரிகளுக்கு, வசதியான கருவியாக உள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41, பிடியாணை இல்லாமல் எப்போது கைது செய்யலாம் எனச் சொல்கிறது. அதன் பிரிவு 41(1)( க்ஷ)படி, குற்றவியல் நடுவர் உத்தரவு இல்லாமல், பிடியாணை இல்லாமல் ஒரு காவல்துறை அதிகாரி, ஒருவர் 7 வருடங்கள் அல்லது அதற்கு குறைவான தண்டனை பெறும் குற்றம் புரிந்துள்ளார் என்ற ஏற்கத்தக்க புகார் இருந்தாலோ, நம்பத்தகுந்த தகவல் இருந்தாலோ, ஏற்கத்தக்க சந்தேகம் இருந்தாலோ, கைது செய்யலாம். ஆனால் 41(2)படி, அவர் மேலும் குற்றம் புரியாமல் தடுக்க, அல்லது குற்றம் பற்றிய முறையான விசாரணைக்காக, அல்லது அவர் சாட்சியங்களை விவரங்கள் சொல்ல விடாமல் தடுப்பார், அல்லது விசாரணை தேதியில் நீதிமன்றம் வர மாட்டார் என காவல் அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டும், காரணங்களை எழுத்தில் பதிவு செய்து கைது செய்யலாம். கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்திற்குள் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தபட வேண்டும். குற்றவியல் நடுவர், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 167படி, கைதுக்கு அதிகாரம் வழங்கும்போது கைது சட்டப்படி செய்யப்பட்டுள்ளதா, கைது செய்யப்பட்டவரின் அரசியலமைப்பு சட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட்டனவா என கண்டறிந்து, திருப்தி அடைய வேண்டும். பிரிவு 41ன் நிபந்தனைகள் நிறைவாகவில்லை என்றால், கைதை நீட்டிக்காமல் விடுதலை செய்ய வேண்டும்.
பிரிவு 41ஏபடி கைதுக்கு அவசியம் இல்லாதபோது சந்தேகத்துக்கு உட்பட்டவருக்கு அறிவிப்பு தந்து விசாரிக்கலாம்.
இந்த பிரிவுபடி காவல் அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் மீது துறை நடவடிக்கை எடுப்பதுடன், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. சம்மந்தப்பட்ட நீதிமன்ற நடுவர்கள் மேலே கூறியவாறு காரணங்களை பதிவு செய்யவில்லை என்றால், அவர் மீதும் உயர்நீதிமன்றம் உரிய துறை நடவடிக்கை எடுக்கலாம்.
தொகுத்துச் சொன்னால், காவல் துறை மனம் போனபடி கைது செய்யக்கூடாது. நீதித் துறை நடுவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரிமாண்ட் செய்யக் கூடாது.

Search