COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 3, 2021

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி அரசுக் கட்டுப்பாட்டில் வர வேண்டும்!


சென்னையின் பெருமைமிகு கல்வி நிலையங்கள் என்று அறியப்படுகிற பள்ளிகளில் மாணவிகள் மீது பாலியல் குற்ற முடை நாற்றம். செய்திகள் வெளி வர வெளி வர குமட்டுகிறது. பள்ளிகளின் பெயர்களை முழுவதுமாகக் கூட சொல்லாமல், பத்ம சேஷாத்ரி, செட்டிநாட், மகரிஷி என்று அந்தப் பெயர்களை  'ஷார்ட்டாக' 'ஸ்வீட்டாக' 'ஸ்டைலாக' சொல்வார்கள். அந்த நாற்றம் பிடித்த பிம்பத்தை இத்தனை ஆண்டுகளாக தூக்கிப் பிடித்து பாதுகாத்திருக்கிறார்கள்.

அயோக்கியர்கள்.... பொன் மகள் வந்தாள் படக் காட்சிகள், வசனங்கள் நினைவில் வந்து செல்கின்றன. நூறு கைகள் சேர்ந்து கழுத்தை நெறிப்பது போல்.... பாதிக்கப்பட்ட மாணவிகள் நூற்றுக்கணக்கில் இதை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாணவிகளுக்கு இந்த அளவுக்கு பாலியல் கொடுமைகள் நடந்துள்ளதால், பள்ளி அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்தால், அப்படி எதுவும் நடந்தால் ஆட்சி கலைக்கப்படும் என்று வெட்டி சங்கி சுப்ரமணியம் சாமி பொங்கி எழுந்து வருகிறார். ஆட்சியைக் கலைப்பது அத்தனை எளிதா சங்கிகளே? மக்கள் தீர்ப்பு பற்றி, மக்கள் பற்றி, பாதிக்கப்பட்ட மாணவிகள் பற்றி இந்துத்துவ சக்திகள், சனாதனிகள் என்ன அணுகுமுறை கொண்டிருக்கிறார்கள் என்பதை போதுமான அளவு விளக்கும் விதம் சுப்ரமணியம் சாமி பேசியிருக்கிறார்.
ஆண்டுக்கணக்கில் தொடர்ச்சியாக தடையேதும் இல்லாமல் மாணவிகளை பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கிய ஒருவர் இணைய வகுப்புகள் வரை அதைத் தொடர்ந்திருக்கிறார் என்றால், அவரது குற்றங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், அது பள்ளி நிர்வாகத்தின் துணை இல்லாமல் நடந்திருக்க முடியாது என்பது பெரிய விளக்கம் எதுவும் தேவைப்படாமல் அப்பட்டமாகத் தெரிவதால்தான் பள்ளி நிர்வாகத்துக்கு, பள்ளியின் அருமை பெருமைகளுக்கு இது நாள் வரை சொந்தம் கொண்டாடியவர்களுக்கு, அதன் முகமாக பொது வெளியில் அறியப்பட்ட பிரபலங்களுக்கு, அவர்கள் சிக்கிக் கொண்டது உறைக்கிறது.
மாணவிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாக்கப்பட்டதை இது வரை அனுமதித்த பத்ம சேஷாத்ரி பள்ளியின் பாஜக பிரமுகர், ஆட்சி மாற்றம் வந்தவுடனேயே இது போல் நடக்கும் என்று எதிர்ப்பார்த்ததுதான் என்கிறார். ஆண்டுக்கணக்கில் நடந்து கொண்டிருந்த பாலியல் குற்றங்கள் அவருக்கும் தெரிந்துதான் நடந்திருக்கின்றன என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் இது. நாங்கள் நடத்தும் பள்ளி என்று பெருமை பேசி வந்த அவருக்கு இன்று நாங்கள் வெறும் அறங்காவலர்கள்தான், நிர்வாகத்தில் எங்களுக்கு எந்த பாத்திரமும் இல்லை என்கிறார். அறத்தைக் காப்பவர் அறங்காவலர். இந்த அறங்காவலர் பிறகு என்னதான் செய்தார்? அறக்கட்டளையின் வருமானம் குறையாமல் பார்த்துக் கொள்வது மட்டும்தானா? அதனால்தான், மாணவியர் பலர் கவுரவத்தின் மீதும் கண்ணியத்தின் மீதும்  தொடர்ந்து துல்லிய தாக்குதல் நடந்ததை கண்டும் காணாமல் இருந்துவிட்டாரா? பெண்கள் கவுரவம் இவர்களுக்கு அந்த அளவுக்கு மலிவானதாக ஆகிவிட்டதா? பாலியல் குற்றம் நடந்தது வெளியில் தெரிய வந்தும் கூட மீண்டும் அந்தப் பள்ளியின் பெருமை பற்றி பேசுவது, அந்தப் பள்ளியின் வருமானத்துக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதால்தானே?
ஸ்வாதி கொல்லப்பட்டபோது, நேரிலிருந்து பார்த்ததுபோல் பிலால் மாலிக் பெயரைச் சொன்ன ஒருவரும், பார்ப்பனர்களுக்கு மூளை வலிமை அதிகம் என்று சொன்ன ஒருவரும் சேர்ந்து, இன்று, பார்ப்பனர்கள் என்பதால்தான் தாங்கள் விமர்சிக்கப்படுவதாகவும், பார்ப்பனர்கள் நடத்தும் பள்ளி என்பதால்தான் இந்தப் பள்ளி பிரச்சனையின் மய்யமாக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள். அட கோமாளிகளே, இந்த சொத்தை தர்க்கத்தில் இருந்தே தெரியவில்லையா உங்கள் மூளை எவ்வளவு வலிமை வாய்ந்தது என்று? இன்றிங்கிது எடுபடுமா?
மாணவிகளுக்கு இழைக்கப்பட்டிருக்கிற கொடுங்குற்றத்தில் இருந்து எதையாவது சொல்லி எப்படியாவது தந்திரமாக தப்பிவிடலாம் என்று பார்க்கிறார்கள். தாங்கள் பார்ப்பனர்கள் என்று நமக்கு நினைவூட்டுகிறார்கள். பார்ப்பனர்கள் என்ன தவறு செய்தாலும் தண்டனை இல்லை, மறுபுறம், பார்ப்பனர்களுக்கு யாராவது தீங்கிழைத்தால், அவர்கள் எதிரில் தெரியாமல் வந்துவிட்டால் கூட, மரண தண்டனை வரை கொடூரமான தண்டனை என்பதெல்லாம் மனு நீதி. அது இப்போது வழக்கில் இல்லை. இப்போது இருப்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட நீதி. அந்த நீதி கூட கிடைக்காமல் பாதிக்கப்பட்டோரே வேட்டையாடப்படக் கூடிய ஒரு சூழல் இருந்ததால், சனாதனிகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்த ஆட்சி நடந்ததால், புகார்கள் வெளியே வரவில்லை. இப்போது, ஆட்சி மாற்றம் நடந்துள்ளதால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகார் தரும் அளவிலாவது நம்பிக்கை வந்துள்ளது.
இதற்கு முன்பும் புகார்கள் தரப்பட்டு, அந்தப் புகார்களை விசாரிக்க பத்ம சேஷாத்ரி பால பவனுக்குச் சென்ற காவல்துறையினர், பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று சொல்கின்றனர். தூத்துக்குடியில் ஜெயராஜையும் பென்னிக்ஸ்சையும் அன்றைய தமிழ்நாட்டு காவல்துறையினர் எப்படி விசாரித்தார்கள் என தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். அந்த அளவுக்கு இல்லையெனினும் சாதாரண விசாரணை கூட நடத்தாமல் திரும்பும் அளவுக்கு பள்ளியின் அரசியல் செல்வாக்கு இருந்திருக்கிறது.
இன்று 30 மாணவிகள் தந்துள்ள புகார் அடிப்படையில், கடந்த அய்ந்து ஆண்டுகளாக பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குற்றம் செய்துள்ளதும், அவருடன் இன்னும் சிலரும் அந்த குற்றத்தை சேர்ந்து செய்திருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. ஆதாரங்கள் இருக்கின்றன. விசாரணையின்போதே, அதே பள்ளியின் வேறொரு கிளையின் ஆசிரியர் ஒருவரும் பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகிறார். அவரும் கைது செய்யப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீண்ட நாட்களாக அந்தப் பள்ளிகளில் வேலை செய்கிறார்கள், அதில் ஒருவர், அந்த குற்றத்தை விசாரிக்கும் குழுவில் இருக்கிறார், குற்றம் தடையின்றி தொடர்கிறது என்றால், அந்தப் பள்ளியின் நீண்ட கால உரிமையாளர்கள் பற்றி கேள்வி வராதா? இதில் சாதி எங்கிருந்து வந்தது? சாதியே இல்லாத நாடுகளில் இது போன்ற குற்றச்சாட்டு வந்தால் சமூகம் எப்படி கேள்வி எழுப்புமோ, அரசாங்கங்கள் எப்படி நடவடிக்கைகள் எடுக்குமோ, அது போன்ற நிகழ்வுகள்தான் இங்கு நடக்கின்றன. அதுபோன்ற கேள்விகள், கோரிக்கைகள்தான் இங்கும் எழுப்பப்படுகின்றன. சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாட்டை இவர்கள் பள்ளிகளில் சொல்லித் தருவதில்லையா? ஆக, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை பழி வாங்குகிறார்கள் என்ற புண்ணாக்கு புலம்பல்களுக்கெல்லாம் இங்கே இடமில்லை.
தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது இது வரை 11 பேர் பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைத்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார். தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அடையாரில் உள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளி ஆசிரியர் ஒருவர் 18 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அங்கு படித்த மாணவிகள் 22 பேர் புகார் அளித்துள்ளனர் என்று ஜ÷ன் 1 தேதிய தினகரன் இணைய இதழில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த எல்லா குற்றங்களிலும் கைதுகளும் விசாரணைகளும் நடத்தப்படுவதுபோல்தான் பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடந்த பாலியல் குற்றம் தொடர்பாகவும் நடக்கும். நடந்தாக வேண்டும்.
பத்ம சேஷாத்ரி பால பவன், செட்டிநாடு வித்யாஸ்ரமம், மகரிஷி வித்யா மந்திர் என எந்தப் பள்ளியானாலும், மாணவிகள் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் விசாரணைகள் தொடங்கியுள்ள இந்த நேரத்திலேயே, விசாரணை துரிதமாகவும் கறாராகவும் இடையூறின்றியும் நடப்பதை உறுதிப்படுத்த அரசின் கட்டுப்பாட்டில் வர வேண்டும். தமிழ்நாட்டு மாணவிகள் கண்ணியம், கவுரவம் காக்க எடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெயர் பெற்ற தனியார் பள்ளிகளை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், ஆட்சிக் கலைப்பு மிரட்டல் வரும் என்றால், அதையும் சேர்த்துதான் தமிழ்நாடு அரசு எதிர்கொள்ள வேண்டும்.
ஆட்சிக் கலைப்பு மிரட்டல் சுப்ரமணியம் ஸ்வாமியிடம் இருந்து வந்ததால் அதை பைத்தியக்காரத்தன மிரட்டல் என எளிமையாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு மாதம் கூட நிறைவு பெறாத தமிழ்நாடு அரசு எடுக்கும் சில துரித, துணிவான நிலைப்பாடுகள் (சாதாரணமாக ஓர் அரசாங்கம் செய்ய வேண்டியவற்றைத்தான் தமிழ்நாடு அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. அதையே போற்றிப் பாதுகாக்க வேண்டிய நிலையை கடந்த பத்தாண்டு கால அடிமை ஆட்சியும் ஏழாண்டுகளுக்கும் மேல் தொடர்கிற இந்திய ஒன்றிய ஆட்சியும் உருவாக்கிவிட்டது கெடுவாய்ப்பானதே) இந்திய ஒன்றிய அரசுக்கு, பாஜகவுக்கு சங்கடத்தை தருகின்றன. தமிழ்நாட்டில் மாறியுள்ள அரசியல் சூழல் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி மவுனமாக்கப்பட்ட மாணவிகளுக்கு, அவர்கள் குடும்பங்களுக்கு புகார் தரும் துணிவு தரும்போது, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் முன்பை விட விசையுடன் பாஜக அரசு எதிர்ப்பை முன் நகர்த்த வெளி தருகிறது. இந்துத்துவ சக்திகளின் பொய்கள் முன்பை விட வேகமாக அம்பலப்படுத்தப்படுகின்றன. நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், இந்த புதிய சமன்பாடு, தமிழ்நாட்டின் புதிய சகஜநிலையாகி விடுமோ என்ற கவலையும் அப்படி ஆக விடக் கூடாது என்ற முனைப்பும் நிச்சயம் இந்துத்துவ சக்திகளை பிடித்தாட்டும்.
பெரும்பான்மை இல்லாத மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கும் கலையில் சிறந்த பாஜக, தமிழ்நாட்டில் அப்படி ஒரு பரிசோதனையை நடத்திப் பார்க்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், தமிழ்நாடு அரசின் மாநில உரிமை மீட்பு முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டைப் போட, தமிழ்நாடு அரசின் வலிமையை மட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கும்.
மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்ட அமலாக்கத்தை கொரோனா முதல் அலை தள்ளிப்போட்டது போல், தமிழ்நாட்டுக்கான பாஜகவின் செயல்(சதி)திட்டத்தை கொரோனா இரண்டாம் அலை சற்று தள்ளிப் போடலாம். ஆனால், ஆட்டம் நிச்சயம் உண்டு. தமிழ்நாட்டு மக்களின் பாசிச எதிர்ப்பு வெல்லுமா, இந்துத்துவ சக்திகளின் சதித்திட்டங்கள் வெல்லுமா என்று பார்க்க வேண்டும். தமிழ் நாட்டு மக்களே வெற்றி பெறுவார்கள் என்று முன்னரே சொல்லும் விதமாக, பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் வர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி வேண்டும்.

Search