COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 3, 2021

ஆட்டோமொபைல் துறையும்
தொழிலாளர்களின் உயிரச்சமும்


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு கவச உடை அணிந்து, தொற்று பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சென்று சந்திக்கிறார். தொற்று கட்டுப்பாட்டுக்காக முதலமைச்சர் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தொற்று

பாதிப்புக்குள்ளானவர்களை நேரில் சந்திப்பதை அவர் தவிர்க்கலாம் என பலரும் சொல்ல, தனது இந்த முயற்சி சிகிச்சை பெறுபவர்களுக்கு, தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை தருபவர்களுக்கு, அவர்களது குடும்பங்களுக்கு நம்பிக்கை தரும் என்கிறார் முதலமைச்சர்.
தமிழ்நாட்டின் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து மிகக் குறுகிய காலத்தில் நம்பிக்கை தரும் நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தின் விளைவுகள் ஒரு கொடுங் கனவாய் கலைந்துவிடும் விதம் புதிய ஆட்சியின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்ப்பார்ப்பு கொண்டுள்ளனர்.
எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துத்தான் எங்கள் ஆட்சி நடக்கிறது என்று முதலமைச்சர் சொன்னபோது, தங்கள் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட தராத கோவை மண்டலத்துக்கு முதலமைச்சர் நேரில் சென்று தொற்று தடுப்பு நடவடிக்கை களை கண்காணிக்கும்போது, அவருக்கு, அவரது கட்சிக்கு, கூட்டணிக்கு வாக்களித்த பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு, எங்களை ஏன் மறந்துவிட்டார்கள் என்று கேள்வி எழுகிறது.
ஆட்சி மாற்றம் வர வாக்களித்ததுபோல், மிகப்பெரிய அளவில் வரி, வருமான வரத்துக்கு பங்காற்றுவதில் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் முதலிடம் பெறுகிறார்கள். அவர்கள் இல்லை என்றால் இங்கு ஓர் அணுவும் அசையாது. இருந்தும், கடந்த பத்தாண்டுகளாக அவர்கள் பிரச்சனைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலில் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. ஆட்சி மாற்றம் இந்த நிலையில் மாற்றம் கொண்டு வரும் என அவர்கள் எதிர்ப்பார்த்தார்கள். தற்போதைய தீவிரமான கொரோனா கட்டுப்பாட்டு நடப்புகள் கூட தொழிலாளர்களை வெளியே நிறுத்தி வைத்துள்ளன. தொற்று ஆபத்து சூழ அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் என்ற விவரணைக்குள் எல்லா தொழிற்சாலைகளையும் பொருத்திவிட முடியும் என்பதால் கொடுந்தொற்று காலத்திலும் அவர்கள் பணியாற்ற நேர்ந்துள்ளது. விளைவாக, தொழிலாளர் மத்தியில் உயிரிழப்புகள் தினச் செய்திகளாகி உள்ளன. மறைமலைநகர், திருபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் என மூலதனம் குவிந்துள்ள பகுதியில் தமிழ்நாட்டு தொழில் வளர்ச்சியின் முகங்களாக அறியப்படும் ஆலைகளான ஃபோர்ட் மற்றும் ஹுண்டாய் நிறுவனங்களில் தொற்று எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை ஆகியவற்றுக்குப் பிறகு, தொழிலாளர்கள் எதிர்ப்புகளுக்குப் பிறகு ஊரடங்கு காலத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் என்ற பதத்தைப் பயன்படுத்தி, லாபம் வருவதில் தடையேதும் வராமல் இருக்க, இந்த நிறுவனங்கள் கட்டுப்பாடுகள், மாற்று ஏற்பாடுகள் எவையும் இல்லாமல் ஆலையை இயக்கியதால், தங்கள் கூட நேற்று வரை பக்கத்தில் இருந்து பணியாற்றியவர்களை தொற்றுக்குப் பலி தந்திருக்கிறார்கள் தொழிலாளர்கள். தங்கள் ஆலைகளில் நடந்த கொரோனா உயிரிழப்புகள், அதன் பின் நடந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி அந்தத் தொழிலாளர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகள் இங்கு தரப்படுகின்றன. வழக்கம் போல், அவர்கள் பெயர்கள் வெளியிடத் தயாராக இல்லை. அது அவர்கள் பணிப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும். எனவே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கட்டுரைக்கு தலைப்பாக, கர்ணன் தனது கருத்துகளுக்குச் சொன்ன தலைப்பு தரப்பட்டுள்ளது.
சிவசாமி: கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 3000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் FORD INDIA PRIVATE LTD ல் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த அசாதா ரண சூழலிலும் தொழிற்சாலையை இயக்கி வருகிறார்கள். இங்கு கொரோனா தொற்றால் 250 தொழிலாளர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த தொற்றின் விகிதத்தை குறைக்க தற்காலிகமாக ஆலையை மூடும்படி சங்க நிர்வாகிகள் பேசி வந்தனர். நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மே 1ல் இருந்து மே 5 வரை விடுமுறை அளிப்பதாக ஒப்புக்கொண்டது நிர்வாகம்.
விடுப்பு முடிந்து மே 6 அன்று வழக்கம் போல் ஆலை இயங்கியது. ஓரிரு தினங்கள் சென்ற பிறகு ஆலைக்குள் கொரோனா தொற்று விகிதம் அதிகரித்தது. 2 தொழிலாளர்கள் இறந்து விட்டார்கள்.
இச்சூழல் தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் உண்டாக்கியது. உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் கூடுதல் விடுப்பு வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஆலை பராமரிப்பு விடுமுறை 6 நாட்களுடன் சேர்த்து இரண்டு நாட்கள் கூடுதலாக விடுமுறை அளிக்க ஒப்புக் கொண்டது நிர்வாகம்.
கொரோனாவின் கோர பிடியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற மாநில அரசு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை அறிவித்தது. ஆனால் ஆட்டோமொபைல் தொழிற்சாலை இயக்கலாம் என்றும் கூறி இருந்தது. இது தொழிலாளர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சங்க நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் பார்வைக்கு எடுத்துச் செல்லலாம் என்று கூறினார்கள். கூடுதலாக கலெக்டரிடம் மனுவும் அளித்தார்கள்.
இதற்கிடையில் தொழிலாளர்கள் மத்தியி லான தொற்று எண்ணிக்கை 289 என அதிகரித் தது. தொழிலாளர்கள் அனைவரும் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சங்க நிர்வாகிகள் தொழிலாளர்களிடம் ஒரு சில நம்பிக்கை வாக்கை கொடுத்தார்கள். அதற்கு பிறகு கலைந்து சென்றனர்.
1. ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி.
2. கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு.
3. ஊரடங்கு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு.
ஆகிய கோரிக்கைகளுடன் சங்கம் நிர்வாகத்துடன் பல நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் நிர்வாகத்திடம் மெத்தனப் போக்குதான் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 27.05.2021 உணவு புறக்கணிப்பு செய்ய உள்ளதாக கடிதம் கொடுக்கப்பட்டது.
27.05.3020 அன்று உணவு புறக்கணிப்பு செய்யப்பட்டது. இதில் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
சங்கத்தை நிர்வாகம் பேச அழைத்தது. ஊரடங்கு நாட்களான 28.05.2021 மற்றும் 29.05.2021 விடுமுறை தருகிறோம் என்றது. முழு ஊரடங்கிற்கும் விடுப்பு வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியது. நிர்வாகம் அதற்கு முறையான பதில் அளிக்கவில்லை.
27.05.2021 உணவு புறக்கணிப்பிற்குப் பிறகு மதியம் 2 மணி அளவில் மேலும் ஒரு தொழிலாளி இறந்துவிட்டார் என்ற செய்தி சங்கத்திற்கு வந்தது . இந்த செய்தியை கேட்ட உடன் தொழிலாளர்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
அன்று மாலை பணி முடிந்த பிறகு நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே தொழிலாளர்கள் அனைவரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்ணன்: இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் உற்பத்தி கேந்திரமாக சென்னையை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் மறைமலைநகர் பகுதிகள் விளங்குகின்றன. இங்கு கண்ணாடி, டயர் போன்ற உதிரி பாகம் தயாரிக்கும் ஏராளமான தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
2020ல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின்போது இங்குள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. பின்பு அரசின் அனுமதியுடன் படிப்படியாக இயங்கத் தொடங்கின.
2021ல் கொரனாவின் இரண்டாம் அலை தீவிரமாக வீசி வருகிறது. கொரனாவை  கட்டுப்படுத்த மாநில அரசுகளே சூழ்நிலைக்கேற்றவாறு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசாங்கம் சொல்லிவிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட ஊரடங்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 20 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் எந்தெந்த தொழில்நிறுவனங்கள் செயல்படலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில்  ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் அடக்கம். ஆனால் முதல் கொரனா அலையின் போது 07.04.2020 அன்று அரசு வெளியிட்டுள்ள ஆணையில் ஊரடங்கின்போது ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி தரப்படவில்லை. ஆனால் கொரனா இரண்டாம் அலையில் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அரசாணையில் கன்டினியஸ் பிராசஸ் இன்டஸ்ட்ரி பிரிவின் கீழ் ஆட்டோமொபைல் துறை சேர்க்கப்பட்டு ஊரடங்கின் போதும் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது. அரசின் இந்த அனுமதியை சொல்லி அனைத்து ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தொடர்ந்து இயங்குகின்றன.
ஏறத்தாழ அனைத்து ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளிலும்  கொரனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர். பல தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பான்மையான தொழிலாளர்கள் அச்சத்தின் ஊடாகவே வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த சூழலிலும் தொழிற்சாலைகளை இயங்குவதால் தொழிலாளர்கள் மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். ஆட்டோமொபைல் தொழிலாளர்கள்  ஊரடங்கு முடியும்வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் மூலம் கோரி வருகின்றனர்.
மே 24 முதல் தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்தது. அத்தியாவசிய கடைகள் கூட அடைக்கப்பட்ட முழு ஊரடங்கிலும் ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள்  முழு உற்பத்தியை எடுத்தன. இதற்கிடையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹுண்டாய் தொழிற்சாலையில் கொரனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நிர்வாக தொழிலாளி மே 23 அன்று உயிரிழந்துள்ளார். அவர் அன்றைக்கே அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் அடக்கம் செய்யப்பட்ட பிறகும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அது பற்றி தெரிவிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் இவரையும் சேர்த்து 7 பேர் இதுவரை கொரனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவருடன் பணியாற்றிய தொழிலாளர்கள், அவர் உயிரிழந்த தகவலை தெரியப்படுத்தாததற்கு கண்டனம் தெரிவித்து மே 24 அன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர். தொழிற்சாலையில் அப்போது பணியில் இருந்த மற்ற அனைத்து தொழிலாளர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து அலுவலகம் முன்பு ஒன்று கூடியிருக்கின்றனர். முழு ஊரடங்கு அமலில் உள்ள வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு என்பதே அங்கு கூடிய தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையாக இருந்திருக்கிறது.
கொரனாவால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகளும் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகையோடு கூடுதல் நிதி ஆதாரங்களையும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் என்பதும் கோரிக்கைகளில் அடக்கம்.
தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட உயிர் அச்சத்தின் விளைவாகவே இந்த போராட்டம் நடந்துள்ளது. பணியில் இருந்த அனைத்து தொழிலாளர்களும் ஒருங்கிணைந்த இந்த திடீர் போராட்டம் நிர்வாகத்திற்கு நெருக்கடியை தந்துள்ளது
தொழிலாளர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அடுத்த 5 நாட்களுக்கு விடுப்பு தருவதாக நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டது.
இது தொழிலாளர்களுக்கு கிடைத்த ஒரு வெற்றி. தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தொழிலாளர்களின் ஒருமித்த கருத்துக்கு கிடைத்த வெற்றி.  இது தொழிலாளர்களுக்கு கிடைத்த வெற்றிதானே தவிர நிர்வாகத்திற்கு ஒன்றும் தோல்வி அல்ல. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். தொழிலாளர்கள் உயிருடன் இருந்தால்தானே உற்பத்தி எடுக்க முடியும்!
ஒரகடம் பகுதியில் உள்ள நிசான் தொழிற்சாலையில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு,  சிகிச்சை மற்றும் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அந்த தொழிற்சாலையில் இயங்கும் தொழிற்சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை அறிவித்திருந்தது. இந்த தொழிற்சாலையின் நிர்வாகம் தொழிற்சங்கத்துடன் பேசி மே 26 முதல் மே 30 வரை விடுப்பு என அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கில் பால், காய்கறிகள், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இவை சார்ந்த நிறுவனங்கள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. கார்கள் கூட அத்தியாவசிய பொருட்களின் வரிசையில் வந்துவிட்டதா? என்று சமூக தளங்களில் பொது மக்கள் கேள்வி எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்டோமொபைல் துறையானது உடல் உழைப்பு சார்ந்து இயங்கும் துறை. மனித உழைப்பு இருந்தால்தான் உற்பத்தி நடைபெறும். உற்பத்தி நடைபெற்றால்தான் முதலாளிக்கு இலாபமும் அரசுக்கு வரியும் கிடைக்கும். அரசுக்கு வரி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த துறைகள் இயங்குவதை அரசு அனுமதிக்கிறதோ என்ற அய்யமும் தொழிலாளர்கள் மத்தியில் இருக்கிறது.
ஆட்டோமொபைல்  துறை சார்ந்த தொழிலாளர்களின் உயிர்களின் மீதும் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்பதே தொழிலாளர்களின் விருப்பமும் கோரிக்கையும்.

Search