COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 3, 2021

தொழிலாளர்கள் உடல்நலம் காக்க, உயிர் காக்க
ஆலைகள் இயங்க கூடாது!


அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் இந்த காலத்தில் முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும்!


(தலைநகர் தொழில் மண்டல தொழிலாளர் முன்னோடிகளுடன் JITSI என்ற செயலி மூலம் நடந்த மெய்நிகர் கூட்டத்தில் 23.05.2021 அன்று தோழர் எஸ்.குமாரசாமி முன்வைத்த கருத்துகள்)


தமிழ்நாட்டின் தலைநகர் தொழில் மண்டலத்தில் காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டாவது  அலையில் மடிந்த தொழிலாளர்களுக்கும், மடிந்த மற்ற அனைவருக்கும்  இடது தொழிற்சங்க மய்யம் (LTUC) அஞ்சலி செலுத்துகிறது.


இந்த மண்டல தொழிலாளர்கள் தொடர்பாக, தொழிலாளர்களின் உணர்வுகள் அறிந்து, பல்வேறு அமைப்புகள் ஏற்கனவே கோரிக்கைகள் எழுப்பியுள்ளன. பெருந்தொற்று காலத்தில் ஆலைகளை இயக்காமல் சம்பளம் வழங்குமாறு கம்யூனிஸ்ட் கட்சி, எல்டியுசி, சிஅய்டியு, யுஎல்எப் அமைப்புகள் கோரியுள்ளன.
இரண்டாம் அலை தேர்தலுக்கு பிறகு தீவிரமாக வெளிப்பட்டது.
மே மாதத்தில்தான் புதிய அரசு பொறுப்பேற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது தவணையாக மே 24 முதல் 30 வரை பொது முடக்கம் அறிவித்துள்ளார். அப்படி அறிவிக்கும்போது, பரவலை தடுக்க, அதன் வேகத்தை மட்டுப்படுத்த, பரவல் சங்கிலி அறுத்தெறியப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இப்போது மளிகை கடைகளில், காய்கறி கடைகளில் மக்கள் திரள்வதை தடுக்கும் விதம் அவை அனைத்தும் ஒரு வார காலம் முழுவதுமாக மூடப்படும் என்று சொல்லியுள்ளார். காற்றில் பரவும் நீர்த் வலை மூலம் கொரோனா கிருமிகள் 10 மீட்டர் வரை பரவும் என்று வல்லுனர்கள் சொன்னதும், முதலமைச்சரின் முடிவுக்கு பின்னுள்ள காரணமாக இருக்க முடியும்.
தலைநகர் மண்டலத்தில், எந்த தொழிற்சாலையிலாவது, 10 மீட்டர் தனிநபர் இடை வெளிவிட்டு தொழிலாளர்கள் பணியாற்றுவது சாத்தியமா? கடைகளில் கூடுவதால் தொற்று பரவுமென்றால் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கில் சில ஆயிரங்களில் தொழிலாளர்கள் ஒன்றுதிரள்வதன் மூலம் தொற்று பரவாதா? கடைகள் மூடப்படும், வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்றெல்லாம் ஒரு கண்ணில் வெண்ணை வைத்துவிட்டு, தொழிற்சாலைகள் ஓடித்தான் ஆகவேண்டும், The show must go on என மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது நியாயம்தானா? சமத்துவக் கோட்பாடு என்ன ஆகும்?
இந்தியாவில் 1. குஜராத் 2. மகாராஷ்டிரா 3. டெல்லி தலைநகர் மண்டலம், 4. சென்னை தொழில் நகர மண்டலம் ஆகியவையே, முதலீடு குவிந்துள்ள இடங்கள். முதலீட்டு வருகை, உற்பத்தி தொடர்வது, பொருளாதார நடவடிக்கைகளில் வேகம் வருவது ஆகியவை வாழ்வாதாரத்திற்கு முக்கியமானவை ஆகும். ஆனால் வாழ்வாதாரத்தையும், உயிரோடு இருப்பதையும், ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்த முடியாதல்லவா? சம்பளமோ, நல்வாழ்க்கையோ உயிரோடு இருந்தால்தானே சாத்தியமாகும். இரண்டாம் அலை காலத்தில் ஆக்சிஜன் இல்லை, ஆம்புலன்ஸ் இல்லை, படுக்கையில்லை, மருத்துவமனைகளில் சிகிச் சைக்கு இடமில்லை என்ற நிலையில், யார் வீட்டு கதவை கொரோனா தட்டுமோ என, இந்த மண்டலத்தின் தொழிலாளர்களும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் கூற்றுப்படியே கொரோனா ஜ÷ன் துவக்கத்தில்தான் உச்சத்தை எட்டும் என்று சொல்வதை கணக்கில்கொண்டு, வேகம் தணியும் வரை, பொது முடக்கம் நீக்கப்படும் வரை, ஆக்சிஜன் தயாரிப்பு, குடிநீர், மின்சாரம், பால் போன்ற அத்தியாவசிய பணி தவிர மீத முள்ள தொழிலகங்கள் மூடப்படுவதுதானே, சரியாக இருக்கும். தலைநகர் மண்டல தொழிலகங்கள் இயங்கினால், முதலில் அங்கு தொற்று பரவும்; அங்கிருந்து சமூகத்திற்கு தொற்று பரவும். தொற்றுச் சங்கிலி அறுபடுவதற்கு மாறாக, தீவிரமடையும். பரவும். ஆகவே, தொற்று சங்கிலி பரவாமல் அறுபடவும், தொழிலாளர்கள் உடல்நலம் மற்றும் உயிர் காக்கவும், இந்த ஆலைகள் இப்போது இயங்க கூடாது என்றும், அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் இந்த காலத்தில் முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிடுவது மட்டுமே பொருத்தமாக இருக்கும்.
மோடியும், அமித் ஷாவும் காணாமல் போய் விட்டார்கள். அவர்கள் மக்களை காப்பார்கள் என்று நம்புவதற்கு எதுவுமில்லை. புதிய தமிழ்நாடு அரசு, மாநில உரிமை காக்கும், மாநில மக்கள் நலன் காக்கும் சில வரவேற்கத்தக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இது சரியான துவக்கம். தடுப்பூசி தமிழ்நாட்டுக்கு போதுமான அளவுக்கு ஒன்றிய அரசு தராவிட்டால், வெளிநாடுகளிலிருந்து வாங்கிக் கொள்வோம் என்று முதலமைச்சர் சொல்லியிருப்பது ஒன்றிய அரசுக்கு சரியான அடிதான். ஒன்றிய அரசு மாநில உரிமைகளை பறிக்கும் விதத்தில், கூட்டவிருந்த கல்வி தொடர்பான கூட்டத்தில் தமிழ்நாட்டின் கல்வித் துறை அமைச்சர் கலந்துகொள்ள மறுத்ததும் கூட, பொருத்தமான எதிர்ப்பு நடவடிக்கையாகும்.
அதேநேரம் முந்தைய முதலமைச்சர் கொரோனோ தொற்று பரவுவதற்கு மக்களை பொறுப்பாக்கியது போல், இப்போதைய முதலமைச்சரும் பேசாமல் இருப்பது நல்லதாக இருக்கும். முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இறப்பு நஷ்ட ஈடு என்ற முடிவுப்படி கொரோனாவில் மடிந்த தலைநகர் மண்டல தொழிலாளர்களுக்கும் அவர்களது நிர்வாகங்கள் நஷ்ட ஈடு தருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
முந்தைய அரசு, எப்போதும் முதலீட்டாளர்களை சந்திக்க தயாராய் இருந்தது. தொழிற்சங்கங்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அது அவசியம் என்றும் கருதவில்லை. ஹுண்டாய் முதலாளியோ, நிசான் முதலாளியோ எப்போது வேண்டுமானாலும் முதல மைச்சரை வாக் - இன் (Walk-in) முறையில் சந்திக்க முடியும். புதிய முதலமைச்சர், இந்த முதலீட்டாளர்களில் சில வாக்காளர்கள் கூட இல்லை என்பதையும், வாக்காளர்களான தொழிலாளர்களையும் அவர்களது சங்க பிரதிநிதிகளையும் சந்திப்பது மட்டுமே ஜனநாயகம் என்றும் உணர்வார் என நம்புகிறோம், விரும்புகிறோம். மருத்துவ வல்லுனர்கள் பொது சுகாதார நிபுணர்களை பல்வேறு கட்சியினரை சந்திக்கின்ற அரசு, முதலமைச்சர் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் மூலம் மய்யத் தொழிற்சங்க பிரதிநிதிகளை  தொழிற்சாலை மட்ட சங்க நிர்வாகிகளை சந்திப்பது மட்டுமே ஜனநாயகத்திற்கு உகந்ததாக இருக்கும். முந்தைய அரசு தொற்று கருதி இடம் மாற்றி கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்றத்தை கூட்டியது. இப்போதைய அரசு தொழிலாளர் பிரதிநிதிகளை, தலைநகர் மண்டலத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை என தனித்தனியாக உரிய பாதுகாப்பு மற்றும் கவனத்துடன் வெகு விரைவில் சந்தித்து, அவர்களது தேவைகளை, ஆலோசனைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்துவோம். அப்படி வலியுறுத்த நமக்கு உரிமையும் வலிமையும் உண்டு.
அஜிம் பிரேம்ஜி பல்கலை கழகம், ஒர்க்கிங் இந்தியாவின் நிலைமை என்ற அறிக்கையை ஏப்ரல் 2021 இரண்டாம் அலை துவங்கும் முன்பே வெளியிட்டது. இந்த அறிக்கைப்படி ஏப்ரல், மே 2020 நாடு முழுவதும் 10 கோடி இந்தியர்கள் வேலை இழந்தார்கள். அவர்களில் ஒன்றரை கோடி பேருக்கு 2020 இறுதி வரை வேலை கிடைக்கவில்லை. இந்த காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே 23 கோடி பேர் சென்றுவிட்டனர். அவர்கள் வருமானம் ஒரு நாளில் ரூ.375அய், மாத வருமானம் ரூ.9,750அய் தாண்டவில்லை. அசோகா பல்கலை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி 2016ல் 5.10 கோடி என இருந்த மேனுபேக்சரிங் வேலைகள் 2020ல் 2.7 கோடி என குறைந்து விட்டன. இந்த சரிவில் 32% 2019 - 2020ல் இருந்து 2020 - 2021ல் மட்டும் நடந்தது. ஜவுளித் துறை வேலை வாய்ப்பு 2016 - 2017ல் 1.26 கோடி என இருந்தது, 2020 - 2021ல் 55 லட்சம் என குறைந்தது. எல்லாவற்றையும் தாங்கும் கட்டுமானத் துறையிலும் கெடுவாய்ப்பாக, இந்தக் கட்டத்தில் பில்டிங் மெட்டீரியல் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு 1.16 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்து 46 லட்சம் என சரிந்தது. இந்தியாவில், தமிழ்நாட்டில் வேலை இழப்பால், வருமான இழப்பால் மக்கள் துன்பப்படுகிறார்கள்.
கொரோனா முதல் அலை காலத்தின் போது LTUC Helpline உருவாக்கி பிற மாநில தொழிலாளர்கள், ஏழை எளியோருக்கு உதவுவதில், இந்த மண்டல தொழிலாளர்களை LTUC ஈடுபடுத்தியது. இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சியில் ஹோன்டுராஸ் நாட்டில் செயல்படுகின்ற மருந்து தயாரிக்கும் துறை ஊழியர்கள், ஸ்பானிஷ் மொழி பேசுகிற பல நண்பர்கள் மூலம், தமிழ்நாட்டிற்கு இரண்டே தினங்களில் ரூ.1,75,000 நிதி திரட்டப்பட்டுள்ளது. நகர்ப்புற வறியவர்கள், வருமானம் இல்லாத தொழிலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு, அரிசி மற்றும் நிதியுதவி சென்று சேர்வதை கட்சியும் எல்டியுசியும் உறுதி செய்துள்ளன. இந்தப் பகுதியில் தொழிலாளர் ஒருமைப்பாடு என்ற பெயரால், உடனடியாக ஒருமைப்பாடு நிதி திரட்டி, ஒப்பந்த தொழிலாளர்கள் கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் போன்றோருக்கு நேசக்கரம் நீட்டலாம்.
இந்த மெய்நிகர் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள், தம்மோடு தொடர்புடையவர்கள், நாம் தொடர்பு கொள்ளக்கூடியவர்கள் ஆகிய அனைவரோடும் பேசி, தொழிலாளர், கோரிக்கை நாளொன்று அனுசரிக்கலாம். அவநம்பிக்கை எப்போதுமே மாற்றத்திற்கு விரோதி என்பதால், நம்பிக்கையோடு மெய்நிகர் கூட்டங்களிலிருந்து நகர்ந்து, மெய்யான எதிர்ப்பு நாள், எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை நோக்கி நம்மால் எப்போது வேண்டுமானாலும் நகர முடியும், நகர்வோம். அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கேற்ப நாம் அடுத்தடுத்து யோசிக்கலாம்

Search