டாக்டர் அம்பேத்கர் பக்கம்
ஒரு விசாவுக்காக காத்திருத்தல்
(இரண்டு)
மக்கள் கல்வி கழகத்தின் சேகரிப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட
கையெழுத்து பிரதி
பக்கம் 15 - 22, தொகுதி 25
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
நூல் தொகுப்பு
1916ல் நான் இந்தியாவுக்குத் திரும்பினேன்.
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஐந்தாண்டுக் காலம் தங்கியிருந்தேன். நான் தீண்டத்தகாதவன் என்பதையும், இந்தியாவில் ஒரு தீண்டத்தகாதவன் எங்கு சென்றாலும் அது அவனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பிரச்சனையாகத்தான் இருக்கும் என்ற உணர்வு இந்த ஐந்தாண்டு காலத்தில் என் மனதிலிருந்து முற்றிலும் மறைந்திருந்தது. ஆனால் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் என்னை மிகவும் வாட்டியது ஒரு கேள்விதான்: "எங்கே போவது? யார் என்னை ஏற்றுக் கொள்வார்கள்?௸ நான் மிகவும் அமைதியற்று இருந்தேன். அங்கே விஷிஸ் என்ற இந்து ஓட்டல்கள் இருப்பது எனக்குத் தெரியும். அவர்கள் என்னை அனுமதிக்க மாட்டார்கள். ஆள்மாறாட்டம் செய்வதே அங்கு தங்கும் இடவசதி பெற உள்ள ஒரே வழியாகத் தெரிந்தது. அதற்கு நான் தயாரில்லை. ஏனெனில் என்னைக் கண்டுபிடித்து விட்டால் அதனால் ஏற்படும் பயங்கர விளைவுகளை நான் அறிவேன். என்னை நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள். அமெரிக்காவில் கல்வி கற்க வந்த என் நண்பர்கள் பரோடாவில் இருந்தார்கள். "நான் அவர்களிடம் சென்றால் என்னை வரவேற்பார்களா?௸ என்னால் உறுதியாகக் கூற முடியாது. அவர்கள் என்னைத் தங்கள் வீட்டிற்குள் அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்குத் தர்மசங்கடமான நிலை ஏற்படும். ரயில் நிலையத்தின் கூரையின் கீழ் நின்று கொண்டு எங்கே போவது, என்ன செய்வது என்பதைப் பற்றி சிறிது நேரம் சிந்தித்தேன். முகாமில் ஏதாவது இடம் கிடைக்குமா என்ற கேள்வி திடீரென்று தோன்றியது. இதற்குள் எல்லாப் பயணிகளும் போய்விட்டார்கள். நான் மட்டும்தான் எஞ்சியிருந்தேன். சவாரி கிடைக்காத சில வாடகைக் குதிரை வண்டிக்காரர்கள் என்னை நோட்டமிட்டுக் கொண்டு எனக்காக காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவனை அழைத்து முகாமில் ஏதாவது ஓட்டல் இருக்கிறதா என்று கேட்டேன். அங்கே ஒரு பார்சி பயணிகள் விடுதி இருப்பதையும் அங்கு பணம் செலுத்தி தங்குவதையும் பற்றி அவன் கூறினான். அந்தப் பயணிகள் விடுதி பார்சிகளால் நிர்வகிக்கப்படுவதைக் கேட்டு என் மனம் மகிழ்ச்சி அடைந்தது. பார்சி மக்கள் ஜொராஸ்டிர மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்னை அவர்கள் தீண்டத்தகாதவனாக நடத்துவார்கள் என்ற பயமில்லை. ஏனெனில் அவர்கள் மதம் தீண்டாமையை ஏற்றுக் கொள்ளவில்லை. நம்பிக்கையால் மகிழ்வுற்ற இதயத்துடனும் தைரியமான மனத்துடனும் என்னுடைய சாமான்களைக் குதிரை வண்டியில் ஏற்றி முகாமில் உள்ள பார்சி பயணிகள் விடுதிக்குச் செல்லுமாறு கூறினேன்.
அந்தப் பயணிகள் விடுதி ஒரு இரு மாடிக் கட்டடம். ஒரு வயதான பார்சிக்காரர் தனது குடும்பத்துடன் கீழ்த்தளத்தில் வசித்து வந்தார். அவர்தான் அதன் காப்பாளராக இருந்தார். அங்கு வந்து தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு அளித்து வந்தார். வந்து சேர்ந்தவுடன் பார்சி காப்பாளர் மேல்மாடியைக் காட்டினர். சாமான்களை மேலே கொண்டு வைக்க, நான் மேலே சென்றேன். அவன் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான். தங்குவதற்கு ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று எனது பிரச்சினைக்குத் தீர்வுகண்டதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். சிறிது இளைப்பாறும் எண்ணத்துடன் என் மேலாடைகளைக் களைந்தேன் இதற்கிடையில் தன் கையில் ஒரு புத்தகத்துடன் காப்பாளர் வந்தார். மேலாடைகளைக் களைந்த என் தோற்றத்தைப் பார்த்த அவர் நான் ஒரு பார்சி என்பதை அடையாளம் காட்டும் சத்ராவோகாஸ்தியோ இல்லாததைக் கண்டு கடுமையான குரலில் நீ யார் என்று கேட்டார். அந்தப் பயணிகள் விடுதி, பார்சிகளால் பார்சிகளுக்காக நடத்தப்படுவதை அறியாது, நான் ஒரு இந்து என்று கூறினேன். பதறிப்போன அவர் என்னை அங்கே தங்கக்கூடாது என்று கூறிவிட்டார். அவருடைய பதில் என்னை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. உடலெங்கும் சில்லிட்டது. எங்கே போவது என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. மனத்தைத் தேற்றிக்கொண்டு இந்துவாக இருந்தாலும் அவருக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் அங்கேயே தங்குகிறேன் என்று கூறினேன். எப்படி முடியும்? என்று அவர் கேட்டார். "இங்கு தங்குபவர்கள் எல்லோரையும் குறித்து இந்த பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.௸ அவருடைய கஷ்டம் எனக்குப் புரிந்தது. பதிவேட்டில் குறிப்பதற்கு நான் ஒரு பார்சிப் பெயரை எடுத்துக்கொள்ள முடியும். "நான் ஆட்சேபிக்காதபோது நீங்கள் ஏன் ஆட்சேபிக்கிறீர்கள்? உங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. நான் இங்கே தங்கினால் உங்களுக்கு ஏதாவது வருமானம் கிடைக்கும்௸ என்றேன் நான். இதற்கு சாதகமாக அவர் இருப்பது போல எனக்கு தோன்றிற்று. பல நாட்களாகச் சுற்றுலாப் பயணிகள் வரவில்லை என்பது தெரிந்தது. கொஞ்சம் வருமானம் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விட அவர் தயாரில்லை என்பதும் புரிந்தது. நாள் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய் தங்குவதற்கும் சாப்பாட்டிற்கும் கொடுத்து ஒரு பார்சி பெயரில் என்னைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் அவர் சம்மதித்தார். அவர் கீழே இறங்கி சென்ற உடன் நான் நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன். பிரச்சினை தீர்ந்ததால் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் என்ன பரிதாபம்! இந்த மகிழ்ச்சி இவ்வளவு அற்பாயுசானது என்று எனக்கு அப்போது தெரியாது. ஆனால் இந்தப் பயணிகள் விடுதியில் நான் தங்கியதின் சோக முடிவை விளக்குவதற்கு முன்பு நான் அங்கே தங்கியிருந்த சிறிது காலத்தில் எப்படி எனது நேரத்தை கழித்தேன் என்பதை விளக்க வேண்டும். பயணிகள் விடுதியில் முதலாவது மாடியில் ஒரு சிறு படுக்கை அறையும் அதை ஒட்டி தண்ணீர் குழாயுடன் கூடிய சிறிய குளியல் அறையும் இருந்தன. எஞ்சியது ஒரு பெரிய கூடம்தான். நான் தங்கியிருந்தபோது அந்தப் பெரிய கூடத்தில் எல்லா விதமான குப்பை கூளங்களும், மரப்பலகைகளும், பெஞ்சுகளும் உடைந்த நாற்காலிகளும் இருந்தன. இந்தச் சூழ்நிலைகளின் மத்தியில் தனியாளாக அங்கு தங்கியிருந்தேன். காலையில் ஒரு கோப்பை தேநீருடன் காப்பாளர் மேலே வருவார். மீண்டும் 9:30 மணிக்கு எனக்குக் காலைச் சிற்றுண்டி அல்லது காலைச் சாப்பாடு கொண்டு வருவார். மூன்றாவது தடவை இரவு 8:30 மணிக்கு இரவு சாப்பாடு கொண்டு வருவார், தவிர்க்க முடியாத சமயங்களில் மட்டுமே அவர் மேலே வருவார், இந்த நேரங்களில் அவர் என்னுடன் பேசுவதற்கு தங்கியது கிடையாது. எப்படியோ நாட்களைக் கழித்து வந்தேன்.
பரோடா மன்னரால் மாநிலத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தில் எனக்குப் பயிற்சியாளராக வேலை கொடுக்கப்பட்டது. சுமார் 10 மணியளவில் நான் பயணிகள் விடுதியை விட்டு அலுவலகம் செல்வதும் நண்பர்களுடன் எவ்வளவு நேரம் வெளியே கழிக்க முடியுமோ அவ்வளவு நேரம் கழித்துவிட்டு நேரம் கழித்து இரவு 8 மணிக்குத் திரும்புவதும் வழக்கம். பயணிகள் விடுதியில் இரவு தங்க வேண்டியதை நினைத்தாலே பயமாக இருந்தது. ஆனால் தங்குவதற்கு வேறு இடமில்லையாதலால் நான் அந்த பயணிகள் விடுதிக்கு வந்துகொண்டிருந்தேன். பயணிகள் விடுதியின் முதல் மாடியிலுள்ள பெரிய கூடத்தில் பேசுவதற்கு எந்த ஒரு சகமனிதரும் கிடையாது. நான் தனியாக இருந்தேன். கூடம் முழுவதும் இருள் மூடிக்கிடக்கும். இருளைப் போக்க மின்சார விளக்குகளோ, ஏன் எண்ணெய் விளக்குகளோ கூடக் கிடையாது. ஒரு சிறு அரிக்கன் விளக்கைக் காப்பாளர் எனது உபயோகத்திற்காக கொண்டு வருவது வழக்கம். அதன் வெளிச்சம் சில அங்குலங்களுக்கு மேல் பரவாது. இருட்டுக் கொட்டடியில் இருப்பதை உணர்ந்த நான் பேசுவதற்கு யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்கினேன். மனித உறவுகள் இல்லாத நிலையில் எனக்குத் துணையெல்லாம் புத்தகங்கள்தான். படித்துக் கொண்டே இருந்தேன். புத்தகத்தில் மூழ்கி எனது தனிமை நிலையை மறந்தேன். கூடத்தைத் தம்முடைய இல்லமாகக் கருதிய வௌவால்களின் கூச்சலும், அங்கும் இங்கும் அவை பறந்து செல்வதும் எனது மனத்தைத் திசை திருப்பி என்னைக் குலைநடுங்க வைத்ததுடன் எதை மறக்க வேண்டும் என்று நினைத்தேனோ அதனை, அதாவது ஒரு விசித்திர இடத்தில் ஒரு விசித்திரச் சூழ்நிலையில் இருக்கிறேன் என்பதை நினைவூட்டியது. பல நேரங்களில் என்னுள் கோபம் கொந்தளிக்கும். ஆனால் என் துயரையும் கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டேன். அது இருட்டுக் கொட்டிலானாலும் அது ஒரு புகலிடம். ஒன்றுமில்லாதிருப்பதற்கு ஒரு புகலிடம் இருப்பது நல்லதுதானே. நான் பம்பாயில் விட்டு வந்த பொருட்களைக் கொண்டு வந்து அந்த என் மூத்த சகோதரியின் மகன் என்னுடைய நிலையைப் பார்த்தவுடன் அழ ஆரம்பித்தான். அவனை உடனே திரும்ப அனுப்ப வேண்டும் என்ற அளவுக்கு அவன் அவ்வளவு உரத்த குரலில் அழ ஆரம்பித்தான். இந்த நிலையில் அந்தப் பார்சிப் பயணிகள் விடுதியில் ஆள் மாறாட்டத்தில் தங்கி வந்தேன். எப்படியும் என்னை ஒருநாள் கண்டுபிடித்து விடுவார்கள்; எனவே இந்த ஆள்மறாட்டத்தை அதிக நாள் தொடர முடியாது என்பது எனக்குத் தெரியும். தங்குவதற்காக அரசு பங்களா ஒன்றை பெறுவதற்கு முயன்றேன். ஆனால் முதன் மந்திரி என்னுடைய வேண்டுகோளை அவ்வளவு அவசரமாகக் கருதவில்லை. எனது விண்ணப்பம் ஓர் அதிகாரியிடம் இருந்து இன்னோர் அதிகாரிக்கு என்று பயணம் செய்துகொண்டிருந்தது. இறுதிப் பதில் வருவதற்குள் எனக்குத் தீர்ப்பு அளிக்கும் நாள் வந்துவிட்டது!
அன்று, பயணிகள் விடுதியில் தங்க ஆரம்பித்த 11வது நாள். நான் காலை உணவை முடித்துக் கொண்டு ஆடைகளை அணிந்து என்னுடைய அறையைவிட்டு அலுவலகத்துக்குப் புறப்பட்டேன். நூலகத்தில் எடுத்திருந்த சில புத்தகங்களைத் திருப்பிக் கொடுப்பதற்காக அவற்றை எடுத்துக் கொண்டிருந்தபோது பலர் மேலே வருவதுபோன்ற காலடியோசை கேட்டது. அவர்கள் இங்கே தங்க வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் என்று எண்ணி அவர்கள் யார் என்று காணச் சென்றேன். உயரமான, கோபக்கனல் தெறிக்கும் பலசாலியான ஒரு டஜன் பார்சிகள் கையில் ஆளுக்கு ஒரு கம்புடன் எனது அறையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சுற்றுலாப் பயணிகள் இல்லை என்பதை உடனேயே நிரூபித்துக் காட்டினார்கள். என் அறைக்கு முன், வரிசையாக நின்றுகொண்டு கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள். "நீ யார்? நீ ஏன் இங்கே வந்தாய்? நீ எப்படி பார்சிப் பெயரை வைத்துக் கொண்டாய்? அயோக்கியனே! நீ பார்சிப் பயணிகள் விடுதியை அசுத்தப்படுத்தி விட்டாய்.௸ மௌனமாக நின்று கொண்டிருந்தேன். என்னால் எந்தப் பதிலும் அளிக்க முடியவில்லை. நான் ஆள்மாறாட்டத்தைத் தொடர முடியாது. உண்மையிலேயே அது மோசடிதான். அந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. நான் ஆடிக் கொண்டிருந்த இந்த விளையாட்டை விடாப்பிடியாகத் தொடர்ந்தால் நிச்சயமாக அந்த கோபக்கார வெறிபிடித்த பார்சிக் கும்பல் என்னை அடித்து ஒருவேளை கொன்றே இருக்கும். என்னுடைய மௌனமும் பணிவும் இந்த அழிவிலிருந்து என்னைக் காப்பாற்றின. நீ எப்பொழுது காலி பண்ண நினைத்திருக்கிறாய் என்று அவர்களில் ஒருவன் கேட்டான். அந்த நேரத்தில் எனது தங்குமிடத்தை எனது வாழ்க்கையை விட விலை மதிக்கத்தக்கதாகக் கருதினேன். அந்தக் கேள்வியில் பயங்கரமான அச்சுறுத்தல் மறைந்திருந்தது. என் மௌனத்தை கலைத்துக் கொண்டு இன்னும் ஒரு வாரமாவது அங்கு தங்க அனுமதிக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். நான் பங்களாவுக்காக அமைச்சரிடம் கொடுத்த விண்ணப்பம் இச்சமயத்தில் எனக்கு கைகொடுக்கும் என்று எண்ணினேன். ஆனால் அந்த பார்சிகள் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. அவர்கள் ஓர் இறுதி எச்சரிக்கை கொடுத்தனர். அன்று மாலை அவர்கள் என்னை அந்தப் பயணிகள் விடுதியில் காண விரும்பவில்லை. நான் மூட்டை கட்ட வேண்டியதுதான். இல்லையென்றால் பயங்கர விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்து விட்டு அவர்கள் சென்று விட்டனர். நான் குழம்பிப் போனேன். என்னுள் இதயம் பனிக்கட்டியாக உறைந்து விட்டது. எல்லோரையும் சபித்தபடி வாய்விட்டு அழுதேன். என்னுடைய விலை மதிக்க முடியாத உறைவிடம் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. அது ஒரு சிறைச்சாலை அறையை விடச் சிறப்பாக இருக்கவில்லைதான் ஆனால் எனக்கு அது விலைமதிக்க முடியாதது.
பார்சிகள் சென்ற பிறகு, இதற்கு ஒரு வழி காணச் சிறிது நேரம் அமர்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன். விரைவில் எனக்கு அரசு பங்களா கிடைத்து என் இன்னல்களுக்கு ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனவே என் பிரச்சனை ஒரு தற்காலிக பிரச்சனையே. ஆதலால் நண்பர்களிடம் செல்வதே இதற்கு நல்ல முடிவு என்று எண்ணினேன். பரோடா ராஜ்யத்தின் தீண்டத்தகாதவர்களிடையே எனக்கு நண்பர்கள் கிடையாது. ஆனால் மற்ற வகுப்பினரிடையே எனக்கு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் இந்து மற்றொருவர் இந்தியக் கிறிஸ்தவர். முதலில் நான் இந்து நண்பரிடம் சென்று, எனக்கு ஏற்பட்ட நிலையை எடுத்துக் கூறினேன். அவர் பெருந்தன்மையானவர்; என் மிக நெருங்கிய நண்பர். அவர் வருத்தமடைந்ததுடன் வெறுப்பும் அடைந்தார். எனினும் அவர் குண்டைத் தூக்கிப் போட்டார்: "என் வீட்டிற்கு நீங்கள் வந்தால் எனது வேலை ஆட்கள் போய் விடுவார்கள்௸ என்றார் அவர். இந்தக் குறிப்பைப் புரிந்து கொண்ட நான் அங்கு தங்குவதைப்பற்றி வற்புறுத்தவில்லை. எனது இந்தியக் கிறிஸ்தவ நண்பரிடம் சொல்ல நான் விரும்பவில்லை. ஒரு தடவை அவர் என்னைத் தங்குவதற்கு அழைத்திருந்தார். நான் அதை மறுத்து பார்சிப் பயணிகள் விடுதியிலே தங்கி விரும்பினேன். அவருடைய பழக்க வழக்கங்கள் எனக்கு இணக்க மற்றவையாக இருந்ததுதான் காரணம். இப்பொழுது திரும்ப அவரிடம் சொல்வது ஏமாற்றத்தையே கொடுக்கும். எனவே நான் அலுவலகம் சென்றேன். ஆனால் தங்குவதற்கு இடம் கிடைக்க இந்த வாய்ப்பை இழக்க நான் தயாரில்லை. ஒரு நண்பரிடம் கலந்தாலோசித்து விட்டு என் கிறிஸ்தவ நண்பரைச் சந்திக்கச் சென்றேன். அவரால் எனக்கு தங்க இடம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். அவருடைய மனைவி மறுநாள் பரோடாவுக்கு வருவதாகவும், அவளை கலந்தாலோசித்துத்தான் சொல்ல முடியும் என்றும் அவர் பதில் அளித்தார். தட்டிக் கழிப்பதற்காக அவர் தெரிவித்த சாமர்த்தியமான பதில் இது என்று பிறகு தெரிந்து கொண்டேன். அவரும் அவரது மனைவியும் பிராமண குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பிறகு கணவர் சுதந்திரச் சிந்தனையுடையவராக இருந்தார். ஆனால் மனைவி பழமைவாதியாகவே இருந்ததால் ஒரு தீண்டத்தகாதவரைத் தங்கள் வீட்டிற்கு உள்ளே அனுமதிக்க சம்மதிக்க மாட்டார். இவ்விதமாக கடைசி நம்பிக்கை ஒளியும் அணைந்துவிட்டது. இந்திய கிறிஸ்தவர் வீட்டிலிருந்து நான் வெளியேறியபோது மாலை நான்கு மணி. எங்கே செல்வது என்பதே என் முன்னே இருந்த கேள்வி. நான் பயணிகள் விடுதியைக் காலி செய்ய வேண்டும் இனி உதவி நாடி செல்வதற்கு நண்பர்கள் யாரும் இல்லை. வேறு ஒரே ஒரு வழி பம்பாய் செல்வதுதான்.
பம்பாய் செல்லும் ரயில் இரவு 9 மணிக்குப் புறப்படுகிறது. இன்னும் ஐந்து மணி நேரத்தை ஓட்ட வேண்டும். எங்கே நேரத்தைக் கழிப்பது? நான் பயணிகள் விடுதிக்குப் போவதா? என் நண்பரிடம் போவதா? திரும்பவும் பயணிகள் விடுதிக்குச் செல்ல போதிய தைரியம் எனக்கு இல்லை. பார்சிகள் வந்து என்னை தாக்குவார்கள் என்று பயந்தேன். நண்பரிடம் சொல்லவும் நான் விரும்பவில்லை. என்னுடைய நிலைமை பரிதாபப்படும்படி இருந்தாலும் யாரும் என்னை கண்டு பரிதாபப்படுவதை நான் விரும்பவில்லை. அந்த நகரத்தின் மற்றும் முகாமின் எல்லையில் இருந்த கமாதி பாக் பொதுப் பூங்காவில் ஐந்து மணி நேரத்தையும் கழிக்கத் தீர்மானித்தேன். மனத்தின் ஒரு பகுதி எவ்வித சிந்தனையுமற்று இருந்தது, மற்ற பகுதி எனக்கு நடந்ததைப் பற்றி துயரச் சிந்தனையுடனும், கதியற்ற நிலையில், குழந்தைகள் பெற்றோர்களைப் பற்றி எண்ணுவது போல என் மனமும் என் தாய் தந்தையர்களைப் பற்றிய எண்ணத்தால் நிரம்பியிருந்தது. 8 மணிக்கு பூங்காவை விட்டு வெளியே வந்து ஒரு வண்டியை பிடித்துக்கொண்டு பயணிகள் விடுதிக்குச் சென்றேன். எனது பொருள்களைக் கீழே கொண்டு வந்தேன் கண்காணிப்பாளர் வெளியே வந்தார். எனினும் அவரோ, நானோ ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தைகூட பேசிக் கொள்ளவில்லை. இந்த பிரச்சினை உருவானதற்குத் தானே ஒருவகையில் பொறுப்பு என்பதை அவர் உணர்ந்திருந்தார். விடுதிக்குச் செலுத்த வேண்டிய பணத்தைத் தந்தேன். அவர் அதை மௌனமாகப் பெற்றுக் கொண்டார். நானும் மௌனமாக அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன். நிறைய நம்பிக்கைகளுடன் நான் பரோடாவுக்கு வந்தேன். எனக்கு வந்த பல வாய்ப்புகளை விட்டுவிட்டு வந்தேன். அது யுத்த காலம். இந்தியக் கல்வித் துறையில் பல இடங்கள் காலியாக இருந்தன. லண்டனில் பல செல்வாக்குள்ளவர்களை நான் நன்கு அறிவேன். நான் யாரிடமும் சொல்லவில்லை. என்னுடைய கல்விக்கு உதவிய பரோடா மன்னருக்கு என் சேவையை அளிப்பதே என் கடமை என்று நான் எண்ணினேன். பதினோரு நாட்கள் இருந்த பிறகு நான் பரோடாவை விட்டு பம்பாய் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
ஒரு டஜன் பார்சிகள் அச்சுறுத்தும் விதத்தில் கையில் கம்புடன் என் முன்னே வரிசையாக நிற்க, மன்னிப்பு கேட்டு பீதி நிறைந்த பார்வையுடன் அவர்கள் முன் நான் நின்ற காட்சி 18 ஆண்டுகள் கடந்த பின்பும் சிறிதும் மங்கவில்லை. அதைத் தெளிவாக என் மனக்கண் முன் கொண்டு வர முடியும். ஆனால் கண்ணில் கண்ணீர் இல்லாமல் மட்டும் அதை நினைவுகூர முடியாது. இந்துவுக்கு ஒருவன் தீண்டத்தகாதவன் என்றால் அவன் பார்சிக்காரர்களுக்கும் தீண்டத்தகாதவன்தான் என்பதை அப்பொழுதுதான் முதன் முதலாகத் தெரிந்துகொண்டேன்.