குடியேறியோர் காலனி ஆதிக்கம், இனவெறி பாசிசம் என இஸ்ரேலை அழைக்க முடியுமா?
எஸ்.குமாரசாமி
கேள்வி: இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை முடிந்துவிட்டதா?
பதில்: சுதந்திர பாலஸ்தீனம் உருவாகும் வரை பாலஸ்தீனர்கள் ஓய மாட்டார்கள். இஸ்ரேலும் நிம்மதியாக இருக்க முடியாது.
கேள்வி: இஸ்ரேலுக்கு வாழும் உரிமை உண்டு (Israel has the right for its existence
) என்று அடிக்கடி, அய்க்கிய அமெரிக்காவும், மேலை நாடுகளின் ஊடகங்களும் சொல்கின்றனவே?
பதில்: இது பிரச்சனையை தவறாகவும், தலைகீழாகவும் முன்னிறுத்துவது ஆகும். இஸ்ரேல் 1948ல் இருந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநாடாக கட்டற்ற உரிமைகளோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஜோர்டான், எகிப்து, சிரியா மற்றும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள அரபு நாடுகளெல்லாம் இஸ்ரேலோடு மோதி வெல்ல முடியாது என உணர்ந்து விட்டனர். சவுதி அரேபியா துவங்கி பல அரபு நாடுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இஸ்ரேலுடன் உறவாடுகின்றனர். இஸ்ரேல் மட்டுமே அந்தப் பிராந்தியத்தில் அணு ஆயுத நாடு என்பது, மிக மிக அடிப்படையான விஷயமாகும்.
இஸ்ரேல் இருப்பதற்கு, இஸ்ரேலின் வாழும் உரிமைக்கு சுற்றியுள்ள நாடுகளால் எந்த ஆபத்தும் இல்லை. மாறாக இஸ்ரேலால்தான், மற்ற நாடுகளுக்கு ஆபத்து. இஸ்ரேலின் வாழும் உரிமை பற்றிய கதையாடல், குடியேறியோர் காலனி ஆதிக்க நாடும், இனவெறி பாசிச நாடுமான இஸ்ரேலும், அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் கட்டமைத்து உள்ள அநீதியான கதையாடலாகும்.
கேள்வி: அரபுகளுக்கு நாடுகள் உண்டு. இன, மொழி, மத அடிப்படையில் பல நாடுகள் உருப்பெற்றுள்ளன. அப்படியிருக்க, பல நூற்றாண்டுகளாய் ஒடுக்கப்பட்ட யூதர்களுக்கு, ஹிட்லரின் பாசிஸ்டுகளால் வதை முகாம் உள்ளிட்ட இனப்படுகொலைகளுக்கு ஆளாக்கப்பட்ட யூதர்களுக்கு தனிநாடு உருவாகி, நிலவி நீடிப்பதில் என்ன தவறு? இஸ்ரேல் வெறுப்பு யூத வெறுப்பாகாதா? anti-semitism ஆகாதா?
பதில்: கடந்த காலங்களில் அநியாயங்களுக்கு, ஒடுக்குமுறைகளுக்கு ஆளானவர்கள், நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் அநியாயம் செய்திட ஒடுக்குமுறையை ஏவிட உரிமை உண்டு என்று வாதாட முடியுமா? யூதர்கள் பல நூற்றாண்டுகள் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர், ஹிட்லரின் பாசிசத்தின் போது யூத வெறுப்பு, யூத இனப்படுகொலை (Holocaust) என்ற அதன் அதலபாதாளத்தை தொட்டது என்பதெல்லாம் மறுக்க முடியாத உண்மைகளாகும்.
இஸ்ரேலை பற்றி சரியாக சொல்வதென்றால், 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பதுதான் பொருத்தமாக இருக்கும். தேச அரசுகள், சில நூற்றாண்டுகள் வரலாறு கொண்டவை. யூத ராஜ்ஜியம் என்பது இதிகாச புராணக் கதைகளில் வரும் ராஜ்ஜியமாகும். அது 1000 ஆண்டு கதையாகும். 20ஆம் நூற்றாண்டில் குறிப்பாக 1941 முதல் 1945 வரை அய்ரோப்பாவில் மூன்றில் இரண்டு யூதர்கள் என 60 லட்சம் பேர் கொல்லப்பட்ட அநீதி ஆகியவற்றை வாய்ப்பாக்கிக்கொண்டு, அரசியல் யூதமான ஜியானிசம், நிதி மூலதன ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற மதவாத ஜியானிசம் பாலஸ்தீன பூமியில், அரபு பூமியில், பாலஸ்தீனர்களை அரபுகளை அவர்கள் மண்ணிலிருந்து, வரலாற்றிலிருந்து விரட்டியே, இஸ்ரேல் என்ற யூத நாட்டை நிறுவியது. அன்று முதல் இன்று வரை அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவுடன் இஸ்ரேல்தான் பாலஸ்தீனியர்களை, அவர்களது சொத்துக்களை பறித்துக்கொண்டு அவர்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி வேட்டையாடுகிறது. யூதக் குடியேற்ற பகுதிகள் உள்ள மேற்குக்கரையிலும், ஜெருசலேத்திலும், அநீதிகளை இழைக்கிறது. காசாவை வதைமுகாம் ஆக்கியுள்ளது. இஸ்ரேலின் குடியேறியோர் காலனி ஆதிக்கத்தை (settler
colonialism ) எதிர்ப்பது, இனவெறி பாசிசத்தை எதிர்ப்பது, யூத வெறுப்பாகாது, anti-semitism ஆகாது.
இன்று காசாவும், இஸ்ரேலும் இருக்கிற பகுதிகளில், 1882ல் 3% மட்டுமே யூதர்கள் இருந்தார்கள். இஸ்ரேல், பாலஸ்தீன் என்ற இருதேச அரசுகள் என்பதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டாலும், காசா மற்றும் ஜெருசலேம், மேற்குக்கரை உள்ளிட்ட இஸ்ரேலின் நிலப் பகுதிகளில் 22% மட்டுமே பாலஸ்தீனம் என்பதாக அமையும். ஆகவே இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பாளரை பாதிக்கப்பட்டவராக முன்னிறுத்துவது, அநீதிக்கு துணைபோவதாக மட்டுமே இருக்கும்.
கேள்வி: இந்திய சுதந்திரப் போராட்டம் நடக்கும்போது, இஸ்ரேல் என்ற தனி நாடு உருவாவதை காந்தி ஆதரித்தாரா?
பதில்: காந்தி வெவ்வேறு நாடுகளில் வாழும் வெவ்வேறு மதத்தினர், மதத்தின் அடிப்படையில் தனி நாடுகள் கோருவதை ஏற்க மறுத்தார். பாலஸ்தீனிய பூமியில் பாலஸ்தீனரை வெளியேற்றி தனி யூத நாடு உருவாவதை, காந்தி அறம்சார்ந்த அடிப்படையில் தீவிரமாக எதிர்த்தார்.
கேள்வி: இந்த 2021 மே 10 துவங்கி மே 20 வரை நடந்த இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் எப்படி துவங்கி எப்படி முடிந்தது?
பதில்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாசுக்கும் இடையே கடைசியாக பெரிய சண்டை ஒன்று 2014ல் 50 நாட்கள் வரை நடந்தது. இந்த முறை மே 10 துவங்கிய சண்டைக்கு முன்பே, கிழக்கு ஜெருசலேம் மீதான பாலஸ்தீனர் உரிமையை இஸ்ரேல் மறுத்ததும், அந்த மறுப்பை ட்ரம்ப் ஆதரித்ததும், ஜெருசலேம் எங்கள் தலைநகரம் அங்கு தொடர்ந்து புதிய குடியிருப்புகளை நிறுவுவோம் என, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு பிரகடனம் செய்ததும், பாலஸ்தீனரை சீற்றம் கொள்ள வைத்தது. யூதர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்ற மூன்று ஆப்ரஹாமிக் மதத்தவருக்கும், ஜெருசலேம் முக்கிய நகரமாகும். கிழக்கு ஜெருசலேமே பாலஸ்தீனத்தின் தலைநகரம் என்பது, பாலஸ்தீனர்களின் நெடுங்கால கனவாகும். ரமலான் நோன்பு காலத்தில் இந்தப் பகுதியில் உள்ள அல் - அக்சா மசூதிக்குள் நுழைந்து ரப்பர் குண்டுகளாலும், திகைப்பூட்டும் குண்டுகளாலும், தடிகளாலும் இஸ்ரேலிய ராணுவம் தொழுகையில் இருந்தவர்களை தாக்க, ஜெருசலேத்தில் மேற்குக்கரையில் இஸ்ரேல் நெடுக இருந்த பாலஸ்தீனியர்களும், காசாவில் இருந்த பாலஸ்தீனியர்களும் ஒரே நேரம் போராட்டங்களில் எழுந்தனர். ஹமாஸ் மக்களின் போராட்ட பேரெழுச்சியான இண்டிபடாவுக்கு அழைப்பு விடுத்தது.
இஸ்ரேலின் சில நகரங்களில் உள்நாட்டுப் போர் எழும் நிலை உருவானது.
இஸ்ரேல் முதல் 10 நாட்களில் மட்டும், காசாவின் மக்கள் வாழும் பகுதிகளில் 1800 முறை விமானத்தாக்குதல் நடத்தியது. 66 குழந்தைகள் உட்பட 243 பேர் கொல்லப்பட்டனர். 1900 பேர் காயமடைந்தனர். 16,800 குடியிருப்புகள் தரைமட்டமாக்கப்பட்டன. 2014ல் 50 நாட்களில் இஸ்ரேல் மீது 3,083 ராக்கெட்கள் ஏவப்பட்டன. இந்த முறை காசா பகுதியில் இருந்து 10 நாட்களில் 4000 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இஸ்ரேலின் இரும்பு மாடம் (Iron Dome) என்ற கவச ஏற்பாட்டை தாண்டி பாலஸ்தீன ராக்கெட்டுகள் தாக்கின.
தரைவழி தாக்குதலுக்கு தயார், ராணுவம் புறப்படும் என்று பெருமை பேசிய இஸ்ரேல், அது அவ்வளவு சுலபம் அல்ல என உணர்ந்து பின்வாங்கியது. தேவையற்ற சாகசங்களில் நாட்டை இழுக்க விரும்பவில்லை, குறைந்த பட்ச உயிர்பலியுடன் ஹமாஸுக்கு அதிகபட்ச சேதம் உருவாக்கிவிட்டோம் என நெதன்யாஹு காரணம் சொன்னார்.
ஊழல் குற்றச்சாட்டு, தண்டனை, சிறை வாசம் என்ற ஆபத்துகளை எதிர்கொண்ட நெதன்யாஹு இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நடந்த தேர்தல்களிலும் பெரும்பான்மை கிடைக்காமல் தவித்தார். நெதன்யாஹு என்ன தான் பாலஸ்தீன வெறுப்பு, போர் வெறியை தூண்டினாலும், இஸ்ரேலில் அரசியல் ஸ்திரத் தன்மை ஏற்படவில்லை.
இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒவ்வொரு நாளும் சர்வதேச சூரல் வலுத்தது. அய்க்கிய அமெரிக்க குடியரசு தலைவர் ஜோ பிடன் உடனடியாக De-escalate செய்யுங்கள், பதற்றம் தணியுங்கள் என இஸ்ரேலிடம் தெரிவிப்பதும் நடந்தது. மறுநாள் அதாவது மே 20 இரவு எகிப்து முயற்சிகள் மூலம் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
கேள்வி: இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையில் அய்நாவின் நிலை என்ன?
பதில்: அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2334 பின்வருமாறு சொல்கிறது: '1967ல் இருந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை நிறுவுவது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். அத்தகைய செயல் இருதேச அரசுகள் என்ற தீர்வை எட்டுவதற்கும், ஒரு நியாயமான, நீடிக்கின்ற, அனைத்தும் தழுவிய சமாதானத்தை எட்டுவதற்கும் தடையாக இருக்கும்'.
கேள்வி: இன்றைய புவி அரசியலில் இந்தத் தீர்மானம் எடுபடுமா?
பதில்: இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அகற்றுதல், இஸ்ரேல் - பாலஸ்தீனம் என்ற இரு தேச அரசுகள் அமைப்பது பற்றி அய்நா பேசுகிறது. இந்தத் தீர்மானப்படி பாலஸ்தீனம் என்ற ஒரு தனி நாடும், அதற்கு ஒரு தலைநகர் என்பதும் தர்க்கரீதியாக தொடர் விளைவாய் அமைய வேண்டியவையாகும்.
ஆனால் மேற்கு ஆசிய அரபு உலகம் பல வீனப்பட்டுள்ளது. ஈராக் லிபியாவில் அய்க்கிய அமெரிக்க ஆக்கிரமிப்பும், தலையீடும் அரபு உலகிற்கு பலத்த அடியாகும். பெரும்பான்மையான அரபு நாடுகள் ஏகாதிபத்திய உலகம் மூலம், இஸ்ரேலுடன் ஏதோ ஒரு நிலையிலான உறவினை வளர்த்துள்ளன. இஸ்லாமிய உலகம் மிகப் பெரியது என்ற போதும், ஈரானும், துருக்கியும் மட்டுமே பாலஸ்தீன ஆதரவில் தொடர்ச்சியாகவும், உறுதியாகவும் உள்ளன. சிரியா இன்னுமும் வீழாமல் இருப்பதும், லெபனானின் இஸ்புல்லா இயக்கம் இன்னமும் வலுவாக இருப்பதும், பாலஸ்தீனத்துக்கு சாதகமான விஷயங்களே.
அய்க்கிய அமெரிக்காவில் புதுவகை பாலஸ் தீன ஆதரவு சக்திகள் எழுந்து வருகின்றன. 'கருப்பு உயிர்களுக்கு பொருளுண்டு' இயக்கத்தின்போது, Defund police , காவல்துறைக்கு நிதி வழங்காதே என்ற முழக்கம் முன்வந்தது. இப்போது பாலஸ்தீன உயிர்களுக்கு பொரு ளுண்டு என்று குரல் வலுவடையும் போதே, Defund Israeli military efforts , இஸ்ரேலிய ராணுவ முயற்சிகளுக்கு நிதி வழங்காதே என்ற முழக்கம் வந்துள்ளது.
2001 - 2003ல் செயல்பட்ட அய்க்கிய அமெரிக்க காங்கிரஸில் வெள்ளையர் அல்லாதோர் 63 பேர் இருந்தனர். இப்போதைய 117வது காங்கிரஸில் வெள்ளையர் அல்லாத கருப்பினத்தவர், ஹிஸ்பானிக் இனத்தவர், ஆசியர், பசிபிக் தீவினர், பூர்வகுடி அமெரிக்கர் என 124 பேர் உள்ளனர். சமூகத்தின் பன்மைத்தன்மை அரசியலில் பிரதிபலிக்கத் துவங்கி, அது பாலஸ்தீன ஆதரவாகவும் மாறியுள்ளது.
இல்ஹான் அப்துல்லாகி ஒமர் ஆப்பிரிக்க கண்டத்து சோமாலிய வம்சாவழிப் பெண் உறுப்பினர். அவர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். ரஷீதா, பாலஸ்தீன வம்சாவழி பெண் உறுப்பினர். அவர் அய்க்கிய அமெரிக்க அதிபர் பிடனிடம், நேர்பட பேசினார்: 'பாலஸ்தீன மனித உரிமைகள் பேரத்துக்கோ, பேச்சுவார்த்தைக்கோ உட்பட்டவையல்ல, அவை பாதுகாக்கப்பட வேண்டும்'. ஒவ்வோர் ஆண்டும் பாலஸ்தீனர்களுக்கு எதிராக குற்றங்கள் புரிய வலதுசாரி இஸ்ரேல் அரசாங்கத்திற்கு அய்க்கிய அமெரிக்கா பில்லியன் கணக்கில் பணம் தர முடியாது. பள்ளிகள் மீது குண்டு போடுவது போன்ற அநீதிகளை சகித்துக் கொள்ள முடியாது. நமது நிதியில் வாங்குகிற ஆயுதங்கள் கொண்டு இந்தத் தாக்குதல்களை நடத்த அனுமதிக்க முடியாது. வெள்ளை மாளிகை, பாலஸ்தீன உயிர்களை, கவுரவத்தை, மனித உரிமைகளை காப்பதில் மேலான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அய்க்கிய அமெரிக்காவின் புறக்கணிக்கப்பட்ட பகுதியான போர்டோரிக்கோ பகுதியைச் சேர்ந்த பெண் உறுப்பினர், அலெக்சாண்ட்ரியா ஒகேஷியோ கோர்டஸ், 'நாம் பாலஸ்தீன குடிமக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிப்போம். இஸ்ரேலிய படையினர் ரமலான் காலத்தில் அந்த குடும்பங்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றி, வன்முறையை ஏவியது மனிதாபிமானமற்ற செயலாகும். அய்க்கிய அமெரிக்கா பாலஸ்தீனர்களின் உரிமைகளை காப்பதன் மூலம், தனது தலைமை பண்பை வெளிப்படுத்த வேண்டும்' என்கிறார்.
குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெர்னி சான்ட்ரஸ் 'அய்க்கிய அமெரிக்கா, கிழக்கு ஜெருசலேத்திலும், மேற்குக்கரையிலும் அரசு ஆதரவு பெற்ற இஸ்ரேலிய தீவிரவாதிகளின் வன்முறைக்கு எதிராக வலுவான குரல் எழுப்பவேண்டும். பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றுவது இனியும் தொடரக் கூடாது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்' என்று சொன்னதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். அய்க்கிய அமெரிக்க அதிபர் ஜோ பிடனே கூட 'இருதேச அரசுகள்' என இன்று பேசுகிறார்.
அய்க்கிய அமெரிக்க மாற்றங்கள், இஸ்ரேலின் நெருக்கடி, பாலஸ்தீனர் போராட்டங்கள் என்ற அனைத்துமாக சேர்ந்து, சுதந்திர பாலஸ்தீனம் அமைய உதவுமென நம்புவோம்.