COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 15, 2018

சமூகப் பாதுகாப்பு விதிகள் தொகுப்பு நகல்: 
பறித்தெடுத்தலின் மற்றுமொரு வடிவம்

2022க்குள் எல்லோருக்கும் வீடு, விண்வெளிக்குச் செல்வது என்று சற்றும் சளைக்காத மோடியின் வாய்வீச்சு, நாட்டு மக்கள் மீது ஏவப்படுவது தொடர்கிறது
. ஏற்கனவே இருக்கிற தேர்தல் வாக்குறுதிகள் பற்றி கேட்கும்போது, அமித் ஷா முதல் மற்ற பாஜக தலைவர்கள் வரை அவற்றை தேர்தல் நேர வாய்வீச்சு என்று சொல்லிவிடும்போது, அப்படி எதுவும் கேள்வி எழவில்லை என்பதுபோல் பாவனை செய்ய மோடியால் முடிகிறது. மோடி மற்றும் அவரது கட்சி, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றைப் பொறுத்த வரை கார்ப்பரேட் பாசிச நிகழ்ச்சிநிரல் தீவிரமாக முன்செல்கிறது. அந்த நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியாக தொழிலாளர் உரிமைகள் வெட்டிச் சுருக்கப்படுவது திட்டமிட்ட விதத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கம், அவற்றை மேம்படுத்துவது என தொழிலாளர் கோரிக்கைகள் இருக்கும்போது, அவற்றை மேலும் நீர்த்துப் போகச் செய்யும், தொழில் நடத்த இலகுவாக்கும் நடவடிக்கைகளை பாஜக ஆட்சி மேற்கொள்கிறது. மோடி ஆட்சியின் சமூகப் பாதுகாப்பு மற்றும் சேமநலன் பற்றிய தொழிலாளர் விதிகள் தொகுப்பு அவற்றில் ஒன்று.
2017, மார்ச் 16 அன்று, சமூகப் பாதுகாப்பு மற்றும் சேமநலன் பற்றிய தொழிலாளர் விதிகள் தொகுப்பு 2017 நகல் வெளியிடப்பட்டு அதன் மீது கருத்து கேட்கப்பட்டது. அதன் மீது கருத்துகள் பெறப்பட்டு, பின்னர் 2018, மார்ச் 1 அன்று சமூகப் பாதுகாப்பு மற்றும் சேமநலன் பற்றிய தொழிலாளர்கள் விதிகள் தொகுப்பு 2018 நகல் வெளியிடப்பட்டது. இதன் மீதும் கருத்து கேட்கப்பட்டது. மார்ச் 31க்குள் புதிய தொகுப்பு பற்றிய கருத்துகள் வந்து சேர வேண்டும் என்று சொல்லப்பட்டது. பிறகு ஏப்ரல் 30 வரை கருத்துகள் பெறப்படும் என்று காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டது.
சம்பளம் பற்றிய விதிகள் தொகுப்பு, தொழில் உறவுகள் பற்றிய விதிகள் தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சேமநலன் பற்றிய விதிகள் தொகுப்பு, பணியிட பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வேலை நிலைமைகள் பற்றிய விதிகள் தொகுப்பு என இருக்கிற எல்லா தொழிலாளர் சட்டங்களையும் சுருக்கி விடபோவதாகச் சொல்லப்பட்ட பின்னணியில் இந்தக் கருத்துக் கேட்பு நடந்தது. (சம்பளம் பற்றிய விதிகள் தொகுப்பு, தொழில் உறவுகள் பற்றிய விதிகள் தொகுப்பு ஆகியவை மீது ஏற் கனவே கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. சம்பளம் பற்றிய விதிகள் தொகுப்பு நாடாளு மன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது).
2017ல் கருத்துகள் கேட்கப்பட்டபோதே, இது முழுக்க முழுக்க தொழிலாளர் விரோத விதி என்று மய்ய தொழிற்சங்கங்கள் தரப்பில் சொல்லப்பட்டது. மய்ய தொழிற்சங்கங்களின் கருத்துகள் எவற்றையும் பொருட்படுத்தாமல் 2018 தொகுப்பு வந்துள்ளது. இது தொடர்பாக மய்ய தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு தந்து மத்திய தொழிலாளர் அமைச்சகம் நடத்திய கூட்டத்தில் மய்ய தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவில்லை. மய்ய தொழிற்சங்கங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இப்போது மய்ய தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் முறைகளில் மாற்றம் கொண்டு வந்து தொழிற்சங்கச் சட்டத்துக்கு திருத்தம் கொண்டு வர மோடி அரசு முயற்சி செய்கிறது.
சமூகப் பாதுகாப்பு மற்றும் சேமநலன் பற்றிய தொழிலாளர் விதிகள் தொகுப்பு 2018, சட்டமானால், இப்போது அமலில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு சட்டம், 1948, தொழிலாளர் வைப்பு நிதி சட்டம், 1952, தொழிலாளர் இழப்பீடு சட்டம், 1923, பீடித் தொழிலாளர் சேமநல நிதி சட்டம், 1976, அமைப் புசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2008, மகப்பேறு பயன்கள் சட்டம், 1961, பணிக்கொடை வழங்குதல் சட்டம், 1972 உள்ளிட்ட 17 தொழிலாளர் சட்டங்களை நீக்கி விடும். 2017 நகலில் 15 சட்டங்கள் ஒன்றாக்கப்படுவதாக சொல்லப்பட்டது.
பறித்தெடுத்தலின் மற்றுமொரு வடிவம்
ஏற்கனவே இருக்கிற சட்டங்களின் கீழ் இஎஸ்அய், இபிஎஃப் திட்டங்களில் 5 கோடி முதல் 6 கோடி பேர்தான் உள்ளனர் என்றும் இந்தப் புதிய விதிகள் தொகுப்பின் மூலம் நாட்டில் உள்ள 50 கோடி தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு பெறுவாளர்கள் என்று அரசு சொல்கிறது. (10 கோடி குடும்பங்கள் பிரதமரின் புதிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் வருவார்கள் என்று நிதிநிலை அறிக்கையிலும் பின்னர் சுதந்திர தின உரையில் மோடி சொன்னதற்கும் இதற்கும் தொடர்பில்லை, இதுதான் அது, அதுதான் இது, இது இருந்தால் அது இல்லை, அது இருந்தால் இது இல்லை எனச் சொல்லாமல், குழப்பாமல் இப்போது இருக்கிற அற்பசொற்ப பாதுகாப்பையும் பறிக்காமல், அதிகாரிகள் அவர்கள் விருப்பப்படி அல்லது அறிவுப்படி அல்லது அறிவின்மைப்படி வியாக்கியானம் செய்து பெரும் எண்ணிக்கையில் சாமான்ய மக்களை வெளியேற்றாமல் இருப்பார்கள் என நம்புவோம்).
இந்த விதிகள் தொகுப்பில் 50 கோடி பேர் வருவார்கள் என்றால், மிக முக்கியமாக அமைப்புசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2008அய், அது நீக்கிவிடுகிறது. நாட்டின் அமைப்புசாரா தொழிலாளர்களின் அரிய போராட்டங்களுக்குப் பிறகு அய்முகூ அரசால் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம், நாட்டின் 44 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு தொடர்பானது. இந்தச் சட்டத்தின் திட்டங்கள் அரசின் நிதி ஒதுக்கீடு பெறுபவை. 44 கோடி பேர் தொடர்பான நிதி பொறுப்பில் இருந்து, சமூகப் பொறுப்பிலிருந்து புதிய விதிகள் தொகுப்பு அரசுக்கு விலக்கு தந்துவிடுகிறது.
நவதாராளவாத கொள்கைகளின் முக்கியமான இயல்புகளில் ஒன்றான அரசு - தனியார் பங்கேற்பு, புதிய தொகுப்பின் மூலம் 50 கோடி பேரின் சமூகப்பாதுகாப்பு தொடர்பான விதிகளுக்குள் புகுத்தப்பட்டுவிடுகிறது. பயனர் பதிவு முதல் ஒட்டுமொத்த நிதி நிர்வாகம் வரை இடைநிலை அமைப்புகளிடம் தரலாம் என்று விதிகள் தொகுப்பு பிரிவு 88 சொல்கிறது. இந்த இடைநிலை அமைப்புகள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும், தவறு நடந்தால் இப்படி ஆய்வு நடக்கும், அப்படி கைப்பற்றப்படும் என்று விதிகள் தொகுப்பு சொன்னாலும் நடைமுறை எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.
இரண்டு அம்சங்களையும் சேர்த்துச் சொன்னால், சமூகப் பாதுகாப்பு தொடர்பான சட்டம் மூலம் அரசு வெளியேறி தனியார் நிறுவனங்கள் நுழைந்துவிடுகின்றன. சமூகப் பாதுகாப்பு திட்டத்துக்குள் வருகிற சாமான்ய மக்களின் நிதி மீது தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாடு வந்துவிடுகிறது.
மக்கள் பணத்தை தனியார் நிர்வகிக்க தரலாமா என்ற கேள்வி வரும் என்பதனால்  இஎஸ்அய், இபிஎஃப் திட்டங்களில் 5 கோடி முதல் 6 கோடி பேர்தான் இருந்தார்கள், இப்போது திட்டம் 50 கோடி பேருக்கு விரிவுபடுத் தப்படுகிறது, அதனால் கடைசி தொழிலாளிக்கும் பயன்கள் சென்று சேர இந்த இடைநிலை அமைப்புகள் தேவை, இவை அரசு - தனியார் பங்கேற்பு அடிப்படையில் இயங்கும், கேந்திரத் தன்மை இல்லாத செயல்பாடுகளிலும் நிபுணத்துவம் தேவைப்படுகிறது என்று ஒரு நீண்ட விளக்கம் தரப்படுகிறது. அப்படியானால் அரசு அதிகாரிகள் மத்தியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களே இல்லையா என்று நாம் கேட்டால் நம் மீது தேசத் துரோகச் சட்டம் ஏவப்படும்.
இந்த இடைநிலை அமைப்புகளுக்கான உரிமம் வழங்கும் அதிகாரம் மய்ய வாரியத்திடம் இருக்கும். இந்த அமைப்புகளில் மாநில வாரியங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களை அல்லது இயக்குநர்களை சேர்க்கலாம். தொழிலாளி ஒரு முதலாளியை சமாளிப்பது மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகள் வரை, இன்னும் பல அடுக்கு முதலாளிகளை சமாளிக்க நேரும். விதிகளை மீறும் இடைநிலை அமைப்புகள் மீது விசாரணை, தேடுதல், கைப்பற்றுதல், நடவடிக்கை, உரிம ரத்து என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இவை எப்படி இயங்கும் என்று நமக்குத் தெரியும்.
இந்த இடைநிலை அமைப்புகள் தவிர, அந்தந்த தொழில் நிறுவனங்களே பிஎப் நிதியை நிர்வகிக்க புதிய தொகுப்பு வாய்ப்பு தருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கான அனுமதி வழங்கலாம். இதற்கு மாற்று உள்ளடக்கும் பொறியமைவு என்று பெயர். 100 அல்லது அதற்கு மேல் எண்ணிக்கையில் தொழிலாளர் உள்ள நிறுவனங்கள் தாங்களே அந்த நிதியை வைத்து நிர்வகித்துக் கொள்ளலாம். அவர்களே வைத்துக் கொள்ளும்போது, அவர்கள் அளிக்க வேண்டிய பங்கின் அளவும் குறைக்கப்படும். இது  தொழிலாளிக்கு சமூகப் பாதுகாப்பு தருவதாகவே இல்லை. தொழிலாளி தனது சமூகப் பாதுகாப்புக்கும் முதலாளியையே சார்ந்திருக்க வேண்டும். இங்கும் விசாரணை, ரத்து போன்ற விசயங்கள் உண்டு. அதற்கு தொழிலாளி முதலாளி மீது புகார் தர வேண்டும். நடக்குமா இது?
வருங்கால வைப்பு நிதியில் மிகப்பெரும் தொகை உரிமை கோராமல் கிடக்கிறது. 2015ல் ரூ.27,000 கோடி கேட்பாரற்று இருப்பதாகச் சொல்லப்பட்டது. 12.04.2017 அன்று மாநிலங்களவை கேள்விக்கான பதிலில் 31.03.2016 அன்று கேட்பாரற்ற நிதி ரூ.40,865.14 கோடி என்று சொல்லப்பட்டது. இந்த பெரிய அளவிலான தொகைக்கு வட்டியும் சேர்த்தால் இன் னும் சில நூறு கோடிகள் கூடும். ஏழு ஆண்டுகளாக யாரும் உரிமை கோராமல் இருந்தால், அந்த நிதியை பிஎஃப் திட்டத்தின் ஓய்வூதியதாரர்கள் மருத்துவ திட்டத்துக்கு செலவிட உள்ளதாக சில மாதங்களாக மோடி அரசாங்கம் சொல்லி வருகிறது. இப்போது இந்த நிதி புதிய விதிகள் தொகுப்பின் கீழ் உருவாக்கப்படும் தேசிய நிலைப்படுத்துதல் நிதியத்துக்கு மாற்றப்பட்டு விடும். இந்த தேசிய நிலைப்படுத்துதல் நிதியம் 2017 நகலில் இல்லை. 2018 நகலில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டத்தில் ஏழு ஆண்டுகள் வரை உரிமை கோராத நிதி என்பது விதிகள் தொகுப்பில் அய்ந்து ஆண்டு கள் என்று குறைக்கப்படுகிறது.
புதிய விதிகள் தொகுப்பின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 30 அன்று உரிமை கோரப்படாத நிதி என்ன உள்ளது எனப் பார்த்து ஆறு மாதங்களுக்குள் அதை உரியவர்களிடம் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்படும்; அதற்குப் பிறகு இந்தத் தொகை தேசிய நிதியத்துக்குச் சென்று கூடுதல் சமூகப் பாதுகாப்பு அளிக்க பயன்படுத்தப்படும். தொழிலாளிக்குச் சென்று சேர வேண்டிய நிதியில் இருந்தே எடுத்து தொழிலாளிக்கே கொடுத்து அரசாங்கம் பெயர் வாங்கும். இந்தத் தொகையை, கூச்சமில்லாமல், சர்பிளஸ், உபரி என்று வேறு சொல்கிறார்கள்.
மூடப்பட்ட ஆலையின் பெயரில் மாநில பணிக்கொடை நிதியில் இருக்கும் தொகையும் உரிமை கோரப்படாத தொகை என்று கருதப்படும். அதுவும் தேசிய நிலைப்படுத்துதல் நிதியத்துக்கு வந்துவிடும்.
ஏற்கனவே, வருங்கால வைப்பு நிதியத்தில் உள்ள நிதியை, பிப்ரவரி 28, 2017 அன்றைய நிலவரப்படி ரூ.18,609 கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாக மாநிலங்களவை விவாதங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த சில அம்சங்களைச் சேர்த்துப் பார்க்கும் போது ஒரு சூதாட்டக் காட்சி கண்முன் விரிகிறது. இப்படி முதலீடு செய்யப்பட்டதில் ஏற்படும் லாபம் அல்லது நட்டத்துக்கு ஏற்ப தொழிலாளர்களுக்குத் தரப்படும் வட்டி விகிதத்தில் இருந்து அனைத்தும் சந்தையின் இரக்கமற்ற ஏற்றஇறக்கங்களுக்கு உள்ளாகும். 2017, 2018 நகல்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பற்றி வண்ணமயமான சித்திரத்தை முன்வைக்கின்றன. மோடி அரசாங்கத்தின் வகைமாதிரி ஏமாற்று நடவடிக்கை இது.
இந்த சூதாட்டத்தை, பறித்தெடுத்தலை தீவிரப்படுத்தத்தான் 2017 நகலில் 166 பிரிவுகளும் 2018 நகலில் 173 பிரிவுகளும் சுற்றிச்சுற்றி ஏதேதோ சொல்கின்றன. மோடி அரசாங்கம் மிகச் சுருக்கமாக, எதுவும் கேட்காதே, இருப்பதையும் கொடுத்து விடு என்று சொல்வதற்குப் பதில், நான் உனக்கு நல்லது செய்யவே உன்னிடம் இருக்கும் அனைத்தையும் பறித்துவிடுகிறேன் என்று சொல்வதாக இந்த புதிய விதிகள் தொகுப்பு உள்ளது.
விதிகள் தொகுப்பு அமலுக்கு வந்தவுடன் தற்போது செயல்பாட்டில் இருக்கும் 16 திட்டங்கள் நிறுத்தப்பட்டு அந்தத் திட்டங்களின் நிதி, புதிய தொகுப்பில் உள்ள திட்டத்துக்கு மாற்றப்படும்.
பிஎஃப் நிதி தவிர, கட்டுமானத் தொழிலாளர் நலவாரியங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் நலநிதி உள்ளது. (தீவிரமான போராட்டங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் 0.3% என இருந்த கட்டுமான நல நிதியை 1% என தொழிலாளர் கள் மாற்றியிருக்கிறார்கள். இப்போது நலநிதி 3% என உயர்த்தப்பட வேண்டும் என கட்டுமானத் தொழிலாளர்கள் கேட்கும்போது, அது 2%க்கு மிகக் கூடாது என்று விதிகள் தொகுப்பு சொல்கிறது). இந்த நிதியும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால், பிறகு அது விமானம் ஏறி வெளிநாட்டுக்குப் போய்விடும்.
விதிகள் தொகுப்பில் சமூக பொருளாதார நிலைமைகள் அடிப்படையில் தொழிலாளர்கள் நான்கு வகையினராக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப திட்டங்களுக்கு பங்களிப்பார்கள். நான்காவது வகையினர் எந்த பங்களிப்பும் செய்ய வேண்டியது இல்லை. இது தவிர சிறப்பு பதிவு என ஒரு பிரிவினருக்கு தரப்படுகிறது. விதிகள் தொகுப்பின் பதிவு தொடர்பான பிரிவு 11ன் கீழ் பதிவு செய்யப்பட தகுதியில்லாதவர்கள் பிரிவு 13 எ என்ற 2017 விதிகள் தொகுப்பில் இல்லாத 2018 விதிகள் தொகுப்பில் புதிதாக நுழைக்கப்பட்டுள்ள பிரிவின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். இவர்களை வரையறுக்கும் அடிப்படைகளை மாநில அரசு முடிவு செய்யும். தொழிலாளர்கள் என பதிவு செய்து கொள்ள முடியாதவர்கள் திட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு சமூக உதவித் திட்டம் உண்டு என்றால் அந்தப் பிரிவு யாராக இருக்க முடியும் என்ற கேள்விக்கு தெளிவான பதில் விதிகள் தொகுப்பில் கிடைக்கவில்லை. ஒரு வேளை நாளை முதியோர் ஓய்வூதியம் பெறுவோரை, அற்பமான வேலையில்லா காலப்படி பெறும் இளைஞர்களை, வேறு நலத் திட்டங்களில் பயன் பொறுவோரை, திட்டத்துக்குள் கொண்டு வந்து, தொழிலாளி தரும் நிதியில் இருந்தே சமாளித்து விடுவார்களோ?
விதிகள் தொகுப்பின் சாரமாக இருக்கிற இந்த பறித்தெடுத்தல் உள்ளடக்கத்துக்குத்தான் வேறுவேறு பெயர்கள் சொல்லப்படுகின்றன.
பறித்தெடுத்தல் என்ற உள்ளடக்கத்தை மறைக்கும் வடிவம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில், அதன் கூடுதல் பிரதிநிதிகள் கொண்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கீழ் மத்திய மற்றும் மாநில வாரியங்கள் உருவாக்கப்பட்டு, மாநில வாரியங்கள் மூலம் தொழிலாளர்கள் நலப்பயன்கள் பெறுவது என்பதாக புதிய கட்டமைப்பு இருக்கும் என்று விதிகள் தொகுப்பு சொல்கிறது.
திட்டத்தில் ஆய்வாளர்கள் உண்டு. மாற்று உள்ளடக்கும் திட்டத்தில் தனியார் நிறுவனங்களில் திட்டம் முறையாக அமலாகிறதா என்று ஆய்வு செய்வார்கள். சமாஜிக் சுரக்ஷா மித்ரா என்ற பெயருடன் உதவியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளால் நியமிக்கப்படுவார்கள்; மாநில வாரியத்தில் இருந்து நிதி பெற்று உள்ளாட்சி அமைப்புகளே ஊதியமும் தரும். கிட்டத்தட்ட தற்போதைய ஆஷா திட்டத் தொழிலாளர்கள்போல் இவர்கள் இருப்பார்கள். புதிய வகை அடிமைகளை புதிய விதிகள் தொகுப்பு உருவாக்கும்.
மத்திய தணிக்கை அதிகாரி தணிக்கை நடத்துவார். மாநில வாரியங்கள் அய்ந்தாண்டுகள் இடைவெளியில் சமூகத் தணிக்கை நடத்தலாம். முதலாளிகள் தரப்பிலான மீறல்கள், விலகல்களுக்கு அபராதம் முதல் சிறைத் தண்டனை வரை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. பிரிவு 21ன்படி தொழிலாளி ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை முறையாக செலுத்தவில்லை என்றால் இரண்டு ஆண்டுகள் முதல் அய்ந்தாண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை அபராதமும் உண்டு. (சொல்ல சொல்ல இனிக்குதடா... பி.சுசீலாவின் அந்த இனிமையான குரலின் பாட்டு கேட்கிறது). இது வரை எந்த முதலாளியும் இதுபோன்ற மீறல்களில் தண்டனை பெற்றதாக சரித்திரம் இல்லை. இனி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கும் அளவு தொழிலாளர்கள் மாயையிலும் இல்லை. ஊதியமில்லா உழைப்பு என்ற தண்டனை விதிகள் தொகுப்பில் சொல்லப்படுகிறது. இது தொழிலாளிக்கு விதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
பிரிவு 12 தொழிலாளி இறந்தாலோ, வெளிநாட்டுக்குச் சென்றாலோ, பணிமூப்பு அடைந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்கு வேலை செய்வதை நிறுத்திவிட்டாலோ அவரது பதிவு நீக்கப்பட்டுவிடும். குறைந்தபட்ச கால அளவு என்ன என்பது பின்னர் நிர்ணயிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
விதிகள் தொகுப்பில் குறிப்பாக சொல்லப்படாத, ஆனால், பின்னர் நிர்ணயிக்கப்படுகிற, குறைந்தபட்ச தொழிலாளர் எண்ணிக்கை கொண்ட நிறுவனங்கள் பணிக்கொடை தர வேண்டும். இந்த குறைந்தபட்ச எண்ணிக்கையும் தொழிலுக்கு தொழில் மாறுபடும். எந்தத் தொழிலில் என்ன எண்ணிக்கை என்பதும் பின்னர் நிர்ணயிக்கப்படும்.
பின்னர் நிர்ணயிக்கப்படும் என்று பல அம்சங்கள் பற்றி விதிகள் தொகுப்பின் பல பிரிவுகள் சொல்கின்றன. இந்த இடைவெளி, பலரையும் வெளியேற்ற பின்னர் பயன்படுத்தப்படும் என்று நாம் புரிந்துகொள்ள சமூகப் பாதுகாப்பு விதிகள் தொகுப்பில் போதுமான இடமுள்ளது.
எப்படிப் பார்த்தாலும் தொழிலாளிக்கு, சாமான்ய மக்களுக்கு நன்மை பயக்கும் அம்சங்களை சமூகப் பாதுகாப்பு விதிகள் தொகுப்பில் காண முடியவில்லை. மாறாக, இப்போதுள்ள சமூகப் பாதுகாப்பையும் ஒழித்துக் கட்டும் முயற்சிகளின் அறிகுறிகளே தெரிகின்றன.
இது வரை மோடி அரசாங்கம் சாமான்ய மக்களுக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லை. இனி எந்த ஆணியும் பிடுங்க வேண்டாம் என்றுதான் நாட்டு மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இருக்கிற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்குவது, மேம்படுத்துவது, மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதிப்படுத்துவது ஆகியவையே இப்போது மக்கள் கோரிக்கைகளாக உள்ளன. மோடி அரசாங்கம் பறித்தெடுத்தலுக்கான இந்த விதிகள் தொகுப்பை முழுவதுமாக கைவிட வேண்டும். மக்கள் பணத்தில் சூதாட்டம் நடத்த முயற்சி செய்யக் கூடாது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, பணக்காரர்களுக்கு தொழிலாளர்கள் நிதியை தந்துவிட தலைகீழாக நிற்கும் மோடி அரசாங்கத்தை மீண்டும் அதிகாரத்தின் அருகில் கூட எந்த இடத்திலும் நாட்டு மக்கள் விட்டுவிடக் கூடாது. மோடி மாயை அகற்றப்பட்டுவிட்டது. மோடியின் அரசு வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. 

Search