ஆட்டோ உதிரிபாக நிறுவனமான கோவை பிரிக்கால் தொழிலாளர் போராளிகளுக்கு செங்கல்பட்டு - காஞ்சி மாவட்ட வாகன தொழிலாள
ஒருமைப்பாடு
கே.பாரதி
தோழர் குமாரசாமி தலைமையில் 2007ல் சங்கம் துவங்கி பற்பல போராட்டங்கள் நடத்தி, குற்றவியல் வழக்குகளை, பழிவாங்கும் வேலை நீக்கங்களை, பணியிட மாற்றங்களைச் சந்தித்து, இரண்டு ஒப்பந்தங்கள் போட்டு, அதற்குப் பின் பிரச்சனைகள் எழுந்து, 14 வருடங்களாக அயராமல் போராடி வருபவர்கள், கோவை பிரிக்கால் தொழிலாளர்கள்.
உயர்நீதிமன்றத்தில், கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில், சென்னை தொழில் தீர்ப்பாயத்தில், இவர்களில் 350க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை நீக்க பணியிட மாற்றல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆட்டோ காம்பனன்ட் தொழில் பொதுப் பயன்பாட்டுச் சேவை என்ற அரசாணைக்கு, முதன்முறையாக, இவர்களே இடைக்கால தடை வாங்கியவர்கள்.
24 குற்றவியல் வழக்குகளைச் சந்தித்தவர்கள். அவற்றில் 23ல் வாதாடி வென்றவர்கள்.
சங்கத்தை ஒழிக்க, கோவை முதலாளிகளும் காவல்துறையும், 2009ல், தோழர் குமாரசாமி தூண்டுதலில் அவரும் நான்கு பெண் தோழர்களும் உட்பட 27 பேர் சதி செய்து ஓர் அதிகாரியை (எச்ஆர்விபி) கொலை செய்த தாக வழக்கு போட்டு வேட்டையாடினர். 03.12.2015 அன்று 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சதி ஏதும் நிரூபிக்கப்படவில்லை, குருசாமி என்ற தோழர் பெயர் செருகப்பட்டுள்ளது என, 19 பேர் விடுவிக்கப்பட்டனர். உயர்நீதிமன்றம் வழக்கின் அடிப்படைகளை கேள்வி கேட்டது. நம்ப முடியாது நம்ப முடியாது என வரிசையாகப் பட்டியலிட்டு காரணம் சொல்லி, இரண்டு அடிகள் விழுந்ததாக மருத்துவ சாட்சியம் இருப்பதால், முதல் இரண்டு பேர் கொலைப்பழி ஏற்க வேண்டும் என இறுதியில் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றமும் தலையிட மறுத்தது. தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி 03.12.2015 முதல் 5 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர்.
சமூக அக்கறை உடைய பிரிக்கால் தொழிலாளர்கள்
மு கொலை வழக்கு 2009ல் சுமத்தப்பட்ட பிறகு, பிரிக்கால் தொழிலாளர்கள் ஒரு முற்றுகைக்கு ஆளாக்கப்பட்டனர். நீலகிரியில் நிலச் சரிவு ஏற்பட்டபோது, அந்த மக்களுக்கு நேசக்கரம் நீட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் நிவாரண பொருட்களுடன் விரைந்தனர். துயர் துடைக்க எடுக்கப்பட்ட ஒருமைப்பாட்டு முயற்சி முற்றுகை தகர்க்கவும் உதவியது.
மு தமிழ்நாட்டு தொழிலாளி வர்க்கத்தின், குறிப்பாக நிரந்தரமற்ற அமைப்புசாரா தொழிலாளர்களின், உரிமைக் குரல், தொழிற்சங்க ஜனநாயகத்திற்கான குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக, மக்கள் மன்றத்தை நாடி இரண்டு முறை சென்னை நோக்கி நெடும் பயணம் சென்றனர்.
மு அரிவாள் சுத்தியல் ஒற்றுமைக்கு அடையாளமாக, பலமுறை பிரிக்கால் தொழிலாளர்கள் கிராமப்புற வறியவர்கள் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் தங்கி, களப்பணியிலும், பரப்புரையிலும் ஈடுபட்டுள்ளனர்.
மு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 03.12.2015க்கு சில நாட்களுக்கு உள்ளாகவே, சென்னை பெரும் மழை வெள்ள சேத துயர் துடைக்க ரூபாய் 5 லட்சம் நிதி திரட்டித் தந்தனர். காஷ்மீர் பீகார் இயற்கை சீற்றங்களுக்கு நிதி திரட்டித் தந்தனர். சர்வதேச, தேச மாநில மட்ட விவகாரங்களில் ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்துள்ளனர். கட்சி, சங்க மாநாடுகளுக்கு பல லட்சம் நிதி தந்துள்ளனர்.
மு விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து, எட்டு நாட்கள் சம்பளத்தை தண்டனையாக இழந்து, போராடி அதில் ஆறறை நாட்கள் சம்பளத்தை சமீபத்தில் வென்றனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போடப்பட்ட தொழில் தகராறுகள் சட்டம் 1947 10பி பிரிவின் கீழான உத்தரவுப்படி, நிர்வாகம் பிற மாநிலங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்களை வேலைக்கு எடுக்க புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரிக்கால் தொழிலாளர்கள் இப்போது வலியுறுத்தி வருகின்றனர்.
தலைநகர் மண்டல தொழிலாளர்கள் மத்தியில்
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தலைநகர் மண்டலத்தில் இடது தொழிற்சங்க மய்யம், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பல வருடங்களாக செயல்படுகின்றனர். நமது பொதுவான மக்கள் பணிகளும், தொழிலாளர் வர்க்கத்துக்கான நடவடிக்கைகளும், ஏசியன் பெயிண்ட்ஸ், சான்மினா, மதர்சன், மேக்னா போராட்டங்களும், கொரோனாவின் இரண்டு அலைகளின் போதும் நாம் உழைக்கும் மக்களை விட்டு விலகாமல் கூடவே நின்றதும் நமக்கு இந்த பகுதி தொழிலாளர்கள் மத்தியில் ஒரு நற்பெயரைத் தேடித்தந்தது. நமது ஒருமைப்பாடு மன்ற முயற்சிகள், கொரோனா வடிந்த பிறகு, வேகம் பெற வாய்ப்பு உண்டு.
கோவை, தோழர் கூடம், தலைநகர் மண்டல இணைப்பு
தோழர் எஸ்கே, தொழிலாளர் ஒருவர் மரணம் தொடர்பாக கோவை சென்றபோது, பிரிக்கால் தொழிலாளர்கள் பலரும் அவரை சந்தித்தனர். இந்த நேரத்திலேயே, கம்யூனிஸ்ட் கட்சி, இடது தொழிற்சங்க மய்யம், மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள், பெண்கள் அதிகாரம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் அமைப்புகளின் தலைமை அலுவலகமான தோழர் கூடம், சாமானிய மக்கள், தொழிலாளர், வழக்கறிஞர் மத்தியில் கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. பிரிக்கால் தோழர்கள் இரண்டு பேர் கொரோனாவால் மரணமுற்றதை ஒட்டி, அவர்கள் குடும்பத்தினருக்கும், பிரிக்காலில் வேலை நீக்க, பணியிட மாற்றல் வழக்கை சந்திக்கும் தொழிலாளர்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கார் தொழிற்சாலை தொடர்புடைய தொழிலாளர்கள் மத்தியில் நிதி திரட்டி, ஒருமைப்பாடு நிதி வழங்க முடிவு செய்தோம்.
ஃபோர்ட் தொழிலாளர் சங்கம் ரூ.20,000, ஃபோர்ட் தொழிலாளர்கள் ரூ.13,500, நிசான் தொழிலாளர் சங்கம் ரூ.20,000, ஹ÷ன்டாய் தொழிலாளர்கள் ரூ.55,300, ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் ரூ.1000, சியோன் ஈ வா சம் மிட் (ஹனில் ஆட்டாமோட்டீவ்) தொழிலாளர்கள் ரூ.44,500, சான்மினா தொழிலாளர்கள் ரூ.3,000 என ரூ.1,57,300 திரட்டப்பட்டது.
நெகிழ்ச்சியான கோவை நிகழ்ச்சி
கோவை மாவட்ட கட்சி, எல்டியுசி தோழர்கள், தோழர் எஸ்கே ஆலோசனையுடன் தோழர்கள் கோவிந்தராஜ் (எல்டியுசி பொதுச் செயலாளர்) பாரதி (ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க தலைவர்) ஆகியோரைக் கொண்டு, ஒருமைப்பாடு நிதி வழங்கும் நிகழ்ச்சியை திட்டமிட்டனர். ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, அரை கிலோ கடலை, அரை கிலோ உளுத்தம் பருப்பு, 5 கிலோ அரிசி கொண்ட பை வழங்க திட்டமிடப்பட்டது. 05.06.2021 துவங்கிய சில நாட்கள் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தோழர்கள் கோவிந்தராஜ், பாரதி, குருசாமி, நடராஜன், ஜெயப்பிரகாஷ் நாராயணன், மணிகண்டன் உரையாற்றினர்.
2007ல் இருந்து 14 ஆண்டுகளாக அயராமல் போராடும் தொழிலாளர்கள், படுகாயப்பட்டாலும் சரணடைய மறுக்கும் தொழிலாளர்கள், உலகின், நாட்டின், மாநிலத்தின் கவனத்தை ஈர்த்த தொழிலாளர்கள், ஓடோடிச் சென்று பல நேரங்களில் ஒருமைப்பாட்டுணர்வுடன் நேசக்கரம் நீட்டிய பிரிக்கால் தொழிலாளர்களுக்கு இப்போது, அவர்கள் மீது பெருமதிப்பு கொண்ட தலைநகர் மண்டல தொழிலாளர்கள், ஒருமைப்பாடு நிதி திரட்டித் தந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான தயாரிப்புகளோடு இரண்டு நாட்கள் கம்யூனிஸ்ட் இதழ் கட்டுரைகளை விவாதிப்பதும் நடந்தது.
கொடிது கொடிது கொரோனா கொடிது, அதனினும் கொடிது முதலாளித்துவம் என்ற எண்ணத்தோடு, முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்களை தொடர்ந்து நடத்த, வலுப்படுத்த பிரிக்கால் தொழிலாளர் தோழர்கள் உறுதியேற்றனர்