இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது இந்திய ஒன்றிய அரசின் கடமை
இந்தக் கடமையை தட்டிக் கழிப்பது கயமை
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்ய, கட்சியை வளர்க்க, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க, ஆட்சிகளைப் பிடிக்க, நிறுவனங்களை சிதைக்க, மக்களை பிளவுபடுத்த, அவர்களை பதட்டத்திலேயே வைத்திருக்க, கலவரங்களை உருவாக்க, பொய்ச் செய்திகளைப் பரப்ப, எதிர்ப்பாளர்களை சிறையில் தள்ள....
கிழக்கிந்திய கம்பெனியின் துணிகள் நாட்டுக்குள் வந்து இந்தியாவின் நெசவுத் தொழில் நசிந்துபோனபோது, கங்கைச் சமவெளி நெசவாளர்களின் எலும்புக் கூடுகளால் நிறைந்தது. அன்று இருந்த ஒன்றுபட்ட வங்கத்தின் டாக்காவில் மக்கள் தொகை 1,50,000 என்பதில் இருந்து 20,000 என குறைந்தது என்று மார்க்ஸ் எழுது கிறார். 56 இன்ச், வளர்ச்சி நாயகன் நரேந்திர மோடி ஆட்சியில் இருபத்தியோராம் நூற்றாண்டில் கங்கைக் கரை கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களால் நிறைந்துவிட்டது. தொற்றுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்துவதை விட தொற்றுக்கு இன்னும் ஆளாகாமல் இருப்பவர்களை தனிமைப்படுத்துவது எளிது என்னும் ஆகஆபத்தான நிலையை 56 இன்ச் உருவாக்கிவிட்டது.
2020 அக்டோபர், நவம்பர் மாதங்களில் பீகார் தேர்தல் நடந்தது. கொரோனா முதல் அலை ஓயும் முன்னரே அங்கு தேர்தல் பிரச்சாரம் துவங்கிவிட்டது. அப்போது, அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என்றார்கள். அதாவது ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே தடுப்பூசி பற்றிய பேச்சு துவங்கிவிட்டது. மக்கள் நலன் சார்ந்த மோடி அரசின் பேச்சு பொதுவாக பேச்சோடு நின்று விடுவதுபோல், தடுப்பூசி விசயத்திலும் நடக்கிறது.
தடுப்பூசி பொதுவாக அனைத்தும் தழுவிய விதத்தில்தான், அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது. இதில் இந்திய ஒன்றிய அரசுதான் பொறுப்பேற்கிறது. தடுப்பூசி நடைமுறை இதுதான் என்பதால், கொரோனா தடுப்புக்கும் இப் படித்தான் நடக்க வேண்டும். அப்படித்தான் துவங்கவும் செய்தது. ஜனவரி 16 அன்று துவக்கப்பட்டு முதல் கட்டமாக முன்களப் பணியா ளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. மார்ச் 1 முதல் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர் என தடுப்பூசி போடும் பணி துவங்கியது. ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. அது நடந்து கொண்டிருக்கும்போதே, மே 1 முதல் 18 - 44 வயதுள்ளவர்களுக்கும் தடுப்பூசி என அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டத்தில் அதற்கு விலை உண்டு என்று சொல்லப்பட்டது. ஜ÷லை இறுதிக்குள் 60 கோடி தடுப்பூசிகள் போடுவது இலக்கு. அனைத்தும் தழுவிய விதத்தில், அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று இன்னும் எதுவும் சொல்லவில்லை.
தடுப்பூசி போடும் பணி நடந்த, அது பற்றிய அறிவிப்புகள் வெளியான இந்தக் காலம் முழுவதும் தேர்தல் தயாரிப்பு மற்றும் வாக்கெடுப்பு காலம். அக்கம்பக்கமாக கொரோனாவின் இரண்டாம் அலையும் வேகம் பிடித்தது. அது உச்சம் அடையும் நேரம் தடுப்பூசிக்கு மூன்று விதமான விலைகள் நிர்ணயிக்கப்பட்டன. கோவிஷீல்ட் ஒன்றிய அரசுக்கு ரூ.150, மாநில அரசாங்கங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600. ஒரே நாடு ஒரே ஊசி, ஒரே விலை என்றெல்லாம் மோடி அரசு இந்த விசயத்தில் பேசவே இல்லை. (இன்றைய நிலைமைகளில் தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் ரூ.850 முதல் ரூ.1000, கோவேக்சின் ரூ.1,750 முதல் ரூ.2,000 என விலையில் போடப்படுகிறது).
விலை எல்லாம் நிர்ணயித்த அரசுக்கு, 2020 ஆகஸ்ட் மாதத்திலேயே தடுப்பூசி போடுவது பற்றி பேசத் துவங்கிய அரசுக்கு திட்டம் என ஒன்று இருந்திருக்க வேண்டுமல்லவா? 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 முதல் 44 வயதில் 58 கோடி பேரும் 45 வயதுக்கு மேல் 25 கோடி பேரும் இருந்தனர். 2011ல் 121 கோடி என இருந்த மொத்த மக்கள் தொகை, மக்கள் தொகை அனுமான விவரங்கள்படி, 2021ல் 136 கோடி ஆகியிருக்கிறது. 2021ல் 15 முதல் 44 வயதில் 66 கோடி பேரும் 45 வயதுக்கு மேல் 34 கோடி பேரும் உள்ளனர்.
ஆக, கிட்டத்தட்ட 100 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றால் 220 கோடி டோஸ்களாவது வேண்டும். இதை உற்பத்தி செய்து உறுதி செய்வது, அவ்வளவு கடினமான செயலா? நிதி இல்லை என்று சொல்லவே முடியாது. இந்தியாவில் நிதி கொட்டிக் கிடக்கிறது. தனிநபர் செல்ல விமானம், வசிக்க வீடு எல்லாம் சாத்தியம் எனும்போது, 220 கோடி டோஸ் தடுப்பூசிக்கு, ஒரு டோஸ் தாராளமாக ரூ.200 என என்று வைத்துக் கொண்டால் கூட ரூ.44,000 கோடிதானே. தடுப்பூசி போட ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் ரூ.35,000 கோடி வேறு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்சார்பு பேசும் மோடி அரசு நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கு மாறாக தனியார் நிறுவனங்களை மட்டும் தடுப்பூசி உற்பத்திக்கு அனுமதித்தது. 2021 ஏப்ரல் வரை 27.60 கோடி கோவிஷீல்ட் மற்றும் 8 கோடி கோவேக்சின் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு கொள்முதல் செய்துள்ளது. இதில் இது வரை 21.60 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 4.5 கோடி பேருக்கு இரண்டு தவணை டோஸ்களும் போடப்பட்டுள்ளன. மீதமுள்ள 17 கோடி பேர் இரண்டாவது தவணை டோஸ்களுக்கு காத்திருக்கிறார்கள்.
2021 ஜ÷ன் மாதத்தில் இரண்டு தடுப்பூசிகளும் சேர்த்து 12 கோடி டோஸ்கள் இருக்கும் என்று ஒன்றிய அரசு சொல்கிறது.
ஒரு மாத உற்பத்தி ஆற்றல் கோவிஷீல்ட் 6 கோடி, கோவேக்சின் 1 கோடி என இருந்ததை அதிகரிக்க சீரம் நிறுவனத்துக்கு ரூ.3,000 கோடி, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடி நிதி தருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிதியுதவியுடன் 2021 ஜ÷லை இறுதிக்குள் கோவிஷீல்ட் 10 கோடி டோஸ்கள், 2022 ஜ÷லைக்குள் 100 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யும் என்றும் அதில் 80 கோடி இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பாரத் பயோடெக் நிறுவனம் 2021 ஜ÷லையில் 6 கோடி டோஸ், 2022 ஜ÷லை இறுதிக்குள் 70 கோடி டோஸ் உற்பத்தி செய்ய முடியும்.
ஆக, 2021 ஜ÷லை இறுதியில், கோவிஷீல்ட் தனது சொந்த காரணங்களுக்காக எடுத்துக் கொள்ளும் தடுப்பூசிகள் தவிர, இரண்டும் ஒரு 12 கோடி கிடைக்கலாம். 2021 செப்டம்பரில் கோவேக்சின் உற்பத்தி 10 கோடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த வேகத்தில் போனால், சராசரியாக மாதம் 15 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என எடுத்துக் கொண்டாலும், இதுவரை 21 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ள நிலையில் இன்னும் 200 கோடி டோஸ்களை உற்பத்தி செய்து முடிக்க இன்னும் 13 மாதங்கள் ஆகலாம். அதாவது 2022 ஜ÷லை வரை போகலாம். அது வரை மோடி தனது இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி விரித்து மூன்றாவது அலை வராமல் தடுத்துவிடுவார்.
டில்லி அரசாங்கம், வேகவேகமாக தடுப்பூசி போட்டதால், அங்கு தட்டுப்பாடு நிலவுகிறது, நாங்கள் மெதுவாகப் போடுகிறோம், அதனால் எங்களிடம் இருப்பு உள்ளது என அரியானா முதலமைச்சர் சொன்னார். மோடி தனது பங்குக்கு, தடுப்பூசி உற்பத்தியில் உள்ள தாமதத்தை பூசி மெழுக, இரண்டாவது தவணை போடும் கால இடைவெளியை நீட் டித்துவிட்டார். மே 1 முதல் 18 முதல் 45 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியும் மே 1 அன்று அந்த பணி துவக்கப்படவில்லை. தாமதமாக ஒரு வாரம் கழித்து துவக்கப்பட்டபோது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் இரண்டாவது தவணை தடுப்பூசிக்கான கால இடைவெளி 6 வாரங்களில் இருந்து 12 வாரங்கள் என மாற்றப்பட்டது. துவக்கத்தில் இது 4 வாரங்கள் என இருந்தது.
இது வரை 94 நாடுகளுக்கு 6 கோடியே 60 லட்சம் டோஸ் மருந்துகளை இந்திய ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. இதில் 1 கோடியே 6 லட்சம் டோஸ் மட்டும் உதவி வகையில் தரப்பட்டுள்ளதாகவும் மற்றவை சீரம் நிறுவனம் தனது தனிப்பட்ட ஒப்பந்தம் மற்றும் வெளி நாடுகளுக்கு விற்பனை என தந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உற்பத்தி குறைவு, உற்பத்திக்கான கால அளவு கூடுதல் என இருக்கும் போது, வெளிநாடுகளுக்கு ஏன் எங்கள் குழந்தைகள் ஊசிகளை தந்தீர்கள் என்று கேட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இரண்டு தனியார் நிறுவனங்களை மட்டும் தடுப்பூசி உற்பத்திக்கு நம்பியிருப்பது, இருக்கிற பொதுத் துறை நிறுவனங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வர மறுப்பது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இடைவெளி நீட்டிப்பு, விலை நிர்ணயம், மாநிலங்களுக்கு பாரபட்சமான தடுப்பூசி ஒதுக்கீடு ஆகிய அனைத்தும், இந்த பெருந்தொற்று காலத்தில் ஓர் அரசு எப்படி செயல்படக் கூடாதோ அந்த விதத்தில் மோடி அரசு செயல்படுவதைக் காட்டுகிறது. அதாவது பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காப்பது என்பதற்குப் பதிலாக, தனியார் நிறுவனங்கள் லாபம் பார்க்க அனுமதிப்பது, சுய விளம்பரம் தேடுவது, மக்களை வழக்கம்போல் நிச்சயமின்மையில் தள்ளுவது என்று தனக்கு வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது.
மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தரவில்லை. மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசியை தரவில்லை. மாநிலங்கள் தாங்களே தடுப்பூசி வாங்கிக் கொள்வதற்கான கதவுகள் மூடப்படுகின்றன. தாங்களே உற்பத்தி செய்கிறோம் என்று கடிதம் எழுதியும் பதிலில்லை. பிறகு என்னதான் செய்யப் போகிறார்கள்?
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி இப்போது ஒன்றிய அரசு யோசிக்கவே இல்லை. மூன்றாம் அலை வந்தால் அது குழந்தைகளையே பெரிதும் பாதிக்கும் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். முதல் அலை சற்று ஓயும் நேரத்திலேயே, இரண்டாம் அலை வரும் என்ற எச்சரிக்கைகயை பொருட்படுத்தாமல், இரண்டாம் அலையை வரவழைத்துவிட்டு, அது பேயாட்டம் போடும்போது, தும்பை விட்டு வாலைப் பிடித்து வால் ஓடும் ஓட்டத்துக்கெல்லாம் ஓடி தொற்று, உயிரிழப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய நிலைமைகளில் இருந்தாவது பாடம் பெறும் ஆற்றலும் ஒன்றிய அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய மக்கள் மோடி ஆட்சி நடக்கும் இந்த ஊழிக்காலத்தை கடந்து வருவதற்குள் நாட்டின் தடுப்பூசி எண்ணிக்கையை விட இடுகாடுகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்போல் தெரிகிறது.
பெருந்தொற்றில் இருந்து மக்களை காக்கும் கடமையை தட்டிக் கழிக்கும் மோடி அரசு பதவி விலக வேண்டும் என்ற முழக்கம் நாட்டின் பல பகுதிகளிலும் ஒலிக்கத் துவங்கிவிட்டது. பெருந்தொற்று காலத்தால், இணைய வெளியில் உரக்க ஒலிக்கும் இந்தக் குரல் விரைவில் வீதிகளிலும் ஒலிக்கும். நாட்டை எல்லா விதங்களிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மக்கள் உயிர் வாழ்வதைக் கூட உறுதி செய்ய முடியாத, கையாலாகாத, திறமையற்ற மோடி அரசு பதவி விலகுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையை மக்கள் போராட்டங்கள் விரைவில் உருவாக்கும்.